இந்த பாடலை என் மொபைலில் சேமித்து வைத்திருக்கிறேன். விரும்பும்போது கேட்பது வழக்கம். எங்காவது கேட்க நேர்ந்தாலும் சற்று நின்று கேட்டுவிட்டு தான் செல்வேன். கேட்போரை ஜாதி, மதம், இனங்களுக்கு அப்பாற்பட்டு உருகச் செய்வதில் இந்த பாடலுக்குக் நிகர் இந்த பாடல் தான்.
‘உயிரை உருக்கும் இசை’ என்பார்களே அதற்க்கு அர்த்தம் இந்த ‘ஜனனி ஜனனி’ பாடல் தான். இருக்காதா பின்னே…. சாட் சாத் அந்த ஆதி சங்கரரே ஆசியளித்த பாடல் அல்லவா அது….!
சென்ற ஆண்டு சென்னை டிரேட் சென்டரில் நடந்த கான்சர்ட் ஒன்றில் இந்த பாடல் உருவான விதம் பற்றி இளையராஜா கூறியிருந்தார். அது பற்றிய பதிவு ஒன்றை நண்பர் பால் ஹனுமானின் தளத்தில் படித்தேன். அவசியம் நம் வாசகர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதால் இங்கு தருகிறேன்.
காலத்தால் அழியாப் பாடல் உருவான சிலிர்க்க வைக்கும் கதையை தெரிந்துகொள்ளுங்கள். பாடலையும் ஒரு முறை கேளுங்கள். அன்னை மூகாம்பிகை ஆசி அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்!
===============================================================
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பவதாரணி, இறைவணக்கப் பாடலாய் ‘ஜனனி ஜனனி’யைப் பாடி முடிக்கவும் மைக் பிடித்த இசைஞானியின் குரு திரு. டி.வி. கோபாலகிருஷ்ணன், “இந்த ஜனனி ஜனனி பாடலைக் காலையில் ஒருமுறைக் கேட்டுவிட்டால் அன்று கோயிலுக்குப் போகவேண்டாம்; பூஜை செய்ய வேண்டாம்; அனைத்தும் இந்த ஒரு பாடலிலேயே பொதிந்திருக்கின்றன. இசைஞானி இளையராஜா தன் இசையின் மூலம் உங்களுக்கெல்லாம் இன்பத்தை அள்ளித்தந்துகொண்டிருக்கும் ஒரு மாமேதை. இசையே ஒரு அழகு. அந்த அழகுக்கு அழகுசேர்த்தவர் இவர்தான். இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதற்காக நான் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை மெச்சுகிறேன்” என்று கூறியமர, இருக்கையை விட்டு எழுந்து வந்து, விரிக்கப்பட்டிருந்த தன் பிரத்யேக வெண்மெத்தையில் வந்தமர்ந்தார் இசைப்பிதா.
இளையராஜா பேசும்போது ‘இங்கே என்ன பண்ணப்போகிறேன் என்பது எனக்கே தெரியாது. எதுவும் பண்ணிவிடமுடியாது .. இசையைத் தவிர ..! நான் எது செய்தாலும் அது மியூஸிக்தான்..! நான் உங்களைச் சந்திக்க விரும்பியதன் நோக்கம், நான் என் வாழ்வில் அனுபவித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். உங்களை மட்டுமல்ல.. நாடு முழுக்க இதே போல சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தப்போகிறேன். எனக்கு வருங்கால மாணவர்களை, இளைஞர்களைச் சந்திக்கவேண்டும்.
நான் இந்த நிகழ்ச்சியை எந்தப் பாடலுடன் துவங்கவேண்டும் என்று நினைத்து வந்தேனோ அந்தப் பாடலைப் பவதாரிணி பாடிவிட்டாள். இந்தப் பாடல் உருவானபோது என்ன நடந்தது என்பதைச் சொல்கிறேன்.
===================================================
இளையராஜா : டைரக்டர் கே. ஷங்கர் என்னிடம் ”தாய் மூகாம்பிகை” படத்திற்கென ஒரு சிச்சுவேஷன் சொல்லியிருந்தார். அந்த சமயங்களில் இரவு இரண்டு மணிவரை எனக்கு கம்போஸிங் இருக்கும். மீண்டும் காலையில் ரெக்கார்டிங் இருக்கும். இவர்களுக்கு கம்போஸிங்கிற்காக எனக்கு நேரம் ஒதுக்க இயலாமல் இருந்தது. அந்த சமயத்தில் நான் ‘நார்த் உஸ்மான் ரோட்டில்’ ஒரு வாடகை வீட்டில் இருந்தேன்.
–
அடுத்த நாள் பூஜை..! பாட்டு இன்னும் தயாராகவில்லையே என்று டைரக்டர் பதறத் துவங்கிவிட்டிருந்தார். நான் அவரிடம் ‘பதறத் தேவையில்லை. இரவு வீட்டிற்கு வாருங்கள்.. அங்கேயே கம்போஸிங் வைத்துக்கொள்ளலாம்’ என்று கூறினேன்.
–
‘ஆதிசங்கரர் மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்கிறார். அவர் தியானத்தில் சர்வ சக்திகளும் ஐக்கியமாக அவருக்குக் காட்சியளிப்பதைப் போன்ற’ காட்சி என்று எனக்கு முதலிலேயே சிச்சுவேஷனைச் சொல்லியிருந்தனர். இரவு அனைவரும் வந்துவிட்டனர். நான் குளித்துவிட்டு, பூஜை அறையைக் கடந்தபோது ஆதிசங்கரரின் படம் என் கண்களில் பட்டது. நான் நின்று, “குருவே..! நீங்க என் பாட்டுல வர்றீங்க..” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். என் பக்தி அவ்வளவுதான்.
–
உள்ளே சென்றால் வாலி சார், டைரக்டர், தபலா கன்னையா அண்ணன், என அனைவரும் வந்தமர்ந்திருந்தனர். மீண்டும் சிச்சுவேஷனைச் சொன்னார்கள். வாலி சாரும் கேட்டுக்கொண்டார். கேட்டவுடன் கம்போஸிங் துவக்கினேன். முழுவதும் முடித்துவிட்டேன். டைரக்டருக்கும் பிடித்துவிட்டது. வாலி பாடலை எழுதத் துவங்கிவிட்டிருந்தார். பல்லவி எழுதி முடித்தார். அனைவரும் காபி சாப்பிடக் கலைந்தனர். நானும் எழுந்தேன். வெளியே வந்து யோசித்தால், “ஆதிசங்கரர் யார்..? எல்லாவற்றையும் துறந்தவர் அல்லவா? அந்தத் துறவறம் இந்தப் பாடலில் தெரிகிறதா? எல்லாவற்றையும் விட்டுவிட்டுப்போன அந்த Detachment தெரிகிறதா? Tune சரியாக இருக்கிறது. ஒரு ராகத்தில் சிறப்பாய் இருக்கிறது. ஆனால் இந்தப் பாடல் ஆதி சங்கரர் பாடுவது போலவே இல்லையே..? ஒரு சங்கீத வித்வான் பாடுவதுபோலல்லவா இருக்கிறது. திருப்தியாக இல்லையே..!” என்று எனக்குத் தோன்றியது.
–
நான் மறுபடியும் சென்று, ‘சார்.. ஓ.கே. பண்ணிட்டீங்க. ஆனால் நான் வேறொன்று செய்து தருகிறேன்’ என்றேன். அதற்குள் பாடகர் யேசுதாஸை பாடலைப் பாடவைப்பதற்காக யோசித்துக்கொண்டிருந்தனர். மறுபடியும் உட்கார்ந்தோம். உட்கார்ந்து துவக்கினால்… ’தரரா.. தரரா… (ஜனனி ஜனனி பாடலின் மெட்டைப் பாடிக்காட்டுகிறார்) என்று முடித்தேன். வாலி சார், ‘ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ; ஜகத்தாரணி நீ பரிபூரணி நீ” என்று எழுதினார்.
–
பாடலை முழுவதும் பாடி முடித்தால், கதாசிரியர், அஸிஸ்டண்ட் டைரக்டர்ஸ் அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன. ‘பாடல் ரொம்பப் பிரமாதமாக வந்திருக்கிறது சார்..!’ என்றார்கள். அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.
–
கம்போஸிங் முடிந்து .. அனைவரும் கலைந்து சென்றனர். நான் எழுந்தேன். ‘குருவே.. என் Tune’ல் நீங்கள் வந்தீர்கள் என்று எப்படி நான் அறிந்துகொள்வது.?’ என்று மனதுக்குள் நினைத்தேன். அப்போது அங்கு ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் காற்றில் மிதந்துவந்த காகிதம் ஒன்று என் கையில் அமர்ந்தது. அதை விரித்தால், ‘பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..’ என்று இருந்தது. பாடத்துவங்கினேன்.
–
‘பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..
பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..’
–
(’ஜனனி ஜனனி’யின் மெட்டில் பாடுகிறார்..)
’ஜனனி ஜனனி’ பாடல்.. ‘பஜகோவிந்தம்’ Meter‘ல் அமைந்திருந்தது. ‘அடடே.. குருவே…!! இப்படித்தான் என் பாடலில் வந்தீர்களா..?’ என்று எனக்குச் சொல்லமுடியாத சந்தோஷம்.
–
அடுத்த நாள் ரெக்கார்டிங். யேசுதாஸ் ஊரில் இல்லை. டைரக்டர், ’யேசுதாஸ் பாடினால்தான் நன்றாக இருக்கும்’ என்று கூறினார். நான் டைரக்டரிடம், ‘நான் பாடுகிறேன். ரெக்கார்டிங் செய்துவிடுவோம். அதன்பின்னர் யேசுதாஸ் வந்தவுடன் அவரைப் பாடவைத்து மிக்ஸ் செய்துகொள்ளலாம்’ என்று கூறினேன். அந்த இடத்தில் வேறு வழியில்லாததால் நானே பாடிவிட்டேன்.
சிவ சக்த்யா யுக்தோ
யதி பவதி சக்த ப்ரபவிதும்
நசே தேவம் தேவோ ந கலு
குசல ஸ்பந்தி துமபி
அதஸ் த்வாம் ஆராத்யாம்
ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா
கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி..
ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்..
சடை வார் குழலும்.. இடை வாகனமும்..
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..
நின்ற நாயகியே.. இட வாகத்திலே..
ஜகன் மோகினி நீ.. சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்..
ஷண்மார்க்கங்களும்.. சப்த தீர்த்தங்களும்..
அஷ்ட யோகங்களும்.. நவ யாகங்களும்..
தொழும் பூங்கடலே.. மலை மாமகளே..
அலை மாமகளே கலை மாமகளே..
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே… மூகாம்பிகையே..
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே… மூகாம்பிகையே.. )
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்..
பணிந்தே துவளும் மணி நேத்திரங்கள்..
சக்தி பீடமும் நீ.. ..
சக்தி பீடமும் நீ.. சர்வ மோட்சமும் நீ
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி..
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.
நன்றி : isaignanibakthan.blogspot.in (via) balhanuman.wordpress.com
===================================================
‘ஜனனி ஜனனி’ பாடல் வீடியோ
[END]
இந்த பாடலை இசைஞானி இளையராஜா பாடவேண்டும் என்பது ஆதி சங்கரரின் விருப்பம். ராஜாவின் குரலில் இருக்கும் அந்த தெய்வீகம் மெய் சிலிர்க்க வைக்கும். இந்த பாடல் மட்டுமல்ல, ராஜா பாடிய அனைதுப்பாடல்களிலும் ஒரு ஜீவன் இருக்கும். அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது, அனுபவிக்கத்தான் முடியும். வாழ்க இறையருள் இளையராஜா.
சத்தியமான உண்மை, குணா’ல ராஜா சார் பாடின ‘அப்பனென்றும் அம்மையென்றும்’ பாட்டை கேட்டு இருக்கீங்களா, அப்படியே கரைஞ்சு போய்டுவோம், சிவவாக்கியர் சொன்ன கருத்துக்கள அப்படியே ஒரு பாடல்ல முழுதுமா கேக்கலாம்,
அவனுக்கு தேவையானதை அவனே தேர்ந்தெடுப்பான்னு நீங்கதானே சுந்தர்ஜி சொன்னீங்க, இந்த மகான்கள் எல்லாம் நம்மள கவனிச்சுக்கிட்டுதானே இருக்காங்க, நமக்குத்தான் அத உணரக்கூடிய ஞானம் இல்லாம போய்டுது,
ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய
சார் உங்களது ஒவ்வொரு பதிவும் அருமை.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்…ஒரு வேண்டுகோள் தாங்கள் இனி மேல் வரும் பதிவுகளில் ஒரு நல்ல அருமையான தன்னம்பிக்கை தரும் புத்தகங்கள் பற்றியும் அதுவும் குறிப்பாக மிகவும் பயனுள்ள புத்தகமாக குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் ….செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்……..
நிச்சயம். நன்றி.
– சுந்தர்
ஜனனி என்று எனது மகளுக்கு பெயர் அமைந்தது அந்த இறைவனின் ஆசி.
\\அவனுக்கு தேவையானதை அவனே தேர்ந்தெடுப்பான்னு நீங்கதானே சொன்னது \\
மாதம் ஒரு பாடல் ஆராய்ந்தால் என்ன ????
Sure. thanks.
– Sundar
சுந்தர்,
வணக்கம் . நீங்கள் சொன்ன இரகசியம் (The Secret ) என்னும் புத்தகத்தை வாங்கி அதில் உள்ள முறையை பயன் படுத்தினேன் . இறைவன் அருளாலும் அந்த புத்தகத்தின் உதவியாலும் நான் எண்ணியது ஈடு ஏறியது . புத்தகத்தை பற்றி உங்கள் ப்ளாக் இல் எழுதியதற்கு மிகவும் நன்றி ..
தயவு செய்து இந்த ப்ளாக் படிக்கும் அனைவரும் இந்த புத்தகத்தை படித்து பயன் பெருங்கள் ..உங்கள் நண்பர்களுக்கும் கூறுங்கள் . முடிந்தால் இந்த புத்தகத்தை பரிசு அளிங்கள் . என்னைப் போல அனைவரும் பயன் பெற்று வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள் …
அன்புடன் ,
ஜெயம்
மிக்க மகிழ்ச்சி.
புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கீழே தரப்பட்டுள்ள லேண்ட்மார்க் இணையத்துக்கு சென்று வாங்கலாம்.
ஆங்கில பதிப்பு
http://www.landmarkonthenet.com/the-secret-by-rhonda-byrne-books-9781847370297-16771558/
தமிழ் பதிப்பு
http://www.landmarkonthenet.com/the-secret-tamil-by-rhonda-byrne-books-9788183222051-3631714/
– சுந்தர்
காலத்தால் அழியாத
என்றென்றும் நினைவில் நிற்கும்
இந்த இனிய பாடலுக்கு பின்னால் இப்படி ஒரு மெய் சிலிர்க்கும் சம்பவம் நடந்திருப்பது வியப்பை தருகிறது !!!
திரு இளையராஜா அவர்களின் இசை கருவூலத்தில் உள்ள பல்லாயிரம் பாடல்களில் இந்த பாடல் ஒரு மைல்கல்!!!
இந்த பாடலை கேட்கும்போது தான் மனதிற்கு எத்துனை அமைதி
நம்மை இருந்த இடத்திலிருந்தே அந்த மகான் ஆதி சங்கரரை தரிசிக்க வைத்த புண்ணியம் இசை ஞானியையே சாரும் !!!
இனிய அனுபவத்தை பகிர்ந்தமைக்கு அந்த இசை ஞானிக்கும் அதை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்த சுந்தர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் !!!
இந்த பாடலை ஆயிரம் முறை தொடர்ந்து கேட்டாலும்… ஒவொரு முறையும் என் கண்களில் கண்ணீர் வரும்… உள்ளம உருகும்… நான் அந்த பாடல் காட்சியை ஓரிரு முறை தான் பார்த்திருப்பேன்…. ஆனாலும் அந்த அமைதியான சூழல், முகம், இளையராஜாவின் முகம் கண்முன்னே வந்து நிற்கும்… இந்த விஷியத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி….
பாடல் பிறந்த கதையை படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது
காலத்தால் அழியாத உன்னத பாடலை கொடுத்த இளைய ராஜாவிற்கு என் பணிவான வணக்கங்கள்
இறைவனின் ஆசியுடன் பிறந்த பாடல் அல்லவா , அதனால் தான் கேட்போர் நெஞ்சை உருக்குகிறது
நன்றி
உமா வெங்கட்