நான், நண்பர் நாராயணன், நம் தள வாசகி ஒருவர் ஆகிய மூவரும் ஒரு பக்கம் அந்த விசாலமான பிரகாரத்தை சுத்தம் செய்துகொண்டு இருந்தோம். கிட்டத்தட்ட பாதியை முடித்துவிட்டோம். “நம்ம வேலையை தான் இவங்க செய்றாங்களே…. நாம எதுக்கு செய்யனும்?” என்று நினைக்காமல் அந்த அம்மா தான் பாட்டுக்கு அவர்கள் ஒரு பக்கம் பெருக்கிக் கொண்டிருந்தார்கள்.
அதாவது அவர்கள் கடமையை அவர்கள் சரியாக செய்து கொண்டிருந்தார்கள். அதுவும் அட்சர சுத்தமாக. நாம் செய்வதெல்லாம் ஒன்றுமில்லை என்னுமளவிற்கு அவர்களது கைங்கரியம் மிக மிக பெரிதாக பிரமாதமாக இருந்தது. அவர்கள் இல்லையேல் இந்த கோவில் நிச்சயம் குப்பை மேடாக மாறிவிடும் என்று சற்று நேரத்தில் புரிந்து கொண்டேன். குப்பைகள் விழ விழ பெருக்கிக்கொண்டே இருந்தார்கள்.
புத்தி சரியாக இருக்கும் ஒருவர் இருந்திருந்தால்….
ஒருவேளை அவர் இடத்தில் புத்தி சரியாக இருக்கும் ஒருவர் இருந்திருந்தால், “ஹப்பா…நம்ம வேலை மிச்சம். இன்னைக்கு ஒரு நாள் நமக்கு பெருக்குவதிலிருந்து விடுதலை” என்று முடிவு செய்து நைஸாக ஒதுங்கியிருப்பார்கள். மனநிலை சரியில்லை என்பதால் அவர்களுக்கு வேலையில் ஏய்ப்பது பற்றி தெரியவில்லை. அதாவது சூது வாது தெரியவில்லை. எனவே தன் கடமையை தான் பாட்டுக்கு செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஆலய வளாகத்தை கூட்டி பெருக்குவது ஒன்று தான்.
அந்தம்மாவை பற்றி தெரிந்ததும், இரக்கப்பட்டு அவருக்கு சிறிது பணம் கொடுத்து புடவை வாங்கிக்கொள்ளும்படி நம் தள வாசகி கூற, பொருளின் மீது பற்றற்ற அந்த அம்மா அதை வாங்க மறுத்துவிட்டார்கள். “எனக்கு எதுக்கு கொடுக்குறே? நான் வேணா உனக்கு தர்றேன்” என்று கூறி இவர்கள் கையில் பத்து ரூபாய் நோட்டை திணித்தார்களாம்.
அவரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டதும் அவர்கள் மீதும் இரக்கம் ஏற்பட்டதுடன் பெருமதிப்பும் ஏற்பட்டது. அந்தம்மாவுக்கு நிச்சயம் ஏதேனும் மரியாதை செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
“எனக்கு எதுக்கு கொடுக்குறே?”
அடுத்த நாள் மாலை (திங்கள் மாலை) கோவிலுக்கு சென்று சக பணியாளர்கள் முன்னிலையில் அவர்களுக்கு சால்வை அணிவித்து, கையில் சிறிது பணமும் கொடுக்க நினைத்தோம். இதை அவர்களை ஒப்புக்கொள்ளவைக்க சற்று சிரமப்பட வேண்டியிருந்தது. இறுதியில் உதவிக்கு வந்தவர்கள் ஓதுவாரின் மனைவி சீதையம்மா தான்.
“திலகா நீ நல்லா வேலை செய்றதுனால உனக்கு ஐயா பொன்னாடை போத்துறாராம். கையில் அவரால முடிஞ்ச கொஞ்சம் பணமும் தர்றார். இந்தா வாங்கிக்கோ….” என்று கூறி அவர்களுக்கு கோவில் சக ஊழியர்கள் முன்னிலையில் நம் சார்பாக சால்வை போர்த்தி பணம் கொடுத்தார்கள்.
பணத்தை அந்தம்மா கொஞ்சத்தில் வாங்கவில்லை. திணிக்கவேண்டியிருந்தது.
அருணகிரிநாதர் சன்னதி முன்பு வைத்து அவருக்கு இந்த மரியாதை செய்யப்பட்டது.
ஒரு பணியாள் நம்மிடம் கூறுகையில்…. “ஐயா…. ரொம்ப வருஷமாக இங்கே இருக்கா. இவளுக்கு புத்தி சுவாதீனம் சரியில்லை. இவளுக்கு இந்த கோவிலை விட்டா ஒன்னும் தெரியாது. எங்கேயாவது கோவிச்சுகிட்டு போனா திரும்ப உடனே வந்துடுவா. என்ன சொன்னாலும் போகமாட்டா. ஏதோ கோவில்ல முடிஞ்சுது இவளுக்கு கொஞ்சம் தர்றோம். இங்கேயே சாப்பாடு போடுறோம். நல்லா வேலை செய்வா. இவ மட்டும் இல்லைன்னா உண்மையில் கோவில் நாறி போய்விடும்” என்றார்.
“அதை நான் தெரிஞ்சிகிட்டேன சார்… அதுனால தான் இந்த மரியாதையை அவங்களுக்கு செய்றேன். நாங்களாவது வருஷம் ஒருமுறை இது போன்று உழவாரப்பணிக்கு வந்து சுத்தம் செய்றோம். ஆனால் வருஷம் ஃபுல்லா இருந்து கோவிலை பெருக்கி அவனை கவனிச்சிக்கிறது இவங்க தானே…. உண்மையில் இவர்கள் தொண்டிற்கு முன்னாள் எங்கள் பணியெல்லாம் ஒன்னுமேயில்லை” என்றேன்.
ஒரு விஷயம் மட்டும் புரிந்தது…. அந்தம்மா மீது இரக்கம் கொண்டு சிவபெருமான் தன் கோவிலில் அவர்களை தன் கண் எதிரே வைத்துக்கொண்டிருக்கிறார் என்று.
நாங்கள் செய்யும் மரியாதை பற்றி திலகா அம்மா புரிந்துகொண்டார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் அவரது கண்களில் தெரிந்த அந்த நெகிழ்ச்சியில் என் ஈசனை நான் கண்டேன். ஆம்…. திருமாலும் நான்முகனுமே அடிமுடி காணாமல் தேடிய ஈசனை அவர்களின் கண்களில் நான் கண்டேன்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
அடுத்து கோவில் செக்யூரிட்டி செல்வம்
“இது நான் செய்யும் பணியல்ல… சிவனுக்கு செய்யும் தொண்டு”
இந்த கோவிலில் அடுத்த முக்கியமான தூண் இவர். இவரது பணி செக்யூரிட்டி மட்டும் தான். அதற்கு மட்டுமே இவர் சம்பளம் பெறுகிறார். ஆனால் இவர் செய்யும் சேவைகள் இருக்கிறதே…. அப்பப்பா…. பூஜையின் போது மணியடிப்பது, பெருக்குவது, ஒட்டடையடிப்பது, பாத்திரங்களில் தண்ணீர் நிரப்புவது, மோட்டார் ஆப்பரேட் செய்வது என் அத்தனையும் இவர் பார்த்துக்கொள்கிறார். இதைத் தவிர அர்ச்சகர்கள் என்ன வேலை கொடுத்தாலும் முகம் சுளிக்காது செய்கிறார்.
இவரை நம்மிடம் அர்ச்சகர் முதல் முறை அறிமுகப்படுத்தும்போது, “இவர் வேலை செக்யூரிட்டி மட்டும் தான். ஆனா, எல்லா வேலையும் செய்வார். இவர் இல்லேன்னா எங்களுக்கெல்லாம் ரொம்ப கஷ்டம்” என்றார்.
அவரது கைகளை பற்றி, “ரொம்ப நன்றி சார். உங்கள் சேவை உண்மையில் மிக மிகப் பெரியது” என்றேன்.
“நமக்கு சம்பந்தமில்லாத வேலையை இழுத்துபோட்டுகிட்டு செய்றோம் என்கிற எண்ணமே எனக்கு என்னைக்கும் வந்ததில்லை. சிவனுக்கு தொண்டு செய்ய கிடைச்ச ஒரு வாய்ப்பா நினைச்சி தான் இதை செய்துகொண்டு இருக்கிறேன்” என்றார். தூய தமிழில் பேசுவது இவரது சிறப்பு.
சிவராத்திரி அன்று முழுவதும் சிறிது கூட அங்கேயும் இங்கேயும் போகாம கோவிலில் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொண்டார். வாழ்க உங்கள் தொண்டு.
ஓதுவார் திரு.முருகேச தேசிகரை விட்டு இவருக்கு சால்வை அணியவைத்து கையில் சிறிய தொகை ஒன்றை கொடுத்தேன்.
“சார்…. அவனை நல்லா பார்த்துக்கோங்க. அவன் உங்களுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டான். இத்தனை வேலைகளை நாம இழுத்துபோட்டுகிட்டு செய்கிறோமே என்கிற சலிப்பு ஒரு நாளும் உங்களுக்கு வரக்கூடாது என்பதற்காகத் தான் உங்களை உற்சாகப்படுத்தவேண்டி இந்த மரியாதையை செய்கிறேன். உங்கள் சேவைக்கு உரிய அங்கீகாரத்தை அவன் நிச்சயம் வழங்குவான்!” என்றேன்.
அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. கண்களில் ஒரு நெகிழ்ச்சி தெரிந்தது. அதை வார்த்தைகாளால் விவரிக்க இயலாது. இறை ஆன்மாவின் குரல் அது. என் ஈசனின் குரல் அது.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
அடுத்து திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில் ஓதுவார் முருகேச தேசிகர்
அவன் புகழ் பாடுவதே ஆனந்தம்
இறைவனின் சன்னதியில் பூஜைகளின் போது பாடல் பாடும் பொன்னான வாய்ப்பை பெற்றவர்.
கடந்த ஐந்தாறு வருடங்களுக்கு மேலாக இந்த கோவிலில் இருக்கிறார் முருகேச தேசிகர். தனது சேவைக்காக மிக மிக குறைவான ஒரு ஊதியம் பெறும் இவர் அதை வைத்து தான் தனது தேவைகளையும் கவனித்துக்கொண்டு வீட்டையும் கவனித்துக்கொள்ளவேண்டு. இந்நிலையில், அர்ச்சனை டிக்கட் கொடுப்பது, விளக்கு கொடுப்பது உள்ளிட்ட சேவைகளை சேவை நோக்கோடு செய்து வருகிறார். இவருக்கு இவரது பணிகளில் இவரது துணைவியார் சீதையம்மா உதவுகிறார்.
முதல் நாள் உழவாரப்பணி தொடர்பாக நான் அனுமதி கேட்க சென்றபோது, நம்மை ஆலய நிர்வாகத்திடம் அறிமுகப்படுத்தி வைத்தது இவர் தான். மேலும், “உங்கள் பாடலை கேட்கும் பொன்னான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே” என்றதும் உடனே என்னை சன்னதிக்கு அழைத்து சென்று எமக்காக திருமுறைகளில் இருந்து திருவேற்காடு இறைவனைப் பற்றிய ஒரு சிறப்பு பாடலை பாடினார்.
இவரது உன்னத சேவையை கௌரவிக்கும் பொருட்டு மடப்பள்ளி பொறுப்பாளர் திரு.தியாகு அவர்களை விட்டு சால்வை அணிவித்து கௌரவித்தோம்.
ஓதுவாரின் முகத்தில் தெரியும் அந்த உணர்வை பாருங்கள்.
(தமிழக ஆலயங்களில் ஓதுவார்களின் நிலை தொடர்பாக தினமலரில் வந்த செய்தி ஒன்றை தனியாக பின்னர் தருகிறேன்!)
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
இதோ என் அன்னை!
அடுத்து பூவிருந்தவல்லி வைத்தியநாத ஸ்வாமி கோவிலில் சந்தித்த ஒரு அம்மா…
நாங்கள் கோவிலை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இந்தம்மாவை பார்த்தோம். உள்ளே வந்து கொஞ்சம் உதவும்படி கேட்டுக்கொண்டதையடுத்து அம்மன் சன்னதி அருகே இருந்த குப்பைகளை அகற்றினோம். அப்போது இவர்களிடம் பேசியபோது தெரிந்தது இவர்கள் தான் இந்த கோவிலில் பிரகாரத்தை சுத்தம் செய்யும் பணியில் இருக்கிறார் என்றும் இந்த பணிக்காக சம்பளம் எதுவும் அவர்கள் பெற்றுகொள்வதில்லை என்றும்.
இதை சிவபெருமானுக்கு கடைசி காலத்தில் தாம் புரியும் தொண்டாக கருதி செய்வதாகவும் வேலையாக பார்க்கவில்லை என்றும் கூறினார்.
நாம் ஒரு நாள் சுத்தம் செய்கிறோம். ஆனால் வருடத்தின் மற்ற நாட்களில் சுத்தம் செய்யும் இவர்களின் கைங்கரியத்திற்கு சிறிதும் ஈடாகாது நமது வேலை.
பிரகாரத்தை நாங்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது மூன்று பள்ளி மாணவிகள் சுற்றி வந்துகொண்டிருந்தனர். எங்களை வித்தியாசமாக பார்த்தபடி சென்றனர். தளத்தின் நோட்டீஸை அவர்களிடம் அளித்து படிக்குமாறு கூறினேன்.
சற்று நேரம் கழித்து பேசும்போது, நாங்கள் யார் என்றும் இந்த வேலையை செய்வது என்றும் கேட்டார்கள் மூவரும். திருவேற்காடு கோவிலில் காலை நாம் செய்த உழவாரப்பணியை பற்றி எடுத்துக்கூறி, தற்போது இங்கு ஆலய நிர்வாகத்திற்கு உதவும்பொருட்டு இந்த பணி செய்வதையும் எடுத்துக்கூறினோம்.
சற்று நேரத்தில் அவர்கள் நமக்கு நன்கு பரிச்சயமாகிவிட, கோவிலில் தினசரி துப்புரவு செய்யும் அந்த அம்மாவை கௌரவிப்பதும் அவர்களை உற்சாகப்படுத்துவதும் நம் கடமை என்று கூறி, அவர்களை விட்டே நம் தளம் சார்பாக அந்த அம்மாவுக்கு ஒரு கவரில் வைத்து சிறிய தொகை ஒன்றை கொடுத்தோம்.
அவர்கள் செய்யும் சேவையின் மேன்மையை எடுத்துக்கூறினோம்.
“இதை எதுக்கு உங்களை விட்டு செய்றேன் தெரியுமா?” என்றேன் அந்த மாணவிகளிடம்.
“தெரியலையே” என்பது போல பார்த்தனர்.
“சிவராத்திரி அன்று கோவிலில் இருந்து பிரகாரத்தை சுற்றிவருவதன் மூலமே உங்களை பற்றி தெரிந்துகொண்டேன். பக்தி என்பதும் இது போன்ற விரதம் என்பதும் இன்றைய தலைமுறை மாணவர்களிடமும் இளைஞர்களிடம் குறைந்து வரும் சூழ்நிலையில் உங்கள் செயல் என்னை நெகிழவைத்தது. உங்கள் பக்தி இத்தோடு நின்றுவிடாமல், இது போன்ற துப்புரவு பணிகள் மற்றும் கைங்கரியங்களிலும் நீங்கள் அடுத்த முறை உங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்பதாலேயே இதை உங்களை விட்டு செய்கிறோம். ஆண்கள் நாங்களே ஓரளவு சுத்தம் செய்துவிட்டோம் என்றால் பெண்கள் நீங்கள் அந்தப் பணியை இன்னும் சிறப்பாக செய்ய முடியும் அல்லவா? அடுத்த முறை விரதம் இருப்பது தவிர இது போன்ற எளிய கைங்கரியங்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். அவனுக்கு தேவை அது தான்” என்றேன்.
“நிச்சயம் செய்கிறோம் சார்” என்று சொன்னவர்கள்…. அந்தம்மாவிடம் ஆசிபெற்றனர்.
“நல்லா வருவீங்க தாயி” என்று அந்த அம்மா ஒரு கணம் நெகிழ்ந்து இந்த மாணவிகளை ஆசீர்வதிக்க, உண்மையில் அந்த கணம் நான் பார்த்தது சாத் சாத் அந்த பார்வதி தேவியை தான்.
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் – அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்!
நாம் செய்தது மிகப் பெரிய பொருளாதார உதவியும் அல்ல மரியாதையும் அல்ல என்பது எனக்கு தெரியும். இருப்பினும் தன்னலம் கருதாது இறைவனுக்கு தொண்டாற்றும் இவர்களுக்கு நமது செயல் சிறு ஊக்கத்தை கொடுக்கும் என்பதற்காகவே இதை செய்தோமே தவிர வேறு ஒன்றுமல்ல!
நம்மால் தொண்டு செய்ய முடியாவிட்டாலும் அப்படி தொண்டாற்றுபவர்களை ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் நம் தலையாய கடமையாகும். எனவே அடுத்த முறை யாரேனும் ஒரு நல்ல செயலை, தன்னலம் அற்ற சேவையை செய்வதை கண்டால் அவர்களுக்கு உங்களால் இயன்ற ஒரு சிறு உற்சாகம் ஒரு பாராட்டு அளியுங்கள்.
…………………………………………………………………………………
முந்தைய பாகங்களுக்கு:
யுக புருஷனை தரிசித்து பாவங்களை தொலைத்தேன்! சிலிர்க்க வைக்கும் ஒரு சந்திப்பு!! “இதோ எந்தன் தெய்வம்” — (2)
http://rightmantra.com/?p=1163
தொலைந்த வாழ்க்கை நிமிடங்களில் மீண்ட அதிசயம்
“இதோ எந்தன் தெய்வம்” — (1)
http://rightmantra.com/?p=793
…………………………………………………………………………………
இவர்களை எல்லாம் இறைவனே தேர்ந்தெடுத்து உள்ளார் தனக்கு துணையாக ,இவர்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
SUPERB AND FANTASTIC
எப்படி சுந்தர் உங்களுக்கு மட்டும்? இப்படி நல்ல மனசு உள்ளவங்க உங்க கண்ணுல படறாங்க? அது தான் கடவுளோட ஆசீர்வாதம் நு நான் நினைக்குறேன். சரி தானே?
கைலாஷ் கிரி – உண்மையுலேய யுக புருஷன் தான். அவர் பத்தியும் இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன். உங்கள மாதிரி எத்தனை பேர் அவர பாத்திருப்பாங்க. ஆனா அவருக்கு தங்களாலான உதவி செய்யனும்னு எத்தனை பேருக்கு தோன்றி இருக்கும். நீங்க அவருக்கு உரிய மரியாதை கொடுத்திருக்கிங்க தானே. கிரேட் தான். ஆண்டவன் கண்டிப்பா உங்களை நல்லா வச்சிக்குவார். இனி இருக்குற உங்க வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கணும்னு நானும் எனக்கு ரொம்பவும் பிடித்த முருகாவை வேண்டிக்குறேன். நன்றி.
இந்த செயல்கள் எல்லாம் தங்களன் மூலம் நடைபெற வேண்டும் என்பது ஆண்டவனின் சித்தம் . இறைவன் தங்கள் எல்லா சையல்களிலும் துணை இருப்பார் .
இறைவனைவிட அவனது தொண்டர்களுக்கு எப்பவுமே தனி மரியாதை. அப்படிப்பட்ட அடியார்களுக்கு நம் தளத்தின் மூலம் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் பாராட்டுக்குரியது. சுந்தரைத்தவிர வேறு யாராவது இந்த கோணத்தில் இவர்களது தன்னலமற்ற சேவையை பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. அதேபோல் பள்ளி மாணவிகளை வைத்து மரியாதை செய்ய வைத்தது நிச்சயம் அவர்களது வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கும்.
அன்பெனும் ஒளியாக ஆலய மணியாக ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி.
சுந்தர் சார் தங்களீன் பக்தியும் , திறமையும், சேவையும் சொல்ல
வார்த்தைகல் இல்லை.
மிகவும் வியந்து போகிறேன் . உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள். நன்றிகள்
விவேக் ராம்.
படித்தேன் ……மனம் நெகிழ்ந்தேன்……எப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள்.
இனி அப்படிப்பட்ட நல்லவர்களை கண்டால் ..உடன் ஊக்குவிக்க செயல் பட வேண்டியது என் கடமை …..மிக்க நன்றி ஐயா……
எல்லோருக்கும் முன்னோடியான செயல்முறைகள் .
தங்களை நண்பராக அடைந்தது சிவம் பாக்கியம் .
ஓம் சிவ சிவ ஓம் .
இறைபணி செய்வதுபோன்ற ஒரு மனநிறைவு வேறு எதிலும் கிடைக்காது….அப்படி செய்பவர்களை ஊக்குவிப்பது நம் கடமை என்பதை சொல்லாமல் செயிலில் காட்டி நம்மளையும் செய்ய தூண்டியுள்ளார் சுந்தர்..
.
கண்டிப்பாக என்னால் முடிந்ததை செய்வேன்.
.
மாரீஸ் கண்ணன்
………………………………………………………………..
ஒரு விஷயம் மட்டும் புரிந்தது…. அந்தம்மா மீது இரக்கம் கொண்டு சிவபெருமான் தன் கோவிலில் அவர்களை தன் கண் எதிரே வைத்துக்கொண்டிருக்கிறார் என்று.
………………………………………………………………………………………………………….
நன்றி சுந்தர்.
மதிப்பிற்குரிய சுந்தர் அவர்களுக்கு,
மிக்க மகிழ்ச்சி.
நம்முடைய தொலைபேசி உரையாடல் ஒரு தவம் என்றே நினைக்கிறேன். இதுவும் அந்த மகாபுருஷரின் சித்தமே.
காஞ்சி மகாபெரிய்வாள் இந்த உழவரப்பணியை மிக மிக உயர்வாகவும் அதே சமயம் எல்லோரும் செய்யும் படியும் கூறுவார்.
அதாவது நாம் தெருவில் நடக்கும் பொழுது கீழே கண்ணாடித்துண்டுகள் இருந்தால் அதை எடுத்துப் போடுவதும் கூட உழவாரப்பணி என்பார். ஏனென்றால் இந்த பிரபஞ்சமே இறைவன் வீடு-கோவில் என்பதால். இது எல்லாருக்கும் சத்தியம் தானே.
குருவே சரணம்.
அன்பன்,
ச. ஜகந்நாதன்.