எனவே அதற்கு முறைப்படி அனுமதி பெறவேண்டி இரண்டு நாட்களுக்கு முன்னே கோவிலுக்கு சென்று அங்கு நிர்வாகத்தினரிடம் பேசி அனுமதி பெற்றேன். அங்கு அர்ச்சகரிடம் பேசும்போது “எத்தனை பேர் வருவீர்கள்?” என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. திரு திருவென விழித்தேன்.
“எனக்கு எந்த ஐடியாவும் இல்லை சார். குறைஞ்சது நான் என் நண்பர்கள் இரண்டு பேர் சேர்த்து மொத்தம் மூன்று பேர் வருவோம். அதுக்கு மேல எத்தனை பேர் வருவாங்கன்னு தெரியலே. எங்களால் முடிஞ்ச வேலைகள் செய்கிறோம். அதற்கு மேல் ஈசன் விட்ட வழி… அவனாக யாரையாவது அனுப்பினால் உண்டு” என்றேன்.
“நீங்க ஒருத்தர் வந்தா கூட உபயோகமாத் தான் இருக்கும். உங்களால என்ன செய்ய முடியுமோ அந்த வேலையை நான் சொல்றேன். அதை மட்டும் செஞ்சி கொடுத்தீங்கன்னா போதும். மத்தபடி அவன் மேல பாரத்தை போடுங்க. அவன் பார்த்துக்குவான்” என்றார்.
எனக்கு ஓரளவு ஐடியா இருந்தாலும் எதற்கும் அவரிடம் கேட்போமே என்று “உழவாரப்பணிக்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும்?” என்று கேட்டேன். சுண்ணாம்பு ஒரு மூட்டை, காஸ்டிக் சோடா 10 கிலோ, அரிசி மாவு (சுவர்களில் எண்ணைப் பிசுக்கை எடுக்க), சோப்புத் தூள், துடைப்பங்கள், கட்டை மற்றும் இரும்பு ப்ரஷ், பெயிண்ட் பிரஷ் (தூண்களில் மண்டியிருக்கும் விபூதிகளை சுத்தம் செய்ய), தவிர மண்வெட்டி, உழவாரம் எனப்படும் கருவி, இவையெல்லாம் தேவைப்படும் என்று கூறினார். அவர் சொன்ன அத்தனையும் குறித்துக்கொண்டேன்.
சிவராத்திரி அன்று இரவு பிரசாதம் விநியோகிக்க விரும்புவதாக கூறினேன். “உங்கள் சௌகரியப்படி புளிசாதம், தயிர்சாதம், சுண்டல் என எதுவேண்டுமானாலும் நீங்கள் கொண்டு வந்து தரலாம். எவ்வளவு கொண்டு வந்தாலும் தீர்ந்து போகும். விடிய விடிய பக்தர்கள் வந்துகொண்டேயிருப்பார்கள்” என்று கூறினார்.
“உத்தேசமாக ஒரு பத்து கிலோவாவது இருந்தால் நன்று” என்றார்.
சிவராத்திரி அன்று ஏகப்பட்ட பணிகள் இருப்பதால் கோவில் மடப்பள்ளியில் சாத்தியமில்லை என்றும் நீங்கள் சிரத்தையுடன் சுத்தமாக தயார் செய்து எடுத்து வந்தால் அதை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு நீங்களே ஒரு டேபிளில் வைத்து தொன்னையில் தரலாம். விடிய விடிய அது பாட்டுக்கு போய்கொண்டிருக்கும் என்றார்.
என் பொருளாதார வசதி, சௌகரியம் இதையெல்லாம் கணக்கிட்டு என்னால் முடிந்த ஒரு எளிய பிரசாதத்தை விநோயோகிக்கிறேன் என்று கூறியிருக்கிறேன். வெளியே விசாரித்தால் புளி சாதம் ஒரு கிலோ ரூ.300/- சொல்கிறார்கள். வீட்டில் அம்மாவும் அப்பாவும் மளிகை பொருட்கள் வாங்கித் தந்தால் தயார் செய்துவிடுவார்கள் என்றாலும் அதற்குரிய பெரிய அடுப்பு, அகண்ட பாத்திரம் இதெல்லாம் வேண்டும். அதை வாடகை எடுத்தால் சுமை கால் பணம். சுமை கூலி முக்கால் பணம் என்று ஆகிவிடும். இப்போதெல்லாம் பொருட்களை உற்பத்தி செய்வதை விட வாடகையும் அதிகம் மேலும் அவற்றை டிரான்ஸ்போர்ட் செய்வது அத்துணை சுலபம் அல்ல. இங்கு வேன் சார்ஜ் மினிமம் ரூ.500/-. கூட்டிக் கழித்து பார்த்தேன். மயக்கம் தான் வந்தது. இருப்பினும், எப்படியாவது என் எளிய தொண்டை நிறைவேற்ற உறுதி பூண்டிருக்கிறேன்.
இதற்கிடையே நம் உழவாரப்பணி குறித்த பதிவை பார்த்துவிட்டு ஆத்மசேவா அமைப்பை சேர்ந்த திரு.சிவகுமாரன் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்தார். அவரிடம் எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியவில்லை சார் என்றேன் சற்று கவலையுடன். “சுந்தர் இதுக்கெல்லாம் கவலையே படாதீங்க. அவன் மேல பாரத்தை போட்டுட்டு நீங்க பாட்டுக்கு வேலைகளை கவனிங்க. கூட்டம் தானா சேர்ந்துடும். தன் கோவிலை சுத்தம் செய்ய ஆட்களை அந்த சிவபெருமானே தேர்ந்தேடுத்து கொள்வார். இதில் நம் விருப்பம் அவர்கள் விருப்பம் என்று எதுவும் இல்லை. எல்லாம் அவன் விருப்பம். அவ்வளவு தான். அவனுக்கு பணி செய்யும் உங்களுக்கு, உங்களை தேடி அனைத்து உதவிகளும் தானே வரும். என் அனுபவத்தில் சொல்கிறேன்!” என்றார்.
உழவாரப்பணி நமக்கு புதிது என்பதால் அவரிடம் சில டிப்ஸ்களை கேட்டுக்கொண்டேன். பல யோசனைகள் கொடுத்திருக்கிறார். விரைவில் எங்கள் பணி இணைந்து இருக்கும்.
அவரிடம் பேசிவிட்டு பின்னர் பணிகளில் மூழ்கிவிட்டேன். கொஞ்ச நேரத்தில் ‘சித்தர்கள் ராஜ்ஜியம்’ என்ற தளத்திலிருந்து திரு.ருத்ரன் என்பவர் தொடர்பு கொண்டார். “நீங்கள் உழவாரப்பணி செய்யப்போவதாக நண்பர் முத்துக்குமார் என்பவர் FORWARD மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் . நாங்கள் இங்கு தூத்துக்குடி பகுதியில் 15 ஆண்டுகளாக இந்த பணியை மேற்கொண்டு வருகிறோம். உங்கள் பணிகளில் பங்கேற்று உதவும்படி என் சென்னை நண்பர்களை கேட்டுக்கொண்டுள்ளேன். எங்கு எப்போது வரவேண்டும் சொல்லுங்கள். அவர்களை அவ்வாறே வரச் சொல்கிறேன்” என்றார்.
அட… சிவகுமாரன் சார் சொன்னது உண்மை தான். எல்லாம் தேடி வருதே என்று ஈசனின் லீலைகளை எண்ணி உவகையடைந்தேன்.
“திருவேற்காடு பஸ்நிலையத்தை ஒட்டியுள்ள நேர் சாலையில் சென்றால் வரக்கூடிய வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு காலை 6 மணிக்கு வரச் சொல்லுங்கள். 6 மணிக்கு வரை இயலாதவர்கள் 6.30 அல்லது 7.00 மணிக்கு வந்தால் கூட போதுமானது. உழவார பணிக்கு வருபவர்களுக்கு டிஃபன் ஏற்பாடு செய்திருக்கிறேன். பணி முடிந்ததும் அவர்கள் சற்று பசியாறிவிட்டே செல்லலாம்!” என்றேன்.
சரி என்றார்….
அடுத்து உழவாரப்பணிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் பட்டியலை பார்த்து அவற்றை நாளை வாங்கிவைத்துக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்குரிய முயற்சிகளை அலுவலகம் முடிந்து மாலை செய்துகொள்ளவேண்டும் என்று நினைத்தேன்.
சரியாக அரைமணிநேரம் கழித்து மேற்கு மாம்பலத்தில் இருந்து திருமதி.ராஜகோபாலன் என்று ஒரு அம்மா ஃபோன் செய்தார்கள். தாம் வயதான தம்பதிகள் எனவும், நம் தளத்தை நீண்ட நாட்களாக பார்த்துவருவதாகவும், சில மாதங்களுக்கு முன்பு தற்செயலாக ஆன்மீக விஷயங்களை கூகுள் செய்தபோது நம் தளத்தை பார்க்க நேர்ந்ததாகவும் அது முதல் தினமும் பார்த்து வருவதாகவும் கூறினார். நமது பணியை பாராட்டியவர் நமக்கு அவர்களது ஆசிகளை வழகினார். மேலும் இந்த சிவராத்திரியை முன்னிட்டு நாம் மேற்கொள்ளவிருக்கும் உழவாரப்பணியில் தம்மையும் ஈடுபடுத்திக்கொள்ள விரும்புவதாகவும், ஆனால் வயதான தங்களால் வீட்டை விட்டு வெளியேற முடியாது என்றும், நாம் உழாவாரப்பணி செய்ய தேவையான பொருட்களை வாங்க ஒரு சிறிய தொகையை கொடுக்க விரும்புவதாகவும் எவ்வாறு கொடுப்பது என்றும் என்னை கேட்டார்கள்.
எனக்கு ஒரு கணம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஈசனின் கருணையை எண்ணி உருகினேன்.
வயதான இவர்களை நாம் சிறிதும் சிரமப்படுத்தகூடாது. மேலும் அவர்களை அவர்கள் வீட்டுக்கே நேரில் சென்று சந்தித்து நம் தளத்தின் காலண்டர் + மகா பெரியவா (குஞ்சிதபாதத்துடன் கூடிய) படத்தையும் கொடுத்து அவர்களிடம் ஆசிபெற்று கைங்கரியத் தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தேன்.
“அம்மா…. நானே உங்களை நேரில் வந்து சந்தித்து ஆசி பெற்று வாங்கிக்கொள்கிறேன்” என்றேன்.
அடுத்து நான் கேட்டது ஒரே ஒரு கேள்வி தான்.
“நேரில் பல மாதங்கள் பழகிய மனிதர்களை கூட நம்ப மறுக்கும் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு என் பணிகளில் உதவிடவேண்டும் என்று தோன்றியது எப்படி? அதுவும் என்னிடம் பழகாமல்? என்னை பார்க்காமல்?” என்றேன்.
“உங்கள் எழுத்து வெறும் வார்த்தைகள் அல்ல. அவை உங்கள் உள்ளத்தை பிரதிபலிக்கின்றன. அவற்றில் உண்மையை என்னால் உணர முடிகிறது. மேலும் நல்லவர்களை நல்லவர்கள் நம்புவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?” என்றார்கள்.
“என் பாக்கியம் அம்மா!” என்றேன். இதோ இன்று விரைவில் சந்திக்க இருக்கிறேன்.
இதனிடையே வேதபுரீஸ்வரர் கோவில் குருக்கள், நேற்று மாலை ஃபோன் செய்தார். “நீங்கள் ஞாயிறு வந்து உழவாரப்பணியை நீங்க பாட்டுக்கு செய்ங்க. ஆனா நாளைக்கு காலைல (அதாவது சனிக்கிழமை) மட்டும் ஒரு ரெண்டு மணிநேரம் வந்துட்டு போகமுடியுமா? பித்தளை விளக்கு, பிரபை (ஆர்ச்) இதெல்லாம் கழுவி தேய்க்கவேண்டியிருக்கு. சாயந்திரம் சனிப் பிரதோஷம் வேற. கூட்டம் நிறைய வரும். அடுத்த நாள் விளக்கை எடுக்க முடியாது. நாளைக்கே இந்த வேலையை முடிச்சாத்தான் எங்களுக்கு சௌகரியம்… நீங்க வர முடியுமா?” என்றார்.
சற்று யோசித்தேன். இரண்டு பேராவது இருந்தால் தான் சௌகரியம். யார் வருவார்கள் என்று யோசித்தேன்.
“சரி வருகிறேன் சார்…. நீங்க பாட்டுக்கு கூலா உங்க வேலையை செஞ்சிகிட்டு இருங்க. நான் வந்து முடிச்சு கொடுத்திட்டு போறேன். காலைல எத்தனை மணிக்கு வரணும்னு மட்டும் சொல்லுங்கள். முடிஞ்சா என் ஃபிரெண்ட் யாரையாவது கூட்டிகிட்டு வர்றேன்” என்றேன்.
நான் ஒரு எட்டு மணி என்று சொல்வார்னு எதிர்பார்த்தா “காலைல 6 மணிக்கெல்லாம் வந்துடுங்கள்…. நான் 5 மணிக்கே தினமும் வந்துடுவேன்” என்றார்.
நண்பர்கள் பலர் ஞாயிறு உழவாரப்பணிக்கு வரவிருப்பதால் எவரையும் இன்றும் அழைக்க விருப்பமில்லை. நண்பர் ராஜா மட்டும் தான் வருவதாக சொன்னார்.
அவரிடம் “ஜி, காலைல 6 மணிக்கு கோவில்ல இருக்கணும். நான் நைட் படுக்குறதுக்கு லேட் ஆகும். ஒருவேளை நான் வர லேட் ஆனாகூட நீங்க பாட்டுக்கு குருக்கள் சொல்ற வேலையை செஞ்சிகிட்டு இருங்க. பித்தளையை தேய்க்க பயன்படும் பீதாம்பரி பவுடர் மற்றும் சபேனா மட்டும் ரெண்டு மூணு பாக்கெட் வாங்கிக்கோங்க” என்றேன்.
சரி என்று சொன்னவர், சொன்னபடி காலை 6.00 மணிக்கு ஷார்ப்பாக கோவிலுக்கு வந்துவிட்டார். நான் எழுந்து குளித்துவிட்டு அவசர அவசரமாக ஓடினேன்.
நான் போகும்போது ராஜா விளக்குகளை தேய்த்துக்கொண்டிருந்தார்.
அங்கிருந்த பிரபைகளை பார்த்து முதலில் மயக்கம் வராத குறை தான். இரண்டே பேர் எப்படி இதை செய்யப்போகிறோம் என்று மலைப்பு ஏற்பட்டது. நாம் எங்கே செய்கிறோம் நமக்கு உள்ளேயிருந்து செய்விப்பவன் அவன் அல்லவா? நாம் அது குறித்து அலட்டிக்கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்து நாங்கள் பாட்டுக்கு எங்கள் வேளைகளில் கவனம் செலுத்தினோம். நான் பிரபைகளை நீர் அடித்து கழுவி தேய்க்க ஆரம்பித்தேன்.
எங்கள் இருவருக்கும் டீ வாங்கித் தந்தார்கள். சாதாரண டீ தான். அவனுக்கு பணி செய்யும்போது கிடைத்தபடியால் சௌலப்யமாக இருந்தது.
எண்ணைப் பிசுக்கு நாங்கள் நினைத்ததைவிட உறுதியாக ஒட்டிக்கொண்டு வர மறுத்தது. எலுமிச்சை, பீதாம்பரி, சபேனா, சோப்புத் தூள் என அனைத்தையும் போட்டு தேய்த்தோம். எங்கள் இரண்டு பேரால் முடிந்த அளவிற்கு சுத்தம் செய்தோம். ஒரளவுக்கு மேல் முடியவில்லை. பல மாதங்கள் ஒட்டிக்கொண்டு இருந்த கரைகள் நீங்க மறுத்தன.
அனைத்தையும் ஒரு ரெண்டு மணிநேரத்தில் முடித்தோம்.
இந்த பணியில் நண்பர் ராஜாவின் பங்கு அளப்பரியது. அவர் மட்டும் இல்லாவிட்டால் இன்று இந்த கைங்கரியத்தை நிறைவேற்றியிருக்கவே முடியாது.
“எங்கள் பணிகளில் குறைகள் இருந்தால் பொருட்படுத்தவேண்டாம். எங்களால் முடிந்ததை செய்திருக்கிறோம்” என்றேன் குருக்களிடம்.
“நீங்கள் செய்வது மகத்தான பணி. இதில் குறையாவது கிறையாவது” என்றார்.
அருகே இருந்த செக்யூரிட்டி ஒருவரை அறிமுகம் செய்து வைத்து, “இவர் தான் சார் இங்கே கூட்டி, பெருக்கி, கழுவி, எல்லா வேலையும் பண்றார். அவர் வேலை இல்லை இதெல்லாம். இருந்தாலும் சிவனுக்கு தொண்டு செய்றேன். இதிலே என் வேலை இது மட்டும் தான்… என் வேலை அது மட்டும் தான்னு சொல்லலாமா என்கிறார்” என்றார்.
அவருக்கு கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தேன். கோவிலை அதிகபட்சம் இது மாதிரி வருஷம் ரெண்டு முறை நாம வந்து உழவாரப்பணி செய்கிறோம். ஆனால் வருடம் முழுவதும் அவனுடைய ஆலயத்தில் துப்புரவு பணி செய்பவர்களை நினைத்து கண்கலங்கினேன்.
இந்த சிவராத்திரி வைபவத்தில் இந்த கோவிலில் இத்தகைய துப்புரவு பணி செய்பவர்களுக்கு நம் தளம் சார்பாக சால்வை அணிவித்து உரிய மரியாதை செய்து, கையில் கொஞ்சம் தொகையும் கொடுக்க உத்தேசித்திருக்கிறேன். பார்க்கலாம்.
மற்றபடி இன்றைய எங்கள் பணி எங்களுக்கு தந்த மன நிறைவு இது வரை எனக்கு ஏற்பட்டதில்லை.
எந்தக் கணம், சிவபெருமானின் கோவில் விளக்கை சுத்தம் செய்ய எங்கள் கைகள் நாரை எடுத்து தேய்த்தனவோ அந்தக் கணமே எங்களை பீடித்திருந்த தோஷங்கள், தீவினைகள், அனைத்தும் துடைத்தெரியப்பட்டுவிட்டதாக நான் நம்புகிறேன்.
என் கடன் பணி செய்து கிடப்பதே!
அவன் கடன் என்னை என்றும் காப்பதே!!
திருசிற்றம்பலம்!!!
…………………………………………………………………………………….
* நம் நாளைய (ஞாயிறு காலை 10/03/2013) உழவாரப்பணியில் தம்மை இணைத்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் எம்மை 9840169215 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். வருபவர்களுக்கு என் செலவில் சிற்றுண்டி ஏற்பாடு செய்திருக்கிறேன். பணி முடித்து சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டே செல்லலாம்.
** மாலை நமது சிவராத்திரி விரதம் அங்கு தான் அனுஷ்டிக்கப்படும். பிரசாதமும் ஏற்பாடு செய்திருக்கிறேன் . நம் தளம் சார்பாக பக்தர்களுக்கு விடிய விடிய பிரசாதம் வழங்கப்படும். மேற்படி சிவராத்திரி விரதத்தில் தம்மை எங்களுடன் இணைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் என்னை தொடர்புகொள்ளவும்.
“அவன் வேலைக்கு அவன் விரும்புகிறவர்களை அவனே தேர்ந்தெடுப்பான்!” தலைப்பு உண்மை தான். இருந்தாலும் நம்மோட முயற்சி என்பதும் கொஞ்சம் இருக்கணும் இல்லையா? அதற்குத் தான் இந்த அழைப்பு!
…………………………………………………………………………………….
சுந்தர் ஜி
நாளை
நான் கண்டிப்பாக வந்து விடுகிறேன் .
ஓம் சிவ சிவ ஓம் …
avan arulale avan thal vanagi mattum alla avanukku panium seiya vaithullar you are blessed by him more.
திரு சுந்தர் அவர்களுக்கு வணக்கம். தங்களுடன் பேசியது மிகவும் மகிழ்ச்சி. உங்கள் வலை தவறாமல் படித்து வருகிறேன். மனது மிகவும் கஷ்டமாக இருக்கும் போது உங்கள் பதிவுகள் உண்மையில் ஆறுதல் தரும். உங்க கிட்டே பேச நினைப்பேன் ஆனால் ஏனோ போன் பண்ண நேரம் இன்று தான் அமைந்தது. உங்கள் ஆன்மிக சேவை நிச்சயம் என்னை போல பலருக்கு வழி காட்டல்.
உங்களோட சிவராத்திரி உழவார பணி இந்த ஒரு கோவிலுடன் நின்று விடாமல் மேலும் பல பெரிய புராதன கோவில்களுக்கும் தொடர அந்த எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பான். ராமருக்கு அணில் செய்த சேவை போல என்னால் முடிந்த சிறு நன்கொடை (இச்சமயம் உடல்நிலை இடம் கொடாததால் என்னால் உங்களுடன் சேர முடியவில்லை ஆனால் அந்த ஆண்டவன் நினைத்தால் அடுத்த வருடம் அல்லது அதற்கும் முன்னால் உங்களுடன் நானும் பங்கெடுப்பேன்) எல்லாம் அவன் செயல். உங்கள் என்னால் முடிந்த சிறு தொகை அனுப்பியுள்ளேன். பிரசாதத்திற்கு உபயோகமாக இருக்கும்.
டியர் சார்
நான் மதுரையில் வசித்து வருகிறன். உங்களது வெப்சைட் தினமும் படிப்பேன். உங்களது உழவாரப்பணி சீரக்க வாழ்த்துகள் .
நான் இரண்டு நாளாக ஊரில் இல்லை. இன்றுதான் வந்தேன். உங்கள் மகத்தான கைங்கர்யத்தை நினைத்து சொல்ல வார்த்தைகளே இல்லை.
நான் குரோம்பேட்டையில் உள்ள கோயிலில் கலந்து கொள்ள உள்ளதால் உழ்வார பணிக்கு வர இயலாமல் உள்ளது. அடுத்த பணியிலாவது கலந்து கொள்ள ஆசை. பகவான் சங்கல்பம் எப்படி என்று தெரியவில்லை.
சுந்தர்ஜி விளக்கு, திருவாச்சி எல்லாம் பள பளஎன்று உள்ளது. உங்களுக்கும் தரு ராஜா அவர்களுக்கும் சிவனின் கடைக்கண் பார்வை உள்ளது போலும் இல்லாவிட்டால் நாளை வர இருந்த உங்களை இன்றே கூப்பிட்டு விட்டாரே. உங்களது சேவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. ஓம் சிவ சிவ ஓம்.
பல கோவிலுக்கு பல வருடம் சென்று பிராத்தனை செய்தால் மனது எவ்வளவு ஆனந்தபடுமோ ,அந்த ஆனந்தம் இந்த இரண்டு மணி நேரத்தில் எனக்கு கிடைத்தது ,சுந்தருக்கும் அப்படி தான் என்று நினைக்கிறன்
சுந்தர் என்னிடம் சொன்னபோது கூட நான் எதோ சிறு விக்ரகங்கள் அல்லது வேறு ஏதாவது தருவார்கள் என்று நினைத்தேன் காலையில் குருக்களிடம் சென்று கேட்டபோது அவர் இந்த பிரபைகளை காட்டினார் உண்மையில் கொஞ்சம் மலைதுதான் போனேன் ,சுத்தம் செய்வதை ஒழுங்காக செய்ய வேண்டுமே அரைகுறையாக செய்யா கூடாதே என்று மனம் வேண்டியது ,ஈசன் மேல் பாரத்தை போட்டு இருவரும் தொடர்ந்தோம்
உண்மையில் இன்று காலை என் குழந்தைக்கு பள்ளி admission interview காலை ஒன்பது மணிக்கு வர சொல்லி இருந்தார்கள் நாங்கள் வேலை முடிக்கவே 8.30 ஆகிவிட்டது ,இன்னும் இரண்டு அண்டா வேறு இருக்கிறது என்றார் அதை மட்டும் சுந்தரிடம் ஒப்படைத்துவிட்டு ,அவசரம் அவசரமாக கிளம்பி வந்தேன் வீட்டுக்கு வந்து சேர 9.10 ஆகிவிட்டது ,கை கால் அலம்பிவிட்டு வேறு உடை மாற்றிவிட்டு பள்ளிக்கு என் குழந்தையும் ,என் மனைவியும் அழைத்து கொண்டு சென்றேன் ,என்னடா 9.00 மணிக்கு வரசொனார்களே ,நாம் 9.30 கு தானே போகிறோம் எதாவது நினைதுவிடுவார்களா என்று ஒரு பக்கம் பயம் இருந்தது இருந்தாலும் ஈசன் பார்த்துகொள்வார் என்று நினைத்து இருந்தேன் என்ன ஆச்சிரியம் 9.00 மணிக்கு தொடங்க வேண்டிய interview 9.30 கு தான் ஆரம்பித்தார்கள் ,நாங்கள் காத்திருந்து 10.00 மணிக்கு மேல் தான் முடித்தோம்
மனசுக்குள்ளயே ஈசனின் மகிமையை நினது மகிந்துகொண்டேன் ,அப்பொழுது யோசனை அட டா பேசாமால் அந்த அண்டாவையும் தேய்த்து விட்டு வந்து இருக்கலாமே என்று
தென்னாடுடைய சிவனே போற்றி !!!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!
செய்ய வேண்டும் என்ற மனமிருந்தால் போதும் – அந்த ஈசன் எல்லாவற்றையும் செவ்வனே நடத்திக்கொடுப்பான் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது உங்களின் இந்த பதிவு !!!
வாழ்க உங்கள் திருப்பணி !!!
இயக்குபவனும் அவனே
இயங்குபவனும் அவனே – இறைவா என்றேண்டும் எங்களுக்கு துணை நின்றி நற்கதியை அருளிட பிரார்த்திக்கிறோம் !!!
வணக்கம். நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். கர்மாவை கழிக்க மிக சரியான வழி. விளக்கு எரியாத திருக்கோவில்களில் விளக்கு ஏற்றினால் அவர்கள் வாழ்வில் ஏற்றம் அடைவர். பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு
i just read the article and the comments. May the Almighty Bless Sundar & Raja and their families and may the kind of people Like them increase in number…
திரு. சுந்தர் அவர்களுக்கு,
நானும், எனது தங்கை மற்றும் அவரது மகனும் உழவார பணியை தங்களுடன் சேர்ந்து செய்ய மிகவும் பிரியப்படுகின்றோம். ஆதலால் தங்களிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கின்றோம்.
அன்புடன்,
திருமதி. ரமா ஷங்கர்.
வாழ்த்துகள் ஐயா 9787320265