Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 1, 2024
Please specify the group
Home > Featured > பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்த மாதரசிகள் – பெண்கள் தின ஸ்பெஷல் !

பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்த மாதரசிகள் – பெண்கள் தின ஸ்பெஷல் !

print
ன்று பெண்கள் தினம். காலையே ஏதாவது சிறப்பு பதிவு அளிக்க எண்ணியிருந்தேன். நேரமின்மை காரணமாக அளிக்க முடியவில்லை. ‘சிவராத்திரி’ தொடர்பாக மூன்று பதிவுகள் அளித்ததே அந்த சிவனின் அருளால் தான். இல்லையென்றால் ஒரு பதிவுகூட அளித்திருக்க முடியாது. பெண்கள் தினத்திற்காக பயனுள்ள பதிவு ஏதாவது நிச்சயம் அளித்தே ஆகவேண்டும் என்று தான் இந்த பதிவை அளிக்கிறேன்.

பெண்களை சிறந்த முறையில் நடத்த வேண்டும் என்பதை சாத்திரங்கள் பல இடங்களில் வலியுறுத்தியிருக்கின்றன. எத்தனையோ சிறப்புக்கள் பெற்றிருந்தும் பெண்ணாசையால் வீழ்ந்தான் இலங்கைவேந்தன் இராவணன். பெண்ணின் கோபத்துக்கு ஆளானால் எப்பேற்ப்பட்ட சாம்ராஜ்ஜியமும் மண்ணோடு மண்ணாகி அழிந்துவிடும் என்பதை உணர்த்துகிறது மகாபாரதம். மனைவி மகிழ்ச்சியாக இருக்கும் வீட்டில் நல்லதே நடக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. எந்த வீட்டில் பெண் கண்ணீர் சிந்துகிறாளோ அந்த வீட்டில் திருமகள் வெளியேறி மூதேவி குடியேறுவாள்.

இன்று பெண் விடுதைலையை பற்றி பலர் பேசினாலும் அதை முதன் முதலில் செயலில் காட்டியது சிவபெருமான் தான். தனது ஒரு பாதியை உமையவளுக்கு அளித்து, ஆணுக்கு சரி நிகர் பெண்கள் என்று உலகிற்கு உணர்த்தியவன் அவன். எனவே நம் தளத்தில் பெண்மையை போற்றும் இந்த நன்னாளில் ஒரு பதிவேனும் இருப்பது சிறப்பு என்று கருதி சற்று தாமதானாலும் பரவாயில்லை. நல்ல கருத்தை பதிவு செய்யவேண்டும் என்று கருதி தருகிறேன்.

சரித்திரத்திலும், நம் பக்தி இலக்கியங்களிலும், வரலாற்றிலும் பெண்மைக்கு உதாரணமாய் திகழ்ந்து பெண்மைக்கு மாபெரும் மதிப்பும் மரியாதையையும் தேடித்தந்த பல பெண்கள் இருக்கிறார்கள். பெண்களை பற்றிய பொத்தாம் பொதுவான அபிப்ராயங்களை தவிடு பொடியாக்கியவர்கள் இவர்கள். இவர்களை எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியாது. தெரியவைப்பது நம் கடமை.

பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்த மாதரசிகள் சிலரை பார்ப்போம்.

இந்தப் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ள அனுசூயாவும், நளாயினியும் நிச்சயம் தவிர்க்க இயலாதவர்கள். பெண்ணடிமைத்தனங்கள் கண்டிக்கப்படுகிற இந்த நவீன யுகத்தில் கூட இவர்கள் இருவரும் கற்பின் தன்மைக்காகவும் சக்திக்காகவும் இன்றளவும் பேசப்படுகிறவர்கள். இவர்களின் வரலாற்றை படிப்பவர்களுக்கு அது சற்று ஜீரணிக்கமுடியாததாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கலாம். ஆனால் யுகங்கள் மாறி யுகதர்மங்களலும் மாறிவிட்டன என்பதை மனதில் கொள்ளவேண்டும். (இன்னும் ஒரு 20 வருஷம் போச்சுன்னா…. பாரதி என்கிற ஒருத்தர் பெண் விடுதலையை பத்தியெல்லாம் கூட பேசியிருக்காருப்பா… என்ன அக்கிரம் இது என்று பாவப்பட்ட அப்பாவி ஜென்மங்களான இந்த ஆண்கள் ஆச்சரியமாக பேசுவார்கள். ஏன்…இப்போவே கூட ஆங்காங்கே அந்த குரல் கேட்குதே!)

அனுசூயா : அத்திரி மகரிஷியின் பத்தினி இவர். கணவரை கண்கண்ட தெய்வமாக ஒழுகிய கற்புக்கரசி. இவளது கற்பின் வலிமையையும் பெருமையையும் உலகிற்கு உணர்த்த விரும்பிய மும்மூர்த்திகள், மூன்று ரிஷிகளாக வேடம் புனைந்து, அத்திரி மகரிஷியின் ஆஸ்ரமத்துக்கு அவர் இல்லாதபோது சென்று பசிக்கு அன்னமிடுமாறு கேட்டனர். அதை அளிக்க அனுசூயா முன்வந்தபோது, “நாங்கள் காமக் குரோத லோபம் என்னும் மும்மலங்களை அறுத்தவர்கள். எங்களுக்கு நீ எந்த ஆடையும் இன்றி நிர்வாணமாகத் தான் உணவு பரிமாற வேண்டும். இல்லையென்றால் அது எங்களை அவமதிக்கும் செயல்” என்று கூற, செய்வதறியாது தவித்த அனுசூயா, தமது கணவரை வேண்டிக்கொண்டு, இவர்கள் மீது அத்திரிஷி மகரிஷியின் பாதத்தை கழுவிய நீரை இவர்கள் மீது தெளிக்க, அந்த கணமே மும்மூர்த்திகளும் மூன்று பச்சிளங் குழந்தைகளாக மாறிவிடுகின்றனர். கணவன்மார்களை காணாது தவித்த முப்பெரும் தேவியரும் விஷயத்தை கேள்விப்பட்டு அத்திரி மகரிஷியின் ஆஸ்ரமத்துக்கு ஓடிவந்து அனுசூயாவின் கால்களில் வீழ்ந்து வணங்க…. மீண்டும் மும்மூர்த்திகள் சுய உருவம் பெறுகிறார்கள். முப்பெரும் தேவியர்களுக்குமே மாங்கல்ய பாக்கியம் தந்த பெருமை அனசூயைக்கு உண்டு.

நளாயினி : சூரியனையே நிறுத்தியவள் இவள். தொழு நோய் பீடித்த தன் கணவன் விரும்புகிறான் என்பதற்காக அவனை தாசியின் வீட்டுக்குக் கூடையில் வைத்து சென்றவள், இருட்டின் காரணமாக, அவளது கூடை கழுவில் ஏற்றபட்டிருக்கும் மாண்டவ்ய மகரிஷி மீது மோதிவிட ஏற்கனவே அவதிப்பட்டுக் கொண்டிருந்த முனிவர் தனக்குத் துன்பம் கொடுத்த அவன் சூரியோதயத்தில் தலைவெடித்து இறக்குமாறு சாபம் கொடுக்கிறார். இதைக்கேட்ட அந்த பத்தினி தான் பதிவிரதை என்பது உண்மையானால் சூரியன் உதிக்கக்கூடாது என்று பதில் சாபம் விடுகிறாள். உலகம் இருட்டில் மூழ்கிட அதன் காரணத்தை அறிந்த பிரம்மன் அத்திரி முனிவர் ஆசிரமம் அடைந்து அனுசூயையிடம் நளாயினியைச் எப்படியாவது சந்தித்து சூரியோதயத்திற்கு வழிவகுக்குமாறு வேண்டுகிறார். அனுசூயை அவ்வாறே நளாயினியை சந்தித்து அவள் சாபத்தை விலக்கிக் கொண்டு சூரியோதயம் ஏற்பட்டு உலகம் உய்ய செய்யும்படி கேட்டுக்கொள்கிறாள்.

அவ்வையார் : அவ்வை பாட்டியை மறக்க முடியுமா? தமிழ் கடவுள் முருகனுக்கே “உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு” என்று சுட்டிக்காட்டிய தைரியம் உள்ளவளாயிற்றே . ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, ஞானக்குறள், விநாயகர் அகவல், நாலு கோடிப் பாடல்கள் போன்ற பாடல்களையும் நூல்களையும் பாடியவர் தான் அவ்வையார். அவ்வையாரின் வாழ்க்கை வரலாற்றை ஓரளவு நன்கு தெரிண்டுகொள்ளவேண்டும் என்று விரும்புகிறவர்கள் அமரர் எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் இயக்கத்தில், கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் நடிப்பில் 1953 இல் வெளியான ‘அவ்வையார்’ திரைப்படத்தை அவசியம் பார்க்கவேண்டும். (இதன் ஒரிகினல் டி.வி.டி. கடைகளில் கிடைக்கிறது.)

காரைக்காலம்மையார் : 63 நாயன்மார்களுள் ஒருவர் இவர். காரைக்காலம்மையாரின் இயற்பெயர் புனிதவதி. பரமதத்தன் என்ற வணிகனுக்கு அவரை மணமுடித்து கொடுத்தனர். திருமணமான பின்னரும் அவள் சிவசேவையில் நாட்டம் கொண்டிருந்தாள். ஒருசமயம் ஒரு சிவபக்தர் மூலமாக, இரண்டு மாங்கனிகளை பரமதத்தனிடம் கிடைக்கும்படி செய்தார் சிவன். கனிகளை பெற்ற பரமதத்தன், அதனை வீட்டிற்கு கொடுத்து விட்டான். சிவன், அவனது வீட்டிற்கு அடியார் வேடத்தில் சென்றார்.

கணவன் இல்லாத வேளையில் வந்த அவரை வரவேற்ற புனிதவதி அன்னத்துடன் ஒரு மாங்கனியையும் படைத்தாள். சாப்பிட்ட அடியார் அங்கிருந்து சென்று விட்டார். வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு அன்னம் பரிமாறிய புனிதவதி, ஒரு மாங்கனியை வைத்தாள். அதன் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டான் பரமதத்தன். புனிதவதி செய்வதறியாது திகைத்தாள்.

சமையலறைக்குள் சென்று, தனக்கு ஒரு கனி கிடைக்க சிவனிடம் வேண்டினாள். அவள் கையில் ஒரு மாம்பழம் வந்து அமர்ந்தது. அதனை கணவனுக்கு படைத்தாள் புனிதவதி. முதலில் வைத்த மாங்கனியைவிட அதிக சுவையுடன் இருந்ததால் சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டான். புனிதவதி நடந்ததை கூறினாள். பரமதத்தன் நம்பவில்லை. சிவன் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினான். புனிதவதியும் சிவனை வணங்கவே, கனி கைக்கு வந்தது. தன் மனைவி தெய்வப்பிறவி, இவளுடன் இல்வாழ்க்கை நடத்துவது தவறு என்றுணர்ந்து அவளை விட்டு பிரிந்தான் பரமதத்தன். வேறு ஊருக்கு சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்துக் கொண்டான். அவளுக்கு பிறந்த குழந்தைக்கு ‘புனிதவதி’ என்று பெயர் வைத்தான். புனிதவதி இதையறிந்து கணவனை அழைக்கச் சென்றான். அவன் அவளை தெய்வமாகக் கருதி காலில் விழுந்தான். புனிதவதியார் தன் கணவனுக்கான உடல் தனக்கு வேண்டாம் என்று சிவனை வேண்டி, சதையை உதிர்த்து, எலும்பாகி முதிய வடிவம் பெற்றார். அப்போது “”கைலாயம் செல்க” என அசரீரி உரைத்தது. கைலாயம் புனிதமான இடம் என்பதால், கால் ஊன்றாமல், தரையில் தலையை ஊன்றி தலைகீழாக கைலாயம் சென்றார் அந்த அம்மை. சிவன் அவரை எதிர்கொண்டு “”தாயே சுகமாக வந்தனையா?” என்றார். தன் நடனத்தை காட்டியருளினார். புனிதவதியாருக்கு அவர் பிறந்த ஊரில், கோயில் கட்டப்பட்டது.

திரு.ஏ.பி.நாகாராஜன் அவர்கள் இயக்கத்தில் இந்த புனித வரலாறும் கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் நடிக்க திரைப்படமாக வந்துள்ளது.

அன்னை வாசுகி : திருவள்ளுவரின் மனைவி. கணவனே கண்கண்ட தெய்வம் என்று ஒழுகி, இல்லறத்தின் மாண்பு சிறக்க நடந்துகொண்டவள். உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், தனது அன்பு மனைவி வாசுகிக்காக  மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா!  மனைவி மறைந்தபோது அவரின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.

அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

அன்னை சாரதா தேவி : பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி. உயிரினங்கள் அனைத்தையும் அன்னை காளிதேவியின் சொரூபமாகவே பார்த்த ராமகிருஷ்ணர் தனது மனைவியை மட்டும் அவ்வாறு பார்க்காதிருப்பாரா?

ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மீக வாழ்க்கைக்கும் அவரது தேடல்களுக்கும் உற்ற துணையாக இருந்தவர் அன்னை சாரதாதேவி.

அன்னை ஸ்ரீசாரதாதேவியைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் போது, “சக்தி இல்லாமல் உலகுக்கு முன்னேற்றம் கிடையாது. நம் நாடு எல்லா நாடுகளிலும் கடைசியில் இருப்பது ஏன்? பலமிழந்து கிடப்பது ஏன்? நம் நாட்டில் சக்தி (பெண்கள்) அவமதிக்கப்படுவதுதான் காரணம். சக்தியின் அருளின்றி என்ன சாதிக்க முடியும்? இந்தியாவில், அந்த மகா சக்தியை மீண்டும் உயிர் பெற்றெழுச் செய்யவே அன்னை தோன்றினார்; அவரை ஆதாரமாகக்கொண்டு மீண்டும் கார்கி, மைத்ரேயி போன்ற வேதகாலப் பெண்கள் உலகில் தோன்றுவர்…” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

அன்னை தெரசா : அன்னை தெரசா என உலகம் முழுவதும் உள்ள மக்களால் பாசத்துடன் அழைக்கப்பட்ட இவரின் இயற்பெயர் எக்னஸ் கோஞ்சா பொயாஜியூ. தொண்டிற்கு உதாரணமாக போற்றப்படுபவர். கல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடு தொண்டாற்றினார். 1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சமூகம் தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கிய தொழு நொயாலிஒகலையும் சாவின் விளிம்பில் இருந்த பிச்சைக்காரர்களையும் அன்னை தெரசாவும் அவரது அமைப்பினரும் தேடிப்பிடித்து சேவை செய்தனர். மற்றவர்களால் மறுக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு தரும் இடமாகத் தெரசாவின் அமைப்பு விளங்கியது.

வாழ்ந்த போது அஞ்சல் தலை வெளியிடப்பட்ட முதல் பெருமை அன்னை தெரசாவுக்கு மட்டுமே உரியது. அவரது பணியை பாராட்டியவர்களிடம், புகழ்கிறவர்களிடம், ”கடவுள் கை காட்டிய கடமையைச் செய்கிறேன்’’ என்று புன்னகையுடன் சொன்னவர். தொண்டிர்க்கேன்ரே தம்மை அர்பணித்துக்கொண்ட அப்பர் பெருமான் சொன்னதும் இதையேத் தான். கீதையின் சாரமும் இது தான்.

ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் : வீரத்தின் மறு உருவம் ஜான்சி ராணி லக்ஷ்மிபாய். பிறந்த வருடம் 1834. இவரது வீரதீரச் செயல்கள், மற்றும் ஆங்கிலேயரை எதிர்த்து இவர் புரிந்த போர் போன்றவை இன்றும் பலரால் போற்றப்படுகின்றன. அமரத்துவம் பெற்ற ஒரு வீராங்கனையாக இன்றும் அவர் பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது. 1828ம் ஆண்டு வாரணாசியில் பிறந்த ஜான்சிராண தனது 4 வயதில் தாயை இழந்தார். ஜான்சியை ஆண்ட கங்காதரராவ் என்பவருக்கு 1842ல் இவரை திருமணம் செய்து கொடுத்தார் தந்தை. தனது கணவர் மறைந்ததையோட்டி தனது தத்துபிள்ளையை ஆட்சியில் அமர்த்தினார். அப்போதைய ஆங்கிலேய கவர்னர் டல்ஹௌஸி இந்த தத்துப் பிள்ளையை ஏற்றுக்கொள்ள மறுத்து “ஒரு மன்னருக்கு வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம்” என உரிமை கொண்டாடி ஜான்சியை பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். ஆனால், ஜான்சி ராணி அடிபணிய மறுத்தார். இதனால் கடும் கோபமடைந்த பிரிட்டிஷார், ஜான்சி அரண்மனையை சூறையாடி பொருட்களை கொள்ளையடித்தனர். ஜான்சி ராணியையும் அரண்மனையை விட்டு விரட்டினர். கடைசியில் தனது நாட்டை மீட்க வெள்ளையர்களை எதிர்த்துப் போராடத் துணிந்தாள் லட்சுமிபாய். 1857ம் ஆண்டு, முதல் விடுதலைப் போரில் தீவிரமாக குதித்தார். 1858 ம் வருடம், ஜூன் மாதம் 18 ம் தேதி, போர்முனையில் காயம் அடைந்து, வீரமரணம் அடைந்தார் இந்த வீரப் பெண்மணி.

பாரத சரித்திரத்தில் பெண்களின் பங்களிப்புக்கு அற்புதமான உதாரணம் ஜான்சி ராணி லட்சுமிபாய். இந்திய சுதந்திரப் போரில் ஆண்களுக்கு நிகராகப் போராடிய மகளிரின் பங்களிப்புக்கும் ஜான்சிராணி உதாரணம்.

அன்னை கஸ்தூரிபாய் : மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணை. கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறை சென்றவர். காந்தி பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டதால் குடும்பப் பொறுப்பு முழுவதும் கஸ்தூரிபா கவனித்துக் கொண்டார்.

சிறு வயதிலேயே ஏற்பட்ட நுரையீரல் நோயால் பதிக்கப்பட்ட அவர் வாழ்நாள் முழுவதும் அதனால் சிரமப்பட்டார். ஆயினும், கணவருடன் எளிய வாழ்வு வாழ்ந்தார். சபர்மதி ஆசிரமத்தின் சூழல் அவருக்கு ஒத்துக்கொள்ளாத போதும், கணவரின் பாதையே தனது பாதை என, ஒரு இந்திய குடும்பத் தலைவியாகவே அவர் வாழ்ந்தார். அங்கு ராட்டை நூற்றல் உள்ளிட்ட காந்தியப் பணிகளில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட காந்தியுடன் கஸ்தூரிபாயும் கைதானார். இருவரும் பூனாவிலுள்ள ஆகா கான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, நாட்பட்ட நுரையீரல் அழற்சி, மூச்சுக்குழல் அழற்சி நோயினால் மிகுந்த வேதனையுற்றார். சிறையில் இருக்கும்போது சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் கஸ்தூரிபாய் காந்தி.

செல்லம்மாள் : முண்டாசுக் கவிகன் பாரதியின் மனைவி. ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் உண்டு’ என்பது பிரபலமான பொன்மொழி. உலகின் மிகப் பெரிய சாதனையாளர்களுக்குப் பின்னே அவர்களுக்கு பக்கபலமாக அமைதியே உருவான ஆர்பாட்டமில்லாத, தியாகத்தின் சொரூபங்களாக அவர்களது மனைமார்கள் இருப்பது வரலாற்றில் நாம் காணக்கூடிய ஒரு முடிவில்லா காட்சி.

தன் கணவரைப் போல் செல்லாம்மாள் பெரிய கவிஞர் இல்லை. விடுதலைப் போராட்ட வீரரும் இல்லை. ஆனாலும், நம் மக்களின் நெஞ்சங்களில் ஆழமாகப் பதிந்து விட்டவர். தமிழர்களின் உதாரணப் பெண் இவர் என்றும் கூறுவதுண்டு. தன கணவரின் பெருமைக்காகவும், சிறப்புகளுக்காகவும், தனக்கு நிகழும் ஏமாற்றங்களை, அவலங்களை கல் போன்ற மனத்துடன் மௌனமாகப் பொறுத்துக்கொள்ளும் சராசரி தமிழ்ப் பெண்ணின் வடிவம் இந்த செல்லம்மா.

காலத்தினால் அழியாத பல கவிதைகளை பாரதியால் எழுத முடிந்ததென்றால், அதற்கு உந்துதலாக இருந்து காரணியாக இருந்து வினையூக்கியாக இருந்தது செல்லம்மாதான். ‘என் வேரென நீ இருந்தாய். அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்’ என்று தன் மனைவி செல்லம்மா பற்றி உருகி எழுதினார் பாரதி. ‘உன்னைக் கரம் பிடித்தேன், வாழ்க்கை ஒளிமயமானதடி’ என்று நன்றி சொல்வதற்கும் காரணம் அதுதான்.

…………………………………………………………………………………

(இன்னும் இந்த பட்டியலில் இடம்பெற தகுதியுடையவர்கள் பலர் இருக்கிறார்கள். இருப்பினும் என்னால் இயன்ற பத்து பேரை  பட்டியலிட்டுள்ளேன். இது வரிசைப்படியிலான பட்டியல் அல்ல. இவர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று எவரும் இல்லை.)

பெண்மையை போற்றுவோம். பெண்மையை மதிப்போம்.

“மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடவேண்டுமம்மா” – திரு.வி.க.

…………………………………………………………………………………

 

 

5 thoughts on “பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்த மாதரசிகள் – பெண்கள் தின ஸ்பெஷல் !

 1. மகளீர் தினம் சிறப்புகட்டுரை .

  மிகவும் அருமை .

  பெண்மையை போற்றுவோம். பெண்மையை மதிப்போம்.

  நன்றி .

 2. மிகவும் நன்றி அண்ணா…! என் போன்ற பெரும்பாலானோருக்கு இந்தப் பதிவில் வரும் சிலரைத் தான் தெரியும்…அதுவும் கேட்ட அளவில் மட்டுமே…! ஆனால் உங்கள் பதிவு இவர்களை எங்களுக்கு நன்கு அறிமுகப்படுத்தி விட்டது…! சும்மாவா சொன்னார்கள் “ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே !” என்று…! பெண்கள் நினைத்தால் உலகில் எதுவும் சாதிக்கலாம்…! வீட்டுக்குள்ளே அடுப்பூதிக் கிடந்த காலம் போய், பட்டங்களும் சட்டங்களும் பாரினிலே இன்று பெண்கள் கையில்….! பெண்கள் சாதிக்காத துறைகள் இல்லை..! இருந்தும் கூட, இன்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் வளர்ந்து கொண்டே வருவதும் வேதனைக்குரியது…! இதை வேரறுக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு…..! அதனை உணர்ந்து செயல்படுவோம்…! பெண்மை போற்றுவோம்…!

  நம் தள வாசக சகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துகள்….!

  “கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”

  விஜய் ஆனந்த்

 3. நண்பர் சுந்தர் அவர்களே

  தங்களது பதிவை சில மாதங்களாக படித்து வருகிறேன். பல நல்ல விசயங்களை பதிவு செய்வது வருவது உண்மையாக பாராட்டப்பட வேண்டிய விசியம். தங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
  நானும் ஒரு designer working in பெங்களூர்.

  1. பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி நண்பா….
   – சுந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *