அவற்றில் முதன்மையான ஒன்றை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நீங்கள் ஒரு மிகப் பெரிய வீட்டுக்கு வயதான சொந்தக்காரர் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் வீட்டுக்கு உற்றார் – உறவினர் – என யார் வந்தாலும் அரவணைத்து உபசரித்து மகிழ்ச்சியோடு அனுப்புபவர். உங்கள் உபசரிப்புக்காகவே நாள் கிழமை மற்றும் விஷேஷங்களில் உங்கள் வீட்டில் கூட்டம் அலைமோதும். வருபவர்கள் நல்லவர்கள் தான் என்றலும் அவரவர் வந்த நோக்கம் நிறைவேறியவுடன் கிளம்பி சென்றுவிடுவார்கள். ஆனால் வீடு தான் பாழ்பட்டு கிடக்கும். உங்களிடம் இருக்கும் சொற்ப பணியாளர்களை வைத்து உங்களால் அனைத்தையும் செய்துகொள்ள முடிவதில்லை. அப்படியிருக்கும் சூழ்நிலையில் உங்கள் வீட்டுக்கு வருகை தரும் சில விருந்தினர்கள், தங்களை பற்றி கவலைப்படாது, உங்களை பற்றி உங்கள் வீட்டை பற்றி கவலைப்பட்டு, உங்கள் வீட்டை ஒட்டடையடித்து, சுத்தம் செய்து, தரையை பெருக்கி, கழுவி சுத்தம் செய்து, சாமான்களையும் துடைத்து, உங்கள் காம்பவண்டில் மண்டியிருக்கும் செடி கொடிகளை அகற்றி சுத்தம் செய்துவிட்டு கிளம்பினால் அவர்களை எந்தளவு மகிழ்ச்சியோடு வழியனுப்புவீர்கள்? சற்று யோசித்து பாருங்கள்….
அடுத்த முறை அவர்கள் சாதரணமாக உங்களை பார்க்க வந்தாலும் சரி இதே போன்று சுத்தம் செய்ய வந்தாலும் சரி அவர்கள் வருகையை ஆவலாக எதிர்பார்ப்பீர்கள் தானே? மேலும் உங்களின் நிரந்தர அன்புக்கு அவர்கள் பாத்திரமாகிவிடுவர் தானே?
மனிதர்கள் நமக்கே இந்த நன்றி உணர்ச்சி உண்டு என்றால் அந்த இறைவனுக்கு?
தன்னை துதிப்பவர்களை விட, தனது தேவைகளை பூர்த்தி செய்பவர்களே, தனது ஆலயத்தை சுத்தம் செய்பவர்களே இன்றைக்கு இறைவனுக்கு தேவை. அதுவும் சிவராத்திரி போன்ற வைபவங்களுக்கு பெரும் கூட்டம் வரும் என்பதல இது போன்ற சேவைகளில் உங்களை ஈடுபடுத்தி கொள்வது மிகவும் அவசியம்.
இன்றைய காலகட்டங்களில் சிவராத்திரி போன்ற வைபவங்களில் நாம் செய்ய வேண்டியது யாதெனில் கோவில்களை சுத்தம் செய்து தரும் உழவாரப்பணியும், பூஜைகள் சிறப்பாக நடைபெற பொருளுதவியோ அல்லது நம் உடல் உழைப்பையோ நல்கும் கைங்கரியமும் ஆகும்.
தற்போது இருக்கும் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மக்கள் தொகை மிக மிக குறைவு. ஆகையால் கோவில்கள் மாசுபடுவதும் அசுத்தமாவதும் மிக மிக குறைவு. மக்களுக்கு வேறு பொழுது போக்கு இல்லை. தினசரி கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆகையால் திருவிழா மற்றும் உற்சவ காலங்களில் தன்னார்வலர்களை, சேவார்த்திகளை கொண்டு ஆலயங்களை பரமாரிப்பது, சுத்தப்படுத்துவது இவையெல்லாம் எளிதாக இருந்தன. கோவில்களை சுத்தம் செய்யும் ‘உழவாரப்பணி’ என்பது கல்விக்கூடங்களின் செயல்பாடுகளி
ஆனால் தற்போது?
பாரம்பரியம் மிக்க பல திருக்கோவில்கள் இருக்கும் நிலை கண்டு கண்ணீர் தான் பெருகுகிறது. பல திருக்கோவில்கள் குப்பைகூலங்களுடனும், புதர் மண்டியும், கழிவு நீர்கூட வெளியேற வழி இன்றியும் காணப்படுகின்றன.
நமது வீடு இவ்வாறு இருந்தால் நாம் சும்மாயிருப்போமா? அனைவராலும் பணத்தை கொண்டு அவர்கள் வீட்டை சுத்தப்படுத் முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் உடல் உழைப்பை கொடுத்தாவது சீர் செய்வோமல்லவா? ஆலயம் என்பது அவன் உறையும் வீடாயிற்றே. நம் ஒருவரால் ஆலயம் முழுவதையும் சுத்தப்படுத்தமுடியாது. ஆனால் இரண்டு மூன்று பேர் சேர்ந்தால்? குறைந்தபட்சம் கூட்டி பெருக்கியாவது சுத்தம் செய்யலாமே….
பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை கண்டு அனைவரும் பயந்தோட இந்த வையத்தின் நன்மைக்காக தன்னை பற்றி கவலைப்படாமல் அதை எடுத்து உண்டவன் ஈசன். “நான் கடவுள். இவ்விஷம் என்னை எதுவும் செய்யாது” என்று கருதி அவன் அதை செய்யவில்லை. இதை நான் ஏற்காவிடில் வேறு எவர் ஏற்பார்கள் என்று பரிதவித்து செய்தான் அதை.
தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.
அவனுடைய இருப்பிடங்கள் உரிய பராமரிப்பின்றி இருக்கும் நிலை கண்டு வேதனை தான் மிஞ்சுகிறது. தன்னிலை உணர்ந்த நாம் அதை பார்த்துக்கொண்டு சும்மாயிருக்கலாமா?
தீராத தோஷங்கள் தீர்க்கும் திருக்கோவில் உழவாரப்பணி
சிவராத்திரி விரதமிருப்பவர்கள் மற்றும் விரதமிருக்கமுடியாதவர்கள் யார் வேண்டுமானாலும் மேற்படி கைங்கரியங்களில் இயன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இறைவனின் அருளை பெறலாம். என்றாலும் விரதமிருப்பதைவிட மேற்படி ஆலயத்தை சுத்தப்படுத்தும் கைங்கரியம் பன்மடங்கு பலன் தரவல்லது. முன் 7, இடை 7, கடை 7 ஆகிய நம் வம்சாவளியினருக்கு மோட்சத்தை நல்கி பிறவிப் பிணியை நீக்க வல்லது. இந்த புனிதமான கைங்கரியத்தில் ஈடுபடுகிறவரின் எப்பேர்ப்பட்ட தோஷங்களையும் துடைத்தெறியும் வல்லமை திருக்கோவில் உழவாரப்பணிகளுக்கு உண்டு.
இந்த சிவராத்திரி முதல் நமது www.rightmantra.com தளம் சார்பாக உழவாரப்பணி செய்யும் குழு ஒன்று தொடங்கப்படுகிறது. பாரம்பரியம் அதே சமயம் பராமரிப்பின்றி இருக்கும் சைவ, வைணவ ஆலயங்களை கண்டுணர்ந்து அக்கோவில் நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதே இதன் நோக்கம்.
தசரத் மஞ்சி என்னும் தனி மனிதர் ஒரு மலையையே உளியால் பிளந்த கதை தான் நமக்கு தெரியுமே…. நாம் சிலர் ஒன்று சேர்ந்தால் கூட போதுமே மகத்தான காரியங்களை சாதித்திடலாமே?
இம்முறை நிச்சயம் எமது சிவராத்திரி விரதம் ஒரு திருக்கோவிலை சுத்தம் செய்யும் உழவாராப் பணியோடு இணைந்து தான் இருக்கும். விரதமிருக்க முடியாவிட்டாலும் கோவிலை சுத்தம் செய்யும் அரும்பணியில் என்னுடன் தம்மை இணைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் என்னை தொடர்புகொள்ளவும். ஏற்கனவே நண்பர்கள் ராஜாவும், மாரீஸ் கண்ணனும் நம்முடன் இந்த பணியில் தங்களை இணைத்துக்கொள்ள முடிவெடுத்துவிட்டனர். மற்றவர்களும் விரைவில் இணைவார்கள் என்று கருதுகிறேன்.
எங்களால் மிகப் பெரிய மாற்றங்களை செய்ய முடியாவிட்டாலும் ஒரு எளிய பணியை செய்துவிட முடியும் என்று நம்புகிறோம். மற்றவை ஈசன் விருப்பப்படி நடக்கும்.
* பெண்கள் தங்கள் பகுதிகளில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று (பழமையான ஆலயமாக இருந்தால் சிறப்பு) குறைந்த பட்சம் தரை துடைத்தல், கூட்டி பெருக்குதல் போன்ற கைங்கரியங்களை செய்து சிவராத்திரியின் சேவையில் தங்கள் பங்கை அளிக்கவேண்டும்.
* தொலை தூரங்களுக்கு சென்று தரிசிப்பதற்கு செய்யும் செலவை உள்ளூரில் கவனிப்பாரற்று கிடக்கும் சிவாலயம் ஒன்றிற்கு செலவு செய்யுங்கள். அவன் உடனடி அருளுக்கு பாத்திரமாகுங்கள். நல்ல மாற்றம் ஏற்படும். நினைத்தது நடக்கும்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஹிந்து ஆன்மீக சேவை கண்காட்சிக்கு சென்ற போது அங்கே ‘ஆத்ம தர்ஷன சேவை சமிதி’ என்ற அமைப்பின் ஸ்டாலை பார்த்து, வியந்து பின்னர் தொடர்புகொள்ள தேவைப்படும் என்று கருதி அவர்களின் நோட்டீசை வாங்கி வந்தேன். இன்று காலை இந்த கட்டுரைக்கு புகைப்படங்கள் சேர்த்து பதிவிடுவது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் திரு.சிவகுமரனை தொடர்பு கொண்டு, பேசினேன். அப்போது நமது தளம் சார்பாக துவங்கவுள்ள முயற்சிகள் பற்றி கூறியபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தமது அமைப்பு நமது பணிக்கு தேவையான வழிகாட்டுதல்களை நிச்சயம் அளிக்கும் என்றும் கூறினார்.
எமது முதல் உழவாரப்பணி திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் துவங்கவிருப்பதாக கூறியது, தமது அமைப்பும் அங்கே தான் முதல் பணியை துவக்கியாதாக கூறியதும் எனக்கு நம்பமுடியாத ஆச்சரியம்.
எல்லாம் இறைவனின் சித்தம்.
தொடர்ந்து அவர் கூறியது வைக்கும் ஒரு நிகழ்வு. உழவாரப்பணியில் ஈடுபடுகிறவர்களை நோக்கி இறைவனே வருகிறான் என்பதற்கு ஒரு உன்னத சாட்சி.
உழவாரப்பனியில் தோன்றிய சிவலிங்கம் – திருவேற்காட்டில் நடந்த அதிசயம்….
அவர்கள் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் உழவாரப் பணியை துவக்கி செய்துகொண்டிருந்தபோது அந்த கோவிலின் காம்பவுண்டை ஒட்டியிருந்த ஒரு பகுதியில், புதர் மண்டி கிடந்ததை கண்டுள்ளனர். எவரும் கண்டுகொள்ளாததால் அந்த புதர் காய்ந்து குப்பை மேடாக காட்சியளித்திருக்கிறது. இவர்கள் ஆலய நிர்வாகத்திடம் முறைப்படி பேசி அதை அகற்ற அனுமதி கேட்க அவர்களும் இசைந்துள்ளனர். அதையடுத்து இவர்கள் குழு, மண்வெட்டி கடப்பாரை சகிதம் அதை அகற்றும் பணியில் இறங்கியிருக்கின்றனர். ஒரு அரை மணி நேரம் கழித்து பார்த்தால் என்ன ஆச்சரியம்? ஒரு சிவலிங்கம் அங்கே இருந்துள்ளது. அங்கே புதருக்கு உள்ளே ஒரு சிவலிங்கம் மறைந்திருப்பது ஆலய நிர்வாகத்தினருக்கு தெரியாது. இவர்கள் அதை கண்டெடுத்து, ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பின்னர் அந்த லிங்கத்தை சுத்தம் செய்து, குளிப்பாட்டி, அபிஷேகங்கள் செய்து, கொண்டாடி மகிழ்ந்தனராம்.
கோடி வருஷம் தவம் பண்ணினாலும் கிடைக்காத இந்த மகத்துவும் மிக்க சிவ தரிசனம் உழவாரப்பணியில் ஈடுப்பட்ட நல்லுள்ளங்களுக்கு எப்படி அரை மணி நேரத்தில் கிடைத்தது பார்த்தீர்களா?
இதிலிருந்தே தெரியவில்லை? உழவாரப்பணியில் ஈடுபடுகிறவர்கள் இறைவனின் அன்புக்கு எந்தளவு பாத்திரமாகின்றனர் என்று?
எனவே சிவராத்திரி போன்ற நாட்களில் இறைவனிடம் நாம் என்ன கேட்பது என்று சிந்திப்பதற்கு பதில் நாம் அவனுக்கு என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து செயல்படுங்கள். நல்லதே நடக்கும்.
சிவராத்திரி அன்று தொடங்கும் நமது இந்த உழவாரப்பணி ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமையில் புராதன பெருமை வாய்ந்த திருக்கோவில்களில் நம் தளம் சார்பாக நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்கிறவர்கள் நம்மை தொடர்புகொள்ளவும். சுந்தர் 9840169215.
——————————————————————————————–
சிவராத்திரி அன்று விரதமிருப்பது, உழவாரப்பணியில் ஈடுபடுவது என்பது இந்த அவசர யுகத்தில் எல்லோராலும் முடியுமா? அதுவும் கணவன், மனைவி குழந்தைகள் என்று பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்து வருபவர்களால்? அவர்கள் இவை தவிர அவன் அருளுக்கு பாத்திரமாக சிவராத்திரி அன்று வேறு என்ன செய்யலாம்?
ஒரு பெரிய பட்டியலே இருக்குங்க….
அடுத்த சிவராத்திரி ஸ்பெஷல் பதிவில்….
——————————————————————————————–
புகைப்பட உதவி : www.aathmaseva.org
உங்களின் இந்த கட்டுரை மிகவும் அருமையாக உள்ளது. புதிய கோவில்கள் கட்டுவதை விட பழமையான கோவில்களை நாம் பாதுகாக்க வேண்டும். சிவராத்திரி பற்றி மேலும் தகவலக்கு காத்து
இருக்கிறேன்
Sundar,
I really like your idea of “uzhavara pani”. It is very important for our Temples . So hopefully we will join with you from Canada this year summer. Yes,we will do it together.
Linga
நாங்க ரெடி…எப்போ, எங்க-னு சொல்லுங்க…
கனடாவிலிருந்து லிங்கா வரும்போது இங்கேயே இருக்கும் நமக்கு அதன் அருமை தெரியவேண்டும். என்னால் முடிந்தால் நிச்சயம் வருகிறேன். சுந்தரின் இந்த சீரிய முயற்சியில் நாம் எல்லோரும் இணைவோம்.
நல்லது செய்யணும் ஒரு செயல ஆரமிச்சா கடவுள் துணை வழி நடத்துவது என்பது புரிகிறது .
பாராட்டுக்கள் .
என்ன சொல்றதுன்னே புரியல சுந்தர்ஜி, உண்மைலேயே நீங்க எத நினைச்சு இந்த தளத்தை ஆரம்பிச்சிங்கலோ, அதற்கான ரொம்ப சரியான வழிய எங்க அப்பன் அதான் உங்க நண்பன் உங்களுக்கு காட்டிகிட்டு இருக்கான். அந்த சிவலிங்கத்த பாக்க நிச்சயமா கண் கோடி வேணும், அந்த படங்கள மெனக்கெட்டு வாங்கி போட்டு எங்களையும் பாக்க வச்சு பெரிய புண்ணியம் தேடி குடுத்துட்டீங்க, கண்டிப்பா நீங்க எதிர்பார்த்தத விட அதிக சேவார்த்திகள் சேர்வாங்க, எனக்கு வார்த்தைகள் கூட சரியா வரல, ரொம்ப ரொம்ப நன்றி சுந்தர்ஜி
ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய
ஒரு குழந்தைய தொடுற மாதிரி அவங்க கையாலயே குளிப்பாட்டி அபிஷேகம் பண்ணி, அவங்க முகத்ல எவ்ளோ திருப்தி பாருங்களேன்,
பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு,
இறைவன் சுந்தர் மூலமாக தேனை நமக்கு காட்டிஇருக்கிறார் . தேனை சுவைக்கும் பாக்கியத்தையும் இறைவனிடம் வேண்டுவோம் . அவனருளாலே அவன் தாள் வணங்குவோம்
என் மனதில் நீண்ட காலமாக நினைத்து கொண்டு இருந்த விஷயம் ,நாம் நம் மனக்குறையை இறைவனிடம் கூறுகிறோம் அவரும் தீர்த்து வைக்கிறார் ,ஆனால் நாம் பதிலுக்கு அவருக்கு எந்த ப்ரதிஉபகாரமும் செய்வது இல்லை அதனால் நாம் ஏன் ஏதாவது கோவிலை சுத்தம் செய்து கொடுக்க கூடாது என்று நினைத்து கொண்டே இருந்தேன் ,சுந்தர் சொன்னார் உடனே ஒப்புக்கொண்டேன் கடவுளின் கோவிலை சுத்தம் செய்யும் பாக்கியத்தை விட நமக்கு வேறு என்ன வேண்டும்
ரைட் மந்த்ரா சுந்தர் அவர்களுக்கு,
அண்மை காலங்களாகத் தான் தங்களது வலைப்பதிவை படிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதுவும் முகநூலில் நீங்கள் பரிச்சயமான பிறகே, தங்கள் வலைப்பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு கட்டுரையும் அமிர்தம். சிவராத்திரியும், ஈசனின் கல்யாண குணங்களையும் தங்கள் எழுத்தில் படித்தபோது கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும் என்று தான் தோன்றுகிறது. ஈசனை வழிபட்டாலும், அவன் எப்படிப்பட்டவன் என்பதை உங்கள் மூலமாகவே தெரிந்து கொண்டபோது நெஞ்சம் நெகிழ்ந்து போனது. எத்தனை ஆண்டுகள் சும்மாவே இருந்துவிட்டேன்… ஈசனை எப்படி எல்லாம் குறைத்து மதிப்பிட்டு விட்டேன்… என்ற எண்ண அலைகள் மீண்டும் மீண்டும் மோதி என்னை குற்றவாளியாகவே ஆக்கிவிட்டது. மீண்டும் சொல்கிறேன் நெஞ்சம் நெகிழ்கிறதய்யா… அதுவம் உழவாரப் பணியின் சிறப்பை விளக்கியது அருமையிலும் அருமை.
வளரட்டும் உங்கள் பணி…
தொடரட்டும் ஈசன் சேவை…
அன்புடன்
V தினேஷ்குமார்
நன்றி. தொடர்ந்து வருக. நல்லாதரவு தருக.