Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > இதை படிக்க நேர்ந்தால் நீங்கள் பாக்கியசாலி!

இதை படிக்க நேர்ந்தால் நீங்கள் பாக்கியசாலி!

print
மது தளம் சார்பாக சென்ற மாதம் நடைபெற்ற ‘மகா பெரியவா மகிமைகள்’ நிகழ்ச்சியை நாம் ஏற்பாடு செய்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான்.  திரு.சுவாமிநாதன் அவர்களுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது எப்படி என்று நமது நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது பார்வையாளர்களிடம் சுவாமிநாதனே சொன்னார். அவரது உரையை பற்றிய பதிவை அளிக்கும்போது அதை பற்றி கூறுகிறேன். அதற்கு முன்பு இந்த முக்கிய விஷயத்தை விளக்கவேண்டும்.

திரு.சுவாமிநாதன் சென்னையிலும் மற்ற ஊர்களிலும் ‘குரு மகிமை’ என்ற தலைப்பில் மகா பெரியவா தன் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை பற்றி சொற்பொழிவு நடத்துவதுண்டு. அவர்களுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டதிலிருந்து அவ்வாறு தான் நிகழ்த்தும் சொற்பொழிவுகள் பற்றிய விபரங்களை நான் கேட்டுக்கொண்டபடி எனக்கு மின்னஞ்சல் அனுப்புவது வழக்கம். எப்போதெல்லாம் என்னால் முடியுமோ அப்போதெல்லாம் அதற்கு சென்றுவருகிறேன்.

இப்போது இந்த சம்பவத்தை பார்க்கலாம்!

ஜனவரி மாதத்தில் ஒரு நாள்….. கிருஷ்ண கான சபாவில் நடைபெறவிருக்கும் தனது ‘மகா பெரியவா மகிமைகள்’ சொற்பொழிவை பற்றி எனக்கு விபரங்களை அனுப்பியிருந்தார் திரு.சுவாமிநாதன். குருவாரத்தின் (வியாழக்கிழமை) போது நடைபெற்ற அந்த சொற்பொழிவுக்கு நான் சென்றிருந்தேன். அலுவலகம் முடிந்து பின் சென்றபடியால் நான் செல்வதற்குள் சொற்பொழிவு துவங்கிவிட்டது. திரு.சுவாமிநாதன் சொற்பொழிவை துவக்கி பரமாச்சாரியாரின் மகிமைகளை கூறிக்கொண்டிருந்தார். நாங்கள் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தோம். அந்த நேரம் 80 – 85 வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி அரங்கிற்குள் வந்தார்கள். காக்கி நிறத்தில் புடவை அணிந்து தலையில் அதை முக்காடு போல சுற்றி இருந்தார்கள். அந்த பாட்டி நேரே சென்று திரு.சுவாமிநாதன் மேடையில் உரை நிகழ்த்தும் திசையை நோக்கி விழுந்து மூன்று முறை நமஸ்கரித்துவிட்டு பின்னர் இருக்கையில் சென்று அமர்ந்தார்கள்.

பொதுவாக இதைப் போன்ற நிகழ்சிகளுக்கு சென்று சொற்பொழிவை கேட்பதே புண்ணியம் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு, அந்த பாட்டியின் இந்த செயல் ஒரு மிகப் பெரிய உண்மையை உணர்த்தியது. அடுத்து நான் செய்தது என்ன தெரியுமா? அதுவரை ஷூவை அணிந்துகொண்டு சொற்பொழிவை கேட்டுக்கொண்டிருந்த நான் அதற்கு பிறகு ஷூவை கழற்றிவிட்டு தான் கேட்கத் துவங்கினேன்.

சொற்பொழிவு நடைபெறும் அந்த மேடையை நோக்கியே ஒரு வயதான பாட்டி விழுந்து நமஸ்கரிக்கிறார்கள் என்றால் அந்த இடம் எத்தனை மகத்துவம் மிக்கது… அதை கேட்பது எத்தனை புண்ணியம் என்று நினைத்துப் பாருங்கள்.

அந்த நொடியே நான் முடிவு செய்துவிட்டேன்… சுவாமிநாதன் அவர்களை வைத்து நம் தளத்தின் சார்பாக ஒரு நிகழ்ச்சியை நடத்திவிடவேண்டும் என்று. பின்னர் எண்ணியபடியே நடத்திவிட்டேன் என்றால் அதற்க்கு பரமாச்சாரியாளின் கருணையைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

…………………………………………………………………………………..

சென்ற வாரம் ஒரு நாள்….

“அவநம்பிக்கை துரத்திய போது ஆண்டவன் கொடுத்த ஆறுதல்!” என்ற நமது பதிவை பார்த்துவிட்டு நண்பர் பாபா ராம் ஃபோன் செய்தார். “சுந்தர், எனக்காகவே நீங்கள் எழுதியது போல இருக்கிறது. இன்று மதியம் வரை என் மனம் சரியில்லை. தற்போது உங்கள் பதிவை படித்த பின்னர் தான் கொஞ்சம் மனம் லேசாகியிருக்கிறது….” என்றார்.

“என் கதை தெரிஞ்சுது தான். ஏன்…. உங்களுக்கென்ன ஆச்சு ?” என்று கேட்டேன்.

“எனக்கு ஒண்ணுமில்லே. என் குழந்தைக்கு தான் உடம்புல ஒரு சின்ன பிரச்னை. டாக்டர் கிட்டே காமிச்சேன். “ஹார்மோனல் இம்பேலன்ஸ் இருந்தாத் தான் இது மாதிரி வரும். உடனே குழந்தைக்கு கம்ப்ளீட்டா ஃபுல் பாடி ஸ்கேன் உள்ளிட்ட டெஸ்ட்டுகள் எடுக்கணும்”னு சொல்லிட்டார். ஒரு வயசு குழந்தைக்கு ஸ்கேன், பிளட் டெஸ்ட் இதெல்லாம் ரொம்ப கொடுமை சுந்தர். டெஸ்ட்டுக்கு பிளட் எடுத்தப்போ குழந்தை கதறு கதறுன்னு கதறிட்டா. என்னால் அதை தாங்கிக்க முடியலே. சரி… இது போகட்டும் வேற வழில்லே… டெஸ்ட்டோட ரிசல்ட் தான் எப்படியிருக்கும்னு தெரியலே… ஒரே திக்கு திக்குன்னு இருக்கு. இன்னைக்கு ஈவ்னிங் ரிப்போர்ட் கிடைக்கும். நாளைக்கு காலைல டாக்டர் கிட்டே ரிப்போர்ட்டை சப்மிட் பண்ணனும்” என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பாபா ராம் என் நெருங்கிய நண்பர். நலம் விரும்பி. ஒரு பெரும் போராட்டத்தின் இறுதியில் இறைவன் பணித்தபடி நான் இந்த தளம் ஆரம்பித்தவுடன் – என்னுடன் தற்போது எஞ்சியிருக்கும் நல்லுள்ளங்கள் சிலருள் இவரும் ஒருவர்.

பாபா ராமுக்கு திருமணமாகி 12 வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து சென்ற வருடம் தான் இறைவன் அருளால் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு ஆயுஷ் ஹோமத்தை கூட சென்ற மாதம் தான் சிறப்பாக நடத்தினார். ஆயுஷ் ஹோமத்தின் அழைப்பிதழை நேரில் தந்து “யார் வர்றாங்களோ இல்லையோ சுந்தர் நீங்க அவசியம் வந்திருந்து குழந்தையை ஆசீர்வாதம் பண்ணனும்” என்று கேட்டுக்கொண்டார். கடுமையான பணிக்கிடையிலும் அலுவலகத்துக்கு பர்மிஷன் போட்டுவிட்டு நிகழ்ச்சிக்கு சென்று வந்தேன். அக்குழந்தையின் அழகு இப்போதும் கண் முன் நிற்கிறது.

ஆண்டவா அக்குழந்தைக்கு பிரச்னை எதுவும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று ஒரு கணம் பிரார்த்திக்கொண்டேன். பின்னர் பாபா ராமிடம் “கவலைப்படாதீர்கள். நாளை டெஸ்ட் ரிபோர்ட்டை எடுத்துக்கொண்டு டாக்டரிடம் செல்வதற்கு முன்பு பரமாச்சாரியாரை தியானம் செய்துவிட்டு புறப்படுங்கள். எல்லாம் நல்லபடியாக முடியும்” என்றேன்.

“நிச்சயம் சுந்தர்” என்றார்.

“டெஸ்ட் ரிப்போர்ட்டை இன்று மாலை வாங்கி வந்தபின்பு, நீங்களாகவே இன்டர்நெட்டில் எதையாவது தேடி ஏதாவது முடிவுக்கு வந்து மனதை போட்டு குழப்பிக்கொள்ளவேண்டாம்” என்றேன் மறக்காமல்.

“ஆமாம் சுந்தர்…. டாக்டர் கூட அதைத் தான் சொன்னார். ரிபோர்ட் வாங்கிட்டு நேரா என்கிட்டே வாங்க.. நான் பார்த்துட்டு சொல்றேன். உங்களை மாதிரி EDUCATED PEOPLE டாக்டரை விட இண்டர்நெட்டை தான் அதிகம் நம்புறாங்க. நீங்க அந்த தப்பை செய்யாதீங்கன்னு சொன்னார்” என்றார்.

“பார்த்தீங்களா? They have reasons. எனிவே எதற்கும் கவலைப்படாதீங்க! God bless!!” என்றேன்.

…………………………………………………………………………………..

ஒவ்வொரு மாதமும் கடைசி வியாழனன்று திரு.சுவாமிநாதனின் ‘மகா பெரியவா மகிமைகள்’ நிகழ்ச்சி கிருஷ்ண கான சபாவில் நடைபெறும்.

நண்பர் பாபா ராம் என்னிடம் பேசிய அன்று மாலை…. இதே போல அவரது சொற்பொழிவை கேட்பதற்கு சென்றிருந்தேன். இம்முறை அவர் சொன்ன ஒரு அற்புதமான நிகழ்ச்சியை உங்களுக்கு சொல்கிறேன். இந்த நிகழ்ச்சியை வேறு ஒருவருக்கு சொல்லி ஸ்ரவண புண்ணியத்தை அவருக்கு அளித்ததன் பலனாக அவர் வாழ்வில் ஏற்பட்ட ஒரு அதிசயத்தையும் சொல்கிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மகா பெரியவா காலத்தில் ஸ்ரீ மடத்தில் நடைபெற்ற நிகழ்வு இது.

மகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி

மகா பெரியவர் காலையில் எழுந்தவுடன் பசுவை தரிசிப்பது வழக்கம். பசுமாடுகள் கட்டியிருந்த கொட்டகை ஒன்றில் மகான் அமர்ந்து மாலை வேளைகளில் உரையாடுவது வழக்கம். பல முக்கிய முடிவுகளை அவர் இங்கிருந்து தான் எடுப்பது வழக்கம். பல வி.ஐ.பி.க்களை இங்கு வைத்து சாதிப்பதும் வழக்கம். அவர்கள் அவ்வாறு அமர்ந்திருக்கும்போது சுற்றியிருக்கும் மக்களைக் கொசுக்கள் பிடுங்கி எடுக்கும். ஆனால் பரமாச்சாரியார் மட்டும் எதையும் சட்டை செய்யாமல் தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார். கொசு கடிப்பதர்க்கான ஒரு சிறு தடயத்தை கூட அவர் காட்டமாட்டார்.

அந்தக் கொட்டகையில் உள்ள பசு ஒன்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது. பேறுகாலம். அதனால் பசு வேதனைப்பட்டுக்கொண்டே இருந்ததே தவிர, அதனால் கன்றை ஈன்றெடுக்க முடியவில்லை. மடத்தின் கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். கால்நடைத் துறையில் சிறந்து விளங்கும் டாக்டர்கள் அவர்கள்; ஒருவர் அல்ல மொத்தம் ஆறுபேர் வந்திருந்தனர். பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த அவர்கள், பசு ஏன் இன்னமும் பிரசவிக்கவில்லை என்கிற காரணத்தைக் கண்டு பிடித்தனர். கன்றுக் குட்டி வயிற்றுக்குள் இறந்து போயிருந்தது. அதை வெளியே எடுக்காவிட்டால் பசுவும் இறந்துவிடும். அந்த ஆறுபேரும் ஏகோபித்து சொன்ன முடிவு அது. இதைக் கேட்ட நிர்வாகிகள் துணுக்குற்றனர். இதை எப்படி பெரியவரிடம் போய் சொல்வது. பசுவை அன்னை காமாட்சியின் சொரூபமாகவே பார்த்து வழிபடுபவராயிற்றே அவர். இருப்பினும் இந்த முக்கிய விஷயத்தை அவரிடம் சொல்லத் தானே வேண்டும்? நேராக மகானிடம் போய் மெதுவாக விஷயத்தைச் சொன்னார்கள்.

அமைதியாக கேட்ட அவர் பின்னர் தன் இருக்கையை விட்டு எழுந்தார். நேராக பசு இருந்த கொட்டகைக்கு வந்தார். கீழே ஒரு தன துண்டை விரித்துப் போட்டார் பசுவின் எதிரே அமர்ந்தார். கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர் அந்த பசுவை உற்றுப் பார்க்க ஆரம்பித்தார். அவரது பார்வை வேறு பக்கம் திரும்பவே இல்லை. கன்று வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒருபக்கமா நின்று, மகானையும், பசுவையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இப்படியும் அப்படியுமாக நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு….. ஓர் இடத்தில் நின்றது. சற்று நேரத்தில் அது பிரசவித்தது. அதன் வயிற்றில் இருந்த அழகான கன்றுக்குட்டி வெளியே வந்தது. வெளியே வந்த கன்று அதற்கே உரிய துள்ளலுடன் எழுந்து நின்றது. தாய் மடி தேடி சென்றது.

எஸ்…. இறந்து போனது என்று ஆறு டாக்டர்கள் சொன்ன அதே கன்றுதான்.

பசுமாட்டை நன்றாகத் தடவிக் கொடுத்த பின் மகான் அவர் பாட்டுக்கு உள்ளே போய்விட்டார்.

அந்த ஆறு டாக்டர்களுக்கும் இதை நம்பமுடியவில்லை. மருத்தவத்தையும் விஞ்சிய அற்புதமல்லவா இது ? அப்போதுதான் மகானின் அருட்பார்வை எப்படிப்பட்டது என்கிற பேருண்மையைத் தெரிந்து கொண்டனர்.

மடத்தின் சிப்பந்திகளுக்கு பரமாச்சாரியாளின் மற்றொரு மகிமையை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியை திரு.சுவாமிநாதன் சொல்லி முடிக்க, மற்றவர்கள் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருக்க நான் கைதட்டியே விட்டேன். அத்தனை பரவசம்.

இறந்து போனதாக சொல்லப்படும் ஒரு கன்று உயிருடன் வெளியே வருகிறது என்பது என்ன சாதாரண விஷயமா?

…………………………………………………………………………………..

நிகழ்ச்சி முடிந்ததும் திரு.சுவாமிநாதன் அவர்களை சென்று சந்தித்து “வெல்டன் சார்.. அருமையான நிகழ்ச்சி. அதுவும் அந்த கன்று உயிரோடு பிறந்த சம்பவம் உண்மையில்… அற்புதம். கேட்ட நாங்கள் பாக்கியசாலிகள் ஆனோம்” என்று கூறி கைகளை குலுக்கினேன்.

பின்னர் வீட்டிற்கு திரும்புகையில் மனதிற்குள் அந்த சம்பவம் நிழலாடிய படி இருந்தது. நம் தளத்தில் அதை சீக்கிரம் பதிவு செய்து உங்கள் அனைவரையும் படிக்கவைத்துவிடவேண்டும் என்று முடிவு செய்தேன்.

மறுநாள் காலையும் அந்த சம்பவம் மனதில் நிறைந்திருந்தது. இடைப்பட்ட நேரத்தில் என்னிடம் பேசிய நண்பர்களிடம் எல்லாம் மேற்படி கன்று உயிருடன் பிறந்த அற்புதத்தை சொல்லி சொல்லி பூரித்துப் போனேன்.

அலுவலகம் செல்கையில், நண்பர் பாபா ராம் நினைவு வந்தது. குழந்தையின் டெஸ்ட் ரிபோர்ட்டை டாக்டரிடம் காண்பிக்கப் போவதாக சொன்னாரே… அவருக்கு ஃபோன் செய்து இந்த சம்பவத்தை சொல்வோம். இதை கேட்ட புண்ணியம் அவருக்கு நல்ல செய்தி கிடைக்கட்டும் என்று கருதி அவர் மொபைலுக்கு அழைத்தேன்.

“ராம்…. டாக்டர் கிட்டே ரிபோர்ட்டை காமிச்சு ரிசல்டை கேட்க கிளம்பிகிட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன். மகா பெரியவா மகிமைகள் சம்பந்தமா நேற்றைக்கு நான் கேட்ட ஒரு சம்பவத்தை உங்க கிட்டே இப்போ சொல்றேன். இதை கேட்டுட்டு பரமாச்சாரியாளை பிரார்த்தனை பண்ணிட்டு கிளம்புங்க. நல்ல செய்தி தான் வரும்” என்றேன்…!

“தாராளமா சுந்தர். சொல்லுங்க…” என்றார்.

மகா பெரியவாவின் பார்வையின் மகிமையால் அவரது கருணா கடாக்ஷத்தால் இறந்ததாக சொல்லப்பட்ட கன்று உயிருடன் பிறந்த அதிசய நிகழ்ச்சியை விளக்கினேன்.

கேட்டுவிட்டு எனக்கு மிகவும் நன்றி கூறியவர் தாம் மிகவும் பாக்கியசாலி என்றும்… தனது நாடி நரம்பு எல்லாம் சிலிர்த்துவிட்டதாகவும் சொன்னார்.

“டாக்டரை பார்த்துவிட்டு வந்து எனக்கு மறக்காம ஃபோன் பண்ணுங்க” என்றேன்.

“நிச்சயமா” என்றார்.

நான் வழக்கம்போல பணிகளில் ஆழ்ந்துவிட்டேன். மதியம் சுமார் 2.30க்கு போன் செய்தார் ராம்.

“சுந்தர்… குட் நியூஸ்.. காலைல டாக்டரை பார்க்க கிளம்புறதுக்கு முன்னே வீட்டுல மகா பெரியவா படம் முன்னால விளக்கேத்திட்டு ஒரு அஞ்சு நிமிஷம் பிரார்த்தனை பண்ணிட்டு தான் போனேன். மகா பெரியவரை வேண்டினது வீண் போகலை.. டெஸ்ட் ரிபோர்ட் எல்லாத்தையும் பார்த்துட்டு டாக்டர் ஏதேதோ எழுதி கூட்டி கழிச்சு பார்த்தார். எல்லா ரிபோர்ட்ஸையும் என் பக்கம் தூக்கி போட்டார். கடைசியில “YOUR CHILD IS PERFECTLY ALRIGHT. HALE & HEALTHY. குழந்தைக்கு பயப்படும்படியா ஒண்ணுமில்லே. ரொம்ப ரொம்ப MINUTEஆ சின்ன ப்ராப்ளம் இருக்கு. ஆனா அது நெக்ளிஜிபில் தான். நிறைய குழந்தைகளுக்கு அது இருக்கும். அவங்க பெத்தவங்களுக்கு அது பத்தின AWARENESS இருக்காது. நீங்க படிச்சவங்க என்பதால் உடனே எங்க கிட்டேவந்துட்டீங்க. இந்த ப்ராப்ளத்துக்கு ட்ரீட்மென்ட் எதுவும் தரவேண்டாம். நாளாவட்டத்துல சரியா போய்டும். ஒரு வருஷம் கழிச்சி வேண்ணா உங்க திருப்திக்காக ஒரு செக்கப்புக்கு கூட்டிகிட்டு வாங்க. மத்தபடி இப்போ NO WORRIES….BE RELAX MAN!” என்று டாக்டர் சொன்னதாக தெரிவித்தார்.

மேலோட்டமாக படித்தால் இதென்ன பிரமாதம்… என்று தோன்றும். ஆனால் பிள்ளையை பெற்றவர்களுக்கு தெரியும் இதில் உள்ள வலியும் வேதனையும்.

திருமணமாகி, ஒரு குழந்தையை ஆரோக்கியமாக பெற்று, அதை நோய் நொடியின்றி சீரும் சிறப்புமாக நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதில் உள்ள பல விஷயங்கள் நம் கையில் இல்லை. அது இறைவன் கையில் உள்ளது. பணத்தால் சாதித்துக்கொள்ள முடியாத பல இதில் இருக்கிறது. ஆகையால் தான் “பெத்தவங்க குழந்தைகளுக்கு பணத்தை சேர்க்கலேன்னாலும் புண்ணியத்தை சேர்க்கணும்” அப்படின்னு பெரியவங்க சொல்வாங்க.

பொதுவாக கன்றை பிரசவிக்கும் நிலையில் உள்ள பசுவை தரிசிப்பது மிகவும் விசேஷம். பரமாச்சாரியாளின் மகிமையும் சேர்ந்து அந்த புண்ணிய நிகழ்வை ‘ஸ்ரவணம்’ செய்ததால் ஏற்பட்ட புண்ணியமே நண்பருக்கு டாக்டரிடம் நல்ல செய்தி கிடைக்கச் செய்தது என்பது என் கருத்து.

இத்தகைய நல்ல விஷயத்துக்கு கருவியாக செயல்பட்ட எனக்கு மட்டும் நல்லது நடக்காமல் இருக்குமா? அது பற்றி வேறு ஒரு பதிவில்!

…………………………………………………………………………………..

இப்போ சொல்லுங்க நம்முடைய தளம் சார்பாக நடைபெற்ற ‘மகா பெரியவா மகிமைகள்’ நிகழ்ச்சிக்கு வந்தவங்களை…பாக்கியசாலிகள் என்று நான் குறிப்பிட்டது முற்றிலும் சரி தானே ?

நல்லாரைக் காண்பதும் நன்றே நலம் மிக்க
நல்லார் சொல் கேட்பதும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதும் நன்றே. – ஔவையார்

23 thoughts on “இதை படிக்க நேர்ந்தால் நீங்கள் பாக்கியசாலி!

  1. நானும் மஹா பெரியவா கிட்ட ஒரு கோரிக்கை வைத்துள்ளேன் நிச்சயம் அவர் எங்களை மீட்டு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. மஹா பெரியவாளை நம்பினோர் கை விட மாட்டார்கள். இதை படித்த எனக்கு கண்களில் நீர் முட்டியது.

  2. அழகாக கொடுத்து உள்ளீர்கள். மகா பெரியவா அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். பிரார்த்திக்கிறேன். அன்புடன் பி. சுவாமிநாதன்

  3. என் குழந்தையின் மருத்துவ பரிசோதனை ரிசல்ட் எடுத்துக்கொண்டு மருத்துவரை பார்பதற்கு நான் கிளம்புவதற்கு சரியாக பத்து நிமிடம் முன்னால் சுந்தர் சொல்லிவைத்தார்போல் போன் செய்தார்.

    ஒரு வித மனக்கலக்கத்தில் இருந்த எனக்கு அந்த நேரத்தில் மனபெரியாவாளின் மகிமையை சுந்தர் நினைவூட்டினார் என்றுதான் சொல்லவேண்டும். உடனே பூஜை அறையில் விளக்கேற்றி மகாபெரியாவளிடம் மனதார வேண்டிக்கொண்டு மருத்துவமனை சென்றேன். அதன்பிறகு என்ன நடந்தது என்பதை சுந்தர் அருமையாக எழுதியிருக்கிறார். குழந்தை நார்மல் என்று மருத்துவர் சொன்னபிறகு அது என் மனதில் பதிய சற்று நேரம் ஆனது.

    பிள்ளையை பெற்றவர்களுக்குத்தான் தெரியும் இதில் உள்ள வலியும் வேதனையும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஏதோ ஒரு ஜென்மத்தில் நான் செய்த புண்ணியம் இந்த நேரத்தில் சுந்தர் மூலமாக மகாபெரியவாளின் அருள் என் மீது பட்டு, என் குழந்தைக்கும் சென்றது. நிச்சயமாக நான் பாக்கியசாலிதான். நன்றி என்பது ரொம்ப சின்ன வார்த்தை சுந்தர். ஆனாலும் நன்றி. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

  4. நிச்சயமாக சுந்தர்….அது ஏனோ தெரியவில்லை….நம் தளம் சார்பாக நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டதுமுதல் ஒரு மாற்றம் தெரிகிறது…அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை…..
    .
    மாரீஸ் கண்ணன்

  5. நிச்சயமாக மகான்களுக்கு தெரியும் எதனை எவன் செய்வான் என்று அறிந்து அதனை அவன் கை விடல் திரு சுந்தர் முலம் திரு பாபா ராம் அவர்களுக்கு நினைவு படுத்தப்பட்டது, நாம் கவனிக்க மறந்தாலும் நம்மை நாம் வணங்கும் இறைவன் கவனித்து கொண்டுதான் இருக்கிறான்

  6. இதை படிக்கும்போதே உடம்பெல்லாம் சிலிர்கிறது ,அப்படியானால் அங்கே இருந்த மருத்துவர்கள் ,மடத்தின் ஊழியர்களின் நிலை அவர்கள் என்ன பாக்கியம் செய்தவர்கள்

  7. I’m impressed by miracles happened with Ko Madha and our friend’s child.
    ***
    Explained very neatly.
    ***
    Thanks so much 🙂
    ***
    Chitti.

  8. You are bringing lots of great news about Kanchi Maha Periyavar. We are blessed to come to know about such great news about Kanchi Mahan.
    Thanks Ji…

  9. நானும் பாக்கியசாலி தான் 🙂

    சூப்பர் பதிவு சுந்தர் ஜி!! என் வீட்டில் இருப்பவர்களும் மகா பெரியவாளின் பக்தர்கள் தான்! எனக்கு பெரியவாளை பற்றி தெரியாது! உங்கள் மூலமாக தான் தெரிந்து கொண்டேன்! நன்றிகள் பல !! இதுவரை என் வீட்டில் உள்ள சுவாமி படங்களில் எனக்கு பிடித்தது ஸ்ரீ ராகவேந்திரரும், மஹா அவதார் பாபாஜியும்! இனி நான் பெரியவாளின் படமும் வைத்து பூஜை செய்வேன் !!

  10. நான் வரவில்லையே ணா.. இருந்தாலும் இதை படித்து சந்தோசப் பட்டுக் கொண்டேன்.. நன்றி சுந்தர் அண்ணா …

    -ஜி உதய்

  11. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என உங்கள் உள்ளத்து நெகிழ்ச்சியை அதுவும் மஹா பெரியவரின் அருள் அற்புதத்தை எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி !!!

    உங்களோடு சேர்ந்து உண்மையில் நாங்கள் அனைவரும் பாக்யசாலிகள் !!!

    எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
    இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் !!!

  12. ஒவ்வொரு மனிதனிலும் ஈஸ்வரன்தான் குடி இருக்கிறார். ஒருவரை நமஸ்கரிக்கும்போது அந்த ஈஸ்வரனையே வழிபடுவதாகத்தான் அர்த்தம்.

    ஓடி ஓடிச் சம்பாதிக்கும் ஒரு காசு கூட உடன் வராது. மறு உலகத்தில் செலாவணி பகவந்நாமா ஒன்றுதான்.

    மனுஷன் பழையதற்குப் பரிகாரம் தேடுவதை விடப் புதிய சுமை சேராமல், பாவம் பண்ணாமல், வாழ்வதற்கு ஈஸ்வரனைத் துணை கொள்வதே முக்கியம்.
    மகா பெரியவா அருள் அனைவருக்கும் கிடக்கும் ..

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

    மனோகரன்

  13. நான் இதை படித்ததில் எனக்கு மிகவும் சந்தோசமா இருக்கிறது. உடனே நான் என் நண்பர்கிட்ட இதை பகிர்ந்துகொண்டேன். நன்றி சகோதரர்.

  14. அற்புதம். நம்பிக்கை தேவை என்றும் என்று நீங்களும் அந்த குழந்தையின் பெற்றோரும் அருமையாக சொல்லிவிடீர்கள். நாங்கள் நிஜமாக இதை வாசித்ததற்கு புண்ணியம் செய்தோம்.

  15. இதைப்படிததும் அழுதுவிட்டேன்.. இப்படிப்பட்ட மகான்களின் மகிமைகளை அடிக்கடி தெரிந்துகொள்ள வேண்டும் அதை பின்பற்றவும் வேண்டும்.

  16. மதிப்பிற்குரிய சுந்தர் அவர்களுக்கு,
    Kaanchi ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா periyavaaLaiyum, பகவான் ஸ்ரீ ரமணரையும் பிரார்த்தித்து எழுதுவது.
    எங்களுக்கு குலதெய்வமே பரமபெரியவாளும், பகவான் ரமணரும் தான்.
    உங்களை சந்திக்க விரும்புகிறேன்.
    அன்பன்,
    santhanam jagannathan.

  17. மஹா பெரியவள பத்தி நினைதாலே உள்ளம் மகிழ்கிறது . பூர்ணிமா வெங்கட் .

  18. Z தமிழ் சானலில் பி.சுவாமிநாதன் தினமும் மகா பெரியவா நடத்திய அற்புதங்கள் பற்றி கூறுவார்.மெய்சிலிர்க்க வைக்கும்.

  19. மஹா பெரியவா எங்களுக்கும் ஆசி வழங்குங்கள்

  20. இந்த கலியுகத்தில், கஷ்டங்கள் அதிகமாக உள்ளது. அதிலிருந்து விடுபட மார்க்கம் தேடி அலைகிறது இந்த மனித சமுதாயம். மகான்களின் ஆசிகள் மாத்திரமே மூல மருந்தாக அமைந்து, உடல் நோய் மற்றும் மன நோய்களை வேரோடு களைவதாக அமையும்.
    மஹா பெரியவா ஆசீர்வாதம் எங்கும் எல்லோர்க்கும் கிடைக்கப்பெற்று நாம் எல்லோரும் கடைத்தேருவோமாக !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *