Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, May 20, 2024
Please specify the group
Home > Featured > கனவில் தோன்றி கோவில் கட்டச் சொன்ன மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர்!

கனவில் தோன்றி கோவில் கட்டச் சொன்ன மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர்!

print

ந்த ஜென்மத்தில் அடியேன் செய்த புண்ணியமோ தெரியாது. ரைட்மந்த்ரா தளம் துவக்கப்பட்ட இந்த ஐந்தாண்டுகளில் பல சிவாலயங்களை பாடல் பெற்ற தலங்களை தரிசித்துவிட்டோம். ஒவ்வொரு தலமும் ஒன்றையொன்று விஞ்சி நிற்கும் சிறப்பை பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது?

இந்த ஆலயங்கள் எல்லாம் ஏதோ பொருளால் கட்டப்பட்டவை என்று பலர் கருதுகிறார்கள். இல்லை. இவை அருளால் கட்டப்பட்டவை. பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, உலகின் தலைசிறந்த கட்டிடக்கலை வல்லுநர்களை ஒப்பந்தம் செய்தாலும் இந்தக் கோவில்களில் ஒன்றைப் போலக் கூட யாராலும் கட்ட முடியாது என்பதே நிதர்சனம்.

எனவே ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு பாடல் பெற்ற தலத்தை தரிசிக்க செல்லும்போதும் ஒரு குழந்தையின் குதூகலம் மனதிற்கு ஏற்படுகிறது. அங்கே சுற்றித் திரிந்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வியந்து ரசித்து கசிந்து உருகி …. இதுவல்லவோ இந்த பிறவியின் பயன்!

(பலருக்கு திருப்பதி, திருவண்ணாமலையை விட்டா வேற கோவிலே தெரியாது. கொஞ்சம் வெளியே வந்தாத் தான் அவர்கள் எவ்வளவு இழக்கிறார்கள் என்று புரியும்! Don’t miss : நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!)

சில ஆலயங்களை பற்றி படிக்கும்போதோ கேள்விப்படும்போதோ உடனே சென்று பார்க்கவேண்டும் என்று தோன்றும். அந்த வகையில் நமக்கு காட்டுமன்னார்குடியை அடுத்து அமைந்துள்ள மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது பேரவா அக்கோவிலைப் பற்றி கேள்விப்பட்டதிலிருந்தே இருந்தது. காரணம் இந்த கோவிலின் அமைப்பே ஒரு தேர் போல இருக்கும். மூலவர் அமிர்தகடேஸ்வரர் தேரில் தான் இருப்பார்.

எனவே மகா சிவராத்திரிக்கு மேலக்கடம்பூர் சென்று ஒரு இரவு முழுதும் அமிர்தகடேஸ்வரருடன் இருக்கவேண்டும் என்று பேராவல் கொண்டோம். நாம் நினைத்தாலும் நடத்தித் தருவது அவன் கையில் அல்லவா இருக்கிறது? நினைத்ததைவிட அற்புதமாக நடத்தித் தந்தான்.

மேல்கடம்பூர் ஆலயத்தில் நமது சிவராத்திரி தரிசன அனுபவங்கள் தனிப் பதிவாக அளிக்கிறோம். அதற்கு முன்பு மேல்கடம்பூரின் சிறப்பு, தல வரலாறு, அமைவிடம் இவற்றை பார்ப்போம்.

கனவில் தோன்றிய கடம்பூர் இறைவன்!

தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

அவற்றுள் காவிரியின் வடகரையில் அமைந்தவை 63 ஆகும். அவற்றுள் 34- வது தலமாக போற்றப்படுவது திருக்கடம்பூர்.

“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று அப்பர் பெருமான் பாடியது இங்கு தான்!

ஒவ்வொரு ஆலயத்தின் பின்னேயும் ஒரு சுவையான சிலிர்க்க வைக்கும் சம்பவம் இருக்கும். இந்த ஆலயம் தொடர்புடைய ஈசனின் திருவிளையாடல் ஒன்றை பார்ப்போம்.

மொகலாய படையெடுப்பிற்கு பிறகு கவனிப்பாரற்று சிதிலமடைந்திருந்த இக்கோயிலை தேவகோட்டையை சேர்ந்த திரு. அருணாச்சலம் செட்டியார் அவர்கள் முழுவதுமாய் பிரித்து எண்களிட்டு புதிதாய் கற்கள் சேர்த்து இன்று நாம் காணும் வடிவில் நடுமண்டபம், பெரிய மண்டபம், வெளிப்பிரகாரத்தில் இருந்த அம்மன் சன்னதியை உட்பிரகாரத்தில் மாற்றியது. பிரகார பெருமதில் சுவர் என பெரிய அளவில் திருப்பணி செய்தார். இறைவன் அவரை இத்திருப்பணியில் ஈடுபடுத்தியதே ஒரு சுவையான நிகழ்வாகும்.

வேளாளர்கள் மீது நாட்டுக் கோட்டை செட்டியார்கள் நல்லுறவு இல்லாமல் இருந்த காலத்தில் வேளாள அன்பர்கள் செட்டியாரை சந்தித்து, இத்திருக்கோயில் பணியினை செய்ய விண்ணப்பித்த போது செட்டியார் ”பார்க்கலாம்” என்ற பதிலை மட்டுமே தந்தார். அந்த நேரத்தில் சேத்தியாத்தோப்பின் அருகில் உள்ள திருக்கூடலையாற்றூர் திருப்பணியினை செய்து கொண்டிருந்தார் செட்டியார்.

வேளாள அன்பர்கள் கடம்பூர் ஈசனிடம் முறையிட்டு வருந்தினர்.

“ஐயனே திருப்பணி செய்யுமளவிற்கு எங்களுக்கு வசதி இல்லை. வசதி இருப்பவரே உனக்கு திருப்பணி செய்ய மறுக்கிறார். தொன்மையும் சிறப்பும் வாய்ந்த இந்த தலம் இப்படி இருத்தல் தகுமா?” என்று கண்ணீர் வடித்தார்கள்.

அடியார்கள் துயர் கண்டு பொறுக்கமாட்டாத ஈசன் செட்டியாரிடம் திருவிளையாடல் ஒன்றை நடத்த விருப்பம் கொண்டான்.

அப்போது ஒரு நாள் கட்டுமானத்திற்கு கருங்கல் ஏற்றிய வண்டிகளுடன் செட்டியார் பயணித்து கொண்டிருந்தார். இரவு நேரம் செட்டியார் கனவில் இறைவன் தோன்றி திருக்கடம்பூர் திருப்பணியினை தொடங்குமாறு பணித்தார்.

வண்டி ஓட்டிகள் அனைவரும் கண்ணுறங்க மாட்டு வண்டிகள் திசை மாறி கடம்பூர் செல்ல ஆரம்பித்தன. காலையில் கண்விழித்த செட்டியார் கடம்பூர் திசையில் வண்டிகள் செல்வதை அறிந்து ஈசனைப் போற்றி திருப்பணிகளை தொடங்கினார். தற்போது உள்ளபடி கோயிலை கட்டி முடிக்க 12 ஆண்டுகட்கு மேலானதாக அறிகிறோம்.

பின்னர் அவர் வழிவந்த திரு. சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் திருக்கோயிலை 1897ம் ஆண்டு குடமுழுக்கு செய்தார். அதன்பின்னர் அவர் வழிவந்த மற்றொரு அருணாச்சலம் செட்டியார் 1920ல் குடமுழுக்கு செய்தார். 1942ல் ஒன்பதுகோள் நவகிரகம் அமைக்கும் பணி செய்து குடமுழுக்கு நடைபெற்றது. பின் 3.04.1980ல் குடமுழுக்கு நடைபெற்றது. அண்மையில் 21.6.2002ல் குடமுழுக்கு தருமை ஆதீனம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

திருக்கடம்பூர் தற்போது மேலக்கடம்பூர் என வழங்கப்படுகிறது. இது கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி தாலுக்காவில் உள்ளது. காட்டுமன்னார்கோயிலில் இருந்து செட்டிதாங்கல் வழியாக எய்யலூர், ஆயங்குடி, முட்டம் செல்லும் சாலையில் 6 – வது கி.மீட்டரில் உள்ளது. பொன்னியின்செல்வன் வரலாற்று நிகழ்களம் இக்கடம்பூரே ஆகும்.


இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு. சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகுதான் வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே, இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்

இறைவன் – அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்
இறைவி – அருள்மிகு சோதிமின்னம்மை
தலமரம் – கடம்ப மரம்
தலதீர்த்தம் – சிவதீர்த்தம் – கோயிலின் வடபுறத்தில் சக்தி தீர்த்தம் – கோயிலுக்கு மேற்கே சற்று தூரத்தில்
கோயில் – கரக்கோயில்
லிங்கம் – சுயம்பு
பூசை – மூன்று காலப் பூசை
நேரம் – காலை 8.00 – 9.30 மணி, மாலை 5.00 – 8.00 மணி (விஷேட நாட்களில் மாறுபடும்)
நிர்வாகம் – தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கீழ்கரக்கோயில்

தமிழக சிவாலயங்கள் ஒன்பது வகைப்படும். இந்த ஒன்பது வகைகளுள் கடம்பூர் திருக்கோயில் ”கரக்கோயில்” வகையினை சார்ந்தது. நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கி குதிரைகள் பூட்டப்பெற்ற அழகிய தேர்வடிவ கோயில் இது. மேலும் கடம்ப பேரரசை ஆண்ட ”முண்டா” மொழியில் ”கரம்” என்ற சொல்லுக்கு கடம்பு எனப் பெயர், கரம்கோயில் கடம்பினை தலமாக கொண்ட கோயில், கரக்கோயில் என்று பொருள் தருகிறது. தமிழ்நாட்டில் கரக்கோயில் என்று குறிப்பிடப்படும் ஒரேக்கோயில் இதுவாகும். வடமொழியில் விஜயம் என குறிப்பிடப்படும் கோயிலும் இதுவாகும்.

அடியார்களும் தேவர்களும் வழிபட்ட பெருமை!

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், இராமலிங்க அடிகள், பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் போன்ற அடியார்கள் பாமாலை செய்து வழிபட்ட தலம் இது.

இத்திருக்கடம்பூரின் ஞானச்சம்பந்தர் பதிகங்கள் 2-ம் திருமுறையிலும், திருநாவுக்கரசர் பதிகங்கள் 5ம் திருமுறையிலும் தொகுக்கப்பட்டுள்ளன.

கயிலை மலையிலிருந்து அருள்பாலிக்கிறார் சிவபெருமான். அங்கு சென்று வழிபாடு செய்யும் எண்குலமலை தேவர்கள், அதன் தலைவன் மலையரசன், திங்கள், கதிரவன், தேவர் தலைவன், சித்தர்கள் முதலியானோர் கடம்பூர் கோயிலும் கயிலையை ஒத்தது என இங்கும் வந்து வழிபாடு செய்துள்ளனர். ஒவ்வொரு யுகத்திலும் யார் யார் வந்து வழிபாடு செய்தனர் என்ற செய்திகள், அச்சிற்பங்களின் கற்றல் பொறிக்கப்பட்டுள்ளமை சிறப்பு.

திரேதாயுகத்தில் திங்களும், உரோம முனியும், தேவர் தலைவனும் துவாபரயுகத்தில் எண்குல மலைத்தேவர்களும் (அஷ்டகுல பர்வதம்) மலையரசனும், கலியுகத்தில் பதஞ்சலி மாமுனியும், மேலும் திருமாலும், நான்முகனும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றனர் என்ற செய்திகளால், கோயிலின் தோற்றத்திற்கு என்ற செய்திகளால், கோயிலின் தோற்றத்திற்கு முன்னரே சிவபரம்பொருள் இங்கு எழுந்தருளி அருள்செய்த பெருமையுடைய தலம் திருக்கடம்பூர் ஆகும்.

இப்படி யுகங்கள் கடந்த பழமை வாய்ந்த இத்திருத்தலத்தில் கோயில்கட்டி வழிபாடு தொடங்கியது எப்போது என்று வரையறுக்க இயலாது. எனினும் ஆறாம் நூற்றாண்டில் நாயன்மார்களால் பாடபெற்ற கோயில் என்பதால் 1400 ஆண்டுகளுக்கு மேலாக கோயில் உள்ளதாக அறியலாம். நாம் இப்போது காணும் தேர்வடிவ கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி.1113-ல் அவரது 43ம் ஆண்டில் கட்டப்பட்டது. அதற்கு முன் இக்கோயில் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது எனவும் அறிகிறோம்.

முற்கால சோழர்களின் காலத்தில் சிவாலயங்களில் சிவன் சன்னதி மட்டுமே இடம் பெற்றிருந்தன. ராஜேந்திரன் காலத்திற்கு பின்னரே அம்பாள் சன்னதி அமைக்கும் வழக்கம் தொடங்கியது. இக்கோயிலின் வடகிழக்கு மூலையில் இருந்த அம்பாள் சன்னதி, சுமார் நூறு வருடங்களுக்கு முன் தேவகோட்டை செட்டியார்களால் திருப்பணியின் போது கோயிலின் உட்பிரகாரத்தில் தெற்கு நோக்கி கட்டப்பட்டது.

சிற்பக்கலைக்கோயில்

பாடல்பெற்ற தலங்களில் அழகுற அமைந்ததும் சிற்பக்கலை கோயிலாகவும் அமைந்துள்ளது மேலக்கடம்பூர் கோயில், கருவறை புறசுவர்களில் எண்ணிலடங்கா சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

திருநீற்றுசோழன், விருதராஜபயங்கரன் என பெயர்பெற்ற முதலாம் குலோத்துங்க சோழன் இசைக்கலையில் வல்லவன், சிற்பக்கலைகள், ஓவியக்கலைகளில் மிக்க ஈடுபாடு உடையவன் என கலிங்கத்துப் பரணி கூறுகிறது. எனவே இக்கோயில் சிற்ப வேலைபாடுகளுடன் திகழ மன்னரின் ஈடுபாடே முக்கிய காரணமாகும்.

கருவறை தேவகோட்டத்தில் ஆலமர்செல்வன் காளை மீது அமர்ந்து ஞான மூர்த்தியாகவும், முதல் தளத்தில் நின்றபடி வீணாதரராகவும், முறையே திருமால் சிவலிங்க வழிபாடு செய்பவராகவும், முதல் தளத்தில் யோக நிலையிலும் காட்சி தருகிறார்.

கருவறை புறச்சுவர் முழுவதும் நாயன்மார் புராணச் சிற்பமும், நாட்டிய கரணங்கள், மகேசுவர வடிவங்கள், முக்கோடி தேவர்கள் வழிபடும் காட்சி, இராமாயண, கிருட்டிண லீலைகள், என சைவ, வைணவ சிறப்புகள் அடங்கிய சிற்ப தொகுப்புகள் பலவற்றை காணலாம்.

அதிட்டானம்

இத்திருக்கோயிலின் அதிட்டானம் மிக்க சிறப்புடையது. பத்மபந்தமாகவும், உபபீடமானது மஞ்சபத்ரமாகவும் உள்ளது. உபானம், உபோபானம், பத்மோபானம், சூத்ரகம்பு, ஜகதி, ஊர்த்துவ பத்மம், கம்பு, அதபத்மம், கடகவிருத்தம், குமுதம், ஊர்த்துவபத்மம், கம்பு, கண்டம், ஊர்த்துவகம்பு, அதபத்மம், மகாபட்டிகை, ஊர்த்துவ பத்மம், வாஜனம் என்னும் 18 அதிட்டான அங்கங்களுடன் திகழ்கிறது. மிக அதிகமான அதிட்டான அடுக்குகளுடன் திகழும் சோழர்கால அதிட்டானங்களில் திருக்கடம்பூர் முதன்மையானதாகும்.

திருக்கோயில் மூர்த்திகள்

திருக்கோயில் கருவறையின் பின் பகுதியில் மேற்கு திருமாளப்பத்தி உள்ளது. இதில் ஆரவார விநாயகர் சன்னதி உள்ளது. இந்த விநாயகர் சோழர்களின் கங்கை படையெடுப்பின் போது கொண்டுவரப்பட்டதாகும். வலம்புரியாகவும், புடைப்பு சிற்பமாகவும் காட்சி தருகிறார். அடுத்து ஆறுமுகன் சன்னதி வள்ளி, தெய்வானை சகிதமாய் மயில் மீது அமர்ந்த கோலத்தினை காணலாம்.

அடுத்த சன்னதியாக சமயகுரவர் நால்வரும், அதனை ஒட்டி தேவர் தலைவனின் குற்றம் போக்கிய, குற்றம் போக்கியநாதர் (பாபாஹரேஸ்வரர்) மீனாட்சி சகிதராக காட்சியளிக்கிறார். அதன் இருபுறமும் கலைமகள் (சரஸ்வதி) வனமகள் (வனதுர்க்கை) வீற்றிருக்க, திருமகள் தனிசன்னதியில் உள்ளார்.

தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி

முதலாம் குலோத்துங்கன் அவையில் இருந்தவர் உத்திரலாட (வங்காளம்) தேசத்து ஸ்ரீகண்டசிவன். இவர் சிதம்பரம் ஆடல்வல்லானை தரிசிக்க வந்திருந்தபோது தன் வழிபடு தெய்வமாக வைத்திருந்த ரிஷபதாண்டவரை கொண்டு வந்தார் எனவும், இக்கோயில் ஸ்ரீகண்டசிவன் மேற்பார்வையில் கட்டப்பெற்றதால் பணிமுடிந்து செல்லுங்கால் தனது மூர்த்தியினை இக்கோயிலில் வைத்து சென்றதாக கூறுவர். முதலாம் ராஜேந்திரன் தனது வடநாட்டு படையெடுப்பின் போது பாலர்தேசத்து மகிபாலரை வென்று அங்கிருந்து இம்மூர்த்தியினை வெற்றி சின்னமாக கொண்டுவந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

செவ்வக பீடத்தில் மையமாக உள்ள தாமரை பீடத்தில், மேல்நோக்கி நிற்கும் காளையின் மேல் சதுர தாண்டவ கோலத்தில் வீசிய பத்து கரங்களில் வீரவெண்டயம், பிரம்மகபாலம், கேடயம், சூலம், அரவம், கட்டங்கம், தண்டம், குத்தீட்டி ஏந்திட, வலக்கை தும்பிக்கை அமைப்பிலும், இடக்கை அண்டவெளி தாங்கியும், சிவபெருமான் நின்றாடுகிறார். அவர் காலடியில் திருமால் மத்தளமிசைக்க, வீரபத்திரர் சூலமாட, பைரவர், கணங்கள், விநாயகர், பார்வதி, பிருங்கி, காரைக்கால் அம்மையார், நந்தி, மகாகாளர், நாட்டிய பெண்கள் சேர்ந்தாட, முருகன் மயில் மேல் பறக்க, கந்தர்வர்கள் மலரிட அனைத்தும் ஒன்று சேர்ந்த அற்புத கலைப்படைப்பு. திருவாசியில் அக்கினிக்கு பதிலாக இங்கே போதி இலைகள் காணப்படுகின்றன. தலைக்கு பின்புறத்தில் ஒளிவட்டமும், மணிமுடியும் வங்கதேச பாணியில் உள்ளது.

மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்ட இச்சிற்பம் போல புடைப்புச் சிற்பங்களாக கல்லில் வடிக்கப்பட்ட மூன்று சிலைகள், வங்கதேச டாக்கா தேசிய அருங்காட்சியத்தில் உள்ளன. ஊழிக்காலத்தில் சிவன் விடைமேல் நடனமாட, தேவர்கள் அவர் காலடியில் சேர்ந்திட்ட புராணக் கதையினை சிற்பமாக வடித்திட்ட சிற்பியின் கைவண்ணம் கண்டு வியக்கிறோம். இச்சிலையினை குறைவிலா பிரதோஷ நாளில் 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் மட்டுமே தரிசனம் செய்ய இயலும்.

புராண வரலாறு

தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமுதக்கலசம் பெற்றனர். முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடாமல் அமுதுண்ண அமர்கின்றனர். அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி விநாயகர் அமுத கலசத்தினை பூலோகத்தில் மறைத்து வைக்க எடுத்து வரும் வழியில் ஒரு துளி அமிர்தம் கடம்ப மர காட்டில் வீழ்ந்து சுயம்பு லிங்கமாக மாறியது. அவரே இத்தல அமிர்தகடேஸ்வரர். பிற்காலத்தில் கடம்ப மரங்கள் அடர்ந்த தலம் கடம்பூர் என வழங்கலாயிற்று. தல மரமும் கடம்ப மரமாக ஆனது.

இத்திருக்கோயிலை இந்திரனின் தாய் அதிதி தினந்தோறும் வந்து வழிபட்டாள். தன் தாயின் கடமையை எளிதாக்க எண்ணி இந்திரன் இத்தல இறைவனையும், பிற தெய்வங்களையும் அழகிய தேரில் வைத்து எடுத்துச் செல்ல முற்பட்டான். தல விநாயகரின் அனுமதி பெறாமல் காரியம் செய்ய முற்பட்டதால் விநாயகர் அவன் ஆணவத்தை அடக்க அவன் தேரை காலால் அழுத்த தேர் கல்லாய் சமைந்தது.

பிழை உணர்ந்த இந்திரன் பிழை நிவர்த்தி கோருகிறான். ஓர் நாழிகையில் கோடி லிங்கம் பிரதிட்டை செய்ய ஆணையிடுகிறார். கோடி லிங்கம் செய்ய இயலாமல் போகவே ருத்ரகோடி உரு செய்து ஒரு லிங்கம் பிரதிட்டை செய்து பிழை நிவர்த்தி பெறுகிறான். ருத்ரகோடி உரு செய்து பிரதிட்டை செய்த அக்கோயில் இத்தலத்திற்கு கிழக்கே 1.கி.மீ தொலைவில் ருத்ரகோடீஸ்வரர் ஆலயம் என்ற பெயரில் விளங்குகிறது. அப்பர் தேவாரத்தில் ”கடம்பூர் இளங்கோயில் தன்னில் கயிலாய நாதனை காணலாமே” இக்கோயிலை போற்றுகிறார். நீண்ட காலமாய் சிதிலமடைந்திருந்த இக்கோயிலை தமிழக தொல்பொருள் துறை மூலம் புதுப்பிக்கப்பட்டு விமான கட்டுமானம் இன்றி காட்சி தருகிறது.

கடம்பமரம்

கடம்பு இக்கோயிலின் தல மரமாகும். மேலும் இம்மரத்தின் பெயராலே இவ்வூர் கடம்பூர் என வழங்கலாயிற்று. கடம்பமரம் இந்திய தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற மரமாகும். எனவே பரவலாக இந்தியாவெங்கும் காணப்படுகிறது. எனினும் மேற்கு கடற்கரை ஓரங்களிலும் கர்நாடகத்திலும், இமயமலை சாரலிலும் அதிகமாக காணப்படுகிறது. 2 மீட்டர் சுற்றளவுடன் 18 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் தாவரவியல் பெயர் அன்தோசெபால்ஸ் கடம்பா என்பதாகும். ரூபிசெயே என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்ததாகும். வெண்கடம்பு, மஞ்சள்கடம்பு என இருவகைப் படும். ஆரஞ்சு வண்ணத்தில் 2.5 அங்குல சிறுபந்து போல் இருக்கும். மிக்க நறுமணத்துடன் மே மாதங்களில் பூக்கும். கனிகள் உருண்டை வடிவில் முற்றிய நிலையில் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும். இலை கரும்பச்சையாக கையகலத்தில் இருக்கும்.

கடம்பமரம் மதுரை, குளித்தலை, திருக்கடம்பூர் ஆகிய தலங்களில் தலமரமாக போற்றபடுகிறது. வடக்கே மதுராவில் கிருட்டிணர் கடம்பவனத்தில் விளையாடி மகிழ்ந்ததாக ஸ்ரீமத் பாகவதத்திலும், சைதன்ய சரித்திரத்திலும் கூறப்பட்டுள்ளது. அபிராமி அந்தாதியிலும் பல இடங்களில் அன்னை கடம்ப மாலை அணிந்தவளாக போற்றபடுகிறாள். கடம்ப பூமாலைகளை கிருட்டிணன் முருகன், இவருக்கு மட்டுமின்றி அனைத்து தெய்வங்களும் இதனை விரும்பி ஏற்பது இப்பாடல்கள் மூலம் அறியலாம். திருமுருகாற்றுப்படையில் இதனை உருள்பூ என்று நக்கீரர் எடுத்தியம்புகிறார்.

சதய நட்சத்திரத்தினர் கடம்பமரம் நட்டு பயன் பெறலாம்.

முகவரி : அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், மேலக்கடம்பூர் அஞ்சல், காட்டுமன்னார்குடி வட்டம் கடலூர் மாவட்டம் PIN – 608304.

எப்படி செல்வது :

சிதம்பரம் – காட்டுமன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் சாலை வழியில் சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 32 கி.மி தொலைவில் கடம்பூர் உள்ளது. காட்டுமன்னார்குடியில் இருந்து எய்யலூர் செல்லும் சாலையில் முதலில் கீழ்க்கடம்பூரும் அதையடுத்து மேலைக்கடம்பூர் உள்ளது. கீழக்கடம்பூர் ஒரு தேவார வைப்புத் தலம். மேலக்கடம்பூரில் உள்ள ஆலயமே பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் இருந்து தென்கிழக்கே 6.5 கி.மி. தொலைவில் திருஓமாம்புலியூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் உள்ளது. ஓமாம்புலியூரில் இருந்து குணவாசல், ஆயங்குடி வழியாகவும் கடம்பூர் தலத்திற்கு செல்லலாம்.

(*சென்ற சிவராத்திரி அன்று நாம் திருக்கடம்பூர் சென்றிருந்தபோது நமக்கு அளிக்கப்பட திருக்கோவில் தலவரலாற்றின் உதவியைக் கொண்டு இப்பதிவு எழுதப்பெற்றது.)

========================================================

உங்கள் உதவியை எதிர்நோக்கி உங்களுக்காக ஒரு தளம்…

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

For more information click here!

========================================================

Related posts…

திருப்பம் தரும் தாருகாவனத்தில் சில மணித்துளிகள்!

திரிபுர தகனமும், கூவம் திரிபுராந்தகர் திருக்கோவில் சிறப்பும்!

எங்கு பார்த்தாலும் பிள்ளையார் – பிரமிக்கவைக்கும் ஒரு சோடச கணபதி தலம்!

பட்டினத்தார் கோவில் – அன்றும், இன்றும்!

மகா பெரியவாவும் பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவிலும் – நெஞ்சையள்ளும் நெகிழ்ச்சியான சம்பவங்கள்!

சித்தர்கள் பாடிய, நரம்பு கோளாறுகளை நீக்கும், பேரம்பாக்கம் சோளீஸ்வரர்!

அற்புதமான வாழ்க்கை வேண்டுமா? அரியத்துறைக்கு வாங்க!

திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் – அற்புதங்கள் பல நிகழ்ந்த திருநாவுக்கரசர் முக்தி தலம்!

கடனில் சிக்கித் தவிப்போரை மீட்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர்!

திருநின்றவூரின் திருவாய் நிற்கும் ஏரிகாத்த ராமர் – ஸ்ரீராமநவமி ஸ்பெஷல் !

நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!

ஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து!

அபயம் தருவான் அஞ்சனை மைந்தன் – காக்களூர் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் தரிசனம் !

நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!

==========================================================

Also Check :

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

திருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம்! யாருக்கு, ஏன்?

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

அது என்ன ‘அனுபவ வாஸ்து’ ?

அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!

திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

சிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்!

நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!

சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *