Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, July 12, 2024
Please specify the group
Home > Featured > புளிய மரப் பொந்தில் மறைக்கப்பட்ட அம்பலப் புளி!

புளிய மரப் பொந்தில் மறைக்கப்பட்ட அம்பலப் புளி!

print

வ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி சமயத்தில் நம் தளத்தில் சிவராத்திரி ஸ்பெஷல் பதிவுகள் வெளிவந்தாலும், அண்மைக் காலங்களில் நாம் ஈஸ்வரன் குறித்து பல பதிவுகள் அளித்து வருவதால் தனியாக தொடர் ஏதும் இந்த ஆண்டு அளிக்கவில்லை.

இது போன்ற பதிவுகளே சிந்தைக்கு சிவானந்தம் அளிப்பதால் தனியாக சிவராத்திரி சிறப்பு தொடர் தேவையில்லை என்று கருதுகிறோம்.

சிவராத்திரி விரதம் முதன்முதலாக இருக்க ஆசைப்படுபவர்கள் மற்றும் இன்னும் சிறப்பாக விரதமிருக்க ஆசைப்படுபவர்கள் நலனுக்காக இந்தப் பதிவின் இறுதியில் “சிவராத்திரி விரதம் என்று எப்படி அனுஷ்டிக்கவேண்டும்?” என்பதை இரத்தின சுருக்கமாக கூறியிருக்கிறோம். முந்தைய ஆண்டுகளில் இது பற்றி விரிவான பதிவுகள் வெளிவந்துள்ளன. அதன் சுட்டிகளையும் காணலாம்.

இப்போது தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் கைவண்ணத்தில் சிவானந்தம் பருகுவோம் வாருங்கள்.

ஈசனின் பெருமையை கேட்கும் செவிகள் நல்ல செய்திகளையே கேட்கும். படிக்கும் கண்கள் நல்லவற்றையே பார்க்கும் பாக்கியம் பெறும். இது அனுபவப்பூர்வமான உண்மை!

புளியமரத்தில் மறைத்து வைக்கப்பட்ட ஆடல்வல்லான்!

by டாக்டர் உ.வே.சா.

கோயில்களுக்கும் அங்குள்ள சிற்பக் கலைக்கும் பெயர் பெற்றது தமிழ்நாடு. ஸ்தலங்களை வழிபடுதலும், ஆலயங்களைப் பாதுகாத்து நித்திய நைமித்திகங்களைக் குறைவின்றிச் செய்து வருதலும் இந்நாட்டு அரசர்களுடைய கடமைகளாக இருந்து வந்தன. ஆலய அமைப்புக்களை விரிவுபடுத்துவதும் திருவிழா முதலியவற்றைச் சிறப்பாகச் செய்வித்தலுமாகிய காரியங்களில் அவர்கள் ஒருவரோடொருவர் போட்டிபோட்டுக்கொண்டு தொண்டு செய்தனர். அவர்கள் சரித்திரங்களை தருமச் செயல்களையும் சிவபக்திச் சிறப்பையும் தெரிந்து கொள்வதற்கு ஆதாரமாக உள்ள சிலாஸாசனங்கள் தமிழ்நாட்டுக் கோயில்கள் பலவற்றில் விளங்குகின்றன.

இவ்வாறு காப்பாற்றப் பெற்று வந்த ஆலயங்களுக்கு சில காலங்களில் அயல் நாட்டு மன்னரது படையெடுப்பால் இடையூறுகள் நேர்வதுண்டு. அத்தகைய காலங்களில் கோயில்களிலுள்ள விக்ரகங்களையும் வேறு பொருட்களையும் பிறர் அறியாமல் நிலவறைக்குள் மறைத்து வைப்பது வழக்கம். இதன் பொருட்டே பல கோயில்களில் நிலவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தகையவற்றை இன்றும் சில கோயில்களிலே காணலாம்.

புற மதத்தினராகிய அரசர்களிற் சிலர் கோயில்களுட் புகுந்து விக்ரகங்களை உடைத்து வந்தனர். அவர்கள் கொடுமைக்கு உட்பட்ட பல அரிய விக்ரகங்கள் தலையிழந்தும் கால் ஒடிந்தும் கை போயும் மூக்கறுந்தும் பல ஆலயங்களில் உள்ளன. சிற்பக் கலைத் திறனையும், தெய்வ பக்தியையும், மந்த்ர சக்தியையும் ஒருங்கே குழைத்துச் சென்ற அந்தக் கொடுமையாளருக்கு அஞ்சி மிகவும் தந்திரமாகத் தங்கள் தங்கள் ஊரிலுள்ள மூர்த்திகளை அடியார்கள் பாதுகாத்த வரலாறுகள் பல உண்டு.

*****

ஒரு கலாப காலத்தில் சோழநாட்டின் மேல் வேறு மதத்தினனாகிய அரசனொருவன் படையெடுத்து வருவதாக ஒரு வதந்தி பரவியது. அப்போது ஜனங்கள் அஞ்சி நடுங்கினர். ஆலயங்களின் நிர்வாகிகளும் அடியார்களும் விக்ரகங்களைப் பாதுகாத்து வைக்கும் முயற்சிகளைச் செயலாற்றினர். நாடு முழுவதும் கவலையும் குழப்பமும் குடிகொண்டன.

சிவஸ்தலங்களுக்குள் சிறந்ததாகிய சிதம்பரத்தில் உள்ள தீக்ஷிதர்கள் அந்தச் செய்தியை அறிந்து இடி விழுந்தவர்கள் போலாயினர். ஆலயத்தையும் ஸ்ரீ நடராஜ மூர்த்தியையும் தங்கள் உயிருக்கு மேலாகப் பாதுகாப்பவர்கள் அவர்கள். அம்மூர்த்தியை போற்றி வழிபட்டுப் பூஜை செய்வதே தங்கள் தொழிலாகவும், இன்பமாகவும், வாழ்க்கைப் பயனாகவும் எண்ணி வந்தனர். நடராஜப் பெருமான் அவர்களுக்குத் தெய்வம் மட்டுமல்லர்; அவர்களுக்கெல்லாம் ஒரு ராஜா; தீட்சிதர்கள் எல்லாம் சேர்த்த குடும்பத்திற்கு அவர் தலைவர். தில்லை வாழ் அந்தணர்களாகிய  அவர்களுக்குள் அம்மூர்த்தியும் ஒருவர் என்று சொல்லுவர் பெரியோர்.

பகையரசன் தன் கொடுமையை நடராஜாவிடம் காட்டத்துணிந்துவிட்டால் என்ன செய்வது என்று பயம் தில்லைவாழ் அந்தணர்களைப் பிடித்துக்கொண்டது. நடராஜப் பெருமான் பொன்னாலாகிய திருவுருவை உடையவர். ஆதலின் வரும் அரசன் அம்மூர்த்தியைக் கண்டால் பொன்னாசைக் கொண்டு எடுத்துச் சென்று விடுவான் என்று அவர்கள் கருதினார்கள்.

‘இக்கோயிலில் எங்கே மறைத்து வைத்தாலும் அந்த மாபாதகன் விடமாட்டான். தில்லை எல்லையைத் தாண்டிச் சென்று வேறு எங்கேனும் இம்மூர்த்தியையாவது சேமித்து வைக்கவேண்டும்’ என்று தீட்சிதர்கள் எண்ணினர்.

யாவரும் ஒன்று கூடி ஆலோசித்தனர். அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனைக் கூறினர். கடைசியில் தங்களுக்குள் அறிவிலும் பலத்திலும் சிறந்த சிலரைத் தேர்தெடுத்து, “நீங்கள் நன்றாக யோசித்து எங்கேனும் தக்க இடத்தில் ஸ்ரீ நடராஜ மூர்த்தியை வைத்துவிட்டு வாருங்கள். ஈசுவர கிருபையால் எப்போது இந்த கலக்கம் தீருகின்றதோ அப்போது மீண்டும் எம்பெருமானை இங்கே எழுந்தருளச் செய்யலாம்” என்று சொல்லி அவர்களை அனுப்புவதாக நிச்சயம் செய்தார்கள்.

தினந்தோறும் ஸ்ரீ நடராஜ மூர்த்தியைத் தரிசியாவிட்டால் உள்ளம் கரைந்து கலங்கும் இயல்புடைய அவர்கள், “இத்தகைய கெட்ட காலம் நமக்கு நேர்ந்ததே! நம் உயிரினும் சிறந்த பெருமானைப் பிரிந்து உயிர் வாழும் அபாக்கியமும் வந்துவிட்டதே!” என்று புலம்பினர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தீட்சிதர்கள் நடராஜப் பெருமானை எடுத்துக் கொண்டு சிதம்பரத்திலுருந்து புறப்பட்டார்கள். விக்கிரகங்களுக்கு யமனாக வந்த கொடிய அரசன் எந்தச் சமயத்தில் வந்துவிடுவானோ என்ற பயத்தால், ‘எப்படியாவது விரைவில் இந்த எல்லையைக் கடக்க வேண்டும்’ என்ற கவலை அவர்களுக்கு இருந்ததேயன்றி, ‘எங்கே போவது? எங்கே நடராஜ மூர்த்தியை வைப்பது? எப்படி மறைப்பது?’ என்ற யோசனை ஒன்றும் அவர்களுக்கு அப்போது தோன்றவில்லை.

அவர்கள் மிகவும் வேகமாக போய் கொண்டிருந்தனர். அங்கங்கே உள்ளவர்கள் அவர்கள் வருவதை எவ்வாறோ அறிந்து நடராஜ தரிசனம் செய்யவேண்டும் என்ற ஆசையில் அவர்களைச் சுற்றி கூடலாயினர். ஒருவரும் அறியாமல் செல்லவேண்டுமென்று எண்ணிய தீக்ஷிதர்களுக்கு அது பெரிய தடையாக இருந்தது. ஊர் ஊராக அவர்கள் சென்றனர்.

‘இப்படியே போய்க் கொண்டிருந்தால் இதற்க்கு முடிவு எங்கே? ஒருகால் அந்தக் கொடியவன் நம்மை தொடர்ந்து வந்தால் என்ன செய்வது?’ என்று அவர்கள் கவலை அடைந்தனர்.

‘ஏதேனும் ஓர் ஊரிலுள்ள ஆலயத்தில் வைத்துவிடலாம்’ என்று முதலில் யோசித்தனர்.

“நடராஜமூர்த்தி எங்கே இருந்தாலும் அது சிதம்பரமாகிவிடும்; ஜனங்கள் அப்பெருமானை விசேஷமாகப் பூஜை செய்யத் தொடங்கிவிடுவார்கள். அதனால் அவர் இருக்குமிடம் யாவருக்கும் தெரிந்துவிடும்; அபாயம் நேரும்” என்று ஒருவர் சொன்னார்.

“மனிதர்கள் பழகாத காட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து அடையாளம் குறித்துக்கொண்டு வந்துவிடலாம்” என்று வேறொருவர் சொன்னார். அவர் கூறிய யோசனை நல்லதென்று உணர்ந்த மற்றவர்கள் அப்படியே செய்யலாமென்று துணிந்தார்கள்.

போகும் வழியில் ஓர் ஊரில் ஓர் இடத்தில் பல புளிய மரங்கள் அடர்ந்திருந்தன. அவை மிகவும் பெரியன. அவற்றுள் ஒரு பழைய புளிய மரத்தில் ஒரு பெரிய பொந்து இருந்தது. அது தீட்சிதர்கள் கண்களில் பட்டது. ‘எம்பெருமானை ஒளித்துவைக்கத் தக்க இடம் இதுவே’ என்று அவர்கள் எண்ணி அன்று இரவில் அவ்விடத்திற்கு வந்து அந்தப் புளியமரத்தின் பொந்தில் நடராஜ விக்ரஹத்தை வைத்து பொந்தை அடைத்தனர். பிறகு அம்மூர்த்தியை பிரிய மாட்டாமல் வருந்தி அழுது அணைந்தனர்.

“இனிமேல் மறுபடியும் தில்லையில் உன்னை எழுந்தருளச் செய்யும் காலமும் வருமா?” என்று ஏங்கி இரவு முழுவதும் அங்கே இருந்து புலம்பினார்கள். விடிந்ததும் அங்கே இருந்தால் இரகசியம் வெளிப்பட்டுவிடும் என்ற பயத்தால் அவர்கள் புறப்பட்டுச் சிதம்பரம் சென்றுவிட்டார்கள்.

*****

சிதம்பரத்தில் நடராஜ மூர்த்தி இல்லாமலே பூஜை நிகழ்ந்து வந்தது. கன்றை பறிகொடுத்த பசுவைப்போல தீக்ஷர்கள் வருந்தினாலும் அந்த வருத்தத்தை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. தரிசிக்க வருவோர்க்கும் அந்தச் செய்தியை வெளியிடவில்லை. சிதம்பர ஆலயம் முழுவதும் வன்னெஞ்சக் கள்வனாகிய அவ்வரசனால் அழிக்கப்பட்டாலும் நடராஜ மூர்த்தியை ஒன்றும் செய்ய முடியாது என்ற ஆறுதல் அவர்களுக்கு இருந்தது.

நல்ல வேளையாக அந்தக் கொடும் பாதகனது நோக்கம் சிதம்பரத்தில் செல்லவில்லை. ஆனாலும் என்றென்றும் அவன் வரக்கூடுமென்ற திகில் தீக்ஷர்கள் நெஞ்சில் இருந்தே வந்தது.

பல வருஷங்கள் சென்றன. விக்கிரக விரோதியாகிய அரசன் இறந்ததனாலோ, தோல்வியுற்றதனாலோ விக்ரகத்தை உடைக்கும் கொடுஞ்செயல் நின்றுவிட்டதென்று தீக்ஷர்கள் கேள்வியுற்றார்கள்; அப்பால் வரமாட்டான் என்ற தைரியம் அவர்களுக்கு உண்டாயிற்று. அதற்குமேல் ஒரு கணமாவது நடராஜமூர்த்தியைப் பிரிந்திருப்பதை அவர்கள் மனம் பொறுக்கவில்லை. முன்பு அம்மூர்த்தியை கொண்டு சென்ற தீக்ஷிதர்களும் வேறு சிலரும் அப்பெருமானை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வரப் புறப்பட்டார்கள்.

அவர்கள் தாம் எந்த ஊரில் நடராஜப்பெருமானை ஒளித்து வைத்திருந்தார்களோ அங்கே வந்து சேர்த்தார்கள். தாங்கள் அப்பெருமானை வைத்த புளிய மரத்தை தேடலானார்கள். இரவில் ஒருவரும் அறியாமல் வைத்தமையாலும், பல வருஷங்கள் ஆனமையாலும் இடத்தின் அடையாளம் தெரியவில்லை. எங்கெங்கே புளிய மரங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் தேடினார்கள். அந்த ஊரில் சில புளியந்தோப்புகள் இருந்தமையால் அவர்கள் ஒவ்வொரு தோப்பாகவும், அத்தோப்பில் ஒவ்வொரு மரமாகவும் தேட வேண்டியதாயிற்று.

‘மிகவும் பழையதாக இருந்த அந்த புளியமரம் இவ்வளவு காலத்திற்குள் பட்டுபோய் வெட்டப்பட்டுவிட்டதோ’ என்ற சந்தேகம் வேற உண்டாயிற்று. ‘அப்படியானால் நடராஜ மூர்த்தி வெளிப்பட்டிருப்பார். அவர் மகிமை இங்கே இரகசியமாக அடங்கி இராது. தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கும்; நமக்கும் தெரிந்திருக்கும். இதுகாறும் தெரியாமையால் அம்மூர்த்தி இன்னும் வெளிவரவில்லை என்றே தோன்றுகிறது’ என்று சமாதானம் செய்து கொண்டனர்.

“எங்கள் பெருமானே, நாங்கள் பெரும்பாவம் செய்திருக்கிறோம். அதனால்தான் உன்னை பிரிந்து வாடுகிறோம். இப்போது உன்னை காணாமல் தவிக்கிறோம்” என்று நம்மை நொந்து கொண்டனர்.

மத்தியான வேளையாதலால் வெயில் கடுமையாக அடித்தது. தீக்ஷிதர்கள் நடராஜ பெருமானை கண்டு பிடிக்காமல் ஆகாரம் செய்வதில்லை என்ற விரதம் பூண்டிருந்தனர். வெயிலாலும் அலைச்சலாலும், உணவின்மையாலும் அவர்களுக்கு தளர்ச்சி உண்டாயிற்று; மனத் துயரத்தால் உண்டான தளர்ச்சி அதற்க்குமேலே வலிவுடையதாக இருந்தது. கண்கள் இருளடைந்தன. ‘ஐயோ, எங்கே தேடுவோம்!’ என்று மனம் இடிந்தவர்களாகி அவர்கள் திரிந்தனர்.

பக்கத்தில் இருந்த வயலில் சில உழவர்கள் உழுது கொண்டிருந்தனர். மத்தியான வேளையில் அவர்கள் உணவு கொள்வதற்காக மாடுகளை அவிழ்த்துவிட்டனர்.

“அந்த அம்பலப் புளியடியிலே கொண்டுபோய் மாடுகளை விடு. நான் வந்துவிடுகிறேன்” என்று ஒரு முதிய கிழவன் ஒரு சிறுவனிடம் சொன்னான்.

அவன் பேசியது தீக்ஷிதர்கள் காதில் விழுந்தது. “என்ன அது? அம்பலப் புளியா?” என்று ஆவலோடு ஒருவர் கேட்டார். “ஆமாம், அப்படிதான் சொல்கிறான். விசாரித்துப் பார்க்கலாம்” என்றார் மற்றொருவர்.

யாவரும் அந்த இளைஞன் மாடுகளை ஒட்டிச் செல்லும்போது அவனைத் தொடர்ந்து சென்றார்கள். அவன் ஒரு புளிய மரத்தடியில் மாடுகளைக் கொண்டுபோய் நிறுத்தினான். மரம் பெரிதாக இருந்ததால் நல்ல நிழல் இருந்தது.

“தம்பி, இந்த மரத்துக்கு ‘அம்பலப் புளி’ என்று ஏன் பெயர் வந்தது? ” என்று ஒரு தீக்ஷதர் கேட்டார்.

“எனக்குத் தெரியாது சாமி; எங்கள் எசமான் அடிக்கடி இந்த மரத்துக்கு பூசைபோடச் செய்வார். அவர் வைத்த பெயர் அது” என்று அவன் பதில் சொன்னான்.

தீக்ஷதர்களுக்கு அப்போதுதான் உயிர் வந்தது. முன்னே வந்த தீக்ஷதர்கள் அந்த மரத்தைக் கவனித்தார்கள். அதுவே நடராஜ மூர்த்தி இருக்கும் இடம் என்பதை சந்தேகம் அறத் தெரிந்து கொண்டார்கள்.

‘இந்த விஷயம் ஒருவருக்கும் தெரியாமல் இருக்க, இவனுடைய எஜமானுக்கு மட்டும் எப்படி தெரிந்தது? அவர் விஷயம் தெரிந்து ரகசியமாக வைத்திருப்பது ஆச்சர்யம். அவர் பெரிய பக்தராகவும் அறிவாளியாகவும் இருக்க வேண்டும். அவரைக் கண்டு சமாச்சாரத்தை தெரிந்து கொண்டு பிறகு எம்பெருமானை வெளிப்படுத்தலாம்’ என்று அவர்கள் நிச்சயத்துக்கொண்டனர்.

அந்த இளைஞனைத் துணையாக அழைத்துக் கொண்டு அவனுடைய ‘எசமா’னிடத்திற்கு அவர்கள் சென்றார்கள்.

சிதம்பரம் தீக்ஷிதர்கள் வந்துள்ளார்கள் என்று அறிந்தவுடன் அந்த ‘எசமான்’ ஓடிவந்து வந்து அவர்களை நமஸ்காரம் செய்து எழுந்தார். அவர் முகத்தில் நல்ல ஒளி இருந்தது. விபூதி ருத்ராட்சஷ தாரணம் செய்திருந்தார். அவரைப் பார்த்த போதே அவர் நல்ல குடியிற் பிறந்த சைவ வேளாளர் என்பதை தீக்ஷிதர்கள் உணர்ந்து கொண்டனர்.

“உங்கள் அம்பலப் புளியைச் சோதிப்பதற்காக உங்கள் அனுமதியைப் பெற வந்திருக்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள்.

“ஏன்?” என்று கேட்டார் வேளாளர்.

“எங்கள் சொத்து அதற்குள் இருக்கிறது. அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.”

“உங்கள் சொத்தா? அங்கே எப்படி வந்தது?”

அறிவாளியாகிய அவ்வேளாளர் உண்மையை முன்னமே ஊகித்து உணர்ந்தவர். ஆயினும் விஷயத்தை விளக்கமாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டே இவ்விதம் பேசினார்.

“உங்களுக்கு விஷயம் தெரியாமல் இராது. ‘அம்பலப் புளி’ என்று நீங்கள் அதற்க்கு பேர் வைத்ததிலிருந்தே தெரிகிறது. எங்களை இன்னும் அதிக கவலைக்கு உள்ளாக்க வேண்டாம். நாங்கள் பட்ட துயரமும் அலைந்த அலைச்சலும் போதும். எங்கள் மூர்த்தியை இவ்வளவு காலம் பாதுகாத்து வைத்திருந்த உங்களுக்கு இனிப் பிறவியே இல்லை. நடராஜ மூர்த்திக்கு நீங்களே உண்மையான பக்தர்” என்று தீக்ஷிதர்களுக்குள் தலைவர் சொல்லும்போதே அவருக்குத் துக்கம் தொண்டயயை அடைத்தது. அதைப் பார்த்த வேளாள பெரியார் உருகினார். ‘இனி மேல் இவர்களை காக்கவைத்தல் பிழை’ என்று எண்ணி அவர் அவர்களுடன் புறப்பட்டார்.

போகும்போதே தாம் உண்மையை உணர்ந்த வரலாற்றைச் சொல்லலானார்:

“அந்தக் கலாப காலத்தில் நான் ஒரு நாள் திடீரென்று அந்தப் புளிய மரத்துப் பொந்தைக் கவனிக்க நேர்ந்தது. திறந்திருந்த பொந்து அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டபோது அதற்குள் ஏதோ இருக்குமென்று எண்ணினேன். அந்த மரம் எனக்குச் சொந்தமான இடத்தில் உள்ளது. நான் சோதித்த போது உள்ளே நடராஜமூர்த்தி இருப்பதை அறிந்தேன். கலாபம் காரணமாக அம்மூர்த்தி அங்கே வந்திருக்கலாம் என்பதை உணர்ந்தேன். இரகசியமாக இருக்க வேண்டுமென்றே அங்கே அப்படி வைத்திருப்பதாக ஊகித்தேனாதலால், அவரை வெளிப்படுத்த எண்ணவில்லை. பின்னும் நன்றாக அந்தப் பொந்தை மறைத்தேன். நடராஜப் பெருமான் பூஜையில்லாமல் இருக்கிறாரே என்ற துக்கம் மாத்திரம் என் மனதில் இருந்தது. அப்போது நல்ல வேளையாக ஒரு தந்திரம் செய்ய எனக்குத் தோற்றியது. அந்தப் புளிய மரத்தில் ஒரு தெய்வம் இருப்பதாக கனவு கண்டேன் என்று சொல்லி அடிக்கடி மரத்திற்கு பூஜைசெய்ய ஏற்பாடு செய்தேன். உங்களுடைய தேவோபசாரங்களுக்கிடையே மகிழ்ந்தாடிய அப்பெருமான் இங்கே இந்த ஏழையடியேன் ஏற்பாடு செய்த நிவேதனங்களை ஏற்றருள நேர்ந்தது காலத்தின் கோலந்தான். இப்பெருமான் இருப்பதால் அந்த மரத்திற்கு அம்பலப் புளி என்று பெயர் வைத்தேன்.”

தீக்ஷிதர்கள், “பொன்னம்பலத்திலே நடந்த பூஜையைப்போல் இந்தப் புளியம்பலத்திலே நடவா விட்டாலும், இங்கே அன்பு மிகுதியாக இருப்பதை ஸ்ரீ நடராஜ மூர்த்தி அறிவார்” என்றனர்.

பேசிக்கொண்டே அம்பலப் புளியை அடைந்த அவர்கள், அந்தப் பொந்தைத் திறந்து அதிலிருந்து நடராஜப் பெருமானை எடுத்துத் தக்க சிறப்புகளுடன் சிதம்பரத்திற்கு எழுந்தருளச் செய்து கொண்டு சென்றார்கள்.

நடராஜ மூர்த்தி இருந்த புளிய மரத்தின் சொந்தக்காரராகிய வேளாளர் அன்று முதல் புளியன் என்னும் பெயரால் வழங்கப்பட்டார். அவர் இருந்த ஊர் புளியங்குடி என்னும் பெயரை அடைந்தது. புளியன்குடி என்பதே அவ்வாறு ஆயிற்று. இவ்வூர் சோழ நாட்டின் தென்பால் உள்ளதென்பர். அவரது பரம்பரையினர் புளியங்குடியாரென்னும் குடிப்பெயரை உடையவர்களாயினர். இன்றும் வேளாளருள் அப்பெயரைக் கொண்டும் விளங்கும் குடியினர் பலர் இருக்கின்றனர்.

(பரம்பரைக் கேள்வியாலும், சோழமண்டல சதகம் 99-ஆம் செய்யுளாலும் அறிந்தவற்றைக்கொண்டு எழுதியது இவ்வரலாறு.)

  • டாக்டர்.உ.வே.சா | ‘நினைவு மஞ்சரி’ 2 ஆம் பாகம் | ரைட்மந்த்ரா.காம்

==========================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Mobile : 9840169215

==========================================================

சிவராத்திரி விரதம் எப்போது எப்படி இருக்கவேண்டும்?

சிவராத்திரியன்று (24/02/2017 வெள்ளிக்கிழமை) காலையில் விரதத்தை துவங்கி, இரவு முழுவதும் ஐந்தெழுத்து மந்திரத்தை சிந்தையில் செலுத்தியபடி சிவாலயத்தில் தங்கியிருந்து கண்விழித்து,  நான்கு கால அபிஷேகத்தை, பூஜைகளை தரிசிக்க வேண்டும். (வீட்டிலும் கண்விழிக்கலாம்).

சிவராத்திரி விரதம் என்பது 24 மணி நேரம் நீடிக்கும் விரதம். வெள்ளிக்கிழமை காலை விரதத்தை ஆரம்பித்து மறு நாள் சனிக்கிழமை தான் பூர்த்தி செய்யவேண்டும். கடும் விரதம் இருக்க இயலாதவர்கள் மிதமாக தண்ணீர், பால், பழம் முதலியவற்றை எடுத்துக்கொள்ளலாம். விரதம் அனுஷ்டிக்காத ஏனையவர்கள் அன்று நிச்சயம் மிதமான அளவே சாப்பிடவேண்டும். (பூண்டு, வெங்காயம் அன்று கூடாது!)

மேலும் சிவபுராணம், தேவாரம், திருவாசகம், பெரிய புராணம்  உள்ளிட்ட சைவத் திருமுறைகள் மற்றும் திருவிளையாடற் புராணம், கந்த புராணம் போன்றவற்றை படிப்பதும், சிரவணம் செய்வதும் நன்மை தரும். மறுநாள் காலையில் அன்னதானம் செய்த பின் விரதத்தை பூர்த்தி செய்யவேண்டும்.

இந்நாளில் சிவனுக்கு வில்வார்ச்சனை செய்தால், ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவம் நீங்கி விடுவதுடன், செல்வ வளமும் பெறுவதோடு, மறுமையில் கைலாயத்தில் வாழும் பேறும் பெறுவர். அத்துடன், பெற்றோருக்கு பெருமை தேடித்தரும் நற்குழந்தைகள் பிறப்பர். பவித்திரமான இவ்விரதத்தை அனைவரும் அனுஷ்டித்து, ஈசனருள் பெறுவோமாக!

Please check :

சிவராத்திரி – செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது?

12 ஜோதிர்லிங்கங்கள் தரிசனம் – ஒரு நேரடி அனுபவம் – மகா சிவராத்திரி சிறப்பு பதிவு

==========================================================

Also check articles related டாக்டர்.உ.வே.சா :

சிலிர்க்க வைத்த சிவபக்தி –  ஈசனின் பிறை முழுநிலவான கதை!

‘பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்!’

பாவலர் மானங்காத்த பாவை!

களவு போன உற்சவரை மீட்டெடுத்து வந்த சமயோசிதமும் சிவபக்தியும்!

பக்கிரிக்கு யானை கொடுத்தவர்!

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கடைசியில் வந்தவன் முதல் பரிசை தட்டிச் சென்ற கதை!

திருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம்! யாருக்கு, ஏன்?

பிரம்படி வாத்தியாரும் படிப்பு ஏறாத பிச்சு ஐயரும்!

வேங்கடசுப்பையர் கனவில் தோன்றிய கிழவனும் கிழவியும் ! MUST READ

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

ஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்!

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கோவிந்த தீட்சிதர் – மன்னராட்சியிலும் மக்களுக்கான ஆட்சியை தந்த மகான்!

=======================================================

Also check :

அன்புக்கு அவள் அடிமை – உருகவைக்கும் உண்மை சம்பவம்!

அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

சூலையும் முத்துமாலையும் – இது முத்துக்குமார சுவாமி திருவிளையாடல்!

அப்பன் விறகு சுமந்தான். பிள்ளை என்ன செய்தான் தெரியுமா?

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *