Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > வைத்தியநாத சாஸ்திரிகளும் ஒரு கல்யாண ரிசப்ஷனும்!

வைத்தியநாத சாஸ்திரிகளும் ஒரு கல்யாண ரிசப்ஷனும்!

print

திருவாரூரில் கமலாம்பிகை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வைத்தியநாத சாஸ்திரிகள். அந்தக் காலத்து பி.லிட். வைதீகமான குடும்பத்தில் பிறந்தவர். படித்தது தமிழ் தான் என்றாலும் ஆங்கிலத்திலும் அபார புலமை மிக்கவர். ஆங்கில ஆசிரியர் வரவில்லை என்றால் அன்று இவர் தான் ஆங்கில பாடம் எடுப்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அந்தளவு இரு மொழிகளிலும் பாண்டித்யம் மிக்கவர்.

திருவாரூரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் நினைவு தெரிந்த நாள் முதல் தினமும் பெரிய கோவிலுக்கு சென்று தியாகராஜரை தரிசித்து வந்தார் வைத்தியநாத சாஸ்திரிகள். அவர் தந்தை சாம்பசிவமூர்த்தி சிறு வயது முதலே அவருக்கு தேவாரம் திருவாசகம் முதலிய சைவத் திருமுறைகளை ஓதுவதிலும் ருத்ரம் படிப்பதிலும் பயிற்றுவித்து வந்தார். எத்தனை பணிகள் இருந்தாலும் திரிகால சந்தியாவந்தனம் உள்ளிட்ட நித்ய கர்மாநுஷ்டானங்களை தவறவிடுவதில்லை. வளர்ந்து ஆளாகி குடும்ப பாரத்தை சுமந்த போதும் தினமும் தேவாரம் திருவாசகம் படிப்பதை நிறுத்தவில்லை வைத்தியநாத சாஸ்திரிகள். அவர் தந்தை சொத்து மட்டும் சேர்க்கவில்லை. நல்ல பழக்கவழக்கங்களையும் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்தார். (வைத்தியநாத ஐயரோடு கூடப் பிறந்தவர்கள் ஏழு பேர். இவர் கடைக்குட்டி.)

திருக்குவளையை சேர்ந்த விசாலாட்சியை வைத்தியநாதனுக்கு திருமணம் செய்து வைத்தனர். விசாலாட்சி கணவனுக்கு ஏற்ற மனைவியாக திகழ்ந்தார். வருவாய்க்கு ஏற்றபடி சிக்கனமாக குடும்பம் நடத்த தெரிந்த மாதர்குல தெய்வம் அவர். திருமணம் முடிந்த அடுத்த சில ஆண்டுகளில் சாம்பசிவமூர்த்தி சிவபதம் அடைந்துவிட மற்றவர்கள் கைவிட்டபோதும் தனது குறைந்த வருவாயிலும் தனது தாயை தன்னுடன் வைத்துக்கொண்டார் வைத்தியநாதய்யர். அடுத்த சில ஆண்டுகளிலும் தாயாரும் சிவலோகப் பிராப்தம் அடைந்துவிட்டார்.

இதற்கிடையே இத்தம்பதிகளுக்கு தியாகராஜர் அருளால் சந்தான பிராப்தி கிடைத்தது. எல்லாரையும் போல ஒரு ஆண் குழந்தைக்கும் ஒரு பெண் குழந்தைக்கும் ஆசைப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. கமலா, விமலா என்று பெயரிட்டனர்.

தனக்கு வரும் சொற்ப வருமானத்தில் இவர்களை எப்படி கரையேற்றப் போகிறோம் என்கிற பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும் இயல்பான அச்சம் அவருக்கு இருந்தது. பாரத்தை தியாகராஜர் மீது போட்டுவிட்டு உபரி வருமானத்திற்காக மாலை வேளைகளில் வீட்டு திண்ணையில் ஆங்கில ட்யூஷன் சொல்லிக்கொடுத்து வந்தார். அதன் மூலம் மாதம் நூற்றி ஐம்பது ரூபாய் கிடைத்தது.

விசாலாட்சி டெய்லரிங், எம்ப்ராய்டரி வேலைகள் எடுத்து செய்து வந்தார். இது தவிர மந்தார இலைகளை சந்தைக்கு சென்று வாங்கி வந்து அவற்றை தையல் இலைகளாக தைத்து அக்கம்பக்கத்து கடைகளில் விற்று வந்தார். அப்பளம், வற்றல், வடகம், ஊறுகாய் போட்டு அந்த தெருவில் உள்ள வீடுகளுக்கு விற்பதும் உண்டு. எப்படியோ தனது பங்கிற்கு தானும் ஏதேனும் பொருளீட்டி மகள்களை கரைசேர்க்க வேண்டும் என்று கருதி கணவனுக்கு ஈடாக உழைத்தார் விசாலாட்சி.

திருவாரூரில் ஜீயபுரம் அக்ரஹாரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தாலும் பாகம் பிரித்ததில் அவருக்கு சேர வேண்டிய வீடு ஒன்று திருத்துறைப்பூண்டியில் இருந்தது. வைத்தியநாதய்யருக்கு சேரவேண்டிய அந்த வீட்டை அவரது தந்தை மறைந்த பின்பு உறவினர்கள் நயவஞ்சகமாக தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டு விட்டார்கள். சுமார் இருபதாண்டு காலம் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு வைத்தியநாதய்யருக்கு சாதகமாக கிடைத்தது.

இந்த வழக்கு நடைபெற்ற காலகட்டங்களில் நாள் கிழமை விசேஷங்களில் தியாகராஜரே கதி என்று கிடப்பார். கமலாம்பிகையை கண்ணீர் மல்க தொழுதார்.

“அம்மா மற்றவர்களை போல சொத்து சுகம் சேர்க்க ஆசைப்பட்டு அந்த வீட்டை கேட்கவில்லை… என் மகள்களுக்கு நல்லபடியாக திருமணம் நடத்த அந்த வீட்டைவிட்டால் எனக்கு வேறு வழி கிடையாது. தவிர கடைசி காலத்தை பிறவி மருந்தீஸ்வரரை தரிசித்தபடி அந்த வீட்டில் கழிக்க ஆசைப்படுகிறேன். கண் திறந்து பாரம்மா…” – இப்படி கமலாம்பிகையை நெக்குருகி வேண்டிக்கொள்வார்.

*திருத்துறைப்பூண்டியில் எழுந்தருளியிருப்பவர் பிறவி மருந்தீஸ்வரர் (பவ ஒளஷதீசுவரர்). அம்பாள் பெரியநாயகி அம்மன். அஸ்வினி நட்சத்திர பரிகாரத் தலமான இக்கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது.

ஒரு கட்டத்தில் வழக்கு இவர் பக்கம் சாதகமாக தீர்ப்பாகிவிட, வீட்டை அடமானம் வைத்து இரு மகளுக்கும் அடுத்தடுத்து திருமணம் செய்து கொடுத்தார். மூத்தவளை கும்பகோணத்திலும் இளையவளை தஞ்சாவூரிலும் மணமுடித்துக்கொடுத்தார். மாப்பிள்ளைகள் இருவருமே தனியார் உத்தியோகம் தான் என்றாலும் அதைக் கொடு இதைக் கொடு என்று பிடுங்காதவர்களாக இருந்தனர். மாமனாரின் நிலை அறிந்து அனுசரித்து நடந்துகொண்டனர். அந்த மட்டிலும் சாஸ்திரிகளுக்கு நிம்மதி.

இதற்கிடையே பணியிலிருந்து ஓய்வுபெற்றதும் திருத்துறைப்பூண்டிக்கு குடிவந்தார்கள் வைத்தியநாதய்யர் – விசாலாட்சி தம்பதியினர்.

தியாகராஜரை பிரிந்து வாழ்வது சிரமமாக இருந்தாலும் இங்கு தினமும் பிறவி மருந்தீஸ்வரரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் வைத்தியநாதய்யர். வெளியூர் பிரயாணம், உடல் நலமின்மை உள்ளிட்ட காரணங்களால் என்றாவது ஒரு நாள் மருந்தீஸ்வரரை தரிசிக்க முடியாது போனால் துடித்து போய்விடுவார்.

சுவாமியின் அர்ச்சனைக்கு தேவையான வில்வம், பூக்கள் இவற்றை எடுத்துச் செல்வார். பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி போன்ற நாட்களில் சற்று முன்னரே போய் அர்ச்சகர்களும் வேண்டிய உதவிகளை செய்வார். பூக்களை கட்டுவார். வீட்டிலிருந்து பழைய நியூஸ் பேப்பர்களை கொண்டு போய் கோவிலில் ஒரு ஓரமாக உட்கார்ந்து நடராஜப் பத்து பாடிய படி கத்திரித்து கம்பியில் கட்டுவார். இப்படி பல பணிகள் செய்து வந்தார்.

நாள்கிழமை விஷேஷங்களின் போது வீட்டில் சுண்டல் செய்து தரச் சொல்லி அதை ஒரு சிறு தூக்கில் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுப்பார். பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தி வந்த விசாலாட்சி சுண்டல் போடும் நாளன்று அன்றைய வீட்டுச் செலவுகளில் ஏதேனும் ஒன்றை கட் செய்துவிடுவார். பெரும்பாலும் அன்று காலை நீராகாரம் தான்.

மார்கழியில் சுவாமி திருவீதி உலா வரும்போது இவர்கள் வீட்டு முன்னர் சுவாமி சிறிது நேரம் நிற்பார். உடனே வீட்டிலிருந்து அனைவருக்கு சிறு டம்ளரில் சூடான சுக்கு காபி கொண்டு வந்து தருவார் விசாலாட்சி. அர்ச்சகர்கள், சுவாமியை தூக்கி வரும் சிப்பந்திகள், உடனே விளையாடிக்கொண்டு வரும் சிறுவர்கள் என அனைவருக்கும் அந்த சுக்கு காபி கிடைக்கும். இந்த சுக்கு காபி சாப்பிடவே சுவாமியுடன் சிறுவர்கள் வருவதுண்டு. விசாலாட்சி அம்மாள் போடும் சுக்கு காபி அப்படி ஒரு சுவை.

இப்படி கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு தங்களால் இயன்ற சிவத்தொண்டு செய்து வந்தனர்.

வருடங்கள் உருண்டோடியது. வைத்தியநாதய்யரை மெல்ல மெல்ல முதுமை விழுங்க ஆரம்பித்தது. வாக்கிங் ஸ்டிக் இல்லாமல் வெளியே செல்வது சிரமமாக இருந்தது.
மூப்பின் காரணமாக விசாலத்தினால் முன்பு போல டெய்லரிங் பணிகளை செய்ய முடியவில்லை.

*******

இந்நிலையில் ஒரு நாள் பிறவி மருந்தீஸ்வரரை தரிசிக்க வந்த 32 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் சுவாமியை தரிசித்துவிட்டு விபூதி பெற்றுக்கொண்டு வெளியே வரும்போது விபூதியின் மடிக்க பேப்பர் கிடைக்குமா என்று சுற்றுமுற்றும் தேட அங்கே ஒரு ஓரத்தில் அமைதியாக உட்கார்ந்து பேப்பர்களை கத்திரித்துக்கொண்டிருந்த வைத்தியநாதய்யர் கண்ணில் பட்டார்.

“ஐயா ஒரு துண்டு பேப்பர் கிடைக்குமா?”

நிமிர்ந்து பார்த்தவர் “இதோ” என்று ஒரு சிறு துண்டை அவசரமாக கட் செய்து கொடுத்தார்.

“நன்றி ஐயா”

இந்த பெரியவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே… என்று யோசித்தவன் அட நம்ம தமிழ் வாத்தியார் வைத்தியநாத சாஸ்திரிகள்….

“ஐயா… நீங்க திருவாரூர் கமலாம்பிகை ஸ்கூல்ல தமிழ் வாத்தியாரா இருந்த வைத்தியநாத சாஸ்திரிகள் தானே?”

“ஆமாம்ப்பா… என்னை தெரியுமா நோக்கு?”

“தெரியும் ஐயா… பன்னிரெண்டாவது வரைக்கும் அங்கே தான் படிச்சேன்.”

“ரொம்ப சந்தோஷம்பா… வயசாயிடுச்சுல்ல… மறதி…. பேர் என்னப்பா?”

“பூபதி ஐயா. அப்பா ரயில்வேல இருந்தார். சேலத்துக்கு டிரான்ஸ்பர் ஆகிட்டதால அதுக்கு பிறகு அங்கே போய்ட்டோம். சேலத்துல தான் எம்.பி.ஏ. வரைக்கும் படிச்சேன். இப்போ மன்னார்குடில ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில மேனேஜரா இருக்கேன். என்னோட நட்சத்திரம் அஸ்வினி. அதான் இந்த கோவிலுக்கு வந்தேன்”

“நல்லது பா…. இந்த சுவாமி ரொம்ப சக்தி வாய்ந்தவர்….”

மேற்கொண்டு கொஞ்ச நேரம் பேசிவிட்டு விடைபெற்று சென்றான் பூபதி. ஒவ்வொரு அஸ்வினி நட்சத்திரத்தன்றும் மறக்காமல் பிறவி மருந்தீஸ்வரரை தரிசிக்க வந்துவிடுவான். வரும்போதெல்லாம் வைத்தியநாத சாஸ்திரிகளை பார்க்க நேர்ந்தால் அவரிடம் சில வார்த்தைகள் பேசுவான்.

பூபதிக்கும் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகரின் மகளுக்கும் திருமணம் நிச்சயம் ஆகியது. இருவீட்டாரும் கலந்து பேசி திருமணத்தை இறுதி செய்தனர்.

பத்திரிக்கை அச்சடிக்கப்பட்ட பின்பு அவர்கள் குலதெய்வம் சுவாமிமலை முருகனிடம் வைத்துவிட்டு பின்னர் இங்கே மருந்தீஸ்வரரிடம் வைக்க ஒரு நாள் பூபதி திருத்துறைப்பூண்டி வந்தான். மருந்தீஸ்வரரிடம் வைத்து அர்ச்சனை செய்துவிட்டு அந்த கோவிலில் தனக்கு தெரிந்த ஒரு சிலருக்கு கொடுத்துவிட்டு வைத்தியநாத சாஸ்திரிகளை தேடினான்.

சுவாமி சன்னதிக்கு வெளியே கோமுக தீர்த்தம் வரும் பகுதியில் ஒரு குச்சியை விட்டு என்னவோ செய்து கொண்டிருந்தார் வைத்தியநாதய்யர்.

“ஐயா ஒரு நிமிஷம்”

குரல் வந்த திசை நோக்கி கையை உயர்த்தி “யாரு…?” என்பது போல பார்த்தார் சாஸ்திரிகள். பார்வை மங்க துவங்கிய தருணம்.

“பூபதியா? என்னப்பா எப்படி இருக்கே?”

“நல்லாருக்கேன் ஐயா. எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்கு. இப்போ தான் சுவாமி கிட்டே பத்திரிக்கை வெச்சி அர்ச்சனை செஞ்சேன். உங்களுக்கு கொடுக்கலாம்னு தேடினேன்..”

கையை அலம்பிக்கொண்டு தனது இடுப்பில் கட்டியிருந்த துண்டில் துடைத்துக்கொண்டு பூபதி நோக்கி வந்தார்.

“ரொம்ப சந்தோஷம் பா… ரொம்ப சந்தோஷம்”

“கல்யாணம் அடுத்த மாசம் பட்டுக்கோட்டையில் நடக்குது. ரிசப்ஷன் இங்கே திருத்துறைப்பூண்டியில ரெண்டு நாள் கழிச்சி வெச்சிருக்கேன். உங்களுக்கு எது சௌகரியமோ அதுக்கு வாங்க ஐயா”

“பட்டுக்கோட்டைக்கு நான் எங்கே வர்றது? ரெண்டு மூணு பஸ் மாறி வரணும். இப்போல்லாம் பிரயாணம் நமக்கு ஒத்துக்குறதில்லை. வயசாயிடுச்சில்ல…. நான் ரிஸப்ஷனுக்கே வர்றேன்.”

“அவசியம் மாமியையும் கூட்டிகிட்டு வாங்க”

பூபதி விடைபெற்றுச் சென்றான்.

*******

“விசாலம்… குடிக்க கொஞ்சம் ஜலம் கொண்டு வாயேன்…”

“மாப்பிள்ளையும் அவர் ப்ரெண்டும் சேர்ந்து ஏதோ பிஸ்னஸ் பண்ணப்போறதாவும் அதுக்கு பணம் வேணும்னும் கமலா சொல்லியிருந்தாளே ஏதாவது ஏற்பாடு செய்ய முடிஞ்சிதா?”

“எங்கே விசாலம் வீட்டை அடமானம் வெச்ச கடனையே சரியாக் கட்ட முடியலே… வர்ற பென்ஷன் கடனுக்கே சரியாய் போகுது… ஏதோ நீ கொஞ்சம் ஒத்தாசை பண்றதால வண்டி ஓடுது…”

“பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுத்த நாள்லே இருந்து இதுவரைக்கும் மாப்பிள்ளை நம்ம கிட்டே அது வேணும் இது வேணும்னு கேட்டதில்லையே… ஏதாவது செஞ்சாகனும்… கமலா தவிக்கிறா… அவ வேலை பார்க்குற கம்பெனியில் அவங்க முதலாளி இருபதாயிரம் தர்றேன்னு சொல்லியிருக்காராம். மேற்கொண்டு எழுபதாயிரம் வேணுமே…”

“மருந்தீசரை பிரார்த்திக்கிறது தவிர வேற வழியில்லை”

அடுத்த நாள் முதல் வழக்கமாக படிக்கும் தேவாரம் திருவாசகம் தவிர கூடுதலாக பொருளாதார துயரை தீர்க்கும் இடரினும் தளரினும் பதிகத்தை படிக்க ஆரம்பித்தார்.

(பார்க்க : தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!)

“கமலாவையும் இதை டெய்லி படிக்கச் சொல்லு. ஏதாவது ஒரு வழியில ஈஸ்வரன் அனுக்கிரகம் பண்ணுவார்”

அடுத்த சில நாட்களில் எழுபதாயிரம் கிடைத்து விட்டதாக கமலா தகவல் அனுப்பினாள்.

கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் மாதிரிமங்கலத்தில் விற்க முடியாமல் இருந்த அவர்கள் நிலம் ஒன்றை நல்ல விலைக்கு ஒருவர் வாங்கிக்கொண்டதாகவும் தேவையை விட சற்று கூடுதலாகவே பணம் கிடைத்தது என்றும் தகவல் அனுப்பியிருந்தாள் கமலா.

“மருந்தீசா உன் கருணையே கருணை” கண்ணீர் மல்க திருத்துறைப்பூண்டி இறைவனை தொழுதார் சாஸ்திரிகள்.

*******

ஒரு மாதம் கழிந்தது.

“விசாலம் இன்னைக்கு சாயந்திரம் பூபதியோட ரிசப்ஷனுக்கு போகணும். மெனக்கெட்டு பத்திரிக்கை கொடுத்திருக்கான். எனக்கு சமைக்க வேண்டாம். நான் அங்கே போய் சாப்பிட்டு வந்துடுறேன்.”

“ராத்திரிக்கு என்ன பண்றதுன்னு நானே கேட்க நினைச்சேன். கமலா வந்தப்போ கொடுத்துட்டு போன நொய் ரெண்டு படி இருக்கு. அரிசி உப்புமா தான் பண்ணனும். நீங்களாவது போய் சாப்பிட்டுட்டு ஆசீர்வாதம் பண்ணிட்டு வாங்க”

“கிஃப்டா என்ன கொடுக்குறதுன்னு தெரியலியே… நிச்சயம் பணமெல்லாம் வெச்சு கொடுக்க முடியாது…”

“நீங்க பத்திரிகை கொண்டு வந்து வீட்ல வெச்சப்பவே நான் தேதியை பார்த்துட்டு ஒரு கிஃப்ட் ரெடி செஞ்சி வெச்சிருக்கேன்….” என்று சொல்லிய விசாலம் உள்ளே சென்று ஒரு மந்தார இலைகளை கத்திரித்து செய்த ஒரு அழகான பிள்ளையார் படத்தை கொண்டு வந்துகொடுத்தாள்.

“ரொம்ப நல்லாயிருக்கே”

“ஒன்னும் பெரிசா செலவாகலை. ஃபிரேம் பண்ணத் தான் எண்பது ரூபாய் ஆயிடுச்சு….”

“வெறுங்கையை வீசிட்டு போறதுக்கு இது பரவாயில்லையே”

அதை ஒரு நியூஸ் பேப்பரால் சுற்றி அழகாக பேக் செய்து இஸ்திரி செய்த சட்டை சற்று பழுப்பேறிய வேட்டி அணிந்து கொண்டு, நெற்றி நிறைய திருநீறு நடுவே குங்குமப் போட்டு கையில் தனது ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு மாலை ரிஷப்ஷனுக்கு புறப்பட்டார் வைத்தியநாத சாஸ்திரிகள்.

பேருந்து நிலையம் எதிரே அலங்கார் பேலஸ் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Mr. & Mrs. Brindha Srinivasan Family welcomes you

S.Boopathy M.B.A., weds M.Roobini B.Tech.,

தெர்மாக்கோல் அலங்காரங்கள் வரவேற்றன.

சாலையில் மண்டபத்தின் நுழைவாயிலில் இருந்து பிரதான நுழைவாயில் வரை சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.

செருப்பை கழற்றி டேபிளில் வைக்கப்பட்டியர்ந்த சந்தனத்தை எடுத்து பூசிக்கொண்டு குங்குமம் வைத்துக்கொண்டு மெல்ல ஹாலை நோக்கி நடந்தார்.

பூபதியின் தம்பி ஓடிவந்து வரவேற்றான். “வாங்க ஐயா… வாங்க ஐயா… நீங்க வருவீங்கன்னு அண்ணண் சொன்னான்…”

==========================================================

இவை ஒவ்வொன்றும் மிக முக்கிய பதிவுகள்… 

நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!

உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா…!

நல்லோர் தரிசனம் பாப விமோசனம்!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!

அரங்கனை நம்புகிறவர்களுக்கு அற்புதங்களுக்கு குறைவேது?

“முதுகுல குத்திட்டாங்க சாமி…!” அழுத மெய்யன்பர். வாரியார் சொன்னது என்ன?

==========================================================

அப்பா அம்மாவை அழைத்து “இவர் தான் அண்ணனோட தமிழ் வாத்தியார். இங்கே  திருத்துறைப்பூண்டியில தான் இருக்கார்.”

“வாங்க ஐயா… ரொம்ப சந்தோசம்… இருந்து சாப்பிட்டுட்டு போகலாம்…”

அவர்கள் அடுத்தடுத்து வந்த விருந்தினர்களை வரவேற்றபடி இருந்தனர்.

அண்ணனிடம் சாஸ்திரிகளை அவரது கையை பற்றிக்கொண்டு மெல்ல அழைத்துச் சென்றான்.

ஹாலில் நான்கைந்து இடங்களில் டி.வி.க்கள் இருந்தன.

யாரும் கேட்கிறார்களோ இல்லையோ லைட் மியூசிக் போய்க்கொண்டிருந்தது.

“கொஞ்ச நாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக் கொடி இங்க வருவா
கண்ணிரெண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவைத் தோற்கடிப்பா…”

ஆர்கெஸ்ட்ரா பாடகர் பாடிக்கொண்டிருந்தார்.

ரிஷப்ஷன் மேடையில் பூபதி கோட் சூட் அணிந்து நின்றுகொண்டிருக்க மணமகள் மாடர்ன் சேலையில் ஜொலித்தாள்.

மேடையை சுற்றிலும் மணமக்களின் உறவினர்கள் இளைஞர்கள் என அரட்டையடித்துக்கொண்டு ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர்.

பூபதியின் தம்பியை யாரோ அதற்குள் வந்து கூப்பிட “கொஞ்சம் அந்த சேர்ல  உட்காருங்க… இதோ வந்துடுறேன் ஐயா…” என்று கூறிவிட்டு சென்றான்.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

வைத்தியநாதய்யருக்கு பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்தது.

நாமளே பேசாம பூபதியை பார்த்து கிப்டை கொடுத்துட்டு கிளம்பலாம் என்று க்யூ வரிசையில் மெல்ல போய் சேர்ந்துகொண்டார்.

அவருக்கு முன்னே சுமார் முப்பது பேர் நின்றுகொண்டிருந்தார்கள். வயோதிகத்தை காரணம் காட்டி க்யூவை ஜம்ப் செய்ய அவர் விரும்பவில்லை.

க்யூ மெல்ல மெல்ல நகர்ந்து சாஸ்திரிகளின் முறை வருவதற்குள் அரைமணிநேரம் ஓடிவிட்டிருந்தது.

சாஸ்திரிகளை பார்த்த பூபதி அவரை வணங்கி வரவேற்றான்… “வாங்க ஐயா வாங்க…”

தனது துணைவியிடம் அறிமுகப்படுத்தினான். “நான் சொன்னேன்ல திருவாரூர்ல என்னோட தமிழ் வாத்தியார் இவர் தான்….”

அவரின் கால்களில் தம்பதிகள் விழ, இருவரையும் ஏதோ ஸ்லோகம் சொல்லி வாழ்த்திவிட்டு கொண்டு வந்த கிஃப்ட்டையும் கொடுத்துவிட்டு கிளம்பினார் வைத்தியநாத சாஸ்திரிகள்.

“ஐயா அவசியம் சாப்பிட்டுட்டு போங்க…” என்று கூறிவிட்டு எதிரே நின்று அரட்டையடித்துக்கொண்டிருந்த தனது நண்பன் ஒருவனை அழைத்து “ஐயாவை டைனிங் ஹால் கூட்டிகிட்டு போ…” சொல்லிவிட்டு அடுத்தடுத்து ஆட்கள் வந்தபடி இருக்க பூபதி அவர்களை வரவேற்பதில் பிஸியானான்.

பூபதியின் நண்பன் அவரை அழைத்துக்கொண்டு கீழ்த்தளத்தில் இருந்த டைனிங் ஹாலுக்கு சென்றான்.

அலைபேசி ஒலித்தது. “டேய்… எங்கே இருக்கே? இங்கே நம்ம பேட்ச் எல்லாரும் வந்துட்டாங்க…”

“இங்கே ஒருத்தரை கூட்டிகிட்டு டைனிங் ஹால் வந்திருக்கேண்டா”

“முக்கியமான விஷயம் மச்சி… உடனே வா…”

“இதோ வர்றேன்”

சுற்றும் முற்றும் பார்த்தவன் அங்கே யூனிபார்ம் போட்டுக்கொண்டு சர்வீஸ் செய்து கொண்டிருந்த நபர் ஒருவரிடம் “இவரை நல்ல இடமா பார்த்து உட்கார வைங்க….” என்று சொல்லிவிட்டு வைத்தியநாத ஐயரை நோக்கி திரும்பியவன், “ஐயா எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கு. இருந்து சாப்பிட்டுட்டு போங்க” என்று சொல்லிவிட்டு அவர் ஒப்புதலைக் கூட எதிர்பார்க்காமல் வேகமாக அங்கிருந்து அகன்றான்.

அந்த ஹாலில் எட்டுக்கும் மேற்பட்ட வரிசைகள் பரப்பராக பந்தி போய்க்கொண்டிருந்தது.

“ஐயா பெரியவரே… பந்தி போய்கிட்டுருக்கு… முடியட்டும். அடுத்த பேட்ச்ல உட்கார வைக்கிறேன்….”

எப்படியும் ஒரு பதினைந்து இருப்பது நிமிடமாவது ஆகும் என்று தெரிந்தது.

அவரை இடித்துக்கொண்டே பலர் வருவதும் போவதுமாக இருந்தனர். யாராவது வாக்கிங் ஸ்டிக்கில் இடறி விழுந்துவிட்டால் என்ன ஆவது என்று சர்வீஸ் நபர் கண்ணில் படுகிறார் போல ஹாலின் ஓரமாக நின்றுகொண்டார்.

சுமார் பதினைந்து நிமிடங்கள் ஓடியது.

பந்தி நடந்துகொண்டிருக்கும்போதே சிலர் சாப்பிடுபவர்கள் பின்னே போய் நின்றுக்கொண்டனர். சிலர் பந்தி முடியட்டும் ஒரே பாய்ச்சலாக சென்று இடம் பிடித்துவிடலாம் என்று காத்திருந்தனர்.

கடைசி வரிசையில் சிலரைத் தவிர பெரும்பாலானோர் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்துவிட, பல இலைகளில் மைசூர் பாகு, போண்டா, பாயசம் என பல ஐட்டங்கள் சீந்தப்படாமல் இருந்தன. பலர் அரைகுறையாக சாப்பிட்டிருந்தனர். முப்பதுக்கும் மேற்பட்ட ஐட்டங்கள் வைக்கப்பட்ட இலைகளில் பெரும்பாலானோர் பாதிக்கும் மேல் தொடவில்லை.

இந்நிலையில் பந்தி முடிந்து டேபிள் சுத்தம் செய்யப்படுவதற்கு முன்னரே, காத்திருந்த அனைவரும் விடுவிடுவென அவர்களுக்குரிய இடத்தை பிடித்து உட்கார்ந்துகொண்டனர்.

“மாமா நீங்க இங்கே வாங்க…”

“டேய் இங்கே வந்து உட்காருடா”

“அங்கே என்ன பண்றே எருமை… வந்து சீக்கிரம் உட்காரு… அக்காவுக்கு இடம் பிடி”

இப்படி பலவித குரல்கள்.

ஓரிரு நிமிடங்களில் பெரும்பாலான இருக்கைகள் நிரம்பிவிட, வைத்தியநாத சாஸ்திரிகள் எதுவுமே புரியாமல் தெரியாமல் ஓரமாக நின்றுகொண்டிருந்தார்.

பந்தியில் இலை போடப்பட்டு ஒவ்வொரு ஐட்டமாக வைக்க ஆரம்பித்தார்கள்.

வைத்தியநாத ஐயர் நின்றுகொண்டிருந்த பக்கம் வந்த கேட்டரிங் நபருக்கு அப்போது தான் அவரை பந்தியில் உட்காரவைக்கவேண்டும் என்றே நினைவுக்கு வந்தது.

சுதாரித்துக்கொண்டவர், “வாங்க பெரியவரே…” என்று அவர் கையைப் பற்றி பந்திக்கு அழைத்துச் சென்றார். அனைத்து பந்திகளும் நிரம்பிவிட கடைசி வரிசையில் மட்டும் சிலர் இன்னும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கு முன்வரிசையில் அப்போது தான் பந்தியில் அமர்ந்த ஒரு பெண்மணி, “குழந்தை அப்பளத்தை கீழே போட்டுடுச்சு ஒரு அப்பளம் கொண்டு வாங்க” என்று கூற, அங்கு முறுக்கு மீசையுடன் நின்றுகொண்டிருந்த ஒருவர் இங்கே சாஸ்த்திரிகளுடன் வந்துகொண்டிருந்த நபரைப் பார்த்து “ஒரு அப்பளம் கொண்டு வாங்க சீக்கிரம்” என்று கூற, “பெரியவரே அங்கே… பார்த்து உட்கார்ந்துக்கோங்க” என்று கூறிவிட்டு சமையற்கட்டுக்கு அப்பளம் கொண்டு வர போய்விட்டார்.

வைத்தியநாத ஐயர் மெல்ல நடந்து வந்து அமர முற்படுகையில், அவரை தள்ளிவிட்டு வரிசைக்குள் புகுந்தது ஒரு குடும்பம். அங்கிருந்த இருக்கைகளை மின்னல் வேகத்தில் ஆக்கிரமித்தது.

“நீ இங்கே உட்காரு… அப்பாவை அங்க உட்கார சொல்லு… அம்மாவை கூப்பிடு…. என்னங்க சீக்கிரம் வாங்க” காட்டுக் கூச்சல்.

அடுத்தடுத்து உள்ளே வந்தவர்கள் வைத்தியநாத சாஸ்திரிகளை மோதிவிட்டு செல்ல, வாக்கிங் ஸ்டிக் இடறி அடுத்த நொடி சாஸ்திரிகள் “மருந்தீசா….” என அலறியபடி கீழே விழுந்தார்.

அவர் அணிந்திருந்த கண்ணாடி ஒரு ஓரமாக போய்விழுந்தது.

சாப்பிட்டுவிட்டு கையை அலம்ப சென்று கொண்டிருந்தவர்கள் சிலர் ஓடிவந்து அவரை தூக்கி ஆசுவாசப்படுத்த “நேக்கு ஒன்னுமில்லை… யாரும் பதறவேண்டாம்.. சித்த நாழி உட்கார்ந்தா சரியாயிடும்…” என்றார்.

ஒரு சேரில் உட்காரவைத்துவிட்டு குடிக்க தண்ணீர் கொடுத்தனர். ஒருவர் கண்ணாடி கொண்டு வந்து  கொடுத்தார். விழுந்த அதிர்ச்சியில் விரிசல் விட்டிருந்தது.

அவரை இடித்து தள்ளிவிட்டு பந்தியை ஆக்கிரமித்த குடும்பம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. எழுந்து பார்த்தனர். ஒன்னும் ஆகலை என்று மறுபடியும் அமர்ந்துகொண்டனர்.

சாஸ்திரிகளுக்கு மண்டை ஓரம் வலிக்க ஆரம்பித்தது.

உடனே வீட்டுக்கு போகவேண்டும் என்று தோன்றியது. நாம் இங்கே ஏதாவது சொன்னால் கல்யாண வீட்டில் தேவையில்லாத பரபரப்பு ஏற்படும். நம்மால் யாருக்கும் எந்த சங்கடமும் வேண்டாம் எனக் கருதி எழுந்த சாஸ்திரிகள் அங்கே சென்றுகொண்டிருந்த ஒரு பதினைந்து வயதுடைய சிறுவனை கூப்பிட்டார்.

“தம்பி சித்த வாப்பா… ஒரு ஒத்தாசை பண்றியா”

“சொல்லுங்க தாத்தா”

“உடம்பு முடியலே. டவுன் ஹால் அக்ரஹாரத்துல இருக்குற வீட்டுக்கு போகணும். ஒரு ஆட்டோவை வரச்சொல்றியா?”

“சரிங்க தாத்தா”

ஓடிச் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்…

“ஆட்டோ வந்துடுச்சு தாத்தா…”

“என்னை கூட்டிகிட்டு போய் ஏத்திவிடுறியா”

“சரி வாங்கி தாத்தா” என்று கூறி அவரை பற்றிக்கொண்டு மெல்ல வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

“நல்லாருப்பேடா கண்ணா”

மேலே வருகையில் ரிசப்ஷன் நடைபெறும் ஹாலை பார்த்தார்.

தூரத்து உருவங்கள் சற்று மங்கலாக தெரிந்தன.

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

ஆர்கெஸ்டராவில் பாடல் போய்க்கொண்டிருந்தது.

வீட்டுக்கு சென்று ஆட்டோவில் இறங்கியவரை பார்த்து திகைத்தார் விசாலாட்சி.

==========================================================

ண்மையில் நமது வேதாரண்யம் பயணத்தின்போது கேள்விப்பட்ட சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, பெயர்களையும் ஊர்களையும் மாற்றி இந்த கதையை தந்திருக்கிறோம்.

வாசகர்கள் அவசியம் இவற்றிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறைய உண்டு.

திருமண வீடுகளில் இன்று ஆடம்பரம் மேலோங்கியிருக்கிறது. சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அர்த்தங்கள் போய்விட்டன. (இப்போதெல்லாம் திருமணங்களில் பந்தியில் யாரும் அமரும் முன்பே இலையை போட்டு உணவு பதார்த்தங்களை வைத்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறு. படையல் தான் இப்படி போடுவார்கள். பந்தி அல்ல!)

எந்த ஒரு திருமணத்திலும் சில குறைகள் ஏற்படுவது இயல்பு. அதை சரி செய்யவே திருமணத்தில் போஜனம் செய்விக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். ஒரு திருமணத்தில் எங்கு குறை ஏற்பட்டாலும் அதை போஜனத்தில் சரி செய்துவிடலாம். ஆனால் போஜனத்திலேயே (உபசரிப்பில்) குறை என்றால் அதை எங்குமே சரி செய்ய முடியாது.

பந்தியில் எத்தனை பதார்த்தத்தங்கள் வைக்கப்படுகிறது என்பது முக்கியமில்லை. வந்தவர்களை அனைவரும் நன்கு உபசரிக்கப்பட்டனரா? எத்தனை பேர் பந்தியை பார்த்துக்கொண்டனர் என்பதெல்லாம் தான் மிக மிக முக்கியம்.

ஒரு காலத்தில் உறவுகள் இருந்து கவனித்த பந்தி இன்று கேட்டரிங் பணியாளர்களிடம் விடப்படுகிறது. அவர்கள் பணி பரிமாறுவது மட்டுமே. பரிமாறுவது வேறு உபசரிப்பது வேறு. உபசரிப்பை மணமக்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே செய்யமுடியும்.

மணமேடையிலும் ஹாலிலும் அர்த்தமின்றி சுற்றிக்கொண்டிருக்கும் அரட்டையடித்துக்கொண்டிருக்கும் மணமக்களின் நண்பர்கள் உறவினர்கள் ஒரு மூன்று நான்கு பேராவது டைனிங் ஹாலுக்கு வந்து பந்தியில் சாப்பிடுபவர்களை கவனிப்பது மிகவும் முக்கியம். இதை பலர் செய்வதில்லை.

இது பற்றி நாம் ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கிறோம். (Please check : நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!) மீண்டும் ஒரு விரிவான பதிவளிக்கிறோம்.

நம்மால் இந்த ஊரையோ உலகையோ மாற்றமுடியாது. குறைந்த பட்சம் இதை படிக்கும் சில நூறு பேரையாவது மாற்ற முடியும். அது போதும்.

==========================================================

உங்களுக்காக உங்களை நம்பி ஒரு தளம்…!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

 

Also check… 

“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்!

நாளும் கிழமையும் நன்றாய் செல்ல மருந்தொன்று இருக்குதப்பா…!

நம்பிக்கை!

ஒரு துரோகத்தின் முன்னால்…

‘பிரசாத புத்தி’ யாருக்கெல்லாம் இருக்கு?

========================================================

[END]

4 thoughts on “வைத்தியநாத சாஸ்திரிகளும் ஒரு கல்யாண ரிசப்ஷனும்!

  1. என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது இதை படிக்கும்போது . இது அனைவர்க்கும் ஒரு பாடம் சுந்தர் சார் .

  2. இந்த பதிவு மிகவும் அருமை . இதில் யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை , ஆனாலும் மாப்பிள்ளை யின் நண்பர் இவரை பந்தியில் உட்கார்த்தி விட்டு போயிருக்கலாம் என்ற ஆதங்கம் ஏற்படுகிறது . மருந்தீஸர் அவரை அழைக்கும் நாளில் யாரையும் குறை சொல்ல முடியவில்லை , ,அருமை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *