‘நல்லோர் தரிசனம் பாப விமோசனம்’ என்று சொல்வார்கள். அக்காலத்தில் அடியார்களின் சத்சங்கத்திற்கும் தரிசனத்திற்கும் அரசர்கள் ஏங்கித் தவித்தனர். சிவனடியார்கள் மனம் குளிர்ந்தாலே போதும் சிவனின் அருளை வெகு சுலபமாக பெற்றுவிடலாம் என்று கருதினார்கள். எனவே அடியார்களை வரவேற்று உபசரிக்க பல பிரயத்தனங்களை செய்தனர்.
சிவதரிசனம் பாக்கியம் என்றால் அவன் அடியார்கள் தரிசனம் அதனினும் பெரிய பாக்கியம். சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தது தன்னை பாடிய நூல்களுக்கு கூட இல்லை. தனது அடியார்களை பாடிய ‘திருத்ததொண்டைத் தொகை’ மற்றும் ‘பெரிய புராணம்’ இரண்டு நூல்களுக்கு தான்.
ஈசனிடம் செய்யும் அபச்சாரத்தை அவன் அடியார்களிடம் போக்கிக் கொள்ளலாம். ஆனால் அவன் அடியார்களுக்கு செய்யும் அபச்சாரத்தை எங்குமே போக்கிக்கொள்ள முடியாது. இதிலிருந்தே அடியார்களின் மேன்மை விளங்கும்.
“தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே
அடியர்தம் பெருமை அளக்கவும் பெரிதே.”
தமிழ்த் தாத்தா என்கிற கடலில் இருந்து கண்டெடுத்த மற்றொரு முத்து இதோ உங்களுக்காக…
==========================================================
வேலூர், வேதாரண்யம் & தஞ்சை பயணம்!
செந்தமிழரசு திரு.கி.சிவக்குமார் அவர்களின் ‘ஞானத்திரள்’ – 7 ஆம் ஆண்டு விழா நாளை (26/01/2017) வேலூரில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வி.டி.எம். மஹாலில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்க நாளை (வியாழன்) அதிகாலை ஈசனருளால் வேலூருக்கு புறப்படுகிறோம். (சென்ற ஆண்டு இவ்விழா திருவாரூரில் நடைபெற்றதும் நாம் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது). விழாவில் முழு நாள் இருந்துவிட்டு பின்னர் அங்கிருந்து வேதாரண்யம் பயணம். வேதாரண்யேஸ்வரரை தரிசித்துவிட்டு பின்னர் நடுக்காவிரி பயணம். இடையே வாய்ப்பிருந்தால் வேறு சில தலங்களை தரிசிக்க திட்டம்.
‘காவிரிக்கரை பிரசன்ன கணபதி’ கோவில் திருப்பணிக்காக இதுவரை சேர்ந்த தொகையை மூவரையும் வைத்து (கணு மாமா, தண்டபாணி குருக்கள், பொறியாளர் அறிவழகன்) வழங்கவிருக்கிறோம். இந்த திருப்பணிக்கு இம்மாதம் நிதி கொடுக்கமுடியாத வாசகர்கள் அடுத்த மாதம் தரலாம். கவலை வேண்டாம். தளத்திற்கு தொடர்ந்து மாதாமாதம் உதவி வரும் வாசகர்கள் நம்மால் அளிக்க இயலவில்லையே என வருந்த வேண்டாம். உங்கள் சார்பாக நாம் அளிக்கப்போகும் தொகையே இந்த கைங்கரியத்தில் பிள்ளையார் சுழியாக கொடுக்கப்படும் தொகை. * இந்த திருப்பணி கைங்கர்யம் தொடர்பாக வாசகர்களுக்கு சில விஷயங்களை நாம் பயணம் முடித்துவிட்டு வந்து தெளிவுபடுத்துகிறோம். நாம் எதைச் செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கும் தொலைநோக்கு பார்வையும் இருக்கும்.
திருவருளும் குருவருளும் உடனிருந்து பயணத்தை நல்ல முறையில் நடத்தி தரவேண்டும்.
ஓம் நமச்சிவாய!
- ரைட்மந்த்ரா சுந்தர் | M : 9840169215 | E : editor@rightmantra.com
காத்திருக்கிறார் காவிரிக்கரை கணபதி!
==========================================================
சிவபெருமானின் பிறை முழுமதியானது!
by டாக்டர் உ.வே.சா | ‘நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்’
பாண்டிநாட்டில் சூரைமா நகரமென்னும் சிவஸ்தலத்தில் ஒரு சிற்றரசன் வாழ்ந்து வந்தான். அவன் சிவபெருமானிடத்தில் இடையறாத அன்பும், தமிழ்ப்பயிற்சியும், புலவர்களிடத்துப் பெருவிருப்பமும் உடையவன். இனிய கவிகளை இயற்றும் ஆற்றல் பெற்றவன். தமிழ்ப் புலவர்கள் இருக்கும் இடந்தேடிச் சென்று போற்றி அளவளாவிவரும் இயல்பினன்.
(*இந்நகரம் சூரைக்குடியென வழங்கும். இவ்வரசன் பெயர் விசயாலயனென்று சூரைமாநகர்ப் புராணம் கூறும்.)
ஒரு சமயம் தமிழ்நாட்டிலிருந்த சில புலவர்கள் சேர்ந்து சிவஸ்தல யாத்திரை செய்துகொண்டு வந்தனர். அங்கங்கே உள்ளவர்கள் அவர்களை வரவேற்று உபசரித்து அவர்களுக்கு ஆவனபுரிந்து வந்தார்கள். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்றபடி அவர்கள் சென்ற இடங்களெல்லாம் அவர்களுடைய சொந்த ஊரைப் போன்றிருந்தன; அவர்களோடு பழகியவர்கள் யாவரும் உறவினரைப் போலவே பேரன்பு வைத்து ஆதரித்தார்கள். தமிழ்ப்புலமையோடு கற்றதனாலாய பயனாகிய தெய்வ பக்தியும் அவர்கள்பால் சிறந்திருந்தமையின் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் அவர்களிடம் பெருமதிப்பு உண்டாயிற்று.
சிவஸ்தலங்களுக்குச் செல்வதும், அந்த அந்த ஸ்தலவிசேஷங்களைக் கேட்டு ஆராய்ந்து அறிவதும், சிவதரிசனம் செய்து மனமொழி மெய்களால் வணங்கி இன்புறுவதும், அங்கங்கேயுள்ள பிரபுக்களிடத்தும் வித்துவான்களிடத்தும் பழகுவதும் ஆகிய செயல்கள் அப்புலவர்களுடைய யாத்திரையின் பயனாக இருந்தன. ஆதலின் அவர்கள் மிக்க உவப்போடு யாத்திரைசெய்து வந்தார்கள்.
இங்ஙனம் வருபவர்கள் பாண்டிநாட்டிலுள்ளதும் தேவாரம் பெற்றதுமாகிய திருப்புத்தூர் என்னும் திருப்பதியை அடைந்தார்கள். அங்கே எழுந்தருளியுள்ள சிவபெருமான் திருநாமம் திருத்தளிநாதர். அத்தலத்திலே சிவபெருமான் ஒரு சமயத்தில் நடனம் புரிந்தருளினரென்பது புராண வரலாறு. அது சூரைமா நகருக்கு அருகில் உள்ளது.
புலவர்கள் சிவதரிசனத்தின் பொருட்டு ஸ்தலயாத்திரை செய்து வருவதைச் சூரைமாநகரில் இருந்த அரசன் அறிந்தான். அவர்களைக் கண்டு பேசி மகிழ வேண்டுமென்ற ஆவல் அவனுக்கு உண்டாயிற்று. அவர்கள் திருப்புத்தூருக்கு வந்திருப்பதையறிந்து எங்ஙனமேனும் அவர்களை அழைத்து உபசரிக்கவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. சிவஸ்தல யாத்திரையாக வந்தவர்கள் தன்னைப் பார்ப்பதொன்றையே கருதி வாராரென்பதை அவன் உணர்ந்தான். சூரைமா நகரும் ஒரு பழைய சிவஸ்தலம். ஆனால் தேவாரம் பெற்ற ஸ்தலமன்று. ஆதலின் அவர்கள் சிவதரிசனம் செய்யும் பொருட்டு வரக்கூடுமென்று முதலில் எண்ணினான். பிறகு, ஒருகால் தேவாரம் பெற்ற சிவஸ்தலங்களுக்கே செல்லும் நோக்கம் உடையவர்களாக இருப்பின் என் செய்வதென்று ஐயம் அவனுக்கு உண்டாயிற்று. அப்படியாயின் அவர்கள் சூரைமாநகருக்கு வரமாட்டார்களே, என்ன செய்யலாம் என்று யோசித்தான். அவனுக்கு வழியொன்றும் தோன்றவில்லை.
பிறகு தான் தமிழில் விருப்பமுடையவனென்பதை ஒருவகையாகப் புலப்படுத்தினால் அவர்கள் வரக்கூடுமென்று நினைத்தான். ஆதலின் திருப்புத்தூர்ச் சிவபெருமான் நடனம் செய்த வரலாற்றைப் பற்றி ஒரு வெண்பாவை இயற்றி அதனைத் தன் அமைச்சருள் ஒருவனிடம் கொடுத்து, “திருப்புத்தூருக்குச் சென்று அங்கே வந்துள்ள புலவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் சொல்வதைக் கேட்டு வருக” என்று விடுத்தான்.
அமைச்சன் அங்ஙனமே சென்று புலவர்களைக் கண்டு வணங்கி அரசன் கொடுத்த கவியை அவர்களிடம் அளித்தான். அளித்து, “இந்தச் செய்யுள் எங்கள் அரசர் இயற்றியது. உங்களைக் கண்டு அளவளாவ வேண்டுமென்ற பெருவிருப்பத்தோடு அவர் இருக்கிறார். எங்கள் நகரம் அருகில் இருக்கிறது. அதுவும் ஒரு பழைய சிவஸ்தலம்” என்றான்.
அவன் அளித்த செய்யுள் வருமாறு:-
“பிறந்த பிறப்பாற் பெறும்பேறு பெற்றேம்
மறந்து மினிப்பிறக்க வாரேம் – சிறந்தமதி
சேர்த்தானைப் புத்தூர்த் திருத்தளியா னைப்புவனம்
காத்தானைக் கூத்தாடக் கண்டு.”
இதன் பொருள்: சிறந்த மதியை(த் தன் திருச்சடையிலே அணிந்தவனை, திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஇதளீசுவரனை, உலகத்தைப் பாதுகாப்பவனைத் திருநடனம் இயற்றியருளிய காலத்தில் தரிசித்து, யாம் பிறந்த இம் மனிதப் பிறவியாற் பெறும் பயனை அடைந்தோம்; இனி மறந்தும் பிறப்பை அடையோம்.
புலவர்கள் செய்யுளைப் பார்த்தார்கள்; “இந்தப் பாட்டில் சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்துள்ளன. ஆயினும் ஒரு குற்றம் இருக்கிறது: இறைவன் திருச்சடையிலுள்ள பிறையைச் சிறந்த மதியென்று சொன்னது சரியன்று. சிறந்தமதியென்பது முழுமதியைக் குறிக்கும். இறைவன் அணிந்திருப்பது முழு மதியன்று; பிறையே” என்று சொன்னார்கள்.
அவர்கள் கூற்றைக் கேட்ட அமைச்சன் துயருற்றவனாகித் தன் அரசன்பால் ஏகிப் புலவர்கள் கூறியதை உரைத்தான். அமைச்சன் எதிர்பார்த்தபடி அரசன் துயரப்படவில்லை. அதற்கு மாறாக அவனது முகத்தில் மகிழ்ச்சிக் குறிப்பும் மலர்ச்சியும் உண்டாயின. ‘நம்முடைய அறிவின் திறனைக் காட்டுவதற்கு ஏற்ற சமயம் வாய்த்தது’ என்று அவன் உள்ளுக்குள்ளே மகிழ்ந்தான்.
உடனே அரசன் மந்திரியை நோக்கி, “நீ மீண்டும் திருப்புத்தூருக்கு இன்று மாலயிற் செல்வாயாக. சென்று தமிழ்ப் புலவர்கள் சிவ தரிசனம் செய்யச் செல்லும் காலத்தை அறிந்து அவர்களுக்கு முன் செல்லுக. அப்பொழுது அவர்களுக்கு முன் தீபத்தைக் கைக்கொண்டு வழிகாட்டிச் செல்லும் வேலையாள் கோயிலுக்கு வந்தவுடன் அத் தீபத்தைக் கீழே வைப்பான். அதனை உடனே நீ எடுத்துக் கொள்ளி வட்டத்தைப் போலச் சுழற்றிவிட்டுக் கீழே வைத்து அவர்கள் சொல்வதை அறிந்து இங்கே வா” என்று கூறி விடுத்தான்.
அமைச்சன் திருப்புத்தூர் சென்றான். மாலை நேரத்தில் புலவர்கள் தரிசனம் செய்யப் போகும் சமயமறிந்து உடன் போனான். அரசன் கூறியபடியே அவர்களுக்கு முன் தீவட்டியை எடுத்துக் கொண்டு ஒரு வேலையாள் வழி காட்டி ஏகினான்; ஆலயம் வந்தவுடன் அவன் தீவட்டியைக் கீழே வைத்தான். உடனே அமைச்சன் தன் அரசனது கட்டளையின்படி அதனை எடுத்துச் சுழற்றிவிட்டுக் கீழே வைத்து நின்றான்.
அங்கே இருந்த பிறர் யாவரும் அமைச்சனுடைய செயலைக் கண்டு வியந்தார்கள்; அமைச்சனை அறிந்த சிலர், “இங்கே வந்து இப்படி இவர் செய்வதற்கு யாது காரணம்? இவருக்கு ஏதாவது சித்தப்பிரமை உன்டாகி விட்டதோ!” என்று இரங்கினர்.
அந்த நிலையிற் புலவர்கள் அமைச்சன் செயலைப் பார்த்தனர். நுண்ணறிவாளர்களாகிய அவர்களுக்குச் சூரைமாநகர் அரசனது தந்திரம் புலப்பட்டது. அவர்களுக்கு அளவில்லாத வியப்பு உண்டாயிற்று: “ஆ! ஆ! என்ன நுண்ணறிவு! இறைவன் சுழன்று நடனம் புரிகையில் அந்த வேகத்தினால் அவன் சடாபாரத்திலுள்ள பிறையானது வட்டமாகிய முழுமதியாகத் தோற்றுமென்ற பொருளை, இந்தத் தீவட்டியைச் சுழற்றி வட்டமாகத் தோன்றும்படி செய்து புலப்படுத்தின இவ்வமைச்சன் செயலை வியப்பேமா! நாம் கூறிய குறையை இக்குறிப்புச் செயலால் நீக்குவித்த அரசரின் நுண்மதியை வியப்பேமா! இத்தகைய அரசர் பெருமானை முன்பே நாம் பாராதது பெரும் பிழை” என்று கூறித் தம்முள் மகிழ்ந்தார்கள். அப்பால் அமைச்சனை நோக்கி
“கற்றவர்கள் புகழ்விசயா லயத்தேவன் பாடிவிடு கவியுள் யாதும்
குற்றமிலை குற்றமிலை குற்றமிலை கருத்துணராக் கூற்று குற்றப்
பெற்றிநினை யற்கநினை யற்கநினை யற்கவெனப் பேசு நீபோய்
மற்றவனைக் காணும்விருப் புடையம்நாம் என்பதுவும் வகுத்தி” என்றார்கள்.
இப்பாடலின் பொருள்: கற்ற புலவர்கள் புகழ்கின்ற விசயாலயர் பாடி விடுத்த கவியிலே சிறிதேனும் குற்றமில்லை; இது முக்காலும் உண்மை. நாங்கள் முன்பு கூறிய கூற்று உண்மைக் கருத்தை உணராத குறையினாலெழுந்தது; அங்ஙனம் கூறிய எம் குற்றத்தை நினைக்கவேண்டாம், நினைக்கவேண்டாம், நினைக்கவேண்டாமென்று நீ போய் அவரிடம் சொல்க. அன்றியும் நாங்கள் அவரைக் காணும் விருப்பம் உடையோமென்பதையும் கூறுக.
அமைச்சன் மகிழ்ச்சி தாங்காமல் விரைந்து போய்ப் புலவர் கூறியவற்றை அரசனிடம் தெரிவித்தான். அரசன் பள்ளங்கண்ட நீரைப்போலத் தன் பரிவாரங்களுடன் புலவர்களை அழைக்கப் புறப்பட்டான். புலவர்களும் அரசனைக் காணப் புறப்பட்டார்கள். இருசாராரும் இடைவழியிலே சந்தித்து மகிழ்ந்தனர்.
பிறகு அரசன் புலவர்களைச் சூரைமாநகருக்கு அழைத்து வந்து சில காலம் உபசரித்து வைத்திருந்து சல்லாபம் செய்து இன்புற்றான்.
சூரைமாநகர்ப் புராணத்திலுள்ள செய்திகளையும், நான் கேட்டிருந்த சில செய்திகளையும் கொண்டு இவ்வரலாறு எழுதப்பட்டது.
- டாக்டர்.உ.வே.சா | ரைட்மந்த்ரா.காம்
==========================================================
ஒரு தொழில்நுட்ப உதவி தேவை!
நமது அலுவலகத்தில் உள்ள நமது (Desktop PC) கணினிக்கு 8 GB RAM (FSB 1600Mzh) இரண்டு தேவைப்படுகிறது. நண்பர்கள் / வாசகர்கள் யாரேனும் வாங்கித் தந்தால் உதவியாக இருக்கும். தற்போது உள்ள RAM பழுதடைந்துள்ளது. கணினி மிகவும் ஸ்லோகவாக இருக்கிறது. அடிக்கடி ஹேங் ஆகி பணி செய்ய சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்களே பொருளாக வாங்கித் தந்தால் கூட போதும். அல்லது அதற்குரிய நிதியை (Rs.9500/-) அளித்தாலும் சரி. உங்கள் உதவியினாலும் ஒத்துழைப்பினாலும் தான் இந்த தளம் நடத்தப்படுகிறது என்பதை அறிவீர்கள். நன்றி.
==========================================================
Also check :
‘பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்!’
களவு போன உற்சவரை மீட்டெடுத்து வந்த சமயோசிதமும் சிவபக்தியும்!
ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!
கடைசியில் வந்தவன் முதல் பரிசை தட்டிச் சென்ற கதை!
திருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம்! யாருக்கு, ஏன்?
பிரம்படி வாத்தியாரும் படிப்பு ஏறாத பிச்சு ஐயரும்!
வேங்கடசுப்பையர் கனவில் தோன்றிய கிழவனும் கிழவியும் ! MUST READ
‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!
பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?
ஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்!
ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!
கோவிந்த தீட்சிதர் – மன்னராட்சியிலும் மக்களுக்கான ஆட்சியை தந்த மகான்!
========================================================
[END]
மிகவும் அருமை ஜி!
இதை படித்ததும், அந்த அரசன் அப்புலவர்கள் சூரைமாநகருக்கு வருகிறோம் என்று சொன்னவுடன் எப்படி மகிழிந்திருப்பானோ அப்படி மகிழ்வுற்றேன்.
நன்றிகள் பல தங்களுக்கு. தங்கள் திருத்தல யாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அன்பன்,
நாகராஜன் ஏகாம்பரம்
நம் முன்னோர்களின் சிவபக்தி மெய்மறக்கச் செய்கிறது..
புதுப் புது தகவல்களை எங்களுக்காக தேடித் தேடி தருகிறீர்கள்.
உங்கள் பதிவுகள் மூலம் சிவசிந்தனையில் திளைக்கும் பேறு பெற்றோம்.
தாங்கள் ஆற்றும் சிவத்தொண்டு ஈடு இணை இல்லாதது. தங்கள் இறைப்பணி என்றும் ஓங்கி வளர இறைவனை வேண்டுகிறோம்.