ஒரு காலத்தில் சாதாரண அலைபேசிகள் கூட ஆடம்பரமாக கருதப்பட்டன. ஆனால் இன்று ஸ்மார்ட் ஃபோன்கள் எனப்படும் தொடுதிரை அலைபேசிகள் அத்தியாவசியமாகி அனைவரின் கைகளிலும் புழங்குகின்றனது. வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறதோ இல்லையோ அனைவருக்கும் முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் அக்கவுண்ட் இருக்கிறது.
தொலைதொடர்பு நிறுவனங்கள் போட்டியிட்டு சலுகைகளை வாரி வழங்கின. இப்போது ஜியோ சிம் உபயம் அனைவரும் சதாசர்வ காலமும் இணையத்திலேயே மூழ்கியிருக்கின்றனர். இதனால் நடைமுறை வாழ்க்கைக்கு ஏதேனும் பயனுள்ளதா? நம் திறமைகளை வெளிப்படுத்த அவற்றை பயன்படுத்துகிறோமா? நமது தொழில் முன்னேற்றத்துக்கு அதை பயன்படுத்துகிறோமா? அல்லது குறைந்த பட்சம் நல்லவர்கள் நாலு பேருடன் அது நம்மை இணைக்கிறதா என்றெல்லாம் யோசிப்பதில்லை.
பொய்களையும் வதந்திகளையும் புரட்டுக்களை படிக்கவும் சிலசமயம் படிக்காமலே பகிரவும் தான் அவற்றை பலர் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக வாட்ஸ்அப் பயன்பாடு கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 500 மடங்கு அதிகரித்துள்ளது. வாட்ஸ்அப் குழுக்கள் செய்திகள், வீடியோ பகிர்ந்து கொள்ள ஏற்ற தளமாக இருப்பதால் ஒவ்வொரு செல்போன் உபயோகிப்பாளரும் குறைந்தபட்சம் 10 வாட்ஸ்அப் குழுக்களிலாவது உறுப்பினராக உள்ளனர். குடும்ப உறுப்பினர் குழு, நெருங்கிய உறவினர் குழு, பள்ளி நண்பர்கள் குழு, அலுவலக நண்பர்கள் குழு, அலுவலக அதிகாரிகள் குழு, செய்திக் குழு, அரசியல் குழு என எண்ணற்ற வகைகளில் குழு உறுப்பினராக உள்ளனர்.
எனவே இதில் ஏதேனும் ஒரு குழுவில் அவர்கள் பெரும் செய்தியை அதனை படித்து முடிப்பதற்கு முன்னரே தாங்கள் உறுப்பினராக உள்ள அனைத்து குழுக்களிலும் “Copy and Paste” செய்யும் போக்கு தம்மையறியாமலே செய்யத் துவங்கி விடுகின்றனர்.
நவீன தொழில்நுட்ப சாதனைகள் நமது வேலைகளை எளிமைப்படுத்தவும், செய்திகளை விரைவாக பெறுவதை உறுதி செய்யவும் கண்டுபிடிக்கப்பட்டவை. அவற்றை முறையாகவும் திறமையாகவும் பயன்படுத்துவது நமது கையிலேயே உள்ளது.
சமீபத்தில் நமக்கு தெரிந்த ஒரு பெண்மணி, ஒரு மிக மிகத் தவறான கருத்தை நமக்கு வாட்ஸாப்பில் அனுப்பியிருந்தார். இது போன்ற பகிர்வுகள் ஒரு நாள் அவரை தேவையற்ற சட்டச் சிக்கல்களிலும் பிரச்சனைகளிலும் சிக்க வைத்துவிடும். அவர் ஏற்கனவே ஆயிரத்தெட்டு பிரச்சனைகளில் உள்ளார். எனவே இந்த பதிவில் உள்ள விஷயம் தவறு என்று சுட்டிக்காட்ட அவரது அலைபேசிக்கு ஃபோன் செய்தோம்.
“என்னம்மா இப்படி ஒரு விஷயத்தை ஷேர் பண்ணியிருக்கீங்க….” என்று கூறியபோது சொன்னார், தான் வாட்ஸாப்ப்பை பயன்படுத்தியே பல நாட்களாகிறது என்று.
விசாரித்துப் பார்த்ததில் அவருடைய வீட்டுக்கு வந்திருக்கும் அவர் உறவினர் பிள்ளைகள் சிலர் அவருடைய வாட்ஸ்ஆப் கணக்கு உள்ள அலைபேசியை பயன்படுத்தி இருக்கின்றனர் என்று தெரிந்தது. எத்தனை பெரிய அபத்தம் இது? பயன்படுத்தியது அவர்கள். நாளை ஒரு பிரச்னை என்றால் இவர் தான் அதை சந்திக்கவேண்டும். நேரம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது.
ஒரு காலத்தில் பெண்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத சுதந்திரம் இன்று அவர்களுக்கு இருக்கிறது. அதை பயன்படுத்தி தங்களையும் முன்னேற்றிக்கொண்டு தங்கள் குடும்பத்தையும் முன்னேற்றுவதை விடுத்து வாட்ஸாப்பில் ஒழிக முழுக்கங்கள் எழுப்பி வதந்திகளை பரப்புவதற்கு பயன்படுத்துபவர்களை என்ன சொல்ல?
வாட்ஸ்அப் மூலம் சில உபயோகமான செய்திகளை நாம் அறிந்து கொள்ள உதவுகிறது என்றாலும் பல சமயங்களில் இதில் பரப்பப்படும் செய்திகள் சற்றும் அடிப்படை உண்மை இல்லாதவையாகவும், நம்மை குழப்பத்திற்குள்ளாகி பீதியடைய செய்வதாகவும் உள்ளது.
* நாசா அறிவிப்பு –72 மணி நேரம் மழை பெய்யும் – சென்னை மூழ்கும் – தப்பித்தது செல்லுங்கள்
* இந்த செய்தியை ஷேர் செய்தால் எனக்கு 5 பைசா வீதம் பணம் கிடைக்கும். ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்
*முதலைப் பண்ணையிலிருந்து முதலைகள் தப்பித்தன – தரையில் கால்வைக்க வேண்டாம்.
*பள்ளிக் குழந்தைகள் வேன்விபத்து – ரத்தம்தேவை.
*இந்திய ரூபாயின் மதிப்பு = டாலரின்மதிப்பு.
மேற்கூறிய செய்திகள் அபத்தத்தின் உச்சம்.
எத்தனை பகிர்வுகளைத் தான் ஆதாரங்களுடன், ‘இல்லை இது பழசு, இது உண்மையில்லை’ என மறுத்து விளக்க முடியும்…?
கலவர நேரத்தில் பகிரப்படும் இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ஆபத்தானவை… பதற்றத்தை ஏற்படுத்துபவை. முகநூல் வாசிகள் மற்றும் வாட்ஸ் ஆப்பில் உள்ளவர்கள் அதை படித்து விட்டு போய்விடுகிறார்கள்… அதற்கு பதில் போடுகிறார்கள், லைக் போடுகின்றனர். ஆனால், கிராஃப்பிக்ஸ் செய்து பல படங்கள் போடப்படுகின்றனவே… இதை உருவாக்குவது சில பிரிவினைவாத குழுக்களும்…. அரசியல் கட்சிகளும் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
அண்மை பிரச்சனையில் மேற்கூறிய வதந்திகள் மிக முக்கிய பங்கு வகித்தன என்பதால் இது போன்ற வதந்திகளை பரப்புபவர்களை முதலில் கண்டுபிடித்து கைது செய்ய காவல்துறையினர் முடிவு செய்திருக்கின்றனர். “எனக்கு தெரியாது, என் மகன் அனுப்பினான் என் பேரன் கையில் ஃபோன் இருந்தது” போன்ற வாதங்கள் எடுபடாது.
வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படும் செய்திகளுக்கு அதனை நடத்தி வரும் அட்மின் பொறுப்பாவார் என சமீபத்திய பல உயர்நீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன. முகநூல் கேட்கவே வேண்டாம். நேரடியாக வந்து உங்களை கொத்தாக அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். தவறான ஒரு செய்தியை பதிவிடுவதன் மூலமும் அதனை பார்வேடு செய்வதும் “THE INFORMATION TECHNOLOGY ACT 2000” த்தின்படி குற்றமாகும். இச்சட்டத்தின்படி அதிகபட்சம் 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 1 லட்சம் வரை அபராதம் செலுத்த நேரிடும் என்பதை மறக்க வேண்டாம். பொறுப்புடன் இருக்க வேண்டியது நமது கடமை நண்பர்களே..!
இவ்வாறான வெற்று செய்திகளால் உங்களின் செல்போன்டேட்டா வீணாகும். குட்மார்னிங் இமேஜ் நீங்கள் 150 பேர் கொண்ட குழுவில் பகிர்ந்தால் அதனை அனைவரும் பார்க்கும் போது அது ஒரு எம்.பி டேட்டாவை செலவாக்கும் என்றால் நீங்கள் பகிரும் வீடியோக்களை பற்றி யோசித்து பார்க்கவும்.
இவற்றால் உங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு எந்தப் பயனும் இல்லை. டேட்டா வேண்டுமானாலும் அம்பானியிடம் இலவசமாக கிடைக்கும். ஆனால், நீங்கள் செலவழித்த நேரம்?
இந்த உலகிலேயே மிக மிக மிக காஸ்ட்லி எது தெரியுமா?
நேரம் தான்!
முடிந்து போன நேரத்தை வாங்கும் அளவுக்கு இங்கே செல்வந்தர்கள் யாரும் இல்லை.
எனவே நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தவேண்டும். எந்தளவு நேரத்தை நீங்கள் சரியாக பயன்படுத்துகிறீர்களோ அந்தளவு உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் இருக்கும்.
இறைவழிபாடு, திருமுறை ஓதுதல், ஆலய தரிசனம், சுற்றுப்பயணம், சத்சங்கம், சொற்பொழிவுகளுக்கு சென்று கேட்பது, நல்ல விஷயங்களை படிப்பது என்று நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட எத்தனையோ வழிமுறைகள் உள்ளது. இது எதுவுமே செய்யவில்லை என்றாலும் ஒரே சில நல்லவர்களுடனாவது தொடர்பில் இருங்கள். அவர்கள் உங்களை கரைசேர்த்து விடுவார்கள்.
உங்கள் முகநூலில் எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள், எத்தனை வாட்ஸ் ஆப் குழுமங்களில் நீங்கள் இருக்கிறீர்கள், எத்தனை குழுமங்களில் அட்மினாக இருக்கிறீர்கள் என்பதிலெல்லாம் எந்த பெருமையும் இல்லை. பயனும் இல்லை. உங்கள் நேரம் யாருடன் பெரும்பாலும் செலவிடப்படுகிறது? யார் பதிவுகள் உங்கள் எண்ணங்களை நேரத்தை ஆக்ரமிக்கின்றன என்பதில் தான் விஷயமே உள்ளது.
நல்லவர்கள் சேர்க்கை – சுவாமி விவேகானந்தர் கூறும் உதாரணம்!
சுவாமி விவேகானந்தர் மிக அழகாக நல்லவர்களுடான சேர்க்கையை பற்றி கூறியிருக்கிறார்.
மழை நீரானது நேரடியாக கைகளில் விழுந்தால் அது அருந்துவதற்கு ஏற்ற வகையில் தாகம் தணிக்கிறது. அதுவே சாக்கடையில் விழுந்தால் கால்களை கழுவக் கூட லாயக்கின்றி அதன் மதிப்பு மிகவும் தாழ்ந்துவிடுகிறது. சூடான பரப்பில் விழுந்தால் உடனே ஆவியாகிவிடுகிறது. தாமரை இல்லை மேல் விழுந்தால் முத்து போல பிரகாசிக்கிறது. ஆனால் சிப்பிக்குள் விழுந்தால் முத்தாகவே மாறிவிடுகிறது. ஒரே நீர்த்துளி தான். விழும் இடத்தை பொறுத்து அது எங்கு யாருடன் சேருகிறது என்பதைப் பொறுத்து அதன் மதிப்பு மாறுகிறது. மனிதர்களும் இப்படித் தான். எனவே என்றும் எப்போதும் நல்லவர்களுடன் நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளவர்க்ளிடம் தான் தொடர்பில் இருக்கவேண்டும். வெட்டிப் பேச்சு பேசித் திரியும் வீணர்களிடம் நீங்கள் தொடர்பில் இருந்தால் உங்கள் வாழ்க்கையும் மதிப்பிழந்து போய்விடும்.
நாம் எத்தனை உழைத்தாலும் மீண்டும் பெறமுடியாத பெருஞ்செல்வம் வீணடிக்கப்பட்ட நேரமும் வாய்ப்புக்களும் தான்.
எனவே முகநூல், வாட்ஸ் ஆப் போன்றவற்றில் செலவிடும் நேரத்தை குறைத்துக்கொள்வோம். அப்படி குறைத்த அந்த நேரத்தையும் சரியாக பயன்படுத்துவோம்.
நமது ஆதங்கத்தை அலட்சியம் செய்யவேண்டாம். அக்கறையில் சொல்கிறோம். புரிந்துகொண்டு அதன்படி நடப்பவர்கள் புத்திசாலிகள் மட்டுமல்ல பாக்கியசாலிகளும் கூட. பின்னால் வருந்தி பயனில்லை.
==========================================================
ஒரு தொழில்நுட்ப உதவி தேவை!
நமது அலுவலகத்தில் உள்ள நமது (Desktop PC) கணினிக்கு 8 GB RAM (FSB 1600Mzh) இரண்டு தேவைப்படுகிறது. நண்பர்கள் / வாசகர்கள் யாரேனும் வாங்கித் தந்தால் உதவியாக இருக்கும். தற்போது உள்ள RAM பழுதடைந்துள்ளது. கணினி மிகவும் ஸ்லோகவாக இருக்கிறது. அடிக்கடி ஹேங் ஆகி பணி செய்ய சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்களே வாங்கித் தந்தால் கூட போதும். நன்றி.
- ரைட்மந்த்ரா சுந்தர் | M : 9840169215 | E : editor@rightmantra.com
==========================================================
Also check :
‘பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்!’
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் – ஒரு கதையும் ஒரு சம்பவமும்!
‘எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்!’ MUST READ
அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா?
ஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று !
“தயவுசெய்து மனைவியிடம் பேசுங்கள்!”- ஒரு கணவனின் வாக்குமூலம்!
“உறவுகளை மதிப்போம், அவர்கள் உணர்வையும் மதிப்போம்”
நாலு பேருக்கு நல்லது செய்வதால் நமக்கு என்ன கிடைக்கப்போகிறது?
துன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி !
மறுப்பதும் ஒரு கலை, அதை அழகாக செய்வோமே!
நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ
ஆயிரங்காலத்து பயிர் படும் பாடு!
ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?
எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா?
==========================================================
[END]