தஞ்சை – திருவையாறு சாலையில் இருக்கும் நடுக்காவிரி காவிரிக்கரை பிரசன்ன கணபதி பற்றிய பதிவை அனைவரும் படித்திருப்பீர்கள். மகா பெரியவாவின் ஞான திருஷ்டியால் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய பிள்ளையார் இவர். மேலும் சந்தான பிராப்தி இல்லாமல் வாடிய ஒரு குடும்பத்திற்கே விமோசனம் அளித்தவர். (Check : தேடி வந்து துயர் துடைத்த தெய்வம்!)
இந்த அதிசயத்தை பற்றி நாம் 2014 ஆம் ஆண்டு கேள்விப்பட்ட போதே நடுக்காவிரிக்கு நமது பெற்றோரை அழைத்துக்கொண்டு சென்று பிள்ளையாரை தரிசித்து அது பற்றிய புகைப்படங்களையும் தளத்தில் பகிர்ந்தோம். (அது பற்றிய பதிவு தான் சென்ற பதிவு.) அப்போது அந்த கோவில் இருந்த நிலை நமக்கு கண்ணீரை வரவழைத்தது.
கோவிலில் புதர் மண்டி, சிதிலமடைந்து, காம்பவுண்ட் சுவர் உடைந்து மிகவும் பரிதாபமாக காணப்பட்டது. நமது குழுவினருடன் நாம் சென்று உழவாரப்பணி ஒன்று செய்து கோவிலை திருத்த உதவலாம் என்றால் இங்கு முதலில் தேவை உழவாரப்பணி அல்ல. புனருத்தாரணம். A COMPLETE RENOVATION. அது உள்ளூர் நபர்களால் தான் முடியும். நம்மால் முடியாது.
இந்த கோவிலுக்கு தொடர்புடைய அந்த குழந்தைக்கு தற்போது வயது 75. பெரியவா அருளால் பிறந்த குழந்தை இவர் தான். கணு அவர்களிடம் பேசி, “கோவிலை நீங்கள் கொஞ்சம் RENOVATE செய்யுங்கள். நான் எங்கள் குழுவினருடன் வந்து உழவாரப்பணி செய்கிறேன்” என்று கூறினோம்.
அவரும் முயற்சிப்பதாக கூறினார். இதற்கிடையே அவரை அலைபேசியில் அடிக்கடி தொடர்புகொண்டு விசாரித்து வந்தோம்.
கணு அவர்கள், தான் மட்டுமே இங்கு வசிப்பதாகவும் (பாரம்பரிய ஊர் என்பதால்) தன்னால் தனியாளாக இது தொடர்பாக களமிறங்க முடியவில்லை யாராவது முயற்சி எடுத்தால் புண்ணியமாக போகும் என்றும் தானும் தன் பங்கிற்கு உதவுவதாகவும் கூறினார். (அவர் பிள்ளைகள் & பேரன் பேத்திகள் வெவ்வேறு ஊர்களில் வசிக்கின்றனர்.)
ஆலயத்தின் நேரில் பார்த்தவன் என்கிற முறையிலும் வறண்ட பிள்ளையாரை தேடித் பிடித்து கைங்கரியம் செய்வதை ஒரு தொண்டாக கருதி செய்து வருபவன் என்கிற முறையிலும் குறைந்தபட்சம் அந்த ஆலயத்தின் பிரகாரத்தில் மண்டிக்கிடக்கும் செடிகொடிகளையாவது அப்புறப்படுத்தவேண்டும் என்று தோன்றியது. உழவாரப்பணியெல்லாம் பிறகு. முதலில் நாம் நம் குழுவினர் நான்கைந்து பேருடன் சென்று பிரகாரத்தை சுத்தப்படுத்தவேண்டும் என்று தோன்றியது.
ஒரு நாள் பேசும்போது கணு மாமா தானே நபர்களை வைத்து சில மாதங்களுக்கு முன்னர் புதர்களை அப்புறப்படுத்தியதாகவும் ஆனால் மீண்டும் சில வாரங்களிலேயே செடி கொடிகள் முளைத்துவிட்டதாகவும் கூறினார்.
நடுக்காவிரி கோவிலைப் பொறுத்தவரை அதற்கு வருவாயெல்லாம் கிடையாது. அந்த ஊரைச் சேர்ந்த திரு.தண்டபாணி குருக்கள் தான் அக்கறை எடுத்து இரண்டு வேளை விளக்கேற்றி பூஜை செய்து வருகிறார். அவ்வளவு தான்.
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நாள் கணு அவர்களிடம் பேசும்போது கோவிலில் காம்பவுண்ட் சுவர் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், எந்த நேரமும் இடிந்து விழலாம் என்றும் கூறினார். அதன் படியே சில மாதங்களுக்கு முன்னர் காவிரியில் நீர் திறந்த போது குடமுருட்டி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட கொஞ்சம் நஞ்சம் உயிரைப் பிடித்துக்கொண்டிருந்த காம்பவுண்ட் சுவர் முற்றிலும் விழுந்து போனது.
நம் கண்ணெதிரே இப்படி ஒரு மகத்துவம் மிக்க கோவில் பாழடைகிறதே என்று மனம் பதைபதைத்து.
அவருக்கும் சரி தண்டபாணி குருக்களுக்கும் சரி வயதில் பெரியவர்களானாலும் இந்தக் கோவிலுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்கிற பேராவல் இருக்கிறது. ஆனால் ஒரு கோவிலை புனருத்தாரணம் செய்ய அது மட்டும் போதுமா?
எந்த ஒரு மகத்தான காரியமும் ஆரம்பிப்பது தான் கஷ்டம். அதை செய்பவர்களுக்கு சற்று உற்சாகமும் உத்வேகமான வார்த்தைகளும் கொடுத்தால் போதும் தூள் கிளப்பிவிடுவார்கள்.
“மாமா அதை புனருத்தாரணம் செய்வதாக இருந்தால் என்ன பட்ஜெட் என்று விசாரியுங்கள். நான் எங்கள் வாசகர்களிடம் கூறி என்னால் இயன்ற அளவு நிதி திரட்டி தருகிறேன்” என்றோம்.
நடுக்காவிரி பிள்ளையார் கோவிலைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த ஊரும் ஆர்வம் காட்டுவதாக நாம் நினைக்கவில்லை. கணு மாமாவும், தண்டபாணி குருக்களும் அவர்களுக்கும் வேண்டிய சிலர் மட்டுமே இதன் மேல் ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் அவர்களுக்கே அதன் மகத்துவம் முழுமையும் தெரியும். உள்ளூர் குளம் தீர்த்தம் ஆகாது.
நம்மிடம் ஒரு நாள் பேசிய கணு மாமா ஆலயத்தை மிக குறைவான செலவில் செப்பனிட்டு தயார் செய்ய ஒரு பொறியாளர் கிடைத்திருப்பதாகவும், அவரை ஒருநாள் தனது வீட்டுக்கு வரச் சொல்வதாகவும் நாமும் நடுக்காவிரி வந்தால் ஆலோசித்து முடிவெடுத்துவிடலாம் என்றும் கூறினார்.
இதையடுத்து சில மாதங்களுக்கு முன்னர் திருநாவலூர் / திருவெண்ணைநல்லூர் பயணம் சென்ற நாம் அப்பயணத்தை முடித்துக்கொண்டு அப்படியே தஞ்சை (நடுக்காவிரி) சென்றோம்.
நடுக்காவிரி அக்ரஹாரத்தில் உள்ள கணு மாமா வீட்டிற்கு சென்றோம். நம்மை அன்புடன் வரவேற்றார். நாம் தஞ்சையிலிருந்து நடுக்காவிரி புறப்படும்போதே தகவல் தெரிவித்துவிட்டதால் குருக்கள் மாமாவும் உடனிருந்தார்.
இருவரிடமும் பரஸ்பர நலம் விசாரித்துவிட்டு மூவரும் கோவில் தொடர்பாக ஆலோசனையில் இறங்கினோம். என்ஜினீயர் கும்பகோணத்தில் இருந்து வந்துகொண்டிருப்பதாகவும் நாம் அதற்குள் பிள்ளையாரை தரிசித்துவிட்டு வந்துவிடலாம் என்று கூறினார்கள். நாமும் அவர்களுடன் பிள்ளையாரை தரிசிக்க புறப்பட்டோம்.
வரும் வழியிலேயே பிள்ளையார் பூஜைக்கு தேவையான தேங்காய், பூ, பழம் உள்ளிட்ட அனைத்தையும் வாங்கிக்கொண்டுவிட்டோம்.
பிள்ளையார் கோவில் நிலைமை பார்க்கவே பரிதாபகமாக இருந்தது. இந்த மூன்றாண்டுகளில் கோவில் இன்னும் பாழ்பட்டு போயிருந்தது.
“எங்க ரெண்டு பேரோட வேண்டுதலுக்கு செவி சாய்ச்சு அந்த பிள்ளையார் தான் உங்களை அனுப்பியிருக்கார். இந்த பணியை மட்டும் முடிச்சுட்டோம்னா அதக்கு அப்புறம் பிள்ளையார் உங்கள் லைஃபை பார்த்துக்குவார்” என்றார் கணு மாமா.
“அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்றோம்.
இறைப்பணிகளை பொறுத்தவரை அவை நமது முழுமுதற்க் கடமை எனக் கருதி தான் அவற்றை செய்கிறோம். இதை செய்தால் இதை இறைவன் தருவான் என்கிற சிந்தனை நமக்கு தோன்றியதில்லை. அது ஒரு வகையில் பேரம் என்பது நமது அபிப்ராயம். ஆனால் ஆரம்ப நிலையில் இது போன்ற எண்ணம் வரும். அது குறித்த குற்ற உணர்ச்சி யாருக்கும் தேவையில்லை. நாளடைவில் “இந்த பாக்கியத்தை எனக்கு கொடுத்தாயே இறைவா அதற்கே நான் உனக்கு நன்றி சொல்லவேண்டும்” என்று நினைக்குமளவு பக்குவம் வந்துவிடும். இந்த வாழ்க்கையே கற்றுத் தெளிவதும் பட்டுத் தெளிவதும் தானே?
பிள்ளையாருக்கு அர்ச்சனை நடைபெற்றது. பிரார்த்தனை கிளப் கோரிக்கைகள் அடங்கிய பிரிண்ட்-அவுட்டை திருவெண்ணெய்நல்லூரில் கொடுத்துவிட்டபடியால் இங்கும் சமர்ப்பிக்க கைவசம் அச்சுப்பிரதி இல்லை. எனவே நமது அலைபேசியை பார்த்து அந்த வாரத்தின் கோரிக்கைகளையும் அன்பர்களின் ராசி நட்சத்திரங்களையும் படித்தோம். அனைவருக்கும் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்தோம். (அநேகமாக அந்த பிரார்த்தனைகள் ஒவ்வொன்றாக நிறைவேறிவிடும் என்பது உறுதி.)
அர்ச்சனை முடிந்து தீபாராதனை காட்டிய பிறகு பிரசாதம் பெற்றுக்கொண்டோம். பின்னர் கணு மாமாவை கொண்டு தண்டபாணி குருக்களை கௌரவித்தோம். குருக்கள் மாமாவுக்கு வஸ்திரம் + துண்டு + தாம்பூலம் + ரொக்கம் அடங்கிய செட் தரப்பட்டது.
அதே போல கணு அவர்களையும் குருக்களைக் கொண்டு கௌரவித்தோம்.
(சென்ற முறை நாம் பிள்ளையாரை தரிசிக்க வந்தபோது ஆலயத்திற்கு பரிசளித்த நமது பிரார்த்தனை படம் பின்பக்கத்தில் தெரிகிறது பாருங்கள்.)
கோவிலை சற்று சுற்றி பார்த்தோம். பெரியவா அருள்வாக்கினால் கட்டப்பட்டு ஒரு குடும்பத்தையே தழைக்கச் செய்த கோவில் இப்போது காணப்பட்ட நிலை கவலையளித்தது. அவசியம் புணருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்யவேண்டும்.
அதற்குள் எஞ்சினியர் வந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. கணு மாமா வீட்டிற்கு மீண்டும் அனைவரும் புறப்பட்டோம்.
என்ஜினீயர் அறிவழகன் அவர்களை நமக்கு இருவரும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். கும்பகோணத்தை சேர்ந்த இவர் ஒரு கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இது போன்ற கோவில் பணிகள் அதுவும் சிதிலமடைந்த சிறு கோவில்களை சரி செய்யும் பணி என்றால் மிக மிக குறைவான செலவில் அதை முடித்து தருகிறார். இவர் கொடுக்கும் கொட்டேஷனை விட மார்க்கெட்டில் மூன்று மடங்கு அதிகம் கொடுப்பார்கள் என்பது மட்டும் உறுதி. இவரை பார்க்கும்போதே மனதில் ஒரு நம்பிக்கை துளிர்த்தது.
இருக்காதா பின்னே… பிள்ளையார் அவர் பணிக்கு தேவையான நபர்களை அவரே அல்லவா தேர்ந்தெடுக்கிறார்?
இந்தக் கோவிலுக்கான கொட்டேஷனை மிக அழகாக இருபாகங்களாக பிரித்திருந்தார். இரண்டு கொட்டேஷனையும் தனது லெட்டர் பேடில் அழகாக எழுதி தந்துவிட்டார்.
ஒன்று காம்பவுண்ட் சுவர் புதிதாக எழுப்புதல், பூச்சு வேலைகள் மற்றும் கோபுர பணிகள் + கிரில் கேட்டுகள். மற்றொன்று உள்ளே செடி, கொடிகளை அப்புறப்படுத்தி, தரையை முழுவதுமாக கொத்தி புதிதாக சிமெண்ட் தரை போடுவது + ஒரு போர் வேல் + மோட்டார் + எலக்ட்ரிக்கல் பணிகள். அனைத்தும் சேர்த்தது ரூபாய் 2.5 லட்சம் பட்ஜெட். (கொஞ்சம் கூடுதலாக வேண்டுமானால் போகலாம்). நமது தளம் சார்பாக நாம் நம்மால் முடிந்த தொகையை திரட்டித் தருவதாக வாக்களித்திருக்கிறோம்.
திரு.அறிவழகன் அவர்களின் லாபநோக்கமற்ற இந்த சேவையை பாராட்டி அவரை கணு அவர்கள் இல்லத்தில் நம் தளம் சார்பாக கௌரவித்து நமது நூலையும் பரிசளித்தோம். குடந்தை மற்றும் தஞ்சை பகுதிகளில் சிதிலமடைந்த பல கோவில்களை மிக குறைவான விலையில் புதுப்பித்து தருவது என்ன சாதாரண விஷயமா? எல்லாருமே பணம் பணம் என்று ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இவரைப் போன்றவர்கள் ஒரு சிலர் இருப்பதால் தானே இது போன்ற விஷயங்கள் சாத்தியமாகின்றன?
வரும் ஜனவரி 27 ஆம் தேதி நடுக்காவிரி செல்லவிருக்கிறோம். அப்போது வேலைகளை துவக்க குறைந்த பட்சம் ரூ.50,000/- மாவது கொடுக்கவேண்டும். நம்முடைய பர்சனல் தொகை ஏற்கனவே தயாராக இருக்கிறது. இனி வாசகர்கள் அளிக்கப்போகும் தொகையை திரட்டி அதைக் கொண்டு பணியை துவக்கவேண்டியது தான் பாக்கி. இந்த தொகைக்கான காசோலையை அளிக்கும்போது யார் யார் எவ்வளவு அளித்திருக்கிறார்கள் என்கிற விபரம் அடங்கிய பட்டியல் திருப்பணி குழுவினரிடம் (தண்டபாணி குருக்கள், கணு மாமா, பொறியாளர் அறிவழகன்) ஆகியோரிடம் ஒப்படைப்போம். இந்த கைங்கர்யத்தை பொறுத்தவரை அனைத்தும் பக்காவாக நடைபெறும். (காசோலை பரிவர்த்தனை தான்).
மேலும் புனரமைக்கப்பட்ட பிறகு நமது வாசகர்களை வேனில் அழைத்துக்கொண்டு உழவாரப்பணி செய்ய நடுக்காவிரி செல்ல திட்டமிட்டுள்ளோம். (அப்படியே திருவையாறு ஐயாறப்பரையும் தரிசிக்க திட்டமிட்டுள்ளோம்). கும்பாபிஷேக பணிகளை தண்டபாணி குருக்கள் பார்த்துக்கொள்வார். கணு மாமா தன் குடும்பத்தின் சார்பாக ஒரு நல்ல தொகையை தயார் செய்வதாக கூறியிருக்கிறார். மேலும் அவர் நண்பர்கள் மற்றும் ஊர் மக்களும் தங்களால் இயன்றதை செய்வதாக வாக்களித்திருக்கின்றனர்.
இத்துடன் அளிக்கப்பட்டுள்ள விபரத்தை முழுமையாக படித்து வாசகர்கள் நிதி உதவி அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
==========================================================
*காவிரிக்கரை பிரசன்ன கணபதி கோவில் புனருத்தாரண பணியில் உதவ விரும்புகிறவர்கள் கவனத்திற்கு!*
நமக்கு ‘விருப்ப சந்தா’ செலுத்தி வரும் வாசகர்கள் மற்றும் பணிகளில் உதவி வரும் நண்பர்களை தவிர இதர வாசகர்கள் இந்த அரும்பணிக்கு உதவ விரும்பினால் நமது தளத்திற்கும் அவர்களது பங்களிப்பு இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ரைட்ட்மந்த்ராவும் ஒரு கோவில் தான். இழுத்துப் பிடித்துக்கொண்டு ஒரு சாமானியன் நடத்ததிக்கொண்டிருக்கும் கோவில்.
மேலும் சில காரணங்களால் குறைந்தபட்சம் ரூ.2500/-ம் அதற்கு மேலும் தான் இந்த கைங்கரியத்தை பொறுத்தவரை நிதி உதவி அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். காரணம் சிறு சிறு தொகையையெல்லாம் வந்தால் கவனித்து குறித்துக்கொண்டு வரவு வைக்க நமக்கு நேரமில்லை. அதற்குரிய நிர்வாக வசதியும் இல்லை. வாசகர்கள் தொகையை வங்கிக்கணக்கில் செலுத்திய பின்னர் நமக்கு மறக்காமல் (மின்னஞ்சல் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம்) தகவல் தெரிவிக்கவும். உங்கள் பெயர் பட்டியல், நீங்கள் செலுத்திய தொகை விபரம் கோவிலில் ஒப்படைக்கப்படும்.
பணம் செலுத்திய பின்னர் அவசியம் உங்கள் அலைபேசி எண்ணை குறிப்பிட்டு நமக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். (மின்னஞ்சல் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம்). இல்லையெனில் உங்கள் நிதி ஏற்கப்படாது.
Our A/c Details
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
Rightmantra Sundar | M : 98401 69215 | E : editor@rightmantra.com
==========================================================
Also check ….
விநாயகனே வினை தீர்ப்பவனே – பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் பிள்ளையார்!!
பூவிருந்தவல்லி மார்க்கெட் பிள்ளையார்!
தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும் வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்!
தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)
வாக்கு தரும் நல்வாழ்வு தரும் – பிள்ளையாருடன் துவங்கும் புத்தாண்டு!!
வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!
குன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்!
அருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்!
==========================================================
Also check :
மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)
ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)
நெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)
தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)
==========================================================
வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
==========================================================
Also check…
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?
==========================================================
[END]
ரைட் said ஜி!
நமது தளத்திற்கு உதவும் வாசகர்களுக்கே இந்த புண்ணிய செயலில் பங்கு கொள்ள முன்னுரிமை அளிக்க வேண்டுகிறேன்.
அன்பன்,
நாகராஜன் ஏகாம்பரம்