இன்றைக்கும் ஆன்மீக அன்பர்களை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது தான். மாபெரும் ஞானிகள், யோகிகள், தவசீலர்கள் ஏன் இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர்? அவர்களது சக்தியினால் தங்களது நோயை அவர்கள் போக்கிக்கொள்ளமுடியாதா? இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய ஞானிகளுள் ஒருவரும் தலைசிறந்த ஆன்மீகவாதியுமான ரமணர் முதல் பாம்பன் சுவாமிகள் வரை பலர் இறுதிக்காலத்தில் கொடுநோய் கண்டு போராடி பின்பே மடிந்திருக்கின்றனர். (வள்ளிமலை சுவாமிகள் உட்பட!)
வாழும்காலத்தே அவர்கள் செய்த அற்புதங்கள் குறித்த பல செய்திகள் குறித்து பார்க்கிறோம் படிக்கிறோம். ஏன், பலரது தீராப்பிணியை அவர்கள் தீர்த்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் பிணியை ஏன் அவர்கள் நீக்கிக்கொள்ளவில்லை? குறைந்தபட்சம் அமைதியாகவாவது அவர்கள் உயிர் பிரிந்திருக்கலாமே என்று அனைவருக்கும் தோன்றுவது இயல்பு.
நமக்கு தெரிந்து இதுவரை இந்தக் கேள்விக்கு சரியான விடை யாரும் தரவில்லை. எங்கும் கிடைக்கவில்லை. விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்றை தவிர.
ஜனவரி 12 – இந்தக் களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர் பிறந்த நாள் இன்று. ஆம்… இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்!!
இந்த பதிவில் ஒவ்வொரு வரியும் மிக முக்கியமானவை. “ஞானிகள் ஏன் இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்படுகிறார்கள்? அதன் மூலம் இறைவன் சாதிப்பது என்ன?” என்பது குறித்து சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றில் கண்ட இந்த அருமையான விளக்கத்தை உங்களிடையே பகிர்ந்துகொள்கிறோம்.
==========================================================
Also check :
“பிரபு எந்தன் குறைகளை மனதிற்கொள்ளாதே…” – விவேகானந்தரை கலங்க வைத்த நடனமாது!
ஒரு தொழிலதிபருக்கு விவேகானந்தரின் சந்திப்பு ஏற்படுத்திய திருப்புமுனை!
நாளுக்கொரு சவால், நொடிக்கொரு பிரச்னை… என்ன செய்வது?
==========================================================
குருதேவரின் இறுதிக்காலம் உணர்த்திய பேருண்மை!
1886 ஆம் ஆண்டு. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் இறுதிக்காலம். குருதேவரின் உடல்நிலை மிகவும் மோசமாகியது. பல வித சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால் அனைத்தையும் மீறி அவரது உடல் நிலை நாளுக்கு நாள் சீர்குலைந்தது. இந்த நோயிலிருந்து தாம் மீளப் போவதில்லை என்பது தெரிந்திருந்தாலும், இது தெரிந்தால் மற்றவர்கள் கவலைப்படுவார்களே என்ற காரணத்திற்காக யாரிடமும் அதுபற்றி அவர் கூறவில்லை. ஆனால் ஆரம்பம் என்ற ஓன்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் இருக்கத்தானே வேண்டும்! அவர் மறைவதற்குத் திருவுளம் கொண்டுவிட்டார் என்பதை அனைவரும் உணரத் தொடங்கினர். ஏனெனில் தாம் மறையப்போகும் காலத்தில் எத்தகைய சம்பவங்கள் நிகழும் என்று அவர் கூறியிருந்தாரோ அவை ஒவ்வொன்றாக நிகழத் தொடங்கின. கனவுகளும் காட்சிகளுமாக அன்னை ஸ்ரீசாரதா தேவியும் பல நிமித்தங்களைக் கண்டார்.
தமது நோய் குணப்படுத்த முடியாதது என்று ஸ்ரீராமகிருஷ்ணர் முடிவு செய்து அதனை அப்படியே ஏற்றுக் கொள்ள திருவுளம் கொண்டுவிட்டார் என்பதைக் கீழ்வரும் நிகழ்ச்சியாலும் அறியலாம்.
ஒரு நாள் பண்டித சசதர் காசிப்பூருக்கு வந்தார். அவர் குருதேவரிடம், ‘மகான்களின் ஆற்றலைப் பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவர்களுக்கு நோய் வந்தால் அவர்கள் தங்கள் மன ஆற்றலை நோயுற்ற பகுதியில் செலுத்தவதன்மூலம் அதிலிருந்து விடுபடலாம். நீங்களும் ஏன் அப்படி செய்யக் கூடாது?’ என்று கேட்டார். குருதேவருக்கு இது சிறிதும் பிடிக்கவில்லை. சற்றே கண்டிப்பான குரலில், ‘ஒரு பெரிய பண்டிதராக இருக்கின்ற உங்களிடம் இத்தகைய எண்ணங்களா? இந்த மனம் முற்றிலுமாகக் கடவுளிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. அதை அவரிடமிருந்தது திருப்பி, பயனற்ற இந்த உடம்பிற்குக் கொண்டுவருவதா?’ என்று கேட்டார். பண்டிதர் மௌனமானார். ஆனால் சீடர்கள்.பிடித்துக்கொண்டனர். ‘எப்படியாவது நீங்கள் இந்த நோயைக் குணப்படுத்தியே ஆக வேண்டும். எங்களுக்காகவாவது நீங்கள் இதனைச் செய்யுங்கள்’ என்று அனைவரும் கேட்டுக் கொண்டனர். ‘எல்லாம் தேவியின் திருவுளத்தைப் பொறுத்து உள்ளது, என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். ‘அப்படியானால் அவளிடமே பிரார்த்தனை செய்யுங்கள். எங்களுக்காக நீங்கள் இதைத் தேவியிடம் கேட்டேயாக வேண்டும்’ என்றார் நரேந்திரர். தயக்கத்துடன் சம்மதித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
சிலமணிநேரங்கள் கழிந்தன. நரேந்திரர் குருதேவரிடம் சென்று, ‘தேவியிடம் கேட்டீர்களா?’ என்று கேட்டார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் அமைதியாகக் கூறினார்: ஆம். கேட்டேன். ”அம்மா, தொண்டை வலி காரணமாக என்னால் எதுவும் சாப்பிட இயலவில்லை. ஏதோ கொஞ்சம் நான் சாப்பிடுவதற்கு அருள் புரிவாய்” என்று அவளிடம் கூறினேன். அதற்கு அவள் என்ன சொன்னாள் தெரியுமா? ”ஏன், இந்த ஒரு வாய் வழியாகத்தான் நீ சாப்பிட வேண்டுமா? எததனையோ வாய்கள் வழியாகச் சாப்பிடுகிறாயே! அது போதாதா? என்று கேட்டாள். எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. என்னால் ஒரு வார்த்தைகூட பேச இயலவில்லை.
மற்றொரு நாள் ராக்கால் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் இந்த நோயைக் குணப்படுத்துவதுபற்றி பேசினார்.
ராக்கால்: ‘உங்கள் உடம்பு இன்னும் சில காலம் நிலைக்க வேண்டும் தேவியிடம் கேளுங்கள்.’
ஸ்ரீராமகிருஷ்ணர்: ‘எல்லாம் தேவியின் திருவுளத்தைப் பொறுத்து அமையும்.
நரேந்திரர்: ‘உங்கள் திருவுளமும் தேவியின் திருவுளமும் வெவ்வேறா? இரண்டும் ஒன்றாகிவிட்டனவே!’
ஸ்ரீராமகிருஷ்ணர் சிறிதுநேரம் மௌனமாக இருந்தார். பிறகு கூறினார்: ‘நான் தேவியிடம் பேசியும் பயனில்லை. நானும் அவளும் ஒன்றாகிவிட்டதாக இப்போது காண்கிறேன்.’
சிகிச்சை பிரார்த்தனை என்று பல வழிகளில் முயன்றும் ஸ்ரீராமகிருஷ்ணரின் நோயைக் குணப்படுத்த முடியாத நிலையில் நரேந்திரரின் மனம் மிகவும் சஞ்சலப்பட்டது. பழைய சந்தேகங்கள் மீண்டும் தலைதூக்கியதுபோல் இருந்தது. கடவுள் ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா, அப்படி ஒருவர் இருந்தால் இத்தகைய நல்ல மனிதருக்கு ஏன் இந்த நோய் வர வேண்டும் என்பன போன்ற கேள்விகள் அவரது உள்ளதைக் குடைந்தன. ஏப்ரல் இறுதியில் ஒருநாள் ஹீரானந்தர் என்பவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நோயைப்பற்றி கேள்விப்பட்டு அவரைக் காண வந்திருந்தார். ஹீரானந்தர் ஏற்கனவே ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அறிமுகமானவர். அவருடன் நேரேந்திரர் பேசியபோது இந்தக் கருத்துக்கள் வெளிப்பட்டன.
ஹீரானந்தர்: ‘பக்தனுக்கு ஏன் துன்பம் வருகிறது?’
நரேந்திரர்: ‘ஏனெனில் படைப்பின் திட்டமே பேய்த்தனமாக உள்ளது. நான் படைத்திருந்தால் இதைவிட நல்ல உலகைப் படைத்திருப்பேன்.
ஹீரானந்தர்: ‘துன்பம் இல்லாமல் இன்பம் இருக்க முடியுமா?’
நரேந்திரர்: ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. எது இருந்தால் எது இருக்கும் என்பன போன்ற பிரபஞ்சத் திட்டங்களை எல்லாம் என்னால் கூற முடியாது. இப்போது நடப்பில் இருக்கும் திட்டம் சரியாக இல்லை என்ற என் கருத்தை மட்டுமே கூறினேன். ஆனால் ஒரு வழி இருக்கிறது. ”எல்லாம் நானே, நானே எல்லாவற்றையும் செய்கிறேன்” என்று எடுத்துக்கொண்டால் பிரச்சினை தீர்ந்தது அல்லவா?’
ஸ்ரீராமகிருஷ்ணரின் நோய் பல நோக்கங்களைச் சாதிப்பதற்கான ஒரு நிமித்தமாக இருந்தது என்பதை ஏற்கனவே கண்டோம். இதன்மூலம் பக்தர்களுக்கிடையே ஓர் அன்புப் பிணைப்பு உருவாயிற்று. பின்னாளில் துறவியராக மலர இருந்த இளைஞர்களுக்கு இடையே ஒரு சகோதரப் பாசம் ஏற்பட்டது. அதே வேளையில் ஸ்ரீராமகிருஷ்ணரில் முற்றிலுமாக நம்பிக்கையில்லாதவர்கள் அவரது நோயைக் கண்டு அவரிடமிருந்து விலக்குவதற்கும் இந்த நோய் ஏதுவாயிற்று. இந்த நாட்களில் ஸ்ரீராமகிருஷ்ணரின் இளம் சீடர்கள், இல்லற பக்தர்கள், சிஷ்யைகள் என்று அனைவரும் அவரது சேவையில் ஈடுபட்டிருந்தனர். செலவை இல்லற பக்தர்கள் ஏற்றிருந்தார்கள். தமது நோயின் பெயரில் ஒரு பண வசூல் நடத்தப்படுவதை ஸ்ரீராமகிருஷ்ணர் ஏற்றுக்கொள்ளவில்லை. குருதேவருக்கு ஆகும் செலவை பலராம்போஸ் ஏற்றுக்கொண்டார். வீட்டு வாடகையை சுரேந்திரநாத் மித்ரர் கொடுத்தார். இப்படிப் பலராக செலவைப் பகிர்ந்து கொண்டார்கள். இளைய கோபால் வரவுசெலவு கணக்கைக் கவனித்துக்கொண்டார்.
செலவு அதிகமாகியபோது, இல்லறச் சீடர்கள் இளைஞர்களைக் குற்றம் சாட்டினார்கள். அவர்கள் அதிகமாகச் செலவழிக்கிறார்கள், எனவே செலவைக் குறைக்க வேண்டும் என்று கூறினார்கள். அது மட்டுமல்ல; ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இரண்டுபேர் மட்டும் சேவை செய்தால் போதும், மற்றவர்கள் அவரவர் வீட்டில் தங்கிக்கொண்டு, இங்கே வந்து பார்த்துக் கொண்டால் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டார்கள்.
இது இளைஞர்களுக்குப் பிடிக்கவில்லை. இருசாராருக்கும் கருத்து வேறுபாடு வளர்வதைக் கண்ட நரேந்திரர் எல்லாவற்றையும் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கூறினார். நரேந்திரரின் வருத்தத்தைக் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர், ‘இனி இந்த இல்லற பக்தர்களின் காசு எனக்கு வேண்டாம். ஓ என் நரேன், உன் தோள்களில் என்னை நீ எங்கே தூக்கிச் சென்றாலும் நான் அங்கு வந்து தங்குகிறேன், அப்பா’ என்று நெகிழ்ந்துபோய் கூறினார். பின்னர் அந்த இளைஞர்களிடம், ‘நீங்கள் துறவிகள். பிச்சை ஏற்று சாப்பிடுவதுதான் உங்கள் தர்மம். அப்படியே நீங்கள் வாழ இப்போதிலிருந்தே கற்றுக் கொள்ளுங்கள்’ என்றார். இளைஞர்களும் அதன்படி நடக்க முடிவு செய்தனர்.
இல்லற பக்தர்களிமிருந்து பணம் பெறுவது நிறுத்தப்பட்டது. அவர்கள் ஸ்ரீராமகிருஷ்ணரை வந்து காண்பதும் தடுக்கப்பட்டது. லட்சுமி நாராயண் என்ற மார்வாரி பக்தர் பணம் அளிப்பதற்கு முன்வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் அதனை மறுத்துவிட்டார். பின்னர் கிரிஷை அழைத்து நிலைமையைக் கூறினார். கிரீஷ் அனைத்து செலவையும் தாம் ஏற்றுக் கொள்வதாகவும், தேவைப்பட்டால் தமது வீட்டை விற்றுக் கூட செலவு செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால் அந்த அளவுக்குப் போகுமுன்னர் ஸ்ரீராமகிருஷ்ணரே இருசாராரையும் அழைத்துப் பேசி நிலைமையைச் சீர்படுத்தினார். மனக்கசப்புகள் குறைந்து மீண்டும் பழையதுபோல் எல்லோரும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சேவையில் ஈடுபட்டனர்.
ஒருநாள் மூத்த கோபால் சில காவித் துணிகளையும் ருத்திராட்ச மாலைகளையும் மூட்டையாகக் கட்டி ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கொண்டு வந்தார்; அவற்றைச் சிறந்த சன்னியாசிகளுக்குக் கொடுக்கப் போவதாகக் கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணர் தம் முன் இருந்த இளம் சீடர்களைக் காட்டி, ‘இவர்களைவிடச் சிறந்த சன்னியாசிகள் கிடையாது. இவர்களுக்கே அவற்றைக் கொடு’ என்றார். மூத்த கோபால் மூட்டையைக் கொண்டு வந்து ஸ்ரீராமகிருஷ்ணர் முன் வைத்தார். அவற்றை அந்த இளைஞர்களுக்கு அளித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். ஒருநாள் மாலையில் சன்னியாசத்திற்கான சடங்கொன்றைச் செய்யச் சொல்லி, ஊருக்குள் சென்று பிச்சையேற்று வரச்சொன்னார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதுபோல் அனைவரும் வெளியில் பிச்சையேற்கப் புறப்பட்டனர். அவர்களில் பலர் பணக்கார வீட்டுப் பிள்ளைகள்; செல்வச் செழிப்பில் வளர்ந்தவர்கள். என்றாலும் ஸ்ரீராமகிருஷ்ணரின் இந்தக் கட்டளையை நிறைவேற்ற மிகுந்த மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். ஸ்ரீராமகிருஷ்ணர் அளித்த காவித் துணியையும் அணிந்துகொண்டனர். அவர்கள் முதல் பிச்சை கேட்டது அன்னை ஸ்ரீசாரதா தேவியிடம்தான். அவர்கள் சென்று கேட்டதும். அன்னை ஒரு ரூபாயை அவர்களின் பிச்சைப் பாத்திரத்தில் இட்டார். இவ்வாறு ராமகிருஷ்ண சங்கத்திற்கு முதல் அருள் சக்தியை அளித்தார். அன்னை. அதன்பின்னர் அவர்கள் பிச்சைக்காக வெளியில் சென்றனர்.
அவர்களின் அனுபவங்கள் பலவிதமானவை. சில இடங்களில் அரிசி, உருளைக் கிழங்கு, வாழைக்காய், கத்திரிக்காய் என்றெல்லாம் பிச்சை அளித்தனர். சில இடங்களிலோ பெரிய உபதேசங்களை அளித்து தூரத்தினர். சிலர், ‘கொழுகொழுவென்று நன்றாகத்தானே இருக்கிறீர்கள்! ஏன் வேலை செய்து சம்பாதிக்கக் கூடாது? இப்படி காவித்துணி உடுத்தி ஏன் பிச்சையெடுக்க வேண்டும்?’ என்று கேட்டு துரத்தினர். சிலரோ, ‘இவர்கள் கட்டாயம் ஏதாவது கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பகலில் இப்படி சன்னியாசிபோல் வந்து தகவல் திரட்டிக் கொள்கிறார்கள்’ என்றனர்.
எப்படியோ, கிடைத்த அரிசியையும் காய்கறிகளையும் சமைத்து ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கொண்டு வந்தனர். அவர் அதனை அன்னையிடம் கொடுத்து சமைக்கச் சொன்னார். சமைத்த உணவிலிருந்து சிறிது எடுத்துத் தம் வாயில் போட்டுக் கொண்டு, ‘இந்த உணவு மிகவும் தூய்மையானது’ என்றார். அவருக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டது. மேலும் ஓரிருமுறை அவர் இளைஞர்களை வெளியில் அனுப்பி பிச்சையேற்றுவரச் செய்தார். இவ்வாறு அவர் ராமகிருஷ்ண துறவியர் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.
துறவியர் இயக்கத்தை ஆரம்பித்தாகிவிட்டது. அடுத்தது? ஒரு முறை ஒரு காகிதத்துண்டில், ‘ஜெய் ராதே ப்ரேம மயீ, நரேன் உலகிற்கு போதிப்பான். எங்கும் சென்று உண்மைகளைப் பறைசாற்றுவான்’ என்று எழுதிக் காண்பித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். நரேந்திரர் அதனை மறுத்து, ‘என்னால் அதெல்லாம் முடியாது’ என்று கூறினார். அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர், ‘நீ செய்தேயாக வேண்டும், காலப்போக்கில் என் ஆற்றல்கள் உன்மூலம் வெளிப்படும்’ என்றார்.
நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர் யோகினை அழைத்து பஞ்சாங்கம் கொண்டு வராகி சொன்னார்.ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியிலிருந்து வரிசையாக நாட்களையும் நட்சத்திரங்களையும் அதன் பலன்களையும் படித்துக்கொண்டே போகும்படிக் கூறினார். மாதத்தின் கடைசி நாள் வந்ததும் மேலும் படிக்க வேண்டாமென்று சைகை காட்டினார்.
இந்த நிகழ்ச்சி நடந்து நாலைந்து நாட்கள் கழிந்தன. ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரைத் தம் அருகே அழைத்தார். அப்போது அறையில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். நரேந்திரைத் தம் எதிரே உட்காரச் சொல்லி அவரை உற்றுப் பார்த்தபடியே ஆழ்ந்த சமாதியில் மூழ்கினார் ஸ்ரீராமகிருஷ்ணர். சிறிதுநேரத்திற்குள் நரேந்திரர் தம் உடம்பில் மின்சாரம் போன்று ஒரு சக்தி பாய்ந்து செல்வதை உணர்ந்தார். சிறிதுசிறிதாக அவரும் உலக நினைவை இழந்தார். தாம் எவ்வளவு நேரம் இப்படி சமாதியில் மூழ்கியிருந்தோம் என்பது அவருக்குத் தெரியவில்லை. உணர்வு திரும்பிக் கண்களைத் திறந்து பார்த்தபோது ஸ்ரீராமகிருஷ்ணர் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். நரேந்திரர் காரணம் கேட்டபோது, ‘என்னிடமிருந்த எல்லாவற்றையும் இன்று உனக்குக் கொடுத்துவிட்டு நான் பக்கிரியாகிவிட்டேன். இந்த ஆற்றல்களின்மூலம் நீ உலகிற்கு மிகுந்த நன்மையைச் செய்வாய். அதன்பிறகு, நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்குத் திரும்புவாய்’ என்று கூறினார். இவ்வாறு தமது சக்தியை நரேந்திரருக்கு அளித்தார்.
இரண்டு நாட்கள் கழிந்தன. தம்மை அவதாரம் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லிக் கொள்வதைக் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் நரேந்திரருக்குத் தோன்றியது. அன்று மிகக் கடுமையான வலியால் ஸ்ரீராமகிருஷ்ணர் துடித்துக் கொண்டிருந்தார், ‘உடம்பின் நோயால் இப்படித் துடிக்கும் இந்த நிலையிலும் அவர் தம்மை அவதார புருஷர் என்று கூறுவாரானால், அவர் உண்மையில் அவதார புருஷர் என்பதை நம்புவேன்’ என்று நினைத்தார். நினைக்கத்தான் செய்தார். படுக்கையில் படுத்திருந்த ஸ்ரீராமகிருஷ்ணர் அந்த விநாடியே தம் ஆற்றல் முழுவதையும் திரட்டி எழுந்து உட்கார்ந்து மிகத் தெளிவான குரலில், ‘நாரேன், முன்பு யார் ராமராகவும் கிருஷ்ணராகவும் வந்தாரோ, அவரே இப்போது ராமகிருஷ்ணராக இந்த உடம்பில் இருக்கிறார்: ஆனால் உன் வேதாந்தக் கருத்தின்படி அல்ல’ என்றார். எவ்வளவோ தெய்வீகக் காட்சிகளையும் ஆற்றல்களையும் அவரிடம் கண்டபிறகும் இன்னும் தனது சந்தேகம் நீங்காததற்காக நரேந்திரர் வெட்கமும் அவமானமும் அடைந்தார்.
ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருநாள் நரேந்திரரைத் தவிர மற்ற தமது இளம் சீடர்களை அழைத்தார். அவரால் பேச இயலவில்லை. இருப்பினும் மிக மெல்லிய குரலில் கூறினார்: இதோ பாருங்கள், உங்களை நரேனின் பொறுப்பில் விட்டுச் செல்கிறேன். அவன் கூறுவதன்படி செய்யுங்கள். அவனது ஆரோக்கியத்தையும் மற்ற நலன்களையும் கவனித்துக்கொள்ளுங்கள். ‘பிறகு நரேந்திரரை அழைத்து, இதோ பாராப்பா, நாரேன்! இந்த என் பிள்ளைகளை எல்லாம் உன் பொறுப்பில் விட்டுச் செல்கிறேன். அனைவரிலும் புத்திசாலியும் திறமைசாலியும் நீ. அனைவரையும் அன்புடன் வழிநடத்து. எனக்காகப் பணி செய்’ என்றார்.
ஆகஸ்ட் பதினைந்தாம் நாள். எந்த நாள் வரக் கூடாதென்று பக்தர்கள் கவலை கொண்டிருந்தார்களோ, பக்தர்களை ஆற்றொணா துயரில் ஆழ்த்திய அந்த நாள் வந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. ஸ்ரீராமகிருஷ்ணரின் நோய் இதுவரை இல்லாத அளவு மிகவும் பயங்கரமாக இருந்தது. அவரது நாடி ஒழுங்கற்று துடித்தது. அதுல் என்ற பக்தர் அவரது நாடியைப் பார்த்து, அவரது உடல்நிலை மோசமாகிவிட்டதை அறிந்தார்.சுற்றியிருந்தவர்களிடம், அவர் இனி பிழைப்பது அரிது என்று கூறினார்.
சூரியன் மறைவதற்குச் சிறிதுநேரம் இருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணரால் சீராக மூச்சுவிட முடியவில்லை. மூச்சு இழுக்க ஆரம்பித்தது. பக்தர்கள் தேம்பித்தேம்பி அழத் தொடங்கினர். தங்கள் வாழ்வில் இதுவரை எந்த ஒளி, இன்பத்தை நிறைத்து வந்ததோ அது அணைந்துவிடப் போகிறது என்பதை உணர்ந்த எல்லோரும் அவரைச் சூழ்ந்துகொண்டனர். சிறிதுநேரத்திற்குப் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் தமக்குப் பசிப்பதாகக் கூறினார். நீராகாரம் கொடுக்கப்பட்டது. அவரால் விழுங்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு சிறிது குடித்தார். வாயைக் கழுவி மெல்ல அவரைப் படுக்க வைத்தனர். இரண்டு கால்களையும் நீட்டித் தலையணையின்மீது வைத்தனர். இரண்டுபேர் விசிறினர். படுத்துக்கொண்டிருந்தவர் சிறிதுநேரத்திற்குப் பின் திடீரென்று சமாதியில் மூழ்கினார். உடம்பு அசைவற்று சிலைபோல் ஆகியது. மூச்சு நின்றது.
இத்தனை நாட்களாக இரவும்பகலும் உடனிருந்து சேவை செய்துவந்த சசிக்கு இந்தச் சமாதிநிலை வழக்கமாக அவருக்கு ஏற்படுகின்ற சமாதிபோல் தோன்றவில்லை. எதோ பெரிய மாறுதல் இருப்பதாகத் தோன்றவே அழ ஆரம்பித்தார். நரேந்திரர் எல்லோரிடமும், ‘ஹரி ஓம் தத்ஸத்’ என்று ஓதுமாறு கூறினார். நீண்டநேரம் அதனை அனைவரும் ஓதினர்.
நள்ளிரவுக்குப் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் புறவுணர்வு திரும்பியது. பசிப்பதாகக் கூறினார். மற்றவர்களின் உதவியோடு எழுந்து உட்கார்ந்தார். எல்லோரும் ஆச்சரியப்படும்படி ஒரு கோப்பை கஞ்சி முழுவதையும் எளிதாகக் குடித்து முடித்தார். அவர் இவ்வளவு ஆகாரம் சாப்பிட்டு எத்தனையோ நாட்களாகி விட்டிருந்தன. சாப்பிட்டு முடித்ததும் உடம்பு தெம்பாக இருப்பதாகச் சொன்னார். ஸ்ரீராமகிருஷ்ணர் தூங்குவது நல்லது என்று நரேந்திரர் கூறினார். வலியின் காரணமாக அருகில் இருப்பவரும் கேட்க முடியாதபடி மிக மெதுவாகப் பேசுகின்ற ஸ்ரீராமகிருஷ்ணர் திடீரென்று உரத்த குரலில், ‘அம்மா’ காளி!’ என்று மூன்றுமுறை அழைத்தார். பிறகு மெல்ல படுத்துக் கொண்டார். நரேந்திரர் கிழே சென்றார்.
இரவு ஒரு மணி இரண்டு நிமிடம். கட்டிலில் படுத்திருந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் உடம்பில் திடீரென்று பரவச உணர்ச்சி பாய்ந்தது. மயிர்கள் சிலிர்த்து நின்றன. பார்வை மூக்கு நுனியில் நிலைகுத்தி நின்றது. உதடுகளில் புன்னகை அரும்பியது. அவர் சமாதியில் மூழ்கினார். அது இத்தனை காலமாக அவர் அனுபவித்த சாதாரண சமாதி அல்ல, மகா சமாதி; அன்னை காளியின் மடியில் அவளது அருமைச் செல்வன் என்றென்றைக்குமாகத் துயில் கொண்ட ஆழ்ந்த சமாதி! இந்தச் சமாதிக்குப் பிறகு அவரது உயிர் உடலுக்குள் திரும்பவே இல்லை. அது 1886, ஆகஸ்ட் 16.
அன்னை ஸ்ரீசாரதா தேவி அப்போது அருகில் இல்லை. விவரம் தெரிந்ததும் விரைந்து படுக்கையருகில் வந்து, ‘அம்மா காளீ, நீ எங்கே போய் விட்டாய் என் தாயே!’ என்று கதறினார். அனைவரின் இதயமும் கலங்கியது. குருதேவரின் புனிதவுடல் காசிப்பூர் மயானத்தில் எரியூட்டப்பட்டது. அஸ்தி ஒரு செம்புப் பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு குருதேவர் படுத்திருந்த படுக்கையின்மீது வைக்கப்பட்டது.
முப்பத்து மூன்றே வயது நிரம்பியிருந்த அன்னை அன்று மாலையில் விதவைக் கோலம் பூணலானார். ஆனால் அவரது கணவர் இறந்துவிட்டாரா? மரணமே இல்லாதவராயிற்றே அவர்! அன்னை தம் தங்க வளையல்களைக் கழற்ற முற்பட்டபோது அவர் முன் தோன்றினார் ஸ்ரீராமகிருஷ்ணர்: ‘நான் இறந்துபோனேன் என்றா நீ உன் சுமங்கலிக் கோலத்தைக் களைகிறாய்? நான் இறக்கவில்லை. இதோ இங்கேயே இருக்கிறேன்’ என்று கூறி அன்னையின் முயற்சியைத் தடுத்தார். தொடர்ந்த நாட்களில் மேலும் இருமுறை தம் வளையல்களைக் கழற்ற முற்பட்டார் அன்னை. அப்போதும் குருதேவர் முன்பு போலவே தோன்றி தடுத்தார். அதன் பின் வளையல்களுடனும் மெல்லிய கரையிட்ட சேலையுடனும் நித்திய சுமங்கலியாகவே வாழ்ந்தார் அவர்.
காசிப்பூர் மாயணத்திலிருந்து ஸ்ரீராமகிருஷ்ணரின் அஸ்தியைச் சேகரித்து ஒரு கலசத்தில் அதனைச் சுமந்தபடி காசிப்பூர் தோட்ட வீட்டை அடைந்தார்கள். பக்தர்கள். ‘பகவான் ஸ்ரீராமகிருஷ்ண தேவ் கீ ஜெய்’ என்ற கோஷத்துடன் அதனை ஸ்ரீராமகிருஷ்ணர் படுத்திருந்த கட்டிலில் வைத்தபோது ஸ்ரீராமகிருஷ்ணரின் சான்னித்யத்தை உணர்ந்தாலும், அவர்களின் மனத்தை ஒரு வெறுமை ஆட்கொண்டது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் எந்த ஓர் அழிவற்ற அன்பினால் பிணைக்கப்பட்டிருந்தார்களோ அதே ஆழ்ந்த அன்பு இப்போதும் அவர்களைப் பிணைத்து நின்றது. ஒரே லட்சியத்துடன் வாழ்ந்த அவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலும் தேறுதலும் கூறிக்கொண்டு ஆழ்ந்த நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கினர்.
– சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாற்றிலிருந்து…!
என்ன நண்பர்களே… இப்போது புரிகிறதா ஞானிகளின் இறுதிக்காலம் ஏன் துன்பமயமாக இருக்கின்றன என்று? இன்பமயமாக இருந்தால் நித்தியானந்தாக்கள், பிரேமானந்தாக்கள் தான் உருவாகுவார்கள். துன்பமயமாக இருந்ததால் தான் விவேகானந்தர் போன்றோர்கள் கிடைத்தார்கள். ராமகிருஷ்ணர் மறைந்த பின்பு மடத்தை ஸ்தாபிக்க அன்னை சாரதாதேவி, மற்றும் அவரது சீடர்கள் எவ்வளளவு கஷ்டப்பட்டனர் என்று நீங்கள் படித்தால் கண்கலங்கிவிடுவீர்கள். துயருக்கு இடையே செய்யும் தியாகத்தில் தான் ஒரு நல்ல சிஷ்யப் பரம்பரை உருவாகமுடியும். துறவறம் தேடித் சென்று பின்னர் செல்வம் துய்த்து போகத்தில் திளைத்தவர்களுக்கு என்ன நடந்தது என்று நாம் தான் பார்த்தோமே… இன்றும் பார்க்கிறோமே…!
=======================================================
உங்களுக்காக ஒரு தளம் – உதவிக்கரம் நீட்டுவீர்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. We are striving to sustain. Help us. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break or Donate us liberally.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056. | IFSC Code : UTIB0001182
==========================================================
Also check :
விவேகானந்தர் செய்த சித்திகள் & நவக்கிரகங்களை குளிர்விக்கும் தசாவதார சுலோகம்!
சேவைக்கு சுவாமி விவேகானந்தர் கொடுத்த பரிசு!
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!
‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!
களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!
“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!
பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !
அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?
ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70
வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67
யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!
ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள்
நிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா ?
==========================================================
[END]