எப்படி நடக்குமோ என்று எண்ணியபடி எதிர்நோக்கிய பாரதி விழா நல்லபடியாக நடந்து முடிந்தவுடன் அடுத்த நாள் திங்கட்கிழமை (நேற்று) காலை குன்றத்தூர் சென்று சுப்ரமணிய சுவாமிக்கு நன்றி தெரிவிக்க நினைத்தோம். முருகன் தயவு இல்லையென்றால் இந்த விழா நடந்தேயிருக்காது. உண்மையினும் உண்மை.
விழா நடத்த திட்டமிட்ட நாள் முதல் ஏகப்பட்ட இடைஞ்சல்கள் பொருளாதார நெருக்கடிகள் போதாக்குறைக்கு இயற்கை சீற்றங்கள். இப்படிப் பட்ட சூழலில் சென்ற வாரம் ஒரு நாள் ஒரு உறக்கம் வராத இரவு அர்த்த ஜாமத்தில் எழுந்து முருகனிடம் பிரார்த்தித்தோம். அடிமனதின் ஆழத்திலிருந்து கிளம்பிய பிரார்த்தனை அது. எப்போதாவது தான் அப்படி செய்ய இயலும்.
முருகனுக்கு அது கேட்டிருக்கும் போல. அதுவரை நம்மை வாட்டிய மிகப் பெரிய அச்சுறுத்தல் ஒன்று அடுத்த நாள் தானாக நீங்கியது. விழா ஏற்பாடுகளில் நிம்மதியாக கவனம் செலுத்தினோம். விழா முடிந்தவுடன் குன்றத்தூர் சென்று முருகனை தரிசித்து நன்றி கூறலாம் என்று முடிவு செய்தோம்.
வேதகிரி ஐயா மற்றும் இதர சான்றோர்களின் நல்லாசிகளுடன் விழா நல்லபடியாக நினைத்ததைவிட மிகச் சிறப்பாக நடந்துமுடிந்தது.
மார்கழி துவங்கியதிலிருந்து தொடர்ந்து தினசரி காலை ஒவ்வொரு கோவிலாக சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தாலும் விழா நெருக்கத்தில் பல்வேறு பணிகள் காரணமாக இரவு தாமதமாகத் தான் உறங்கச் சென்றேன். எனவே கடந்த நான்கைந்து நாட்களாக மார்கழி தரிசனம் செய்ய இயலவில்லை. இன்றாவது செய்யவேண்டும் என்று கருதினோம்.
விழா அசதி உடலைவிட்டு நீங்காதபடியால் காலை எழுந்திருக்கக் கூட முடியவில்லை. குன்றத்தூர் போகலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. பேசாமல் நாளை போய்க்கொள்ளலாம் என்று கூட நினைத்தோம்.
நன்றி மறக்கக் கூடாதே… இந்த விழா நடக்குமா நடக்காதா என்று நாம் தவித்த நாட்கள் மனதில் நிழலாடியது. நிச்சயம் இன்று முருகனை தரிசித்து நன்றி கூறவேண்டும் என்று முடிவு செய்து அதற்கு பிறகு உறங்கப் பிடிக்காமல் எழுந்து குளித்துவிட்டு குன்றத்தூர் புறப்பட்டோம்.
நாம் சென்ற நேரம் கோவில் அப்போது தான் திறந்திருப்பார்கள் போல. கூட்டமே இல்லை.
பிள்ளையாரையும் பின்னர் உற்சவரையும் தரிசித்துவிட்டு மூலவரை தரிசிக்க சென்றோம். ஆள் ஆரவமற்ற சன்னதி. நானும் முருகனும் தனியே. காதலாகி கசிந்துருகி ஏது பிழை செய்தாலும் தீது செய்யா தெய்வத்தை தொழுதேன்.
சற்று நேரத்தில் ஐயப்ப சாமிகள் சிலரும் ஒரு பாட்டியும் தரிசிக்க வந்தார்கள்.
நான் எனக்கு தெரிந்த சில பதிகங்களை பாடியபடி நின்றுகொண்டிருந்தேன். ஐயப்ப சாமிகள் போனபின்பு பாட்டி அங்கிருந்து போகவில்லை. முருகனை வேண்டியபடி நின்று கொண்டிருந்தார். கண்களில் ஆறாக கண்ணீர் பெருகியபடி ஓடிக்கொண்டிருந்தது.
“என்ன துன்பமோ அந்த பாட்டிக்கு தெரியலியே… முருகா…” என்று யோசித்தபடி நாம் புறப்பட்டு வந்துவிட்டோம்.
உற்சவரை நமது மொபைலில் புகைப்படமெடுத்துவிட்டு அங்கிருந்த குருக்கள் சிறுவனிடம் பேச்சு கொடுத்தோம். முடிச்சூர் பாடசாலையில் வேதம் படித்துவிட்டு இது போல கோவில்களுக்கும் அர்ச்சகராகவும் இதர சுபகாரியங்களுக்கு வேதம் ஓதச் செல்வதாக கூறினான். இவர்களை போன்றவர்கள் தான் நமது ஹீரோக்கள். எனவே அவனிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு அவன் தொண்டு சிறக்க வாழ்த்து தெரிவித்து அவனுடன் ஒரு செல்பி எடுத்துக்கொண்டு புறப்பட்டோம்.
படியில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு அங்கிருந்தபடி முகநூலில் அது குறித்த ஒரு சிறு அப்டேட்டை அளித்துவிட்டு கீழே இறங்கினோம்.
கீழே வந்தபோது திருஊரகப் பெருமாள் கோவில் கோபுரம் கண்ணில் பட்டது. மருமகனைப் பார்த்தோம். மாமனையும் பார்த்துவிடுவோமே என்று கருதி திருஊரகப் பெருமாளை தரிசிக்கச் சென்றோம். இது தவிர அங்கு சுரேஷ் பட்டர் அவர்களை சந்தித்து வைகுண்ட ஏகாதசி உழவாரப்பணி குறித்தும் பேசவேண்டியிருந்தது. சென்ற ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு இங்கு உழவாரப்பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நாம் சென்ற நேரம் சுவாமிக்கும் பரிவார தேவதைகளுக்கும் நைவேத்தியம் செய்து கொண்டிருந்தார் பட்டர். எனவே சன்னதி திரை போடப்பட்டிருந்தது. பொறுமையாக காத்திருந்தோம்.
நைவேத்தியம் முடித்துவிட்டு வந்தவர் நம்மைப் பார்த்ததும் “வாங்க எப்படி இருக்கீங்க?” என்றார்.
“நல்லாயிருக்கேன் மாமா” என்று கூறி பரஸ்பர நலன் விசாரித்தோம்.
“உங்க வீட்ல விசேஷம்னு கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள் மாமா” என்றோம்.
அவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்திருந்தது. நாங்கள் உழவாரப்பணி செய்ய அங்கு சென்ற ஆண்டு டிசம்பர் இறுதியில் சென்றபோது எங்கள் குழுவினருக்கு மதிய உணவை தனது வீட்டில் செய்து கொண்டு வந்தார். பணம் கொடுக்க முற்பட்ட போது வாங்க மறுத்துவிட்டார். “உங்களுக்கு சாப்பாடு போடுறது எவ்ளோ புண்ணியம்… எங்கம்மா உழவாரப்பணி குழுவுக்குன்னு சொன்னதும் ரொம்ப ஆசையா பண்ணிக்க கொடுத்தாங்க… உங்க கிட்ட இதுக்கு பணம் வாங்கின என்ன தான் திட்டுவாங்க” என்று மறுத்துவிட்டார். நாம் எவ்வளவோ கெஞ்சியும் மறுத்துவிட்டார்.
இருப்பினும் அவருக்கு ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று கருதி, அவர் தீபாராதனை காட்டி தட்டைக் கொண்டு வந்தபோது ஒரு சிறு தொகையை தட்டில் போட்டுவிட்டோம். இதை மறுக்க முடியாதே…! எப்படியோ அவரது சுமையை கொஞ்சமேனும் குறைக்க கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவருக்கு குழந்தை பிறந்ததாக கேள்விப்பட்டோம். உழவாரப்பணி குழுவினருக்கு அன்னம் பாலிப்பு என்பது மிகப் பெரிய அறம். அதை அவர் உணர்ந்ததால் தான் பணம் வாங்க மறுத்துவிட்டார். அவர் செய்த பல புண்ணியங்களுடன் இந்த புண்ணியமும் சேர்ந்து அவருக்கு திருமகள் பிறந்துவிட்டாள் போல…!
விஷயத்திற்கு வருகிறோம். அவர் சுவாமிக்கு நைவேத்தியம் முடித்துவிட்டு பின்னர் சன்னதியை திறந்து அர்ச்சனை, தீபாராதனை முதலியவற்றை முடித்த பின்னர் அவரிடம் வைகுண்ட ஏகாதசி உழவாரப்பணி பற்றி பேசினோம். சென்ற முறை இங்கு நடைபெற்ற உழவாரப்பணி மிகச் சிறப்பாக அமைந்தது.
எப்போதும் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு வரும் ஞாயிற்றுக்கிழமை பணி செய்வோம். இந்த ஆண்டு 08/01/2017 ஞாயிறு அன்று வைகுண்ட ஏகாதசி வருகிறது. அதற்கு முன்பு வரக்கூடிய ஞாயிறு அதாவது வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப் புத்தாண்டு. எனவே அன்று பணி செய்யமுடியாது. கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும். நாள் முழுக்க வந்துகொண்டேயிருப்பார்கள். என்ன செய்வது என்று இருவரும் ஆலோசித்து 07/01/2017 சனிக்கிழமை அன்று உழவாரப் பணி செய்வது என்று முடிவு செய்தோம். வேறு வழியில்லை. அவர்கள் தேவைக்கு தான் உழவாரப்பணி. நமது சௌகரியத்திற்கு அல்ல. வருபவர்கள் வரட்டும். இருப்பவர்களை கொண்டு பெருமாளுக்கு அன்று உழவாரப்பணி நடைபெறும் என்று முடிவு செய்தோம்.
இதற்கிடையே பெருமாளை தரிசித்துவிட்டு நாம் புறப்பட தயாரான போது மேலே முருகன் கோவிலில் கண்ட அதே பாட்டியை இங்கும் கண்டோம். இங்கும் பெருமாளிடம் அழுதபடி பிரார்த்தித்துக்கொண்டிருந்தார். ஏதோ மிகப் பெரிய துன்பத்தில் அவர் இருக்கிறார் போல, என்ன என்று தெரியவில்லையே… நம்மால் உதவக்கூடியதாக இருந்தால் உதவலாமே என்று தோன்றியது.
அவர் அருகே சென்று… “பாட்டி நீங்க தானே கொஞ்ச நேரத்துக்கு முன்ன முருகன் கோவிலுக்கும் வந்தது?”
“ஆமாம்பா…”
“உங்க கிட்டே கொஞ்சம் பேசணும்.. தரிசனம் முடிச்சிட்டு வெளியே வாங்க நான் வெளியே பிரகாரத்துல காத்திருக்கேன்” என்று கூறி – அதற்குள் கோவிலில் கொடுத்த வெண்பொங்கல் பிரசாதத்தையும் வாங்கிக்கொண்டு வெளியே வந்தோம்.
அதை சாப்பிட்டுவிட்டு (அடடா என்ன சுவை!) கையை அலம்பிவிட்டு பாட்டிக்காக காத்திருந்தோம்.
சிறிது நேரத்தில் பாட்டி வந்தார்கள்.
“என்ன பாட்டி அழுதுகிட்டு இருக்கீங்க… அங்கேயும் பார்த்தேன். இங்கேயும் பார்த்தேன். மனசு கேக்கலை. உங்க கஷ்டம் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டோம்.
நாம் கேட்டது தான் தாமதம். உணர்ச்சி பிரவாகமாக வெடித்து கதறியே விட்டார் பாட்டி. (உள்ளுக்குள் எத்தனை சோகத்தை அழுத்தி வைத்திருப்பார் என்று யூகித்துக்கொள்ளுங்கள்!)
“தம்பி எனக்கு ரெண்டு பொண்ணு ரெண்டு பையன். என் வூட்டுக்காரு ஒன்றரை வருஷத்துக்கு முன்னே காலமாயிட்டாரு. என் பொண்ணு ஒன்னு செத்து போயிடுச்சு. புள்ளைங்க என்ன யாரும் வீட்ல வெச்சிக்க மாட்டேங்குறாங்க… இவங்களை கொண்டு போய் உங்க அண்ணன் வீட்டுல விட்டுட்டு வாங்கன்னு ஒரு மருமக சொல்றா. இன்னொரு மருமக இவங்களை ஏன் இங்கே கூட்டிகிட்டு வந்தீங்கன்னு சொல்றா… பொண்ணு வீட்டுல இருக்கமுடியுமா? அங்கேயும் சுகமில்லை. இந்த வயசான காலத்துல நான் இப்படி அலைக்கழிக்கப்படுறேன் தம்பி.. என்னோட கடைசி காலத்தை நினைச்சா பயமாயிருக்கு… எனக்கு ஒரு நல்ல வழி காட்டுன்னு தான் முருகனை வேண்டிக்க போனேன்…”
இதை அவர் அழுதபடி தான் நம்மிடம் கூறினார். கோர்வையாக வார்த்தைகள் வரவில்லை.
அவர் எங்கிருக்கிறார்… அவர் பெயர் என்ன எல்லாவற்றையும் விசாரித்து குறித்துக்கொண்டோம். குன்றத்தூரில் தான் இருக்கிறார். பெயரை வெளியிட நாம் விரும்பவில்லை.
“பாட்டி உங்களை போன்ற ஆதரவற்ற முதியோர்களுக்கு வடலூரில் ஒரு இல்லம் இருக்கு. உங்களை மாதிரி நிறைய பாட்டிமார்கள் அங்கே இருக்காங்க. ஒவ்வொருத்தர் பின்னாடியும் அங்கே கதை இருக்கு. அங்கே உங்களுக்கு சாப்பாடு தங்க இடம் எல்லாம் கிடைக்கும். சௌகரியங்கள் முன்னே பின்னே இருந்தாலும் உங்க கடைசி காலத்துக்கு பாதுகாப்பான இடம் அது.. அங்கே போறீங்களா?” என்று கேட்டோம்.
“நிச்சயம் ராசா… என்னை அங்கே சேர்த்துவிட்டிரு ராசா சௌகரியமெல்லாம் எனக்கு ஒன்னும் வேண்டாம்… குடிக்க கூழ் கிடைச்சாக் கூட போதும். செத்துப் போனா அடக்கம் பண்ணுவாங்களா?”
அவரின் அந்தக் கேள்வி என்னை என்னவோ செய்தது. நன்றாக வாழவேண்டும் என்பதைவிட நன்றாக போய் சேரவேண்டும் என்று அவர் ஏங்குவது புரிந்தது. அப்படியென்றால் அவர் எந்தளவு வேதனையில் இருப்பார் என்று யூகித்துக்கொள்ளுங்கள்.
முதுமை உண்மையில் கொடுமை.
அவர் குடும்ப விஷயம்… நமக்கு தேவையில்லை. அவர் கோவிலில் அழுது அரற்றவில்லை. ஒப்பாரி வைக்கவில்லை. ஆனால் உள்ளத்தின் உணர்ச்சியிலிருந்து கண்கள் வழியாக பெருக்கெடுத்த அந்த கண்ணீர் பொய் சொல்லாது.
“சரி பாட்டி… அந்த இல்லத்தோட விலாசம், நம்பர் தர்றேன்… சிவப்பிரகாச சுவாமிகிட்டே பேசுங்க… என் பேரைச் சொல்லுங்க. உங்களை நிச்சயம் சேர்த்துக்குவாரு… நான் அடிக்கடி அங்கே வர்றவன் தான். நான் வர்றப்போ உங்களையும் பார்க்கிறேன்”
“ரொம்ப நன்றி தம்பி… அந்த முருகன் தான் உங்களை அனுப்பியிருக்கான்… ரொம்ப நன்றி”
“அங்கே உங்களை கூட்டிகிட்டு போக ஆள் இருக்கா? பஸ் சார்ஜ் இருக்கா?”
“அது பிரச்னையில்லை தம்பி… நான் எப்படியாவது போயிடுவேன். யாரையாவது கூட்டிகிட்டு கொண்டு போய் அங்கே சேர்ந்துக்குறேன். ஆஸ்ரமம் விலாசம், போன் நம்பர் மட்டும் கொடுங்க அது போதும்”
ஒரு தாளில் அனைத்தையும் எழுதிக்கொடுத்தோம். அப்படியே நமது பெயர் அலைபேசி எண் இரண்டையும் எழுதிக்கொடுத்தோம்.
“ஏதாவது உதவி தேவைன்னா எனக்கு ஃபோன் பண்ணுங்க! என்னால முடிஞ்சதை செய்றேன்”
“அந்த வடலூர் சுவாமி கிட்டே மட்டும் இப்படி ஒருத்தங்க இருக்காங்க வந்தா சேர்த்துக்கோங்கன்னு சொன்னீங்கன்னா போதும்” என்றார்.
“நிச்சயம் பாட்டி. இன்னைக்கோ நாளைக்கோ அவர்கிட்டே பேசுறேன்” என்று கூறி விடைபெற்றுக்கொண்டோம்.
“நீ நல்லாயிருப்பேப்பா…” என்று நம்மை நெஞ்சார வாழ்த்தினார்.
நம்பினால் நம்புங்கள்… நேற்று இரவு வீட்டுக்கு திரும்புகையில் வடலூர் சிவப்பிரகாச சுவாமிகளிடமிருந்து ஃபோன். பாட்டி ஒருவேளை ஃபோன் செய்திருப்பாரோ என்று தோன்றியது. எட்டையபுரத்திலிருந்து வந்திருந்த நமது பாரதி விழா சிறப்பு விருந்தினர் இளசை மணியன் அவர்களை வழியனுப்ப நாம் சென்றுகொண்டிருந்தபடியால் பேசமுடியவில்லை. வீட்டுக்கு திரும்பவும் நேரமாகிவிட்டது. இன்று காலை சிவப்பிரகாச சுவாமிகளை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் வேறு ஒரு விஷயத்திற்காக பேசுகிறார் என்று புரிந்தது. நம்மை நலம் விசாரித்தவர் நம்மை வடலூர் வந்து செல்லமுடியுமா என்று கேட்டார். பாரதி விழா தற்போது தான் முடிந்தது என்றும் அடுத்த வாரம் வர முயற்சிப்பதாகவும் கூறினோம். அப்போது தான் நாம் குன்றத்தூரில் நேற்று சந்தித்த அந்த பாட்டி பற்றி கூறினோம். அவர்களை அவசியம் இல்லத்தில் சேர்த்துக்கொண்டு அவருக்கு நிம்மதியான ஒரு இறுதிக்காலத்தை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
“நீங்களே வரும்போது கூட்டிகிட்டு வந்துடுங்களேன்” என்றார்.
“இல்லை சுவாமி… நான் எப்போ வருவேன்னு தெரியாது. அந்த பாட்டி நிலைமை மோசமாச்சுன்னா உடனே கிளம்பி வந்துடுவாங்க… ரெண்டாவது அவங்களை எனக்கு முன்னே பின்னே தெரியாது. அவங்க சார்ந்த அல்லது அவரை அறிந்த நபர்கள் அழைத்துக்கொண்டு வருவது கொஞ்சம் நன்றாக இருக்கும்” என்றோம்.
“அப்படியே ஆகட்டும்” என்றார்.
ஒரு விஷயம் கவனித்தீர்கள் என்றால் புரியும்… அந்த பாட்டிக்கு இப்படி ஒரு வழியை முருகன் காட்ட விரும்பித்தான் நம்மை குன்றத்தூர் வருமாறு செய்தான் போல. அதனால் தான் எப்போதும் மார்கழியில் எப்போதும் சீக்கிரம் கண் விழிக்கும் நாம் சற்று தாமதமாக எழுந்து, போகலாமா வேண்டாமா என்று தயங்கி பின் ஒரு ஸ்திரமான முடிவு எடுத்து குன்றத்தூர் சென்றோம்.
கீழே அடிவாரத்தில் பெருமாள் கோவிலுக்கு நாம் சென்ற நேரம் பட்டர் பிராதான சன்னதியில் இல்லை. பிரகாரத்தில் நைவேத்தியம் செய்த்துக்கொண்டிருந்தார். எனவே காத்திருந்தோம். ஒருவேளை பட்டர் சன்னதியில் இருந்திருந்தால் சுவாமியை தரிசித்துவிட்டு உடனே புறப்பட்டிருப்போம். நாம் காத்திருந்த நேரத்தில் (சுமார் 20 நிமிடங்கள்), பாட்டி முருகனை தரிசித்துவிட்டு படியிறங்கி கீழே பெருமாளை சேவிக்க வந்துவிட்டார். எனவே தான் அவரை பார்க்க நேர்ந்தது.
இதில் டைமிங் கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தாலும் பாட்டியை நாம் பார்த்திருக்க முடியாது. அவரும் இப்படி ஒரு வழியை தெரிந்துகொள்ள முடியாமல் போயிருக்கும். இவை அனைத்தும் தெய்வசங்கல்பம். நாம் அதில் ஒரு கருவி. எனவே தான் அனைத்தும் கச்சிதமாக நடந்தது.
நமக்கிருக்கும் வினைப்பயனால் தான் நாம் மனிதர்களை சந்திக்கிறோம். அவர்கள் நம் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பது நாம் பாவம் செய்திருக்கிறோமா அல்லது புண்ணியம் செய்திருக்கிறோமா என்பதை பொறுத்து அமையும். பாவத்தின் சுமையை குறைத்து புண்ணியத்தின் பலனை கூட்டிக்கொடுப்பதே ஆலய தரிசனங்கள் பலன். இந்த சம்பவம் உணர்த்தும் நீதி அது தான்.
முருகனையும் திருவூரகப் பெருமாளையும் தரிசித்தபோது கிடைத்த அந்த மனநிறைவை விட அந்த பாட்டியம்மா நெஞ்சார “நீ நல்லாயிருக்கணும்பா” என்று கண்ணீரை துடைத்துக்கொண்டு வாழ்த்தியது அதிக மனநிறைவை தந்தது. அந்த காட்சி நம் மனதைவிட்டு இன்னும் அகலவில்லை.
பாரதி விழாவின் இறுதியில் நாம் படித்து அனைவரையும் திரும்பக் கூறுமாறு செய்த கலாம் அவர்களின் உறுதிமொழிகளில் ஒன்று நினைவுக்கு வந்தது….
//6. துயருறும் ஐந்துபேரையாவது சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து அவர்களது துயரைத் துடைப்பேன்.//
அதை செயல்படுத்த அடுத்த நாளே வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்!
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்
தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன்
தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை!
========================================================
Don’t miss these articles…
“முதுகுல குத்திட்டாங்க சாமி…!” அழுத மெய்யன்பர். வாரியார் சொன்னது என்ன?
========================================================
இந்த தளத்தை தொய்வின்றி நடத்திட வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவை!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
========================================================
Also check :
பிள்ளைகளுக்கு நீங்கள் மறக்காமல் சேர்க்க வேண்டிய ‘சொத்து’ என்ன தெரியுமா?
95 வயது மூதாட்டியும் அவரது வைராக்கிய சிவபக்தியும்!
108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!
பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?
ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!
கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….
கல்லால அடிச்சாத் தான் கவனிக்கணுமா?
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!
நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கரை புரள, சிவலோகத்தில் சில மணித்துளிகள்…!
களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!
========================================================
[END]
Dear SundarJI,
My eyes full of tears after reading this.. great sir..
Thanks,
Ramesh
Sundarji,
You are Gifted from God to Man Kind. Great Thing.
வணக்கம்
நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை மிகவும் பாதித்த நெகிழ வைக்கும் பதிவு.
படிக்கும் நம் வாசகர்கள் கண்கள் குணமாகும் என்பது உறுதி.
நீண்ட நேரம் அதன் பாதிப்பு மனதில் இருந்தது.
தன் இறுதி காலம் நல்லபடியாக இருக்க வேண்டும் என நினைக்கும் அந்த முதியவரின் எண்ணம் அந்த ஈசன் அருளாலே ஈடேறும்.
நன்றி
.