அடுத்தடுத்து முக்கிய பதிவுகள் வரவிருக்கின்றன. அதற்கு முன் நீண்ட நாட்களாக அளிக்க நினைத்திருந்த இந்தப் பதிவை அளிக்கிறோம்.
விதி என்னும் ஊழ்வினை குறித்த சரியான பார்வை நம் வாசகர்களுக்கு இருக்கவேண்டும். ஏற்கனவே ‘கடவுள் Vs கர்மா’ என்னும் தொடரை நாம் அளித்தது நினைவிருக்கலாம்.
விதியை மாற்ற முடியும் என்று நம்பிக்கை உடையவர்களே அதை மாற்றவும் வல்லவர்களாகிறார்கள். முடியாது என்று நினைப்பவர்களால் நிச்சயம் முடியவே முடியாது.
‘முடியும்’ என்று நினைக்கும்போது தான் உங்கள் வாழ்க்கை தடைகளை தகர்க்கும். படிகளை கடக்கும். சிகரங்களை எட்டும். ‘முடியாது’ என்று கருதினால் முடங்கித் தான் போவீர்கள். முடங்கி உட்காருபவனை சிலந்தி கூட சிறைபிடிக்கும்.
வாழ்க்கையை குறித்து நம் கண்ணோட்டம் பல இருந்தாலும் அவற்றுள் முக்கியமான ஒன்று என்ன தெரியுமா?
‘எப்படியும் இந்த உயிர் ஒரு நாள் போகத் தான் போகிறது. மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்து போய் சேருவதைவிட ஈசனின் மீது நம்பிக்கை வைத்து போய் சேரட்டும். அந்த ஒரு புண்ணியமாவது இந்த ஜென்மகக் கணக்கில் மிச்சம் இருக்கட்டும்.’ – என்பது தான் அது.
‘விதியை வெல்ல முடியாது, நமக்கு விதிக்கப்பட்டதை அனுபவித்தே தீரவேண்டும்’ என்று ஒருவேளை தனிப்பட்ட முறையில் அடியேன் நம்பினால் அடுத்த நொடி என்னால் உயிர் வாழமுடியாது. எதையும் மாற்றமுடியாது என்ற சூழல் எத்தனை கொடுமை? நம்மால் மாற்ற முடியும், எல்லாம் மாறும் என்கிற நம்பிக்கையுடன் தான் ஒவ்வொரு நாளையும் எதிர்நோக்குகிறேன். காரணம் அடியேன் அணுவின் அணுவாக இந்த வாழ்க்கை பயணத்தில் ஒரு ஓரத்தில் செய்யும் சிவத்தொண்டு. (இப்படி சொல்வதே கூட ஒரு வகையில் தற்பெருமை தான். பாவம் தான். இருப்பினும் பதிவின் கருத்துக்கு வலிமை சேர்க்க வேண்டும் என்பதால் இதைச் சொல்கிறோம். ஈசன் மன்னிப்பானாக! ஏனெனில் சிவத்தொண்டு என்பது நாவில் இருக்கக்கூடாது. நடத்தையில் இருக்கவேண்டும். வார்த்தையில் இருக்கக்கூடாது. வாழ்க்கையில் இருக்கவேண்டும். சொல்லில் இருக்கக்கூடாது. செயலில் இருக்கவேண்டும். அது உரைக்கக்கூடியது அல்ல. உணரக்கூடியது என்று நம்புகிறவன் நான்!).
நாம் பலமுறை கூறியிருக்கிறோம். நம் தளத்தின் பதிவுகள் யாவும் எங்கோ யாரோ ஒரு ஜீவனின் தேடலுக்கும் விசும்பலுக்கும் விடையாக அமைகின்றன என்று. அது எத்தனை உண்மை என்பது மற்றுமொரு முறை நிரூபணமாகியிருக்கிறது.
இந்தப் பதிவை இன்று மதியம் அலுவலகத்தில் தயாரித்துக்கொண்டிருந்தபோது நமது பிரார்த்தனை கிளப்புக்கு ஒரு வாசகி பிரார்த்தனை கோரிக்கை அனுப்பியிருந்தார். சமீபத்தில் தான் நமது தளத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் தனது சகோதரி மகனுக்காக பிரார்த்தனை அனுப்பியிருந்தவர் நமது தளத்தை மிகவும் சிலாகித்து ‘எவ்வளவு விஷயங்கள் உள்ள தளம் இது….’ என்று தன் வியப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இன்றைக்கு தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கடந்த ஏழெட்டு மாதங்களாக நெருப்பாற்றில் நீந்தி வந்த அந்த கொடூரம் முடிவுக்கு வந்துவிட்டது போல உணர்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அவருடைய பிரார்த்தனை என்னவோ அதற்கு விடையளிப்பது போலவே (வினை தீர்ப்பு, தீராப் பிணி தீர்தல்) இந்தப் பதிவும் அது தொடர்பாக நாம் அளித்துள்ள பதிகமும் அமைந்துவிட்டன. இப்போது சொல்லுங்கள்… யாரோ ஒருவரின் தேடலுக்கு நம் தளத்தின் பதிவுகள் விடையாக அமைகின்றன என்று நாம் சொன்னது சரி தானே?
நன்றி. பதிவின் கருத்துக்கு வருகிறோம்…!
ஊழ்வினை வலியது என்று கூறிவிட்டு ஒதுங்கிச் செல்வதல்ல நம் சமயம். ஊழ்வினையை வெல்லலாம் என்பதே சைவ சமயத்தின் தீர்ப்பு. அதை வெல்லக்கூடிய வழிமுறைகளையும் அது கூறுகிறது. அதில் மிக மிக மிக முக்கியமானது திருமுறைகளை ஓதுவதும் ஈசனின் கழலை பற்றுவதும். இதை நாம் சொல்லவில்லை. நமக்கு ஞானகுருவாக விளங்கி பன்னிரு திருமுறைகளில் முதல் பாடலை பாடிய திருஞானசம்பந்தர் சொல்கிறார்.
திருஞானசம்பந்தர் கொடிமாடச்செங்குன்றூர் என்னும் பதியில் (இன்றைய திருச்செங்கோடு) தங்கியிருந்தபோது இப்போது போல மழைக்காலம் போய் பனிக்காலம் வந்தது. காலமாற்றத்தினால் ஒரு விஷ காய்ச்சல் பரவியது. பலர் மடிந்தனர்.
சம்பந்தர் இது பற்றி விசாரித்தபோது “இது இங்கு வழக்கமாக நடக்கும் ஒன்று தான். ஒவ்வொரு ஆண்டும் பனிக்காலம் தொடங்கும்போது இந்த காய்ச்சல் பரவி பல உயிர்களை பலி கொள்ளும். இது அவர்கள் முன்ஜென்ம வினை” என்று பதிலளித்தனர்.
அதைக் கேட்டு சம்பந்தர் மிகவும் திடுக்கிட்டார்.. நோயின் மூல காரணம் எது என்று ஆராயாமல் இப்படி “அவ்வினைக்கு இவ்வினை” என்று இப்படி எதற்க்கெடுத்தாலும் வறட்டு வேதாந்தம் பேசி இம்மக்கள் இப்படி அறியாமையில் உழல்கிறார்களோ என்று வருந்தினார்.
மக்களிடம் நேரடியாக சொல்லாமல், தன்னுடன் வந்த அடியார்களுக்கு புத்தி கூறுவது போல அறிவுரைகள் சொன்னார்.
அது தான் புகழ் பெற்ற “அவ்வினைக் கிவ்வினை” பதிகம். ஒவ்வொரு வரியும் அத்தனை அற்புதம். மனம் என்னும் கல்வெட்டில் பொறித்து எப்போதெல்லாம் அவநம்பிக்கை தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் இந்த வரிகளை நினைத்து நம்பிக்கை பெறவேண்டும். சம்பந்தர் நோக்கம் அது தான்.
அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்!
இந்த பதிகத்தின் பொருள் என்ன தெரியுமா?
“நீங்க அனுபவிக்கும் துயரங்களுக்கு காரணம் முன்ஜென்மத்தில் செய்த வினை என்று கூறுகிறீர்கள். ஆனால் அதற்குரிய தீர்வு எது என்று ஆராயாமல் இருப்பது உங்கள் தவறு தானே? நீங்கள் சிவபெருமானுக்கு தொண்டு செய்யும் அடியவர்கள் அல்லவா? சிவதொண்டு செய்பவர்களை செய்வினை வந்து தீண்டுமா? அல்லது அதற்கு அந்த துணிவு தான் வருமா? இது அந்த திருநீலகண்டத்தின் மேல் ஆணை.”
அம்பிகையிடம் ஞானப்பால் உண்ட நம் ஞானக்குழந்தை ஈசன் மீதே ஆணையிட்டு பதிகத்தின் ஒவ்வொரு பாடலையும் முடித்திருப்பதை காண்க.
எனவே விதியை வெல்ல நினைப்பவர்கள், இந்தப் பதிகத்தின் வரிகள் அனைத்தும் மனப்பாடம் ஆகும் அளவிற்கு தினசரி படித்து வரவேண்டும். தினசரி. நிச்சயம் விதி மாறும். வாழ்வும் வளம் பெறும். இது ஈசன் மேல் ஆணை. (அதே போல தீராத நோய் மற்றும் விஷக் காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இப்பதிகம் ஒரு அருமருந்து.)
நாம் இறைவனிடம் என்ன வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைக்கவேண்டும். ‘கடவுளை வணங்கு ஆனால் உன் சம்மட்டியை நிறுத்தாதே’ என்று சொல்வதைப் போல தடைகளை பொருட்படுத்தாமல் போர்க்களத்தில் எத்தனை அம்புகள் தாக்கினாலும் முன்னேறும் யானை போல நம் கடமையை கலங்காது செய்துவரவேண்டும். பிறகு விதியை வெல்வது என்ன அதை புறமுதுகிட்டு ஓடவும் செய்யலாம். இதுவும் திருநீலகண்டத்தின் மீது ஆணை தான்.
மேற்படி பதிவை டவுன்லோட செய்து படிக்க… https://goo.gl/iyQIhs
==========================================================
அவ்வினைக்கு இவ்வினை – Youtube Vidoe & Audio
==========================================================
நம் பாரதி விழாவுக்கு வருகை தாருங்கள்!!
நமது தளத்தின் பாரதிவிழா வரும் 25/12/2016 ஞாயிறு அன்று காலை 9.00 அளவில் நவீன் மஹால் # 41, ஆற்காடு சாலை, வளசரவாக்கம் சென்னை – 600087 என்கிற முகவரியில் நடைபெறவிருக்கிறது. அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட விபரங்கள் இரண்டொரு நாளில் தளத்தில் வெளியிடப்படும். வாசகர்கள் அவசியம் குடும்பத்தோடு வந்திருந்து விழாவை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மங்கல இசை, தேவராம், திருமுறை, பாரதி பாடல்கள், சாதனையாளர்களின் உரை என அனைத்து அம்சங்களும் இவ்விழாவில் உண்டு.
(மகாகவி பாரதியின் பிறந்த நாள் டிசம்பர் 11 என்றாலும் நடைமுறை சிரமங்கள் காரணமாக விழா இரண்டு வாரம் தள்ளி நடத்தப்படுகிறது!) சென்ற ஆண்டு மழை வெள்ள பாதிப்பு காரணமாக பாரதி விழா நடத்த இயலவில்லை. இந்த ஆண்டு அவசியம் நடத்தியே தீரவேண்டும் என்று முடிவு செய்து எளிமையான முறையில் ஏற்பாடுகள் செய்து வருகிறோம். (2017 கோடை விடுமுறையில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெறும்!)
மேற்படி பாரதி விழாவுக்கு வாசக அன்பர்கள் மனமுவந்து பொருளாதார உதவியை நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215 | E-mail : editor@rightmantra.com
==========================================================
Also check கர்மா Vs கடவுள் earlier episodes…
கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)
விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)
கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)
நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)
ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)
==========================================================
விடியும் வரை காத்திரு! துன்பத்தை சற்று பொறுத்திரு!!
தீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்?
எதிர்பாராத பிரச்சனைகளும் நமது பிரார்த்தனையும்!
Where there’s a will, there’s a way!
==========================================================
[END]