பிரார்த்தனை கிளப் பதிவுகள் தயாரிப்பது முன்னைப் போல சுலபமானதாக இல்லை. பொருத்தமான கதை + பதிகம் / பாசுரம் + சிறப்பு விருந்தினர் + பிரார்த்தனை கோரிக்கைகள் + பொதுப் பிரார்த்தனை + FOLLOW UP என பல விஷயங்கள் உள்ளன. இருப்பினும் எப்பாடுபட்டாவது பிரார்த்தனை கிளப் பதிவை மட்டும் மாதமிருமுறை தவறாமல் அளிக்க உறுதி பூண்டிருக்கிறோம். சில சமயம் இடைவிடாத பணிகள் + பயணம் காரணமாக அது முடிவதில்லை. பதிவு தான் அளிக்கவில்லையே தவிர கூட்டுப்பிரார்த்தனை நாம் செல்லும் ஆலயங்கள் அனைத்திலும் தவறாமல் நடைபெற்று வருகிறது. அது பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்தப் பதிவு!
சமீபத்திய பிரார்த்தனை கிளப் பிரார்த்தனை மட்டும் எத்தனை ஆலயங்களில் நடைபெற்றிருக்கிறது தெரியுமா? சுமார் 12 க்கும் மேற்பட்ட கோவில்களில். இதையெல்லாம் அவசியம் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். சம்பந்தப்பட்ட தலங்களை மானசீகமாக தரிசிக்க வேண்டும்.
சென்ற பிரார்த்தனைக்கு மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயரின் உதவியாளர் நாராயணன் அவர்கள் தலைமையேற்றது நினைவிருக்கலாம். அந்த பிரார்த்தனை எப்படி நடைபெற்றது, என்னென்ன கோவில்களில் பிரார்த்தனை சமர்பிக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது என்பதைப் பற்றி சம்பந்தப்பட்ட பிரார்த்தனையாளர்களும் நம வாசகர்களும் அவசியம் அறிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, சுசீந்திரம், அவினாசி உள்ளிட்ட பல தொன்மை வாய்ந்த தலங்களில் மேற்படி பிரார்த்தனை நடைபெற்றது.
==========================================================
நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…
முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
==========================================================
பிரார்த்தனைப் பதிவை கடந்த மாதம் 18 ஆம் தேதி நமது தளத்தில் போஸ்ட் செய்தவுடன் பிரார்த்தனைப் பதிவின் சிறப்பு விருந்தினர் திரு.நாராயணன் அவர்களை அலைபேசியில் அழைத்து விளக்கி, அவர் மேற்கு மாம்பழம் என்பதால் நமது அலுவலகத்திற்கே வந்து பிரார்த்தனைப் பதிவின் பிரிண்ட்-அவுட்டை பெற்றுக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டோம்.
இதையடுத்து அலுவலகத்திற்கு வந்தவரை வரவேற்று உபசரித்து தாம்பூலம் மற்றும் பழங்களுடன் பிரார்த்தனை பதிவின் நகலை அளித்தோம். அப்போது சொன்ன தகவல் உண்மையில் அனைவருக்கும் இனிப்பான செய்தி. அதாவது அடுத்த நாள் காலை சோளிங்கர் செல்லவிருப்பதாகவும் விஸ்வரூப தரிசனத்தின்போது (முதல் தரிசனம்) பிரார்த்தனை கோரிக்கைகளை நரசிம்மர் காலடியில் சமர்ப்பித்து பிரார்த்தனையாளர்கள் அனைவரின் பெயர்களுக்கும் அர்ச்சனை செய்வதாகவும் சொன்னார். நாம் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தோம்.
சொன்னபடியே சோளிங்கர் சென்றவர் அங்கே நரசிம்மரிடம் பிரார்த்தனை கோரிக்கைகளை சமர்ப்பித்து அர்ச்சனையும் செய்தனர். இந்த பிரார்த்தனை பதிவை நமது முகநூலில் ஷேர் செய்தபோது அதை கண்ட இவர் குருநாதர் மன்னார்குடி ஜீயர் அவர்கள் தன் டைம்லைனில் அதை ஷேர் செய்து அருளினார்.
தொடர்ந்து நம் தளம் சார்பாக மயிலை காரணீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றபோது அன்றும் காரணீஸ்வரர் சன்னதியில் அனைத்து பிரார்த்தனையாளர்களுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் பிரார்த்தனை செய்து அர்ச்சிக்கப்பட்டது.
அதற்கு அடுத்த சில நாட்களில் நமது பிறந்த நாள் வர அன்று நாம் சென்ற அனைத்துக் கோவில்களிலும் பிரார்த்தனை சமர்ப்பிக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது. குன்றத்தூர், திருவூரகப் பெருமாள், சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் என்று நாம் சென்ற அனைத்து கோவில்களிலும் பிரார்த்தனை கோரிக்கைகள் சமர்பிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. (இணைப்பில் குன்றத்தூர் முருகனின் பக்கவாட்டில் நமது பிரார்த்தனை பதிவின் பிரிண்ட்-அவுட் அடங்கிய கவர் வைக்கப்பட்டிருப்பதை காணலாம்.)
இது ஒரு பக்கம் இருக்க அடுத்து நாம் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் பயணம் செய்தது நினைவிருக்கலாம். அந்தப் பயணத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், ஆதிசங்கரர் கோவில், தேரூர் கருப்பக்கோட்டை கயிலாய மகாதேவர் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மற்றும் காசி விஸ்வநாதர் ஆகிய திருக்கோவில்களில் பிரார்த்தனையும் அர்ச்சனையும் பிரார்த்தனையாளர்களுக்காக செய்தோம். (இன்னும் பல கோவில்கள் விடுபட்டுள்ளன. அந்தந்த தரிசன அனுபவங்களை பற்றிய பதிவுகளை அளிக்கும்போது அங்கு நாம் சமர்பித்த உங்கள் பிரார்த்தனை கோரிக்கைகளை பற்றி தெரிவிக்கிறோம்.)
இதில் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் பெரியவாவின் அருளாணையின் பேரில் கட்டப்பட்டுள்ள ஆதிசங்கரர் கோவிலில் நடைபெற்ற பிரார்த்தனை மறக்கமுடியாதது. அதே போல தனுஷ்கோடியில் உள்ள விபீஷ்ண பட்டாபிஷேகம் நடைபெற்ற கோதண்டராமர் கோவிலில் நடைபெற்ற பிரார்த்தனையம் அர்ச்சனையும் மகத்தானது.
இவையெல்லாம் தவிர நேற்றைய நமது திருப்பூர் பயணத்தில் அவிநாசி, அவிநாசியப்பர் கோவிலிலும் சுந்தரர் முதலையுண்ட பாலகனை மீட்ட சுந்தரர் கோவிலிலும் கூட பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த முறை பிரார்த்தனை சமர்பித்தவர்கள் உண்மையில் பாக்கியசாலிகள் தான் என்றே தோன்றுகிறது. இத்தனை தெய்வங்களிடம் சமர்பிக்கப்படும் இந்த பிரார்த்தனைகளுக்கு பலன் இல்லாமலா போய்விடும்? ஒரு கணம் சிந்தியுங்கள்! வாழ்த்துக்கள். உங்கள் மீது பொழிந்த கருணை மழை அனைவர் மீதும் பொழியட்டும்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்…. என்ன தெரியுமா?
இத்தனை இடங்களில் உங்களுக்காக பிரார்த்தனை நடைபெறும்போது நீங்கள் அவசியம் மறக்காமல் பிரதி ஞாயிறு மாலை 5.30 – 6.00 பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதே.
மேற்கூறிய தலங்களில் பிரார்த்தனையாளர்கள் பெயர்களால் அர்ச்சனை நடைபெற்றது என்பது சாதாரண விஷயம் அல்ல. பிரார்த்தனையாளர்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட தலங்களுக்கு நேரில் சென்றது போலத் தான் அது.
இப்படி சென்ற பிரார்த்தனை நடைபெற்றது எவ்விதம் என்பது பற்றி தனிப் பதிவே அளிக்கக் காரணம், நீங்கள் இதை அறிந்துகொள்ளவேண்டும், அத்தனை கோவில்களையும் மானசீகமாக தரிசிக்கவேண்டும் என்பதே.
இப்படி இத்தனை தலங்களில் நமக்காக பிரார்த்திக்கும் அதே தருணம் கூட்டுப் பிரார்த்தனையும் செய்வதால் இதில் நமக்கு ஒரு வித மனநிறைவு கிடைக்கிறது. அதுமட்டுமா? இத்தனை பிரார்த்தனை கோரிக்கைகளைக்கு திருச்செவியும் கிடைக்கிறது. எனவே பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்ப்பிக்கும் அன்பர்கள் நாம் இதற்கு எடுக்கும் முயற்சிகளை உணரவேண்டும். அவர்களும் தவறாமல் பிரார்த்தனையில் பங்கேற்கவேண்டும்.
துன்பத்தில் உழலும் எத்தனையோ பேருக்கு கிடைக்காத வாய்ப்பு, பாக்கியம் இவர்களுக்கு கிடைக்கிறது. எனவே அவர்கள் பிரார்த்தனை கோரிக்கை சமர்ப்பித்ததோடு நில்லாமல் அந்த பிரார்த்தனையில் தொடர்ந்து (குறைந்த பட்சம் அவர்கள் பிரார்த்தனை இடம்பெறும் வாரங்களிலாவது பங்கேற்று பிரார்த்தனை செய்து வரவேண்டும். உங்களுக்காக இங்கு பலர் பிரார்த்தனை செய்யும்போது நீங்களும் அவசியம் அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்யவேண்டும். இல்லையெனில் சிகிச்சையளிக்கும் டாக்டரை பார்க்க நோயாளியை தவிர அனைவரும் சென்றது போலாகிவிடும். இதை மறக்கவேண்டாம். நல்லதே நடக்கும்!
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்!
அடுத்த பிரார்த்தனைப் பதிவு தயாராக உள்ளது. இன்று மாலையே அளிக்கப்பட்டுவிடும்.
==========================================================
பாரதி விழா அறிவிப்பு!
நமது தளத்தின் பாரதிவிழா வரும் 18/12/2016 ஞாயிறு அன்று காலை 9.00 அளவில் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள நவீன்ஸ் ஹாலில் நடைபெறவிருக்கிறது. அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட விபரங்கள் இரண்டொரு நாளில் தளத்தில் வெளியிடப்படும். வாசகர்கள் அவசியம் குடும்பத்தோடு வந்திருந்து விழாவை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
(மகாகவியின் பிறந்த நாள் டிசம்பர் 11 என்றாலும் நிகழ்ச்சி நடத்த மண்டபம், சிறப்பு விருந்தினர்களின் அப்பாயின்ட்மெண்ட் உள்ளிட்ட நடைமுறை காரணமாக ஒரு வாரம் தள்ளி நடத்தப்படுகிறது!)
சென்ற ஆண்டு மழை வெள்ள பாதிப்பு காரணமாக பாரதி விழா நடத்த இயலவில்லை. இந்த ஆண்டு அவசியம் நடத்தியே தீரவேண்டும் என்று முடிவு செய்து எளிமையான முறையில் ஏற்பாடுகள் செய்து வருகிறோம். (2017 கோடை விடுமுறையில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெறும்.)
மேற்படி பாரதி விழாவுக்கு வாசக அன்பர்கள் மனமுவந்து பொருளாதார உதவியை நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
==========================================================
உங்கள் கவனத்திற்கு….
நமது பிரார்த்தனை மன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள பல கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரை – அதற்கு பிறகும் கூட – நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
பிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது. கோவிலில் அர்ச்சனை செய்யவே இந்த விபரங்கள் கேட்கப்படுகிறது!)
கோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணை அவசியம் குறிப்படவேண்டும். அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
நன்றி!
==========================================================
Some articles on Power of prayer :
ஒரு பிரார்த்தனை பதிவும் சில கோவில்களும்!
எதிர்பாராத பிரச்சனைகளும் நமது பிரார்த்தனையும்!
வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!
உங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா?
“தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே!”
இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?
ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்!
==========================================================
[END]