Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > அமங்கலமான சொற்களா? விளையாட்டுக்கு கூட வேண்டாமே!

அமங்கலமான சொற்களா? விளையாட்டுக்கு கூட வேண்டாமே!

print

வாழ்க்கைக்கு பிரயோஜனம் இருக்கிறதோ இல்லையோ வாட்ஸ் ஆப் / ஃபேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்கள் நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டன. விரும்பியோ விரும்பாமலோ எத்தனையோ பேரின் கருத்துக்களை நாம் பார்க்க பார்க்க நேரிடுகிறது. அமங்கலச் சொற்கள் நெகடிவ்வான வார்த்தைகள் அவற்றில் சர்வசாதாரணமாக புழங்குகின்றன. எந்த சூழ்நிலையிலும் அவற்றை நீங்கள் பகிரக்கூடாது உச்சரிக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்திருப்பது அவசியம்.

good-words

அமங்கலச் சொற்களை மறந்தும் கூட கூறக்கூடாது என்பது குறித்து நாம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பதிவை அளித்திருந்தோம். பல வாசகர்களின் பாராட்டுக்களை பெற்ற அந்தப் பதிவு புதிய வாசகர்களுக்கும், அதைப் பார்க்காதவர்களுக்கும் சென்று சேரவேண்டும் என்பதால் அதை மீண்டும் இங்கே சில புதிய விஷயங்கள் சேர்த்து தந்திருக்கிறோம்.

இது போன்ற பதிவுகள் ஒன்றுக்கு இரண்டு முறை ஏன் பல முறை படித்து மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டியவை. உங்கள் கணவர் / மனைவியிடம், சுற்றத்திடம், நட்புக்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டியவை.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்…

மங்கலமான நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட நாம் பேசக்கூடாது. பல சமயங்களில் அது பலித்துவிடுகிறது. எனவே அத்தகைய வார்த்தைகளை நாம் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தக் கூடாது. முக்கியமாக நம் வீட்டில் அவற்றை மறந்தும் கூட பேசக்கூடாது. ‘ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்’ என்று சும்மாவா சொன்னார்கள் பெரியோர்கள்?

குழந்தைகள் விஷமம் செய்தால் அக்காலங்களில் எப்படி அதட்டுவார்கள் தெரியுமா?

“உன் கல்யாணக் கையை வெச்சிகிட்டு சும்மாயிருக்க மாட்டே?”

“உன் கிருஷ்ண குறும்பை நிறுத்து முதல்லே”

“அடியே ஸ்ரீதேவி கொஞ்சம் சும்மாயிருக்க மாட்டியா”

என்று தான்.

குழந்தைகளை வைவதில் கூட எத்தனை ஒரு பாசிட்டிவ் அப்ரோச் பாருங்கள். ஏனெனில் குழந்தை விஷமம் தாங்காது நாம் அதை ஏதேனும் திட்டப் போக அப்படியே பலித்துவிடும் வாய்ப்பிருக்கிறது.

எங்கள் வீட்டில் மளிகை பொருட்கள் காலியானால் அதைக் கூட அம்மா நேரடியாக சொல்லமாட்டார்கள். “வீட்ல மளிகை சாமான்லாம் நிறைஞ்சிருக்குடா. சீக்கிரம் வாங்கி போடு!!” என்று தான் சொல்வார்கள்.

three-monkeys

வீட்டில் எந்த சூழ்நிலையிலும் ‘இல்லை’ பாட்டு பாடவே கூடாது. ‘சனியன், நாயே, தரித்திரம் பிடிச்சவனே’ என்றெல்லாம் யாரையும் திட்டக்கூடாது.

அதே போன்று குறிப்பிட்ட ஜாதியை, தொழிலை சொல்லி சிலர் குழந்தைகளை திட்டுவார்கள். எந்த ஜாதியை திட்டுகிறார்களோ அல்லது வெறுப்பு வார்த்தைகளை கூறுவார்களோ அதே ஜாதியில் தான் அவர்கள் வீட்டுக்கு மருமகனோ மருமகளோ வருவார்கள்.

சிலர் வீடுகளில் படிப்பு ஏறாத குழந்தைகளை “நீ உருப்படவே மாட்டே” “நீ மாடு மேய்க்கத் தான் லாயக்கு” என்று சதா திட்டிக்கொண்டே இருப்பார்கள். எந்த சூழ்நிலையிலும் அது போன்ற வார்த்தைகளை உங்கள் பிள்ளைகளை பார்த்து கூற வேண்டாம்.

குழந்தையை அவன் போக்கில் விட்டுப் பிடிக்கவேண்டும். படிப்பு என்றாலே வேப்பங்காயாக கசந்த பல குழந்தைகள் பிற்காலத்தில் வேறு பல துறைகளில் சாதித்துக்கொண்டிருப்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். படிப்பு மட்டும் சோறு போடாது.

எனவே என்றும் எந்த சூழலிலும் நல்ல வார்த்தைகளையே பேசவேண்டும். நல்ல விஷயங்களை பேசுவதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துவதற்காகத் தான் வள்ளுவர், ‘இனியவை கூறல்’ என்னும் அதிகாரத்தையே தனியாக தந்திருக்கிறார்.

நல்ல விஷயங்களை பேசுங்கள். அது நிச்சயம் நடக்கும் என்கிறார் வள்ளுவர். அவர் வார்த்தைக்கு மறுவார்த்தை உண்டோ?

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் (குறள் 96)

(பொருள் : பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.)

maha-periya-at-sri-madam

காஞ்சி மகா சுவாமிகள் பற்றி பலர் பலவித அனுபவங்களை படித்திருப்பீர்கள். மகா ஸ்வாமிகள் மறந்தும் கூட அமங்கலமான வார்த்தைகளை உச்சரிக்கமாட்டார். (அவர் உச்சரித்தால் அது பலித்துவிடும் என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்!) இது தொடர்பாக அவர் ஸ்ரீமடத்து அணுக்கத் தொண்டர்கள் மற்றும் தன்னை தரிசிக்கவரும் பக்தர்கள் பலரிடம் பல சமயங்களில் பல அறிவுரைகள் வழங்கியிருக்கிறார்.

சிறு சிறு விஷயங்களில் கூட தெய்வத்தை சம்பந்தப்படுத்தி அதை செய்பவரை புண்ணியம் தேடச் செய்வது மகா பெரியவாவின் இயல்பு.

ஒரு முறை பத்து வயதுப் பையன் ஒருவன் தரிசனத்துக்கு வந்தான். ‘அவனை விசாரி’ என்று பெரியவாள் அங்கிருந்த தொண்டர்களிடம் ஜாடை காட்டினார்கள்.

ராயவரம் பாலு என்ற அணுக்கத் தொண்டர் அவனிடம் போய், ‘என்ன பெயர்? என்ன பண்ணுகிறாய்?’ என்றெல்லாம் விசாரித்துவிட்டு வந்து பெரியவாளிடம் சொன்னார்.

”ராமகிருஷ்ணனாம்… அஞ்சாவது படிக்கிறானாம்… அப்பா சமையல் வேலை செய்யறாராம்… ரெண்டு தங்கை…”

பெரியவாள் வலது கையை சற்றே உயர்த்திக் காட்டிவிட்டு பிரசாதம் கொடுக்கச் சொன்னார்கள்.

திருநீறு – குங்குமத் தட்டை அவனிடம் நீட்டிய பாலு, ”நன்றாகப் படி” என்றார்.

பாலு திரும்பி பெரியவாள் அருகில் வந்ததும், ”இனிமேல் படி… படி… என்று சொல்லாதே” என்றார்கள்.

பாலுவுக்குப் புரியவில்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் பையனைப் பார்த்து, “படி… படி…” என்று அறிவுரை கூறுவது தவறில்லையே?”

”இனிமேல் பள்ளிக்கூட பசங்களைப் பார்த்தால் நல்லா வாசி… வாசி… ன்னு நாலைந்து தடவை சொல்லு…”

‘அட, இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?’ பாலுவின் மனதுக்குள் எழும் ஐயத்தை பெரியவா உணரமாட்டாரா என்ன ?

”வாசி… வாசின்னு நாலஞ்சு தடவை சொல்லிப் பாரு… சிவா… சிவான்னு பகவன் நாமா வரும்…”

அட! மரா… மரா… சொன்னால், ராம நாமம் வருவது போல வாசி வாசி என்று சொன்னால் சிவா…!

ஞானிகள் சிந்தனை எப்போதும் இப்படித்தான் இருக்கும்.

நல்லதையே பேசவேண்டும். நல்லதையே நினைக்கவேண்டும்.

“துடைச்சு குடுத்துட்டேன்… எல்லாத்தையும் இழந்துட்டேன்… தரித்திரம் பிடிச்சிடுச்சு …. நான் எங்கே போவேன்… என் கிட்டே இல்லை… அது வரவே வராது…. அவன் தரமாட்டான்…. கையை விரிச்சிட்டேன்…. வீட்டில ஒன்னும் இல்லை….” இது போன்ற அன்றாடம் சிலர் உபயோகிக்கக் கூடிய எதிர்மறை சொற்களை நீங்கள் மறந்தும் கூட உச்சரிக்கவேண்டாம். அத்தகையவர்களிடம் விலகி இருங்கள். நாம் இது போன்றவர்களிடம் நட்பு பாராட்டுவதில்லை. விலகி தான் இருப்போம்.

பகுத்தறிவு வேடம் பூண்டு மீறி உச்சரித்தவர்கள் நிலை என்னவானது என்பதை கீழே தந்திருக்கும் சோ அவர்களின் கட்டுரை மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

பத்திரிக்கையாளரும் நடிகருமான ‘சோ’ அவர்கள் குமுதம் இதழில் திரையுலக அரசியல் அனுபவங்களை ‘அண்ணே வாங்கண்ணே’ என்ற பெயரில் தொடராக எழுதினார். (அது பின்னர் ‘சோவின் ஒசாமஅசா’ என்னும் நூலாக குமதம் பதிப்பகத்திலிருந்து வெளியானது!) அதில் ஒரு முறை அவர் ‘அவநம்பிக்கையான வார்த்தைகளை தவிர்க்கணும்’ என்ற தலைப்பில் சில முக்கிய விஷயங்களை தனது திரையுலக அனுபவத்திலிருந்து குறிப்பிட்டுள்ளார். அனைவரும் படித்து தங்கள் நட்புக்கும் சுற்றத்துக்கும் பகிர்ந்துகொள்ளவேண்டிய ஒன்று இது. அந்தளவு மிகப் பெரிய விஷயங்களை அனுபவப்பூர்வமாக திரு.சோ. சொல்லியிருக்கிறார்.

சோ அவர்களின் சில கொள்கைகளில் நமக்கு உடன்பாடு கிடையாது. மற்றபடி அவர் என்றும் மதிப்புக்குரியவர் தான்.

கீழ்கண்ட கட்டுரையில் அவநம்பிக்கையான சில வார்த்தைகளை விளையாட்டாக கூட சொல்வது எந்தளவு சம்பந்தப்பட்டவர்களை படுகுழியில் தள்ளியிருக்கிறது என்பதை மிக அற்புதமாக விளக்கியிருக்கிறார். மேலும், மற்றவர்கள் பேசத் தயங்கிய அவநம்பிக்கையான வசனங்களை மார்தட்டிக்கொண்டு முன்னின்று பேசிய பகுத்தறிவுவாதி ஒருவர் காணாமல் போன விபரத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.

படியுங்கள். பகிர்ந்துகொள்ளுங்கள். முக்கியமாக உங்கள் மனைவியிடம் அல்லது அம்மாவிடம். அவர்களுக்கு தெரியும் இதன் முக்கியத்துவம்.

==========================================================

Also check : 

பிள்ளைகளுக்கு  என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?

உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா? MUST READ

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்!

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் – ஒரு கதையும் ஒரு சம்பவமும்!

==========================================================

அவநம்பிக்கையான வார்த்தைகளை ஏன் தவிர்க்கவேண்டும்?

  • சோ ராமசாமி

சினிமாவுலகம் எத்தனையோ அற்புதமான கலைஞர்களை, மனிதர்களை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறது.

அப்படிப்பட்ட அருமையான நடிகர்களில் ஒருவர் வி.கே.ராமசாமி பாய்ஸ் கம்பெனி காலத்து நடிகர். யாரையும் குறைத்துப் பேச மாட்டார். அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும்.

ஒரு படத்துக்கான சூட்டிங்கின்போது வயதில் சிறியவரான ஒரு புது நடிகர் செட்டுக்குள் நுழைந்ததும் ”வாங்கண்ணே” என்று பெரிதாக குரல் கொடுத்தார் வி.கே. ஆர்.

அவர் கிளம்பினதும் ”ஏன் சார்… அவரைப்போய் இவ்வளவு சீனியரான நீங்க அண்ணன்னு சொல்றீங்க” என்று கேட்டேன்.

”உங்களுக்கு என்ன? சினிமா இருக்கு… நாடகம் இருக்கு. டி.டி.கே. வேலை இருக்கு. பத்திரிகை இருக்கு. சினிமா இல்லாட்டி கூட நீங்க எங்கேயாவது போய் பொழைச்சுக்கலாம். எனக்கெல்லாம் அப்படியா? சினிமாதான் பொழைப்பு. அதனாலே சினிமா இன்டஸ்ட்ரிலே எவ்வளவு சின்னவராக இருந்தாலும் எனக்கு அண்ணன் தான். யாரா இருந்தாலும் ‘அண்ணே, – வாங்கண்ணேதான்.” சிரித்தபடியே சொன்னார் வி.கே.ஆர்.

cho-ramasamy

‘நாம் இருவர்’ என்கிற மேடை நாடகத்தில் இவருக்கு அப்பா ரோல்! அப்போது அவருக்கு வயது பதினெட்டு!!

சூட்டிங்கின்போது இவர் போய் நின்றிருக்கிறார்.

“உன்னை இல்லப்பா… நாடகத்தில் அப்பா ரோல் போட்டவரை கூப்பிட்டிருக்கோம்” என்றிருக்கிறார்கள்.

”இல்லை… நான்தாங்க அது.”

”நீயா நாடகத்தில் அப்பா ரோல் பண்ணினே?”

”ஆமாம்” என்றதும் வி.கே.ஆரை அந்த ரோல் பண்ணச் சொல்லியிருக்கிறார்கள். இதைச் சொல்லி விட்டு சிரிப்போடு அவர் சொன்னார்.

”அன்னைக்குத் தலைக்கு நரை பூச ஆரம்பிச்சது… இன்னும் விடலை.”

சர்வசாதாரணமாக ஜோக்குகளை சரளமாகச் சொல்வார் வி.கே.ஆர். ஸ்கிரிப்டில் இல்லாததை எல்லாம் ரொம்பவும் லாகவமாக அந்தந்த இடத்தில் பேசுவார். நாம் சூட்டிங் ஸ்பாட்டில் அதை கவுன்டர் பண்ணி ஏதாவது பேசினால் ரசிப்பார். பாராட்டுவார்.

பார்த்தால் மிகவும் அலுப்புடன் அவர் பேசுகிற மாதிரி இருக்கும். ஆனால், அவர் பண்ணுகிற ரோலுக்கு நன்றாக எடுபடும். விதவிதமான ரோல்களை சாதாரணமாகப் பண்ணியிருக்கிறார். வில்லனாகவும் நடித்திருக்கிறார். சொந்தமாகப் படமும் தயாரித்திருக்கிறார்.

சினிமா பத்திரிகை ஒன்றிற்காக வி.கே.ஆருடன் நான் உரையாடுகிற சந்தர்ப்பம் அமைந்தபோது துக்ளக் அலுவலகத்திற்கு வந்திருந்தார் வி.கே.ஆர்.

வந்ததும் அவரை வரவேற்று நான் எப்போதும் அமர்கிற சேரில் அவரை உட்கார வைத்த பிறகே எங்களுக்கிடையிலான உரையாடல் துவங்கியது.

என் மனதில் அவருக்கென்றிருந்த இடத்தின் அடையாளம் அது என்றும் சொல்லலாம்.

actor-thangavelu-23ங்கவேலு- தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் தனக்கென்று தனித்தன்மையை உருவாக்கியவர்.

டயலாக்கை அவர் டெலிவரி பண்ணுகிற விதம் அபாரமாக இருக்கும். வசனத்தில் நகைச்சுவை இல்லாவிட்டால் கூட அதை அவர் உச்சரிக்கிற விதத்தில் நகைச்சுவை பிரமாதப்படும். அவருக்கு சில விஷயங்களில் தீவிரமான நம்பிக்கை உண்டு. அதை அவருடைய இறுதிக்காலம் வரை கடைப்பிடித்தார்.

”நீ உருப்பட… மாட்டே… நாசமாப் போயிடுவே” என்கிற மாதிரியான டயலாக்குகள் படத்தில் வந்தால் அதை அவர் பேசமாட்டார். மறுத்துவிடுவார். ‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் சிவாஜியிலிருந்து எல்லா கேரக்டர்களும் என்னைத் திட்டிக் கொண்டே இருப்பார்கள். தங்கவேலுவும் காட்சிப்படி என்னைத் திட்ட வேண்டும். திட்டும்போது கூட ”நீ நாசமாப் போயிடுவே” என்கிற வார்த்தையை நான் சொல்ல மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

”எவன் வாயில் எந்த நேரத்தில் என்ன இருக்குமோ… அதைச் சொல்லக் கூடாது. தமிழில் ஒருத்தரைத் திட்ட இந்த இரண்டு வார்த்தைகள் தான் இருக்கா என்ன? வேறு ஏதாவது மாத்துங்க”

காட்சி முடிந்ததும் அவரிடம் கேட்டேன்.

”இல்லை… நாம ஏதாவது ஒரு வார்த்தை சொல்லும்போது அது அந்த நேரத்தைப் பொறுத்துப் பலிச்சாலும் பலிச்சுரும்… இதுக்கு ஒருத்தர் முனிவரா இருக்க வேண்டிய அவசியமில்லை… சாதாரண ஆள் கூட சொல்ற நேரத்தைப் பொறுத்துப் பலிச்சிரும். அதனால்தான் நான் அந்த மாதிரி வார்த்தைகளைப் பயன்படுத்துறது கிடையாது…” என்று சொல்லிவிட்டு ஒரு சம்பவத்தை விவரித்தார்.

==========================================================

Also check : 

நாலு பேருக்கு நல்லது செய்வதால் நமக்கு என்ன கிடைக்கப்போகிறது?

துன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி !

மறுப்பதும் ஒரு கலை, அதை அழகாக செய்வோமே!

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? 

‘எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்!’ MUST READ

==========================================================

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் குழுவில் இருந்தவர்தான் தங்கவேலு. அவருக்கு ஒரு முறை பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது என்.எஸ்.கே.யிடம் போய் உதவி கேட்டிருக்கிறார். போனதும் என்.எஸ்.கே. தன்னுடைய சட்டைப் பையில் கையை விட்டு இருந்த பணத்தையெல்லாம் தங்கவேலுவிடம் கொடுத்து. ”இந்தா… என்கிட்டே இருந்த லட்சுமியை உன்கிட்டே கொடுத்துட்டேன்” என்றிருக்கிறார். தங்கவேலுவுக்கு அதை வாங்கும்போதே சுருக்கென்றிருந்திருக்கிறது. இதை விவரித்துவிட்டு என்னிடம் கவலையோடு சொன்னார்.

அன்னைக்கிருந்துதான் என்.எஸ்.கே,யின் மார்க்கெட் இறங்க ஆரம்பிச்சது. என்னுடைய மார்க்கெட் உயர ஆரம்பிச்சது. அன்னைக்கு அந்த வார்த்தையை அவர் சொன்ன வேளை அப்படி… அதனால் யாரிடமும் அவநம்பிக்கையான வார்த்தைகளை உபயோகிப்பதைத் தவிர்க்கணும்.”

இப்படிப்பட்ட அவருக்கே ஒரு நாள் விபரீத ஆசை வந்திருக்கிறது. ‘ரூபாய் நோட்டைக் கட்டிலில் பரப்பி அதில் படுத்துக் கொள்ள வேண்டும்’ என்று.

”அப்போது எனக்கு இருந்த பாப்புலாரிட்டினாலே இந்த மாதிரி கூடாத எண்ணம் வந்திருக்கலாம். அப்படியே பண்ணவும் செஞ்சேன். அதிலிருந்தே என்னுடைய் மார்க்கெட் இறங்க ஆரம்பிச்சது. இந்த மாதிரி எதையும் அலட்சியமா நினைக்கக் கூடாது.”

இந்தச் சமயத்தில் பீம்சிங்கின் உதவியாளர் சடகோபன் சொன்ன ஒரு விஷயத்தை இங்கு சொல்ல வேண்டும். ‘மெய்யப்பன்’ என்கிற படம் பல வருடக்கணக்கில் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரம். அதில் கே.ஆர். ராமசாமி ”பாட மாட்டேன்” இனி நான் பாடமாட்டேன்” என்று ஒரு பாடலின் பல்லவியைப் பாடும்போது சிலர் அந்த வார்த்தைகளை மாற்றி விடலாம் என்றும் ஆறமிழந்த வார்த்தைகள் பாடலில் வர வேண்டாம் என்றும் அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.

கே.ஆர்.ராமசாமி திராவிட இயக்கத்துக்காரர். பகுத்தறிவுவாதி வேஷம் போடுகிற பகுத்தறிவுவாதியல்ல. உண்மையாகவே அப்படி இருந்தவர். அந்தப் பாடலைப் பாடுவதற்கு முன்னால் இதில் எல்லாம் போய் பைத்தியக்காரத்தனமா நம்பிக்கை வைச்சா என்ன பண்றது? பாடப்போடறது நான்தானே. எனக்கு ஆகிறது ஆகட்டும் நான் இதையே பாடுறேன்” என்று சொல்லி ”நான் பாட மாட்டேன்” பாடலைப் பாடியிருக்கிறார்.

அதுதான் கடைசியாக அவர் பாடிய பாட்டாம்.

தங்கவேலு சொன்ன எச்சரிக்கை உணர்வுடன் ஒப்பிடத் தூண்டுகிற விதத்தில் இருக்கிறது இந்தச் சம்பவம்.

வயதிலும், நடிப்பிலும் சீனியரான அவர் என்னைப் போன்றவர்களுடன் நடிக்கும்போது எந்த வயது வித்தியாசமும் தெரியாது. அந்த அளவுக்குப் பழகுவார். சரளமாகப் பேசுவார்.

இதேமாதிரி தன்னுடைய இறுதிக்காலம் வரை தான் நடிக்கும் படங்களில் ஆபாசமாகவோ இரட்டை அர்த்தம் வருகிற மாதிரியோ எந்த வசனத்தையும் பேசமாட்டேன் என்பதைக் கடைப் பிடித்தவர் தங்கவேலு.

அருமையான அந்தக் கலைஞர்கள் மறைந்து விட்டார்கள். அவர்கள் கடைப்பிடித்த பிடிவாதமான சில பண்புகள் இப்போதும் நினைவில் நிறைந்திருக்கின்றன.

நன்றி : மணா | சோவின் ஒசாமஅசா | குமுதம்

¶¶ ARTICLE END ¶¶

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

==========================================================

Also check : 

எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

ஒரு சிறு புன்னகை செய்த மாயம்!

==========================================================

[END]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *