ரயில்வே பெர்த்தானாலும் சரி திடீர் பயணத்தில் கிடைக்கும் தொலைதூர பஸ் சீட்டானாலும் சரி… நீங்கள் விரும்பியவாறு ஒன்று கிடைத்தால் நிச்சயம் அதில் கிடைக்கும் மனநிறைவை அனுபவியுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் இது நிச்சயமில்லையே… ஏனெனில் சில நேரங்களில் விஷயம் நமது கட்டுப்பாட்டுக்கு அப்பால் இருக்கும். விரும்பாதது அமையும். ‘வேண்டாம்’ எல்லா சமயங்களிலும் மறுத்துவிடமுடியுமா?
அப்படி உங்கள் விருப்பத்திற்கு நேர்மாறாக ஒரு சீட்டோ சக பயனாளியோ அமைந்தால் அப்போது அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?
அந்த எட்டு மணி நேர பயணத்தை எப்படி கழிப்பீர்கள்?
ஒரு வித ஆற்றாமை? சோகம்? மனஉளைச்சல்?
இவை யாவுமே தவறு.
ஏனெனில், அடுத்த பயணம் உங்களுக்கு சுகமாக அமையலாம். ஆனால், இந்த எட்டு மணிநேரம் உங்களுக்கு திரும்ப கிடைக்காது.
சேர்த்து வைத்த ஐநூறு ஆயிரம் நோட்டுக்கள் இப்படி செல்லாக்காசாகிவிட்டதே என்று பரிதவித்து அரசையும் சூழ்நிலையையும் நொந்துகொள்ளும் நாம் இறைவன் அதைவிட மதிப்புமிக்க 24 மணிநேரத்தை ஏற்றத் தாழ்வில்லாமல் நமக்கு தந்திருக்கிறான். அதை செல்லாக் காசாக்கலாமா?
பணத்தை கூட நாம் எப்படியாவது நாளை சம்பாதித்துவிடமுடியும். ஆனால் நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் இழந்த நேரத்தை? அதை யாராலும் உங்களுக்கு திரும்ப தரமுடியாது.
எனவே சூழ்நிலைகளை நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளவேண்டும். ஒரு வெற்றியாளன் அதைத் தான் செய்வான். அதைப் பற்றித் தான் இந்த பதிவு.
சில நேரங்களில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது சென்னை கோயம்பேடு சென்று பேருந்தில் ஏறுவோம். நாம் ஏறக்கூடிய பேருந்தில் பாதிக்கும் மேல் இருக்கைகள் காலியாக இருக்கும். ஒரு நல்ல சீட்டை தேர்ந்தெடுத்து அமர்ந்தால் அந்த சீட்டில் இருக்கும் ஜன்னல் கண்ணாடி மேலே ஏற்ற முடியாத அளவு இறுகிப்போயிருக்கும். சரி… என்று மற்றொரு சீட்டில் அமர்ந்தால் அதில் சீட் கோணலாக இருக்கும். மற்றொரு சீட்டில் அமர்ந்தால் புஷ் பேக் வேலை செய்யாது. இப்படி அங்கே அமர்ந்து இங்கே அமர்ந்து கடைசியில் ஒரு சீட்டை தேர்ந்தெடுத்து அமர்ந்துவிடுவோம். இங்கே எந்த சீட்டை தேர்ந்தெடுப்பது என்கிற சாய்ஸ் நம்மிடம் இருக்கிறது. எனவே மகிழ்ச்சியும் நம்மாலே தீர்மானிக்கப்படுகிறது.
ஆனால் எல்லா நேரமும் இப்படி அமையுமா?
மகாமகத்துக்காக பிப்ரவரி மாதம் கும்பகோணம் சென்றுவிட்டு திரும்பும்போது பஸ்ஸில் சீட் கிடைக்கவில்லை. ஒரு பஸ்ஸில் ஒரே சீட் இருந்தது. அதுவும் பின்பக்கத்தில் கடைசி வரிசையில் நடு சீட். யாரும் விரும்பாத சீட். இருப்பினும் அன்றைய சூழ்நிலையில் அதுவே பெரிய விஷயம் என்பதால் மனம் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டது.
பின்பக்கம் தூக்கி தூக்கி போடும் என்று சதா புலம்பும் மனம் அந்த நெருக்கடியிலும் கிடைத்த ஒரு சீட்டுக்காக சந்தோஷப்பட்டது.
விரும்பாத சீட் இப்போது மட்டும் எப்படி மகிழ்ச்சியை தருகிறது?
இதே போலத் தான் ரயில் பெர்த்தும். சக பிரயாணிகள் முதுமையையோ அல்லது வேறு எதோ காரணத்தையோ காட்டி அவர்களுக்கு அலாட் செய்த அப்பர் பெர்த்தை நமது சைட் லோயருக்கு விட்டுக்கொடுக்கும்படி கேட்கும்போது அசௌகரியமாயிருக்கிறது. ஏதோ இழக்கக்கூடாததை இழந்துவிட்டது போலவும் தியாகம் செய்தது போலவும் சிலர் முகம் சிறுத்துப் போய்விடுவார்கள். அவர்களுக்கு அதன் பிறகு அந்தப் பயணம் ருசிக்காது.
இதுவே ஐம்பதுக்கும் மேல் வெயிட்டிங் லிஸ்ட் இருந்து, சீட் கிடைக்குமா கிடைக்காதா என்று கடைசி வரை தெரியாமல் ஒருவித பரிதவிப்பில் இருக்கும்போது RAC கிடைத்து ட்ரெயின் புறப்பட்ட பிறகு கிடைக்கும் மிடில் பெர்த் கூட இனிக்கிறது. “எனக்கு பெர்த் கன்பார்ம் ஆகிடுச்சு” என்று அதையே குடும்ப உறுப்பினர்களும் ஏதோ சாதனை போல செய்தி அனுப்பத் தோன்றுகிறது.
முதலில் கிடைக்காத மகிழ்ச்சி இப்போது மட்டும் கிடைத்தது?
எல்லாவற்றுக்கும் காரணம் மனம் தான்.
எனவே மனதை எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளவும், அதில் மகிழ்ச்சியை காணவும் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும்.
இதனால் என்ன நன்மை?
என்ன அப்படி கேட்டுவிட்டீர்கள். பல நேரங்களில் நமக்கு பரிசும் பாடமும் நாம் எதிர்பாராத விரும்பாத தகாத சூழ்நிலைகளில் இருந்து தான் வருகிறது.
ஒரு சம்பவம்
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், நாம் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்தபோது நண்பர் ஒருவருக்கு நடந்தது இது. ஸ்க்ரீன் பிரின்டிங் ஆர்டர், காலண்டர் & டயரி ஆர்டர் என்று பலவற்றை ஆர்டர் எடுத்து செய்து விற்பனை வருகிறார். அது தொடர்பாக நாம் பணிபுரியும் அலுவலகத்துக்கு வருவார். தீபாவளி சீஸனின்போது சிவகாசிக்கே போய் கிப்ட் பாக்ஸ் பட்டாசுகள் நிறைய வாங்கி வந்து இங்கே அவருக்கு தெரிந்தவர்களுக்கு விற்பார். பல சிறிய நடுத்தர கம்பெனிகளில் தங்கள் ஊழியர்களுக்கு தர அதை வாங்குவார்கள். சென்னையை கம்பேர் செய்யும்போது விலை மிகவும் குறைவாக இருக்கும்.
அப்போது தீபாவளி வந்தது. தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே பலத்த மழை. சென்னையே வெள்ளக்காடாக இருந்தது. மழையில் பட்டாசு வெடிக்க முடியாது என்பதால் அந்த வருடம் பட்டாசு விற்பனை படு மந்தம். லட்சக்கணக்கில் முதலீடு செய்து கடை போட்டவர்களுக்கு பலத்த இழப்பு.
நண்பரும் அதற்கு சில நாட்கள் முன்பு தான் சிவகாசி சென்று பட்டாசு ஆர்டர் செய்திருந்தார். இந்நிலையில் மழை பிடித்துக்கொள்ளவே வழக்கமாக இவரிடம் பட்டாசு கிப்ட் பாக்ஸ் வாங்கும் யாரும் இவரிடம் இந்தமுறை வாங்கவில்லை. ஆர்வமும் காட்டவில்லை. என்னிடம் கேட்டபோது… “எனக்கு ரெண்டு பாக்ஸ் கொடுங்க போதும்” என்றோம். “ஒரு பத்து பாக்ஸ் வாங்கிக்கோங்க சார்” என்றார். நாம் மறுத்தோம். “பத்து பாக்ஸ் வாங்கி யாருக்கு கொடுக்கிறது? மழை வேற. வெளியே கூட எங்கேயும் போக முடியாது. இதுவே உங்களுக்காக வாங்கிக்கிறேன் சார்…” என்றோம்.
“என்ன பண்றதுன்னு தெரியலே… போனவாரம் தான் சிவகாசி போய் 250 பாக்ஸுக்கு ஆர்டர் பண்ணி அட்வான்ஸ் பண்ணிட்டு வந்தேன். இப்போ மழை என்னடான்னா இப்படி பெய்யுது… வழக்கமா வாங்குறவங்க யாருமே இண்ரெஸ்ட் காட்டலை…” என்று தனது வருத்தத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
“கவலைப்படாதீங்க ஏதாவது நல்லவழி பிறக்கும்…” என்று அவருக்கு நம்பிக்கை கூறி அனுப்பிவைத்தோம்.
தீபாவளியும் வந்தது. மழையோ விட்டபாடில்லை. தீபாவளிக்கு நான்கு நாட்கள் கழித்தும் மழை தொடர்ந்தது.
இந்நிலையில் சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு நாள் அவரிடம் பேச நேர்ந்தது. அப்போது மறக்காமல் கேட்டோம்… “பட்டாசெல்லாம் என்ன சார் பண்ணீங்க? வித்துச்சா… மழை விடவேயில்லையே” என்று.
“சார் உங்ககிட்டே பேசினதுக்கு அடுத்த நாள் ஒரு வேலையா திருப்பூர் போகவேண்டி இருந்தது. சீசன் டயங்குறதால பஸ்ல சீட்டே கிடைக்கலை. மறுநாள் காலையில நான் கட்டாயம் திருப்பூர்ல இருந்தாகணும். வேற வழியில்லாம கிடைச்ச பஸ்ல கிடைச்ச சீட்ல ஏறி உட்கார்ந்தேன். உட்கார்ந்தா என் பக்கத்துல உட்கார்ந்திருந்த ஆள் சரக்கு போட்டிருந்தார். எனக்கு குமட்டிகிட்டு வந்தது. பஸ்ல சீட் காலியிருந்தா மாறி உட்கார்ந்துக்கலாம். ஆனா, இந்த நேரத்துல சீட் கிடைச்சதே பெரியவிஷயம். சரி ஒரு நைட் தானே பல்கலைக் கடிச்சிக்குவோம்னு சொல்லி பேசாம வந்தேன். கோயம்பேட்டை விட்டு வெளியே வர்றதுக்கே ஒரு மணிநேரம் ஆகிடுச்சு. தூங்கலாம்னா தூக்கமும் வரலை. எனக்கு இந்தப் பக்கம் உட்கார்ந்திருந்தவர் கிட்டே பேச்சு கொடுத்துக்கிட்டு வந்தேன். கோயம்பேடு நெரிசல் தொடங்கி சர்வதேச பொருளாதாரம் வரை எங்க பேச்சு எங்கெங்கேயோ போச்சு. அப்போ என்ன பண்றீங்கன்னு ஒருத்தரை ஒருத்தர் கேட்டுக்கிட்டோம். அவர் சேலத்தில் ஒரு சிறு மளிகை கடை வைத்திருப்பதாகவும் உடல்நிலை சரியில்லாத மாமனாரை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். நான் என் பிஸ்னஸை பற்றி சொல்லி, இந்த மழையால் ஏற்பட்ட நஷ்டத்தையும் சொன்னேன்.
அப்போது தான் அவர் சொன்னார்… “சார் நான் என் கடை வாடிக்கையாளர்களிடம் தீபாவளி ஃபண்ட் போட்டிருக்கேன். கடந்த பத்து வருஷமா போட்டுக்கிட்டு வர்றேன். எப்போவுமே லோக்கல்லயே பட்டாசு வாங்கி தந்துடுவேன். வருஷா வருஷம் பட்டாசு விலை உசந்துகிட்டே போறதுனாலே கட்டுப்படியாகலே. கஸ்டமர்ஸும் வெரைட்டி கேட்கிறாங்க. சிவகாசிக்கே போய் நாலைஞ்சு டீலர்ஸ் கிட்டே பேசி ஆர்டர் போட்டு வாங்கிட்டு வரணும். வியாபாரத்தை விட்டுட்டு போகமுடியலே. என் மிஸஸுக்கும் உடம்பு சரியில்லை. கஸ்டமர்ஸ்க்கு கமிட் பண்ணியாச்சு. மழையை காரணம் காட்டி பட்டாசு இல்லைன்னு சொன்னா ஒத்துக்கமாட்டாங்க. நாள் வேற ரொம்ப கம்மியா இருக்கு. நீங்க நல்ல ரேட்டுக்கு தர்றதா இருந்தா எனக்கு ஒரு இருநூறு பாக்ஸ் கொடுக்கமுடியுமா?” என்று அவர் சர்வசாதாரணமாக கேட்க நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
எப்போதும் இல்லாத வகையில் மழையால் இந்த ஆண்டு இப்படி ஆகிவிட்டதே என்று நான் தவித்துக்கொண்டிருந்த நிலையில் இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று நான் நினைக்கவில்லை.
நான் அளிக்கும் பட்டாசு வகைகள் லிஸ்டை அவருக்கு காட்ட அவருக்கு அனைத்தும் பிடித்துப்போய்விட்டது. சேலத்தில் தன் முகவரியில் பாக்ஸ்களை இறக்கச் சொல்லி டெலிவரி பண்ணின அடுத்த செகண்ட் பணம் வாங்கிக்கலாம்னாரு. எனக்கு அப்பாடா இருந்திச்சு. நானும் திருப்பூர் வேலையை முடித்துவிட்டு உடனே சிவகாசி போய் அனைத்தையும் ஏற்பாடு செய்து சேலத்தில் அவருக்கு ரெண்டே நாள்ல பட்டாசுகளை டெலிவரி செய்துவிட்டேன். கையோடு முழுப் பணத்தையும் செட்டிலும் செய்துவிட்டார். அலைந்து திரியாமல் மொத்த சரக்கையும் கிளியர் செய்துவிட்டேன்… உங்க வார்த்தைகளுக்கு தேங்க்ஸ் சார்” என்றார்.
பார்த்தீர்களா இக்கட்டான ஒரு விரும்பாத சூழ்நிலை கூட எப்படி ஒரு வாய்ப்பை தேடித் தந்துள்ளது.
நண்பர் வேறு வழியின்றி பேருந்தில் அந்த சூழ்நிலையை ஏற்றுகொண்டார். அதற்கே இப்படி என்றால் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இன்னும் பல வாய்ப்புக்களுக்கான கதவை அந்த மகிழ்ச்சி திறக்கும்.
எல்லாவற்றுக்கும் இறைவன் வந்து நிற்கமாட்டார். அவருக்கு கோடிக்கணக்கான மக்களை பரிபாலனம் செய்யவேண்டும். வேலை ஜாஸ்தி. எது நன்மை, எது தீமை, எது இன்பம், எது மகிழ்ச்சி என்று நாம் தான் பகுத்துப் பார்த்து உணரவேண்டும். அதற்காகத் தான் மனிதனுக்கு மட்டும் இறைவன் ஆறறிவு கொடுத்திருக்கிறார். எனவே அதை பயன்படுத்தி நம்மை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.
இப்படி இருந்தால் தான் மகிழ்ச்சி, அப்படி கிடைத்தால் தான் மகிழ்ச்சி என்றெல்லாம் நீங்களே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு மகிழ்ச்சியை தேடாதீர்கள். அது ஒரு போதும் கிடைக்காது.
“எந்த சூழ்நிலையிலும் என்னால் மகிழ்சசியாக இருக்க முடியும். அதை ஏற்றுக்கொள்ளமுடியும். அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும்” என்று நம்புங்கள். (பாடம் என்பது கசப்பாகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை. சுகமான பாடங்கள் கூட சில சமயம் எதிர்பாராத சூழ்நிலைகளில் கிடைக்கும்.)
இன்பமோ துன்பமோ நமது பார்வையில் தான் இருக்கிறது.
உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பைத் தொட்டியில்லை!
ஒரு குட்டிக்கதை
அது வரை துணையாக இருந்த கணவரை இழந்த ஒரு 85 வயது மூதாட்டி, முதியோர் விடுதியில் சேரப்போகிறார். விடுதியின் வரவேற்பறையில் பல மணிநேரம் காத்திருந்த பிறகு அவருக்கு உண்டான அறை தயாராக இருப்பதாக கூறி அவரை அழைத்துச் செல்ல நிர்வாகி வந்தார்.
லிப்டில் செல்லும்போது நிர்வாகி, அந்த அறையை பற்றியும் அதன் சௌகரியங்கள் பற்றியும் கூறிக்கொண்டே வந்தார்.
மூதாட்டி… “எனக்கு அறை மிகவும் பிடித்திருக்கிறது. ஐ லைக் இட்” என்றார்.
“பொறுங்கள் அம்மா நீங்கள் இன்னும் அறையை பார்க்கவில்லையே”
“அதனால் என்ன? அந்த அறை நன்றாக இருக்கும். அது எனக்கு பிடிக்கும்.”
“எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்?”
“இது நான் தினசரி காலை எழுந்திருக்கும்போதே எனக்குள் சொல்லிக்கொள்ளும் விஷயம் தான்.”
மூதாட்டி தொடர்ந்தார்… “மகிழ்ச்சி என்பது நான் முன்கூட்டியே தீர்மானிக்கும் ஒன்று. அந்த அறை எனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பது அதன் சௌகரியங்களையோ அதில் உள்ள ஃபர்னீச்சர்களையோ பொறுத்து வருவதில்லை. நான் அதை எப்படி பார்க்கிறேன் என்பதை பொறுத்தது!”
இந்த மூதாட்டியிடம் இப்படி ஒரு பாஸிட்டிவிட்டியா என்று வியந்துகொண்டிருந்தார் நிர்வாகி.
“இன்பமா துன்பமா என்பதை நானே தீர்மானிக்கிறேன். எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் விதியை நொந்தபடி, ஒத்துழைக்க மறுக்கும் என் உடலுறுபுக்களை நொந்தபடி என்னால் கழிக்கமுடியும். அதே நேரம் இன்னும் சீராக இயங்கும் என் உறுப்புக்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லவும் முடியும்…..”
“ஒவ்வொரு நாள் காலையும் நான் விழிக்கிறேன் என்பதே என்னைப் பொறுத்தவரை வரம் தான். எனவே ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியோடு எதிர்கொள்கிறேன். பழைய பசுமையான இனிமையான நினைவுகளை நினைத்தபடி கழிக்கிறேன்.”
“வாழ்க்கை என்பதே ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட் போலத் தான். காலம் முழுக்க நாம் சேர்ப்பதை பிற்காலத்தில் எடுத்துக்கொள்ளலாம். எனவே, நான் என்ன சொல்கிறேன் என்றால் நீங்கள் உங்கள் கணக்கில் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் டெப்பாஸிட் செய்து வாருங்கள் வட்டியும் முதலுமாக எடுத்துக்கொள்ளலாம். இல்லையேல் முதுமை என்பதே துன்பமானாதாக மாறிவிடும்.”
நிர்வாகி மெய்சிலிர்த்துப் போனார்.
நம் வாசகர்களை நாம் கேட்டுக்கொள்வதெல்லாம் இது தான்.
எதையும் மகிழ்ச்சியோடு அணுகவேண்டும். நமது மகிழ்ச்சியை நாம் தான் தீர்மானிக்கவேண்டும். அது வெளியிலிருந்து வருவதில்லை.
எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை இருக்கும். அதை கண்டுணரவேண்டும். நேரடியான நன்மையைவிட இது பலமடங்கு நமக்கு உபயோகமாக இருக்கும். BLESSINGS IN DISGUISE என்று இதை சொல்வார்கள். அது யாரால் சாத்தியப்படும்? எந்த சூழ்நிலையையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்கிறவர்களால் தானே?
அடுத்து : எளிமையான வாழுங்கள். அதிகம் கொடுங்கள். குறைந்தளவே எதிர்பாருங்கள். எதிர்பார்ப்புக்க்கள் குறைவாக இருந்தால் மகிழ்ச்சி அங்கே அதிகம் இருக்கும்.
நமது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அடமானம் வைத்துவிட்டு பெறப்படும் எதுவுமே அர்த்தமற்றது.
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு! ¶¶
==========================================================
Support for the smooth functioning of this website…
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா?
ஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று !
“தயவுசெய்து மனைவியிடம் பேசுங்கள்!”- ஒரு கணவனின் வாக்குமூலம்!
“உறவுகளை மதிப்போம், அவர்கள் உணர்வையும் மதிப்போம்”
நாலு பேருக்கு நல்லது செய்வதால் நமக்கு என்ன கிடைக்கப்போகிறது?
துன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி !
மறுப்பதும் ஒரு கலை, அதை அழகாக செய்வோமே!
நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ
ஆயிரங்காலத்து பயிர் படும் பாடு!
ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?
எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா?
==========================================================
[END]
Excellent Moral Story.
Secret of success and happiness in life is very clearly and very simply explained in this article. Once again, one of the best articles from our Sundar. Most useful for all of us irrespective of who we are and where we are. The point is how we should be.
சூப்பர்ப்