பெரிய, புராதனமான சைவ, வைணவ ஆலயங்கள் அனைத்திலும் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறும். சமீபத்தில் திருமலையில் பிரமோற்சவம் நடைபெற்றது நினைவிருக்கலாம். கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி வரை பத்து நாட்களுக்கு குறையாமல் இது நடத்தப்படும். திருமலை மட்டுமல்ல திருவண்ணாமலை, தில்லை, திருச்செந்தூர் உள்ளிட்ட பல தலங்களில் பிரம்மோற்சவம் ஆண்டு தோறும் நடைபெறும். இது தவிர அந்தந்த கோவிலுக்கு உரிய உற்சவங்களும் அவ்வப்போது நடைபெறும்.
பொதுவாக இது போன்ற உற்சவங்களில் சுவாமி திருவீதி உலா வருவார். அப்போது யார் வேண்டுமானாலும் சுவாமியை தரிசிக்கலாம். குளிக்கவியலாத வியாதியஸ்தர்கள், மாதவிடாய் கண்ட மகளிர், இதர தீட்டுக்கள் உடையவர்கள் கூட இது போன்ற திருவீதி உலாவின்போது சுவாமியை தரிசிக்கலாம். எந்த தோஷமும் கிடையாது. சொல்லப்போனால் சுவாமி வருவதே இவர்களை போன்றவர்களை மனதில் கொண்டு தான். இதைத் தான் “கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது” என்று சொன்னார்கள் போல…!
அக்காலங்களில் (சுமார் 60 – 70 வருடங்களுக்கு முன்பு வரை) சுவாமி ஊர்வலத்தில் வரும்போது காளை மாடு, யானை, ஒட்டகம் முதலியவை முன்னே செல்லும். பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
சுவாமி ஊர்வலத்தில் விலங்குகள் எதற்கு? இங்கு தான் விஷயமே உள்ளது.
அப்படி வரும் காளையின் வாயிலிருந்து நீர் ஒழுகி, நுரைகள் பொங்கும். இந்த நுரை மீது பட்டக் காற்று நம் உடலில் பட்டால் கூட போதும். கங்கையில் குளித்ததற்கு சமம். உடலை எந்த நோயும் அண்டாது. கிராமப்புறத்தில் இன்றும் விவசாய வேலை செய்பவர்கள் மற்றும் காளைகளை பராமரிப்பவர்கள் திடகாத்திரமாக இருக்க காரணம் இது தான்.
பல கோவில்களில் ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று கோவில் காளை திருவீதியுலா வரும். பார்க்கவே அத்தனை கம்பீரமாக மனதுக்கு இதமாக இருக்கும். நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதற்கு சென்று வருகிறோம்.
அதே போல ஒட்டகத்தின் திமிலில் சுத்தமான நீர் இருக்கும். அதன் சுவாசக் காற்று நம் மீது பட்டால் கூட போதும். அதுவும் குளித்ததற்கு சமம் தான்.
இதனால் தான் அக்காலங்களில் மகா பெரியவா யாத்திரை செல்லும்போது கூடவே காளை மாடுகள், யானை, ஒட்டகம் இதெல்லாம் செல்லும்.
மஹா ஸ்வாமிகள் எங்கு சென்றாலும் 13 மாட்டு வண்டிகள் உடன் செல்லும். பசு, யானை என வண்டிகள் முன்னே அணிவகுத்துச் செல்வது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அதைப் தரிசித்த பாக்கியவான்கள் இன்றும் கூட உண்டு.
இப்போதும் கூட மதுரை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல ஆலயங்களில் உற்சங்களின்போது ஒட்டகங்களை பார்க்கமுடியும். பாலைவனத்தில் ஒட்டகங்கள் மணலில் வேகமாக நடக்கமுடியும் என்பது மட்டுமல்ல, குளிக்க வாய்ப்பேயில்லாத இடங்களில் கூட இந்த ஒட்டகங்களால் அதை வளர்ப்பவருக்கு இப்படி கங்கைக்கு நிகரான ஸ்நானம் கிடைத்துவிடுகிறதே…!
அதே போல யானையை அதன் துதிக்கையில் நீர் பிடிக்கச் செய்து அதை பக்தர்கள் மீது பீய்ச்சி அடித்தால் அதுவும் கூட கங்கா ஸ்நானத்திற்கு ஈடானது தான்.
இத்தனை மகத்துவங்கள் இந்த விலங்குகளிடம் இருப்பதால் தான் அக்காலங்களில் பெரியோர்கள் சுவாமியின் சப்பரம் பவனி வரும் முன்னர் இப்படி இந்த விலங்குகளை வரச் செய்தார்கள்.
இப்போதெல்லாம் யானை, ஒட்டகங்களை விடுங்கள் காளைகளுக்கே வழியில்லை. டிராக்டரில் சுவாமியை ஏற்றி சுற்றி வருகிறார்கள். அதனால் தான் மாதம் மும்மாரி பொழிய மறுக்கிறது. அப்படியே பொழிந்தாலும் அது யாருக்கும் பயன் தராமல் கடலில் கலந்துவிடுகிறது.
இருப்பினும், மகத்துவம் மகத்துவம் தானே.
அடுத்த முறை சுவாமி திருவீதி உலா வந்தால், அவசியம் தரிசியுங்கள். ஏனெனில் இது ஒரு வகையில் குறை தீர்ப்பு முகாம் போல. சுவாமியே நேரடியாக உங்களைத் தேடி வருவதால், உங்கள் கோரிக்கைகளை அவரிடம் அது சமயம் நீங்கள் மனப்பூர்வமாக சொல்லலாம். நிச்சயம் நிறைவேறும்.
மயிலை, திருவல்லிக்கேணி, திருச்சி, மதுரை, சிதம்பரம், குடந்தை போன்ற ஊர்களில் வசிப்பவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள். ஏனெனில் மாற்றி மாற்றி உற்சவங்கள் நடந்துகொண்டே இருக்கும். சுவாமி திருவீதிவுலா வந்துகொண்டே இருப்பார். சுவாமியை தரிசித்துக்கொன்டே இருக்கலாம். தேடி வரும் தெய்வம் என்பதால் கோரிக்கைகள் இம்மீடியட் சாங்க்ஷன் தான்.
ஆனால் பலர் இதன் அருமை புரியாமல் ஒரு ஆர்வத்துக்கு கூட எட்டிப் பார்ப்பதில்லை. டி.வி.சீரியல், அலைபேசி, முகநூல் இவற்றை கொஞ்ச நேரம் தியாகம் செய்து வீடு தேடி வீதி வீதியாக வரும் பரம்பொருளை பார்க்க சில நிமிடங்கள் ஒதுக்க முடியாதா என்ன?
இனி அடுத்த முறை சுவாமி திருவீதி உலா வந்தால் “இனி நிச்சயம் நீ வந்தால் தரிசிக்கிறேன் எனது கோரிக்கையை நிறைவேற்றி வை” என்று சங்கல்பம் செய்து தொடர்ந்து தரிசித்து வாருங்கள். நினைப்பது நடக்கும். இது திண்ணம்.
இது போன்ற திருக்கோவில் உற்சவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள் நடக்காத ஊர்கள் வாழ ஏற்புடையதல்ல…. எனவே தான் பெரியோர்கள் கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று சொன்னார்கள்.
எத்தகைய ஊர்களை நாம் விலக்கவேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறுகிறார் பாருங்கள்…!
திருக்கோயி லில்லாத திருவி லூரும்
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
பாங்கினோடு பலதளிக ளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட்டுண்ணா வூரும்
அவை யெல்லாம் ஊரல்ல அடவி காடே
– திருநாவுக்கரசர் (ஆறாம் திருமுறை)
பாடல் விளக்கம் : சிவபெருமானது திருக்கோயிலில்லாததால் நன்மையில்லாத ஊரும், திருவெண்ணீற்றை மக்கள் அணியாததால் நன்மையில்லாத ஊரும், உடம்பு வணங்கிப்பத்தி மிகுதியால் மக்கள் பாடா ஊரும், அழகான பலதளிகள் இல்லாத ஊரும், விருப்புடன் வெள்ளிய வலம்புரிச் சங்கினை ஊதாஊரும், மேற்கட்டியும் வெண் கொடிகளும் இல்லா ஊரும், மலரைப்பேரரும்பாய் உள்ள நிலையிற் பறித்துச் சிவனுக்குச் சாத்திப் பின்னரே உண்ணல் முறையாயிருக்க அங்ஙனம் உண்ணா ஊரும், ஆகிய அவை எல்லாம் ஊரல்ல; அடவியாகிய பெருங்காடே.
அதோ அங்கே தெரு முனையில் மங்கல இசை ஒலிக்கிறதே… சுவாமி வருகிறார் போல… போய் தரிசித்துவிட்டு வாருங்கள்! நல்லதே நடக்கும்!!¶¶
==========================================================
Support for the smooth functioning of this website…
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
இல்லற வாழ்வில் மக்கள் எளிதாகக் கடைப்பிடிக்கக் கூடிய தர்மங்கள் என்னென்ன?
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?
==========================================================
[END]