மகாராஷ்டிரத்தில் கோமாபாய் என்ற ஆதரவற்ற இளம்விதவை ஒருத்தி வாழ்ந்து வந்தாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையே தனக்கு எல்லாமுமாக கொண்டு பக்தி செய்து வந்தாள். பிழைக்க வழி எதுவும் இல்லாததால் பஜனைப் பாடல்கள் பாடிக்கொண்டு உஞ்சவிருத்தி செய்து கிடைத்ததை உண்டு வாழ்ந்து வந்தாள்.
இப்படியாகப்பட்ட நாட்களில் ஒரு நாள் ஆஷாட சுத்த ஏகாதசி திருநாள் வந்தது. பண்டரிநாதன் உறையும் பண்டரிபுரத்தில் அதையொட்டி வெகு விமரிசையாக உற்சவம் துவங்கியது. அதைக் காண கோமாபாய் பண்டரிபுரத்திற்கு செல்ல தீர்மானித்தாள். அவளிடம் வழிச் செலவுக்கு பணம் எதுவும் இல்லை. யாசகம் பெற்ற கொஞ்சம் ரொட்டி மாவு தான் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் நோக்கி நடந்தாள். இடையே பீமா நதி குறுக்கிட்டது. நதியை கடக்கவேண்டும் என்றால் பரிசலில் தான் செல்லவேண்டும்.
பரிசல்காரனிடம் “ஐயா நான் அக்கரைக்கு செல்லவேண்டும். என்னிடம் உங்களுக்கு கூலியாக கொடுக்க பணம் எதுவும் இல்லை. கொஞ்சம் ரொட்டி மாவு இருக்கிறது. அதைப் பெற்றுக்கொண்டு என்னை அக்கரையில் விட முடியுமா? எனக்கு பண்டரிநாதனை தரிசிக்கவேண்டும்” என்றாள்.
“ஏனம்மா… நான் என்ன இங்கே பொது சேவையா செய்கிறேன் பணத்திற்கு பதில் ரொட்டி மாவை வாங்கிக்கொள்ள? இப்படி வருவோர் போவோரையெல்லாம் தர்மத்திற்கு கொண்டு போய் விட்டால் என் பிள்ளை குட்டியை யார் காப்பாற்றுவார்கள்? போய் வேலையை பாரம்மா…” என்று விரட்டினான்.
கோமாபாய் அவனிடம் எவ்வளவோ கெஞ்சினாள். ஒரு கட்டத்தில் கோபமுற்ற பரிசல்காரன், அவளை பிடித்து ஆற்றில் தள்ள, கோமாபாயின் சேலை முழுக்க நனைந்து ஈரமானது. ஏற்கனவே குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தவள் தற்போது மேலும் நடுங்க ஆரம்பித்தாள்.
பரிசல்காரன் வேறு ஒரு குழுவினரை ஏற்றிக்கொண்டு இவளை நிற்கதியாய் விட்டுவிட்டுப் போய்விட, கோமாபாய் ஆற்றின் கரையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள்.
“விடிந்தால் பண்டரிபுரத்தில் உற்சவம் ஆரம்பித்துவிடும்… அதைக் காண முடியாத பாபியாகிவிட்டேனே…” என்று தேம்பினாள்.
அப்போது அங்கே வேறு ஒரு பரிசல்காரன் வந்தான்.
“இந்த நேரத்தில் ஆற்றங்கரையில் ஏனம்மா அழுதுகொண்டிருக்கிறாய்?” என்று கேட்க, கோமாபாய் நடந்த அனைத்தையும் அவனிடம் கூறினாள்.
“இவ்வளவு தானா விஷயம்? நான் உன்னைக் கொண்டு போய் அக்கரையில் விடுகிறேன்” என்று கூறி, கோமாபாயை ஏற்றிக்கொண்டு அக்கரைக்கு விரைந்தான்.
அக்கரையில் கோமாபாயை இறக்கிவிட்டவனிடம் கோமாபாய் ரொட்டி மாவை கொடுக்க, “எனக்கு எதுவும் வேண்டாம். என்னைவிட கஷ்டப்படுபவர்கள் யாருக்காவது அதைக் கொடுத்துவிடும்மா” என்று கூறிவிட்டு ஆற்றில் மீண்டும் பரிசலை ஓட்டிக்கொண்டு மறைந்தான்.
மெல்ல மெல்ல பண்டரிபுர வீதிகளில் நடந்து சென்றவர் பண்டரிநாதனின் கோவில் கோபுரத்தை பார்த்தவுடன் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அன்று இரவு முழுவதும் அங்கே ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து நாம ஸ்மரணை செய்தவர் விடிந்ததும் சந்திரபாகா நதிக்கு சென்று நீராடிவிட்டு பின்னர் பஜனையில் ஈடுபட்டு ஏகாதசியை எந்த பங்கமும் வராமல் அனுஷ்டித்தார்.
ஏகாதசிக்கு துவங்கும் விரதத்தை மறுநாள் துவாதசி அன்று பாரணை செய்து நிறைவு செய்யவேண்டும். தன்னிடம் உள்ள ரொட்டி மாவை குறைந்தது நான்கு அந்தணர்களுக்காவது கொடுக்கவேண்டும் என்று கருதி ஆட்களை தேடினாள்.
அவளை போலவே பலர் விரதம் அனுஷ்டித்ததால், பக்தர்களுக்கு பாரணை செய்ய அறுசுவை உணவை ஆங்காங்கே படித்துக்கொண்டிருந்தனர். பண்டரிபுரம் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் போஜனம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இந்த சூழ்நிலையில், கோமாபாயிடம் இருக்கும் ரொட்டிமாவை யார் சட்டை செய்யப்போகிறார்கள்? எனவே துவாதசி அன்று ஒரு அந்தணருக்காவது உணவளிக்காமல் நாம் எப்படி பாரணை செய்வது என்று தவித்தார் கோமாபாய். அப்படியே யாராவது பெற்றுக்கொண்டாலும் பருப்பு, வெள்ளம், நெய் போன்றவை இல்லாமல் வெறும் ரொட்டி மாவை யார் பெற்றுக்கொள்வார்கள்?
“ஹே… பண்டரிநாதா என் ஏகாதசி விரதம் பூர்த்தியடையாமல் போய்விடுமோ? இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டேன்” என்று கோவில் முன்பு நின்று பண்டரிநாதனை நினைத்து புலம்பினாள்.
எறும்பின் காலடி ஓசையைக் கூட கேட்கும் வல்லமை கொண்ட இறைவனுக்கு இவள் புலம்பல் கேட்காமல் இருக்குமா?
அந்நேரம் பார்த்து பாண்டுரங்கன் ஒரு வயது முதிர்ந்த அந்தணர் வேடம் பூண்டு கோமாபாயின் முன்னர் வந்து நின்று “அம்மா தாயே… சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது. பசி காதை அடைக்கிறது. சாப்பிட ஏதாவது கொடேன்” என்றார்.
உடனே கோமாபாய், தன்னிடம் இருந்த ரொட்டி மாவை அவருக்கு தர, அவர் பரிதாபமாக பார்த்தார்.
“இந்த வயதான காலத்தில் நான் எங்கே எப்படி இதை ரொட்டி செய்து சாப்பிடுவது? நீ சுட்டுக் தந்தால் சாப்பிடுகிறேன். இல்லையெனில் வேண்டாம்…”
கிடைத்த ஒரு அடியாரும் போய்விட்டால் என்ன செய்வது என்று பதறிய கோமாபாய் “ஐயா கொஞ்சம் பொறுங்கள். நான் ரொட்டி சுட்டுத் தருகிறேன்” என்று கூறி, அவரை ஒரு மரத்தின் கீழ் உட்காரவைத்துவிட்டு எங்கிருந்தோ மூன்று செங்கற்களை கொண்டு வந்து சுள்ளி சேகரித்து, தீ மூட்டி, மாவை பிசைந்து ரொட்டி சுட்டு தந்தாள்.
அரண்மனையில் அறுசுவை உணவு காத்திருக்க அன்று விதுரரின் குடிசை தேடித் சென்ற இறைவன் இங்கு கோமாபாயின் உன்னதமான அன்பிற்கு தலைவணங்கி, தரையில் அமர்ந்து ரொட்டியை “ஆஹா அருமையான சுவை” என்று சிலாகித்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தான் முதியவர் வேடத்தில் வந்த பண்டரிநாதன்.
இறைவன் இப்படி தரையில் அமர்ந்து தனியாக கோமாபாய் சுட்டுத் தரும் ரொட்டியை சிலாகித்தபடி சாப்பிட்டுக்கொண்டிருப்பதை கண்ட ருக்மிணி தேவிக்கு பொறுக்கவில்லை. ஒரு மூதாட்டி போல வேடம் பூண்டு அங்கே தோன்றினாள்.
“என்ன அநியாயம் இது சுவாமி? என்றைக்காவது என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் உணவருந்தியதுண்டா?” என்று கோபித்துக்கொண்டாள்.
உடனே கோமாபாய் தான் பாரணை செய்ய வைத்திருந்த ஒரே ஒரு ரொட்டியை எடுத்து அன்னைக்கு கொடுத்து “சாப்பிடுங்கள் அம்மா” என்றாள்.
அவர்கள் இருவரும் புசிப்பதை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்த கோமாபாயின் கண்களில் கண்ணீர் முட்டியது. இருவரும் விக்கல் எழுவது போல நடித்தனர். உடனே கோமாபாய் பதறிப்போய், “இதோ உடனே தண்ணீர் கொண்டு வருகிறேன்” என்று நதிதீரத்திற்கு ஓடினாள்.
திரும்பி வந்த பார்த்தபோது தம்பதியரைக் காணவில்லை. அங்கே துளசி தளங்கள் சிதறிக்கிடந்தன.
“எங்கே போய்விட்டீர்கள் இருவரும்?” என்று கூறி தேம்பித் தேம்பி அழ, அடுத்த நொடி நீலமேக சியாமளவண்ணனாக பண்டரிநாதன் ருக்மிணி தேவியுடன் அங்கு தோன்றினான்.
கோமாபாயை பார்த்து புன்முறுவல் செய்து “கோமாபாய்… உன்னுடைய உறுதியான பக்தியையும் அன்பையும் உபசரிப்பையும் கண்டு மகிழ்ந்தேன். உன் பக்திக்கு கட்டுபட்டு முதல் முறை பரிசல்காரனாகவும் இரண்டாம் முறை அதிதியாகவும் வந்தேன். நீ இங்கேயே தங்கியிருந்து நாமஸ்மரணையம் பஜனையும் அதிதி போஜனமும் செய்து வா. உரிய காலத்தில் எம்மை வந்து அடைவாயாக!” என்று ஆசி கூறிவிட்டு மறைந்தான்.
“பண்டரிநாதா உன் கருணையே கருணை!” என்று கண்ணீர் உகுக்க கையெடுத்து வணங்கினாள்.
அங்கே பண்டரிநாதன் சன்னதியில் அடியார்களின் விட்டல கோஷத்துடன் பூஜைக்கு மணியடிக்கும் சப்தம் கேட்டது.
மை ஆர் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய் ஆர் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானை சங்கு ஏந்தும்
கையானை-கை தொழா கை அல்ல கண்டாமே!
– திருமங்கையாழ்வார்
================================================
நமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு! MUST READ
பிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.
1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.
2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.
3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்!
4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.
5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.
6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.
7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.
ஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன?
நீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று இந்த அரிய இறைத்தொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.
==========================================================
ஒரு முக்கியமான விஷயம்!
பிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது. கோவிலில் அர்ச்சனை செய்யவே இந்த விபரங்கள் கேட்கப்படுகிறது!)
கோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணை அவசியம் குறிப்படவேண்டும். அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
நன்றி!
==========================================================
நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…
முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
==========================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : மன்னார்குடி செண்டலங்கார சம்பத் குமார் ஜீயர் சுவாமிகளின் கைங்கரிய கர்த்தா (உதவியாளர்) திரு.நாராயணன் அவர்கள்.
சென்னை தி.நகர் ராமச்சந்திரா தெருவை சேர்ந்தவர் திரு.நாராயணன் (73). பாரிமுனையில் தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டண்ட்டாக பணிபுரிந்து ஒய்வுபெற்றவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. தற்போது தனது மகனுடன் வசித்து வருகிறார். தனது பேரக்குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவது, UTILITY BILLS கட்டுவது, ஈஸி சேரில் மாலை நேரத்தில் ஓய்வெடுப்பது என்று சரசாரி ரிட்டயர்டு நபரைப் போலத் தான் இவர் வாழ்க்கையும் இருந்தது. மன்னார்குடி செண்டலங்கார சம்பத் குமார ஜீயர் சுவாமிகளை காணும் வரை.
ஒரு முறை மன்னார்குடி ஜீயர் சென்னைக்கு வந்தபோது அவரை நாராயணன் அவர்கள் சந்திக்க நேர்ந்தது. அப்போது ஜீயர் சுவாமிகள் அடிக்கடி சுற்றுப் பயணம் செல்லவேண்டி இருப்பதால் அவருடன் இருந்து அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்ய ஒருவர் இருக்கவேண்டிய அவசியத்தையும் அறிந்துகொண்டார். அவ்வளவுதான் அது முதல் ஜீயர் சுவாமிகளின் கைங்கரியகர்த்தாவானார் நாராயணன். அவரது பிள்ளைகளும் இதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர்.
அது முதல் ஜீயர் பயணம் செல்லும்போது அவருடன் சென்று அவருக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்ய ஆரம்பித்தார். ஜீயர் சுவாமிகள் சென்னை வந்தால் அவசியம் நாராயணன் அவருடன் இருப்பார்.
இடையிடையே தனது குடும்பத்தையும் பேரக்குழந்தைகளையும் கவனித்துக்கொண்டாலும் ஜீயர் சுற்றுப்பயணம் செல்லும்போது தவறாமல் உடன் சென்று உதவி வருகிறார். இதுவரை நெல்லூர், ஹைதராபாத், திண்டுக்கல், திருச்சி என பல ஊர்களுக்கு ஜீயருடன் சென்றிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஜீயர் சுவாமிகள் நமது ரைட்மந்த்ரா அலுவலகத்துக்கு எழுந்தருளியபோது உடன் வந்தார் திரு.நாராயணன். அப்போது தான் நமக்கு அறிமுகமானார். அதன் பிறகு பீகாரில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்துவிட்டு ஜீயர் சென்னை திரும்பும்போது சென்ட்ரல் சென்று வரவேற்கும் பாக்கியம் நமக்கும் திரு.நாராயணன் அவர்களுக்கும் கிடைத்தது.
சென்ற மாதம் நாராயணன் அவர்கள் உறுப்பினராக இருக்கும் மேற்கு மாம்பலத்தில் இயங்கி வரும் திருமலை திருப்பதி பாதயாத்திரைக் குழுவினர் திருமலைக்கு பாதயாத்திரை செல்லும்போது அதன் வழினுப்பு வைபவத்துக்கு சென்றிருந்து நாராயணன் அவர்கள் உட்பட அடியார்கள் அனைவரையும் கௌரவித்துவிட்டு வழியனுப்பிவிட்டு வந்தோம்.
திருமலையிலிருந்து திரும்பியவுடன் பிரசாதத்தை நமது அலுவகலத்திற்கு தேடி வந்து கொடுத்தார்.
அவரிடம் நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி ரைட்மந்த்ரா வாசர்களுக்காக பிரார்த்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.
பிரார்த்தனை நேரதில் அவரது இல்லத்தில் விஷ்ணு சஹஸ்ர நாமம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்யவிருக்கிறார். அவருக்கு நம் மனமார்ந்த நன்றி.
(* மன்னார்குடி ஜீயர் சுவாமிகளை பற்றியும் அவர் ஆற்றிவரும் ராமானுஜ சேவை பற்றியும் நம் தளத்தில் ஒரு விரிவான பதிவு வெளிவரவிருக்கிறது. அதன் பிறகு அளிக்கக்கூடிய பிரார்த்தனை பதிவில் ஜீயர் சுவாமிகள் திருவுள்ளம் கொண்டு தலைமை ஏற்பார்.)
==========================================================
இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்…
முதல் கோரிக்கையை சமர்பித்திருக்கும் வாசகர் உலகநாதன் அரக்கோணம் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கிறார். அரக்கோணம் திருத்தணி சாலையில் ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். உத்தியோகத்தில் முன்னேற்றமும் சம்பள உயர்வையும் வேண்டி கோரிக்கை சமர்பித்திருக்கிறார். இவரை முதலில் வேலைவாய்ப்பு ஸ்பெஷலிஸ்ட்டான திருவெறும்பூர் ஏறும்பீஸ்வரரை தரிசிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். பலருக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. (அது தொர்பான பதிவுக்கு : நல்லதொரு வேலை; இனியில்லை கவலை! இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம்!!)
அடுத்த கோரிக்கை சமர்பித்திருக்கும் வாசகி ரேவதி அவர்கள் சித்துக்காட்டில் நடைபெற்ற நமது முந்தைய உழவாரப்பணிக்கு வந்திருந்தார். விரைவில் இவரது மனக்குறைகள் நீங்கி, இவரது கணவருக்கு ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் இறைவனருளால் கிடைக்கட்டும். அதே போல இவரது மகளுக்கும் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.
அடுத்த கோரிக்கை சமர்பித்திருக்கும் வாசகி திருமதி.ரோஜா அவர்கள் சமீபத்தில் தான் நமக்கு அவரது சகோதரர் மூலம் அறிமுகமானார். தீபாவளியன்று நம் தளம் சார்பாக நடைபெற்ற வஸ்திர தானத்தில் பங்கேற்று சிறப்பித்தார். நமது பிரார்த்தனை கிளப் பற்றி அறிந்துகொண்டவுடன் தனது கோரிக்கைகளை சமர்பித்திருக்கிறார். இவரது நல்லவுள்ளத்திற்கு நல்லதே நடக்கும்.
கடைசியாக இடம்பெற்றிருக்கும் கோரிக்கையை தீவிர பரிசீலனைக்கு பிறகே சேர்த்திருக்கிறோம். விரும்பிய பெண்ணை கைபிடிக்க ஒரு அன்பர் கோரிக்கை சமர்பித்திருக்கிறார். இது நமது பிரார்த்தனைக் கிளப்பிற்கு வந்தபோது கோரிக்கையை நிதானமாக படித்தோம். அதில் இவர் விரும்பும் பெண் தூரத்து சொந்தம் மேலும் இவர் சமூகத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தது. அடுத்தது இவர் ஏதாவது பணியில் இருக்கிறாரா என்று அறிந்துகொள்ள விரும்பி அவரை அலைபேசியில் அழைத்து விசாரித்தபோது கௌரவமான ஒரு பணியில் இருக்கிறார் என்று தெரிந்தது. எனவே இந்த மன்றத்தில் வெளியிட எந்த தயக்கமும் நமக்கு இல்லை.
எல்லாவற்றையும் விட, இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புகிறார்கள், ஒரே சமூகம், மேலும் இவர் வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிக்கிறார் எனும்போது அவர்களை சேர்த்து வைப்பதே சிறந்தது. மனமொத்த காதலர்களை பிரிப்பது மிகப் பெரிய பாவம்.
இனி அனைத்தும் இறைவன் கையில்.
பொதுப் பிரார்த்தனை… என்ன சொல்ல? தற்போதைய சூழலில் தேவையான ஒன்று.
இங்கே பிரார்த்தனை சமர்பித்துள்ள பிரார்த்தனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பிரார்த்தனை இடம் பெற்ற இந்த பிரார்த்தனையோடு நிறுத்திவிடாமல் ஒவ்வொரு வாரமும் நீங்கள் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று ஒரு பத்து நிமிடம் (பிரதி ஞாயிறு 5.30 PM – 6.௦௦ PM வரை உங்களுக்கு எந்த பத்து நிமிடம் சௌகரியமோ அந்தப் பத்து நிமிடம்) மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து வரவேண்டும். உங்கள கோரிக்கைகள் தானே நிறைவேறும்.
==========================================================
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
1) வேலையும் உத்தியோக உயர்வும் கிடைக்கவேண்டும்!
வணக்கம் சார். என் பெயர் உலகநாதன் (37). அரக்கோணம் அருகே உள்ள MRF நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை சுமார் 8 வருடம் செய்து வருகிறேன். தங்கள் பிரார்த்தனை மன்றத்தில் வேலை நிரந்தரமாக கிடைக்க பிரார்த்தனை செய்யவும். பதவி உயர்வு வேண்டியும் பிரார்த்தனை செய்யவும்.
எனக்கு திருமணமாகிவிட்டது. என் முன்னேற்றத்தையும் ஊதியத்தையும் நம்பித் தான் குடும்பம் இருக்கிறது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
நன்றி!
இப்படிக்கு,
M. உலகநாதன்,
காளிக்கால்-631102
2) கணவர் நலம் பெற வேண்டும் ! பிள்ளைகள் சகல சம்பத்துக்கள் பெற்று வாழவேண்டும்!!
வணக்கம். என் பெயர் ரேவதி. எனது கணவர் திரு. K.R. சுந்தரம் உடல்நிலை சரியில்லாமல் நரம்பு கோளாறினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவரால் பணிக்கு செல்ல இயலவில்லை. இந்தநாள் பணிக்கு சென்று குடும்பத்தை நிர்வகிக்கவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டுள்ளது. அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இந்நிலையில் நடக்க இயலாமல் இருந்து தற்போது கம்புவைத்து நடக்கும் நிலைக்கு என் கணவர் இறையருளால் தேறி வந்திருக்கிறார். அவர் பூரண குணமடைந்து முன்னைப் போல நடக்கவும் தனது பணிகளை செவ்வனே செய்யவும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.
எனக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு மகன் செல்வன் தேனப்பன் மூத்தவன். இளையவள் ஷாலு நாச்சியப்பன் (வயது 22). எனது மகனுக்கு தற்போது தற்போது ஒரு நல்ல இடத்தில வரன் அமைந்திருக்கிறது. அவன் சீரோடும் சிறப்போடும் இல்லறம் நடத்தவேண்டும். எனது மகளுக்கு புத்திரபாக்கியம் வேண்டும். ஒரு ஆரோக்கியமான குழந்தை அவளுக்கு பிறக்கவேண்டும்.
மொத்தத்தில் என் பிள்ளைகள், கணவர் அனைவரும் நோயற்ற வாழ்வோடும் மகிழ்ச்சியோடும் சகல சம்பத்துக்களையும் பெற்று வாழவேண்டும்.
இதற்காக அனைவரையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். (ராசி நட்சத்திர விபரங்களை தனியே அனுப்பியிருக்கிறேன்!)
மிக்க நன்றி!
எஸ்.ரேவதி,
கெருகம்பாக்கம், சென்னை.
3) பிள்ளைகளுக்கு நல்வாழ்வும் மனம் போல மாங்கல்யமும்!
என் மகன் செல்வன் புவனேஷ் (வயது 35). நிறைய இடத்தில் பெண் பார்த்தும் முடியும் தருவாயில் திருமணம் பேச்சு நின்று விடுகிறது. ஏன் என்று தெரியவில்லை இதனால் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம். என் மகனுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என் மகள் சாரதா வயது (27) அவளும் அண்ணன் கல்யாணத்திற்கு பிறகு திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று பிடிவாதமாக கூறுகிறாள். அவளுக்கு தாய், தந்தையை நல்ல விதத்தில் சொந்த வீட்டில் வைத்து பார்ப்பதற்கு நல்ல வேலையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறாள். அவளுக்கு நல்ல வேலை கிடைக்க பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என் பிள்ளைகள் இருவருக்கும் மண வாழ்க்கை விரைவில் நல்ல விதத்தில் அமையவும் அவர்கள் விரும்பியவாறு உத்தியோகம் அமையவும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
வெ.ரோஜா,
நெசப்பாக்கம், சென்னை-78
4) விரும்பியவளை கரம் பிடிக்க வேண்டும்!
ரைட்மந்த்ரா ஆசிரியர் சுந்தர் அவர்களுக்கு வணக்கம்.
நான் ஒரு பட்டதாரி. ஒரு தனியார் நிறுவனத்தில் கௌரவமான பணியில் இருக்கிறேன். நான் என் தூரத்து உறவுப் பெண்ணை காதலிக்கிறேன். அவளும் ஒரு பட்டதாரி. நாங்கள் இருவரும் ஒரே சமூகத்தை சார்ந்தவர்கள். பக்கத்து, பக்கத்து ஊர் தான். இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புகிறோம். ஆனாலும் அவர்கள் வீட்டில் எங்கள் காதலை ஏற்கவில்லை. என்னைப் பற்றி எனது உறவினர்களே அவர்களிடம் தவறாக கூறியுள்ளனர். அதற்கு ஏற்றார்ப்போல் சூழல் அமைய என் மீது அவர்களுக்கு இருக்கும் கோபம் அதிகமாகி என் அன்புக்குரியவளை அடித்து துன்புறுத்தி எங்கோ மறைத்து வைத்திருக்கிறார்கள். நான் தடைகளை தகர்த்து எங்கள் இருவரின் பெற்றோரின் சம்மதத்துடன் அவளையே கரம்பிடித்து கடைசி வரை சந்தோஷமாக வாழ வேண்டும். அதற்கு உங்கள் மன்றத்தின் பிரார்த்தனையை வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
இளையரசு,
தருமபுரி
* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.
** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.
==========================================================
பொதுப் பிரார்த்தனை!
வலி பொறுப்போம், வலிமை பெறுவோம்!
அண்மையில் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் கருப்பு பணத்தை ஒழிக்கவேண்டி சில நடவடிக்கைகள் எடுத்தார்.
இந்த நடவடிக்கைகளால் பதுக்கல் பேர்வழிகளும், தீவிரவாதிகளும், முறையற்ற வருவாயில் சொத்து சேர்த்தவர்களும், கூலிப்படையினரும், ஊழல் பெருச்சாளிகளும் தான் மிகவும் பாதிப்படைந்திருக்கின்றனர். சராசரி மக்களுக்கு சில நடைமுறை சிரமங்கள் ஏற்பட்டிருப்பது உண்மை. எந்தவொரு சீர்த்திருத்தமும் யாருக்கும் பாதிப்பில்லாமல் நிறைவேற்ற முடியாது. தேசநலனுக்காக ஒரு சில அசௌகரியங்களை நாம் சகித்துக்கொள்வதில் தவறு இல்லை.
இருப்பினும் வாக்கு வங்கி அரசியலைப் பற்றி கவலைப்படாமல், தான் எடுக்கும் நடவடிக்கைகளால் அடுத்து வரமுடியுமா இல்லையா என்றெல்லாம் சிந்திக்காமல், தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து நாட்டுக்கு நன்மையளிக்கக் கூடிய விஷயங்களில் தைரியமாக முடிவெடுக்கக் கூடிய ஒரு தலைமைக்கு நாம் அனைவரும் காத்திருந்தோம் என்பதை மறக்கக்கூடாது. அப்படி ஒருவர் கிடைத்து அவர் நமது எண்ணங்களை செயல்படுத்தும்போது ஏனிந்த முனுமுனுப்பு? இப்போது இல்லாவிட்டால் எப்போது யார் தான் இதை செய்யப்போகிறார்கள்?
பெரும் செல்வந்தரான கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி இரட்டை ஆயுள் தண்டைனை பெற்று, செக்கிழுத்து வறுமையில் வாடி செத்துப் போனார்… (இன்று அவர் நினைவு நாள்!)
சுப்பிரமணிய சிவா சுமார் 8 ஆண்டுகள் சிறையிலடைபட்டு ஆட்டுத் தோலை கொதிக்கும் சுண்ணாம்பில் நனைத்து சுத்தம் செய்யும் தண்டனை பெற்று தொழுநோய் வந்தே செத்துப் போனார்…
தன் வாழ்நாளில் 9 ஆண்டுகளை சிறையில் கழித்தார் காமராஜர். (40 வயசு வரை சிறையிலேயே இருந்துட்டேன் இதுக்குமேல கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்க விரும்பலன்னு பாவம் அந்த மனுசன் கடைசிவரை கல்யாணமே பண்ணிக்கல…)
அழகான மனைவியை வீட்டில் விட்டுவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று தடியடி பட்டு உயிர் நீத்தார் கொடி காத்த குமரன். இதே போல வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் பிடிபட்டபோது தற்கொலை செய்து கொண்டார் வாஞ்சிநாதன்.
சுடர்விட வேண்டிய நேரத்தில் அணைந்து போன தீபத்தைப் போல 24 வயதிற்குள் வாழ்க்கை தொடங்கும் நேரத்தில் நாட்டுக்காக தூக்கில் தொங்கி தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்…
மனைவியுடன் இல்லறம் கூட நடத்த முடியாதபடி சதாசர்வ காலமும் நாட்டைப் பற்றி சிந்தித்துக்கொண்டே இருந்தார் நேதாஜி.
இவர்களைப் போன்ற எத்தனையோ கோடி பேர் நாட்டுக்காக தன் தாய், தந்தை, மனைவி, மக்கள், சொத்து, சுகம் எல்லாவற்றையும் தியாகம் செய்து தான் வெள்ளைக்காரனை விரட்டி சுதந்திரம் வாங்கினார்கள். நாம் ஒரு சில நாள் சிரமங்களை இந்த நாட்டு நலனுக்காக பொறுத்துக்கொள்ளக்கூடாதா?
இதில் கவனிக்கவேண்டிய விஷயம் தானதருமம் செய்யாமல், நல்ல விஷயங்களுக்கு பணத்தை பயன்படுத்தாமல் அவற்றை பதுக்கி கருமியாய் வாழ்ந்தவர்கள் விளைவுகளுக்கு பயந்து ரூபாய்நோட்டுக்களை எரித்து வருகின்றனர்.
தருமத்திற்கு செல்லாதது களவுக்கு செல்லும். இதைத் தான் ஒளவை, ‘ஈயார் தேட்டை தீயோர் கொள்வர்’ எனக் கூறினர்.
கண்ணதாசன் மிக அற்புதமாக ‘திருவிளையாடல்’ படத்தில் பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் பாடலில் கூறினார்…
பொன்னும் பொருளும் மூட்டைகட்டி போட்டு வச்சாரு – இவரு
போன வருஷம் மழையை நம்பி வெதை வெதச்சாரு
ஏட்டுக் கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு – ஈசன்
போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு!
கவிஞன் வாக்கு பொய்ப்பதில்லை…! எந்தக் காலத்திலும்!!
நம்முடைய பிரார்த்தனை என்னவென்றால் பிரதமரின் இந்த கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை மக்கள் ஒத்துழைப்புடன் வெற்றிபெற்று இந்தியா வல்லரசாகவேண்டும்.
நல்லதோ கெட்டதோ இதுவரை இல்லாத ஒரு புது முயற்சியை எடுக்குது அரசாங்கம். ரெண்டு நாள் தானே பொறுத்துக்குவமே… இதனால கள்ள நோட்டு ஒழியுமா, கறுப்புப் பணம் ஒழியுமான்னு இப்பவே ஆராய்ச்சியோ பட்டிமன்றமோ தேவையில்லாத ஒன்று. இப்போதைக்கு வரவேற்போம். தீமைன்னு உறுதியா தெரிஞ்சா விமர்சிப்போம், எதிர்ப்போம். அதவிட்டுட்டு இதைச் செய்வது மோடிங்கிற ஒரே காரணத்துக்காக குருட்டுப் பூனை விட்டத்துல பாஞ்ச மாதிரி கண்ண மூடிக்கிட்டு எல்லா திட்டங்களையும் எதிர்க்க வேண்டிய அவசியமில்ல…
சிங்கப்பூர் அப்படி இருக்கு, லண்டன் இப்படி இருக்கு, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவெல்லாம் எப்படி எப்படியோ இருக்குன்னு பொலம்புறோம். ஆனா அந்தந்த நாடுகளிலெல்லாம் ஆள்பவர்களுக்கு பொது மக்களின் ஒத்துழைப்பு எப்படி இருக்குன்னு கவனிச்சோம்ன்னா தெரியும் ஏன் அந்த நாடுகள் எல்லாம் முன்னேறி இருக்குன்னு புரியும். அரசு + மக்கள் இணையும் போது தான் எந்த திட்டமும் வெற்றி பெறும். திட்டங்கள் வெற்றி பெற்றால் தான் நாடு வளர்ச்சியடையும். இரு கைகள் இணைந்தால் தான் ஓசை வரும். ஒரு கையிலயும் ஓசை வரும் ஆனா கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும்.’
இந்த திட்டத்தில் பல குறைகள் உள்ளன. நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் வேறு வழி இல்லை.
வலி பொறுப்போம். வலிமை பெறுவோம்..! இதுவே இந்த வார பொது பிரார்த்தனை!
- நம் முகநூலில் நாம் எழுதியது மற்றும் பிறர் முகநூலில் கண்டது ஆகியவற்றை திரட்டி எழுதியிருக்கிறோம்.
(இதை விவாதப் பொருளாக யாரும் ஆக்கவேண்டாம். ஏற்றுக்கொள்கிறவர்கள் நாட்டுக்காக பிரார்த்தியுங்கள்!)
==========================================================
தங்களுக்கும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு உடற்பிணி, வேலை வாய்ப்பு, திருமண ப்ராப்தம், புத்திர சம்பத்து, நல்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இங்கு சமர்பித்திருப்பவர்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டுவோம்.
நமது பாரதப் பிரதமர் மேற்கொண்டுள்ள மிகப் பெரிய அரசியல் வேள்வியான கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகள் மக்கள் ஆதரவுடன் மகத்தான வெற்றி பெறவேண்டும். இந்தியா வல்லரசாக வேண்டும்.
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.நாராயணன் அவர்களின் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும், பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : 2016 நவம்பர் 20 & 27 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
==========================================================
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!
Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215 | E-mail : editor@rightmantra.com
==========================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
==========================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
==========================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E : editor@rightmantra.com | M : 9840169215 | W:www.rightmantra.com
==========================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131
==========================================================
சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : பேரம்பாக்கம் வைகுண்ட வாசப்பெருமாள் கோவில் பட்டர் திரு. ராகவன் பட்டாச்சாரியார்.
சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?
சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது என்பது பற்றி ஒரு தனிப்பதிவே அளித்திருக்கிறோம். அந்தளவு பல கோவில்களில் பிரார்த்தனையும் அர்ச்சனையும் பிரார்த்தனையாளர்களுக்காக நடைபெற்றது. (பார்க்க : ஒரு பிரார்த்தனை பதிவும் சில கோவில்களும்!)
பதிவில் விளக்கிய கோவில்கள் தவிர குன்றத்தூர் சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட கோவில்களில் கூட பிரார்த்தனை நடைபெற்றது நாம் அனைவரும் செய்த பேறு.
நல்லதே நடக்கும்!
==========================================================
[END]
கோரிக்கையை சமர்பித்ததற்கு ரைட்மத்ராவுக்கும் எனக்காக பிராத்தனை செய்தவர்களுக்கும் குறிப்பாக என்னை தொலைபேயில் தொடர்பு கொண்டு என்னுடைய கோரிக்கயை பதிவிட்ட அண்ணா அவர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள் எனது பிரத்தனையையும் அனைவருக்காகவும் உண்டு