Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > தர்மம் தலைகாத்த உண்மை சம்பவம் – அதிதி தேவோ பவ – (5)

தர்மம் தலைகாத்த உண்மை சம்பவம் – அதிதி தேவோ பவ – (5)

print

‘அதிதி போஜனம்’ என்பது நமது தலையாய அறங்களுள் ஒன்று. காலம்காலமாக நமது முன்னோர்கள் பின்பற்றி வந்த தருமம். ஆனால் இன்று அந்த வார்த்தைக்கே அர்த்தம் போய்விட்டது. அக்காலங்களில் அதிதி போஜனத்துக்காக என்னவெல்லாம் தியாகம் செய்திருக்கிறார்கள் என்று அறியும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. கண்கள் பனிக்கின்றன.

விருந்தோம்பலால் கெட்டவர்கள் என்று உலகில் யாரும் இல்லை. சொல்லப்போனால் தலைமுறைகளை தழைக்கச் செய்வது அதிதி போஜனமே ஆகும். இந்த ஒப்பற்ற அறத்தின் சிறப்புக்களையும் அதன் பின்னணியில் நடைபெற்ற உண்மை சம்பவங்கள் மற்றும் பக்தி இலக்கியங்களில் வரும் சம்பவங்கள் மற்றும் காஞ்சி மகா சுவாமிகள் போன்ற மகான்கள் சொன்ன சம்பவங்கள் போன்றவற்றை தொகுத்து தருவதே இத்தொடரின் நோக்கம்.

ஒரு வேகத்தில் ஆரம்பித்துவிட்டோம்… எப்படி அடுத்தடுத்து அத்தியாயங்கள் அளிக்கப்போகிறோம் என்று சில நாட்கள் முன்பு தான் கவலைப்போட்டோம். “ஏன் கவலைப்படுகிறாய்… இதோ ஒரு உண்மை சாட்சி!” என்று தர்ம தேவதை தாவி வந்து உங்கள் முன்னே அமர்ந்துவிட்டாள்.

annadhanam
குடந்தை மகாமகத்தின் போது நடைபெற்ற அன்னதானம் ஒன்றில்…

சும்மாவா சொன்னார் வள்ளுவர்…

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல் (குறள் 84)

விருந்தினரை முகமலர்ச்சியுடன் போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் என்றும் வாழ்வாள் என்று கூறுகிறார் வள்ளுவர்.

(இக்காலத்தில் அக்காலம் போல அதிதி போஜனம் செய்ய இயலுமா என்கிற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இந்த தொடரை ஆரம்பம் முதல் படித்து வாருங்கள். விடை கிடைக்கும்!)

உ.வே.சா என்னும் தமிழ்க்கடலில் நீந்தி கண்டடெடுத்த மற்றுமொரு முத்து இதோ உங்கள் பார்வைக்கு… நமது தளத்தின் ஓவியர் சசி அவர்களின் பிரத்யேக ஓவியத்துடன்…!!

தர்மம் தலைகாக்கும்!

by டாக்டர்.உ.வே.சாமிநாதய்யர்

கொள்ளிடத்தின் வடகரையில் ஆங்கரை என்பதோர் ஊர் உண்டு. அது திருச்சிராப்பள்ளி ஜில்லா லாலுகுடி தாலுக்காவில் லாலுகுடிக்கு வட மேற்கே செல்லும் சாலையின் இடையே அமைந்துள் ளது. அங்கே இருக்கும் அக்கிரகாரம் இருநூறுக்கு மேற்பட்ட அந்தணர்களின் வீடுகளை உடையது அவர்களிற் பெரும்பாலோர் ஸ்மார்த்தப் பிராமணர்களுள் மழ நாட்டுப் பிரகசரணமென்னும் வகுப்பைச் சார்ந்தவர்கள். அவர்கள் யாவரும் சிவபக்தி யுடையவர்கள்; தங்கள் தங்களால் இயன்ற அளவு விருந்தினர்களை உபசரித்து உண்பிக்கும் வழக்கம் அவர்கள்பால் இருந்தது. பழைய காலத்தில் இவ் வழக்கம் எல்லாச் சாதியினரிடத்துமே உண்டு.

ஏறக்குறைய நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் மேற்கூறிய ஆங்கரையில் சுப்பையரென்ற செல்வவான் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு இரண்டாயிரம் ஏகரா நன்செய் நிலங்கள் இருந் தன. அவை ஏழு கிராமங்களில் இருந்தன வென்பர். அவருடைய குடும்பம் பரம்பரையாகச் செல்வ முள்ளதாக விளங்கியது. அவர் தெய்வபக்தியும், எழைகளிடத்தில் அன்பும், தருமசிந்தனையும் வாய்ந்தவர்.

நாள்தோறும் காலையில் ஸ்நானம் செய்து விட்டு அவர் பூஜை முதலியவற்றை முடித்துக் கொள்வார்; பிறகு போஜனம் செய்வதற்குமுன் வெளியேவந்து தம் வீட்டுத் திண்ணையில் யாரேனும் அதிதிகள் வந்துள்ளார்களாவென்று கவனிப்பார். திரிசிரபுரம், ஸ்ரீரங்கம், திருவானைக்கா முதலிய இடங்களுக்குக் கால்நடையாகச் செல்பவர்களும் அவ்வூர்களிலிருந்து தங்கள் தங்கள் கிராமங்களுக்குச் செல்பவர்களுமாகிய வழிப்போக்கர்கள் அவருடைய வீட்டுக்கு வந்து திண்ணையில் தங்கியிருப்பார்கள். சுப்பையர் அவர்களை உள்ளே அழைத்துப் பசியாற அன்னமிட்டு உபசரிப்பது வழக்கம். அவர் அன்னமிடுவதை யறிந்து பல பிரயாணிகள் அவர் வீட்டுக்கு வருவார்கள். அவருடைய வீடானது ஒரே சமயத்திற் பலர் இருந்து சாப்பிடும்படி விசாலமாக அமைந்திருந்தது. எல்லா வகையினருக்கும் அவரவர்களுக்கு ஏற்ற முறையில் அவர் உணவளிப்பார். பசியென்று எந்த நேரத்தில் யார்வரினும் அவர்கள் பசியை நீக்கும் வரையில் அவறது ஞாபகம் வேறொன்றிலும் செல்லாது.

தம்முடைய வீட்டிற்கு இரவும் பகலும் இங்ஙனம் வந்துபோவோரை உபசரித்து அன்னமிடுவதையே தம்முடைய வாழ்க்கையின் பயனாக அவர் எண்ணினார். பசிப்பிணி மருத்துவராகி வாழ்ந்து வந்த அவருடைய புகழ் எங்கும் பரவியது. அவரை யாவரும் *அன்னதானம் ஐயரென்றும், அன்னதானம் சுப்பையரென்றும் வழங்கலாயினர்.

(*அவருடைய பரம்பரையினருள்ளும், அவருறவினர் பரம்பறையினருள்ளும் அன்னதானமென்ற பெயரையுடையவர்கள் இப்போதும் சிலர் உண்டு.)

சுப்பையர் குடும்பம் மிகவும் பெரியது. அவருடைய சகோதரர்கள், அவர்களுடைய மனைவிமார், குமாரர்கள், பெண்கள், மருமக்கள், பேரர்கள், பேர்த்திகள் முதலியோர் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அன்னதானம் செய்யும்பொருட்டு அவர் தனியே சமையற்காரர்களை வைத்துக்கொள்ள வில்லை. அவர் வீட்டிலுள்ள பெண்பாலரே சமையல் செய்வதும் வந்தோரை உபசிரித்து அன்னமிடுவதுமாகிய வேலைகளைச் செய்துவந்தனர். சிறு பிள்ளைகள் முதற் பெரியவர்கள் வரையில் யாவரும் இலைகளைப் போட்டும், பரிமாறியும், பிறவேலைகளைப் புரிந்தும் தம்முடைய ஆற்றலுக்கு ஏற்றபடி உரிய காரியங்களைக் கவனிப்பார்கள். அதிதிகளுக்கு உபயோகப்படும் பொருட்டு அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய்கள் முதலியவற்றை அவ்வப்போது செய்துவைக்கும் வேலையில் அவ்வீட்டுப் பெண்பாலர் ஈடுபட்டிருப்பார்கள். அவருடைய வீடு ஒரு சிறந்த அன்ன சத்திரமாகவே இருந்தது; குடும்பத்தினர் யாவரும் தர்மத்திற்காக அன்புடன் உழைக்கும் பணியாளர்களாக இருந்தனர்.

“இப்படி இருந்தால் எப்படிப் பணம் சேரும்? எப்பொழுதும் இந்தமாதிரியே நடத்தி வருவது சாத்தியமா?” என்று யாரேனும் சிலர் சுப்பையரைக் கேட்பார்கள். அவர், “பரம்பரையாக நடந்துவரும் இந்தத் தர்மத்தைக் காட்டிலும் மேற்பட்ட லாபம் வேறொன்று எனக்கு இல்லை. பசித்து வந்தவர்களுக்கு அன்னமிடுவதையே சிவாராதன மென்று எண்ணுகிறேன். தெய்வம் எவ்வளவு காலம் இதை நடத்தும்படி கிருபை பண்ணுகிறதோ அவ்வளவு காலம் நடத்தியே வருவேன். நான் செய்வது கெட்ட காரியமன்று என்ற திருப்தியே எனக்குப் போதும்” என்பார்.

இங்ஙனம் அவர் இருந்துவரும் காலத்தில் ஒரு சமயம் மழையின்மையாலும் ஆறுகளில் ஜலம் போதிய அளவு வாராமையாலும் நிலங்களில் விளைச்சல் குறைந்தது. ஆயினும் அன்னதானத்தை அவர் குறைக்கவில்லை. இப்படி ஒருவர் அன்னமிடுகிறாரென்ற செய்தியை அறிந்த பல ஏழை ஜனங்கள் அங்கங்கே நேர்ந்த விளைச்சற் குறைவினால் ஆதரவு பெறாமல் சுப்பையர் வீட்டிற்குவந்து உண்டு அவரை வாழ்த்திச் சென்றார்கள். இதனால் அக்காலத்தில் வழக்கத்திற்குமேல் அவர் அன்னதானம் செய்ய நேர்ந்தது. ஆயினும் அவர் மனம் கலங்கவில்லை. நாயன்மார்களுடைய வரலாற்றை உணர்ந்திருந்த பரமசிவ பக்தராகிய அவர் இறைவன் சோதனைக்கு உட்பட்டு அந்நாயன்மார்கள் பின்பு நன்மை பெற்றதையறிந்தவராதலின், தம்முடைய நிலங்கள் விளைவு குன்றியது முதலியனவும் அத்தகைய சோதனையே என்றெண்ணினார். தருமம் தலைகாக்குமென்ற துணிவினால் அவர் எப்பொழுதும் செய்துவரும் சிறப்புக்குக் குறைவில்லாமல் அன்னதானத்தை நடத்திவந்தார். பொருள் முட்டுப்பாடு உண்டானமையால் தம் குடும்பத்துப் பெண்பாலாரின் ஆபரணங்களை விற்றும் அடகு வைத்தும் பொருள்பெற்று அன்னதானத்திற்குப் பயன்படுத்தி வந்தார். அதனாற் குடும்பத்தினருக்கு ஒரு சிறிதும் வருத்தம் உண்டாகவில்லை; அப்பெண்களோ தங்கள் நகைகள் ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்பட்டது கருதி மகிழ்ந்தார்கள். அந்தக் குடும்பத்திலுள்ள யாவரும் ஆடம்பரமின்றி இருந்தனர்.

பொருள் முட்டுப்பாடு அவ்வருஷத்தில் நேர்ந்தமையால் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய ‘கிஸ்தி’யை அவராற் செலுத்த முடியவில்லை. பெருந்தொகையொன்றை வரிப்பணமாக அவர் செலுத்த வேண்டியிருந்தது. அவ்வூர்க் கணக்குப் பிள்ளை மணியகாரர் ஆகிய கிராமாதிகாரிகள் இருவரும் வரி வசூல்செய்ய முயன்றார்கள். சுப்பையர் தம்முடைய நிலைமையை விளக்கினார். அவர்கள் சுப்பையருடைய உண்மை நிலையையும் பரோபகார சிந்தையையும் நன்கு அறிந்தவர்களாதலால் அவர் கூறுவது மெய்யென்றே எண்ணினர். ஆயினும் மேலதிகாரிகளுக்கு எவ்விதம் பதில் சொல்வது? அதனால் சுப்பையரை நோக்கி, “நாங்கள் என்ன செய்வோம்! உடனே வரியை வசூல் செய்யவேண்டுமென்று எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறதே?” என்றார்கள். சுப்பையர், “என்னால் வஞ்சனையில்லையென்பது உங்களுக்கே தெரியும். நான் வரியை இப்போது செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக மேலதிகாரிகளுக்கே தெரிவியுங்கள். அவர்கள் இஷ்டம் போலச் செய்துகொள்ளட்டும். அவர்கள் நிலத்தை ஏலம் போடக்கூடும். தெய்வம் எப்படி வழிவிடுகிறதோ அப்படியே நடக்கும்; அதுவே எனக்குத் திருப்தி” என்றார்.

subbaiyyar_

சிலர் அவரிடம் வந்து, “இந்தக் கஷ்டகாலத்திற்கூட அன்னதானத்தை ஏன் வைத்துக்கொள்ள வேண்டும்? சிலகாலம் நிறுத்தி வைத்தால் வரியையும் கொடுத்துவிடலாம்; உங்களுக்கும் பணம் சேருமே” என்றார்கள். அவர், ” இந்தக் காலத்தில் அன்னம் போடாவிட்டால் இவ்வளவு நாள் போட்டும் பயன்இல்லை; இப்போதுதான் அவசியம் இந்தத் தர்மத்தை நடந்திவரவேண்டும். கஷ்டமென்பது எல்லோருக்கும் இருப்பதுதானே? பல ஏழைகள் பசியோடு வரும்போது நாம் சும்மா இருப்பதைவிட இறந்துவிடலாம். இப்பொழுது கடன்பட்டாவது இந்தத் தர்மத்தைச் செய்து வந்தால் நன்றாக விளையும் காலத்தில் உண்டாகும் லாபத்தில் ஈடு செய்து கொள்ளலாம். இப்பொழுது செய்யாமல் நிறுத்திவிட்டால் அந்த நஷ்டத்திற்கு ஈடு செய்யவே முடியாது” என்றார்.

கணக்குப் பிள்ளையும் மணியகாரரும் நடந்ததைப் பேஷ்காரர் (ரெவின்யூ இன்ஸ்பெக்டர்) இடம் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தார்; அவருக்கு ஒன்றும் தோன்றவில்லை; தாசில்தாருக்குத் தெரிவித்தார். அவர் மிக்க முடுக்கோடு வந்து பயமுறுத்தினார்; சில கடுமையான தொந்தரவுகளையும் செய்து பார்த்தார். சுப்பையர் தம்முடைய நிலைமையை எடுத்துச் சொன்னார். தாசில்தார், “இந்த அன்னதானத்தை நிறுத்திவிட்டுப் பணத்தைக் கட்டும்” என்று சொல்லவே சுப்பையர், “தாங்கள் அதை மட்டும் சொல்லக்கூடாது. எங்கள் பரம்பரைத் தர்மம் இது. இதை நிறுத்தி விடுவதென்பது முடியாத காரியம். என்னுடைய மூச்சு உள்ளவரையில் இதை நிறுத்தமாட்டேன்; எனக்கு என்ன துன்பம் வந்தாலும் வரட்டும்” என்றார்.

தாசில்தார், “இதெல்லாம் வேஷம்! அன்னம் போடுகிறேனென்று ஊரை ஏமாற்றுகிற வழி” என்றார். சுப்பையர்பால் சில காரணங்களால் பொறாமை கொண்ட குமாஸ்தாக்கள் சிலர் தாசில்தாரிடம் அவரைப்பற்றி முன்னமே கோள் கூறியிருந்தனர். தாசில்தாரும் கோபியாதலின் சுப்பையருடைய குணத்தை அறிந்துகொள்ளவில்லை.

“உம்மால் பணம் கொடுக்க முடியாவிட்டால் உம்முடைய நிலத்தை ஏலம் போடுவேன்” என்றார் தாசில்தார்.

“அவ்விதம் செய்வது அவசியமென்று உங்களுக்குத் தோன்றினால், தெய்வத்தினுடைய சித்தமும் அதுவாக இருக்குமானால், நான் எப்படி மறுக்க முடியும்?” என்று சுப்பையர் பணிவாகக் கூறினார்.

தாசில்தார் நிலத்தை ஏலம் போட்டார்; ‘இந்தத் தர்ம தேவதையின் நிலத்தை ஏலம் எடுத் தால் நம் குடும்பமே நாசமாகிவிடும்’ என்ற பயத்தால் அவ்வூரில் உள்ளோரேனும் அயலூரினரேனும் வந்து ஏலம் எடுக்கத் துணியவில்லை. தம் அதிகாரமொன்றையே பெரிதாக நினைத்த தாசில்தாருக்கோ கோபம் பொங்கியது; மீசை துடித்தது; கண்கள் சிவந்தன: “இந்த மனுஷன் பொல்லாதவனென்று தெரிகிறது. இவனுக்குப் பயந்தே ஒருவரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை, இருக்கட்டும். இவனுக்குத் தக்கபடி ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லித் தாசில்தார் போய்விட்டார். சுப்பையரைப் போலவே வேறு பலர் வரி செலுத்தவில்லை. ஆயினும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை சிறிதாகலின் எவ்வாறேனும் வசூல் செய்துவிடலாமென்ற தைரியம் தாசில்தாருக்கு இருந்தது. சுப்பையர் பெருந்தொகை செலுத்த வேண்டியவராக இருந்தமையால் அவர்மீது தாசில்தாருக்கு இருந்த கோபத்துக்கு அளவில்லை. உடனே, தாசில்தார்

=========================================================

Also check…

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

சிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்!

நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!

சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?

=========================================================

பலரிடமிருந்து வரிவசூல் செய்யப்படவில்லை யென்பதையும் அவர்களுள் பெருந்தொகை செலுத்தவேண்டிய சுப்பையர் அதற்குரிய முயற்சியொன்றும் செய்யாமல் இருப்பதையும், அவருடைய நிலத்தை ஏலம் எடுக்க ஒருவரும் துணியாததையும் ஜில்லா கலெக்டருக்கு எழுதி ஒரு தக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று தெரிவித்தார்.

“எல்லாம் பரமசிவத்தின் திருவுள்ளப்படி நடக்கும்” என்ற மன அமைதியோடு சுப்பையர் அன்னதானத்தை வழக்கம்போலவே குறைவின்றி நடத்தி வந்தார்.

தாசில்தாருடைய கடிதத்தைக் கண்ட கலெக்டர் லாலுகுடிக்கு வந்து ‘முகாம்’ போட்டார். அவர் ஒரு வெள்ளைக்காரர்; மதியூகி; எதையும் ஆலோசித்தே செய்பவர்; தருமவான்; நியாயத்துக்கு அஞ்சி ஒழுகுபவர்; தமிழ்ப் பயிற்சி உள்ளவர்; பிறர் தமிழ் பேசுவதைத் தெளிவாக அறிவதோடு தாமே தமிழிற் பேசவும் தெரிந்தவர். அவர் லாலு குடிக்கு வந்து தாசில்தாரையும் வருவித்து அவரிடம் சுப்பையரைப்பற்றி விசாரித்தார். தாசில்தார் தம்முடைய அதிகாரமொன்றும் சுப்பையரிடத்திற் பலிக்கவில்லை யென்ற கோபத்தினால் அவரைப்பற்றி மிகவும் கடுமையாகக் குறை கூறினார்; “அவன் பெரிய ஆஷாடபூதி. இவ்வளவு நிலம் வைத்திருக்கிறவனுக்குப் பணம் இல்லாமலா போகும்? ஏதோ சிலருக்குச் சோற்றைப் போட்டு விட்டு அன்னதானமென்று பேர் வைத்துக்கொண்டு பணத்தை மறைவாகச் சேகரித்து வைத்திருக்கிறானென்றே எண்ணுகிறேன். தன் வீட்டிலுள்ள நகைகளையும் ஒளித்து வைத்திருப்பான். துரையவர்கள் சிறிதேனும் இரக்கம் காட்டாமல் அந்த மனுஷனைத் தக்கபடி சிக்ஷிக்கவேண்டும்; அப்போதுதான் மற்றவர்களும் பயப்படுவார்கள்” என்றார்.

தாசில்தாருடைய பேச்சில் கோபம் தலைதூக்கி நின்றதைக் கலெக்டர் உணர்ந்தார்; அவருடைய வார்த்தைகளை அப்படியே நம்புவது அபாயமென்றெண்ணினார். ஆதலின் அந்தப் பக்கங்களில் இருந்த வேறு சிலரிடம் சுப்பையரைப்பற்றி அந்தரங்கமாக விசாரித்தார். அவ்வந்தண உபகாரியிடம் பொறாமைகொண்ட சிலர் தவிர மற்றவர்களெல்லாம் அவரைப்பற்றி மிக உயர்வாகவே சொன்னார்கள்; அவர் செய்யும் அன்னதானத்தைப்பற்றி உள்ளம் குளிர்ந்து பாராட்டினார்கள். கலெக்டர் துரை எல்லா வற்றையும் கேட்டார்.

ஒரு நாள் இரவு சுப்பையர் வழக்கம்போலவே தம்முடைய வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தார். பகலிலும் இரவிலும் யாவருக்கும் அன்னமிட்ட பின்பு, அகாலத்தில் யாரேனும் பசியோடு வந்தால் அவர்களுக்கு உதவும் பொருட்டு உணவு வகை களைத் தனியே வைத்திருக்கச் செய்வது அவருடைய வழக்கம். சில சமயங்களில் மழை முதலியவற்றால் துன்புற்று வழிநடைப் பிரயாணிகள் நள்ளிரவில் வருவார்கள். அவர்களுடைய பசியைப் போக்குவதற்கு அவ்வுணவு உதவும்.

சுப்பையர் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது நெடுந்தூரத்திலிருந்து, ” சாமீ! சாமீ!” என்று ஒரு குரல் கேட்டது. அதனால் சுப்பையருடைய தூக்கம் கலைந்தது. அவர் விழித்தெழுந்து சத்தம் கேட்கும் வழியே சென்றார். அக்கிரகாரத்தின் கோடியிலிருந்து யாரோ ஒருவன், “சாமீ! சாமீ! என்று கத்திக் கொண்டிருந்தான்.

“யாரப்பா அது?” என்று கேட்டார் சுப்பையர்.

“சாமீ” நான் பக்கத்திலுள்ள கிராமத்துப் பறையன். வேறு ஊருக்குப் போய்த் திரும்பி வருகிறேன்; பசி தாங்க முடியவில்லை. இவ்வளவு தூரம் நடந்து வந்தேன்; மேலே அடியெடுத்து வைக்க முடியவில்லை” என்றான்.

“அப்படியானால் சற்று நேரம் இங்கே இரு; இதோ வருகிறேன்” என்று சொல்லிச் சுப்பையர் தம் வீட்டுக்கு வந்தார். உடனே வெளிக்கதவைத் திறக்கச் செய்து சமையலறையிற் புகுந்தார். அங்கிருந்த கறி, குழம்பு, ரசம், மோர் முதலியவற்றைத் தனித்தனியே சில தொன்னைகளிலும் கொட்டாங் கச்சிகளிலும் எடுத்துவைத்து அன்னத்தை ஒரு பெரிய மரக்காலில் போட்டு அதன் மேல் கறி முதலிவற்றை வைத்து மேலே இலையொன்றால் மூடினார். அப்படியே அதை எடுத்துக்கொண்டு தெருவின் கோடிக்கு வந்து “இந்தா,அப்பா! இந்த மரக்காலில் சாதம், குழம்பு, கறி, ரசம் எல்லாம் வைத்திருக்கிறேன். அதோ இருக்கிறதே, அந்த வாய்க்காலு (மலட்டாற்று)க்குப் போய் உண்டு விட்டு உன் ஊருக்குப் போ. முடியுமானால் மரக்காலை நாளைக்குக் கொண்டுவந்து கொடு; முடியாவிட்டால் நீயே வைத்துக் கொள்” என்று சொல்லி அந்த மரக்காலை அவன் பார்க்கும்படி கீழே வைத்தார்.

பறையன் அதை எடுத்துக்கொண்டு, “சாமீ! உங்களைத் தெய்வம் குறைவில்லாமல் காப்பாற்றும்; தருமம் தலைகாக்கும்” என்று வாழ்த்திவிட்டுச் சென்றான். அவனுடைய பேச்சில் ஒருவிதமான நாக்குழறல் இருந்தது; பாவம்! பசியினால் பேசக் கூட முடியவில்லை! நாக்குக் குழறுகிறது!” என்று சுப்பையர் எண்ணி இரங்கினார்; அவனது பசியைத் தீர்க்க நேர்ந்தது குறித்து மகிழ்ந்து வீடு வந்து சேர்ந்தார்.

லாலுகுடியில் ‘முகாம்’ செய்திருந்த கலெக்டர் மேற்சொன்ன நிகழ்ச்சி நடைபெற்றதற்கு மறுநாள் தம்மிடம் வரவேண்டுமென்றும், தாம் விசாரணை செய்ய வேண்டுமென்றும் சுப்பையருக்கு உத்தரவொன்றை முன்னமே அனுப்பி யிருந்தார். விசாரணை நாளில் சுப்பையர் உரிய காலத்தே செல்லாமல் நேரம் கழித்துச் சென்றார்.

கலெக்டர் துரையின்முன் சேவகர்கள் அவரை நிறுத்தினார்கள். நீர்க்காவி ஏறிப் பழுப்பு நிறமாயிருந்த அவருடைய வஸ்திரம் இடையிடையே தையலையுடையதாயும், சில இடங்களில் முடியப் பட்டதாயும் இருந்தது; அவருடைய உடம்பில் விபூதி விளங்கியது; மார்பில் ருத்திராக்ஷமாலை இருந்தது. அவர் நேரங் கழித்து வந்ததனால் அவரிடங் கோபங் கொண்டிருப்பவரைப் போலவே கலெக்டர் இருந்தார்; முகத்திற் கோபக் குறிப்பு வெளிப்பட்டது! “இவரா சுப்பையர்?” என்று கேட்டார் துரை. அருகிலிருந்த தாசில்தார், “ஆமாம்!” என்றார்.

கலெக்டர், “இவ்வளவு ஏழையாக இருப்பவரையா நீர் பெரிய பணக்காரரென்றும் வரிப்பணம் அதிகமாகத் தரவேண்டுமென்றும் எழுதியிருக்கிறீர்?” என்று கேட்டார்.

தாசில்தார்: இதெல்லாம் வேஷம். இப்படி வந்தால் துரையவர்கள் மனமிரங்கி வரியை வஜா செய்யக்கூடுமென்ற வஞ்சக எண்ணத்தோடு வந்திருக்கிறார்.

கலெக்டர் அவரைக் கையமர்த்திவிட்டுச் சுப்பையரைப் பார்த்து, “நீரா ஆங்கரைச் சுப்பையர்?” என்று கேட்டார்.

சுப்பையர்: ஆம்.

கலெக்டர்: நீர் ஏன் சரியான காலத்தில் வரவில்லை? சர்க்கார் உத்தரவை அலக்ஷியம் செய்யலாமா?

சுப்பையர்: துரையவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. காலையில் எழுந்து ஸ்நானம் செய்து பூஜையை முடித்துவிட்டு, வருகிறவர்களுக்கு ஆகாரம் செய்விப்பது என் வழக்கம். இன்று பலர் வந்திருந்தார்கள். வழக்கப்படியே அவர்கள் யாவருக்கும் போஜனம் செய்வித்து நானும் ஆகாரம் செய்த பிறகு வந்தேன்.

கலெக்டர்: உம்முடைய வரிப்பணம் அதிகமாகப் பாக்கி இருக்கிறதே! தெரியுமா?

சுப்பையர்: தெரியும். என்மேல் வஞ்சனை இல்லை; நிலம் சரியானபடி விளையாமையால் வரிப்பணத்தை என்னால் இப்பொழுது செலுத்த முடியவில்லை.

கலெக்டர்: அன்னதானத்தை மட்டும் எப்படி நீர் செய்கிறீர்?

சுப்பையர்: கிடைக்கும் நெல்லை யெல்லாம் வைத்துக்கொண்டு செய்கிறேன். முன்பு அன்னதானம் செய்ததுபோக மிஞ்சுவதில் வரியைச் செலுத்தி வந்தேன். இப்பொழுது அது முடியவில்லை. அன்னதானத்திற்கே போதாமையால் என்வீட்டு நகைகளை அடகு வைத்துக் கடன் வாங்கியிருக்கிறேன்; சிலவற்றை விற்கவும் செய்தேன்.

கலெக்டர்: இவ்வளவு கஷ்டப்பட்டு நீர் அன்னதானத்தை ஏன் செய்ய வேண்டும்?

சுப்பையர்: அது பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் நடந்து வருகிறது.

கலெக்டர்: அன்னம் போடுவது பகலிலா? இரவிலா?

சுப்பையர்: இரண்டு வேளையும் போடுவதுண்டு. கால்நடையாக வருகிறவர்கள் பசியோடு எப்பொழுது வந்தாலும் போடுவது வழக்கம்;.

கலெக்டர்: எந்தச் சாதியாருக்குப்போடுவீர்?

சுப்பையர்: பிராமணருக்கும் மற்றச் சாதியாருக்கும் அவரவர்களூக்கு ஏற்ற முறையில் போடுவதுண்டு. பசித்து வந்தவர்கள் யாரானாலும் அன்னமிடுவேன்.

கலெக்டர்: பறையருக்கும் போடுவதுண்டா?

சுப்பையர்: ஆம்; போடுவதுண்டு; எல்லோரும் சாப்பிட்ட பிறகு போடுவோம்.

கலெக்டர்: இதுவரையில் அப்படி எத்தனை தடவை பறையர்களுக்குப் போட்டிருக்கிறீர்?

சுப்பையர்: எனக்கு நினைவில்லை; பலமுறை போட்டிருக்கிறேன்.

கலெக்டர்: சமீபத்தில் எப்போது போட்டீர்?

சுப்பையர்: நேற்றுக்கூட ஒரு பறையன் பாதி ராத்திரியில் பசிக்கிறதென்று வந்தான்; சாதம் கொடுத்தேன்.

கலெக்டர்: அப்படியா! என்ன என்ன கொடுத்தீர்? எல்லோரும் சாப்பிட்டு மிச்சமான சோற்றையா கொடுத்தீர்?

சுப்பையர்: அகாலத்தில் யாராவது வந்தால் உபயோகப்படுமென்று ரசம், குழம்பு, மோர் முதலியவற்றிற் கொஞ்சம் கொஞ்சம் தனியே எடுத்து வைத்திருப்பது வழக்கம். ஆதலால் நேற்று வந்தவனுக்கு அன்னம், கறி, குழம்பு, ரசம், மோர் எல்லாம் கொடுத்தேன்.

கலெக்டர்: இலை போட்டா சாப்பாடு போட்டீர்.

சுப்பையர்: இல்லை; அது வழக்கமில்லை. ஒரு மரக்காலில் அன்னத்தை வைத்து, அதன்மேல் தனித் தனியே தொன்னையிலும் கொட்டாங்கச்சிகளிலும் ரசம், கறி முதலியவற்றை வைத்துக் கொடுத்தேன்.

கலெக்டரோடு வந்திருந்த உத்தியோகஸ்தர்கள் யாவரும் இவ்வளவு விரிவாக அவர் விசாரணை செய்வதை நோக்கி மிகவும் வியப்புற்றார்கள். சுப்பையர் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருந்த துரை தாசில்தாரைப் பார்த்தார். அவர் “எல்லாம் பொய்” என்று சொல்லிவிட்டு முணுமுணுத்துக் கொண்டே யிருந்தார்.

கலெக்டர்: உமக்கு அந்தப் பறையனைத் தெரியுமா?

சுப்பையர்: இருட்டில் இன்னா னென்று தெரியவில்லை.

கலெக்டர்: அவனிடம் கொடுத்த மரக்காலைக் கொண்டுவந்து காட்டுவீரா?

சுப்பையர்: அதை அவன் இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை.

கலெக்டர்: அப்படியானால் நீர் அவனுக்கு அன்னம் கொடுத்ததற்கு வேறு சாக்ஷி என்ன இருக்கிறது?

சுப்பையர்: வேறு சாக்ஷி எதற்கு? தெய்வத்துக்குத் தெரியும். அப்படி நான் செய்ததை யாரிடம் சொல்லிக்கொள்ள வேண்டும்?

கலெக்டர்: அந்த மரக்காலை அவன் திருப்பிக் கொடாவிட்டால் என்ன செய்வீர்?

சுப்பையர்: ‘முடியுமானால் கொடு; இல்லாவிட்டால் நீயே வைத்துக்கொள்’ என்று நானே சொல்லிக் கொடுத்தேன்; அவன் கொடுக்காவிட்டால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை.

கலெக்டர் “அப்படியா!” என்று சொல்லிக் கொண்டே மேஜை முழுவதையும் தரைவரையில் மறைத்து மூடியிருந்த ஒரு துணியை மெல்லத் தூக்கினார். என்ன ஆச்சரியம்! அதன் கீழே ஒரு மரக்கால் காணப்பட்டது.

“நீர் கொடுத்த மரக்கால் இதுதானா பாரும்?” என்று சொல்லித் துரை அதை எடுத்து மேஜையின் மேல் வைத்தார்.

சுப்பையர் திடுக்கிட்டார்; தாம் கண்டதை அவர் நம்ப முடியவில்லை. கண்ணைத் துடைத்துத் துடைத்துப் பார்த்தார். தாம் முதல்நாள் பாதிராத்திரியில் ஒரு பறையனிடம் கொடுத்த மரக்கால் அங்கே எப்படி வந்திருக்கலாமென்று யோசித்தார்; ஒன்றும் தெரியவில்லை. அங்கே இருந்த யாவரும் ஒரு நாடகத்தில் மிகவும் ரசமான காட்சியொன்றில் ஈடுபட்டு மெய்ம்மறந்தவர் போல் ஆனார்கள்.

“என்ன, பேசாமல் இருக்கிறீர்? ராத்திரி நீர் செய்த அன்னதானத்துக்குச் சாக்ஷியில்லையென்று எண்ணவேண்டாம். பாதி ராத்திரியில் வந்த பறையன் நான்தான்? நீர் கொடுத்த மரக்கால் இதுதான்! இந்த இரண்டு சாக்ஷிகளும் போதா விட்டால், என்னுடன் அங்கே வந்த குதிரைக்காரன் வேறு இருக்கிறான். நீர் சொன்னதெல்லாம் உண்மையே. உம்முடைய வீட்டு அன்னத்தையும் கறி முதலியவற்றையும் நான் ருசி பார்த்தேன். உம்முடைய ஜன்மமே ஜன்மம்” என்றார் கலெக்டர்; அவருடைய கண்களில் நீர் ததும்பியது; உள்ளத்தில் உண்டான உருக்கம் அவர் தொண்டையை அடைத்தது. சிறிது நேரம் அவராற் பேச முடியவில்லை. பிறகு, “உமக்கு எந்தக் காலத்திலும் குறைவே வராது. தெய்வம் உம்மைக் குறைவில்லாமல் காப்பாற்றும்; தருமம் தலைகாக்கும். உமக்காகத்தான் மழை பெய்கிறது” என்றார்.

அந்த வார்த்தைகளின் தொனியில் முதல் நாள் இரவு பறையன், ‘தெய்வம் உங்களைக் குறைவில்லாமல் காப்பாற்றும்; தருமம் தலைகாக்கும்’ என்று சொன்ன வார்த்தைகளின் தொனி ஒலிப்பதை அப்போதுதான் சுப்பையர் உணர்ந்தார்; தமிழைப் புதிதாகக் கற்றுக்கொண்ட வேற்று நாட்டாராகிய துரையின் பேச்சானது, பசியினால் நாக்குழறிப் பேசுபவனது பேச்சைப்போல இராத்திரியில் தமக்குத் தோன்றியதென்பதை அறிந்தார். அவருக்கு இன்னது சொல்வதென்று தோற்றவில்லை.

“அப்படியே அந்த நாற்காலியில் உட்காரும். நீர் வரிப்பணத்தை மோசம் செய்யமாட்டீரென்பது எனக்கு நன்றாகத் தெரியும். நானும் உம்முடைய மரக்காலை மோசம் செய்யாமல் இதோ கொடுத்து விட்டேன்; எடுத்துக்கொள்ளும். உம்முடைய தருமம் குறைவின்றி நடைபெற இந்த வரிப்பணம் உதவுமானால் அதைவிட இந்த ராஜாங்கத்துக்குச் சிறந்த லாபம் வேறு இல்லை. உம்மால் எப்போது முடியுமோ, அப்போது வரியைக் கட்டலாம். உம்மை ஒருவரும் நிர்ப்பந்தம் செய்யமாட்டார். நான் இந்த ஜில்லாவில் இருக்கும் வரையில் உமக்கு ஒருவிதமான துன்பமும் நேராது” என்றார் கலெக்டர். பிறகு தாசில்தாரை நோக்கி, “உம்முடைய வார்த்தையை நான் நம்பியிருந்தால் பெரிய பாவம் செய்திருப்பேன், இனிமேல் தீர விசாரியாமல் இந்த மாதிரி ஒருவரைப்பற்றியும் நீர் எழுதக் கூடாது” என்று கண்டித்துக் கூறினார்.

மேஜைத் துணியாகிய திரையைத் துரை தூக்கியதும், அம் மேஜைக்கு அடியில் அவ்வந்தணவள்ளலது அன்னதானத்தை அளந்த மரக்கால் இருந்ததும், அதனைத் துரை எடுத்து மேஜையின் மேல் வைத்து மனமுருகிப் பேசிக் கண்களில் நீர் ததும்ப வீற்றிருந்ததுமாகிய அக் காட்சிகளை நம்முடைய அகக்கண்ணால் நோக்கும்போது நமக்கே மயிர் சிலிர்க்குமாயின், அங்கேயிருந்து கண்ணால் பார்த்தவர்களுடைய உள்ளமும் உடலும் எப்படி இருந்திருக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?

[கும்பகோணம் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதராக இருந்த வித்துவான் ஸ்ரீ சி. தியாகராச செட்டியாரவர்கள் 1883-ஆம் வருடம் திருவானைக்காவில், திருமஞ்சனக் காவிரிக்கரையில், ஆங்கரைச் சுப்பையருடைய பரம்பரையினர் சிலரைக் கண்டு பேசிக் கொண்டிருந்தனர். நானும் உடனிருந்தேன். அவர்களை அப்பொழுது செட்டியார் பாராட்டிவிட்டு இவ்வரலாற்றைக் கூறினர். மேற்படி பரம்பரையினரும் சொன்னார்கள். சுப்பையருடைய பெண்வழியில் தோன்றிய மணக்கால் ம-ள-ள-ஸ்ரீ கந்தசாமி ஐயரவர்களாலும் பிறகு சில விஷயங்களை அறிந்து கொண்டேன்.]

  • ‘நல்லுரைக் கோவை’ | டாக்டர்.உ.வே.சா | ரைட்மந்த்ரா.காம்

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

========================================================

Also check articles on உ.வே.சா in Rightmantra

கடைசியில் வந்தவன் முதல் பரிசை தட்டிச் சென்ற கதை!

திருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம்! யாருக்கு, ஏன்?

பிரம்படி வாத்தியாரும் படிப்பு ஏறாத பிச்சு ஐயரும்!

வேங்கடசுப்பையர் கனவில் தோன்றிய கிழவனும் கிழவியும் ! MUST READ

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

ஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்!

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கோவிந்த தீட்சிதர் – மன்னராட்சியிலும் மக்களுக்கான ஆட்சியை தந்த மகான்!

========================================================

Also check – அதிதி தேவோ பவ – முந்தைய பாகங்களுக்கு….

மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)

நெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)

தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)

==========================================================

அன்னதானம் பற்றிய பதிவுகள்…

அன்னதானம் என்கிற அருந்தவம்!

வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

==========================================================

[END]

3 thoughts on “தர்மம் தலைகாத்த உண்மை சம்பவம் – அதிதி தேவோ பவ – (5)

  1. Very Big Article.
    .We Understand Your Value of Work and its Dedication Given by You to Wrote this Article.

    Dear RM Viewres,

    Please Give Your Valuable Feedback to each article. so that our Editor also get Energy and Confident in Writing New things to The Viewers. This is my Small Humble Request.

    Thank You All.

    WISH YOU ALL THE RM VIEWERS, AND THERE FAMILY A HAPPY AND SAFE DIWALI.

    Thanks & Regards,
    S.Narayanan.

  2. ஆம். தான தர்மங்கள் செய்பவர்கள் என்றுமே இறைவன் அருளால் நன்றாகவே இருப்பார்கள். இதில் எள்ளளவும் ஐயமில்லை. பெரிய பதிவுதான். அனால் மிக அருமையான பதிவு. திரு உ. வே. சாமிநாத ஐயர் அவர்களின் எழுத்து நடை என்னை வெகுவாகவே கவர்ந்துள்ளது. முடிந்த வரை அவரவர்கள் சக்திக்கேற்றபடி அனைவரும் தான தர்மங்களை செய்வோம்.

    ஓம் நம சிவாய!

  3. அருமை ஜி!

    நாம் அனைவரும் தனி தனியாக தானமும் செய்வோம்.

    நம் அனைவருக்கும் இந்த மாதிரி பொக்கிஷங்களை அள்ளி தரும் rightmantra -விற்கும் தாராளமாக நிதியுதவியும் செய்வோம்!

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    அன்பன்,
    நாகராஜன் ஏகாம்பரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *