Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, April 16, 2024
Please specify the group
Home > Featured > தடைகளை தகர்த்து விரும்பியவரை கரம் பிடிக்க!

தடைகளை தகர்த்து விரும்பியவரை கரம் பிடிக்க!

print
ன்று காதலர் தினம். மிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள கொண்டாட்டங்களில் இதுவும் ஒன்று. (அதை விடுங்க. அது பெரிய சப்ஜெக்ட். அந்த ஆராய்ச்சிக்கு நாம போக வேண்டாம்.)

ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் வாழ்வில் ஒவ்வொரு படி முன்னேறியிருப்பேன் என்ற வைராக்கியங்கள் வழக்கொழிந்து இன்றைக்கு காதலர் தினத்தன்று ஜோடியின்றி சும்மாயிருப்பதே அவமானம் – உடனடி தேவை : “ஆணாயிருந்தால் ஒரு கேர்ள் ப்ரெண்ட்; பெண்ணாக இருந்தால் ஒரு பாய் ப்ரெண்ட்” என்கிற வைராக்கியம் மட்டுமே இன்றைய இளைய தலைமுறையினர் பெரும்பாலானோரிடம் காணப்படுகிறது. விளைவு? சில மாதங்கள் கூட நீடிக்காத காதல்கள். அதில் தப்பி பிழைத்தால் திடீர் திருமணங்கள். பின்னர் அவசர விவாகரத்துக்கள்.

நண்பர்களின் நடவடிக்கைகளால் தாங்களும் உந்தப்பட்டு ‘புரிதல்’ என்பதே சிறிதும் இன்றி – வெறும் பாலின ஈர்ப்பினால் மட்டுமே வரக்கூடிய ஒரு உணர்வை ‘காதல்’ என்று பெயர் சூட்டி அவசரக் கோலத்தில் ஆராயாது கூறப்பட்ட ப்ரொபோஸல்களை துடுப்பாக்கி பயணிக்கும் இவர்கள் எப்படி வாழ்க்கை என்னும் – சுறாக்கள் நிரம்பிய சமுத்திரத்தில் – கரை சேர முடியும்?

ஆனால் இதையும் மீறி உண்மையான காதல்களும் ஆங்காங்கே மலரவே செய்கின்றன. ஜாதி, மொழி, அந்தஸ்து, தோற்றம் இதையெல்லாம் தாண்டி ஒருவர் மீது ஏற்படும் ஈர்ப்பு அன்பாக மாறி பின்னர் அது தீராக் காதலாக மாறிவிடுவதுண்டு. காதலை முற்றிலும் புனிதமாக பார்க்கும் காதலர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

ஆனால் சாதி மத சடங்கு சம்பிரதாயங்கள் புரையோடிப் போயுள்ள இந்த வறட்டு கௌரவம் பார்க்கும் சமூகத்தில் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் விரும்பியவரை மணப்பது என்பது அத்துணை சுலபமில்லையே… இரு உள்ளங்களுக்கிடையே ஏற்படும் ஆத்மார்த்தமான காதலை பெற்றோர் உள்ளிட்ட உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்து திருமண பந்தத்தில் இணைத்து வைக்கும் பாக்கியம் எத்துனை காதலர்களுக்கு கிடைக்கிறது?

எனக்கு தெரிந்து ஆயிரத்தில் ஒரு சிலருக்கு அப்படி அமைந்தாலே அபூர்வம் தான். ஏனையோர் அனைவருக்கும் ஏதாவது ஒரு பக்கத்தில் கசப்புக்களோ வருத்தங்களோ புறக்கணிப்புக்களோ இருக்கும். மேற்படி தடைகளை வருத்தங்களை தாண்டி விரும்பிய துணையை கைப்பிடிப்பது என்பது அத்துணை சாதாரண விஷயம் அல்ல.

அது தொடர்பாக பிரச்னைகளை சந்தித்து வருபவர்களுக்கு தெரியும் அது எத்தனை கடினமான ஒன்று – வலியை தரக்கூடியது – என்று.

இரு வீட்டார் சம்மதத்துடன் தான் நமது திருமணம் நடக்கவேண்டும் என்று திருமண பருவத்தை கடந்தும் கூட திருமணம் செய்து கொள்ளாமல் சம்பந்தப்பட்டவர்களின் மனமாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.

அதே போல, தகுதியிருந்தும் தாம் அன்பு செலுத்துபவர்கள் தங்கள் அன்பை புரிந்துகொள்ள மறுப்பதால் அல்லது ஏற்க மறுப்பதால் வாடுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். (ஒரு பொருள் அதோட மதிப்பு தெரிஞ்சவங்ககிட்டே இருந்தாத் தானே அது ஒழுங்கா இருக்கமுடியும்?)

மொத்தத்துல… மனசுக்கு பிடிச்ச மண வாழ்க்கை அமையலேன்னா… ஆயிரம் இருந்தும் என்ன பயன் சொல்லுங்க?

இப்படி தங்கள் காதல் உண்மையாக இருந்தும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏற்க மறுப்பதால் தவிப்பவர்களுக்கும் தாங்கள் விரும்பிய துணையை அவர்களின் இனிய மனமாற்றத்துடன் கரம் பிடிக்க ஏங்குபவர்களுக்கும் வழிகாட்டவே இந்த பதிவு.

காதலர்கள் மட்டுமில்லீங்க… கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் தம்பதியினரும் இதை படித்து பயன்பெறலாம். மீண்டும் அவர்கள் ஒன்று சேர்வார்கள்.

பகவான் கிருஷ்ணருக்கு ருக்மிணி பிராட்டியார் எழுதிய காதல் கடிததையும் கிருஷ்ணர்-ருக்மிணி காதல் நிறைவேறிய கதையையும் கீழே தந்திருக்கிறேன்.

உண்மையான – தூய்மையான காதலர்கள் – இதை பயன்படுத்திக்கொள்ளலாம். பயபக்தியுடன் இதை பகவான் கிருஷ்ணரையும் ருக்மிணி தாயாரையும் மனதில் நினைத்து வெள்ளி தோறும் படித்து வாருங்கள். நிச்சயம் உங்கள் காதல் நிறைவேறி விரும்புகிறவரை கரம்பிடிப்பீர்கள். வாழ்த்துக்கள்!

பிறப்பிலிருந்து காதல், கல்யாணம் என எல்லாமே பகவான் கிருஷ்ணருக்கு போராட்டம் தாங்க.

ருக்மிணி பிராட்டி கிருஷ்ணரை உயிருக்கு உயிராய் விரும்ப, ருக்மிணியின் விருப்பத்திற்கு மாறாக அவரை வேறு ஒரு தகுதியற்றவனுக்கு மணமுடிக்க அவள் அண்ணன் துணிய, விடுவாரா நம்ம ஹீரோ… கோதாவுல இறங்கி அடி தூள் கிளப்பின சம்பவம் தாங்க இப்போ நீங்க பார்க்கிறது.

“விரும்புற பொண்ணுக்கு கட்டாயக் கல்யாணமா? தூக்கிட்டு வாங்கடா பொண்ணை” என்கிற அந்த சினிமா காட்சிகளுக்கெல்லாம் முன்னோடி நம்ம பகவான் செய்த இந்த ருக்மிணி கடத்தல் லீலை.

(அவருக்கு தகுதியும் இருந்தது – காதலும் உண்மையாக இருந்தது என்பதை மறந்துடாதீங்க!)

ஓ.கே…?

ஓவர் to ருக்மிணி காதல் + திருக்கல்யாணம்!

………………………………………………………………
இந்த காதல் கடிதம் படியுங்க.. உங்கள் கல்யாண தேதி குறியுங்க!

காதலில் வெற்றி பெற, திருமணத்தில் தடையுள்ளவர்கள், இந்த கடிதத்தைப் படித்தால் சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை. விதர்ப்பதேசத்தின் ராஜா பீஷ்மகரின் மகள் ருக்மிணி. இவள் கிருஷ்ணரைக் காதலித்தாள். ஆனால், ருக்மிணியின் அண்ணன் ருக்மியோ அவளை சேதி நாட்டு இளவரசன் சிசுபாலன் என்பவனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்தான். இதை விரும்பாத ருக்மணி, கிருஷ்ணரைத் திருமணம் செய்யும் விருப்பத்தை ஏழு ஸ்லோகங்களாக எழுதி அனுப்பினாள். அவை…

பகவான் கிருஷ்ணருக்கு ருக்மிணி எழுதிய காதல் கடிதம்

கண்ணபிரானே! தங்களுடைய தகுதியான குணங்களையும், உன்னதமான அழகையும் பற்றி கேள்விப்பட்டு என் மனம் உங்கள் வசம் முழுவதுமாக வந்துவிட்டது.

தங்கள் ஒழுக்கம், குணம், வடிவம், கல்வி, இளமை,தைரியம், தர்மசிந்தனை ஆகியவை யாவும் என்னிடமும் இருப்பதாக நினைக்கிறேன்.

என் ஆத்மாவை, சிங்கம் போன்ற வீரமிக்க உங்களுக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன்.

உங்களைக் கணவராக அடைவதற்கு, பல ஜென்மங்களாக விரதங்கள், ஹோமங்கள் உள்ளிட்ட சடங்குகளை சரியான முறையில் நிறைவேற்றியிருப்பதாகக் கருதுகிறேன். என்னைத் தாங்களே கைபிடிக்க வேண்டும்.

எனக்கு விருப்பமில்லாத திருமணம் நடப்பதற்கு முதல்நாளே இங்கு வந்து, எதிரிகளைத் தோற்கடித்து, துவாரகைக்கு தூக்கிச் சென்று, விதிகளின்படி திருமணம் செய்ய வேண்டுகிறேன்.

எங்கள் குலவழக்கப்படி, திருமணத்திற்கு முன்தினம் அம்பிகை கோயிலுக்குச் செல்வேன். பூஜை முடிந்து வெளியே வந்ததும் என்னைக் அழைத்துச் செல்லலாம். யோகிகளாலும் மகான்களாலும் பூஜிக்கப்படும் தங்கள் திருவடிகளை, தினமும் பூஜிக்கும் பாக்கியம் வேண்டும்.

(நன்றி : Dinamalar.com)

………………………………………………………………………………………

ருக்மிணி-கிருஷ்ணர் கல்யாணம் – விரிவான வரலாறு

தன் காதலுக்குத் தடையாக, வில்லனாக, தன்னுடைய அண்ணனே வருவான் என்று ருக்மிணி சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

தன் விருப்பத்துக்கு மாறாக வேறொருவனுக்குத் தன்னை மணமுடிக்க அண்ணன் தீவிரமாக முயற்சிப்பதைக் கண்டு அவள் அதிர்ந்துதான் போனாள்.

விதர்ப்ப நாட்டு மன்னன் பீஷ்மகனுக்கு ஐந்து மகன்கள், ஒரே ஒரு மகள். அந்த மகள்தான் ருக்மிணி. அவளை அப்படியே மஹாலக்ஷ்மியின் அவதாரம்  என்று பார்த்தவரெல்லாம் பாராட்டி மகிழ்ந்தார்கள். அந்தக் கிளியைத்தான் ஒரு குரங்கின் கையில் பிடித்துக் கொடுக்க அவளுடைய அண்ணன் ருக்மி திட்டமிட்டான். ஆனால் தங்கையின் மனமோ கிருஷ்ணனிடம் சிறைப்பட்டிருந்தது & கிருஷ்ணனைப் பாராமலேயே!

ஆமாம், அரண்மனைக்கு வரும் முனிவர்கள், கிருஷ்ணனைப் பற்றி மன்னனாகிய தன் தந்தையிடம் சொல்வதையெல்லாம் ருக்மிணி செவிமடுத்திருந்தாள். அவனுடைய அழகு, கம்பீரம், வீரம் போன்ற எல்லா நற்குணங்களும் அவளை வசீகரித்திருந்தன. அவனே தன்  நாயகன்  என்பதை அவள்  தீர்மானித்துவிட்டிருந்தாள். எப்போது பார்த்தாலும் அவனைப் பற்றியே சிந்தனை, பேச்சு எல்லாம்.

மன்னன் பீஷ்மகன், மகள் ருக்மிணியின் மனதைத் தெரிந்து கொண்டான். அவளுடைய விருப்பப்படியே கிருஷ்ணனுக்கே அவளை மணமுடிப்பதாக வாக்களித்தான். ருக்மிணி எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தாள்.

ஆனால் அண்ணன் ருக்மி இதற்கு சம்மதிக்கவில்லை. கிருஷ்ணன் மீது அவனுக்குத் தனிப்பட்ட கோபமும் பகையும் இருந்தன. தன் நண்பன் கம்சனை கிருஷ்ணன் வதம்  செய்ததிலிருந்து ஏற்பட்ட பகை அது. இன்னொரு நண்பன் ஜராசந்தனுக்கு கிருஷ்ணன் எதிரியாக இருப்பதால், கூடுதலாக வளர்ந்த பகை அது. அதனால், தான் பகைவனாகக் கருதும் கிருஷ்ணன், தனக்கு சம்பந்தி உறவு கொள்ளலாகாது என்று நினைத்தான்.

மாற்று ஏற்பாடாக மற்றும் ஒரு நண்பனான, சேதி நாட்டு அரசன் சிசுபாலனுக்கு தங்கையை மணம் செய்து கொடுக்கும் முடிவுக்கு வந்தான்.

மகனுடைய இந்த ஏற்பாட்டுக்கு மன்னனால் மறுப்பு எதுவும் சொல்ல இயலவில்லை. அவனுடைய பிடிவாதத்துக்கு அவர் பயந்தார்.  தன் மகளுக்குத் தந்த வாக்குறுதியையும் அவர் மறந்தார்; வேறு வழி தெரியாமல் மறந்தார்.

ருக்மிணி தவித்தாள். தந்தையும் தனக்கு எதிராக மாறிவிட்ட அவலத்தை நினைத்து அவதிப்பட்டாள். அண்ணனுடைய அராஜகத்துக்கு அப்பாவே அடிபணிந்தபோது, அபலைப் பெண்ணின் கெஞ்சல் அம்பலத்தில் ஏறுமா?

ருக்மியோ, தன்னை எதிர்ப்போர் யாருமில்லை என்ற ஆணவத்துடன், தன் தங்கைக்கும் சிசுபாலனுக்குமான திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டான். விதர்ப்பநாடு முழுவதுமே விழாக்கோலம் பூண்டது. திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. எல்லா தேசத்து மன்னர்களுக்கும் திருமண அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. ருக்மிக்கு ஆதரவாக அவனுடைய நான்கு சகோதரர்களும் இந்தத் திருமண ஏற்பாட்டில் அவரவர்க்கென்று பொறுப்புகளை பிரித்துக்கொண்டு, செயல்படத் துவங்கினர்.

யாருமே தனக்கு ஆறுதலாகவோ, பரிவாகவோ இல்லாத சூழ்நிலையில், தானே தன் வாழ்வுக்கு வழி தேடிக்கொள்ள வேண்டிய நெருக்கடியின் எல்லை விளிம்பில் நிற்பதை ருக்மிணி புரிந்துகொண்டாள்.

அண்ணனுடைய நண்பனை கிருஷ்ணர் வதம் செய்தார் என்றால், அந்த கம்சன் வதம் செய்யப்பட வேண்டியவனாக இருந்ததுதான் காரணம். அவனுடன் நட்பு கொண்டதற்காக தன்னுடைய அண்ணன், அவனுக்காக வக்காலத்து வாங்குவது எந்த வகையில் நியாயம்?

ருக்மிணி ஒரு முடிவுக்கு வந்தாள். பாழுங்கிணற்றில் தள்ளுவதற்குத் தன் குடும்பத்தாரே தீர்மானித்துவிட்ட பிறகு, தெரிந்தே அதில் விழ தானும் தயாராகிவிடக் கூடாது என்று நினைத்து, தன் மீது பரிவும் பாசமும் கொண்டிருந்த அரண்மனை குரு ஒருவரை உடனடியாக அணுகினாள். அவள் கையில் ஓலைக் கடிதம்.

‘‘வந்து… இந்த ஓலையை என் ஜீவன் கிருஷ்ணனிடம் சேர்ப்பித்து உதவுவீர்களா?’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள் ருக்மிணி.

‘‘போன ஜென்மத்தில் ராமனுக்கு உதவிய அணில்பிள்ளை நானாகத்தான் இருந்திருப்பேன் அம்மா. இப்போது இந்த ஜென்மத்தில் உனக்கு உதவுகிறேன். தயக்கம் வேண்டாம் அம்மா. கொடு கடிதத்தை, கொண்டு சேர்க்கிறேன் கிருஷ்ணரிடம்’’ என்று சொல்லி ஆவலுடன் அவர் அக்கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

துவாரகையை அடைந்தார் குருதேவர். கிருஷ்ணன் அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தான். வந்த காரணத்தைத் தெரிந்து கொண்டான்.

புன்சிரிப்புடன் கிருஷ்ணன் அந்த ஓலையை வாங்கிப் படித் தான். ‘‘பரந் தாமா, என்னை ஆட்கொண்ட வரே! தங்களுடைய நிறை குணங்களை கேள்விப்பட்டு என் மனதில் தங்களை நிறைத்துக் கொள்ள வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன். என் மனம் தெரிந்து என் தந்தையாரும் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் என் அண்ணன் ருக்மி என் விருப்பத்துக்குத் தடையாக நிற்கிறான். சேதி நாட்டு மன்னன் சிசுபாலனுக்கு என்னை மணமுடிப்பதில் தீவிரமாக இருக்கிறான். எனக்கு ஒரே ஆதரவாக இருந்த தந்தையும் அண்ணனுக்கு பயந்து அவனுடைய ஏற்பாட்டிற்குத் தலையாட்டி வருகிறார்.

‘‘இந்த நிலையில் என்னைக் காப்பாற்றத் தங்களை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை. உள்ளத்தை உங்களுக்குத் தந்துவிட்டபிறகு, இன்னொருத்தனைக் கரம் பிடிப்பது எப்படி சாத்தியமாகும்? தாங்களும் என்னைக் கைவிட்டுவிட்டால்  என் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை. எங்கள் சம்பிரதாயப்படி, திருமணத்திற்கு முன்னால் கௌரி பூஜை செய்வதற்காக நான் ஆலயத்துக்கு வருவேன். அப்போது தாங்கள் என்னைக் காப்பாற்றி அல்லது கடத்திச் சென்று என்னை ஆட்கொள்ள வேண்டும்…’’

கிருஷ்ணன் குருதேவரைப் பார்த்தான். ‘‘ருக்மிணியின் உள்ளக்கிடக்கை எனக்குப் புரிகிறது. நான் அவளுடைய விருப்பத்தைப் பரிபூரணமாக நிறைவேற்றுவேன் என்று அவளிடம் சொல்லுங்கள். அவள் யாருக்காகவும், எதற்காகவும் அஞ்ச வேண்டாம்’’ என்று உறுதியாகச் சொன்னான். குருதேவர் மனமகிழ்ச்சியுடன் விதர்ப்ப நாட்டிற்குத் திரும்பினார்.

‘‘ருக்மிணி, உன்னுடைய மனோரதம் நிறைவேறப் போகிறது. கிருஷ்ணர் உடனேயே வருகிறார். நிச்சயம் உன்னைக் கரம் பிடித்து அழைத்துச் செல்வார். ஏதேனும் எதிர்ப்பு இருந்தால் அதைத் தகர்த்தெறிய ஒரு போர்ப்படையே அவருடன் வருகிறதம்மா. உன் கவலை தீர்ந்தது’’ என்று சொல்லி ஆசிர்வதித்தார் குருதேவர்.

தான் கடிதத்தில் எழுதிக் கேட்டுக்கொண்டபடியே தன்னை மீட்டுச் செல்ல கிருஷ்ணன் வந்துவிட்டதை அறிந்த ருக்மிணி, அவனுக்குத் தோதாக கௌரி பூஜையை மேற்கொள்வதற்காக ஆலயத்துக்குச் சென்றாள். மனமுருக தேவியை வழிபட்டாள். அவளுடைய மனம் படபடத்தது. தன் வாழ்நாளின் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தப்போகும் நாள் அது என்பதில் சந்தேகமில்லை.

பூஜையை முடித்து ஆலயத்தைவிட்டு வெளியே வந்த ருக்மிணியை, சற்றுத் தொலைவில், ஒரு ஒளி, ‘‘வா, ருக்மிணி…’ என்று காதலுடன் அழைத்தது. ஓடிச் சென்று தஞ்சமடைந்தாள் ருக்மிணி. பேரொளியாகத் திகழ்ந்த கிருஷ்ணன், ருக்மிணியை அள்ளிக்கொண்டு தேரை விரைவாகச் செலுத்தினான்.

இதைப் பார்த்துவிட்டார்கள் திருமணத்திற்காக வந்திருந்த அசுர அரசர்கள். நேராக ஓடிப்போய் ருக்மியிடம் விவரம் சொன்னார்கள்.

அவ்வளவுதான், கிருஷ்ணனை எதிர்க்க, ருக்மிணியை மீட்க, பெரிய படையே திரண்டது.

எதிர்பார்த்ததுதானே? எதிரிப் படைகளை எதிர்கொண்டான் கிருஷ்ணன். அசுரர்கள் அலங்கோலமாயினர். புறமுதுகிட்டுத் தப்பித்துத் தத்தமது நாடுகளை நோக்கி ஓடலாயினர்.

ஆதரவாளர்கள் அனைவரும் அறுபட்டுப்போன நிலையிலும், ருக்மிக்கு உண்மை புரியவில்லை. தான் மஹாவிஷ்ணுவிடமே சண்டைபோட்டுக் கொண்டிருப்பதை உணராமல் போரிட்டு, இறுதியில் அவனும் சிசுபாலனும் தப்பித்து ஓடினார்கள்.

ஆபத்து முற்றிலும் நீங்கிவிடவில்லை என்ற சூழ்நிலையில் கிருஷ்ணன் ருக்மிணியை அழைத்துக்கொண்டு வடமதுரைக்குச் சென்றான். அந்நாட்டு அரசன் உக்கிரசேனர், நகரையே பிரமாண்ட அலங்காரத்தில் மூழ்கடித்தார். அனைவரும் கிருஷ்ணன் ருக்மிணியை வரவேற்றார்கள்.

விதர்ப்ப நாட்டு இளவரசியை வடமதுரையில் திருமணம் செய்துகொண்டு, அவளைத் தன்னுடன் துவாரகைக்கு அழைத்துச் சென்றான் கிருஷ்ணன்.  (நன்றி : Dinakaran.com)

———————————————————————————————————
அடுத்து….
காதல் நிறைவேற எந்த தெய்வத்துக்கு பிரத்யேக அர்ச்சனை செய்யவேண்டும்? எந்த ஸ்லோகத்தை சொல்லவேண்டும்?
[தனி பதிவாக உடனடியாக (?!) வெளிவருகிறது]

———————————————————————————————————
[END]

3 thoughts on “தடைகளை தகர்த்து விரும்பியவரை கரம் பிடிக்க!

 1. காதல் மற்றும் மணவாழ்க்கை பற்றிய முகவுரை மிகவும் அருமை. அதைவிட காதலர் தினத்தை நம்ம மக்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கும் அவலத்தை அருமையாக அதே சமயம் யார் மனமும் புண்படாத வகையில் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நன்றி சுந்தர். ருக்மணியின் காதல் கடிதம் பற்றி என்ன சொல்ல? அது தெய்வீக காதல் அல்லவா – அந்த லெவலே வேற. மனதுக்கு நிறைவான பதிவு – வாழ்த்துக்கள் சுந்தர்.

 2. A differnt article for our website, the range of topics covered is increasing day by day!!hats off for covering such exhaustive topics..

  Doubt if true love exists in todays world..its more of lust than love!!
  Who will change dis attitude of today’s younger generation..this is a dangerous trait for our society-Only TIME will tell the answer.

  Good articles like these are capable of changing it.I hope so..
  A fitting article from our website for the ocassion..!!superb anna:)

  Regards
  R.HariHaraSudan.
  “HE WHO KNOWS THE SELF KNOWS ALL.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *