Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > வாழ்ந்து காட்டுவதைவிட பழிவாங்கும் செயல் வேறு எதுவும் இல்லை – மாரியப்பனை போல!

வாழ்ந்து காட்டுவதைவிட பழிவாங்கும் செயல் வேறு எதுவும் இல்லை – மாரியப்பனை போல!

print
வாழ்க்கை எப்போது, யாரை, எங்கே, ஏற்றிவைக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. இன்று குப்பையில் கிடப்பவர் நாளை கோபுரக் கலசமாக மாறலாம். எனவே யாரையும் எந்த சூழ்நிலையிலும் தாழ்வாக நினைக்கக்கூடாது. மாரியப்பனின் வாழ்க்கை சொல்லு பாடம் அது தான். யார் இந்த மாரியப்பன்? அப்படி என்ன செய்துவிட்டார்?

mariappan-231-வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்றன. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர், பிரதமர் மோடியில் ஆரம்பித்து ரஜினிகாந்த் வரை அத்தனை வி.வி.ஐ.பி.க்கள் மாரியப்பனை வாழ்த்துகளால் நிறைத்திருந்தனர். ஆனால், மாரியப்பனின் இந்த வெற்றிக்கு பின்னே, யாரும் எதிர்பாராத திடீர் புகழுக்கு பின்னே புதைந்து கிடைக்கும் அவரது விடாமுயற்சியும் வலிகளும் பலர் அறியாதவை. பொதுவாக வெற்றியாளர்களின் வலி, வெற்றி பெறும் வரை தான். ஆனால், மாறியப்பனை பொருத்தவரை அது அவர் வெற்றி பெற்ற பின்னரும் தொடர்கிறது. அவரது வெற்றிக்கு சொந்தம் கொண்டாடுபவர்களால்.

ஒரு பதக்கத்தின் பின்னே சில ஆறாத ரணங்கள்!

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது தாயார் சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். 21 வயதான மாரியப்பன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து, ஊனமானார். விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.

வென்றது தன்னம்பிக்கை!

பாரா ஒலிம்பிக் போட்டி குறித்து மாரியப்பன் சில தினங்களுக்கு முன்னர் அளித்திருந்த பேட்டியில், “பள்ளிப் பருவத்தில் உயரம் தாண்டுதலில் அசாத்தியமான எனது திறமையை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், எனக்கு ஊக்கம் கொடுத்து பயிற்சி அளித்தார்.

மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றேன். கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படைத்தேன்.

கடந்த முறை நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்சமாக 1.74 மீட்டர் உயரமே தாண்டினர். இந்த முறை நான் 2 மீட்டர் உயரத்தை தாண்டி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறியிருந்தார்.

அந்த நம்பிக்கையே அவருக்கு தற்போது தங்கப்பதக்கம் வென்றளித்திருக்கிறது.

mariappan-3இந்த வெற்றி குறித்து விகடன் வார இதழுக்கு மாரியப்பன் அளித்த பேட்டி வெற்றிக்கு பின்னர் உள்ள அவரது வலிகளை வெளிச்சம் போட்டு காட்டியது.

“இந்த உலகத்திலேயே இப்போதைக்கு நான்தான் சந்தோஷமான மனிதன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ரியோவில் ஒவ்வொரு இரவிலும் நான் தூக்கம் வராமல் தவிக்கிறேன். இங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பயத்துடன்தான் இருக்கிறேன். எனது தாயாருக்கு போன் செய்யும் போதெல்லாம் அவர் அழுகிறார். மிகுந்த பயத்துடன் எனது தாயார் இருக்கிறார். எனது வெற்றிக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாதவர்கள் இப்போது என்னைத் தேடி வருகின்றனர் ” என்கிறார் பாராலிம்பிக் நிறைவுவிழா அணி வகுப்பில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிச் செல்லப் போகும் மாரியப்பன்.

ரியோ பராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து, தமிழக அரசு ரூ.2 கோடியும், மத்திய அரசு ரூ. 75 லட்சமும் பரிசாக அறிவித்தள்ளன. இந்த நிலையில், மாரியப்பன் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில், ரூ. 30 லட்சத்தை தான் படித்த பள்ளிக்கு நன்கொடை வழங்கியதாகவும் வதந்தி பரவியது. சேலம் பெரியவடகம்பட்டியைச் அரசு பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன் கூறியதாக இந்த தகவல் வெளியானது. ஆனால்,’ அந்த தகவல் உண்மையில்லை. தான் அவ்வாறு கூறவில்லை ‘ என ராஜேந்திரன் மறுத்துள்ளார்.

இதற்கிடையே சேலம் பகுதியைச் சேர்ந்த சில வங்கிகள் மாரியப்பன் குடும்பத்தார், உறவினர்களை அணுகி பரிசுப் பணத்தை தங்கள் வங்கியில் முதலீடு செய்யுமாறு வற்புறுத்தி வருகின்றன. தங்கள் வங்கியில் டெபாசிட் செய்தால் கார் பரிசளிக்கவும் சில வங்கிகள் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவெல்லாம் மாரியப்பனின் தாயார் சரோஜாவை வெகுவாக பாதித்துள்ளது.

=======================================================

Don’t miss these articles…

சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றிக்கொடி நாட்டியுள்ள அருணிமா சின்ஹா வாழ்க்கை கூறும் பாடம்!

அருணிமாவை தேடிச் சென்ற அருணாச்சலேஸ்வரர்!

=======================================================

கணவர் கைவிட்டு விட்ட நிலையில், சரோஜா காய்கறி வியாபாரம் செய்து மாரியப்பன் உள்பட நான்கு குழந்தைகளை காப்பாற்றியிருக்கிறார். இந்த நிலையில் மாரியப்பன் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தனது ஆதங்கங்களை கொட்டியுள்ளார். பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, ” ஒவ்வொரு நிமிடமும் நான் பயத்திலேயே இருக்கிறேன். எனது வெற்றியை அடுத்து அதற்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாதவர்கள் என்னைத் தேடி வருகிறார்கள். எனது வெற்றிக்கு முழு முதல் காரணம் எனது பயிற்சியாளர் சத்ய நாராயாணா சார்தான். இரண்டு வருடங்களுக்கு முன் சத்யாநாராயணா சாரை நான் சந்தித்தேன். அன்று முதல், அவர்தான் எனக்கு பயிற்சி அளித்து வருகிறார். சத்யநாரணா சாரை சந்தித்த பிறகுதான் காலணி அணிந்து பயிற்சி பெற ஆரம்பித்தேன். அதுவரைக்கும் வெறுங்காலில்தான் நான் உயரம் தாண்டுவேன்.

அது மட்டுமல்ல… மாதம் எனக்கு ரூ. 10 ஆயிரம் அளித்து எனது குடும்பத்துக்கும் அவர்தான் உதவியாக இருந்தார். பயிற்சி அளிக்கவே பணம் வாங்கும் இந்த காலத்தில் பணம் கொடுத்து யார் பயிற்சி அளிப்பார்கள். ஆனால், சத்திய நாராயாணா சார் எனக்குச் செய்தார். என்னை ஜெர்மனிக்கு அனுப்பி பயிற்சி பெற வைத்தார். எனக்காக அவர் எவ்வளவோ கஷ்டப்பட்டுள்ளார். சத்யநாராயணா சார் தந்த பயிற்சியிலும் உதவியினாலும்தான் இன்று நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். இப்போது நான் வெற்றி பெற்ற பிறகு ராஜேந்திரன், இளம்பரிதி போன்றவர்கள் உரிமை கொண்டாடுவதாக எனக்குத் தகவல் வருகிறது. அவர்களுக்கும் இந்த வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழ்நாடு பராலிம்பிக் சங்கம் எனக்காகத் துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை. இந்த வெற்றிக்கு முழு முதற் காரணம் எனது குரு சத்ய நாராயாண சார்தான். இந்த பதக்கத்தை நான் அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.

எனது உறவினர்கள் என்னையும் எனது தாயாரையும் மதித்ததில்லை. ஆனால் இப்போது எனது தாயாரை நெருக்கிக் கொண்டிருப்பதாக என்னிடம் அவர் போனில் கூறி அழுகிறார். அதனால் ரியோவில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நான் நிம்மதியில்லாமல் தவிக்கிறேன். எனது தாயை எப்போது பார்க்கப் போகிறேன் என்று இருக்கிறது. சில விஷயங்களைக் கூறி என்னிடம் தாயார் அழும் போது ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கிறேன். எங்களை பரிதவிக்க விட்டு சென்ற தந்தை தங்கவேலு இப்போது குடும்பத்தினரிடம் உரிமை கோருவதாக எனது தாயார் சொல்கிறார். எனது தாயை கருணையே இல்லாமல் துன்புறுத்தியவர் அவர். எந்த காரணத்தைக் கொண்டும் அவரை நான் பார்க்க விரும்பவில்லை. ஒரு முறை என்னை உயிரோடு எரித்து கொல்ல முயற்சித்தார். எனது தாயையும் அவரது நான்கு குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்றவருக்கு எனது மனதில் என்றுமே இடம் கிடையாது. நான் மாரியப்பன் தங்கவேலு என்று அழைப்பதைக் கூட விரும்பவில்லை. நான் வெறும் மாரியப்பன் அவ்வளவுதான்…! என்கிறார்.

ஒரு பதக்கத்திற்கு மறைவில் எத்தனை துயரம் புதைந்து கிடக்கிறது!

mariyappan-pti

இதற்கிடையே… தாயகம் திரும்பிய மாரியப்பனுக்கு விமான நிலையத்திலேயே உற்சாக வரவேற்பு கிடைத்தது. சொந்த ஊரில் கேட்கவேண்டுமா?

பதக்கம் வென்ற மகிழ்ச்சியுடன், தங்க மகன் மாரியப்பன் சனிக்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பினார். சென்னையில் இருந்து, கார் மூலம் சேலம் மாவட்ட எல்லையான தொப்பூர் சோதனைச் சாவடிப் பகுதிக்கு மாலை 3.50 மணிக்கு மாரியப்பன் வந்தார். அவர் காரில் இருந்து இறங்கியதும், அவருடைய நண்பர்கள் தோளில் தூக்கி வைத்து கொண்டாடினர்.

mariyappan-25-1474775678

அவருடைய தாயார் சரோஜா, கட்டியணைத்து வரவேற்றார். அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து மாரியப்பனை வரவேற்றார்.

இதையடுத்து தொப்பூரில் இருந்து தீவட்டிப்பட்டிக்கு வந்த மாரியப்பனுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். அவருடைய வாகனம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் சென்றது.

மேள தாளம் முழங்க பொதுமக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட மாரியப்பன், பின்னர் வாகனத்தின் மேல்பகுதியில் அமர்ந்தபடி, சொந்த ஊரான பெரிய வடகம்பட்டிக்கு புறப்பட்டுச் சென்றார்.

mariyappan-native-2

நடுப்பட்டி, காடையாம்பட்டி, சந்தைப்பேட்டை, விதைப்பண்ணை, டேனிஷ்பேட்டை என மாரியப்பன் சென்ற வழியெங்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு ஆரத்தி எடுத்தும், பூக்களைத் தூவியும் வரவேற்றனர்.

மேலும், சால்வை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும், மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். மாரியப்பனுடன், வாகனத்தில் அவரது தாயார் சரோஜாவும் இருந்தார். தன்னுடைய ஏழ்மை நிலைமையைப் போக்கிய, மகனுக்கு ஊர்மக்கள் அளித்த வரவேற்பைக் கண்டு அவர் ஆனந்த கண்ணீர் விட்டார்.

mariyappansalem-24-1474729340

மாலை 5.50 மணிக்கு சொந்த ஊரான பெரிய வடகம்பட்டிக்கு மாரியப்பன் வந்தார். பட்டாசுகள் வெடித்து கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.

பெரிய வடகம்பட்டி கிராம எல்லையில் இருந்து, மாரியம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாரியப்பனுக்கு அங்கு முதல் மரியாதை செய்யப்பட்டது. இதன்பிறகு ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக அவரது வீட்டுக்கு மாலை 6.50 மணிக்கு அழைத்து சென்றனர்.

தங்கப் பதக்கம் தாய்க்கு சமர்ப்பணம்

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு சனிக்கிழமை தனது சொந்த ஊருக்குத் திரும்பிய மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியது: “மிகவும் ஏழ்மை நிலையில் தவித்து வந்த எனக்கு, தாயார் சரோஜா மிகுந்த ஊக்கத்தை அளித்தார். அவரின் ஆதரவு மிகப்பெரிய அடித்தளத்தை எனக்கு கொடுத்தது. அதனால், ஒலிம்பிக் போட்டியில் பெற்ற தங்கப் பதக்கத்தை எனது தாய்க்கு சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

mariyappan-native-1a

சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற டி. மாரியப்பனின் சாதனையைப் பாராட்டி, அவரது உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல்தலை சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் அஞ்சல் தலையை வெளியிட, முதல் பிரதியை மாரியப்பன் பெற்றுக்கொண்டார்.

swami-vivekananda

மேலும், மாரியப்பனின் சாதனையைப் பாராட்டி பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் அனுப்பிய 20 ஆயிரம் வாழ்த்துக் கடிதங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஊராரால் ஏன் பெற்ற தந்தையால் கூட வெறுத்து ஒதுக்கப்பட்ட மாரியப்பனின் குடும்பம் மற்றும் அவர் சொந்த கிராமம் இன்று அவரால் தலைநிமிர்ந்து நிற்கிறது. இதுவல்லவா சாதனை!

தன்னை நம்புபவர் ஒரு போதும் தோற்பதில்லை! ஏனெனில், மிகப் பெரிய ஆன்மீகவாதி தோற்கமுடியுமா?

=======================================================

ஆக்கத்தில் உதவி : ஆனந்த விகடன், அவள் விகடன், தினமணி

=======================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

=======================================================

Also check :

மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் மனசை பார்த்து தான் வாழ்வை மாத்துவான்!

கீழே விழும்போதெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு வீரனின் கதை!

வாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன?

உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான, அவசரமான கேள்வி!

தோல்வியிலும் வென்ற ஒரு உண்மை வீரன் நமக்கு போதிக்கும் பாடம்!

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

==========================================================

[END]

 

 

 

2 thoughts on “வாழ்ந்து காட்டுவதைவிட பழிவாங்கும் செயல் வேறு எதுவும் இல்லை – மாரியப்பனை போல!

  1. சரியான வார்த்தைகள். முன்னேற்ற எண்ணமே பிறர் நமக்கு செய்த துரோகத்தின் வடிகால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *