Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > எப்படி வாழவேண்டும்? வாரியார் காட்டும் வழி!

எப்படி வாழவேண்டும்? வாரியார் காட்டும் வழி!

print
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளை பற்றிய அறிமுகம் நம் வாசகர்களுக்கு தேவையில்லை. தான் உபதேசித்தபடி கடைசி வரை வாழ்ந்த மகான். நாத்திகம் புரையோடிக்கொண்டிருந்த தமிழகத்தில் பாமரர்க்கும் புரியும் விதம் தன் இனிய எளிய தமிழால் நமது இதிகாசங்கள், புராணங்கள் இவற்றை பற்றி எடுத்துரைத்து பக்தியும் ஆன்மீகமும் தழைக்கச் செய்தவர். மிகப் பெரிய ஆன்மீக தத்துவங்களை கூட இவரைப் போல மிக எளிதாக யாரும் நமக்கு புரியவைக்கமுடியாது.

இன்று ஆவணி சுவாதி. வாரியார் சுவாமிகள் ஜயந்தி. இந்த நன்னாளில் அவரைப் பற்றியும் அவர் கூறிய கருத்துக்கள் பற்றியும் ஒரு பக்தி மணம் கமழும் கதம்பத்தை பார்ப்போம்.

* நமது தளத்தில் வாரியாரைப் பற்றியும் காங்கேயநல்லூரில் உள்ள அவரது அதிஷ்டானத்தை பற்றியும் பல்வேறு பதிவுகள் வெளியாகியிருக்கின்றன. சுட்டிகள் இறுதியில் அளிக்கப்பட்டுள்ளன. புதிய வாசகர்கள் படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Variyar @ Kangeyanallur
காங்கேயநல்லூர் முருகன் கோவிலில் காணப்படும் வாரியார் சுவாமிகள் சன்னதி!

கடவுள் இருக்கிறார் என்பதற்கு வாரியார் சொன்ன எளிய உவமை!

பெரியவர்களைவிட குழந்தைகளிடம் தான் ஆன்மீக விதைகளை தூவவேண்டும் என்பதை உணர்ந்து அதை தனது சொற்பொழிவுகளில் செவ்வனே செய்தவர். இதோ அவர் தூவிய விதிகளுள் ஒன்று என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் என்ன சொல்லி இருக்கிறார் என்று பாருங்கள்…

writer rajesh kumar“கடவுள் ஒருவர் நிச்சயமாய் இருக்கிறார்” என்று நான் ஆணித்தரமாய் நம்புவதற்கு இன்னொருவரும் காரணமாயிருந்தார். அவர் வேறு யாருமில்லை. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள்.

அப்போது பள்ளிக்குப் பின்புறம் இருந்த மைதானத்தில் ஒரு பெரிய பந்தல் போடப்பட்டு, அங்கே வாரியார் ஸ்வாமிகளின் மஹாபாரத கதாகாலட்சேபம் தினசரி நடைப் பெற்றுக் கொண்டிருந்தது. (மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும்) வாரியார் ஸ்வாமிகள் கதாகாலட்சேபம் நடத்தும்போது அவருக்கு முன்பாய் பத்து பதினைந்து சிறுவர்கள் எப்போதும் உட்கார்ந்து இருப்பார்கள். அவர் ஏதாவது ஒரு கேள்வி கேட்டுவிட்டு சிறுவர்களிடம் பதில் என்ன என்று கேட்பார். சரியான பதில் சொல்லும் சிறுவனுக்கு அவர் ஒரு சிறிய பாக்கெட் சைஸ் கந்தர் சஷ்டி புத்தகத்தைக் கொடுப்பார். நானும் அந்த கும்பலில் இருப்பேன். ஆனால் ஒரு தடவை கூட பரிசு வாங்கியது கிடையாது.

ஆனால் வாரியார் சுவாமிகள் ‘கடவுள் இருக்கிறார்’ என்பதற்கு அவர் சொல்லும் எளிமையான உதாரணங்கள் என்னுடைய மனதுக்குள் அப்படியே சம்மணம் போட்டு உட்கார்ந்து கொள்ளும். அவர் ஒரு முறை இப்படிச் சொன்னார். “சில பேர் கோயிலுக்குப் போவாங்க. விழுந்து விழுந்து கும்பிடுவாங்க. கும்பிடும்போதே மனசுக்குள் ஒரு சந்தேகம் லேசா எட்டிப் பார்க்கும். கடவுள் உண்மையிலேயே இருக்கிறாரா இல்லையாங்கற சந்தேகம்தான் அது. என்னோட தலைக்கு மேல வெளிச்சம் கொடுத்துக்கிட்டிருக்கிற இந்த ட்யூப் லைட்டை மாட்டினது யார்னு கேட்டா உடனே எலக்ட்ரீஷியன்னு பதில் வரும். இந்த பதிலை நாம் எல்லோரும் நம்பறோம். ஏன்னா அது உண்மை. இந்த இடத்துக்கு மட்டும் வெளிச்சம் தர்ற ட்யூப்லைட்டை மாட்டினது ஒரு எலக்ட்ரீஷியன்னு சொன்னா நம்பற நாம், இந்த உலகம் முழுவதற்கும் வெளிச்சம் தரக்கூடிய சூரியனை உயரத்திலேயே ஒரு பாதுகாப்பான இடத்தில் பொருத்தி வச்சிருக்கிறது கடவுள்னு சொன்னா ஏன் நம்ப மாட்டேங்கறோம்?”

இப்படி அவர் சொன்ன எத்தனையோ விஷயங்கள் என்னை நிரம்பவே கடவுளிடம் நெருங்க வைத்தது. போகப் போக, வயது ஏற ஏற இன்னொரு உண்மையும் புரிந்தது. வெறுமனே கோயிலுக்குப் போய், நெற்றியில் விபூதி குங்குமம் வைத்துக் கொண்டு கடவுளைக் கும்பிடுவதால் மட்டுமே அவனுடைய அருள் கிடைத்துவிடாது. நம்முடைய எண்ணங்களும் செயல்களும் தூய்மையாக இருக்க வேண்டும். நாம் பேசும் வார்த்தைகள் ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமே தவிர, புண்படுத்தக் கூடாது. பெற்றவர்களையும் பெரியோர்களையும் மதிக்க வேண்டும். செய்யும் தொழிலே தெய்வமாய் நினைக்க வேண்டும். நம் நிலை உயரும்போது பணிவு கொள்ள வேண்டும். எல்லோரிடமும் திறமை இருக்கிறது என்று எண்ண வேண்டும்.

நான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் அந்த இறையருளே தவிர, வேறு ஒரு காரணமில்லை. ‘நீ எழுது!’ என்று இறைவன் எனக்கு இட்ட பணியை நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். நான் என் கையில் ‘பேனா’ பிடிப்பதோடு சரி. என்னை எழுத வைப்பதும்… அதை வாசகர்களைப் படிக்க வைப்பதும்.. அந்த இறையருள் மட்டுமே.

Thanks : “நான் முகம் பார்க்கும் கண்ணாடிகள்” @ balhanuman.wordpress.com

**************************

வாரியார் சுவாமிகளை மகா பெரியவா கடைசியாக பார்த்த அந்த தருணம்…!

– ‘சரவண பவன்’ மோகன் அவர்கள் கூறியது…!

காஞ்சி பரமாச்சாரியார் நூற்றாண்டு விழா நிறைவுற்ற நேரம். வாரியார் சுவாமிகள் பரமாச்சாரியாரைப் பார்க்கப் போகவேண்டும் என்றார்கள்.

Maha periyava with variyarநம்ம கார்தான். காஞ்சிபுரம் சேர்ந்தோம். மடத்தில் கேட்டோம். காஞ்சிப் பெரியவர் படுத்திருந்தார். வாரியார் வந்திருக்கிறார் என்று சொன்னதும் ஜெயேந்திர சுவாமிகள் வந்து வாரியாரைப் பார்த்தார்கள். படுத்திருந்த பரமாச்சாரியாரை எழுப்பிச் சாய்வாக அமரச் செய்தார். எதிரில் நின்ற வாரியாரை பரமச்சாரிய சுவாமிகள் உற்றுப் பார்த்தார். அப்படி ஒரு பார்வையை நான் எப்போதுமே கண்டதில்லை.

கழுத்தில் கிடந்த உத்திராட்சமாலை… ஏலக்காய் மாலை… எடுத்து ஆசீர்வதித்துப் பக்கத்திலிருப்பவர்களிடம் கொடுத்து வாரியார் சுவாமிக்கு அணிவிக்கச் சொன்னார். தரிசனம் முடிந்தது. என்பதுபோல் கதவைச் சாத்தப் போனார்கள்… பெரியவர் கை சாடை காட்டி ‘மூடாதே திறந்திருக்கட்டும்’ என்பதுபோல் குறிப்பு உணர்த்தினார்கள். இப்படி மூன்று முறை நிகழ்ந்தது.

அதுதான் வாரியார் சுவாமி – பரமாச்சாரியாரின் இறுதி சந்திப்பு.

வாரியார் சுவாமிகளோ பரமாச்சாரியார் ஆசீர்வதித்து அணிவிக்கச் செய்த மாலைகளில் ஒன்றாகிய ஏலக்காய் மாலையை எடுத்து என் கழுத்தில் போட்டார்கள்.

வாழ்க்கையில் வேறு எனக்கு என்ன பாக்கியம் வேண்டும்? அந்த மாலையை இன்னும் பூஜை அறையில் வாரியார் சுவாமியின் படத்திற்குப் போட்டு பக்தியுடன் வழிபட்டு வருகிறேன்…!”

**************************

நீங்களெல்லோரும் நாளையிலிருந்து என்ன செய்ய வேண்டும்?

வாரியார் சுவாமிகள் தமது இலவச வெளியீடுகள் ஒன்றில் எழுதிய கடிதம்…

பரீக்ஷித்து எத்தனை நாளில் முத்தி அடைந்தார்? ஆறு நாளில்.

பரீக்ஷித்து என்று ஒரு வேந்தன். அவர் வீரஅபிமன்யுவின் மகன். மிகவும் நல்லவர். அர்ஜுனன் பேரன் என்றால் கெட்டவனாக இருக்க முடியுமா? உத்தமமானவர். அவர் சேரிகளுக்குப் போவார். ”சேரிவாழ் மக்களே! குடி தண்ணீர் கிணறு வெட்டுகிற பணம் முழுவதும் வந்ததா? இல்லையா? தேங்கித் தேங்கி வந்ததா? வியாபாரிகளெல்லாம் நேர்மையாக வியாபாரம் செய்கிறார்களா? உத்தியோகஸ்தர்கள் எல்லாம் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக நடக்கிறார்களா? பள்ளிக்கூட அட்மிஷனுக்குக் கவர் கொடுக்காமலே அட்மிஷன் கிடைக்கிறதா? அந்தந்தக் கோவில் சொத்துக்களையெல்லாம் ஒழுங்காகச் செலவழிக்கிறார்களா?” என்று மந்திரிகளைக் கேட்பார்.

Variyar swamigal statue

ஏழைகளுக்காக உழைக்கும் உத்தமருடைய முகத்தில் துளிக்கும் வியர்வை சிறந்த தீர்த்தமாகும்.

உங்களுக்குக் குளிக்க முடியவில்லையானால் கை காலைக் கழுவிக் கொண்டு, திரு நீறு இட்டுக்கொண்டு படுக்கையில் படுத்துக்கொண்டே பக்தி செய்யலாம்.

கந்த சஷ்டியில் முருகப் பெருமானைக் குறித்து விரதம் இருந்தால் அகப்பையில் அவன் திருவடி வரும் என்று பொருள்.

முக்திக்கு வழி எது? பக்தி. நீங்களெல்லோரும் நாளையிலிருந்து என்ன செய்ய வேண்டும்? பக்தி செய்ய வேண்டும். பக்தி என்றால் அன்பு. ஆண்டவனிடத்தில் அன்பு செய்ய வேண்டும். ஆண்டவனிடத்தில் அன்பாக உள்ளத்தை பதிய வைக்க வேண்டும்.

ஒரு உதாரணம் சைவர்களுக்குச் சொல்லுகின்றேன். ”ஓம் சிவாய நம” என்பதை விட ஒரு மகாமந்திரம் கிடையாது.

பாடற்கினிய வாக்களிக்கும் பாலுஞ்சோறும் பரிந்தளிக்கும்
கூடற்கினிய அடியவர்தம் கூட்டமளிக்கும் குணமளிக்கும்
ஆடற்கினிய நெஞ்சே! நீ அஞ்சேல்என்மேல் ஆணைகண்டாய்
தேடற்கரிய திருவளிக்கும் சிவாயநம என்றிடுநீறே.
-இராமலிங்க அடிகளார்

சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.
– ஒளவையார்.

மற்ற மதத்தவர்களும் அவரவர்கள் தெய்வங்களின் மகா மந்திரங்களைத் தினசரி சொல்லி ஜெபசித்தி பெற வேண்டும். நீங்கள் எல்லாம் கடைத்தேற வேண்டும் என்ற கருணையோடு சொல்லுகிறேன்; நித்திய வாழ்க்கையில் ரயிலில் போகிறபோதும், பஸ்ஸில் போகிற போதும், காரில் போகிறபோதும், சைக்கிளில் போகிறபோதும், அல்லது எந்த வாகனத்தில் பிரயாணம் செய்யும் போதெல்லாம் எத்தனைக்கெத்தனை மகா மந்திரங்களை விடாமல் சொல்லிக்கொண்டே வந்தீர்களானால் அத்தனைக் கத்தனை மகா மந்திரம் கடைசியாக உங்கள் ஆத்மா பிரியும்போது ஒரு தொகையாக வரும்.

நீங்கள் திருப்பதிக்கு நேர்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். தினம் உண்டிகட்டி போட்ட சின்னசிறு, சிறுதொகையை போட்டு வைத்திருந்தாலும் நீங்கள் சில ஆண்டு கழித்து திருப்பதிக்குப் போகிறபோது ரூ.7000- ரூ.8000 என சேர்ந்து விடும் தானே! ஒவ்வொரு இழையாகச் சேர்ந்துதானே பதினெட்டு முழம் புடவையாகிறது. ஒவ்வொரு துளியாக ஊசிபோல் விழுந்த மழைத்துளி தானே ஏரி நிறை நீராகிறது. சிறுதுளி மழையாகப் பெய்தது தானே பெரும் வெள்ளமாக ஒடி வருகிறது. இப்படி உவமை சொன்னால் உங்களுக்கு விளங்கும். அப்படி தினசரி வாழ்க்கையில் மகாமந்திரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னால் அது உங்கள் ஆத்மா பிரியும் கடைசி நேரத்தில் ஒரு தொகையாக வந்து உங்களுக்கு உதவும். அப்போது தெய்வம் உங்கள் முன்னே வரும். அந்த தெய்வத்தினுடைய சாந்தித்தியம் உண்டாகும். இப்பொழுதே, நல்ல நினைவு இருக்கிற பொழுதே, இறைவனுடைய மகாமந்திரங்களைச் சொல்லிச் சொல்லி ஜெபசித்தி உண்டாக்கிக் கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி அவர்கள் உண்ணாவிரதம் பல தடவை இருந்தார்கள். ஆனால் பிராத்தனை, ஜெபம் செய்யாமல் ஒரு நாளும் இருந்ததில்லை. அவருடைய ஆத்மா பிரியும்போது ‘ஹரேராம்!’ என்று சொல்லி உயிர்நீத்துப் பரகதி அடைந்தார்.

நாம் இவ்வுலகில் பிறந்தது உண்டு, உறங்கி, இவ்வுலக போக பாக்கியங்களை அனுபவிப்பதற்கு மட்டும் அல்ல; நித்திய வாழ்க்கையில் உண்ணும்போதும், இறைவனுடைய திருநாமத்தையே பக்தி செய்து கொண்டிருந்தால், இறைவனுடைய சாலோக சாமீப சாரூப சாயுஜ்ய மாகிய முக்திப் பேற்றை அடைவது நிச்சயம் என்பதனை ஞாபகப்படுத்துகிறேன். நாம் இம் மானிட தேகம் அடைந்தது பத்தி செய்து முத்தி அடைய என்பதனை ஓர்க. பலகாலும் சிந்தித்து உணர்க. உணர்ந்து உணர்ந்து உய்க.

ஒருவனுடைய தலையை ஒரு பயில்வான் தண்ணீருக்குள் அழுத்தி பிடிக்கும்போது அவன் மூச்சுத் திணறி தனது தலையை மேலே தூக்க எத்தனை வேகம் இருக்கமோ அத்தனை வேகம் முத்தியில் இருக்க வேண்டும். எல்லோரும் பக்தி நெறியுடன் வாழ எங்கும் நிறைந்த ஆண்டவனை வேண்டி இத்துடன் பூர்த்தி செய்கிறேன். ஆதலால் எல்லோரும் முத்தி தாகத்துடன் பக்தி செய்து முத்தி நலம் பெறுக.

பக்தி நெறி ஓங்குக! முத்தி நலம் விளைக!!

அன்பன்,
கிருபானந்தவாரி

==========================================================

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?

நீங்கள் அளிக்கும் விருப்ப சந்தாவைக் கொண்டே இந்த தளம் நடத்தப்படுகிறது என்பதை மறக்காதீர்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

==========================================================

Also check : 

“முதுகுல குத்திட்டாங்க சாமி…!” அழுத மெய்யன்பர். வாரியார் சொன்னது என்ன?

வாரியார் ஸ்வாமிகள் முருகப் பெருமானிடம் அனுதினமும் வேண்டி நின்றது என்ன?

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

வாரியார் நினைத்தார்; வள்ளலார் நடத்தி வைத்தார்!

கல் கடவுளாவது எப்போது? வாரியாரின் அற்புதமான விளக்கம்

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

 மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

==========================================================

[END]

2 thoughts on “எப்படி வாழவேண்டும்? வாரியார் காட்டும் வழி!

  1. Good Info about VARIYAR SWAMIGAL. He is a Living God.
    Nice to read the article of VARIYAR SWAMIGAL Along with Maha Periyva.
    Thanks For Sharing.

    Narayanan.

  2. ரைட் information @ ரைட் time in ரைட் mantra .

    Keep it up!!!

    rgds,
    Nagarajan Ekambaram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *