விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று நாம் காணவிருப்பது தமிழகத்திலேயே ஒரே சோடச கணபதி தலம் என்று பெயர் பெற்ற திருமக்கோட்டை மெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவிலை நோக்கி நம்மை ஈர்த்தது இந்த கோவில் வரலாற்றுடன் தொடர்புடைய மிளகு செட்டியாரின் கதை தான். இரண்டு மாதங்களுக்கு முன்னர் நம் வாசகர் ஒருவரின் திருமணத்திற்கு மன்னார்குடி செல்லவேண்டியிருந்தது. திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய பிறகு திருமக்கோட்டை சென்றோம். (முன்னதாக ராஜகோபால சுவாமி திருக்கோவில் சென்றிருந்தோம். இது பற்றிய பதிவு வேறொரு தருணத்தில் அளிக்கப்படும்!)
தமிழகத்தில் விநாயகப் பெருமானுக்கென்று பல விஷேட தலங்கள் உள்ளன. அவற்றுள் மிக மிக சிறப்பு வாய்ந்ததும், தனித்தன்மை வாய்ந்ததுமாக விளங்குவது திருமக்கோட்டை மெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த தலத்தில் என்ன விஷேஷம் என்றால், இது சோடச கணபதி தலம். அதாவது இந்தக் கோவிலில் மட்டும் மொத்தம் 16 பிள்ளையார்கள் இருக்கிறார்கள்.
மன்னார்குடியிலிருந்து பத்து மைல் தொலைவிலும் மன்னார்குடி பட்டுக்கோட்டை சாலையில் கீழக்குறிச்சியிலிருந்து கிழக்கே 2 1\2 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது இத்தலம். இத்தலத்தோடு இணையொத்த கோவிலூர் முதலான தலங்கள் பாடல் பெற்ற தலங்களாக விளங்கும் போது இத்தலமும் பாடல்பெற்ற தலமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. தேவார மூவர் பாடிய பல்லாயிரக்கணக்கான பதிகங்களில் நமக்கு பல கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியே கிடைத்தும் சில தலங்கள் கரையானால் பாடலிழந்தன என்பது திருமுறை வரலாற்றில் கண்ட உண்மை.
திருமக்கோட்டை செல்லும் வழியெங்கும் பசுமை விரித்தாடும் சோலை என்றால் மிகையாகாது. எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று காட்சியளிக்கும் வயல்வெளிகள், வாழைத்தோப்புக்கள், குளங்கள், கண்மாய்கள் என மன்னார்குடி தமிழகத்தின் திலகம் என்றால் மிகையாகாது. தமிழகத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் மன்னார்குடி சென்றால் போதும்.
வரி ஏய்ப்பு செய்ய பொய் சொன்ன மிளகு செட்டியார்…
இந்த ஊர் வழியாக செட்டி வியாபாரிகள் பலர் பயணித்து ராமேஸ்வரம் வரை சென்று தானிய வியாபாரம் செய்வது வழக்கம். இவ்வழியே செல்லும் வண்டிகளுக்கு பொருளுக்கேற்றவாறு வரி வாங்குவது வழக்கம். அப்போது மிளகுப்பொதி ஏற்றி வந்த செட்டியார் அதிக வரி கொடுக்க அஞ்சி காவலரிடம் பயறு என்று கூறி அதற்குரிய வரியை கோவிலுக்குச் செலுத்தினார். வழியில் வியாபாரத்தின் பொருட்டு மிளகுப் பொதியை பிரிக்க மூட்டைகள் அனைத்தும் பயிராக இருக்கக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் வரிஏய்ப்பு செய்ய கூறிய பொய் நினைவுக்கு வந்தது.
தான் கொண்டு சென்று வண்டிகள் அனைத்தையும் வழியிலேயே நிறுத்திவிட்டு வேறொரு வண்டி பிடித்து திருமக்கோட்டை விரைந்தார். திருமக்கோட்டை இறைவனிடம் தான் செய்த குற்றத்திற்காக வருந்தி மன்னிப்பு கேட்டு, இனி இந்த ஆலயத்தில் அர்த்தஜாம பூஜையின் போது செய்யப்படும் நைவேத்தியத்திற்கு மிளகு அன்னம் (சம்பாசாதம்) படைப்பது தன்னுடைய தொண்டாக இருக்கட்டும் என்று வேண்டிக் கொண்டார்.
மீண்டும் சென்று தனது சரக்கு மூட்டைகளை சோதித்தபோது பயறுகள் மீண்டும் மிளகாக மாறியிருந்தனவாம்.
மிளகு செட்டியார் வேண்டிக்கொண்டபடி இன்று இந்த ஆலயத்தில் இரவு சம்பா சாத நைவேத்தியம் தான் நடந்து வருகிறது.
அம்பாள் சன்னதியில் மகா மண்டபத்தில் இன்றும் மிளகு செட்டியாரின் திருவுருவத்தை காணலாம்.
இத்தலம் முற்காலத்தில் பல பெயர்கள் விளங்கியது.
சோடச கணபதி ஸ்தலம் : இத்திருத்தலத்தில் பதினாறு கணபதிகள் வீற்றிருக்கின்றபடியால் சோடச கணபதி ஸ்தலம் என்னும் சிறப்பை பெற்றுள்ளது. (சோடஷம் – பதினாறு.)
ஞானபுரீஸ்வரம் : தமது வழிபாட்டின் மூலம் சிவபெருமானிடம் ஞானம் பெற்ற வசிஷ்டர், இத்தலம் ஞானபுரீஸ்வரம் என வழங்கப்பெறுதல் வேண்டும் என வரம் கேட்டார். ஈசனும் அவ்வாறே வரமளித்து தாமும் ஞானபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்று அருளினார்.
திருமெய்ஞானபுரம் : ஸ்ரீ ராமனுக்கு தன் குல குரு வசிஷ்டரால் இத்தலத்தில் ஞானம் உபதேசிக்கப் பெற்றமையால் திருமெய்ஞ்ஞானபுரம் என்றும் ஸ்ரீ ராமருக்கு மெய்க்கண் விளங்கப்பெற்றமையால் மெய்கண்நாதபுரம் என்றும் பெயர் பெற்றது.
பச்சிம பாரிஜாதவனம் : கிழக்கே பாரிஜாத வானம் என்று திருக்களார் அளிக்கப்படுவதால் இத்தலம் பச்சிம பாரிஜாதவனம் என வழங்கப்பட்டது. பச்சிளம் என்பது மேற்கு.
திருமை : மூன்றாம் இராஜராஜ சோழனது கல்வெட்டு இந்த ஊரை திருமையான மும்முடிசோழநல்லூர் எனக் குறிப்பிடப்படுகிறது. திருமெய்ஞ்ஞானம் என்பதுவே பின்னாளில் மரூஉ மொழியாக திருமை என்றும், திருமேல்கோட்டை, திருமெய்க்கோட்டை என்றும் சிதைந்து திருமக்கோட்டை என வழங்கி வருகிறது.
திருக்கோயிலுக்கு இராஜகோபுரம் இல்லை. திருக்கோயிலின் நீளம் 283அடிகள். அகலம் 211 அடிகள். திருக்கோயிலின் உள்ள முதல் பிரகாரத்தில் கொடிமரபீடம், பலிபீடம், நந்தி மண்டபம் முதலியன சிறப்புற அமைந்துள்ளன. தென்புறம் மடப்பள்ளிக்கு முன் வசிஷ்ட ரிஷி வடக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். முதல் இரண்டாம் பிரகாரத்தை இணைப்பது மூன்று நிலைகளை உடைய சிறிய கோபுரம். கோபுரவாயிலின் தென்புறம் தரிசன கணபதியும், வடபுறம் குமாரக்கடவுளும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள். குமரக்கடவுள் மண்டபம் மீது மணிமண்டபம் உள்ளது. வடபுறம் வசந்த மண்டபத்தில் கோவில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
அக்கோவிலுக்கு சென்றிருந்தபோது அங்கு திரு.முருகேச ஓதுவாரை சந்தித்தோம். பொதுவாக ஓதுவார்களை கோவிலில் சந்தித்தால், அவர்களுடன் அளவளாவி, நாம் சுவாமியை தரிசிக்கும்போது ஓதுவார்களை பதிகம் பாடச் சொல்லி கேட்டுக்கொள்வோம்.
ஞானபுரீஸ்வரரை நாம் தரிசிக்க சென்றபோது, குருக்கள் இல்லை. சற்று நேரத்தில் வந்துவிடுவார் என்று சொன்னார்கள். அதுவரை ஓதுவாரிடம் பேசிக்கொண்டிருப்போம் என் அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம்.
நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திரு.முருகேச ஓதுவார் நம்மை ஒவ்வொரு சன்னதியாக அழைத்துச் சென்று பதிகம் பாடி, பரவசப்படுத்தினார்.
“எமக்கு அர்ச்சனை பாட்டேயாகும். எனவே எம்மை பாடுக” என்றான் இறைவன் சுந்தரரிடம். எனவே இறைவனை தரிசிக்கும்போதேல்லாம் பதிகம் பாடி தரிசிக்கவேண்டும். (இது பற்றி விரிவாக ஒரு பதிவை அளிக்கிறோம். அது உங்களுக்கு உதவியாக இருக்கக்கூடும்.)
நாங்கள் தரிசித்துக் கொண்டிருந்தபோதே குருக்கள் திரு.சங்கர குருக்கள் வந்துவிட்டார். அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, சுவாமியை தரிசித்து பின்னர் அனைவரையும் நம் தளம் சார்பாக கௌரவித்தோம்.
இத்தலத்தில் எங்குமே துவாரபாலகர் இன்றி கணபதியும், முருகனுமே துவாரபாலகராய் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. திருக்கோவிலில் உட்புகுந்து வலம்வந்தால் சூரியர், மேல் பிரகாரத்தில் முதலாவதாக சொக்க விநாயகர், இரண்டாவதாக சோமாஸ்கந்தர், தணியம்பிகை, கணேசர், சண்டிகேஸ்வரர் முதலியன திருவுருவங்கள், மூன்றாவதாக அம்மையோடு சந்திர சேகரர் திருவுருவுங்கள் ஆகியன ஒளியும் அழகும் வாய்ந்து விளங்குகின்றன. அடுத்து விஸ்வநாதர், பிரகதீஸ்வரர், லெட்சுமி, சரஸ்வதி, வள்ளி தெய்வானையோடு முருகன் முதலிய திருவுருவங்கள் அருள்கின்றன. இந்த மேல்பிரகாரத்து சன்னதிகள் அனைத்தும் தனித்தனியே கருவறை விமானங்களுடன் அழகுற விளங்குகின்றன. வடக்குப் பிரகாரத்தில் நவக்கிரக கோவிலும், அம்பாள் கோவில் கருவறை கருங்கல் ஜன்னல் விளிம்பில் கீர்த்தி வாய்ந்த சிறிய துர்க்கை உருவமும், வடகிழக்கே பைரவர், கால பைரவர், சந்திரர் திரு உருவங்கள் காணப்படுகின்றன.
திருக்கோவினுள் தன்னை நாடி வரும் அடியவர்களுக்கெல்லாம் ஞானத்தை, பிறவிப்பயனை, மௌனமாக அருளிக்கொண்டிருக்கும் திருமெய்ஞ்ஞான புரீஸ்வரர் கிழக்கு நோக்கி சன்னதி கொண்டுள்ளார். திருவுருவ சுயம்பு மூர்த்தி என்பது சிவ லிங்கத்தின் பாணத்தை பார்த்தாலே அறியப்பெறும்.
இங்கு கோவில் அமைதிக்கேற்ப அர்த்த மண்டபம், நர்த்தன மண்டபம் முதலிய மண்டபங்கள் அமைந்துள்ளன. மகா மண்டபத்தில் தூணில் கம்ப விநாயகர் இருக்கிறார். திருவுரு சிறிதாகினும் வரதராக இருக்கிறார். நடராஜ பெருமான், சிவகாமி அம்மையோடு அழகிய திருவுருவில் அருகில் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் அஸ்திர தேவர் பிரதோஷ நாயகர் முதலியவரோடு எழுந்தருளும் மூர்த்தியாக அருள்கிறார். அம்மண்டபத்திலே தென்புறம் சாயரட்சை விநாயகர் வீற்றிருக்கிறார். அவர்களை வழிபட்டு வெளியே வந்தால் அம்மையின் திருக்கோயில் தெற்கு பார்த்த சன்னதி அம்மையின் திருநாமம் பெரியநாயகி. வடமொழியில் பிரஹன்நாயகி என வழங்கப்பெறுதலும் உண்டு. திருவுரு பெரியது. அம்மையின் மகா மண்டபத்தில், அம்மையின் திருவுருவமும் பள்ளியறை சொக்கரும் அம்மனும் எழுந்தருள்கிறார்கள்.
தல வரலாற்றை ஓதுவார்கள் அவர்கள் நம்மிடம் விரிவாக எடுத்துரைத்தார். அவர் கூற கூற பல விஷயங்களை குறிப்பெடுத்துக்கொண்டோம்.
திரு.முருகேச ஓதுவார் (56) அவர்களின் குடும்பத்தினர் தான் ஞானபுரீஸ்வரருக்கு பரம்பரை பரம்பரையாக ஓதுவாராக தொண்டாற்றி வருகிறார்கள். இவரின் தந்தை சாமிநாத ஓதுவார், பாட்டனார் திரு.விஸ்வநாத ஓதுவார் ஞானபுரீஸ்வரருக்கு என இவர்களின் பரம்பரையே பல நூற்றாண்டுகளாக வழி வழியாக திருமக்கோட்டையில் தான் வசித்து வருகின்றனர்.
சுதந்திரத்துக்கு பிறகு இக்கோவில் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 70 களில் இவரது தந்தை சாமிநாத தேசிகருக்கு இங்கு 25 காசுகள் சம்பளம். கோவில் சார்பாக குடியிருக்க அரை கிரவுண்டு நிலம் கொடுத்தார்கள்.
பரம்பரை பரம்பரையாக தேவாரம் கற்றுவந்த குடும்பம் என்பதால் இவரும் 1976 ஆம் ஆண்டு இவர் தருமபுரம் வேலாயுத ஓதுவாரிடம் சென்று முறைப்படி தேவாரம் கற்றுக்கொண்டார்.
1982 இல் இவரது தந்தை தனுர் மாதப் பிறப்புக்கு முந்தைய தினம் இறைவனடி சேர்ந்தவுடன், தந்தை விட்ட பணியை தொடர இவர் வந்தார். அவ்வளவு தான். தற்போது இவருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூ.1000/-.
ஓதுவார்களுக்கு எல்லாம் பெரிய ஊதியமில்லை. ஏதோ துளியூண்டு நிலமும் சொற்ப சம்பளமும் தான். எனவே தானும் ஓதுவாராக தொண்டாற்றவேண்டுமா என்று இவர் தயங்கியபோது இவரது தாயார் வேலம்மாள் தான் பரம்பரை கடமையை நினைவூட்டி, இவர் அவசியம் ஞானபுரீஸ்வரருக்கு தொண்டாற்ற வேண்டும், அது ஒன்றே பிறவிப் பயன் என்றும் கூறினார். (அந்த தாய்க்கு நம் நமஸ்காரங்கள்.)
ஞானபுரீஸ்வரரை தரிசித்தவுடன் அங்கே ஆலயத்திலேயே அவரை அமர வைத்து மீண்டும் தேவாரம் பாடச் சொல்லி கேட்டோம்.
இறுதியில் இவரை குருக்கள் மற்றும் சக அடியார்கள் முன்னிலையில் சால்வை அணிவித்து வஸ்திரம், இனிப்பு, வெற்றிலை பாக்கு, பழம், ரொக்கம் என தட்டில் வைத்து கௌரவித்தோம்.
முன்னதாக சால்வை அணிவிக்கும்போது “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்னும் பதிகத்தை பாடிக்கொண்டே கௌரவித்தோம். பதிலுக்கு ஓதுவாரும் ஒரு பாடல் பாட… அந்த இடமே ஒரு மகத்துவம் பெற்று விளங்கியது.
சங்கர குருக்களையும் இதே போன்று கௌரவித்தோம். இது போன்ற அதிகம் வருவயில்லாத கோவிகளில் தொண்டாற்றுவதே ஒரு பெரிய தொண்டு தான்.
ஓதுவாரும் குருக்களும் சென்னை வரும்போது அவசியம் நமது அலுவலகத்திற்கு வந்து நம்மை ஆசீர்வதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
நாம் இவர்களிடம் பேசுகையில், ஒரு முதியவரை ஆரம்பம் முதல் பார்த்துக்கொண்டிருந்தோம். (படத்தில் தாடி வைத்து காணப்படுபவர்). பார்ப்பதற்கு ஏதோ சித்தர் போல இருந்தார். அதிகம் பேசாதவர். வயது எப்படியும் என்பதுக்கும் மேல் இருக்கும். அவரை பார்த்தாலே மனதுக்கு ஏதோ ஒரு சாந்தி ஏற்பட்டது. நாம் அனைவரையு கௌரவிப்பதையும் தட்சணை வைத்து கொடுப்பதையும் பார்த்துக்கொண்டிருந்தார். எனவே அவரையும் கௌரவிக்க விரும்பி சங்கர குருக்களிடம் அனுமதி கேட்டோம். “தாரளமா… அவர் இந்தக் கோவிலை பார்த்துக்குறாரு… இங்கே தான் இருப்பாரு அவர் எப்பவுமே.. நல்ல மனுஷன்” என்றார்.
அனுமதி கிடைத்ததையடுத்து, அவரையும் கௌரவித்தோம். “கோவிலை, சாமியை நல்லா பார்த்துக்கோங்க… உங்கள் சேவைக்கு நன்றி” என்றோம்.
அடுத்து கோவில் துப்புரவு பணியலாராக இருந்த பெண்மணி. பொதுவாக இதுபோன்ற கோவில்களுக்கு செல்லும்போது துப்புரவு பணியாளர்களை கௌரவிக்க தனியாக சேலை வாங்கிக்கொண்டு செல்வோம். இந்த முறை ஏனோ மிஸ்ஸிங். “மன்னிச்சுடுங்கம்மா… அடுத்த முறை கண்டிப்பா உங்களை சேலையோட வந்து பார்ப்பேன்” என்று கூறி அவர் கையில் ரொக்கமாக சிறு தொகை ஒன்றை கொடுத்தோம்.
(சங்கர குருக்கள் பற்றி நமது பிரார்த்தனை கிளப்பில் விரிவாக பார்ப்போம். அடுத்து வரும் பிரார்த்தனை கிளப் ஒன்றுக்கு அவர் தலைமை ஏற்கவிருக்கிறார்.)
நாம் சால்வை, வஸ்திரங்கள் வைத்து கௌரவித்து உரிய மரியாதை செலுத்தியதில் அனைவருக்கும் அத்தனை சந்தோஷம். அவர்கள் முகத்தை பார்த்தாலே புரியும்.
புராண வரலாறு
வசிஷ்டர் : கிழக்கே உள்ள திருக்களார் சிவதலத்தில் மன அமைதி பெற தன்னை வேண்டிய பதினாயிரம் மகரிஷிகளிடம் முருகப்பெருமான் உண்மை ஞானம் உறுதிக் கொள்ள வேண்டுமானால் சித்தி பெற்ற குருவின் மூலம் பஞ்சாட்ஷர ஜெபம் செய்தல் வேண்டும் என்று திருவாய் மலர்ந்தார். முனிவர்கள் சிவகுருவாகிய முருகனையே குருவாக வேண்ட முருகப்பெருமானும் உபதேசித்தார். அவ்வாறு உபதேசித்த ரிஷிகளில் சப்த ரிஷிகள் சிறந்தவர்கள். அவர்களில் வசிஷ்டர் சிறந்தவர். அவ்வசிஷ்டர் இத்தலத்தில் எழுந்தருளி பாரிஜாதத்தின் அடியில் சிவலிங்கப் பெருமானைப் பிரதிஷ்டை செய்து நாள்தோறும் வழிபாடு செய்து வரலானார். சிவபெருமான் சிவலிங்க வாயிலாக வெளிப்பட்டு உமக்கு வேண்டும் பேறு என்னவென வினவ, வசிஷ்டர் தனக்கு நீங்காத ஞானமும் தனக்கு ஞானம் வழங்கியமையால் இத்தலம் ஞானபுரீஸ்வரம்என்று பெயர் பெற வேண்டும் என்றும் வரம் கேட்டார். இறைவன் வரம் தந்து தாமும் ஞானபுரீஸ்வரர் என்னும் திருநாமத்தை ஏற்றருளினார்.
ஸ்ரீ ராமர்
தண்ட காருண்யத்தில் ஸ்ரீ ராமன் உலக துன்பத்தால் மணமுடிந்து வசிஷ்டரை தேடிப்புறப்பட்டார். இத்தலத்தில் வசிஷ்டர் ஞானம்பரராய் இருப்பதை அறிந்து வசிஷ்டரின் திருவடி வணங்கி நல்ஞானம் பெறவேண்டும் என விண்ணப்பித்தார். வசிஷ்டர் இட்ட ஆணைப்படி ஸ்ரீராமன் கோவில் திருக்குளத்தில் மூழ்கி எழ சித்த சுத்தி ஏற்பட்டது. தொடர்ந்து தனது குலகுரு பூஜை செய்த சிவபெருமானை வழிபட்டு இத்தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து வசிஷ்டரின் சிவஞானத் தெளிவடைந்து, ஸ்ரீராமர் மெய்க்கண் விளங்கப்பெற்றார்.
கிருத சேகர சோழ மகாராஜா
கிருதசேகர சோழ மகாராஜா என்பவர் செய்த தீவினை வசத்தால் குஷ்டம் என்ற பெரு நோயால் பாதிக்கப்பட்டார். எல்லா வைத்திய முறைகளை மேற்கொண்டும் பயனின்றி இனி தெய்வமே கதியென்ற சிந்தனையில் காசி, கங்கை, ராமேஸ்வரம் சென்று புனித நீராடியும் பயனின்றி மனம் நொந்து நாட்டுக்கு திரும்பி வரும்பொழுது வழியில் இத்தல எல்லையை அடைந்தார். அப்போது அவரது வலக்கண், வலத்தோல் துடிக்க கருடன் முதலிய நற்பறவைகள் ஒலித்தன.
மகிழ்ந்த அரசன் இங்கு விஷேடமிருக்கிறது என்று உணர்ந்து கோவில் திருக்குளத்தில் நீராடி எழுந்து தன் மேனியை நோக்க குஷ்ட நோய் நீங்கியதைக் கண்டார். பேரானந்தம் அடைந்தார் இறைவனை வணங்கி கோயில் கட்டுவித்தார். திருவீதிகளை அமைத்தார். பூஜைக்கு வேண்டுவன அளித்தார். விழா கொண்டாடினார். இறைவனை விட்டு பிரிய மனமில்லாமல் இப்போது மகாராஜபுரம் என வழங்கும் பகுதியில் கோட்டையை கட்டி இங்கேயே வாழ்ந்து சிவபதம் அடைந்தார். இப்போது இத்தீர்த்தத்தில் தீரா நோய் கொண்டோர் நீராடி நோய் நீக்கப் பெற்றமைக்கு பல ஆதாரங்கள் உண்டு.
திருக்குளம்
மேற்கூறிய காரணங்களால் திருக்கோயில் முன்புள்ள திருக்குளம் ஞானதீர்த்தம் என்றும் பெருநோய் பிரித்த தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. திருக்குளம் படித்துறையில் பிரம்மத்தண்டம் என்று அழைக்கப்படுகின்ற கருங்கல் தூணில் உச்சியில் நந்தியும் கீழே திருக்கோயிலை நோக்கி வணங்கியவாறு கிருத சேகர சோழனின் திருவுருவமும் அருகில் ராமர் பாதங்களும் காணப்படுகின்றன. மகாராஜபுரம் பகுதியில் உள்ள குளம் இன்றும் அரண்மனைக்குட்டை என்றே வழங்கப்படுவதால் அப்பகுதியில் அரண்மனை இருந்தது என்றும் தெரிய வருகிறது.
சுற்றுக்கோயில்
இத்திருக்கோயிலின் தென்கிழக்கு மூலையில் தர்மர் கோவில் என்று வழங்கப்பெறும் திரௌபதி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. தென்மேற்கு மூலையில் அடைக்கலம் காத்தார் என வழங்கும் ஒரு ஐயனார் ஆலயம் உண்டு. மேற்கில் ஒரு விநாயகர் ஆலயம் மற்றும் முருகன் ஆலயமும் உள்ளன. வடமேற்கில் சுத்தமல்லி ஐயனார் என அழைக்கப்படும் மற்றொரு ஐயனாரும் உண்டு. இந்த ஐயனார் இங்குள்ளவர்கள் சிலருக்கு குல தெய்வமாகவும், சித்தமல்லி கிராமத்தில் இருந்தார் எனவும், அவர்கள் சித்தமல்லி அடிக்கடி சென்று வழிபட இயலாத வருத்தத்தை ஐயனாரிடம் விண்ணப்பிக்க ஐயனார் அதற்கு நாளை காலை ஞானபுரீஸ்வரர் கோவில் வடமேற்கு எல்லையில் எழுந்தருள்வோம் கோவில் கண்டு அருளுக என்று ஆணையிட மறுநாள் காலை அவ்வாறே நிகழ்ந்ததை ஊர் மக்கள் கண்டு வழிபாடு செய்தார்கள் என்று கர்ணபரம்பரை செய்தி கூறுகிறது.
ஊரின் கிராம தேவதை மாரியம்மனும் பிடாரியும் ஆகும். பிடாரி பொன்னம்மை என்று வழங்கப்பெறுகிறார். அவ்வம்மையின் எழுந்தருளும் திருவுருவம் திருக்கோயிலில் உள்ளது.
(இத்தல வரலாறு 1953ம் ஆண்டு மன்னார்குடி தமிழ்ப்பண்டிதர் ப. இராமநாதபிள்ளை அவர்களால் எழுதப்பட்ட, திருக்கோயில் வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தல வரலாறு என்பது நாம் நினைப்பது போல அத்துணை சுலபமல்ல. பல்வேறு பட்டயங்களை, கல்வெட்டுக்களை ஆராயவேண்டும், செவி வழிச் செய்திகளை கருத்தில் கொள்ளவேண்டும்!)
தமிழகத்தில் எந்த சிவாலயத்திலும் இல்லாத சிறப்பு 16 பிள்ளையார் வழிபாடு இந்த சிவாலயத்தில் தான் உள்ளது என்பது சிறப்பம்சமாகும்.
பரிகாரம் : இது சோடச கணபதி தலம் என்பதால் அனைத்து பிரச்சனைகளுக்குமே ஒரு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. திருமக்கோட்டை மெய்ஞானபுரீஸ்வரரை தரிசித்தாலே விசேஷம் தான்.
மன்னார்குடி செல்பவர்கள் அவசியம் மெய்ஞ்ஞானபுரீஸ்வரரை தரிசிக்கவும்.
முகவரி : அருள்மிகு பெரியநாயகி அம்பாள் சமேத மெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோவில், திருமக்கோட்டை, மன்னார்குடி – 614001.
==========================================================
இந்தப் பதிவுகளை காணத் தவறாதீர்கள்…
பரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா? MUST READ
சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன?
பூம்பாவை அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடம் இப்போது எங்கே உள்ளது தெரியுமா?
==========================================================
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!
Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215 | E-mail : editor@rightmantra.com
==========================================================
Also check :
பட்டினத்தார் கோவில் – அன்றும், இன்றும்!
மகா பெரியவாவும் பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவிலும் – நெஞ்சையள்ளும் நெகிழ்ச்சியான சம்பவங்கள்!
சித்தர்கள் பாடிய, நரம்பு கோளாறுகளை நீக்கும், பேரம்பாக்கம் சோளீஸ்வரர்!
அற்புதமான வாழ்க்கை வேண்டுமா? அரியத்துறைக்கு வாங்க!
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் – அற்புதங்கள் பல நிகழ்ந்த திருநாவுக்கரசர் முக்தி தலம்!
கடனில் சிக்கித் தவிப்போரை மீட்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர்!
திருநின்றவூரின் திருவாய் நிற்கும் ஏரிகாத்த ராமர் – ஸ்ரீராமநவமி ஸ்பெஷல் !
நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!
ஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து!
அபயம் தருவான் அஞ்சனை மைந்தன் – காக்களூர் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் தரிசனம் !
நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!
==========================================================
Also check ….
விநாயகனே வினை தீர்ப்பவனே – பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் பிள்ளையார்!!
பூவிருந்தவல்லி மார்க்கெட் பிள்ளையார்!
தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும் வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்!
தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)
வாக்கு தரும் நல்வாழ்வு தரும் – பிள்ளையாருடன் துவங்கும் புத்தாண்டு!!
வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!
குன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்!
அருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்!
==========================================================
[END]
சுந்தர்ஜி
5 வயதில் அடி எடுத்து வைக்கும் நம் தளத்திற்கு வாழ்த்துகள்
Great Big Article.
Dedication Means Sundar.
Thanks & Regards,
Narayanan.
ஐந்தாவது வயதில் அடி எடுத்து வைக்கும் நம் தளத்திற்கு வாழ்த்துக்கள்.
இத்தனை வருடங்களாக பட்ட சிரமங்கள் மறைந்து நம் தளம் மேலும் வளர வாழ்த்துக்கள்.
சோடச கணபதி கோயில் பற்றிய விபரங்கள் எல்லாமே சிறப்பாக இருந்தது. படம் அனைத்தும் கண்ணுக்கு குளிர்ச்சி.
நன்றி
மிக அருமையான பதிவு சுந்தர் ஐயா!!
ஐந்தாம் ஆண்டு தொடங்கும் தளத்திற்கு வாழ்த்துக்கள்!!
மென்மேலும் பல்லாணடு சேவை புரிய வேண்டும்!!
ஐந்து வயது பாலகனுக்கு எமது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ஆல் போல் தழைத்து அருகு போல் வாழ வாழ்த்துகிறேன்!
அன்பன்,
நாகராஜன் ஏகாம்பரம்