அந்தக் கலைக்காகவே தம்மை அற்பணித்து, அதையே மூச்சாக கருதி வாழ்ந்த ஒருவரைப் பற்றி இன்று பார்ப்போம்.
தமிழ் வாத்திய உலகில் ‘தவில்காரர்’ என்றால் அது நீடாமங்கலம் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களையே குறிக்கும். இவரைப் பற்றி பேசினாலே போதும், தவில் வாத்திய வரலாற்றை பேசியதற்கு ஒப்பாகும் என்று கூறப்படுவதுண்டு. அந்தளவு தன்னால் வாத்தியத்துக்கு பெருமையும், வாத்தியத்தால் தனக்கு பெருமையும் சேர்த்தவர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை. இன்று செப்டம்பர் 3 அவரது பிறந்த நாள்.
“குருபக்தியா… கிலோ என்ன விலை?” என்று கேட்கும் இந்த காலகட்டத்தில், தனது குருநாதரின் ஊர் பெயரைச் சொன்னால் கூட எழுந்து நிற்பாராம் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை. தனது குருநாதர் மறைந்த பிறகு அவர் வாழ்ந்த தெருப்பக்கம் கூட செல்லாதவர் இவர். அப்படியே செல்ல நேர்ந்தாலும் தனது காலணிகளை கழற்றி கையில் வைத்துக்கொண்டு வெறும் காலால் நடந்து செல்வாராம்.
“செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமை தான் நமது செல்வம்” என்ற கூற்றுப்படி வாழ்ந்தவர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்கள்.
அக்காலங்களில் செய்த தொழிலின் மீதும், கலையின் மீதும் எந்தளவு பக்தி கொண்டிருந்தார்கள் என்பதை அவசியம் நாம் அறிந்துகொள்ளவேண்டும். நமது பிள்ளைகளுக்கும் சொல்லவேண்டும்.
இளமைப் பருவம்!
திருக்களம்பூரை சேர்ந்த சௌந்தரவல்லி அம்மாள் அவர்கள் நீடாமங்கலத்தில் தனது கணவர் வீட்டில் குடியேறிய பிறகு அவர்களுக்கு நான்கு பையன்கள், மூன்று பெண்கள் என ஏழு குழந்தைகள் பிறந்தார்கள். குமாரர்கள் அனைவருமே தவில் கலையில் சிறந்து விளங்கினர். ஒருவர் மட்டும் வைர வியாபாரியாக மிளிர்ந்தார். குமாரத்திகளும் தவில்காரர்களையே திருமணம் செய்துகொண்டனர். சௌந்தரவல்லி அம்மாளுக்கு இரண்டாவது பெண்ணாக பிறந்தவர் தெய்வானையம்மாள். அவருக்கு ஒரே மகவாக 03/09/1894 அன்று பிறந்தவர் தான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள்.
இவர் பிறந்த ஒரு மாதத்தில் இவரது தாயார் தெய்வானை இறந்துவிட, சின்னம்மா கமலத்தம்மாள் தான் இவரை எடுத்து வளர்த்து வந்தார்.
தமது ஐந்தாவது வயதில் தனது தாய்மாமன் சிங்காரத் தவில்காரரிடம் தவில் கற்க ஆரம்பித்தார். இவரது திறமையையும் ஆர்வத்தையும் பார்த்த இன்னொரு தாயமாமன் நீடாமங்கலம் கோவிந்த தவில்காரர் தானும் கற்பிக்க ஆரம்பித்தார்.
12 கி.மீ. நடந்தே வந்த மீனாக்ஷி சுந்தரம்!
1906 ஆண்டு பிள்ளையவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான வருடம் என்றால் மிகையாகாது.
அக்காலத்தில் மிகச் சிறந்த நாதஸ்வர வித்துவானாக விளங்கிய நாகப்பட்டினம் வேணுகோபால பிள்ளை, தனது குழுவில் வாசிக்க சிறந்த தவில்காரர் ஒருவரை தேடிக்கொண்டிருந்தார். கோட்டூரில் தனது மைத்துனர் சௌந்தரராஜ பிள்ளை வீட்டில் அவர் தங்கியிருந்த போது அவரிடம் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை பற்றியம் அவரது ஆர்வம் மற்றும் திறமை பற்றியும் சொல்லப்பட்டது. அவரும் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையை சந்திக்க இசைந்தார்.
நாகப்பட்டினம் வேணுகோபால பிள்ளை தம்மை சந்திக்க விரும்பும் விஷயம் அப்போது மன்னார்குடியில் தங்கியிருந்த மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையிடம் ஒரு சீடர் மூலம் தெரிவிக்கப்பட்டது. உடனே கோட்டூருக்கும் மன்னைக்கும் இடையேயான 12 கி.மீ. தூரமும் தவிலை தனது தலையிலேயே சுமந்தபடி பயணமானார் நம் பிள்ளை. அப்போது அவர் வயது 12.
கோட்டூருக்கு வந்து வேணுகோபால பிள்ளையவர்களை பார்த்து இவர் நமஸ்கரித்ததும் அவருக்கு பார்த்த மாத்திரத்திலேயே விளங்கிவிட்டது எதிர்காலத்தில் தவில் உலகில் முடிசூடா மன்னனாக திகழப் போகிறவர் இவர் என்பது.
மீனாக்ஷி சுந்தரத்துக்கு ஏராளாமான ஜதிகள் மற்றும் லய சம்மந்தமான கணக்குகளை கற்பித்து அவரை ஒரு சிறந்த தவில் மேதையாக உருவாக்கினார் வேணுகோபால பிள்ளை.
மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையின் குருபக்தி!
இதன் காரணமாக தனது குருவின் மீது பெரும் பற்றும் பக்தியும் கொண்டு விளங்கிய மீனாக்ஷி சுந்தரம் அவர்கள் தனது குருவின் ஊரான ‘நாகப்பட்டிணம்’ என்று கூறினாலே எழுந்து நின்று வணங்குவார். தனது குருநாதரின் காலத்திற்கு பிறகு அவர் வசித்த தெருப்பக்கம் சென்றால் கூட காலணிகளை கழற்றிவிட்டு வெறுங்காலுடன் தான் நடந்துசெல்வார். குருநாதரின் வீட்டு முன் நின்று வாயிற்படியை தொட்டு வணங்குவார். எதற்கும் கலங்காதவர் என பெயரெடுத்த மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை, “எனக்கு பிச்சை போட்ட வீடு” என்று சொல்லி கண்கலங்குவாராம். நாகபட்டினத்தாரிடம் நேரடி சீடர்களாக இருந்தவர்களிடம் கூட இப்படி ஒரு குருபக்தியை காண்பது அரிதாக இருந்தது.
ஒரு முறை நீலாயதாக்ஷி அம்பாள் கோவிலில் உற்சவத்தின்போது, நாகப்பட்டினத்தாரின் இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது இணையாக தவில் வாசிக்க அம்பரகத்தூர் மலைப்பெருமாள் பிள்ளை என்பவர் வந்திருந்தார். ஜதிகள் வாசிப்பதில் அவருக்கு நிகர் அவரே என்று சொல்லுவார்கள். அவர் சில ஜாதிகளை வாசித்துவிட்டு மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையிடம் வாசிக்கச் சொன்னார். ஆனால், பிள்ளையவர்கள் மூன்று முறை முயன்றும் சரியாக வாசிக்க முடியவில்லை. இது அவரது குருவான நாகப்பட்டினத்தாருக்கு ஏமாற்றமாய் இருந்தது. “இதை சரியாக வாசித்துவிட்டே நீ வீட்டுக்கு வரவேண்டும்” என்று கோபமாக கூறிவிட்டு போய்விட்டார்.
வீட்டுக்கு வந்து உணவருந்தி தனது சாய்வு நாற்காலியில் சிரம பரிகாரம் செய்துகொண்டிருந்தபோது சிறிது நேரத்தில் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை வெளியே நிற்பதைக் கண்டார்.
“போ…போய் சாப்பிடு” என்றார் சீடனைப் பார்த்து.
“அவன் அதை சரியாக வாசித்தானா என்று கேளுங்கள்” என்றார் நாகப்பட்டினத்தாரின் மனைவி.
“அதை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவன் ரொம்ப ரோஷக்காரன். வாசித்துவிட்டுத் தான் வந்திருப்பான். ஒருவேளை இல்லையென்றால் அங்கேயே உயிரை விட்டுப்பானே தவிர, என் வார்த்தையை மீறி இங்கு வந்திருக்கமாட்டான்” என்றார்.
அந்தளவு குருபக்தியும் தன்மான உணர்வும் மிக்கவரேத் திகழ்ந்தார் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை.
தனித்தவில் உருவான கதை!
குருநாதரின் மறைவுக்கு பின்னர் செம்பொன்னார் ராமஸ்வாமி பிள்ளை, நாகூர் சுப்பையா பிள்ளை, உறையூர் கோபால சுவாமி பிள்ளை, மதுரை பொன்னுசுவாமி பிள்ளை, திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளை போன்ற புகழ்பெற்ற நாதஸ்வர கலைஞர்களுக்கெல்லாம் வாசித்து வந்தார் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை. அதற்கு பிறகு திருவீழிமிழலை சகோதரர்கள் குழுவில் முக்கியான அங்கத்தினராகி அவர்களுக்கு மட்டுமே முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். அந்த குழுவில் நிரந்தர தவில்காரராகவும் விளங்கினார். அந்தக் காலகட்டங்களில் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை தவில் என்றால் அது மூன்றாவது நாதஸ்வரம் என்று அனைவரும் கூறும் வகையில் அவர் வாசிப்பு திகழ்ந்தது.
இப்படி இருந்தவர்களுக்கிடையே ஒரு முறை மனக்கசப்பு ஏற்பட்டு பிள்ளையவர்கள் அக்குழுவிலிருந்து வெளியேறிவிட்டார். அதுமுதல் எந்தக் குழுவிலும் நிரந்தர தவில்காரராக இல்லாமல், ‘தன்னை விரும்புகிறவர்கள் தன்னை தனியாக ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும்’ என்று அறிவித்தார். அது முதல் தனித் தவில் கலைஞராக அவர் தொழில் நடத்தினார். தனித் தவில் (ஸ்பெஷல் தவில்) என்கிற சொல் அப்போதிலிருந்து தான் வழக்கத்தில் வந்தது.
அவர்களும் செய்வதறியாமல் இலங்கையிலிருந்து காமாக்ஷி என்கிற தவில்காரரை கொண்டு வந்து தங்கள் குழுவில் இணைத்துக்கொண்டனர். “இந்தியா மீனாக்ஷி இல்லையென்றால் இலங்கை காமாக்ஷி” என்ற எண்ணம் தான் அப்போது பலருக்கு இருந்தது.
பல கச்சேரிகளில் தனித் தவிலாக ஒப்புக்கொண்ட நம் பிள்ளையவர்கள் திருவீழிமிழலை சகோதரர்கள் கச்சேரி என்றால் மட்டும் ஒப்புக்கொள்ளமாட்டார்.
திருமண வாழ்க்கை!
பசுபதிகோவில் வீரபத்திர தவில்காரர் மைசூர் சமஸ்தானத்திற்கு ஆஸ்தான வித்துவானாக இருந்தார். அவருடைய மூத்த மகள் நாகம்மாளை மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை 1913 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். வீரபத்திர தவில்காரருக்கு இரண்டாம் மகள் ராஜம்மாள். தன்னுடைய மருமகன் மீனாக்ஷி சுந்தரம் மீது பெருமதிப்பு வைத்திருந்த வீரபத்திரன், தகுதியும் சிறப்பும் மிக்க மருமகனுக்கு சகலையாக வேறு யாரும் வந்தால் அது தன் மாப்பிள்ளையின் தகுதிக்கு பெருமை சேர்க்காது என்று கருதி தன் இரண்டாம் மகளையும் அவருக்கே திருமணம் செய்துகொடுத்துவிட்டார். இதன் மூலம் பிள்ளையவர்களின் வம்சம் ஆல் போல தழைத்து அருகு போல சிறப்புற்று விளங்கியது.
மனமாற்றம்!
இந்த நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த பஞ்சாபகேசய்யர் என்பவர் அந்த ஊர் மங்கள நாயகிக்கு உற்சவம் ஒன்றை நடத்தினார். அதில் திருவீழிமிழலை சகோதரர்களின் கச்சேரிக்கு ஏற்பாடானது. இதில் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை தவில் வாசித்தால் நன்றாக இருக்கும் என்று கருதிய பஞ்சாபகேசய்யர், அக்ரஹாரத்தில் இருந்த வெங்கட்ராமய்யர் என்பவரை நீடாமங்கலத்திற்கு தூது அனுப்பி, பிள்ளையவர்களை சமாதானம் செய்தார். இதையடுத்து அரைமனதாக ஒப்புக்கொண்டார் பிள்ளை.
அதுமுதல் திருவீழிமிழலை சகோதரரகளுக்கும் தனித் தவிலாக வாசிக்க ஆரம்பித்தார். இன்று பலர் தனித்தவில் என்று தங்களை கூறிக்கொள்ளும் போதிலும், அதற்கு முழுக்க முழுக்க தகுதியுடையவராக விளங்கியவர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை ஒருவரேயாவார்.
மேலும் இப்போதெல்லாம் தொழில்பக்தி என்பதே அறவே போய்விட்டது. சிறிது நேரம் வாசித்துவிட்டு தவிலை தங்கள் சீடர்களிடம் கொடுத்துவிட்டு செல்பவர்களே அதிகம். ஆனால், பிள்ளையவர்கள் சுவாமி புறப்பாடு நேரத்தில் தவிலை எடுத்து மாட்டிக்கொண்டால் சுவாமியை மீண்டும் கோவிலில் வந்து இறக்கிவைக்கும் வரை தவிலை இறக்கிவைக்காமல் தமது தொழில் முன்னோடிகளை அவர்தம் தியாகங்களை நினைத்து மதித்தவர்.
அதே போல ஒரு நிகழ்ச்சியை ஒப்புக்கொண்டால் அதை எந்தக் காரணம் கொண்டு ரத்து செய்யமாட்டார். (சிலர் பணம் அதிகம் கிடைக்கும் என்றால் முன்னர் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை கொஞ்சமும் கூச்சமின்றி ரத்து செய்துவிட்டு வேறு கச்சேரிகளை ஒப்புக்கொள்வர்). மேலும் பிள்ளையவர்களிடம் காலதாமதம் என்பதே கிடையாது. குறித்த நேரத்திற்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றுவிடுவார்.
பசுக்கள் மேல் பரிவு!
பசுக்கள் மேல் பிள்ளையவர்களுக்கு அலாதி பிரியம் உண்டு. கச்சேரிகள் முடிந்து இல்லம் திரும்பியவுடன் முதல்வேலையாக கொல்லைப்புறம் சென்று பசுக்களை தடவிக்கொடுத்து “தண்ணீர், தீவனம் எல்லாம் வைத்தாயிற்றா?” என்று அக்கறையாக விசாரிப்பார். தனது உயிர் பிரிவதற்கு சற்று முன்பு கூட கொல்லைப்புறம் சென்று பசுக்களிடமும் கன்றுகளிடமும் பரிவுடன் சம்பாஷித்து அவற்றை தடவிக்கொடுத்துவிட்டு வந்து தான் நிரந்த விடைபெற்றார்.
“குருவார்த்தைக்கு மறு வார்த்தை ஏது?” என்ற சொல்லாட்சிப்படி வாழ்ந்த அவர் மறைந்தாலும் அவர் தொழில் மீது அவர் காட்டிய அக்கறையும், ஈடுபாடும் இன்றளவும் நினைவுகூரப்படுகிறது.
இன்று அவரைப் பற்றிய பதிவை பகிர்ந்தமைக்கு பெருமிதம் கொள்கிறோம்.
வாழ்க அன்னார் புகழ்! ஓங்குக மங்கள இசைக்கலை!!
========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
========================================================
Similar articles…
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!
புல்லுக்கு இறைக்கும் நீரை கொஞ்சம் நெல்லுக்கும் இறைக்கலாமே?
கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2
கொடுக்கும் பணம் நன்கு விருத்தியாக திரும்ப… பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 5
========================================================
மங்கள இசைக்கலைஞர்கள் நம் பிரார்த்தனைக்கு தலையேற்ற பிரார்த்தனை கிளப் பதிவுகளுக்கு…
குருவை மிஞ்சிய சிஷ்யன் – எங்கே, எப்படி? RIGHTMANTRA PRAYER CLUB
முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே – Rightmantra Prayer Club
பக்தன் வாக்கை மெய்ப்பிக்க மயில் மீது தோன்றிய மயில்வாகனன் – Rightmantra Prayer Club
எது உண்மையான பக்தி ? – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்
========================================================
Also check :
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!
நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ
காலடியில் ஒரு வைரச் சுரங்கம் – கண்ணுக்கு தெரிகிறதா?
சாப்பாட்டுக்காக க்யூவில் நின்ற அதே இடத்திற்கு பின்னாளில் கோடீஸ்வரராக நுழைந்த ஒருவர் கதை!
மலையை பிளந்த ஒற்றை மனிதன் – ‘முடியாது’ என்கிற வார்த்தையை இனி நாம் சொல்லலாமா?
நீங்க எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் இலக்கு என்ன?
விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!
மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்?
உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!
அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
========================================================
[END]
தான் நேசித்த கலையில், துறையில் குருவருளாலும் திருவருளாலும் வல்லுனராகி விறுவிறுவென்று புகழேணியில் ஏறியபோதும் பழைமையை மறக்காத உத்தம மனது. அனைவரும் வாசிக்கவேண்டிய அபூர்வ கட்டுரை.