Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, November 4, 2024
Please specify the group
Home > Featured > கண்ணன் பிறந்த போது பூமி எப்படி உணர்ந்தது தெரியுமா? – கிருஷ்ண ஜெயந்தி SPL 2

கண்ணன் பிறந்த போது பூமி எப்படி உணர்ந்தது தெரியுமா? – கிருஷ்ண ஜெயந்தி SPL 2

print
பூமியில் அசுரர்கள் பெருகியதாலும் அதர்மம் தலைதூக்கியதாலும் நல்லவர்கள் அழிந்து தர்மம் சாய்ந்ததாலும் பாரம் தாங்காது கதறிய பூமாதேவி, ஒரு பசுவின் வடிவத்தில் சென்று தேவர்கள் சபையில் அழுது முறையிட்டாள்.

“பிரம்மதேவரே பாபிகளின் பாரம் தாங்கமுடியவில்லை. என் மீது படிந்துள்ள இந்த பாரத்தை குறைக்க நீங்கள் தான் ஏதேனும் வழிசெய்யவேண்டும்!” என்றாள்.

“இதை நான் தீர்க்கமுடியாது பூமி மாதா. வாருங்கள் எல்லோரும் பாற்கடல் சென்று பரந்தாமனைப் பணிவோம். அவரே இதை தீர்க்கவல்லவர்” என்று கூறிய பிரம்மா, பூமாதேவி உள்ளிட்ட தேவர்களை அழைத்துக்கொண்டு திருப்பாற்கடல் சென்றார்.

அங்கு அனைவரும் ஸ்ரீமன் நாராயணனை பலவாறு துதித்து, “தர்மத்தின் வடிவே, பூலோகத்தில் தருமம் தலைகீழாக போய் கொண்டிருக்கிறது. நேர்மையும் நீதியும் நிற்க இடமின்றி நிலை தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அன்பு என்ற பதம் வெறும் அலங்காரச் சொல்லாகிவிட்டது. கவர்ச்சிக்கு அளிக்கப்படும் மரியாதை திறமைக்கு அளிக்கப்படுவதில்லை. பொய்யான விளம்பரத்துக்கு கிடைக்கும் புகழும் போற்றுதலும் மெய்யான உழைப்புக்கு இல்லை. வெறும் பேச்சுக்கு அளிக்கப்படும் பட்டமும் பதவியும் உண்மையான தொண்டுக்கும் சேவைக்கும் இல்லை. மேலும் அசுரர்களின் பெருக்கத்தால் பூமாதேவி பாரம் தாங்காது கதறுகிறாள். அவளுடைய பாரம் நீங்க தங்கள் திருவடிகளை சரணடைந்திருக்கிறாள். அனைவரும் உங்களுடைய கட்டளைக்காக காத்திருக்கிறோம் பிரபோ” தாங்கள் வந்த நோக்கத்தை விவரித்தனர்.

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமன்
திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமன்

அவர்களை நோக்கி புன்முறுவல் செய்த நாராயணன், “அனைத்தும் நான் அறிவேன். கவலை வேண்டாம்…” என்று கூறி தனது திருமுடியிலிருந்து கருப்பு, வெள்ளை என இரண்டு நிறங்களில் இரண்டு கேசங்களை எடுத்தார்.

“இந்த இரண்டு தலைமயிர்களும் எனது அம்சமாக பூமியில் அவதரித்து பூமியின் பாரத்தை போக்கும்… கவலைவேண்டாம்” என்று திருவாய் மலர்ந்தார்.

இதைக் கேட்டு பிரம்மா, பூமா தேவி உள்ளிட்ட தேவர் குழாம் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் தொடர்ந்த பரந்தாமன், “நீங்கள் அனைவரும் யதுகுலத்தில் பிறந்து எனக்காக காத்திருங்கள். தேவமாதர்கள் அனைவரும் கோபிகைகளாக பிறக்கட்டும். இந்த கரு மயிர் வசுதேவரின் பத்தினி தேவகியின் வயிற்றில் எனது அம்சமாக பிறக்கும். அக்குழந்தை கம்சன், சிசுபாலன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்து பாரதப் போரிலும் தர்மத்தை நிலைநாட்டும்!” என்றார்.

(கருமயிர் ஸ்ரீ கிருஷ்ணனாக அவதரித்தது. வெண் மயிர் பலராமராக அவதரித்தது! ‘கிருஷ்ணா’ என்ற சொல்லுக்கே கருமை நிறத்தை உடையவன் என்று தான் பொருள்.)

*****************************

கம்சன் கிருஷ்ணரின் தாயான தேவகியின் உடன் பிறந்தவனும் மதுராவைத் தலைநகராகக் கொண்ட ராஜ்ஜியத்தின் மன்னனும் ஆவான். இவனுடைய தந்தை உக்கிரசேனர், தாயார் பத்மாவதி. தங்கை தேவகிக்கும் வசுதேவருக்கும் திருமணம் முடிந்து அவர்களை தேரில் ஊர்வலமாக அழைத்து வருகையில், “அடே.. மூடனே நீ யாரை இப்போது பிரியமாக அழைத்துச் செல்கிறாயோ அவளின் எட்டாவது குழந்தை உன் உயிருக்கும் எமனாகும்!’ என்று அசரீரி ஒலித்தது.

தன் உயிர் போகும் என்ற வார்த்தையை கேட்டவுடன் கம்சனின் தங்கைப் பாசம் காற்றில் பறந்தது. உடனே அவள் கூந்தலைப் பற்றி இழுத்து அவளை வாளால் வெட்டப் போனான். ‘கம்சா! தேவகிக்கு பிறக்கப்போகும் எட்டாவது மகனால்தானே உனக்கு அழிவு. அவளுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன். தேவகியை விட்டு விடு!’ என்று மனைவியின் மீதான பாசத்தால் பரிதவிப்பில் மன்றாடிக் கொண்டிருந்தார் வசுதேவர்.

அவர் கூறியதில் இருந்த உண்மையை உணர்ந்து, தேவகியை கொல்லும் எண்ணத்தை கைவிட்டான். ஆனால் அக்கணமே, வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்து, தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்.

கம்சன் குழந்தைகளை கொல்லுதல்...
கம்சன் குழந்தைகளை கொல்லுதல்…

தேவகிக்கும் வசுதேவருக்கும் சிறையில் பிறந்த ஒவ்வொரு குழந்தையாக ஈவிரக்கமின்றி கொன்றான் கம்சன். ஏழு குழந்தைகளின் உயிரை இதுவரை பறித்தாயிற்று. எட்டாவது குழந்தையை கொன்றால் அத்தோடு தீர்ந்துவிடும் கணக்கு என்று கருதிய கம்சன் எட்டாவது குழந்தையின் ஜனனத்துக்காக காத்திருந்தான்.

தேவகி மீண்டும் கருவுற்றாள். இந்த குழந்தையும் தன் அண்ணனின் கையால் இறக்கப்போவதை எண்ணி, கர்ப்பவதியான தேவகி கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள்.

==========================================================

Don’t miss these articles…

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா – பாடல் தோன்றிய கதை!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

==========================================================

ஒரு நள்ளிரவு நேரத்தில் தேவகிக்கு எட்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த நட்டநடு நிசியில் அனைத்திற்கும் காவலனாக விளங்கும் ஸ்ரீமன் நாராயணன் தாமரை போன்ற மலர்ந்த முகத்தோடு, திருக்கரங்கள் நான்கினோடு, ஸ்ரீவத்சம் துலங்கும் மார்போடும் திருவவதாரம் செய்தார். வசுதேவர் பெருமகிழ்ச்சி எய்தி பகவானை பலவிதங்களில் துதிபாடினார்.

வசுதேவருக்கும், தேவகிக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி, மறுகணமே மறைந்து போனது. பொழுது விடிந்ததும் கம்சன் வந்து குழந்தையை கொண்டுபோய்விடுவான் என்பதால் அவர்கள் கலக்கம் கொண்டிருந்தனர்.

“தேவ தேவா… இங்கு தோன்றியிருக்கும் தாங்கள் உலகைக் காக்கும் பரம்பொருள் என்ரபோதும், தங்கள் அவதார ரகசியத்தை பிரத்யட்சமாக காட்டும் அடையாளங்களை தவிர்த்து அவற்றை மறைத்துக்கொள்ளுங்கள். தாங்கள் இங்கு ஜனித்திருக்கும் விஷயம் கம்சனின் காதுகளுக்கு எட்டினால் எங்கள் இருவர் உயிருக்கும் ஆபத்து.”

தேவகியும் பகவானிடம் மன்றாடினாள்…. “அகிலங்கள் அனைத்திலும் உரைந்தபோதிலும் என் கர்ப்பத்திலும் கூட கருணை கொண்டு உறைந்தவனே நீ இந்த சதுர்புஜ திவ்ய ஸ்வரூபத்தை அவசியம் மறைத்துக்கொள்ளவேண்டும். அந்த ஈவிரக்கமற்ற அரக்கனுக்கு உன் திவ்ய தரிசனம் கிடைக்கக்கூடாது!” என்று கேட்டுக்கொண்டாள்.

சிறையில் மகாவிஷ்ணு தோன்றுதல்...
சிறையில் மகாவிஷ்ணு தோன்றுதல்…

அப்போது அங்கே சிறையில் யாரும் எதிரபாராத வண்ணம், அக்குழந்தை மறைந்து அங்கு மகாவிஷ்ணு பிரசன்னமானார். பரந்தமானை கண்டதும் இருவரும் உணர்ச்சிப் பெருக்கில் கைகூப்பி தொழுதனர். வார்த்தைகள் வரவில்லை.

“தாயே உங்கள் முற்பிறவியில் நீங்கள் என்னை மகனாக பிறக்கவேண்டும் என்று வரம்கேட்டதால் அதை நிறைவேற்றியதை காட்டவே நாம் இந்த தோற்றத்தில் தோன்றினோம். நீங்கள் முந்தைய பிறவிகளில் ஸுயம்பாவ மனுவந்த்ரத்தில் நீங்கள் பிருசினி என்கிற பெண்ணாகவும், வசுதேவர் சுதபஸ் என்பவராகவும் இருந்தீர்கள். என்னை நோக்கி கடும்தவம் செய்தீர்கள். அந்தப் பிறவியில் உங்களுக்கு நான் பிரசினி கர்ப்பன் என்கிற பெயருடைய மகனாக பிறந்தேன். அடுத்த பிறவியில் அதிதியாகவும் காஸ்யபராகவும் பிறந்தீர்கள். உங்களுக்கு நான் வாமனனாக பிறந்தேன். உங்கள் தவத்தின் பயனாக இந்த பிறவியிலும் நான் மகனாக பிறந்திருக்கிறேன். எனது அம்சமாக பிறந்திருக்கும் இந்த சிசுவை கோகுலத்திற்கு கொண்டு செல்லுங்கள். அங்கு வசுதேவரின் நண்பரான நந்தகோபருக்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள். யாசோதை என்னை வளர்க்கட்டும். உரிய நேரத்தில் எல்லாம் நல்ல விதமாக நடக்கும்” என்று கூறிய நாராயணன் மறுகணமே குழந்தையாக மாறினார்.

குழந்தையை மாற்றுவதற்கு தோதாக, சிறையின் வாயில்கள் தானாக திறந்தன. காவலர்கள் மயக்கமுற்றனர். வசுதேவர் சற்றும் தாமதிக்காமல், குழந்தையை ஒரு கூடையில் எடுத்து வைத்தபடி கோகுலம் சென்றார். குழந்தையை மாற்றிக் கொண்டு, பெண் குழந்தையை கொண்டு வந்தார்.

வசுதேவர் குழந்தையை மாற்றுதல்...
வசுதேவர் குழந்தையை மாற்றுதல்…

சிறை வாசல் அடைத்துக் கொண்டது; காவலர்கள் கண்விழித்தெழுந்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதே மறந்து போயிற்று. வசுதேவருக்கும், தேவகிக்கும் கூடத்தான்.

காலையில் தேவகிக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டு வந்த கம்சன், பெண் குழந்தையைப் பார்த்ததும் வியப்படைந்தான். ஆண் குழந்தைதானே பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணியவன். இறுதியில் எந்தக் குழந்தையாக இருந்தாலும் அதை அழித்து விடுவது என்ற முடிவில், பெண் குழந்தையை வாளால் வெட்ட ஓங்கினான். ஆனால் அந்தக் குழந்தை மேல் நோக்கி பறந்தது. துர்க்கையாக வடிவெடுத்தது. (பாகவதத்தில் இவளுக்கு பெயர் யோக மாயை.) “ஏ! கம்சா! உன்னைக் கொல்லப்போகிறவன், வேறொரு இடத்தில் பத்திரமாக இருக்கிறான். உரிய நேரத்தில் அவன் உன்னை அழிப்பான்” என்று கூறி மறைந்தது.

இது தான் கிருஷ்ண ஜனனத்தில் உள்ள அவதார சூட்சுமம்.

*****************************

சகல சௌபாக்கியங்களை தரும் ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்!

கிருஷ்ணர் பிறக்கும்போது பூமி எப்படி உணர்ந்ததாம் தெரியுமா?

“கிருஷ்ண ஜனனத்தின் போது சோபனங்கள் சொரிந்தன. ரோகிணி நட்சத்திரம் உதயமாயிற்று. பரிபூரண சந்திரன் உலகிற்க்கெல்லாம் மகிழ்ச்சியை வாரித் தருவது போல, கிருஷ்ண ஜனனத்தின் போது திக்குகள் எல்லாம் நிலவின் பிரகாசத்தால் ஒளிபெற்று விளங்கின. வானில் நட்சத்திரங்கள் எப்போதுமில்லாத அளவுக்கு ஜோதியுடன் திகழ்ந்தன. உத்தமர்கள், நல்லோர்கள், சாதுக்கள் ஆகயோரின் உள்ளம் பூரிப்படைந்தது.

எங்கும் மங்கள காரியங்கள் நடந்தன. மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் தணிந்தன. செடி கொடிகள் பூத்துக் குலுங்கின. மரங்கள் இன்சுவை கனிகளை தந்தன. தென்றல் நறுமணம் கமழ்ந்து வீசியது. வேள்விச் சாலையில் அந்தணர்கள் வளர்த்த அக்னி பிரகாசமாக சுடர்விட்டு எரிந்தன. ஆறுகள் பெருக்கெடுத்து அதே நேரம் வெள்ளமாக இல்லாமல் நிர்மலமாக ஓடின. சமுத்திரங்கள் தங்கள் அலைகளின் மூலம் எழுப்பிய பேரொலிகள் மங்கலப் பேரிகைகள் போல ஒலித்தன. கந்தர்வர்கள் கானம் இசைக்க, ரம்பை, ஊர்வசி, மேனகி போன்ற தேவகன்னியர் நடனமாடினர். ஆகாயத்திலிருந்து பூமி மீது தேவர்கள் பூமாரிப் பொழிந்தனர்.”

*****************************

“இந்த பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள் எல்லாம் அருமையாக தத்ரூபமாக இருக்கிறதே… ஏதோ 3D பொம்மைகள் போல இருக்கின்றனவே… ஏதேனும் கண்காட்சியா? எங்கே இவை இருக்கின்றன ? நாங்கள் பார்க்கலாமா?” என்கிற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.

“நிச்சயம் பார்க்கலாம்…! உங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்களை குதூகலப்படுத்தலாம். இது மட்டுமல்ல, கிருஷ்ணாவதாரம் தொடர்புடைய பல மாடல்களை பார்க்கலாம். மேலும் ராமவதாரம், ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு தொடர்புடைய அற்புதமான 3 D மாடல்களை பார்க்கலாம்!”

எங்கே, எப்படி?

விரைவில் விரிவான பதிவாக….!

RIGHTMANTRA ARTICLES ARE THE RESULT OF HARDWORK AND ARE COPYRIGHTED. PLEASE USE THE SHARE TOOL AT THE BEGINNING AND END OF THE ARTICLE TO SHARE TO YOUR CIRCLE. COPY PASTING THE CONTENT IS PROHIBITED.

=======================================================

We need your help…

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

=======================================================

Also check :

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் சில உண்மைகள, சில விளக்கங்கள் – கிருஷ்ண ஜெயந்தி SPL 1

நாமசங்கீர்த்தனத்தின் பெருமையும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமையும்!

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும் மகா பெரியவாவும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!

நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

குன்றத்தூர் கோவிந்தனின் கதை!

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் சிறப்பும் பிரமிக்க வைக்கும் பாராயண பலன்களும்!

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *