இவர் வேள்விகளை (யாகங்கள்) தவறாமல் நடத்தி வந்தார். அப்படி நடத்தி வந்த வேள்விகள் பலவற்றிலும் ‘சோம யாகம்’ தான் மிக மிகச் சிறந்தது. எண்ணற்ற சோம வேள்விகளைச் செய்தமையால் தான் இவருக்குச் சோமாசி மாறர் என்ற பெயரே உண்டாயிற்று.
எப்போதும் பிறைசூடும் பித்தனையே நினைத்து வாழ்ந்து வந்தவருக்கு ஒரு முறை ஒரு ஆசை அரும்பியது. தாம் வேள்வித் தீயில் அக்னி பகவானுக்கு சமர்பிக்கும் அவிர்பாகத்தை அந்த சிவபெருமானே நேரில் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும், அதை தாம் பார்க்கவேண்டும் என்று உவகை கொண்டார். ஆனால் நான்முகனும் திருமாலுமே அடிமுடி காணாமல் நின்றவனாயிற்றே அவன். இவருக்கு அது சாத்தியமா?
அடியாருக்கு தொண்டு செய்வது மூலம் அது சாத்தியமே என்பதை உணர்த்தியது தான் இவரது வரலாற்றன் சிறப்பு.
தனது பேராவலை பூர்த்தி செய்ய சோமாசி மாறனார் நல்ல தருணம் பார்த்து வந்த நிலையில் இறையருளால் நம் நம்பி அரூரர் சுந்தரரின் நட்பு கிடைத்தது. சுந்தரருக்கும் ஈசனுக்கும் உள்ள நட்பை அறிந்துகொண்டவர், சுந்தரர் மனது வைத்தால் இதை செய்ய இயலும் என்று கருதினார். எனவே சுந்தரரின் மனதில் இடம் பிடித்து பின்னர் தன் காரியத்தை சாதித்துக்கொள்ள விரும்பினார்.
இதனிடையே ஒரு முறை அடியார்களுக்கு அமுது செய்வித்தபோது, சுந்தரருக்கு தூதுவளைக் கீரைக் கூட்டு என்றால் மிகவும் பிரியம் என்று அறிந்துகொண்டார்.
தூதுவளைக் கீரைக்கு தட்டுப்பாடு நிலவிய காலம் அது. எனவே எப்பாடுபட்டாவது தூதுவளை கீரையை சுந்தருக்கு தினமும் அளித்து அதன் மூலம் நட்பை வளர்ப்பது என்று முடிவு செய்தார்.
அதன் படி தினமும் ஆற்றுக்கு நீராடப் போகும்போது, மறுகரைக்கு நீந்திச் சென்று, அங்கு வளர்ந்திருந்த தூதுவளை கீரைகளை பறித்து வந்து பரவை நாச்சியாரிடம் கொடுத்து சுந்தரருக்கு சமைத்துப் போடும்படி கேட்டுக்கொள்வார். தூதுவளை கீரை தட்டுப்பாடு மிகுந்த நாட்களிலும் தனது வீட்டில் மட்டும் தினசரி சமையலில் அது இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்ட சுந்தரர், பரவை நாச்சியாரிடம் விஷயத்தை வினவ அது முதல் சுந்தரரது அன்புக்குப் பாத்திரமானார் சோமாசிமாற நாயனார்.
இதனிடையிய ஒரு நாள், சுந்தரரிடம், இறைவனே தமது யாகத்திற்கு எழுந்தருளி அவிர்பாகத்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிற தனது விருப்பத்தை தெரிவித்து, அதற்கு இறைவனிடம் பேசி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சுந்தரர் இவரது வேண்டுகோளை கேட்டு சற்று திடுக்கிட்டாலும், இவரது தொண்டைப் பற்றி அறிந்தவராதலால் “தியாகேசரிடம் பேசி இதற்கு ஆவன செய்கிறேன். நிச்சயம் உமது விருப்பம் நிறைவேறும்!’ என்று அருளிய சுந்தரர் சொன்னது போலவே அதுகுறித்து இறைவனிடம் பதிகம் ஒன்றை பாடி விண்ணப்பித்தார்.
நண்பனின் கோரிக்கையை இறைவன் மறுப்பானா? அதுவும் பதிகம் பாடி இறைவனை மயக்குவதில் வல்லவராயிற்றே நம் நம்பி ஆரூரர். அவரது விண்ணப்பத்தை ஏற்று சோமாசி மாற நாயனாரது யாகத்தில் அவிர்பாகம் பெற்றுக்கொள்ள நேரில் வருவதாக இறைவன் அருளினார்.
ஆனால், எந்த விஷயத்தை நம் பெருமான் நேரடியாக செய்திருக்கிறார்? ஏதாவது ஒரு நாடகமாடி, பக்தர்களை சோதித்து பின்னர் தானே நினைத்ததை செயல்படுத்துவார்.
எனவே கூடவே ஒரு நிபந்தனையும் விதித்தார் தியாகேசர். “வேள்வியில் எனது பாகத்தைப் பெற எந்த உருவத்தில் வேண்டுமானாலும் வருவேன்” என்றார்.
ஒரு நன்னாளில் சோமாசி மாறனார் யாகத்தை ஏற்பாடு செய்து, வேத விற்பன்னர்கள் சூழ வேள்வி நடத்திக் கொண்டிருந்தார்.
அதற்குள் வேள்வியில் இறைவனே நேரடியாக வந்து கலந்துகொள்ளப்போகிறார் என்ற செய்தி கசிந்து பொதுமக்களும் நடப்பதை காண அங்கு திரளாகக் கூடியிருந்தனர்.
இறைவன் எப்போது வருவார், எப்படி இருப்பார் என்று அறிந்து கொள்ள அனைவரும் ஆவலாக இருந்தனர்.
அப்போது, சண்டாளன ஒருவன் நான்கு நாய்களைக் கையில் பிடித்தபடி வேள்விச் சாலைக்குள் நுழைந்தான்.
அவனுடன் அவன் மகன்கள் இருவர் மற்றும் ‘கள்’ குடத்தை சுமந்து வரும் மனைவி என அந்த சூழ்நிலைக்கு பொருத்தமில்லாத ஒரு குடும்பம் வேள்விச் சாலைக்குள் நுழைவதை கண்ட வேதியர்கள் அவ்விடத்தை விட்டு வெறுப்போடு அகன்றனர்.
சோமாசி மாறனார் இவர்களை கண்டு முகம் சுளிக்கவில்லை. ஆனால், இத்தனை அரும்பாடுபட்டு நடக்கும் யாகம் தடைபடுவது மட்டும் அவரை சஞ்சலப்படுத்தியது. எனவே சோமாசி மாறனார் சற்று கண்கள் மூடி விக்னங்களை அகற்றும் விநாயகப் பெருமானை தியானிக்க, சண்டாளனுடன் வந்த அவன் மகன்களுள் ஒருவன் சோமாசி மாறனாரை நோக்கி வந்திருப்பது வேறு யாருமல்ல… சர்வேஸ்வரனே என்பதை கண்களால் ஜாடை காண்பித்து குறிப்பால் உணர்த்தினார்.
சோமாசி மாறனார், அக்குறிப்பை உணர்ந்துகொண்டதோடு, தமக்கு அதை உணர்த்தியது விநாயகப் பெருமான் என்பதையும் உணர்ந்தார்.
இதையடுத்து சண்டாளனை வணங்கி வரவேற்றதுடன், அவிர்பாகத்தையும் அவனுக்கு அன்போடு அளித்தார்.
மறுகணம் அனைவரும் வியக்கும்படி யாகசாலையில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. சண்டாளன் பிடித்திருந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்களாக மாறின. சிவபெருமான், அன்னை உமாதேவியோடும், மைந்தர்கள் விநாயகப் பெருமான், முருகப் பெருமானோடும் இடப வாகனத்தில் சோமாஸ்கந்த மூர்த்தியாக அங்கு காட்சியளித்தார். வானோர் பூமாரி பொழிந்தனர். தேவ துந்துபிகள் முழங்கின.
இந்தச் சம்பவம் நாகை மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ள திருமாகாளம் என்ற தலத்தில் நிகழ்ந்த நாள் இன்று. (வைகாசி ஆயில்யம்). திருமாகாளத்தில் சோமாசிமாற நாயனாரது திருநட்சத்திரமான வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திர திருநாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
திருமாகாளம், அம்பர் ஆகிய தலங்களுக்கு நடுவே சோமாசிமாற நாயனார் யாகம் நடத்திய யாகசாலையும், அவருக்கு, ‘வந்திருப்பது இறைவனே’ என்பதை உணர்த்தி அருளிய விநாயகர் குடிகொண்டிருக்கும் கோயிலும் உள்ளன.
அன்று தூதுவளைக் கீரை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி, சண்டாளன் கோலத்தில் வேள்விச் சாலைக்கு வரும் தியாகேச பெருமான் அவிர் பாகம் பெறுதல் ஆகிய வைபவங்கள் நடைபெறும். அன்று இரவு, சோமாசி மாற நாயனார் தன் மனைவியுடன் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருள வீதியுலா நடைபெறும்.
மறு நாள் மக நட்சத்திரத்தன்று வேள்விச் சாலையில் இருந்து சிதறி ஓடிய வேத விற்பன்னர்களுக்கு இறைவன் காட்சி தரும் வைபவமும், அம்பன் அம்பாசுரன் ஆகியோரை வதைத்த பாவம் தீர… காளிதேவி, சிவனாரை வழிபடும் வைபவமும் நடைபெறும். இத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவின்போது திருவாரூர் தியாகேசர் இங்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.
(நட்சத்திரங்கள் ஒரு நாள் முன்னர் பின்னர் மாறிவருவதுண்டு. அதையொட்டியே இந்த வைபவங்கள் நடைபெறும்!).
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே!
நமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு
பிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.
1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.
2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.
3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்!
4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.
5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.
6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.
7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.
ஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன?
நீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று அரிய சிவதொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.
==========================================================
ஒரு முக்கியமான விஷயம்!
நமது பிரார்த்தனை கிளப்புக்கு மின்னஞ்சல் மூலம் வந்த கோரிக்கைகள் சிலவற்றை பிரசுரிக்காமல் நிறுத்திவைத்திருக்கிறோம். அதில் போதிய விபரங்கள் இல்லை. பெயரை வெளியிடலாமா வேண்டாமா என்று பலர் சொல்லவேயில்லை. விபரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினால் பதில் இல்லை. அலைபேசியில் விபரங்கள் கேட்கலாம் என்றால் அலைபேசி எண்ணை தரவில்லை. ஓரிரண்டு வரிகளில் அடிப்படை தகவல்கள் இன்றி கோரிக்கைகள் வந்துள்ளன. இவற்றை எப்படி பிரசுரிப்பது? பிரார்த்தனை கோரிக்கைகளை படித்து பிரார்த்தனை செய்யும் நம் வாசகர்கள் சம்பந்தப்பட்ட கோரிக்கை அனுப்பியவர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள். எனவே கூடுதல் விபரங்கள் இருந்தால் தான் நினைவில் வைத்திருந்து பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்திக்க முடியும். நமது நேரம் இதில் பெருமளவு வீணாவதால் அலைபேசி எண் இன்றி வரும் எந்த மின்னஞ்சலும் இனி பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
நன்றி!
– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
M : 9840169215 | E : editor@rightmantra.com
நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…
முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
==========================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் திருமக்கோட்டை கோவிலை சேர்ந்த திரு.முருகேச ஓதுவார் அவர்கள்.
நமது சமீபத்திய மன்னார்குடி பயணத்தின் போது மன்னார்குடியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தோம்.
இந்த கோவில் மிக மிக தனித்துவம் வாய்ந்த அற்புதமான பழம்பதி. இது பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம்.
அக்கோவிலுக்கு சென்றிருந்தபோது அங்கு திரு.முருகேச ஓதுவாரை சந்தித்தோம். பொதுவாக ஓதுவார்களை கோவிலில் சந்தித்தால், அவர்களுடன் அளவளாவி, நாம் சுவாமியை தரிசிக்கும்போது ஓதுவார்களை பதிகம் பாடச் சொல்லி கேட்டுக்கொள்வோம்.
ஞானபுரீஸ்வரரை நாம் தரிசிக்க சென்றபோது, குருக்கள் இல்லை. சற்று நேரத்தில் வந்துவிடுவார் என்று சொன்னார்கள்.
அதுவரை ஓதுவாரிடம் பேசிக்கொண்டிருப்போம் என் அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம்.
நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திரு.முருகேச ஓதுவார் நம்மை ஒவ்வொரு சன்னதியாக அழைத்துச் சென்று பதிகம் பாடி, பரவசப்படுத்தினார்.
“எமக்கு அர்ச்சனை பாட்டேயாகும். எனவே எம்மை பாடுக” என்றான் இறைவன் சுந்தரரிடம். எனவே இறைவனை தரிசிக்கும்போதேல்லாம் பதிகம் பாடி தரிசிக்கவேண்டும். (இது பற்றி விரிவாக ஒரு பதிவை அளிக்கிறோம். அது உங்களுக்கு உதவியாக இருக்கக்கூடும்.).
குருக்கள் வந்த பிறகு அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, சுவாமியை தரிசித்து பின்னர் அனைவரையும் நம் தளம் சார்பாக கௌரவித்தோம்.
திரு.முருகேச ஓதுவார் (56) அவர்களின் குடும்பத்தினர் தான் ஞானபுரீஸ்வரருக்கு பரம்பரை பரம்பரையாக ஓதுவாராக தொண்டாற்றி வருகிறார்கள். இவரின் தந்தை சாமிநாத ஓதுவார், பாட்டனார் திரு.விஸ்வநாத ஓதுவார் ஞானபுரீஸ்வரருக்கு என இவர்களின் பரம்பரையே பல நூற்றாண்டுகளாக வழி வழியாக திருமக்கோட்டையில் தான் வசித்து வருகின்றனர்.
சுதந்திரத்துக்கு பிறகு இக்கோவில் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 70 களில் இவரது தந்தை சாமிநாத தேசிகருக்கு இங்கு 25 காசுகள் சம்பளம். கோவில் சார்பாக குடியிருக்க அரை கிரவுண்டு நிலம் கொடுத்தார்கள்.
பரம்பரை பரம்பரையாக தேவாரம் கற்றுவந்த குடும்பம் என்பதால் இவரும் 1976 ஆம் ஆண்டு இவர் தருமபுரம் வேலாயுத ஓதுவாரிடம் சென்று முறைப்படி தேவாரம் கற்றுக்கொண்டார்.
1982 இல் இவரது தந்தை தனுர் மாதப் பிறப்புக்கு முந்தைய தினம் இறைவனடி சேர்ந்தவுடன், தந்தை விட்ட பணியை தொடர இவர் வந்தார். அவ்வளவு தான். தற்போது இவருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூ.1000/-.
ஓதுவார்களுக்கு எல்லாம் பெரிய ஊதியமில்லை. ஏதோ துளியூண்டு நிலமும் சொற்ப சம்பளமும் தான். எனவே தானும் ஓதுவாராக தொண்டாற்றவேண்டுமா என்று இவர் தயங்கியபோது இவரது தாயார் வேலம்மாள் தான் பரம்பரை கடமையை நினைவூட்டி, இவர் அவசியம் ஞானபுரீஸ்வரருக்கு தொண்டாற்ற வேண்டும், அது ஒன்றே பிறவிப் பயன் என்றும் கூறினார். (அந்த தாய்க்கு நம் நமஸ்காரங்கள்.)
ஞானபுரீஸ்வரரை தரிசித்தவுடன் அங்கே ஆலயத்திலேயே அவரை அமர வைத்து மீண்டும் தேவாரம் பாடச் சொல்லி கேட்டோம். இறுதியில் இவரை குருக்கள் மற்றும் சக அடியார்கள் முன்னிலையில் கௌரவித்தோம். நம்மால் இயன்ற சிறு தட்சிணையும் கொடுத்தோம்.
அப்போது இவரிடம் நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி, இந்த வாரம் எங்கள் வாசகர்களுக்கு நீங்கள் தான் ஞானபுரீஸ்வரரிடம் பிரார்த்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
நம்மைப் பற்றி விசாரித்து தெரிந்துகொண்டவர் நம்மிடம் அருள்வாக்கு போல ஒன்றை கூறியிருக்கிறார். மனதிற்கு சற்று தைரியமும் நம்பிக்கையும் கொடுத்துள்ளது. தேவாரம் பாடும் நா அல்லவா?
ஓம் நமச்சிவாய!
==========================================================
இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்:
இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருக்கும் இருவருமே தளத்திற்கு புதியவர்கள் தான். முகநூல் மூலம் இவர்களுக்கு நமது பிரார்த்தனை மன்றத்தை பற்றி தெரிய வந்திருக்கிறது. இருவரது பிரச்னையும் வெவ்வேறு பரிமாணங்களை உடையது. உள்ளத்தை உருக்கும் ஒன்று. நிச்சயம் இறைவனால் தான் தீர்க்கமுடியும்.
முதல் கோரிக்கையை நமக்கு மின்னஞ்சலிலேயே அனுப்பிவிட்டனர். இருந்தாலும் தெளிவான விபரங்கள் இல்லாததால் அலைபேசி எண்ணை கேட்டிருந்தோம். எண் கிடைத்தவுடன் நேற்று தொடர்பு கொண்டு திரு.குமார் அவர்களிடம் பேசினோம். பேசும்போதே அழுதுவிட்டார். அவருக்கு ஏற்பட்டுள்ள நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது. ஒரே மகளை இழந்து வாடும் இத்தம்பதிகளுக்கு இறைவன் தான் துணையிருக்க வேண்டும்.
அடுத்த பிரார்த்தனை உள்ளத்தை உருக்கும் ஒன்று. பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று சும்மாவா சொன்னார்கள். இப்படியெல்லாம் ஒரு பிரார்த்தனை இடம்பெறுகிறது நமக்கு வருகிறது என்றால் நாம எந்த மாதிரியான ஒரு சமூகத்தில் வாழ்கிறோம்? அந்த தாய் மனம் புண்படக்கூடாது என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறோம். அவரது ப்ரைவசியை காக்கவேண்டி, பெயர் வெளியிடாமல் அவரது கோரிக்கையை சமர்பித்துள்ளோம்.
பொதுப் பிரார்த்தனை திரு.முருகேச ஓதுவார் அவர்களே கூறியது. பல அரிய விஷயங்களை கூறியிருக்கிறார். அவசியம் பிரார்த்தனை செய்து, நீங்களும் பின்பற்றி பலனை அடையவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
==========================================================
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
(1) மகளை இழந்து தவிக்கும் குடும்பம்!
(நம்மிடம் அலைபேசியில் கூறியபடி)
சார் வணக்கம். என் பெயர் குமார் (வயது 63). என் ஒரே மகளை (சபிதா குமார்) படிக்க வைத்து நல்ல வரன் பார்த்து மணமுடித்துக்கொடுத்தோம்.மாப்பிள்ளை யூ.எஸ்.ஸில் இருந்தார். பெண்ணும் திருமணம் முடிந்து யூ.எஸ். சென்றுவிட்டார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து அக்குழந்தைக்கு மேக்னா என்று பெயர் சூட்டினார்கள்.
சென்ற வருட மத்தியில் எனக்கு மிகப் பெரிய ஹார்ட் அட்டாக் வந்து மருத்தமனையில் அட்மிட் ஆனேன். எனக்கு ஸ்டென்ட் வைத்து ஒரு வழியாக காப்பாற்றினார்கள். என்னை பார்க்க என் மகள் யூ.எஸ்.ஸிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு வந்தாள்.
நான் குணமடைந்த நிலையில், அவளுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவளுக்கு GALL BLADDER STONE கண்டுபிடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்தாக என்றார்கள். முதலில் ஒரு மருத்துவமனையில் செய்து ஆப்பரேஷன் செய்தோம். முன்னேற்றம் இல்லை. அடுத்து ஒரு மருத்துவமனையில் சேர்த்தோம். சிகிச்சை பலனளிக்காமல் MULTIPLE ORGAN FAILURE ஏற்பட்டு திடீரென எங்களைவிட்டு போய்விட்டாள். சென்ற வருடம் செப்டம்பர் 9 ஆம் தேதி யூ.எஸ்.திரும்புவதற்கு ரிட்டர்ன் டிக்கட் எடுத்திருந்தால். ஆனால், செப்டம்பர் 8 அன்று அவளது அஸ்தி கரைக்கப்பட்டுவிட்டது. (உடைந்து அழுகிறார்.)
இந்த அதிர்ச்சியில் இருந்து எங்கள் குடும்பம் இன்னும் மீளவில்லை. ஒரே மகளை இழந்து, மனஅமைதி இல்லாமல் நடைபிணமாக வாழ்ந்துவருகிறோம். எங்கள் உடல்நலம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் காலம் முடிந்துவிட்டது. எனவே எங்களைப் பற்றி கவலையில்லை. எங்கள் பேத்தியை பற்றி நினைத்தால் தான் கவலையாக உள்ளது. பெண்குழந்தை. இரண்டே வயது தான் ஆகிறது. திணறி தவிக்கிறாள் தற்போது எங்கள் மாப்பிள்ளை யூ.எஸ். ஸிலிருந்து பெங்களூர் வந்துவிட்டா. அவர்கள் வீட்டில் தான் குழந்தை உள்ளது. தாயில்லா அக்குழந்தை நல்ல முறையில் வளரவேண்டும்.
எங்களுக்கு இருக்கும் ஒரே பிரார்த்தனை அது தான். எங்கள் பேத்தி மேக்னா நல்லபடியாக வளர்ந்து அவளுக்கு என்று ஒரு நல்ல எதிர்காலம் அமைந்தால் போதும்.
எங்கள் பேத்திக்காகவும், மகளை இழந்து வாடும் எனக்காகவும் என் மனைவிக்காகவும், மற்றும் மருமகனின் குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்யவும்.
எங்களுக்கு தேவை ஆறுதல் ஒன்று தான். அதை இறைவனால் தான் அளிக்கமுடியும்.
நன்றி.
கண்ணீருடன்…
– திருமதி..ஜெயலக்ஷ்மி குமார் & குமார்
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 28.
(2) மகன் எங்களுடன் பேசவேண்டும்! பெற்ற வயிறு குளிர வேண்டும்!!
சுந்தர் அவர்களுக்கும் ரைட்மந்த்ரா வாசகர்களுக்கும் என் வணக்கம்.
நாங்கள் திருச்சியில் வசித்து வருகிறோம். எங்கள் மகனுக்கு சென்ற ஆண்டு திருமணமாகி யூ.எஸ். சென்றுவிட்டான். எங்களுக்குள் எந்த சச்சரவோ சண்டையோ இல்லை. நல்லமுறையில் அவன் விரும்பியபடியே திருமணம் செய்துவைத்தோம்.
ஆனால் யூ.எஸ். சென்றவன் எங்களை மறந்தேவிட்டான். என்னிடம் அவன் பேசி மாதக் கணக்காகிறது. மனம் இதனால் மிகவும் வலிக்கிறது. பிள்ளையுடன் பேச வேண்டும் போல இருக்கிறது. எனக்கு ஒரே ஆறுதல் அவன் எங்களுடன் மாதம் ஒரு முறையாவது பேசுவது தான். ஆனால் அதற்கு கூட எங்களுக்கு கொடுப்பினை இல்லை. இதனால் நானும் என் கணவரும் சொல்லொண்ணா வேதனையில் இருக்கிறோம்.
அவன் சந்தோஷமாக நிம்மதியாக இருந்தாலே எங்களுக்கு போதும் வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம். எங்களுடன் அடிக்கடி பேசவேண்டும். அதை மட்டும் தான் நான் இறைவனிடம் வேண்டுகிறேன்.
நன்றி,
பெயர் வெளியிட விரும்பாத ஒரு வாசகி
* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.
** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.
==========================================================
பொதுப் பிரார்த்தனை!
அனைவரும் தேவாரம் கற்றுக்கொள்ளவேண்டும், தவறாமல் ஆலய தரிசனம் செய்ய வேண்டும்!
இந்த வார பொதுப் பிரார்த்தனையை தலைமை ஏற்கும் முருகேச தேசிகர் அவர்களே கூறியிருக்கிறார்.
மக்கள் மத்தியில் இப்போதெல்லாம் பக்தி குறைந்துவிட்டது. ஆலயங்களுக்கு செல்வதேயில்லை. நூறாண்டுகளுக்கு முன்னர் வசதி வாய்ப்புக்கள் தகவல் தொடர்புகள் இப்போது போல இல்லாமல் இருந்த நிலையிலும் மக்கள் ஆலயங்களுக்கு தவறாமல் தினசரி சென்று வந்தனர். அதனால் அவர்கள் மகிழ்ச்சியோடு மனநிம்மதியோடு வாழ்ந்தனர். ஆனால் இப்போது?
வாரத்திற்கு வெள்ளி மற்றும் திங்கள் என இரண்டு நாட்களாவது அனைவரும் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசிக்கவேண்டும்.
பிரதோஷ வேளையில் சுவாமியை தரிசிப்பது மிகவும் விசேஷம். ஒருவேளை உத்தியோகம் மற்றும் இதர கமிட்மெண்ட்ஸ் காரணமாக பிரதோஷ வேளையில் தரிசிக்க முடியாவிட்டாலும் மாலை ஏழு மணிக்கு தரிசிக்கவேண்டும். இதன்மூலம் அளப்பறி பலன்கள் உண்டு.
அதே போல அமாவாசை அன்று இரவு எட்டு மணிக்கு (அர்த்த ஜாம பூஜை) சிவனை தரிச்ப்பது மிகவும் நல்லது. இதனால் நோய்நொடிகள் தீரும். யாரும் எந்த கெடுதியும் செய்யமாட்டார்கள். தொடர்ந்து குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலம் குன்றி அவதிப்படுபவர்கள் அமாவசை அர்த்தஜாம பூஜை சிவதரிசனம் செய்தால் அவர்கள் பிரச்னை தீரும். அமாவாசை சிவதரிசனம் பித்ருக்களை சாந்தப்படுத்தும்.
“நிறைமாச தரிசனம், முழு மாச தரிசனம்” என்று சொல்வார்கள். அமாவாசை அன்று சிவனை தரிசித்தால் முழு மாதமும் தரிசித்த பலன் கிடைக்கும்.
அதே போல அனைவரும் தேவாரம் கற்றுக்கொள்ளவேண்டும். முழு தேவாரமும் இல்லையென்றாலும் சுவாமி, அம்பாள், பிள்ளையார், முருகன், நந்தி இவர்களுக்கு உண்டான ஒரு சில பாடல்களையாவது அனைவரும் கற்று ஆலய தரிசனத்தின் போது அப்பாடல்களை பாடி இறைவனை சேவிக்கவேண்டு. இவ்வழக்கம் ஏற்பட்டாலே பல பிரச்சனைகள் தீர்ந்து நாடும் வீடும் சுபிட்சமாக இருக்கும்.
அனைவருக்கும் இது குறித்த தெளிவும் அறிவும் ஏற்படவேண்டும்.
– இவ்வாறு முருகேச ஓதுவார் அவர்கள் கூறியிருக்கிறார்.
அவருக்கு நம் சிரம் தாழ்ந்த நன்றி!
இதுவே இம்மாத பொதுப் பிரார்த்தனை.
==========================================================
மகளை இழந்து வாடும் குமார் மற்றும் ஜெயலக்ஷ்மி தம்பதியினருக்கு மன அமைதியும் ஆறுதலும் கிடைக்கவும், அவர்களது பேரக்குழந்தை மேக்னா நல்ல முறையில் வளர்ந்து ஆளாகவும், மகன் தன்னிடம் பேசவில்லை என்ற வருத்தத்தை பகிர்ந்துள்ள தாய்க்கு அவரது மனக்குறை நீங்கவும் அவர்களின் மகன் அவர்களோடு பேசி மகிழவும் இறைவனை பிரார்த்திப்போம். திரு.முருகேச ஓதுவார் அவர்கள் கூறுவதை போல அனைவரும் தேவாரத்தில் ஒரு சில பாடல்களையாவது ஆலய தரிசனத்தின் போது ஓதி பயன்பெறவேண்டும். வாரத்தின் இரு நாட்களாவது அனைவரும் ஆலய தரிசனம் மேற்கொள்ளும் வழக்கம் வரவேண்டும். பக்தி மக்கள் மத்தியில் பெருகி, அறமும் இன்பமும் தழைக்கவேண்டும். இது தான் நமது இந்த வாரத்தின் பிரார்த்தனையின் சாராம்சம்.
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.முருகேச ஓதுவார்கள் அவர்களின் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : ஜூன் 12, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
==========================================================
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….
Our a/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
For more info : Click here!
==========================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
==========================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
==========================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E : editor@rightmantra.com | M : 9840169215 | W:www.rightmantra.com
==========================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131
==========================================================
சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : வில்லிவாக்கத்தை சேர்ந்த திருமதி.ஜெயா ரங்கராஜன் (61) அவர்கள்.
சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?
சென்ற வார ரைட்மந்த்ரா கூட்டுப் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற திருமதி.ஜெயா ரங்கராஜன் அவர்கள் அவர் வீட்டு பூஜையறையில் மகா பெரியவர் திருவுருவப் படத்திற்கு முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்தார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.
வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்!
==========================================================
[END]
தூதுவளை கீரை ரசம் பற்றிய செய்தி அருமை . சுந்தரர் சோமாசி நாயன்மாருக்கு வேண்டி எந்த பதிகம் பாடினார் .
இது குறித்த தகவல் கிடைக்கவில்லை. சுந்தரர் ஆயிரம் பதிகங்களுக்கு மேல் இயற்றினார் என்று கூறப்படுகிறது. ஆனால் நமக்கு கிடைத்தவை வெறும் நூறு தான்.