சுவாமி விவேகானந்தர் சொன்னது போல, அவரவர் உயரத்திற்கு தகுந்த பிரச்சனைகளை அவரவர் சந்தித்தே ஆகவேண்டும். அதிலிருந்து தப்பிக்கவே இயலாது. இன்று நமக்கு வரங்களை வாரி வாரி வழங்கும் மறைந்த அருளாளர்கள், ஞானிகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. அப்படியிருக்கும் போது மனிதர்கள் நாம் எம்மாத்திரம்?
அப்போது இப்படி பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டே தான் இருக்கவேண்டுமா? நிம்மதியாக வாழ வழியே இல்லையா என்றால்…. இருக்கிறது. நிச்சயம் இருக்கிறது.
நாம் ஏற்கனவே பல முறை கூறியிருக்கிறோம்… “எனக்கு ஒரு பிரச்னை” என்று சொல்வதற்கு பதில், “எனக்கு ஒரு சவால்” என்று சொல்லிப்பாருங்கள். வாழ்க்கை எப்படி மாறுகிறது என்று புரியும். (அட்லீஸ்ட் ஒருத்தராவது இதை ஃபாலோ பண்ணுங்கப்பா! இப்படி மாங்கு மாங்குன்னு எழுதுறதுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்!)
சவால்கள் உங்களை பட்டை தீட்டும், உங்களுக்குள்ளே இருக்கும் திறமையை வெளிக்கொண்டுவரும், உங்களை சுற்றி இருப்பவர்களை அடையாளம் காட்டும். உங்கள் வருவாய்க்கான வேறு புது ஆதாரங்களை காட்டும். பிரச்சனை தானாக நம்மைத் தேடி வரும்போது, “அதுவா நாமளா ஒரு கை பார்த்துவிடுவோம்” என்று முண்டா தட்டி கோதாவில் இறங்குவதே நல்லது.
இதற்காக பிரச்சனைகளை யாரும் தேடிப்போங்கள் என்று சொல்லவில்லை. பல பிரச்சனைகள் அதுவாகத் தானே நம்மை தேடி வருகின்றன. அப்படி நம்மை நோக்கி வந்தால், துவண்டுபோகாமல் அதை ஒரு சவாலாக ஏற்று தீர்க்க முயலவேண்டும்.
வென்றால் வெற்றி, தோற்றால் அனுபவம், அந்த அனுபவம் அடுத்த வெற்றிக்கு உரம் – இது தான் வாழ்க்கையின் ஒரே சூட்சுமம். பல நேரங்களில் வெற்றியை விட தோல்வி தான் விலைமதிப்பற்றது.
========================================================
Don’t miss these articles…
அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா?
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்!
========================================================
இன்றுவரை நாம் இதைத் தான் கடைப்பிடித்து வருகிறோம். நாம் சந்திக்கும் சவால்களை ஏற்றுக்கொண்டு அவற்றை தீர்க்க முயலும்போது, பல புது புது விஷயங்களை கற்றுக்கொள்கிறோம்.
இப்படி பிரச்சனை குறித்த உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டால், நிச்சயம் நீங்கள் சாதிக்கலாம். உங்கள் தோற்றம், பர்சனாலிட்டி என எல்லாமே மாறும்.
தோற்றம், பணம், உத்தியோகம் தருகிற ஆளுமையைவிட, இந்த ஆளுமை தான் மிக முக்கியம். அது நம் கைகளில் இல்லை. ஆனால், இது நம் கைகளில் உள்ளது.
சமீபத்தில் வாட்ஸ்ஆப்பில், இந்த பிரச்சனை குறித்த ஒரு ஃபார்வேர்டு அனாமதேயமாக வந்தது. படித்தபோது மிகவும் பிடித்திருந்தது. அதை உங்களிடையே பகிரும் முன், அதை உண்மையில் எழுதியவர் யார் எனக் கண்டுபிடித்து அவர் பெயரை பதிவில் அளிக்கவேண்டும் என்று முயற்சித்தபோது அதை எழுதியவர் திரு.என்.கணேசன், பிரபல ஆன்மீக எழுத்தாளர் என்று அறிந்துகொண்டோம். அவருக்கு உரிய ACKNOWLEDGEMENT கொடுத்து இங்கே தளத்தில் பகிர்ந்திருக்கிறோம். (ஒரு எழுத்தாளனின் வலி, இன்னொரு எழுத்தாளனுக்கு தானே புரியும்!)
இதைப் படித்த பின்னர் பிரச்சனை என்ற சொல்லை இனி நீங்கள் பயன்படுத்தமாட்டீர்கள் என நம்புகிறோம்!
நமக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த அந்த கட்டுரை பின்வருமாறு…!
**********************************************************
உங்களுக்கு பிரச்சனையா?
– திரு.என்.கணேசன், ஆன்மீக எழுத்தாளர்
பல வருடங்களுக்கு முன்பு ரீடர்ஸ் டைஜஸ்டில் ஒரு கட்டுரை படித்தேன். அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர் “நான் படித்த மிகப்பெரிய பாடம்” என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதி இருந்த கட்டுரை அது.
அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது. நடுக்கடலில் இருந்த ஒரு கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வேலைப் பளு அதிகம் இருந்த ஒரு நாள் வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ அவருக்கு கோபம் தாளவில்லை. நேராக தன் உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தினார். “முதலிலேயே என் பணிக்கு உதவியாளரை தரவில்லை. இப்போது இது போல் கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள். எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை(problem) தருகிறீர்கள்.” என்கிற ரீதியில் சுமார் கால் மணி நேரம் விடாமல் பொரிந்து தள்ளினார். அவர் பேசியதில் பிரச்சினை என்ற சொல் பல முறை உபயோகப்படுத்தப்பட்டது.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னார். “நீ பேசும் போது பிரச்சினை என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய். பிரச்சினை (problem) என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? உனக்கு முதுகுத் தண்டு முறிந்து போய் படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அது பிரச்சினை. உன் வீடு எரிந்து போய் இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து நீ நடுத்தெருவில் நின்றால் அது பிரச்சினை…. ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும் அல்லது சரி செய்யவே முடியாது என்கிற வகையில் வருவது மட்டுமே அது பிரச்சினை. இது போன்ற பிரச்சினைகள் மனிதனின் வாழ்க்கையில் ஓரிரண்டு வரலாம். வராமலும் இருக்கலாம்”.
“மற்றபடி நீ பிரச்சினை என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே அசௌகரியங்கள்(inconveniences). இது போன்ற அசௌகரியங்கள் வாழ்க்கையில் நிறைய வரும். அந்தந்த சமயத்தில் இவை பெரிதாகத் தோன்றும். ஆனால் மணிக் கணக்கிலோ நாட்கணக்கிலோ இவை சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியவை. பின்னாளில் யோசித்துப் பார்த்தால் அற்ப விஷயமாகத் தோன்றும். இப்போது ஆத்திரப்படும் உனக்கே ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில் இது அவ்வளவு பெரிய விஷயமாய் தோன்றாது.”
“நான் சொல்வதை நன்றாக நினைவில் வைத்துக் கொள். நமது வாழ்க்கை முழுவதும் எல்லாக் கட்டங்களிலும் இது போன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும். இதற்கெல்லாம் பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது!!!!”
அந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு எல்லாவற்றையும் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கத் துவங்கியதாய் அந்த அதிகாரி அந்தக் கட்டுரையில் பின்னாளில் எழுதினார்.
நம்மில் எத்தனை பேர் அசௌகரியங்களை பூதக்கண்ணாடி மூலம் பார்த்து அதற்குப் பிரச்சினை என்று பெயரிட்டு தேவைக்கும் அதிகமாக கொந்தளித்து, நிஜமாகவே பிரச்சினை ஆக்கி, மற்றவர்கள் மன அமைதியையும், நம் மன அமைதியையும் இழந்து அல்லல் படுகிறோம். பல சமயங்களில் நாம் அப்படிப்பட்ட ‘பிரச்சினை’யைக் கைவிடுவது எப்போதென்றால் அடுத்த ‘பிரச்சினை’ ஒன்று வரும் போது தான். ¶
==========================================================
We are waiting for your hand…
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
கழுதையை கட்டி வைத்த கயிறு நம்மை கட்டலாமோ?
வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக்
அலாவுதீனின் அற்புத விளக்கு செய்த வேலை!
உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?
ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)
எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
========================================================
[END]
மிக சரியான உண்மை ! சுந்தர்ஜி அவர்களே – நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது போல மகான்களும் சரி ,மற்றும் நாம்காணும் அவதார நாயகர்கள் ஸ்ரீ ராமரும் மற்றும் கிருஷ்ணரும் சந்திக்கும் பிரச்சனைகள் அல்ல சவால்கள் – விரித்து உணர்த்தும் ராமாயணமும் ,மகாபாரதமும் சொல்லுவது இதை தான் – பிரச்சனைகளை எதிர்கொள் .
நன்றி சுந்தர்ஜி
Dear SundarJi,
Very good eye opener to me.. will try to follow this.. no more problems only challenges!!!
Thanks,
Rgds,
Ramesh
சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் .
பிரச்னைக்கான புதிய மந்திர சொல் சவால் . மிக அருமையான பதிவு .
நமக்கு பிரச்சனை ஏற்படும் போது கால தாமதம் செய்வதால் பிரச்சனையின் அளவு குறையாது .அதை சவாலாக ஏற்று சரி செய்வதில் முனைப்பு காட்டுவதே புத்திசாலித்தனம் .
மிக அருமையான பதிவு சுந்தர் ஜி!
சுந்தர் சார்,
மிக அருமையான பதிவு. “எனக்கு ஒரு பிரச்னை” என்பதை “எனக்கு ஒரு சவால்” என்று சொல்லி பாருங்கள் என்பது மிக அருமை.
நன்றி.