நாளை மே 1, பசுமைக் காவலர், ‘மரங்களின் தந்தை’ நண்பர் முல்லைவனம் அவர்களின் பிறந்த நாள். அதையொட்டி இன்று காலை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகம் சென்று அவரை கௌரவித்து அவருடன் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் உரையாடினோம். ஒவ்வொரு ஆண்டும் நண்பர் முல்லைவனம் அவர்களின் பிறந்தநாளின் போது அவரை நம் தளம் சார்பாக கௌரவிப்பதை நாம் வழக்கமாக கொண்டிருக்கிறோம் என்பதை வாசகர்கள் அறிவீர்கள்.
நாம் ஏற்கனவே கூறியது போல, இன்றைக்கு சமூகத் தொண்டாற்ற, சேவை செய்ய பல விஷயங்களுக்கு பல மட்டங்களில் பலர் இருக்கிறார்கள். ஆனால் இந்த மரம் வளர்ப்பு, பசுமை பாதுகாப்பில் (GREEN SEGMENT) முல்லைவனம் அவர்கள் ஆற்றிவரும் பங்கை வேறு யாரும் ஆற்றமுடியாது. எந்தவித பொருளாதார பின்புலமோ, அரசியல் ஆதரவோ, ஆள் பலமோ இன்றி அவர் இதை சாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழல் மற்றும் பசுமைப் பாதுகாப்பில் அவர் இது வரை பல ஆண்டுகளாக செய்து வந்த பணிகளே அதற்கு அத்தாட்சி.
“மக்கள் இதே வேகத்தில் மரங்களை வெட்டிக்கொண்டும், மரங்களை நடாமலும் சென்றால் அடுத்த பத்து ஆண்டுகளில் கோடைக்காலத்தில் நாம் யாருமே வெளியே தலையைக் கூட காட்டமுடியாதபடி வெப்பமானது மிக மிக கடுமையாக இருக்கும். இது சென்னைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பொருந்தும். இதன் விளைவாக மக்களுக்கு தோல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தோன்றும்” என்று எச்சரிக்கிறார் திரு.முல்லைவனம்.
மரங்களின் என்ஸைக்ளோபீடியா ஏன் சுற்றுச்சூழலின் என்ஸைக்ளோபீடியா என்று கூட திரு.முல்லைவனத்தை குறிப்பிடலாம். அந்தளவு அவருடன் உரையாடும்போது மரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து நாம் பல விஷயங்களை தெரிந்துகொள்ளலாம்.
மரங்கள் போதுமானளவு பூமியில் இல்லை என்றால் வெப்ப கதிரியக்கம் அதிகரித்துக்கொண்டே செல்லும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, பூமி வறண்டுவிடும்.
வேப்பமரம், இயல்வாகை, இலுப்பை, பூவாரம், புங்கை, ஆலமரம், அரச மரம், மூங்கில் இவை வெப்பத்தை கட்டுப்படுத்தி குளிர்ச்சியை தரக்கூடியவை.
மழையைத் தருவது, மண்ணரிப்பைத் தடுப்பது, கோடையில் வீசும் அனல் காற்றினால் நிலம் பாலைவனமாவதை தடுப்பது, புயலின் வேகத்தை கட்டுப்படுத்தி பாதிப்பை குறைப்பது என மரங்கள் இயற்கையின் அருட்பெரும் கொடையாக மனிதனுக்கு விளங்குகிறது. மரங்களை தவிர்த்துவிட்டால் மனிதனின் வாழ்க்கை சிக்கலாகிவிடும்.
மரங்கள் மட்டுமே உலகில் சுயமாக உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன. நச்சு வாயுவான கரியமில வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று.
வீட்டிலும் வீட்டைச் சுற்றியும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் நாம் தூய்மையான காற்றை சுவாசிக்கலாம். நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் நம்மை தாக்கும் வெம்மையை கட்டுப்படுத்துவது மரங்கள் மட்டுமே.
இவரது TREEBANK சார்பாக இதுவரை தமிழகம் சேர்த்து நம் நாடு முழுவதும் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளின் எண்ணிக்கை 98 லட்சத்திற்கும் மேல். விரைவில் ஒரு கோடியை தாண்டும் என்று நம்பலாம்.
பள்ளி மாணவர்களுக்கு இவர் மரம் நடுவதை பற்றிய புரிதல் ஏற்படுத்துவது தற்போது இவரது முக்கியப் பணிகளில் ஒன்று.
அது பற்றி குறிப்பிடும்போது, “மாணவர்களுக்கு மரம் வளர்ப்பது மற்றும் மரங்களை பாதுக்காப்பதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களையும் இதில் ஈடுபட வைக்கிறோம். அதற்காக மாணவர்கள் தங்கள் பள்ளிநேரத்தை ஒதுக்கி அலைந்து திரிய வேண்டும் என்பதில்லை. நாம் சாப்பிட்டுவிட்டு குப்பையில் போடும் பழ விதைகள், காய்கறிக் கழிவுகளில் கிடைக்கும் விதைகள் மற்றும் வீணாகக் கூடிய விதைகள் என நம் அன்றாட வாழ்வில் காணும் அனைத்தையும் எப்படி பராமரித்து செடியாக்கி, மரமாக்குவது என்று சொல்லித் தருகிறோம்.”
“தங்கள் வீடுகளில் பயன்படுத்திவிட்டு குப்பையில் வீசி எறியும் காலி எண்ணெய் கவர்கள், பால் கவர்கள் என பயனற்று இருப்பவைகளையும், வீட்டில் சாப்பிட்டபின் குப்பையில் தூக்கி எறியும் எலுமிச்சை, சப்போட்டா, ஆரஞ்சு போன்ற பழங்களின் விதைகள், பலா மற்றும் மாங்கொட்டைகளையும் சேகரித்து பள்ளிக்கு எடுத்துவர சொல்லுவோம். தேவையில்லாத அந்த பால் கவர்களில் மண்ணைக் கொட்டி இந்த விதைகளை உள்ளே நட்டு பராமரிக்க கற்றுத் தருவோம். இந்த எளிமையான முறை மாணவர்களை கவரும். பின்னர் செடி முளைக்க தொடங்கியதும், முளைத்து வரும் மரக்கன்றுகளை குழந்தைகளின் பிறந்த நாள், அல்லது வேறு ஏதாவது விசேஷ நாட்களில் ஒருவொருக்கொருவர் பரிசளித்து மகிழச் செய்வோம். இது மாணவர்கள் மத்தியில் நன்கு ஒர்க் அவுட் ஆகக்கூடியது. தாங்களே வளர்த்து பராமரிப்பதால் பரிசளிப்பதால் அதை புறக்கணிக்க யாருக்கும் மனம் வராது. அடுத்தகட்டமாக அதை பூமியில் நட்டு பாதுகாக்க ஏற்பாடு செய்வோம்” என்கிறார் முல்லைவனம்.
ஒவ்வொரு விதைக்குளும் ஒளிந்திருப்பது விருட்சம் அல்ல ஒரு உலகம்!
“ஒவ்வொரு விதைக்குளும் ஒரு விருட்சம் ஒளிந்திருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒரு உலகமே ஒளிந்திருக்கிறது. ஏனெனில், ஒரு விதைச் செடியாக, மரமாகும்போது எத்தனையோ உயிர்களுக்கு, பறவையினங்களுக்கு புகலிடமாக இருக்கிறது. நிழல் தருகிறது. காய், கனிகள் தருகிறது. மழை தருகிறது. ஆக ஒவ்வொரு மரமும் ஒரு உலகம் என்றே சொல்வேன்.”
எங்களுக்கு மரம் வளர்க்க ஆசை, ஆனால் இடமில்லை என்று சொல்பவர்களுக்கு இவர் ஒரு நல்ல தீர்வை சொல்கிறார். “இட நெருக்கடி மிக்க இடங்களில் வசிப்பவர்கள் அசோக மரங்களை வளர்க்கலாம். இவை வெப்பத்தை ஈர்ப்பதுடன், உயரமாக வளரக்கூடியவை. சிறிய இடங்களில் கூட அந்த இடத்துக்கு எந்த பிரச்னையும் இன்றி இவை வளரும்.”
முல்லைவனம் அடுத்து கூறிய டிப்ஸ் விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்று : “நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகள், பல்வேறு ரசாயன உரங்களைப் பயன்படுத்துகின்றனர். அதில் விளையும் உணவுப் பொருட்களைச் சாப்பிடுபவர்களின் உடலுக்கு தீங்குதான் ஏற்படும். மாறாக விளை நிலத்தில் பூவரச மரங்களை வளர்ப்பதன் மூலம், எந்தவித செயற்கை உரங்களையும் நாம் சார்ந்திருக்க வேண்டியதில்லை. ஒரு ஏக்கருக்கு 2 பூவரச மரங்கள் இருந்தால் போதுமானது. இதன் இலைகளை விளை நிலத்தில் தூவி மண்ணோடு மக்கவைத்தால், சிறந்த உரமாக மாறிவிடும். இதன்மூலம், முன்பைவிட கூடுதல் விளைச்சல் கிடைக்கும்” என்றார்.
டிசம்பர் மாத மழை
சென்னையை மூழ்கடித்த டிசம்பர் மாத மழை வெள்ளத்தின்போது இவரும் இவரது மரவங்கி அமைப்பும் ஆற்றிய பங்கு மகத்தானது. மக்களின் பசியை தீர்த்தது, பல பள்ளிகளுக்கு சென்று கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்தது, அங்கன்வாடிகளுக்கு சென்று அங்கிருந்த மரங்களை கன்றுகளை காப்பாற்றி அந்த பகுட்பிகளை சுத்தம் செய்தது, உயிர்நீத்த பல மரங்களுக்கு உயிர்கொடுத்தது, விழுந்து முறிந்த மரங்களை பாதுக்காப்பாக அப்புறப்படுத்தியது, பல செடிகளை (மரக்கன்று) காப்பாற்றியது என விரிந்துகொண்டே செல்கிறது இவரது மழை வெள்ளப் பணி.
பேச்சினூடே முல்லைவனம் குறிப்பிட்ட ஒரு தகவல் நம்மை வியப்பிலாழ்த்தியது. புயல் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களினால் மரங்கள் விழும்போது, தானாகவே மறுபடியும் துளிர்த்துவிடுமாம். அதாவது இயற்க்கை சீற்றங்களால் இயற்கை என்றுமே அழியாது. இயற்கை என்றாவது பசுமைக்கு விரோதமாக நடந்துகொள்ளுமா என்ன?
ஆனால் மனிதர்களின் சுயநலத்தினால் மரங்கள் பாதிக்கப்பட்டு விழும்போது தான் மரங்கள் துளிர்ப்பதில்லையாம். உதாரணத்திற்கு மரங்களில் விளம்பரங்கள் செய்யவேண்டி ஆணியடிப்பது, மரங்களை சுற்றி மழை நீர் இறந்காதவாறு கான்க்ரீட் தளங்கள் பதிப்பது, மரங்களை கன்னாபின்னாவென்று வெட்டுவது, கிளைகளை முறிப்பது இப்படி.
நாளை (மே 1 ஞாயிறு) முல்லைவனம் அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கவுள்ளார். பல இடங்களில் தன் கைப்பட மரங்கள் நடவிருக்கிறார். அதுமட்டுமல்ல மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை தனது நண்பர்களுடன் சென்று அப்புறப்படுத்தவிருக்கிறார். நாமும் அவருடன் சென்று நம் கையால் ஒரு சில மரங்கள் நடவிருக்கிறோம். மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை பிடுங்கி அப்புறப்படுத்தவிருக்கிறோம். இந்த செயல் (மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை பிடுங்கி எறிவது) ஒன்றே போதும் நமது இந்தப் பிறவியை அர்த்தமுள்ளதாக்கிவிடும் என்று கருதுகிறோம். சிவாய நம!
இதுவும் கூட ஒரு வகையில் வழிபாடு தான். இயற்கையை காக்க நாம் செலவிடும் இந்த நேரம், இறைவனுக்காக செலவிடும் நேரத்தைவிட புனிதமானது! இன்றைய உலகிற்கு மிகவும் அத்தியாவசியமானதும் கூட!!
பி.கு. : நாம் பரிசளித்த சட்டையைத் தான் நாளை அவர் பிறந்தநாளையொட்டி அணியவேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டுள்ளோம்.
==========================================================
முல்லைவனம் அவர்களின் தொலைகாட்சி பேட்டி!
* நாளை (மே 1, ஞாயிறு) காலை ௧௧.௦௦ மணியளவில் மக்கள் தொலைகாட்சியில் திரு.முல்லைவனம் அவர்கள் பங்கேற்கும் ‘அழகிய தமிழ் மகன்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது. அதில் தனது பல்வேறு அனுபவங்களை பற்றி முல்லைவனம் அவர்கள் பகிர்ந்துகொள்கிறார். காணத் தவறாதீர்கள்!
==========================================================
மரங்களின் தந்தையை மரம் விட்டுக்கொடுக்குமா என்ன?
முல்லைவனம் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரது அலுவலகம் அமைந்திருக்கும் கட்டிடத்தின் பால்கனியையொட்டி காணப்பட்ட ஒரு பூவரசம் மரத்தை காட்டியவர், “இது நான் 2006 ஆம் ஆண்டு நட்டது. கீழே என் நண்பர் ஃபோட்டோகிராபர் ஒருவர் கடை வைத்திருக்கிறார். அவரது நிச்சயதார்த்தத்தை முன்னிட்டு அப்போது வைத்தேன். அப்போது எனக்கு அலுவலகம் என்ற ஒன்றே இல்லை. ஆனால், இங்கே என் அலுவலகம் அமைந்திருக்கும் சூழ்நிலையில், இந்த மரமே எனக்கு நிழல் தருகிறது” என்றார்.
வாவ்… எத்தனை இனிமையான விஷயம்… மரங்களின் தந்தையை மரம் விட்டுக்கொடுக்குமா என்ன?
அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த மரத்தில் பல நுட்பமான விஷயங்களை காட்டினார்.
மரத்தின் கிளைகளில் பூத்துக்குலுங்கிக்கொண்டிருக்கும் பூக்களை சுற்றி பல தேனீக்கள் வட்டமிட்டுக்கொண்டிருந்தன, அணில்கள் விளையாடிக்கொண்டிருந்தன, காக்கை குருவி உள்ளிட்ட பறவைகள் இளைப்பாறிக்கொண்டிருந்தன… ஒவ்வொரு மரமும் ஒரு உலகம் என்று அவர் சொன்னது எத்தனை உண்மை!
==========================================================
We are waiting for your hand…
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Don’t miss these articles:
ஒவ்வொரு மனிதனும் அவசியம் தீர்க்கவேண்டிய ஒரு முக்கியக் கடன்!
மரங்களின் தந்தை முல்லைவனம் – நம்மை வெட்கப்படவைக்கும் ஒரு நிஜ ஹீரோ!
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…
ஏட்டுச் சுரைக்காய் பசிக்கு உதவும்!
அங்கே புனித உடல் புதைக்கப்பட்டது – இங்கே கனவுகளில் ஒன்று விதைக்கப்பட்டது!
*****************************************************************
Also check :
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?
*****************************************************************
[END]
சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் . மே -1 உழைப்பாளர்கள் தினம் . இந்தநாளில் திரு முல்லைவனம் அவர்களின் பிறந்தநாள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் .
இந்த சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என விருப்பபட்டு 98 லட்சம் மரகன்றுகளை நட்டிருக்கிறார் என்பது பெருமைக்குரிய விஷயம் . மேலும் ஒவ்வரு ஆண்டும் நேரடியாக சென்று ஆசிரியர் ஊக்கம் கொடுத்து கௌரவித்து வருவது பாராட்டுக்குரியது .
திரு முல்லைவனம் அவர்கள் பெயரிலே ஒரு சிறப்பு இருப்பதால் சமுதாய வன காவலனாக இருந்து தமிழகத்தில் பசுமை புரட்சி செய்கிறார் போலும் .
பசுமை புரட்சி விவசாயத்திற்கு ஒரு நம்மாழ்வார் போல மரம் வளர்ப்புக்கு அய்யா முல்லைவனம் .
அவருடைய தொடர் முயற்சிக்கு நாம் என்றும் உறு துணையாக இருப்போம் .
அய்யா அவர்களுக்கு 2016 இல் அரசின் உயரிய கௌரவ விருதுகள் , பாராட்டுக்கள் நிச்சயம் கிடைக்க முருகன் துணையிருப்பான் .
அய்யா அவர்களின் தொலைபேசி எண் கொடுத்தால் நாம் அனைவரும் வாழ்த்தலாமே !!!
முந்தைய பதிவில் அவரது அலைபேசி எண்ணை தந்திருக்கிறேன். http://rightmantra.com/?p=24747