இந்த நூல் வீட்டில் இருப்பதே விசேஷம் தான். அந்தளவு மங்கள விஷயங்கள் அடங்கியிருக்கும் நூல்.
ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து இவ்வளவு விஷயங்களை தெரிந்துகொள்ள முடியுமா என்றே பிரமிப்பே ஒவ்வொரு முறையும் இந்த நூலை வாசிக்கும்போது நமக்கு ஏற்படுகிறது. இது வாழ்கை! இது தான் வாழ்க்கை!!
இன்று தமிழ்த் தாத்தாவின் நினைவு நாள் என்பதால் ‘என் சரித்திரம்’ நூலிலிருந்து சில முக்கியமான விஷயங்களை உங்களிடையே பகிரலாம் என்று நூலை படிக்க ஆரம்பித்தால், எதை விடுப்பது எதை எடுப்பது என்று முடிவு செய்யவே சில மணிநேரங்கள் ஆகிவிட்டது. மாதுளையின் முத்துக்கள் அனைத்தும் அற்புதம் எனும்போது அதில் சில முத்துக்களை மட்டும் எடுத்து எப்படி தருவதாம்?
இன்றைக்கு நாம் கல்வி என்கிற பெயரில், எல்.கே.ஜி. ஃபீஸ்ஸுக்கே லட்சங்களை கொட்டுகிறோம். ஆனால், அன்று (1865) கல்வி என்றால் என்ன என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு மாணவன் ஒரு நல்ல குருவைத் தேடி கண்டுபிடிக்க எத்தனை பிரயத்தனங்களை எடுத்துக்கொள்கிறான் என்று பாருங்கள். அந்த குருவின் தகுதி என்னவாக இருந்தது என்று பாருங்கள்…! அதற்கு உத்தரவு எங்கிருந்தெல்லாம் வந்தது என்று பாருங்கள்!!
அவர் குரு மீனாக்ஷி சுந்தர பிள்ளை அவர்கள் நடந்து வரும் அந்த பத்தியை நீங்கள் படிக்கும்போது, நீங்களும் எழுந்து நிற்கவேண்டும் என்று தோன்றும். அது தான் இந்த நூலின் சிறப்பு!!
மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை – மகாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை என்றே அறிஞர்களால் அழைக்கப்படுகிறார். குடந்தை தல புராணம் உள்ளிட்ட பல தல புராணங்கள் இவர் இயற்றியது தான். ‘சிற்றிலக்கியக் காலம்’ என்று கூறப்பட்ட இவரது காலத்தில் திருத்தலங்களின் வரலாற்றை விவரித்து ஏராளமான தல புராணங்கள் பாடினார். 19-ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றியவர் இவர்தான். புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ் நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள், எண்ணற்ற தனிப் புராணங்களை இயற்றியுள்ளார். பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் ‘பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்று புகழப்பட்டார். பெரியபுராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். இவரது படைப்புகள் அனைத்துமே செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இவர் இயற்றியதாகக் அறியவருகின்றது. இதுவரை அச்சில் வெளிவந்த இவரது நூல்கள் 75 ஆகும்.
இந்த பதிவைப் பொறுத்தவரை ஒவ்வொரு பத்தியும் ஒரு மாபெரும் பொக்கிஷம் தான். தயவு செய்து ஒரு வரியைக் கூட தவறவிடவேண்டாம்.
உ.வே.சா. அவர்களின் தந்தை திரு.வேங்கடசுப்பையர், ராமபிரானுக்கும் சிவபெருமானுக்கும் இடையே கொண்டிருந்த அந்த பக்தி, திருவிளையாடற் புராணத்தில் இவர் கயிறு போட்டு பார்த்தபோது வந்த உத்தரவு, குருவை தேடி மாயூரம் சென்றது, அவர் தந்தை கனவில் கிழவனும் கிழவியும் தோன்றியது… (அந்த கிழவனும் கிழவியும் யார்? அது தானே இந்த பதிவு!)
சென்ற பிப்ரவரி 19 அன்று உத்தமதானபுரம் சென்று திரு.உ.வே.சா அவர்களின் நினைவு இல்லத்தை நாமும் நண்பர் சிட்டியும் பார்வையிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தியது மற்றும் அங்கு பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டது குறித்த புகைப்படங்களும், நினைவு இல்லத்தில் எடுத்த பல்வேறு புகைப்படங்களும் இந்த பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவி 19 க்காக காத்திருக்கிறோம். ஆவலுடன்.
வேங்கடசுப்பையர் கனவில் தோன்றிய கிழவனும் கிழவியும் யார்?
– உ.வே.சா அவர்களின் ‘என் சரித்திரம்’ நூலிருந்து சில பக்கங்கள்
உத்தமதானபுரத்தில் எங்கள் நிலங்களை என் சிறிய தந்தையார் கவனித்து வந்தார். நான் அவ்வூரில் தங்கியிருந்த ஆறுமாத காலங்களில் அவருடன் வயற்காடுகளுக்குச் செல்வேன். புன்செய்களில் பயிரிட்டிருக்கும் செடி, கொடிகளைப் பாதுகாப்பதில் உதவி புரிவேன்; வேலி கட்டுவேன்; ஜலம் இறைப்பேன்; காய்களைப் பறிப்பேன். என் மாமனார் வீட்டினர் பார்க்கும்போது பின்னும் சுறுசுறுப்பாக அவற்றைச் செய்வேன்; ‘படித்துச் சோம்பேறியாகிவிட்டான்’ என்று எண்ணாமல், ‘கருத்துள்ள பிள்ளை; பிழைத்துக்கொள்வான்’ என்று அவர்கள் எண்ண வேண்டுமென்பது என் நினைவு. இத்தகைய சிறு வேலைகளை இளமை முதலே செய்துவருவது கிராமத்தாருக்கு இயல்பு. உடம்பு வளைந்து வேலை செய்வது அகௌரவம் என்ற எண்ணம் அக்காலத்தில் அதிகமாகப் பரவவில்லை.
தந்தையார் சிவ பூஜை
அப்பால் நாங்கள் சூரியமூலை சென்று சிலநாள் தங்கினோம். அங்கே என் பிதா என் மாதாமகரிடம் ஸ்படிக லிங்க பூஜையை எழுந்தருளச் செய்துகொண்டார். அந்தச் சிவலிங்கப் பெருமானுக்கு மீனாட்சி சுந்தரேசுவரரென்பது திருநாமம். குடும்பத்துக்குரிய பூஜையை அதுகாறும் செய்துவந்த எந்தையார் அக்கால முதல் சிவபூஜையை விரிவாகச் செய்யத் தொடங்கினர். என் பாட்டனாரைப் போலவே அபிஷேகத்துக்குப் பாலும் அருச்சனைக்கு வில்வமும் இல்லாமற் பூஜை செய்வதில்லை என்ற நியமத்தை மேற்கொண்டார். சிவபூஜையில் வரவர அதிகமாக அவர் ஈடுபடலானார். தம் பூஜையில் நிவேதனமான அன்னத்தையன்றி வேறு அன்னத்தை உண்ணும் வழக்கத்தை நிறுத்திக்கொண்டார்.
இராமாயணப் பிரசங்கத்தில் அவர் தம் வாழ்க்கையில் பல வருஷங்கள் ஈடுபட்டவர். இராமபிரானுடைய அரிய குணங்கள் அவர் நெஞ்சத்தை உருக்கின. ஆயினும் சிவபெருமானிடத்து அவருக்கு உண்டான தீவிரமான பக்தி இராமபிரானிடம் உண்டாகவில்லை. இராமபிரானை எல்லாக் குணங்களும் நிறைந்த மூர்த்தியாக எண்ணி வழிபடுவதில் அவர் குறைவதில்லை. ஆயினும் அவர் தம் இருதய அந்தரங்கத்தைச் சிவபிரானுக்கே உரிமையாக்கினர். அவருடைய வாழ்க்கையின் முற்பகுதியில் அவருடைய சங்கீதத் திறமை அவர் புகழுக்கும் மதிப்புக்கும் காரணமாக நின்றது. பிற்பகுதியில் அவருடைய சிவபூஜையும் சிவபக்தியும் அவருடைய மதிப்புக்கு முக்கிய காரணமாயின. கோபம், உறவினர்களிடத்தில் ஒருவகையான வெறுப்பு முதலிய குறைகளும் விடாமுயற்சி, கஷ்டங்களைச் சகிக்கும்தன்மை, சங்கீதத் திறமை என்னும் குணங்களும் அவர்பால் இருந்தன. ஆனால் அவரைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் இந்தக் குறைகளையும் நிறைகளையும் கடந்து நின்று முதலில் ஞாபகத்திற்கு வருவது அவரது சிறந்த சிவபக்திச் சிறப்பேயாகும்.
சில காலத்துக்குப் பிறகு சூரியமூலையிலிருந்து நேரே குன்னத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்தோம். என் தந்தையார் வழக்கம்போலவே காலக்ஷேபம் செய்துவந்தார். எனக்குப் பழைய உத்ஸாகம் சிறிது சிறிதாகக் குறைந்து வந்தது. படித்த பழம்புஸ்தகங்களைத் திருப்பித் திருப்பிப் படித்து வந்தேன். ஆனாலும் திருப்தி பிறக்கவில்லை. புதிய முயற்சி செய்வதற்கும் வழியில்லை. இப்படியிருக்கையில் ஒருநாள் பெரும்புலியூரைச் சார்ந்த அரும்பாவூரிலிருந்த நாட்டாராகிய பெருஞ்செல்வரொருவர் அரியிலூருக்குப் போகும் வழியில் குன்னத்தில் எங்கள் ஜாகையில் தங்கினர். அவர் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய நண்பர். தமிழ்ப் பயிற்சி உடையவர்.
அவர் என்னோடு பேசிவருகையில் எனக்கிருந்த தமிழாசையை உணர்ந்தார். பிள்ளையவர்களுடைய பெருமையை அவர் பலபடியாக விரித்து உரைத்தார். என் தந்தையாரைப் பார்த்து, “தமிழில் இவ்வளவு ஆசையுள்ள உங்கள் குமாரரை வீணாக இச்சிறிய ஊரில் ஏன் வைத்திருக்கிறீர்கள்? பிள்ளையவர்களிடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டால் இவர் நன்றாகப் படித்து விருத்திக்கு வருவாரே இப்படியே இவர் இருந்தால் ஏங்கிப்போய் ஒன்றுக்கும் உதவாதவராகி விடுவாரே. இப்படி வைத்திருப்பது எனக்குத் திருப்தியாக இல்லை” என்றார்.
“அவரிடம் கொண்டுபோய் விட்டால் அவர் பாடம் சொல்லித் தருவாரென்பது என்ன நிச்சயம்?” என்று என் தந்தையார் கேட்டார்.
“என்ன அப்படிக் கேட்கிறீர்களே! அவர்களிடத்தில் எவ்வளவு பேர் கற்றுக்கொள்ளுகிறார்கள்! எவ்வளவு பேர் பாடங்கேட்டு நல்லநிலைக்கு வந்திருக்கிறார்கள்! பாடம் சொல்வதைப்போல அவர்களுக்கு விருப்பமான செயல் வேறொன்றும் இல்லை. இப்போது அவர்கள் நாகபட்டினத்தில் அந்த ஸ்தலபுராணம் அரங்கேற்றி வருகிறார்கள். நான் போய் ஒரு மாதம் இருந்துவிட்டு வந்தேன் அவர்களிடம் எப்போதும் சில மாணாக்கர்கள் பாடம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.”
“எல்லாம் சரி தான். ஆனாலும் இவனைத் தனியே அனுப்புவதற்கு என் மனம் துணியவில்லை. தவிர அவர்களிடம் சென்றிருந்தால் ஆகாரம் முதலிய சௌகரியங்களுக்குத் திரவியம் வேண்டுமே. இப்போதுதான் இவனுக்குக் கல்யாணம் நடந்தது. அதற்கு அதிகப்பணம் செலவாகிவிட்டது. இப்படி இருக்கையில் மேலும் எப்படி என்னால் பணம் செலவு செய்ய முடியும்?” என்றார் தந்தையார்.
“என்னவோ, எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். பிள்ளையவர்களைத் தவிர இவருக்குத் திருப்தி உண்டாகும்படி பாடம் சொல்வோர் வேறு யாரும் இல்லை. யோசித்துக்கொண்டு செய்யுங்கள்” என்று சொல்லி அவர் விடைபெற்றுச் சென்றார்.
இங்ஙனமே வேறு சிலரும் பிள்ளையவர்களுடைய நற்குணத்தையும் புலமைச் சிறப்பையும் எங்களிடம் கூறி வந்தனர். அதனால் எனக்கு அப்புலவர்பிரானைப் பற்றிய தியானமே பெரிதாகிவிட்டது. கடவுள் திருவருள் கைகூட்டுமோ என்று ஏங்கலானேன்.
ஒருநாள் காலையில் திருவிளையாடற் புராணத்தைப் படிக்கலாமென்று எடுத்தேன். அப்போது மிகவும் நைந்து, அயர்ந்துபோன என் உள்ளத்தில் ஓர் எண்ணம் தோற்றியது. “இந்தப் புஸ்தகத்தில் கயிறு சார்த்திப் பார்ப்போம்” என்று நினைந்து அவ்வாறே செய்யலானேன். இராமாயணம், திருவிளையாடல் முதலிய நூல்களில் வேறு ஒருவரைக்கொண்டு கயிறுசார்த்திப் பிரித்து அப்பக்கத்தின் அடியிலுள்ள பாடலைப் பார்த்து அச்செய்யுட் பொருளின் போக்கைக்கொண்டு அது நல்ல பொருளுடையதாயின் தம் கருத்து நிறைவேறுமென்றும், அன்றாயின் நிறைவேறாதென்றும் கொள்ளுதல் ஒரு சம்பிரதாயம்.
நான் ஒரு சிறுவனைக்கொண்டு கயிறு சார்த்தச் செய்து, புஸ்தகத்தைப் பிரித்தேன். சென்ற துர்மதி வருடம் பங்குனி மாதம் பதிப்பிக்கப்பெற்ற அப்பழம்புஸ்தகத்தில் 160-ஆம் பக்கம் கிடைத்தது. ‘வேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படல’மாக இருந்தது அப்பகுதி. சில முனிவர்கள் வேதத்தின் பொருள் தெரியாது மயங்கி மதுரைக்கு வந்து அங்கே எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தியைப் பணிந்து தவம்புரிய, அவர் எழுந்தருளி வந்து வேதப்பொருளை விளக்கி அருளினாரென்பது அப்படல வரலாறு. நான் பிரித்துப் பார்த்த பக்கத்தில், தக்ஷிணாமூர்த்தி ஓர் அழகிய திருவுருவமெடுத்து வருவதை வருணிக்கும் பாடல்கள் இருந்தன. அந்தப் பக்கத்தின் அடியில் 23 என்னும் எண்ணுடைய செய்யுளை நான் பார்த்தேன். “என் உள்ளக் கருத்து நிறைவேறுமா, நிறைவேறாதோ” என்ற பயத்தோடு நான் மெல்லப் புஸ்தகத்தைப் பிரித்தேன். பிரிக்கும் போதே என் மனம் திக்குத்திக்கென்று அடித்துக்கொண்டது. நல்ல பாடலாக வரவேண்டுமே!’ என்ற கவலையோடு அப்பக்கத்தைப் பார்த்தேன்.
“சீதமணி மூரல்திரு வாய்சிறி தரும்ப
மாதவர்கள் காணவெளி வந்துவெளி நின்றான்
நாதமுடி வாயளவி னான்மறையி னந்தப்
போதவடி வாகிநிறை பூரணபு ராணன்”
என்ற பாட்டைக் கண்டேனோ இல்லையோ எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. என் கண்களில் நீர் துளித்தது. மிகவும் நல்ல நிமித்தம் உண்டாகிவிட்டது. ஒரு குருவை வேண்டி நின்ற எனக்கு, தக்ஷிணாமூர்த்தியாகிய குருமூர்த்தி வெளிப்பட்டதைத் தெரிவிக்கும் செய்யுள் கிடைத்ததென்றால், என்பால் பொங்கிவந்த உணர்ச்சிக்கு வரம்பு ஏது? “கடவுள் எப்படியும் கைவிடார்” என்ற நம்பிக்கை உதயமாயிற்று. “மதுரை மீனாட்சிசுந்தரக் கடவுள் முனிவர்களுக்கு அருள் செய்தார். எனக்கும் அந்தப் பெருமான் திருநாமத்தையுடைய தமிழாசிரியர் கிடைப்பார்” என்ற உறுதி உண்டாயிற்று.
என் தந்தையார் பூஜையிலுள்ள மூர்த்தியும் ஸ்ரீ மீனாட்சிசுந்தரக் கடவுளே என்ற நினைவும் வந்து இன்புறுத்தியது. உவகையும் புதிய ஊக்கமும் பெற்றேன். இந்நிகழ்ச்சியை என் தந்தையாரிடம் கூறினேன். அவரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்.
“எவ்வாறு அவர்களிடம் போய்ச் சேர்வது? செலவுக்கு என்ன செய்வது? தனியே போய் இருக்க முடியுமா?” என்ற கேள்விகள் எழுந்து பயமுறுத்தினாலும், திருவிளையாடற் பாட்டின் தோற்றம் அந்தப் பயத்தை மேலெழும்ப வொட்டாமல் அடக்கி நின்றது. அருணோதயத்தை எதிர்பார்க்கும் சேவலைப்போல நல்ல காலத்தை எதிர்பார்த்து நாட்களைக் கழித்து வந்தேன்.
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் சகோதரர்களாகிய வேலையர், கருணைப் பிரகாசர் இவர்களுடைய பரம்பரையினரும் உறவினரும் அப்பக்கங்களில் பல கிராமங்களில் பள்ளிக்கூடம் வைத்திருந்தார்கள். அவர்கள் யாவரும் ஓரளவு தமிழ்ப் பயிற்சி உடையவர்கள். நல்ல பாடல்களை மனனம்செய்து அவற்றை உரிய சந்தர்ப்பங்களிற்சொல்லி எல்லோரையும் மகிழ்வித்துப் பயன்பெறுவார்கள். அவர்களும் வேறு சில வித்துவான்களும் அடிக்கடி செங்கணத்திற்கு வந்து விருத்தாசல ரெட்டியாரிடம் சம்பாஷணைசெய்து சில நாட்கள் தங்கியிருந்து தங்களுக்குள்ள சந்தேகங்களை நீக்கிக்கொண்டும் பொருளுதவி பெற்றும் செல்வார்கள். சில வித்துவான்கள் ரெட்டியாருடைய சந்தேகங்களையும் தீர்ப்பதுண்டு.
ஒரு முதியவரது ஞாபகம்
ஒருநாள் வழக்கம்போல ரெட்டியாருடைய மூத்த குமாரராகிய நல்லப்ப ரெட்டியார் கம்பராமாயணம் படித்துத் தம் தந்தையாரிடம் பொருள் கேட்டு வந்தார். அன்று படித்தது கும்பகருணப் படலம். அவர் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை பதிப்பித்திருந்த அச்சுப் புஸ்தகத்தை வைத்துக் கேட்டு வந்தார். நானும் அவ்வூர்ப் பட்டத்துப் பண்ணையாராகிய முதியவர் ஒருவரும் உடனிருந்தோம். அம்முதியவருக்கு எழுபது பிராயம் இருக்கும். படித்து வரும்போது இடையிலே ஓரிடத்தில் அம்முதியவர் மறித்து, “இந்த இடத்தில் சில பக்கங்களை அவசரத்தில் தள்ளிவிட்டீரோ?” என்று நல்லப்ப ரெட்டியாரைக் கேட்டார். “இல்லையே; தொடர்ச்சியாகத்தானே படித்து வருகிறேன்” என்று அவர் பதில் கூறினார். “இவ்விடத்தில் சில பாடல்கள் இருக்க வேண்டும். அவற்றை நான் படித்திருக்கிறேன். அவை இப்புஸ்தகத்தில் விட்டுப்போயின. என் பிரதியில் அப்பாடல்கள் உள்ளன” என்று சொல்லிப் பாடம் முடிந்தவுடன் என்னையும் நல்லப்ப ரெட்டியாரையும் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று தம் வீட்டுக் கம்பராமாயணப் பிரதியை எடுத்துக் கும்ப கருணப் படலம் உள்ள இடத்தைப் பிரித்துக் காட்டினார். அவர் கூறியபடியே அவ்விடத்தில் அச்சுப் பிரதியிலே காணப்படாத சில பாடல்கள் இருந்தன. அவற்றைப் படித்துப் பார்த்தோம். அம்முதியவருக்குக் கம்பராமாயணத்தில் இருந்த அன்பையும் அதை நன்றாகப் படித்து இன்புற்று ஞாபகம் வைத்திருந்த அருமையையும் உணர்ந்து வியந்தோம். பரம்பரையாகக் காப்பாற்றப்பட்டு வரும் ஏட்டுப் பிரதிகளின் பெருமையையும் தெளிந்தோம்.
திருக்குறள்
விருத்தாசல ரெட்டியார் எப்போதும் தமிழ் நூல்களைப் படிப்பதிலே தம் பொழுதைப் போக்கி வருபவர்; மற்ற வேலைகளில் கவலையில்லாதவர். அவருக்கு ஏற்றபடி வேறு கவனமேயில்லாமல் தமிழ் ஒன்றிலேயே நாட்டமுடையவனாக நான் கிடைத்தேன். எனக்குப் பாடம் சொல்வதும் நான் படிக்கும் நூல்களிலுள்ள சந்தேகங்களைத் தீர்ப்பதும் அவருக்குப் புதிய வேலைகள். அவை அவர் உள்ளத்துக்கு உவப்பான காரியங்கள். என்னிடம் அவர் மிக்க அன்பு வைத்திருந்தார். எனக்கும் அவருக்கும் பிராயத்திலும் அறிவிலும் செல்வத்திலும் ஏற்றத் தாழ்வுகள் இருந்தன. எனினும், தமிழனுபவத்தில் நாங்கள் ஒன்றுபட்டு நின்றோம். நாள் முழுவதும் தமிழைப்பற்றி அவரிடம் கேட்டுக்கொண்டிருப்பவர் என்னைத் தவிர வேறு ஒருவரும் இல்லை.
பிள்ளையவர்கள் பிரஸ்தாபம்
ரெட்டியார் பாடஞ்சொல்லும் காலத்தில் இடையிடையே தமக்குத் தெரிந்த வித்துவான்களைப் பற்றியும் சொல்லுவார். நான் அரியிலூர்ச் சடகோபையங்காரிடம் பாடம் கேட்டதை அறிந்த அவர் அவ்வையங்காருக்கும் தமக்கும் பழக்கம் உண்டென்று சொன்னார். கும்பகோணம் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த தியாகராச செட்டியாரைப் பார்த்திருப்பதாகவும் அவர் சிறந்த இலக்கண வித்துவானென்றும் கூறினார். ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றியும் அவர் அடிக்கடி சொல்வார்; திருக்குறள் முதலிய நூற்பதிப்புகளில் உள்ள அவருடைய சிறப்புப்பாயிரங்களின் நயங்களை எடுத்துக்காட்டிப் பாராட்டுவார். “அந்த மகானை நான் பார்த்ததில்லை; ஆனால் அவர் பெருமையை நான் கேள்வியுற்றிருக்கிறேன். அவர் காவேரிப் பிரவாகம்போலக் கவி பாடுவாராம். எப்பொழுதும் மாணாக்கர்கள் கூட்டத்தின் நடுவேயிருந்து விளங்குவாராம். அவருக்குத் தெரியாத தமிழ்ப் புஸ்தகமே இல்லையாம். எனக்குச் சில நூல்களிலும் உரைகளிலும் சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றை அவரிடம் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று தனியே குறித்து வைத்திருக்கிறேன். எப்பொழுது சந்தர்ப்பம் நேர்கிறதோ தெரியவில்லை” என்று சொல்லிவிட்டுத் தாம் சந்தேகங்களைக் குறித்து வைத்திருந்த ஓலைச்சுவடியை என்னிடம் காட்டினார். செய்யுட்களாயுள்ள பகுதிகளின் எண்ணும், உரைப் பகுதிகளும் அதில் எழுதப்பட்டிருந்தன. மேலும் மேலும் படிக்கும் நூல்களில் சந்தேகம் எழுந்தால் அந்தச் சுவடியில் அவர் எழுதி வைத்துக்கொள்ளுவார்.
‘அவரிடம் போங்கள்’
இவ்வாறு பிள்ளையவர்களைப் பற்றிய பிரஸ்தாபம் வரும் சமயங்களில் நான் ஆவலாகக் கேட்பேன். மேலும் விஷயங்களை விசாரிப்பேன். நான் அவர்களிடம் படிக்க வேண்டுமென்று எண்ணியதையும் திருவிளையாடற் புராணத்திற் கயிறுசார்த்திப் பார்த்ததையும் சொல்லியிருந்தேன். இரண்டு பேரும் பிள்ளையவர்களைப் பற்றிய பேச்சிலே நெடுநேரம் கழிப்போம். ரெட்டியாரும், “ஆம், அவரிடம் போனால்தான் இன்னும் பல நூல்களை நீர் பாடங் கேட்கலாம்; உமக்குத் திருப்தியுண்டாகும்படி பாடம் சொல்லக் கூடிய பெரியார் அவர் ஒருவரே. நாங்களெல்லாம் மேட்டு நிலத்தில் மழையினால் ஊறுகின்ற கிணறுகள். என்றும் பொய்யாமல் ஓடுகின்ற காவிரி போன்றவர் அவர். அவரிடம் போய்ப் படிப்பதுதான் சிறந்தது” என்று சொல்லிவரத் தொடங்கினார். பலரிடம் இக்கருத்தையுடைய வார்த்தைகளையே கேட்டுக் கேட்டு ஏங்கிய எனக்கு ரெட்டியாருடைய வார்த்தைகள் பின்னும் உறுதியை உண்டாக்கின.
ரெட்டியார் என்னிடம் சொல்வதோடு நில்லாமல் என் தந்தையாரிடமும் இக்கருத்தை வெளியிட்டார்: “என்னால் இயன்றதைச் சொல்லிக் கொடுத்தேன். இன்னும் நன்றாகப் படித்துப் பயன் அடைய வேண்டுமானால் பிள்ளையவர்களிடம் இவரை விட்டுப் படிப்பிப்பதுதான் நலம். உங்களை ஆதரிக்க வழியில்லாமல் இவ்வாறு சொல்லுகிறேனென்று நீங்கள் சிறிதும் எண்ண வேண்டாம். நீங்கள் எவ்வளவு வருஷம் இருந்தாலும் எனக்குச் சிரமம் இல்லை. கடவுள் கொடுத்திருப்பதைக்கொண்டு என்னால் இயன்ற அளவு ஆதரித்து வருவேன். இவரால் எனக்குச் சிரமம் உண்டென்று நான் நினைப்பதாகவும் எண்ணாதீர்கள். இவருக்குப் பாடம் சொல்வதும், இவரோடு தமிழ் நூல் சம்பந்தமாகப் பொழுதுபோக்குவதும் உண்மையில் எனக்கு அளவற்ற திருப்தியைத் தருகின்றன. எப்பொழுதும் இப்படியே இருக்கலாம். ஆனால் எனக்கு இனிமேல் வாழ்க்கையில் ஆகவேண்டியது ஒன்றும் இல்லை; இவர் இனிமேல்தான் முன்னுக்கு வந்து பிரகாசிக்க வேண்டும். தக்க இடத்தில் இருந்து பாடங் கேட்டால் இவர் அபிவிருத்தி அடைவாரென்பதில் தடையில்லை. இவரை அனுப்புவதற்கு எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. என் வருத்தத்தை மாத்திரம் உத்தேசித்து, இவருடைய அபிவிருத்திக்குத் தடை உண்டாக்குவது பாவமல்லவா?” என்று அவர் கூறிப் பின்னும் பலமுறை வற்புறுத்தினார். என் தந்தையார் அவர் சொன்னவற்றைக் கேட்டுவிட்டு, “எங்கே போனாலும் எல்லோரும் இந்தத் தீர்மானத்துக்குத்தான் வருகிறார்கள். ஈசுவர ஆக்ஞை இதுதான் என்று தோன்றுகிறது. இனிமேல் நாம் பராமுகமமாக இருக்கக் கூடாது. எவ்வாறேனும் இவனைப் பிள்ளையவர்களிடத்திற்கொண்டு போய்ச் சேர்ப்பது அவசியம்” என்று நிச்சயம் செய்தார். ரெட்டியாரிடம் தம்முடைய தீர்மானத்தைத் தெரிவித்துச் செங்கணத்தைவிட்டுப் புறப்படச் சித்தமாயினர்.
மாயூரத்திற்கு நாங்கள் காலையில் வந்தசேர்ந்தோம். உடனே என் தந்தையார் ஸ்நானம் முதலியன செய்துவிட்டுப் பூஜை செய்யத் தொடங்கினார். என் தாயார் இல்லாத காலங்களில் அவரது பூஜைக்கு வேண்டிய பணிவிடைகளை நானே செய்வது வழக்கம். அவ்வாறே அன்றும் செய்தேன். அன்று புரிந்த பூஜையில் என் நல்வாழ்வைக் குறித்து அவர் கடவுளைப் பிரார்த்தித்து உருகியிருக்க வேண்டுமென்று தெரிந்தது.
பூஜைக்குப் பின் போஜனம் செய்தோம். அப்பால் தந்தையார் சிரமபரிகாரம் பண்ணிக்கொண்டார். பிறகு பிற்பகல் மூன்று மணியளவில் நானும் அவரும் பிள்ளையவர்களைப் பார்க்கப் புறப்பட்டோம். போகும் வழியில் ஸ்ரீ மாயூரநாதர் ஆலயம் இருந்தமையின் உள்ளே சென்று சுவாமி சந்நிதானத்தில் நமஸ்காரம் செய்துவிட்டுச் சென்றோம்.
அக்காலத்தில் பிள்ளையவர்கள் மாயூரத்தில் திருவாவடுதுறை யாதீனத்துக்குரிய கட்டளை மடத்தை அடுத்து மேல்பாலுள்ள வீட்டில் இருந்து வந்தனர். நாங்கள் அவ்வீட்டிற்குச் சென்றோம்.
அங்கே முன்கட்டில் இருவர் இருந்தனர். அவருள் ஒருவர் விபூதி ருத்திராட்சம் தரித்துக்கொண்டு விளங்கினார். என் தந்தையாரும் நானும் அவரையே பிள்ளையவர்களென்று எண்ணினோம். மற்றொருவரிடம் மெல்ல என் தந்தையார், “பிள்ளையவர்கள் இவர்களா?” என்று கேட்டார். அவர் என் தந்தையாரது தோற்றத்தில் ஈடுபட்டு இனிய முகத்தினராகி, “இவர் திருவாவடுதுறை மகாலிங்கம் பிள்ளை” என்று கூறினார்.
உடனே தந்தையார், “மகாவித்துவான் பிள்ளையவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்டனர்.
இந்த இரண்டு கேள்விகளுக்கும் இடையே மிகவும் சிறிதளவு காலமே சென்றிருக்கும். அதற்குள் என் மனத்தில் பயமும் சந்தேகமும் இன்பமும் மாறிமாறிப் பொருதன. அங்கே பிள்ளையவர்கள் இல்லையென்பதை அறிந்தவுடன், “அவர்கள் எங்கேயாவது வெளியே சென்றிருக்கலாம்” என்ற எண்ணம் எனக்கு முதலில் தோற்றவில்லை. “அவர்கள் ஊரில் இல்லையோ? வெளியூருக்குச் சென்றிருக்கிறார்களோ! நாம் வந்த காரியம் இப்போது கைகூடாதோ? நாம் திரும்பி ஊருக்குப்போக நேர்ந்துவிடுமோ?” என்று பலவாறு எண்ணினேன்.
“இந்த வீட்டின் பின்புறத்துள்ள தோட்டத்தில் வேலை நடப்பதால் பிள்ளையவர்கள் அதைக் கவனித்துக் கொண்டு அங்கே இருக்கிறார்கள்” என்று அக்கனவான் கூறினார். அப்போதுதான் எனக்குத் தைரியம் உண்டாயிற்று.
என் தந்தையாரிடம் பேசிக்கொண்டிருந்தவர் மாயூரத்துக்கு அருகிலுள்ள குற்றாலம் என்னும் ஊரினராகிய தியாகராஜமுதலியாரென்னும் செங்குந்தச் செல்வர். பிள்ளையவர்களைக்கொண்டு அந்த ஸ்தலத்தின் புராணத்தைத் தமிழில் இயற்றுவித்தவர். அப்புராணம் திருத்துருத்திப் புராணம் என வழங்கும்.
என் தந்தையார் அங்கிருந்த மற்றொருவராகிய மகாலிங்கம் பிள்ளையைப் பார்த்து, “திருவாவடுதுறைக் கந்சாமிக் கவிராயரை உங்களுக்குத் தெரியுமா? அவர் சௌக்கியமாக இருக்கிறாரா?” என்று கேட்டார்.
“அவர் சில காலத்திற்கு முன்பு சிவபதம் அடைந்தார்” என்று அவர் விடை கூறினார்.
தந்தையார் அச்செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தார். கந்தசாமிக் கவிராயர் என் பிதாவுக்குப் பழக்கமானவர். திருவாவடுதுறை யாதீன வித்துவானாக இருந்தவர், அரியிலூர்ச் சடகோபையங்காரின் ஆசிரியர். என்னை அவரிடம் படிக்கச் செய்யலாமென்று எந்தையார் நினைத்ததுண்டு. அவருக்கும் தமக்கும் பழக்கம் உண்டென்றும் மிக்க அடக்கம் உள்ளவரென்றும் கூறி அவருடைய குணவிசேஷங்களைப் பற்றித் தந்தையார் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கே பிள்ளையவர்களுடைய தவசிப்பிள்ளை ஒருவர் வந்தார். அவரிடம் என் தகப்பனார் பிள்ளையவர்களை நாங்கள் பார்க்க வந்திருக்கும் செய்தியைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர் அங்ஙனமே போய்ச் சொல்ல, பிள்ளையவர்கள் நாங்கள் இருந்த இடத்திற்கு வந்தனர்.
முதற் காட்சி
அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சியடைந்த தோற்றமும் இளந்தொந்தியும் முழங்கால் வரையில் நீண்ட கைகளும் பரந்த நெற்றியும் பின்புறத்துள்ள சிறிய குடுமியும் இடையில் உடுத்திருந்த தூயவெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோற்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பதுபோன்ற அமைதியே தோற்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப்பார்க்கும் பார்வை இல்லை; அலக்ஷியமான பார்வை இல்லை; தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்லமெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வைதான் இருந்தது.
அவருடைய நடையில் ஓர் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப் பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உத்ஸாகம் இல்லை; சோம்பலும் இல்லை. படபடப்பில்லை; சோர்வும் இல்லை. அவர் மார்பிலே ருத்திராட்ச கண்டி விளங்கியது.

பல காலமாகத் தவம்புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாஸகனைப்போல நான் இருந்தேன்; அவனுக்குக் காட்சியளிக்கும் அத்தெய்வம்போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உத்ஸாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக்கண்ணீர் துளித்தது அத்துளி இடையிடையே அப்புலவர்பிரானுடைய தோற்றத்தை மறைத்தது. சுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் விலக்கிவிட்டு அவரது திருமேனியில் உலவிய என் கண்கள் அவர் முகத்திலே பதிந்துவிட்டன.
வந்த காரியம் என்ன?
அவர் வந்தவுடன் நின்றுகொண்டிருந்த எங்களை உட்காரும்படி சொன்னார். அந்தத் தொனியிலும் அமைதியைத்தான் நான் உணர்ந்தேன். எல்லாம் சாந்தமயமாக இருந்தன. அவரும் அமர்ந்தார்; என் தகப்பனாரைப் பார்த்து, “நீங்கள் யார்? வந்த காரியம் என்ன?” என்று விசாரித்தனர்; அவ்வார்த்தைகள் அன்புடன் கலந்து வெளிவந்தன.
“நாங்கள் பாபநாசத்துக்குப் பக்கத்திலுள்ள உத்தமதானபுரத்திலிருந்து வருகிறோம். தங்களைப் பார்க்கத்தான் வந்தோம். இவன் என் குமாரன். தமிழ் படித்து வருகிறான். சிலபேரிடம் பாடம் கேட்டிருக்கிறான். சங்கீதமும் அப்பியாசம் செய்திருக்கிறான். தங்களிடம் பாடம் கேட்க வேண்டுமென்று மிகுந்த ஆவல்கொண்டிருக்கிறான். தமிழைத் தவிர வேறு ஒன்றிலும் இவன் புத்தி செல்லவில்லை. எப்போதும் தங்கள் ஸ்மரணையாகவே இருக்கிறான். ஆகையால் தங்களிடம் இவனை அடைக்கலமாக ஒப்பித்துவிட்டுப் போக வந்தேன்.”
“உங்கள் பெயர் என்ன?”
“என் பெயர் வேங்கடஸூப்பன் என்பர். இவன் பெயர் வேங்கடராமன்” என்றார் என் தந்தையார்.
“வேங்கடஸூப்பனென்பது நல்ல பெயர். வேங்கட ஸூப்ரமணியனென்பதன் மரூஉ அது. திருவேங்கட மலையில் முருகக் கடவுள் கோயில் கொண்டிருக்கிறாரென்பதற்கு இந்த வழக்கு ஓர் ஆதாரம்.”
அவர் பேச்சிலே ஒரு தனி இனிமையை நான் உணர்ந்தேன். “சாதாரணமாகப் பேசும்போதே அருமையான விஷயம் வெளிவருகின்றதே!” என்று நான் ஆச்சரியம் அடைந்தேன். பிறகு பிள்ளையவர்கள் என்னைப் பார்த்து, “நீர் யார் யாரிடம் என்ன என்ன நூல்களைப் பாடங் கேட்டிருக்கிறீர்?” என்று வினவினர். நான் மெல்ல என் வரலாற்றைச் சொன்னேன்; சடகோபையங்காரிடம் படித்தது முதல் செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடம் காரிகைப் பாடம் கேட்டது வரையில் விரிவாக எடுத்துரைத்தேன்.
“இவருக்கு இசையில் எந்த மட்டும் பயிற்சி உண்டு?” என்று என் தந்தையாரை நோக்கி அவர் கேட்டார். சங்கீதத்தை இசையென்று அவர் சொல்லியதை நான் கவனித்தேன். தாம் எனக்குச் சங்கீதத்தை முறையாகக் கற்பித்து வந்ததை என் தந்தையார் தெரிவித்தார். அப்பால் தாம் கனம் கிருஷ்ணையரிடம் குருகுலவாசம் செய்து சங்கீதம் கற்றதையும் சொன்னார்.
“இந்த ஊரிலுள்ள கோபாலகிருஷ்ண பாரதியாரைத் தெரியுமோ?” என்று பிள்ளையவர்கள் கேட்டனர்.
“நன்றாகத் தெரியும். அவரும் கனம் கிருஷ்ணையரிடம் சிலகாலம் அப்பியாசம் செய்ததுண்டு.”
அப்போது என் தந்தையார், “இவனைத் தங்களிடம் ஒப்பித்துவிட்டேன். எப்போது இவன் பாடம் கேட்க வரலாம்?” என்று கேட்டார்.
அப்புலவர் பெருமான் சிறிதுநேரம் மௌனமாக இருந்தார். அவர் எதையோ யோசிக்கிறார் என்று எண்ணினேன்; “ஒரு கால் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டாரோ?” என்று அஞ்சினேன். அவர் மெல்லப் பேசத் தொடங்கினார்.
“இங்கே படிப்பதற்கு அடிக்கடி யாரேனும் வந்தவண்ணமாக இருக்கிறார்கள். வரும்போது பணிவாக நடந்துகொள்ளுகிறார்கள். சில காலம் படித்தும் வருகிறார்கள். படித்துத் தமிழில் நல்ல உணர்ச்சி உண்டாகும் சமயத்திலே போய்விடுகிறார்கள். சிலர் சொல்லாமலே பிரிந்துவிடுகிறார்கள். சிலர் ‘ஊர் போய்ச் சில தினங்களில் வருகிறோம்’ என்று சொல்லிப் போய்த் திரும்புவதே இல்லை. சில காலம் இருந்து படிப்பதாகப் பாவனை செய்துவிட்டுப் பிரிந்து சென்று என்னிடம் படித்ததாகச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இப்படி அரைகுறையாகப் படிப்பதால் அவர்களுக்கு ஒரு பயனும் உண்டாவதில்லை; நமக்கும் திருப்தி ஏற்படுவதில்லை. இத்தகையவர்கள் இயல்பைக் கண்டு கண்டு மனம் சலித்துவிட்டது. யாராவது பாடம் கேட்பதாக வந்தால் யோசனை செய்துதான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.”
அவர் பேச்சிலே அன்பும் மென்மையும் இருந்தன. ஆனால் அவர் கருத்து இன்னதென்று தெளிவாக விளங்கவில்லை. என் உள்ளத்திலே அப்பேச்சு மிகுந்த சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது. அவர் தம்மிடம் வந்து சில காலம் இருந்து பிரிந்து போன மாணாக்கர்கள் சிலர் வரலாற்றையும் சொன்னார். “இந்த விஷயங்களை யெல்லாம் சொல்வதன் கருத்து என்ன? நம்மை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை என்பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார்களோ? அப்படியிருந்தால் இவ்வளவு பிரியமாகப் பேசிக்கொண்டிருக்க மாட்டார்களே” என்று நான் மயங்கினேன்.
தவம் பலித்தது
என் தந்தையார் தைரியத்தை இழவாமல், “இவன் அவ்வாறெல்லாம் இருக்க மாட்டான். இவனுக்குப் படிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை. தங்களிடம் எவ்வளவு காலம் இருக்க வேண்டுமானாலும் இருப்பான். தங்களுடைய உத்தரவு இல்லாமல் இவன் எங்கும் செல்லமாட்டான். இதை நான் உறுதியாகச் சொல்லுகிறேன், இதற்கு முன் இவனுக்குப் பாடம் சொன்னவர்களெல்லாம் இவனைத் தங்களிடமே கொண்டுவந்து சேர்க்கும்படி வற்புறுத்தினார்கள். பல காலமாக யோசித்து அதிக ஆவலுடன் தங்களிடம் அடைக்கலம் புக இவன் வந்திருக்கிறான். இவனுடைய ஏக்கத்தைக் கண்டு நான் தாமதம் செய்யாமல் இங்கே அழைத்து வந்தேன். தங்களிடம் ஒப்பித்துவிட்டேன். இனிமேல் இவன் விஷயத்தில் எனக்கு யாதோர் உரிமையும் இல்லை” என்று கூறினார். அப்படிக் கூறும்போது அவர் உணர்ச்சி மேலே பேசவொட்டாமல் தொண்டையை அடைத்தது. நானும் ஏதேதோ அப்போது சொன்னேன்; வேண்டிக்கொண்டேன்; என் வாய் குழறியது; கண் கலங்கியது; முகம் ஒளியிழந்தது.
அங்கிருந்தவர்கள் என் தந்தையார் வேண்டுகோளையும் எனது பரிவையும் உணர்ந்து இரங்கி, “இந்தப் பிள்ளை இருந்து நன்றாகப் படிப்பாரென்றே தெரிகிறது. தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள்.
அக்கவிஞர் பிரானது முகம் மலர்ந்தது. ஒருவிதமான உறுதிக்கு அவர் வந்துவிட்டாரென்பதையும், அத்தீர்மானம் எனக்கு அனுகூலமாகத்தான் இருக்குமென்பதையும் அந்த முகமலர்ச்சி விளக்கியது.

“இவ்வூரில் பந்துக்கள் யாரேனும் இருக்கிறார்களோ? இவருடைய ஆகாரத்துக்காக ஏற்பாடு ஏதேனும் செய்திருக்கிறீர்களா?” என்று பிள்ளையவர்கள் கேட்டனர்.
“இவ்வூரில் நண்பர்களும் பந்துக்களும் இருந்தாலும் அவர்கள் செல்வமுள்ளவர்களல்லர். அவர்களுக்குச் சிரமம் கொடுப்பது உசிதமாக இராது. தாங்களே ஏதாவது ஏற்பாடு செய்யவேண்டும்” என்றார் என் தந்தையார். பிள்ளையவர்கள் பல மாணாக்கர்களை வைத்துப் போஷித்துப் பாடஞ்சொல்லி வருகிறார் என்ற செய்தியைப் பலர் கூறக் கேட்டிருந்தமையின் இவ்வாறு எந்தையார் சொன்னார்.
பிள்ளையவர்கள்: “திருவாவடுதுறையிலும் பட்டீச்சுரத்திலும் நான் தங்கும் காலங்களில் இவருடைய ஆகார விஷயத்தில் ஒரு குறையும் நேராமல் பார்த்துக்கொள்ளலாம். சைவராக இருந்தால் ஒரு கவலையும் இராது; என் வீட்டிலே சாப்பிடலாம். இந்த ஊரில் இவர் ஆகார விஷயத்தில் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன்; அது பற்றி வருந்துகிறேன்.”
எந்தையார்: “அப்படியானால் இவ்வூரில் இருக்கும் வரையில் இவன் ஆகாரச் செலவிற்கு வேண்டிய பணத்தை எப்படியாவது முயன்று அனுப்பிவிடுகிறேன். இவனைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
பிள்ளையவர்கள்: “சரி. ஒரு நல்ல தினம் பார்த்துப் பாடங்கேட்க ஆரம்பிக்கலாம்.”
என் தவம் பலித்ததென்று நான் குதூகலித்தேன். அஸ்தமன சமயமாகிவிட்டமையால் நாங்கள் மறுநாட் காலையில் வருவதாக விடைபெற்றுக்கொண்டு எங்கள் விடுதிக்கு மீண்டோம்.
நாங்கள் போகும்போது எங்கள் மனத்தை அமிழ்த்திக்கொண்டிருந்த ஒரு பெரிய பாரம் நீங்கியது போல இருந்தது. என் தந்தையார் அடிக்கடி, “ஜாக்கிரதையாக இருப்பாயா? தேக சௌக்கியத்தைக் கவனித்துக்கொள்வாயா? கடிதம் எழுதுவாயா? வருத்தப்படாமல் இருப்பாயா?” என்று பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே வந்தார். என்னைத் தனியே விட்டுச்செல்வதற்கு அவர் உள்ளம் ஏவ்வளவு தத்தளித்ததென்பதை அவை விளக்கின.
பாடம் கேட்க தொடங்கியது
பிள்ளையவர்களுடைய மாணாக்கர் கூட்டத்தில் நாமும் சேர்ந்துவிட்டோமென்ற நினைப்பு எனக்கு ஒருவகையான பெருமிதத்தை உண்டாக்கியது. அன்று இரவு நானும் என் தந்தையாரும் ஆலயத்திற்குச் சென்று ஸ்ரீ மாயூரநாதரையும் அபயாம்பிகையையும் தரிசித்து வந்தோம். இராத்திரி முழுதும் எனக்குத் தூக்கமே வரவில்லை. என் உள்ளத்தில் பொங்கிவந்த சந்தோஷ உணர்ச்சியினால் அமைதியில்லாமல் பலவகையான காட்சிகளைக் கற்பனை செய்து பார்த்தேன். “இனி நமக்கு ஒரு குறைவும் இல்லை” என்ற நம்பிக்கை என் அந்தரங்கத்திலிருந்து ஒளிவிட்டு வந்தது.
கனவும் பயனும்
என் தந்தையாரும் அன்று இரவு என்னைப் போலவே அமைதியாகத் தூங்கவில்லை. அதற்குக் காரணம் என்னைத் தனியே விட்டுச்செல்ல வேண்டுமே என்ற கவலைதான். அதே ஞாபகத்தோடு அவர் படுத்திருந்தார்.
படுக்கையிலிருந்து காலையில் எழுந்தவுடன், “சாமா” என்று என்னை அழைத்தார். “ராத்திரி நான் ஒரு சொப்பனம் கண்டேன். தம்பதிகளாகிய ஒரு கிழவரும் கிழவியும் வந்து என்னிடம் விபூதி குங்குமப் பிரசாதங்களை அளித்து, ‘உன் பிள்ளைக்குக் கொடு; அவனைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். அது முதல் எனக்கு மிக்க தைரியம் உண்டாகிவிட்டது. உனக்கு க்ஷேமம் உண்டாகுமென்றே நம்புகிறேன். நீ கவலைப்படாமல் இரு” என்று சொன்னார். எனக்கோ அச்சமயத்தில் ஒரு கவலையும் இல்லை. ஆனாலும் அவர் என் கவலையைப் போக்குபவரைப் போலத் தம்முடைய கவலைக்கு ஒரு சமாதானம் சொல்லிக்கொண்டார்.


பொழுது நன்றாக விடிந்தது. காலை நியமங்களை முடித்துக்கொண்டு நாங்கள் இருவரும் பிள்ளையவர்கள் வீட்டுக்குச் சென்றோம். முதற்கட்டில் சைவச்செல்வர்கள் சிலருடன் அமர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தார். எங்களைக் கண்டவுடன் புன்னகையோடு, “வாருங்கள்; உட்காருங்கள்” என்று சொன்னார். முதல் நாள் அவருடைய வார்த்தையில் அயலாரை உபசரிப்பதுபோன்ற தொனி இருந்தது. இரண்டாம் நாளோ அவர் வாய் என் தந்தையாரை வரவேற்றுக்கொண்டிருக்கும்போதே அவர் பார்வை என்மேல்தான் விழுந்தது. அவர் குரலில் ஒரு பற்றோடு கூடிய அன்பு தொனித்தது. முதல் நாள் எங்களை அயலாராக எண்ணிய அவர் அன்றைத் தினம் தம்மைச் சேர்ந்தவர்களாகவே எண்ணினார் போலும்!
“இராத்திரி ஆகாரம் சௌகரியமாக இருந்ததா? நீங்கள் தங்கியுள்ள ஜாகை வசதியாக இருக்கிறதா?” என்று வினவினார்.
“எல்லாம் சௌகரியமாகவே இருக்கின்றன. நேற்று ராத்திரி கோயிலுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் செய்தோம். இவனுடைய க்ஷேமத்தைக் குறித்து ஸந்நிதியில் பிரார்த்தனை செய்தேன். ராத்திரி தூக்கத்தில் நான் ஒரு சொப்பனம் கண்டேன்” என்றார் என் தந்தையார். பிள்ளையவர்கள் “என்ன சொப்பனம் அது?” என்று கேட்கவே தந்தையார் அதை எடுத்துரைத்தார். “இது நல்ல சகுனம். ஸ்ரீ மாயூரநாதரையும் அபயாம்பிகையையும் கிழவர், கிழவி என்று சொல்வது இந்த ஸ்தலத்தில் வழக்கம். உங்கள் கனவில் தோன்றியவர்கள் அவ்விருவருமே. நீங்கள் இனி இவரைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்; இவர் க்ஷேமமாக இருப்பார்” என்று அந்தக் கனவுக்குப் பொருள் கூறினார் அப்புலவர் கோமான்.
என் தந்தையார் தம் கனவில் ஸ்ரீ மாயூரநாதரே எழுந்தருளியதாக நம்பித் திருப்தி அடைந்தார். நானோ பிள்ளையவர்கள் நேரே இருந்து “நீங்கள் இனி இவரைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்” என்று கூறியதுப ற்றித் திருப்தியுற்றேன்.
பேச்சினிடையே அனுபவ வார்த்தைகள்
அப்பால் அங்கே வந்திருந்த கனவான் ஒருவர் ஆறுமுக நாவலரைப் பற்றிய சில செய்திகளைச் சொன்னார். நாவலர் சிதம்பரத்தைவிட்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்றதும் அவர் வரவை அறிந்து யாழ்ப்பாணத்து வித்துவான்களும் பிரபுக்களும் கடற்றுறையில் அவரை எதிர்கொண்டழைத்துச் சென்று உபசரித்ததும் பிறவுமாகிய சமாசாரங்களை அவர் சொன்னார். மற்றொருவர் வடலூரில் இராமலிங்க வள்ளலார் இருந்ததையும் அங்கே நடந்த நிகழ்ச்சிகளையும் விரிவாகக் கூறினார். பிறகு பிள்ளையவர்கள் என் தந்தையாரிடம் அரியிலூர் முதலிய ஊர்களைப்பற்றி விசாரித்தனர். அங்கே உள்ளவர்கள் வித்துவான்களிடம் காட்டும் ஆதரவையும் பிறருக்குத் தங்களால் இயன்ற உபகாரம் செய்யவேண்டுமென்ற எண்ணம் ஏழைகளுக்கும் இருப்பதையும் தகப்பனார் எடுத்துச் சொன்னார்.
“காட்டுப் பிரதேசங்களென்று நாம் சொல்லுகிறோம். அங்கேதான் ஜீவகாருண்யமும் அன்பும் நிரம்பியிருக்கின்றன. நாகரிகம் அதிகமாக ஆகச் சுயநலமும் அதிகமாகின்றது. நாகரிகமுள்ள இடங்களில் உபகார சிந்தையுள்ளவர்களை அருமையாகத்தான் பார்க்கிறோம்” என்று பிள்ளையவர்கள் கூறினர்.
அவர் கூறிய இந்த வார்த்தைகள் அவரது அனுபவத்திலிருந்து எழுந்தவை என்று பிற்காலத்தில் நான் அறிந்தேன்.
…. டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் “என் சரித்திரம்” நூலிலிருந்து
========================================================
* To those who are new to this website
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
========================================================
Also check :
‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!
பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?
ஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்!
ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!
========================================================
[END]
ஆசிரிய பக்தியும், தான் தனது தமிழின் கொண்டு இருந்த காதலையும் சொல்லி இருப்பதை இந்த கட்டுரை வெளிபடுத்தியது.
**
இந்த காலத்தில் நூற்றுக்கு பத்து சதவிகிதம் பேர் கூட இப்படி தான் கற்கும் கல்வியையும், கற்று தரும் குருவையும் மதிப்பரா என்று தெரியவில்லை.
நீங்கள் ஏற்கனவே போட்ட பதிவில் இணைத்து இருந்த soft copy -ஐ பதிவிறக்கம் செய்து வைத்து உள்ளேன். சமயம் இருக்கும் போது படிக்கலாம் என்று விட்டு விட்டேன். இந்த பதிவு அந்த புத்தகத்தை படிக்க மீண்டும் தூண்டுகிறது.
**
அவரை பற்றி தெரிந்து கொள்ளும் – ஒரு செயலே நாம் இந்த காலத்தில் தமிழுக்கு செய்யும் வெகுமதியை போன்று இருக்கிறது.
**
என்னை உத்மதானபுரதிற்க்கு அழைத்து சென்றமைக்கு மிகவும் நன்றி. இப்பேர்ப்பட்ட மனிதனுக்கு சாதரணமாக ஒரு கட்டிடம் மட்டும் எழுப்பி, அதை பெருமையாக நினைத்து உள்ளனர் கடந்த ஆட்சியாளர்கள். தமிழ், தமிழ் என்று பேசினால் மட்டும் போதாது, செயலில் காட்ட வேண்டும். நானும் முயற்சிப்பேன்.
மிக்க நன்றி தங்களுக்கு.
என் சரிதம் – வார்த்தையாக தான் தெரியும்.
இந்த பதிவை படித்த பின்பு என் சரிதம் – வாழ்க்கையாக தெரிகிறது. தொட்டு காட்டிய சுந்தர் அண்ணாவிற்கு நன்றிகள்.
தொட்டு காட்டிய பத்திகளே இப்படி என்றால் நூலை வாசித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றுகிறது.
மாதுளையின் முத்துக்கள் என்று சொன்னது உண்மை தான்.
குரு என்பர் எப்படிபட்டவர் ? அவரை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என சொன்னது சிறப்பே.
குருவினை அடிய அவர் மேற்கொண்ட நிகழ்வு ஒவ்வொன்றும் மெய் சிலிர்க்க வைக்கின்றது.
கயிறு போட்டு பார்த்தல் – புதிய விஷயம் ..
கிழவனும் கிழவியும் யார் என்று பதிவின் இறுதியில் தெரிந்து கொண்டோம்.
வேள்வி செய்து தக்க குருவினை அடைந்ததால் தான் தமிழுக்கு ஒரு தாத்தா கிடைத்து இருக்கின்றார்.அவர் பதிப்பித்த மற்றும்
எழுதிய நூல் பார்க்கும் போது , தலை சுற்றுகின்றது. எப்படி இவர்களால் மட்டும் இப்படி முடிகின்றது.அக்னிக் கவி சொன்னது போல்
செம்பரிதி தான் அவர்.
மனத்திரையில் அவர் குருவிடம் சேர்ந்தது வரை ஒரு திரை காட்சியாக மாற்ற வைத்த பதிவு.
“என் சரிதம் ” படித்திட நானும் விழைகின்றேன்
நன்றி அண்ணா
சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் . தமிழ் தாத்தா உ .வே . சாமிநாத அய்யர் அவர்களின் சுய சரிதத்தில் குருவை அடைய எடுத்து கொண்ட சிரம பிரயாசைகள் பற்றி படிக்கும் போது எந்த அளவுக்கு தமிழில் பக்தி செலுத்தி இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது . 160 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வளவு தெய்ளிவாக படம் பிடித்து காட்டியதற்கு நன்றிகள் .