அன்னை வள்ளி அவதரித்த இடம் வள்ளிமலை. மலையடிவாரத்திலும் மலை மீதும் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இது திருப்புகழ் பாடப்பெற்ற தலம். முருகன் பாதம் தோய்ந்த இடம். அந்த ஒரு சிறப்பே போதுமே இந்த மலையின் புனிதத்துவத்தை சொல்ல…!
வள்ளிமலை ஒரு அற்புதமான பதி. பல மகத்துவங்களை உள்ளடக்கியது. மற்ற ஆலய தரிசனங்களை போல ஒரே ஒரு ஆலய தரிசனப் பதிவில் வள்ளிமலையை அடக்கிவிடமுடியாது. எனவே தான் வள்ளிமலை அற்புதங்கள் என்ற தொடரையே துவக்கியிருக்கிறோம். இன்னும் இரண்டொரு மாதத்தில் வள்ளிமலையில் நமது தளம் சார்பாக நம் வாசகர்கள் பங்கேற்கும் கிரிவலமும், படி உற்சவமும் நடைபெறவிருக்கிறது. எனவே வாசகர்கள் இந்த பதிவை கவனத்துடன் படிக்கவும்.
வள்ளிமலையில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதப் பிறப்பிலும் சித்திரை பிறப்பிலும் கிரிவலமும் படி உற்சவமும் நடைபெறுவது வழக்கம். இதை பல்வேறு ஆன்மீக குழுக்கள் நடத்துவார்கள். மலையடிவாரத்தில் பல சத்திரங்கள் உள்ளன. அவற்றில் அனைவரும் தங்கிக்கொள்வார்கள்.
வாரியார் சுவாமிகளின் கொள்ளுப் பேத்திகள் வள்ளி-லோச்சனா சகோதரிகளின் தந்தை திரு.சீதாராமன் சாமிநாதன் அவர்கள் மேற்படி கிரிவலத்திலும் படி உற்சவத்திலும் நாம் ஒரு முறை அவசியம் கலந்துகொள்ளவேண்டும் என்றும், அது தளத்தில் பகிர ஒரு உன்னதமான அனுபவமாக இருக்கும் என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து திருவருள் கூடி, நாம் சென்ற ஆண்டு தை மாதப் பிறப்பின்போது நடைபெற்ற கிரிவலத்தில் கலந்துகொள்ள முடிவு செய்தோம். சென்றிருந்தோம். நம்முடன் நண்பர் சிட்டி வந்திருந்தார்.
வள்ளிமலை, வேலூர் – சோளிங்கர் செல்லும் சாலையில் இருக்கிறது. வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து வள்ளிமலைக்கு நேரடி பேருந்து வசதி இருக்கிறது.
நாம் சென்னையிலிருந்தே நண்பர் சீதாராமன் அவர்களின் குடும்பத்தினருடன் அவர்கள் காரிலேயே மதியம் சுமார் 1.30 மணியளவில் புறப்பட்டு சென்றுவிட்டோம்.
செந்தமிழ் சதுரர் ஐயா திரு.சக்திவேல் முருகன் அவர்களின் குழு சார்பாக வள்ளிமலையில் நாம் சென்ற அன்று மாலை கிரிவலம் ஏற்பாடு செய்திருந்தார்கள். மாலை 5.00 மணிக்கு சரியாக கிரிவலம் துவங்கிவிடும் என்று சொன்னார்கள். ஏனெனில் அப்போது தான் ஏழுமணிக்குள் முடித்துவிட்டு வந்து சற்று ஓய்வெடுத்துக்கொண்டு இரவு உணவை முடித்துக்கொண்டு சீக்கிரம் உறங்கச் செல்லமுடியும். மறுநாள் கலை படி உற்சவத்துக்கு காலை 5.00 மணிக்கெல்லாம் எழுந்திருக்கவேண்டுமே! நாம் சென்னையிலிருந்து பிற்பகல் காரில் புறப்பட்டு சென்றபடியால் நாம் நேரடியாக கிரிவலத்தில் பங்கேற்க சென்றிருந்தோம். நண்பர் சிட்டி, புதுவையில் இருந்து நேரடியாக காலை படி உற்சவத்தில் பங்கேற்க வந்துவிடுவதாக சொன்னார்.
(சக்திவேல் முருகன் அவர்கள் சுதந்திர போராட்ட தியாகி திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள் – காமாட்சி தம்பதிகளின் புதல்வர்.அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து மின்னியலில் பட்டம் பெற்ற பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். தமிழ்மறை குடமுழுக்குகள் 1400-த்திற்கு மேலும், தமிழாகமத் திருமணங்கள் 3000-க்கு மேலும் ஆற்றியுள்ளார்.அறநிலையைத் துறை மூலமாக ஓதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். வருடந்தோறும் தை முதல் நாளையொட்டி வள்ளிமலையில் தனது குழுவினருடன் திருப்புகழ் மற்றும் திருமுறைகள் பாடியபடி கிரிவலம் செய்து மறுநாள் படி உற்சவம் நடத்தி வருகிறார்.)
நாம் சென்ற நேரம் அப்போது தான் கிரிவலக் குழுவினர் புறப்பட்டு சென்றதாகவும், சுற்றுப்பாதைக்கு சென்றால் உடனே பிடித்துவிடலாம் என்றும் சொன்னார்கள். உடனே நேரே அங்கு சென்று குழுவினருடன் இணைந்துகொண்டோம்.
==========================================================
இந்த தொடரின் முந்தைய பாகங்களுக்கு…. DON’T MISS!
சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)
புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)
==========================================================
முன்னதாக இக்குழுவினர் மலையடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து தான் புறப்பட்டனர்.
வள்ளிமலை கிரிவலத்தில் பங்கேற்க ஒரு வழியாக என்னப்பன் சுப்ரமணிய சுவாமி வாய்ப்பு வழங்கிவிட்டார். மனம் குதூகலமடைந்தது. ஐயா திரு.சக்திவேல் முருகன் அவர்கள் தலைமையில் கிரிவலம் சென்றுகொண்டிருந்த குழுவினரில் பலதரப்பட்ட வயதினர் இருந்தார்கள். அவர்களை பார்க்கும்போது அத்தனை பரவசம். (புகைப்படத்தை பாருங்கள். நீங்களும் அந்த பரவசத்தை உணரலாம்.) அடியார்கள் கூட்டத்தை பார்ப்பது ஆண்டவனை பார்ப்பதைவிட சிறப்பானது.
இந்த குழுவினரில், திருமதி.வள்ளி உமாபதி அவர்கள் திருமுறையும் திருப்புகழும் பாடிக்கொண்டு வந்தார்கள். நாமும் அக்குழுவினருடன் இணைந்து அவர்கள் பாடியதை திரும்பவும் பாடிக்கொண்டே வந்தோம்.
நாம் சென்ற நேரம் திருத்தொண்டத் தொகையை பாடிக்கொண்டிருந்தார்கள்.
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற்கு அடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே!
திருத்தொண்டத்தொகையின் சிறப்பு என்ன தெரியுமா? பெரியபுராணத்திற்கு இது மூல நூல். அதுமட்டுமல்ல, சுந்தரர் இதை திருவாரூரில் பாடியபோது இதற்கு அடியெடுத்து கொடுத்தார் தியாகராஜர். தலைவர் அடியெடுத்துக் கொடுத்தது இரண்டே இரண்டு பேருக்கு தான். ஒன்று சுந்தரர். மற்றொருவர் சேக்கிழார் பெருமான். காரணம், இவர்கள் பாடியது தன்னைப் பற்றி அல்ல. தன் அடியவர்களைப் பற்றி என்பதால்.
வள்ளிமலையில் இயற்கை எழில் சூழ்ந்த பாதையில் கிரிவலம் செல்வது ஒரு உன்னதமான அனுபவம். திருவண்ணாமலை போன்ற நெரிசல் மிகுந்த இடங்களில் கிரிவலம் செல்பவர்கள் ஒரு முறை வள்ளிமலையில் கிரிவலம் செல்லவேண்டும். அப்போது தான் அந்த வித்தியாசத்தை உணரமுடியும்.
இருபக்கமும் குன்றுகளும், பச்சைப் பசேல் வயல் வெளிகளும், பார்ப்பதற்கே அத்தனை ரம்மியமாக கண்களுக்கு இதமாக குளிர்ச்சியாக இருக்கும்.
செல்லும் வழியில் ஒரு செடியை பெண்கள் சிலர் ஆர்வத்தோடு சென்று பார்த்து அதன் இலைகளை பறித்தார்கள். ‘பேய்மிரட்டி’ என்று அதற்கு பெயராம். இச்செடியின் இலையை திரிபோல செய்து விளக்கேற்றினால் மிக பிரகாசமாக எரியும் என்று சொன்னார்கள். (மற்ற திரி விளக்கிற்கும் இதக்ரும் நிறைய வித்தியாசம் உள்ளது.) வீட்டில் செய்வினை, ஏவல், பில்லி சூனியம், துஷ்ட சக்திகள் இருப்பதாக கருதுபவர்கள் இந்த செடியின் இலையை பறித்து வந்து திரியாக்கி வீட்டில் விளக்கேற்றி வரவேண்டும். அப்படி செய்தால் அனைத்தையும் இது விரட்டிவிடும். எனவே தான் இதற்கு ‘பேய்மிரட்டி’ என்று பெயர் ஏற்பட்டது.
ஆங்காங்கு குழுவினர் சிறிது நேரம் நின்றனர். திருப்புகழ் திருமுறை உள்ளிட்டவற்றை அனைவரும் பாடிக்கொண்டே வந்தோம். நமது காமிராவுக்கு நல்ல தீனி.
வழியில் வள்ளியின் பூர்வாசிரம தகப்பனாரான மகாவிஷ்ணுவுக்கு ‘தென் வெங்கடாச்சலபதி’ கோவில் என்ற ஒன்று உண்டு. சிவனை நோக்கி திருமால் தவம் செய்தபோது மான்வடிவில் திருமகள் வர அவள்மீது மோகப்பார்வை வீச, அது கருவாகி அந்தமான் வள்ளிக்கிழங்கு எடுத்த குழியில் மகவை ஈன்றது. இந்தச் சம்பவம் கந்தபுராணத்தில் வருகிறது. அது நிகழ்ந்த இடம் இது தான் என்று சக்திவேல் முருகன் ஐயா அவர்கள் அனைவருக்கும் சொன்னார்.
பெருமாள் சிவமுனிநிவராக தவம் செய்த அந்த இடத்தில் முருகப் பெருமானின் மாமனுக்கு தற்போது ஒரு அழகிய ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.
அந்த ஆலயத்தின் அழகும், அதன் சூழ்நிலையின் அழகும் சொன்னால் புரியாது. நீங்களே பாருங்கள்.
அவ்விடத்தில் திருக்கோயில் எழுப்பி பல்லாண்டுகளாகச் சேவை செய்து வரும் அந்தப் பாகவதரைப் பாராட்டி எல்லோரும் வாழ்த்தினர். அங்கு அனைவரும் சிறிது நேரம் செலவிட்டுவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டோம்.
அதற்கு பிறகு கிரிவலம் தொடர்ந்தாலும், இருட்டிவிட்டபடியால் புகைப்படங்கள் எடுக்கமுடியவில்லை. காமிராவிலும் பேட்டரி தீர்ந்துவிட்டது.
ஒரு அரமநிநேரத்தில் கிரிவலத்தை முடித்துக்கொண்டு அனைவரும் புறப்பட்ட இடமான வள்ளியம்மை தவப்பீடத்திதற்கு வந்து சேர்ந்தோம். (வள்ளியம்மை தவப்பீடம் பற்றி தனியாக பார்க்கலாம்). தவப்பீடத்தில் அறுபடைவீட்டு முருகப்பெருமானையும் தவக்கோலத்தில் அமர்ந்துள்ள வள்ளி நாயகியையும் வழிபட்டோம். இந்த தவ பீடம் வாரியார் ஸ்வாமிகள் கட்டியது. வள்ளி அமர்ந்து தவம் புரிந்த இடம் அது. அந்த தவ பீடத்தில் ஆறுபடை முருகன் சன்னதி ஒன்றும் உள்ளது.
இங்கு வந்து வள்ளியம்மை வழிபாடு நிகழ்ந்த பின்னர் திருப்புகழ் இசையும், சொற்பொழிவு பயிலரங்கமும் தொடங்கியது. திருப்புகழ், கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை, கந்தரலங்காரம் குறித்து ஒவ்வொருவரும் ஆற்றிய உரையை நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
குழுத் தலைவர் திரு.சத்தியவேல் முருகனார் அவர்கள் பயிலரங்கில் இடையிடையே சிறந்த சொற்பொழிவு எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்காக அறிவுரைகளையும் குறிப்புகளையும் சொன்னார். அவை அனைவருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்தன. பயிலரங்கம் முடிந்தவுடன் இரவு உணவு அருந்திவிட்டு அனைவரும் உறங்கச் சென்றனர்.
இங்கு உள்ள பிரதான ஹாலில் தான் அனைவரும் ஒய்வெடுத்துக்கொண்டோம்.
இரவு உணவு இடைவேளையின் போது புதுவையிலிருந்து நண்பர் சிட்டி சரியாக வந்து சேர்ந்துவிட்டார். (டைமிங் பார்த்தீங்கள்ல !)
சும்மா சொல்லக்கூடாது அன்றிரவு நாம் சாப்பிட்டது தினைப் பொங்கல் என்று கருதுகிறோம். அத்தனை ருசி. அத்தனை ருசி. நாம் கொஞ்சமாக சாப்பிட சிட்டி எப்போதும் போல மூன்று ரவுண்டு வரைக்கும் சென்றார். (கடைசியில நாம தான் நிறைய சாப்பிட்டோம்னு பேராயிடுது) ம்…. இப்படி கண்ணு வெச்சு கண்ணு வெச்சே நாம இப்போல்லாம் சரியா சாப்பிடாம உடம்பு ரொம்ப இளைச்சு போச்சுங்க… 🙁
மறுநாள் காலை படி உற்சவம் துவங்கியது…!
படி உற்சவம் – இது ஒரு இனிமையான, உன்னதமான, அழகான, ஆத்மார்த்தமான அனுபவம்.
அதற்கு முன், வாரியார் ஸ்வாமிகள் ஸ்தாபித்த வள்ளி தவபீடத்தை தரிசனம் செய்வோம். இந்தப் பதிவில் அதை சேர்த்தால் உங்களால் நன்றாக தரிசிக்க முடியாது. பிரத்யேக புகைப்படங்களுடன் தனிப் பதிவில் தரிசிப்போம். அசத்தலான தகவல்களுடன்.
‘வள்ளிமலை அற்புதங்கள்’ தொடரும்…
(முந்தைய அத்தியாயங்களின் சுட்டிகள் பதிவுக்கு இடையே அளிக்கப்பட்டுள்ளன)
==========================================================
* To those who are new to this website – இந்த தளத்தை தொய்வின்றி நடத்திட அனைவரின் பங்களிப்பும் அவசியம் தேவை…
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…
“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”
சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?
நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!
அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !
மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!
களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!
முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!
முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”
==========================================================
[END]
வள்ளிமலை அற்ப்புதங்கள் அருமை .பார்க்க பரவசமாக உள்ளது ,நம் குழுவிற்கும் இது போன்ற ஒரு அனுபவம் விரைவில் அமையும் என எதிர் பார்கின்ரேன் ..இடையில் பேய் மிரட்டி மூலிகை தகவல் பயனுள்ளவையாக இருந்தது …
நல்ல தகவல் வள்ளிமலை ஐ பற்றி . விரைவில் நாம் ரைட் மன்ற நண்பர்கல்லுடன் செல்லும் வாய்பு முருகன் அருளவேண்டும்.
நன்றியுடன்,
நாராயணன்.
சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் . வள்ளிமலை கிரி வலம் பற்றிய செய்தி தொகுப்பு அருமை . வள்ளிமலை செல்லும் ஆர்வம் உள்ளது .விரைவில் அந்த வாய்ப்பு கூடி வர வேண்டும் .
ஹாஹா. ஆசிரியர் முதலில் தாங்கள் பொய் சொல்வதை சரியாக சொல்ல வேண்டும்.
**
கட்டுரையின் முதலில் நான் நேரடியாக காலையில் வந்து கலந்து கொள்வதாக போட்டு உள்ளீர்கள். ஆனால், கட்டுரையின் இறுதியில் நான் இரவு சாப்பாட்டிற்கு சரியான நேரத்தில் வந்து விட்டதாக போட்டு உள்ளீர்கள்.
பொய் சொல்வதை பொருந்த சொன்னால் தானே நன்றாக இருக்கும். அதனால், இனி வரும் பதிவுகளில் ஆசிரியர் பொய்(களை) பார்த்து பக்குவமாக சொல்லுமாறு கேட்டு கொள்கிறேன்.
**
ஒன்றே கால் வருடத்திற்கு மேல் ஆகி விட்டதால் தங்களுக்கு மறந்து போய் இருக்கும் என நினைக்கிறேன். நான் இரவு முழுவதும் பனியில் வேலூர் பஸ் ஸ்டாண்டில் தூங்காமல் விழித்து இருந்து, காலை முதல் பேருந்து ஏறி தங்களை 6 மணி அளவில் வந்து சந்தித்து, நீங்கள் எனக்கு குளியல் அறைக்கு அழைத்து சென்று, வெந்நீர் வாங்கி தந்தது மறந்து போகி விட்டதா??
மேலும் அந்த பொங்கலை மட்டும் சரியாக ஞாபகம் வைத்து உள்ளீர்கள். அது சரி தான், எவ்வளவு விருப்பம் இருந்து நீங்கள் சாப்பிட்டு இருந்தால் இந்த அளவிற்கு அந்த உணவை மட்டும் அச்சு பிசகாமல் ஞாபகம் வைத்து இருக்க முடியும். ஹி ஹி.
காலை வேளையில் தான் பொங்கல் இட்டார்கள். தாங்களும் விருப்பத்துடன் சாபிட்டீர்கள்.
**
மற்றபடி, படி உற்சவம் நன்றாக இருந்தது. சிறுவர் முதல் பெரியவர் வரை மனம் உருகி பாடி சென்றது, அதுவும் இயற்கை காட்சியில் இணைந்தது, மனதிற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது.
மேலும், அங்கு பார்த்தவை ஓரளவிற்கு எனக்கு நினைவில் உள்ளது – கோவிலில் முதலிலேயே இருக்கும் பொய்கை, வழி நிறைய குரங்குகளின் சாம்ராஜ்யம், முருகனின் கோவில், பொங்கி அம்மாவின் தரிசனம், வள்ளிமலை சுவாமிகள் அதிஷ்டானம், அங்கு குடித்த தண்ணீர் கூட அத்தனை சுவையாக இருந்தது – அது அங்கு உள்ள சுனையில் இருந்து தினமும் கொண்டு வரப்படும் நீர் என்று சொன்னார்கள், வெயிலே படாத சுனை நீர், யானை போன்ற பாறையும், இரட்டை பிள்ளையாரையும் பார்த்தோம். பின்பு, மதியம் வந்து சொற்பொழிவை கேட்டு, பின்பு சாப்பிட்டு விட்டு திரு. சீதாராமன் அவர்களின் காரில் வந்து ஒரு இடத்தில் சென்னை செல்லும் தனியார் பேருந்தினை பிடித்து அன்று ஞாயிற்று கிழமை ஆதலால் சென்னைக்கு வந்த பின்பு, ஒரு பெருமாள் கோவிலுக்கு சென்றோம் – பிரார்த்தனை கிளப்-இன் பிரார்த்தனை செய்வதற்கு. செய்து முடித்து இனிதே வள்ளிமலை பயணம் நிறைவுற்றது.
***
வள்ளிமலை பயணத்திற்கு என்னை அழைத்து, கூட்டி சென்றமைக்கு மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளேன்.
மனதிற்கு அமைதி வேண்டுமானால் இது போல் இயற்கை உடன் இணைந்த கோவில்களுக்கு சென்றால், அமைதியும் மனதிற்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும். ஆசிரியருக்கு மிக்க நன்றி.
***
**சிட்டி**.
சரி…சரி… விடுங்க…விடுங்க… அரசியல்ல இதெல்லாம் ஜகஜம். நீங்கள் நமது ஆலயதரிசனங்களுக்கு பல முறை வருவதால் சற்று குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஒருவேளை அது காலை உணவாக இருக்குமோ ? எப்படியோ பந்திக்கு நீங்கள் முந்தியது உண்மை. மறுக்க முடியாத உண்மை. நான் டயட்டில் இருப்பது ஊருக்கே தெரிந்த உண்மை. 🙂
ஹஹா…ஹ்ம்ம், சரி தான். பந்திக்கு யார் முந்தி இருப்பான்னு ஊருக்கே தெரியுமே..ஹாஹா..சரி விட்டு தள்ளுங்க கொஞ்சம் வயது ஏற ஏற மறதி எல்லார்க்கும் வருவது ஜகஜம் தானே 😉 மற்றபடி மிகவும் நன்றி அந்த பயணத்திற்கு..