Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, November 9, 2024
Please specify the group
Home > Featured > தோல்வியிலும் வென்ற ஒரு உண்மை வீரன் நமக்கு போதிக்கும் பாடம்!

தோல்வியிலும் வென்ற ஒரு உண்மை வீரன் நமக்கு போதிக்கும் பாடம்!

print
லாரன்ஸ் லெமியக்ஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். மெடலே வாங்காத ஒலிம்பிக் ஹீரோக்களில் ஒருவர். ஆனாலும் அவரது செயற்கரிய செயலால் அவரது பெயர் சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்டது. ஒலிம்பிக் போன்ற போட்டிகள் நடத்தப்படுவதன் அர்த்தத்தை பரிபூரணமாக்குபவர் இவரைப் போன்றவர்கள் தான்.

அப்படி என்ன செய்துவிட்டார் லாரன்ஸ் லெமியக்ஸ்?

னடாவை சேர்ந்த ஒரு படகோட்டி லாரன்ஸ் லெமியக்ஸ் (SAILOR). நினைவு தெரிந்த நாள் முதல் ஒலிம்பிக்கில் படகோட்டும் போட்டியில் கலந்து கொண்டு தனது நாட்டுக்காக தங்க மெடலைப் பெறவேண்டும் என்பதே அவரது லட்சியம், கனவு, சுவாசம் எல்லாமே.

கடும் பயிற்சி மற்றும் விடாமுயற்சியின் காரணமாக 1988 ஆம் ஆண்டு தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், கனடா நாட்டின் சார்பாக படகோட்டும் பிரிவில் இடம்பெற்றார்.

செப்டம்பர் 24, 1988 ஆம் ஆண்டு சியோலோலில் இருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் உள்ள புசன் கடற்கரை நகரில் படகோட்டும் போட்டி நடைபெற்றது.

Lawrence Lemieuxபோட்டி துவங்கும்போது தட்ப வெப்ப நிலையும் கிளைமேட்டும் மிகவும் சீராக இருந்தது. ஆனால், போட்டி துவங்கி மும்முரமாக நடைபெற்றுகொண்டிருந்த தருணத்தில் சூழ்நிலை மாறியது. கடல்மட்டத்தில் திடீரென காற்றின் வேகமானது 15 KNOTS களிலிருந்து 35 KNOTS களுக்கு எகிறியது. கடல் இதனால் கொந்தளித்தது. போட்டியில் பங்கேற்ற படகுகள் அல்லாடின. எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை. பந்தயமோ அது பாட்டுக்கு தொடர்ந்துகொண்டிருந்தது.

கிட்டத்தட்ட பந்தய தூரத்தில் பாதி கடந்துவிட்ட நிலையில், லாரன்ஸ் லெமியக்ஸ் அப்போது இரண்டாவது இடத்தில் இருந்தார். அப்போதைய கடலின் சூழ்நிலை, சூறைக்காற்று இவை எதுவும் அவரது முன்னேற்றத்தை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. மேலும் சில மைல்கள் கடந்துவிட்ட சூழ்நிலையில் அவருக்கு தாம் எப்படியும் தங்கப் பதக்கம் பெற்றுவிடுவோம் என்கிற நம்பிக்கை சுடர்விட்டு எரியத் துவங்கியது. சிறுவயது முதலே எந்த லட்சியத்துக்காக உழைத்துக்கொண்டிருந்தரோ எந்த லட்சியத்துக்காக பல தியாகங்களை செய்தாரோ அந்த லட்சியம் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இருப்பதாக அவர் மனம் குதூகலமடைந்தது.

அவர் கவனம் மேலும் படகை திறமையாக வேகமாக செலுத்துவதில் குவிந்தது. காரணம் ஒரு சிறு தவறு நடந்துவிட்டாலும் படகு கவிழ்ந்துவிடும். “லாரன்ஸ்… ம்… விடாதே… ம்… உன்னால் முடியும்… நிச்சயம் முடியும்…. இன்னும் கொஞ்ச தூரம் தான்… நீ எதற்க்காக காத்திருந்தாயோ அதை அடையவிருக்கிறாய்… என்று அவருக்கு அவரே நம்பிக்கை வார்த்தைகளை கூறிக்கொண்டு படகை வேகமாக செலுத்தலானார்.

அப்போது தான் அந்தக் காட்சியை பார்த்தார். பக்கவாட்டில் சற்று தூரத்தில் ஏதோ வித்தியாசமாக பார்த்தார். ஒரு படகு கவிழ்ந்து இரண்டு பேர் அதை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் சிங்கப்பூர் சார்பாக இரட்டையர் அணியில் இடம்பெற்றிருந்த சக போட்டியாளர்கள். அவர்கள் சென்றுகொண்டிருந்த போட் அவர்கள் கட்டுப்பாட்டை மீறி காற்றில் கவிழ்ந்து அவர்கள் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

அடுத்த நொடி லெமியக்ஸ் செய்த செயல் தான் அவரை வரலாற்றில் இடம்பிடிக்கச் செய்தது.

தனது பந்தயப் பாதையில் இருந்து விலகி அவர்களை நோக்கி தன் படகை செலுத்திய லெமியக்ஸ் மிகவும் கஷ்டப்பட்டு இருவரையும் இழுத்து தன் படகில் போட்டு அவர்கள் உயிரை காப்பாற்றினர். அவர்களில் ஒருவருக்கு கடும் ரத்தக் காயம் வேறு. இவரது படகே அப்போது கவிழக்கூடிய சூழ்நிலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களுக்கு அந்த சூழலில் தான் செய்யக்கூடிய முதலுதவியை செய்துவிட்டு RESCUE PATROL க்காக காத்திருந்தார். அவர்கள் வந்தவுடன், அவர்களது போட்டில் இருவரையும் ஏற்றிவிட்டு தான் மறுபடியும் தனது பந்தயத்தை தொடர்ந்தார். ஆனால், இரண்டு உயிர்களை காப்பாற்ற ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்த முயற்சியில் லெமியக்ஸ் பந்தயத்தில் மிகவும் பிந்தங்கிவிட்டார். இரண்டாம் இடத்தில் இருந்தவர் தற்போது 22 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

லெமியக்ஸ்ஸின் ஒலிம்பிக் கனவு தகர்ந்து போனது.

தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருப்பவர்கள் மத்தியில் லெமியக்ஸ்ஸின் செயல் உண்மையில் சிலிர்க்க வைக்கும் ஒன்று.

ஆனால் விருது வழங்கும் நிகழ்ச்சியில், சர்வேதேச ஒலிம்பிக் சங்கத்தின் அப்போதைய தலைவர், ஜூவான் சமரன்ச் ‘Pierre de Coubertin’ என்கிற சிறப்பு விருதை வழங்கினார். இது True medal of Sportsmanship என்று அழைக்கப்படும் தங்கப்பதக்கத்தைவிட உயர்ந்த விருது. கௌரவம்.

(The Pierre de Coubertin medal, lso known as the De Coubertin medal or the True Spirit of Sportsmanship medal, is a special decoration awarded by the International Olympic Committee to those athletes and former athletes who exemplify the spirit of sportsmanship in Olympic events or through exceptional service to the Olympic movement.

The medal was inaugurated in 1964 and named in honour of Pierre de Coubertin, founder of the International Olympic Committee. According to the Olympic Museum, “It is one of the noblest honours that can be bestowed upon an Olympic athlete.)

விருதை அளிக்கும்போது லெமியக்ஸை பார்த்து ஜூவான் சமரன்ச் சொன்னார் : “ஒலிம்பிக் போட்டி நடத்துவதன் நோக்கம் உங்களை போன்ற தியாக உள்ளமும் துணிவும் கொண்ட வீரர்களால் தான் நிறைவேறுகிறது. நீங்கள் தான் உண்மையான வீரர்!” என்றார்.

நம் வாழ்விலும் லாரன்ஸ் லெமியக்ஸ் சந்தித்தது போன்ற சூழ்நிலைகளை நாம் அடிக்கடி சந்திக்கிறோம். நமது படகு, நமது பந்தயக் களம், நாம் கேட்கக்கூடிய அபயக்குரல்கள் வேறு வேறு. ஆனால், சவால் ஒன்று தான்.

Great achivement

நமது சொந்த இலட்சியங்கள் Vs உயர்ந்த செயல்கள் – எது முக்கியம் என்று நம்மால் அறுதியிட்டு கூறமுடியுமா? மிக உன்னதமான விஷயங்களுக்காக நமது தனிப்பட்ட லட்சியங்களை நாம் மனமுவந்து விட்டுக்கொடுப்போமா? நமது வேகத்தை குறைத்துக்கொள்வோமா? எது உண்மையில் மிகவும் முக்கியம் என்பதை அறிந்திருக்கிறோமா?

கார்ப்பரேட் உலகத்தின் உச்சத்துக்கு செல்லும் வழி பிணக்குவியல்களால் நிறைந்தது என்று சொல்வார்கள். நமது தனிப்பட்ட வெற்றிக்காக நமது நண்பர்கள், சக ஊழியர்கள், உடனிருப்பவர்களை நாம் பலியிடுகிறோம். இது சரியா?

நீங்கள் எதைக் கொண்டு பலர் நினைவில் வாழ்வீர்கள்?

  • ப்ரோமோஷனுக்கான போட்டியில் உங்கள் சக ஊழியரை முந்திச் சென்ற காரணத்தினாலா?
  • நல்ல வெயிட்டான பேங்க் பாலன்ஸ் வைத்திருப்பதாலா?
  • அல்லது கடும்போட்டிக்கிடையே தலைமைப் பதவியை கைப்பற்றியதாலா?

அல்லது

  • இவை எல்லாவற்றையும்விட யாரோ ஒருவருடைய வாழ்க்கையில் / கேரியரில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்திய காரணத்தினாலா?

எந்த காரணத்திற்காக நீங்கள் நினைவில் வைத்து போற்றப்படுவீர்கள்?

ஒரு நிறுவனத்தில் முக்கிய பதவியை நீங்கள் எப்படியாவது பெற்றுவிடலாம். ஆனால், ஒரு கட்டத்தில் நீங்கள் எதைக்கொண்டு நினைக்கப்படுவீர்கள் என்று சற்று ஆற அமர சிந்தித்து பார்க்கவேண்டும்.

லெமியக்ஸ் தற்போது போட்டிகளில் இருந்து ஒய்வுபெற்றுவிட்டார். ஆனால், தற்போது ஒரு வெற்றிகரமான பயிற்சியாளராக பரிமளிக்கிறார். வாழ்க்கையின் அனைத்து மட்டங்களில் இருப்பவர்களும் அவரது கதையை கேட்க ஆர்வம் காட்டுகின்றனர்.

“நான் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று பதக்கம் பெறாதது தான் என் வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய நல்ல விஷயம். காரணம் பதக்கம் வென்றிருந்தால், என்னை இந்நேரம் எல்லாரும் மறந்திருப்பார்கள். ஆனால், பதக்கத்தை தியாகம் செய்ததால் தான் பலர் இன்றும் என்னை மறக்காமல் இருக்கிறார்கள்!” என்று வேடிக்கையாக கூறுகிறார் லெமியக்ஸ். ஆனால் அது தானே உண்மை?

அன்று அந்தப் போட்டியில் உண்மையில் தங்கம் வென்றது யார் என்று எத்தனை பேருக்கு தெரியும்?

பல்லாயிரம் வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேரை நமக்கு நினைவில் இருக்கிறது? (சர்ச்சைகளுக்கிடையே வெற்றி பெற்ற ஒரு சிலரைத் தவிர யாருக்கும் யாரையும் தெரியாது!)

ஆனால், லெமியக்ஸ் தனது வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் அன்று அவர் செய்த தியாகம் காரணமாகத் தான், சியோலில் 1988 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இன்று நாம் மீண்டும் நினைவுகூர்கிறோம். நம்மையுமறியாமல் லெமியக்ஸுக்கு ஒரு சல்யூட் அடிக்கிறோம்.

வெற்றி என்றால் என்ன என்பது குறித்த நமது கண்ணோட்டத்தை மாற்றவேண்டிய தருணம் இது.

  • உங்கள் தங்கப் பதக்கம் எது?
  • சக போட்டியாளர்கள் ஆபத்தில் இருக்கும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள்?

லெமியக்ஸின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்பது கேள்வியல்ல!

இதுவரை நீங்கள் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதே கேள்வி…!

பதக்கம் முக்கியமல்ல. அதை தியாகம் செய்யகூடிய அந்த மனம் தான் முக்கியம்!

http://rightmantra.com/?p=25771

==========================================================

* இது போன்ற உண்மைச் சம்பவங்கள் மற்றும் இதில் இடம்பெறும் தகவல்கள் போட்டித் தேர்வுகளில் (COMPETITIVE EXAMS) பங்கேற்பவர்களுக்கு உதவக்கூடும். அத்தகையோர் சிறு டயரியில் இதில் உள்ள தகவல்களை பெயர்களை எழுதிக்கொள்ளவும்.

==========================================================

* To those who are new to this website

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check :

வாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன?

உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான, அவசரமான கேள்வி!

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

==========================================================

[END]

3 thoughts on “தோல்வியிலும் வென்ற ஒரு உண்மை வீரன் நமக்கு போதிக்கும் பாடம்!

  1. என் குழந்தைகளுக்கு நேற்று இரவு இந்தக் கதையை தான் கூறினேன். உண்மையில் அற்புதமான மனிதரைப் பற்றிய அற்புதமான பதிவு. \

    ஒலிம்பிக் போட்டியில் இப்படி ஒன்று நடந்து, அவர் உரிய முறையில் கௌரவிக்கப்பட்டார் என்பது உண்மையில் வியப்பூட்டும் ஒன்று.

    பதிவு உணர்த்தும் நீதி உண்மையில் அனைவரும் கவனித்தில் கொள்ளவேண்டிய ஒன்று.

    கார்பரேட் உலகின் தலைமைப் பதவிக்கு நடைபெறும் போட்டி குறித்த உங்கள் கருத்து நெத்தியடி. தாங்கள் வெற்றி பெற என்னவேண்டுமானாலும் செய்யக்கூடிய மனிதர்கள் நிரம்பிய இந்த உலகில், லெமியக்ஸ் போன்றவர்கள் வணங்கவேண்டியவர்கள்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *