இது குறித்த தகவலை ராணி அவர்கள் நமக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தி நன்றியும் கூறியிருந்தார். அதை அப்போது நாம் தயார் செய்துகொண்டிருந்த மேற்படி பதிவில் சேர்த்து அளித்துவிட்டு நாம் நமது பணிகளை கவனித்துக்கொண்டிருந்தோம். மற்றபடி என்ன நடந்தது, அவர் எப்படி இதிலிருந்து மீண்டார் என்றெல்லாம் நமக்கு தெரியாது. கிட்டத்தட்ட இதை மறந்து அடுத்தடுத்த பணிகளில் மூழ்கியிருந்தோம்.
இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்பு ராணி அவர்கள் நம்மை தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியது நம்மை கண்கலங்க வைத்தது. தமது மகள் மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு முன்பு போல சராசரி வாழ்க்கை வாழத் துவங்கிவிட்ட தகவலை நமக்கு தெரியப்படுத்த சரியான தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்ததாகவும் சென்ற மாதம் இரண்டாம் வாரம் கும்பகோணம் மகாமகத்துக்கு சென்று சதாப்தி ரயிலில் திரும்பிக்கொண்டிருக்கும்போது தமது மகள் முற்றிலும் குணமான செய்தியை நமக்கு மின்னஞ்சலில் தெரிவிக்க விரும்பியதாகவும் ஆனால் தனக்கு ஆங்கிலத்தில் வார்த்தைகளை வடிக்க தெரியாததால் ரயிலில் எதிர்சீட்டில் அமர்ந்திருந்த ஒரு இளைஞரிடம் விஷயத்தை சொல்லி அவரைக் கொண்டு தட்டச்சு செய்து ரயிலில் இருந்தபடி நமக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் கூறினார். நம் தளத்தில் தான் படித்த மகாமகம் தொடர்பான பதிவுகள் தமது மகாமக தரிசனத்துக்கு மிகவும் உபயோகமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
அடுத்து அவர் கூறியது தான் ஹைலைட். நரகத்தை ஒத்த அந்த துன்பத்திலிருந்து தான் மீண்ட அந்த அனுபவங்களை தமிழில் வார்த்தைகளாய் வடித்து தன் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை நமக்கு ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பியிருப்பதாகவும் அதை தளத்தில் அவசியம் வெளியிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அவரது பொறுப்புணர்வும் நன்றியுணர்ச்சியும் நம்மை சிலிர்க்க வைத்தது. அவருக்கு நெஞ்சம் நெகிழ்ந்து நன்றி தெரிவித்தோம்.
ராணி அவர்கள் பிரார்த்தனை சமர்பித்த அந்த காலகட்டம் நமக்கு நினைவுகளில் மீண்டும் நிழலாடியது. மிக மிக கடினமான காலகட்டம் அது. (அவருக்கும் சரி… நமக்கும் சரி…!).
கோவையை சேர்ந்த நமது வாசகி சுமா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நமது பிரார்த்தனை கிளப்புக்கு ராணி அவர்கள் அப்போது பிரார்த்தனை அனுப்பிருந்தார்.
அந்த சமயத்தில் நம்மிடம் பேசும்போதே உடைந்து அழுதுவிடுவார். மகள் சிவசக்தி தொண்டைப் புற்றுநோய் முற்றி, துரும்பாய் இளைத்து, தாடை முழுமையும் பெயர்த்து எடுத்தது போன்று முகமே உருமாறி கிடக்கும் அவலத்தை சொல்லி சொல்லி அழுவார். மருந்து மாத்திரை விடுங்கள் பச்சை தண்ணீர் கூட குடிக்க முடியாமல் அவர் அவஸ்தை பட்ட நேரம் அது. உடலுக்கு தேவையான ஊட்டமோ உணவோ கிடைக்காமல் வாரக்கணக்கில் சிவசக்தி போராட, பூவை தணலில் போட்டு வாட்டியது போல ஒட்டுமொத்த தோற்றமும் உருக்குலைந்து மாறிப்போனது.
ஒரு பக்கம் கொடுநோய், ஒரு பக்கம் பொருளாதாரப் பிரச்னை, ஒரு பக்கம் குடும்பத்தில் பிரச்சனை இப்படி நாலாபக்கமும் தொடர் தாக்குதலால் அந்த தாய் கதறித் துடித்தார். அவரது நிலைமை உணர்ந்து, அவருக்கு நாம் நம்பிக்கையும் ஆறுதலும் கூறிவந்தோம்.
இன்றைய உலகிற்கு தேவை இந்த நம்பிக்கையும் ஆறுதலும் தான். இதற்கு காசு பணம் தேவையில்லை. உங்கள் நேரத்தில் கொஞ்சம் செலவிட்டால் போதும்.
இது அடிக்கடி நடந்தது. ஒரு கட்டத்தில் ஆறுதல் கூற முடியாத அளவுக்கு நிலைமை கைமீறிச் சென்றது. நமக்கும் என்ன சொல்வது, எப்படி சொல்லி தேற்றுவது என்று தெரியவில்லை. பிரார்த்தனைக்கு நிச்சயம் பலனிருக்கும். ஆனால், TRYING TIME என்று சொல்லக்கூடிய இந்த கடினமான காலகட்டத்தை அவர்கள் தாண்டி வரவேண்டும். அந்த பாதையின் உக்கிரம் தெரியாமல் நம்மை பாதுகாக்கும் பணியை தான் பிரார்த்தனை செய்யும்.
அப்போதைக்கு அவரை சமாதானப்படுத்தவேண்டும் என்பதற்காக “அம்மா… கவலைப்படவேண்டாம். நிச்சயம் இந்த கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் இருக்கும். மகா பெரியவாவை நம்புங்கள். அவர் கைவிடமாட்டார்…” என்று கூறி ‘குரு சரித்திரம்’ நூலையும், கூடவே மகா பெரியவரின் படம் ஒன்றையும் அவருக்கு அனுப்பி வைத்து, “இதை படியுங்கள்… படித்து முடிக்கும்போது நிலைமை மாறியிருக்கும்” என்று ஏதேதோ சொல்லி நமக்கு தெரிந்த ஒரு வழியை காண்பித்தோம்.
கூரியர் அனுப்பியவுடன் அது கிடைத்ததை உறுதிப்படுத்திக்கொண்டதோடு சரி… அதன் பிறகு அவருடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரும் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்துகொண்டிருந்தார்.
அடுத்த சில மாதங்களில் இதை மறந்துவிட்டோம்.
தற்போது கடிதம் அனுப்பியிருப்பதாக சொன்னவுடன், ஏதோ ஒரு சிறிய தாளில் நான்கு வார்த்தைகள எழுதி அனுப்பியிருப்பார் என்று நினைத்தோம். ஆனால் நான்கு பக்கங்கள் அடங்கிய பெரிய கடிதத்துடன் இணைப்பாக நாம் சற்றும் எதிர்பாராத வண்ணம் நமது தளத்திற்கு தன்னால் இயன்ற ஒரு தொகையை காசோலையாகவும் அனுப்பியிருந்தார்.
பொதுவாக இவர்களைப் போன்றர்கள் மனமுவந்து அகமும் புறமும் குளிர்ந்து நமக்கு செய்யும் உதவியானது ஒப்பற்ற ஒன்று. வையகமும் வானகமும் கூட அதற்கு ஈடாகாது. அவருக்கும் சரி… நமக்கும் சரி… விருத்தியை தரக்கூடியது. சுருங்கச் சொன்னால் ‘வினையற்ற செல்வம்’.
முழு கடிதத்தை படித்து உருகிப்போனோம். உடனே அவரை அலைபேசியில் அழைத்து, “அம்மா… நீங்கள் இந்த கடிதம் அனுப்ப வேண்டும் என்கிற அவசியம் இல்லையே. அது தான் ஏற்கனவே என்னிடம் தெரியப்படுத்திவிட்டீர்களே….”
“இல்லை சுந்தர்… இதை நான் அனுப்பிய காரணம் ரைட்மந்த்ரா வாசகர்களிடம் என்னுடைய உணர்வுகளை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். இத்தனை ஆண்டு காலமும் ரைட்மந்த்ராவும் உங்கள பதிவுகளும் எந்தளவு எனக்கு ஆறுதலும் மனநிம்மதியும் தந்தது என்பது எனக்குத் தான் தெரியும். தவிர பிரார்த்தனை சமர்பித்த காலகட்டத்தை நினைத்தால் இப்போது கூட கலக்கமாயிருக்கிறது. நெருப்பில் இட்ட புழு போல நான் துடித்த அந்த காலகட்டத்தில் உங்கள் வார்த்தைகளும் பிரார்த்தனையும் எந்தளவு எனக்கு ஆறுதலாய் இருந்தது என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஒருவேளை உங்கள் அறிமுகமும் ரைட்மந்த்ராவும் எனக்கு கிடைக்கவில்லை என்றால் நானும் என் மகளும் என்ன ஆகியிருப்போம் என்றே சொல்ல முடியாது. என் கடிதத்தை படிக்கும் அனைவருக்கும் நம் தளத்தில் சமர்பிக்கப்படும் ஒவ்வொரு பிரார்த்தனையின் மீதும் நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதே என் ஆசை. உங்கள சேவை சிறக்க வாழ்த்துக்கள்!”
இந்த நிகழ்வின் விளைவாக நம் மீது பாசம் பொழிய பெற்ற அன்னையை தவிர இன்னுமொரு அன்னையும் கிடைத்திருக்கிறார். ஆம்… பெற்றவர்கள் ஆற்றவேண்டிய கடமையை தான் ஆற்ற உறுதி பூண்டிருக்கிறார்.
ராணி அம்மா அவர்கள் அடுத்து நம்மிடம் ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்திருக்கிறார். குடும்பத்துடன் தன் மகளையும் பேரனையும் அழைத்துக்கொண்டு காஞ்சியில் உள்ள மகா பெரியவாவின் அதிஷ்டானத்தை தரிசிக்கவேண்டும் என்றும் நாம் அவசியம் உடன் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிச்சயம் அழைத்துச் செல்வதாக உறுதியளித்திருக்கிறோம். இம்மாத இறுதிக்குள் காஞ்சி பயணம் இருக்கும் என்று நம்புகிறோம்.
ஒரு விஷயத்தை வாசகர்களிடம் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாம் பெரிய பக்திமான் அல்ல. ஒரு சராசரி மனிதன். குற்றங்குறைகள் நம்மிடமும் உண்டு. ஆன்மிகம் என்பது ஒரு பெரிய சமுத்திரம் என்றால் நாம் கரையில் நின்று அதை வியப்புடன் பார்த்து காலை நனைத்துக்கொண்டிருக்கும் ஒரு சிறு குழந்தை போல. ராணி அவர்களுக்கு நடைபெற்ற இந்த நிகழ்வை பொருத்தவரை நாம் ஒரு கருவி. அவ்வளவே. கரங்கள் தான் போற்றுதலுக்கு உரியவையே தவிர கருவி அல்ல. இந்த அதிசயத்துக்கு முழுக்க முழுக்க ராணி அவர்களின் நல்வினைப்பயனும், அவர் செய்த வழிபாடும், அவர் மஹா பெரியவா மேலும் எல்லாம் வல்ல இறைவன் மேலும் கொண்டிருந்த அசைக்க முடியாத பக்தியும் தான் இதற்கு காரணம். ஏனெனில், துன்பத்தில் செய்யப்படும் பக்தியே உயர்ந்த ஒன்று. இன்பத்தில் அனைவராலும் பக்தி செய்ய இயலும். துன்பத்தில் தான் முடியாது. ஆனால், ராணி அவர்கள் துன்பத்திலும் பக்தி செய்திருக்கிறார். அது தான் மிகப் பெரிய வரப்பிரசாதம். அந்த சிந்தனை, MINDSET எல்லாருக்கும் வராது.
ராணி அவர்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல இந்த கடித்தை எழுதியிருக்கும் பாங்கை கண்டு நாம் வியந்தோம். எந்தளவு அவர் பக்குவப்பட்டிருக்கிறார் என்பது புரிந்தது.
தலைவன் துணையிருப்பான். இனி அவருக்கு எந்தக் குறையும் இல்லை.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே !
ராணி அவர்களின் கடிதம் உங்கள் பார்வைக்கு….
========================================================
அன்புடன் அம்மா…
அன்பு மகன் சுந்தருக்கு, கோவையிலிருந்து ராணி அம்மா எழுதிக் கொண்டது.
இப்பவும் நான், என் மகள், மகன், பேரக்குழந்தைகள் அனைவரும் நலம்! அங்கு நீங்களும், உங்கள் பெற்றோரும், நண்பர்களும், உற்றார், உறவினர்கள், மற்றும் உமது உதவியாளர்களும் நலமாக இருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். நலமே அமையட்டும்.
என் வாழ்வில் எவ்வளவோ இன்னல்களும் துன்பங்களும், தனியாகவே கடந்து வந்ததால் வாழ்க்கை எப்படியிருக்கும், நம் கண் முன்னால் உள்ள வாழ்க்கையை எப்படி நேர்மையாக வாழ்வது என்று அனுபவமும், ஆண்டவனும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். எனவே நமக்கு வந்த துயரை, துன்பம் என்று எண்ணாமல் கடவுளின் அருகாமையில் நான் இருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டு ஒவ்வொரு நிகழ்விலும் நான் தைரியத்தை இழக்கவில்லை. நம்பிக்கையையும் இழக்கவில்லை. என் வாழ்வில் மிக அற்புதமான மகனை, மனிதரை, (உங்களை) சந்தித்தேன் என்றால் அது நீதான் தம்பி. மகா ஸ்ரீ ஸ்ரீ பெரியவர் ஆசிர்வாதம் உங்கள் வாழ்வில் நிலைத்திருக்கட்டும்.
எனக்கு 15 வயதில் திருமணம் முடிந்தாலும், என் வாழ்வில் கணவர் ஒரு குடிகாரர். உபயோகமில்லை. 2 குழந்தைகள் ஆண் – 1, பெண் -1. மிகவும் சிரமப்பட்டு பல வீடுகளில் வேலை செய்து, என் பெற்றோர் கொடுத்த கல்வியை வளப்படுத்தி நான் தனியாக முயன்று வேலை தேடி என் பிள்ளைகளை படிக்க வைத்து கரையேற்றும் சமயம் அவர் காலமானார்.
என்ன செய்வதென்று தெரியாமல், இருக்க இடமில்லாமல், படுக்க பாயில்லாமல், உடுக்க துணியில்லாமல் பல நாட்கள் கஷ்டப்பட்டு என் கம்பெனி முதலாளியின் சிறிய தொகையில் நான் ஹாஸ்டலில் தங்கினேன்.
மீண்டும் சோதனை. என் மகளை, மருமகன் துன்புறுத்திக் கொண்டிருந்தான். ஆனால் எனக்காக என் மகள் பட்ட கஷ்டம் சொல்லில் அடங்காது. அவளுக்கு ஒவ்வொன்றாக கஷ்டப்பட்டு செய்து முடித்தும் என்னால் நிமிர்ந்து நிற்க முடியாமல் 13.06.2013ல் பேரிடியாக வந்தது கேன்சர் மூலமாக. அவள் வீட்டில் இருந்தால் மாப்பிள்ளையின் அராஜகம், மகன் வீட்டில் இருந்தால் மகளைப் பார்க்கக் கூடாது என்கிறார்கள். அந்த சமயம் ஒருநாள் இரவு 9.00 மணியளவில் நான் உங்களுடன் தொடர்பு கொண்டேன்.
அம்மா உங்கள் எண்ணுக்கு நான் சில நொடிகளில் தொடர்பு கொள்கிறேன் என்று கூறினீர்கள். 9.30 மணிக்கு கூப்பிட்டீர்கள். அன்று வியாழக்கிழமை. அன்று என் வாழ்வில் வசந்தம் வீசியது. என் துயரை புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளவும், நாங்கள் இருக்கிறோம், அம்மா கவலைப்படாதீர்கள் என்று நீங்கள் சொன்ன ஒரு வார்த்தை என்னை மனம் நெகிழ வைத்து விட்டது. அந்தநாள் என்னால் மறக்கமுடியவில்லை. மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லவும் நல்ல மனம் வேண்டும்.
துன்பம் எப்போதும் துன்பமாகவே இருக்காது. அது இன்பமாகவும் மாறும். உங்கள் பெண்ணுக்கு முன் ஜன்ம கர்மா நோயாக வந்துள்ளது. அவள் அருகில் இருந்து அவளுடன் பேசி தைரியம் கொடுங்கள், என்று கூறினீர்கள். நானும் அதுபோல் என்ன வந்தாலும் பரவாயில்லை என்று அவள் வீட்டிற்கு சென்றால் மாப்பிள்ளை இரவு 9.00 மணிக்கு ஆரம்பித்த சண்டை என்னை அடித்து வெளியே அனுப்பி விட்டார். அதையும் உங்களிடம் கூறினேன். நான் வெளியேறும் சமயம் மணி நள்ளிரவு 12 மணி நடந்தே என் மகன் வீட்டுக்கு விடியற்காலை 3.40க்கு வந்து சேர்ந்தேன். அன்று எனக்குள் சிறு மாற்றம். ஏன் நம்மால் முடியாது.
அன்று என் நிலைமை மனதிற்குள் மாறவும், என் மகளுக்காகவும் வெளிப்படையாகவும் தங்களிடம் வேண்டுதல் பிரார்த்தனைக்கு வைத்தேன். முதலில் உங்கள் பிரார்த்தனையில் என் மாப்பிள்ளையை வீட்டை விட்டு துரத்தினார் கடவுள். பின்பு நான் தனியாக என் மகளை கவனித்துக் கொண்டிருந்தேன்.அந்த சமயம் அவள் உடம்பில் உயிர் மட்டும்தான் ஊசலாடிக் கொண்டிருந்தது. என் மனநிலை எப்படியிருக்கும். உங்கள் பிரார்த்தனை நேரத்தின் போது நானும் அமர்ந்து விடுவேன் அவளருகில் கண்ணீருடன். என் மகள் மிகவும் அன்பானவள்.
எங்களைத் தேடி, எங்கள் வீட்டுக்கு முகம் தெரியாத ஒரு நடுத்தர வயது பெண்மணி வந்தாள். “அம்மா, இன்று உங்கள் மகளுக்காக பிரார்த்தனை செய்ய வந்திருக்கிறேன். செய்யட்டுமா?” என்று கேட்டாள். நானும் சரியென்றேன். தம்பி நீங்கள் நடத்திய அந்த பிரார்த்தனைக்கு எவ்வளவு சக்தியுள்ளது என்பதை என்னால் வார்த்தையால் சொல்லமுடியவில்லை. ஆச்சர்யம். ஆனால் உண்மை. இறைவனுக்கு பொதுவான உண்மை. அற்புதம். அவன், பிராத்தனை மூலம் முகம் தெரியாத அன்புள்ளங்கள் நடத்திய பிரார்த்தனையின் மூலம் அவளுக்கு ஆசீர்வாதம் கிடைத்தது. மூன்றாம் நாள் உடலில் அசைவு வந்தது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு உயிர் வந்தது. 2 வருட காலத்தில் சிறப்பான முன்னேற்றம்.
தம்பி, இதற்கு மேல் என்னால் எழுதவே முடியவில்லை. ஆனந்தக் கண்ணீர். அற்புதம், பிரார்த்தனையுடன் கூடிய அற்புதம். பிரார்த்தனைக்கு மகத்தான சக்தியுள்ளது. இன்று எல்லோரும் ஆச்சர்யப்படும் வகையில் நலமுடன் உள்ளாள். நானும் மனநிம்மதியுடனும்,சந்தோஷத்துடனும் இருக்கிறேன்.
வியாழக்கிழமை உன்னிடம் பேச ஆரம்பித்து, அதேபோல் கடந்த வியாழக்கிழமை 10.03.2016 அன்று உங்களுக்கு வேறு ஒருவர் உதவியுடன் மெயில் அனுப்பினேன். அதுவும் அற்புதம் தான் தம்பி. ஏனெனில் 7ம் தேதி தான் டாக்டரிடம் ஆதாரபூர்வமாக அவள் கேன்சரிலிருந்து புத்துயிர்பெற்று நலமோடு உள்ளாள் என்ற ரிப்போர்ட் வந்தது. உங்கள் அனைவருக்கும், என் மகளுக்காக பிரார்த்தனை செய்த அந்த நல்ல உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி! நன்றி நன்றி!
தம்பி உளமார்ந்த நன்றியுடன் சொல்லிக் கொள்கிறேன். நான் வைத்த 2 பிரார்த்தனைகளும் நிறைவேறியது. பிரார்த்தனை என்பது மிகவும் புனிதமானது. சக்தி வாய்ந்தது. என் வாழ்க்கையில் நான் கண்ட அனுபவத்தை உங்களிடம் பங்கு கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
தம்பி….!
நிறைய செய்யுங்கள். நிறைவாக செய்யுங்கள். உங்கள் தளம் தேடி வரும் பிரார்த்தனைகள் கடவுளின் செவிகளுக்கு சென்று அவர் அந்த பிரார்த்தனையின் மகிமையும், உங்கள் தன்னலமற்ற சேவையையும் அவர் உலகிற்கு கொண்டு வருவார். உங்கள் நல்ல உள்ளத்தில் அவர் வாழ்ந்து, உங்களையும் வாழவைத்து உங்கள் மூலம் மற்றவர்களையும் வாழவைப்பார்.
அவர் மக்களுக்கு செய்ய விரும்பியதை, உன்னைத் தேர்ந்தெடுத்து உன் மூலமாக மக்கள் குறைகளை தீர்த்து வைக்கிறார். நீ ஒரு தெய்வக் குழந்தைதான் தம்பி. உன்னை ஈன்ற உன் தாயாருக்கு அவரது பாதார விந்தங்களுக்கு பணிவான வணக்கம்! அன்னாரது ஆசி வேண்டும், நன்றியறிதலுடன் ராணி அம்மா.
நான் என் வாழ்க்கைச் சோதனைகளை ஏன் சொன்னேன் என்றால், இன்று கௌரவமான பணியிலும், மன நிம்மதி கிடைத்து இருக்க அந்த பிரார்த்தனை தான் என்னை வென்றது. எல்லாவற்றும் நம் மனதை பயன்படுத்தி பிரார்த்தனை உளமார செய்யும் பொழுது கண்டிப்பாக பலன் உண்டு. உங்கள் பணியில் நானும் உன்னுடன் கைக் கோர்த்து வர விரும்புகிறேன். என் எண்ணம் பூர்த்தியாக ஆண்டவனிடம் வேண்டுதல் வைத்திருக்கிறேன்.
மக்கள் சேவைதான் மகேசன் சேவை. அது ஒரு புனிதமான நிம்மதி. நம் கைகள் கால்கள் நன்றாகப் படைத்துள்ள கடவுள், நல்ல நோக்கத்துடன்தான் படைத்துள்ளார். அவர் விருப்பப்படி நான் செயலாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு உதவுவீர்களா? காத்திருக்கிறேன்!
அன்புடன் அம்மா…
========================================================
Help us to run this website…
We need your monetary SUPPORT. Help Rightmantra in its functioning.
==========================================================
பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’
முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே
==========================================================
Articles on power of prayer :
எதிர்பாராத பிரச்சனைகளும் நமது பிரார்த்தனையும்!
வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!
உங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா?
முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே
‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’
“தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே!”
இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?
ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்!
=========================================================
நமது பிரார்த்தனை கிளப்பில் உங்கள் கோரிக்கைகளை சமர்பிக்க விரும்பினால்…
வறுமையால் வாடிய பக்தனுக்கு ஈசன் கொடுத்த சிபாரிசுக் கடிதம் – Rightmantra Prayer Club
மேற்கூறிய பதிவில் அனைத்து விபரங்களும் உள்ளன. நன்றி!
=========================================================
[END]
படிக்க படிக்க கண்ணில் நீர் தான் வருகிறது! கூட்டுப் பிரார்த்தனையின் மகத்துவத்தை உணர்த்த இதற்கு மேல் என்ன சான்று வேண்டும்? கான்சர் போன்ற உயிர் கொல்லி நோயை குணப்படுத்தும் வைத்தீஸ்வரனாக மஹா பெரியவா இருக்க நமக்கு என்ன கவலை? அதுவும் கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று! கைவிட்டு விடுவாரா என்ன?
ராணி அம்மா சொன்னது போல நீங்கள் உண்மையில் தெய்வ கடாக்ஷம் உள்ளவர் தான் சுந்தர் சார். நம் தள கூட்டுப் பிரார்த்தனைகள் மேலும் பலருக்கு உதவ வேண்டும். பல அதிசயங்கள் நிகழ வேண்டும். எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டும்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா துணை.
மிகவும் நெகிழ்ச்சியாக இருகின்றது. வார்த்தைகள் வர வில்லை. இம்மாதிரியான ஒரு துயரம் வேறு யாரவது தாங்கி கொண்டு இருப்பார்களா என்று தெரியவில்லை. அந்த கொடும் துயரத்திலும் அவரின் தொடர் பிரார்த்தனைகள் மற்றும் நம்பிக்கை என்னை வியக்க வைக்கிறது.
இறைவா !! .. நல்லவர்களை ரொம்ப சோதிக்காத..
வாழ்க வளமுடன்.
எம் இறைவா ! நின் கருணையே கருணை. கூட்டு பிரார்த்தனைக்கு நிகர் ஏதுமில்லை. எப்பொழுதும் அவன் பாதம் தொழுவோம். துன்பங்களிலிருந்து விடுபடுவோம்.
ஓம் நமசிவாய.
பிரார்தனனையின் சக்தி மிகவும் வலிமையானது, மகோன்னமானது.
உமது இந்த சிறந்த பணி மேன்மேலும் தொடர பிரார்திக்கிறேன்.
வாழ்க வளமுடன், வளர்க உமது பணி.
பதில் போட வார்த்தைகள் வரவில்லை. வெகுநேரம் கண்ணும் மனமும் சண்டித்தனம் செய்கிறது. பிரார்த்தனை பலித்தது என்பதைவிடவும் அந்த பெண் நோயிலிருந்து முற்றிலும் விடுபட்டது மிக பெரிய சந்தோசத்தை கொடுக்கிறது.
என் கண்ணில் அடிக்கடி இந்த பதிவு மறைந்தது என் கண்ணீரால்.
ஒரு தடவைக்கு இரு முறையாக படித்து பிரார்த்தனையின் அதிசயத்தை கண்டு வியந்தேன்.
விரைவில் காஞ்சி பயணம் எதிர்பார்ப்போம். நன்றி
நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு! மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இதைவிட சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை. திருமதி ராணி அவர்களின் கடிதம் நம் எல்லோருக்கும் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது. கூட்டு பிரார்த்தனையின் மீது நம்பிக்கை மேலும் உறுதியாகிறது. நம்பிக்கை தானே வாழ்க்கை. சகோதரி சிவசக்தியின் போரட்டதிர்க்குப்பின்னால் மிகப்பெரிய மனஉறுதியும் பொறுமையும் இருக்கிறது. திருமதி ராணி அவர்களின் விடா முயற்சி மற்றும் அவரது நன்றியுணர்வு அவரது கடிதத்தில் தெளிவாக இருக்கிறது.
பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான் பரந்தாமன்!
“தெய்வம் மனுஷ ரூபெந ” கூட்டு பிரார்த்தனை பல அதிசியங்களை நிகழ்த்தி வருகிறது என்பதை மீண்டும் இந்த நிகழ்வு நமக்கு நினைவு படுத்துகிறது .துன்பம் வரும் போது மட்டும் இறைவனை தொழாமல் எப்பொழுதும் இறைவனை வணங்கி வந்தால் நம் மனம் பக்குவபட்டுவிடும் .
எல்லோரும் நலம்பெற பிரார்த்திப்போம் !!!
“ஓம் சிவாய ஓம் ” ” வேலும் மயிலும் சேவலும் துணை “
டியர் சுந்தர்,
குரு வாரத்தில் ஆரம்பித்த பிரச்னை குரு சரிதம் படித்தால் குரு வாரத்தில் தீர்ந்தது !!!
இது அதிசயம் அல்ல !!
ஒரு அன்னையின் குரலுக்கு ஆண்டவனின் கருணை மழை !!!
ரைட் மந்த்ரா-வின் நம்பிக்கைக்கு கிடைத்த இறைவனின் கொடை!!
கூட்டு பிரார்த்தனைக்கு கிடைத்த வெற்றி !!
அவனை நோக்கி ஒரு அடி வைத்தால் அவன் அதற்குள் நூறு அடி ஓடி வந்து ஆட்கொள்ளுவான் என்பதற்கான சான்று !!!
ராணி அம்மையாரும், சகோதரி சிவசக்தியும் பிரார்த்தனயின் ஆற்றலை நன்கு உணர்ந்ததால் மற்றவர் குறை அகல பிரார்த்திக்க வேண்டும்!!
நிறைவாக உமக்கு ஒரு கேள்வி “கருவியின் வேலையே கடமையாற்றுவதுதனே ??!!!!”
நம்பிக்கை அதுதான் வாழ்க்கை !!!
அன்புடன்,
நெ வீ வாசுதேவன்
வணக்கம்
கூட்டுப்பிரார்த்தனையின் வலிமையைப் பறைசாற்றும் மற்றுமொரு நிகழ்வு
ராணியம்மாவும் சிவசக்தியும் உற்ற துன்பங்களை அறிந்து கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை
இதற்கு முன்னால் நமது பிரச்சினைகளெல்லாம் ஒன்றுமேயில்லை என்று தோன்றுகிறது
நம்பிக்கையும் பொறுமையும் பிரார்த்தனைக்கு மிகவும் அவசியம் என்பதை இதன்மூலம் அறிந்து கொண்டோம்
சிவசக்திக்கு நமது வாழ்த்துக்கள்
அம்மாவுக்கு நமது வணக்கங்கள்
எவ்வளவு துன்பம் வந்தாலும் அதைத் தாங்கி நம்பிக்கையுடன் காத்திருக்கும் மனவலிமையை சிவசக்தியிடமும் அம்மாவிடமும் கற்றுக் கொண்டோம்
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர் என்ற குறள் நினைவுக்கு வருகிறது
மொத்தத்தில் சிவசக்தி நமக்கெல்லாம் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்
எத்துன்பம் வரினும் நமக்காக பிரார்த்தனை செய்யவும் துணை நிற்கவும் நமது ரைட்மந்த்ரா ஆசிரியரும் நண்பர்களும் மகா பெரியவரும் இருக்கிறாா்கள் என்ற நினைப்பே மிகுந்த தைரியத்தைக் கொடுக்கிறது
நன்றி நன்றி நன்றி
இங்கே பின்னூட்டமிட்டுள்ள பலர் கூறியிருப்பது போன்று சொல்ல வார்த்தைகள் இல்லை. கண்ணீரில் எங்களை மூழ்கடித்த பதிவு. படித்து முடிக்கும்போது, ஏதோ நாங்கள் பட்ட கஷ்டங்களில் இருந்தே விடிவு கிடைத்துவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. அது தான் இந்த பதிவின் சிறப்பு.
நான் படும் கஷ்டங்கள் எல்லாம் ராணி அம்மா அவர்கள் பட்ட கஷ்டத்தின் முன் ஒன்றுமே இல்லை என்று தோன்றுகிறது. நீங்கள் கூறுவது போல, துன்பத்தில் செய்யும் பக்தியே மிக உன்னதமானது. ராணி அவர்களின் மனநிலையில் எங்களை எல்லாம் நினைத்துப் பார்த்தால் வாழ்வை முடித்துகொல்வதைத் தவிர வேறு எதுவும் தோன்றியிருக்காது. ஆனால், அவரோ நமது பிரார்த்தனையையே துடுப்பாக கொண்டு துன்பக் கடலை தாண்டி வந்துவிட்டார். இன்று மடர்வர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போன்ற கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.
ராணி அம்மாவின் மனவுறுதிக்கும் பக்திக்கும் நாங்கள் தலைவணங்குகிறோம்.
அவர் கூறுவது போல, நீங்களும் இந்த தளமும் எங்களுக்கு கிடைத்த அருட்கொடை.
உங்கள் சேவைகளும் மகத்துவமும் இந்த தளத்தின் அருமையும் பெருமையும் நமது பிரார்த்தனை மன்றத்தின் மாண்பும் வெளியுலகிற்கு தெரியவேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.
நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
நெகிழ்ச்சி
மகிழ்ச்சி
ஆனந்த கண்ணீர்
பூரிப்பு
நிம்மதி
உளமார்ந்த பிரார்த்தனைக்கு பின்னால் அணிவகுக்கும் இவ்வனைத்தையும் எல்லாம் வல்ல பரம்பொருளின் பாதங்களில் சமர்ப்பிப்போம்
திருமதி ராணி அவர்களே உங்கள் துயர் துடைக்க இறைவன் சுந்தர் அவர்களை ஒரு கருவியாக இறைவன் பணித்ததை நினைத்து இத்தளத்தின் வாசகர் என்ற முறையில் பெருமிதம் கொள்கிறேன்
மேலும் பிரார்த்தனைகளுடன் காத்திருக்கும் அனைவரின் துயர்களையும் இறைவன் விரைவில் நிவர்த்தி செய்வார் என்ற முழு நம்பிக்கையோடு காத்திருப்போம்
எல்லாம் அவன் செயல்
நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்
லோகா சமஸ்தா சுகினோ பவந்து
நெகிழ்ச்சியான கடிதம்.
**
திருமதி. ராணி அவர்களின் மகள் சிவசக்தி அவர்கள் புற்று நோயில் இருந்து மீண்டு வந்ததில் மகிழ்ச்சி.
நன்றியோடு இருப்பவர்களுக்கே இறைவனிடம் கேட்கும் தகுதியும் பெறும் உரிமையும் உண்டு என்று தாங்கள் முந்தைய பதிவில் கூறி இருந்தீர்கள். தங்களின் இந்த கூற்றும் முற்றிலும் உண்மை.
ஆனால், ராணி அவர்களுக்கு நன்றி உணர்வையும் தாண்டி தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு ஏற்ப சிரத்தை எடுத்து கடிதம் எழுதி தங்களுக்கு அனுப்பி உள்ளார். இதை போன்ற நல்ல உள்ளங்களுக்கு தான் இறைவன் உடனடியாக உதவுவான்.
இது போல், குணமான உடனேயே தனக்கு தெரியாவிட்டாலும் ஒருவரை கேட்டு மெயில் அனுப்பும் அளவிற்கு நன்றி உணர்ச்சியும், இது பத்தாது தன் உணர்வுகளை – நன்றி உணர்ச்சியையும், மற்றவரும் பலனடைய வேண்டும் என்ற உணர்வும் அவரை பல பக்கங்கள் எழுதி கொடுக்கும் அளவிற்கு இருந்திருக்கிறது என்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
மேலும் எல்லா நல்ல நிகழ்வும் வியாழக்கிழமை அன்று நடந்து உள்ளது மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்த மகான் மகாபெரியவா அவர்களும், குரு சரித்ரத்தில் வரும் குருமார்களும் அவரை முன் ஜென்ம பாவத்தில் இருந்து விடுவித்து உள்ளார்கள். மேலும், பலரும் அது போன்ற நல்ல நூல்களை படித்து இறைவனது ஆசியையும், குருமார்களின் ஆசியும் பெற்று பயனடைய வேண்டும்.
இவை அனைத்தும் பல உள்ளங்களின் பிரார்த்தனையும் தலைமை ஏற்றவர்களின் உன்னதமும் சேர்ந்து பல அதிசயங்களை நிகழ்த்துகிறது.
பிரார்த்தனை பதிவுகள் பல மாற்றங்களை செய்கிறது. தொடரட்டும் இந்த நல்ல விஷயம். பலரும் பயனடைய வேண்டும். தங்களுக்கு எனது பாராட்டுக்கள். வாழ்க.!!
Thanks ji
Really its wonderful to hear such message Prayers being answered by “Arutperungadal”. No doubt Sundar’s all tasks related to spiritual are meaningful and needy to the society.
Vazhththukal Rani Amma and Sivasakthi
சார், இதுக்கு என்ன சொல்வதுனே புரியவில்லை.
அபாரமான அற்புதம் . கூட்டு பிரார்த்தனை சக்தி மகத்தானது.
உணர உணர மெய் சிலிர்கிறது . தங்களின் மேல் உள்ள நம்பிக்கையும்
அவர்களுக்கு கிடைத்த மிக பெரிய சக்தி சார்.
வாழ்க உங்கள் தொண்டு
தங்களின்
சோ ரவிச்சந்திரன்
கைகா
Dear SundarJi,
Like Mrs,Rani amma told, you are blessed child..
We are happy to be part of your travel and being friends.
Thanks,
Rgds,
Ramesh