எனவே பசுக்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்படும் இடங்களில், அந்த தொண்டின் அருமையை நாம் உணர்ந்து பணிபுரிபவர்களை ஆதரிக்கவேண்டியது நமது அத்தியாவசிய கடமையாகிவிடுகிறது. பசுவை பராமரிப்பவர்களை ஆதரித்தால் தான், பசுக்கூட்டம் தழைக்கும். எனவே தான் கோ-சம்ரோக்ஷ்ணம் பற்றிய பதிவுகள் நம் தளத்தில் அடிக்கடி இடம்பெறுகின்றன. நம் தளத்தின் முக்கிய பணிகளுள் ஒன்றாகவும் அது இருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்கழி மாதத்தின் போது அதிகாலை ஒவ்வொரு நாளும் ஒரு கோவிலுக்கு நாம் சென்று வந்தது நீங்கள் அறிந்ததே. அப்படி செல்லும்போது ஒரு நாள், மாங்காட்டில் உள்ள வைகுண்டவாசப் பெருமாள் கோவிலுக்கு செல்ல நேர்ந்தது. அப்போது பிரகாரத்தை சுற்றி வருகையில் ஒரு கோ-சாலையை பார்த்தோம்.
மாங்காடு கோவிலுக்கு சொந்தமான கோ-சாலை இது என்று அறிந்துகொண்டோம். இங்கிருந்து தான் மாங்காடு காமாட்சியம்மன் கோவிலுக்கு விஸ்வரூப தரிசனத்திற்கும் கோ-பூஜைக்கும் பசு மாடும் கன்றுக்குட்டியும் தினசரி காலை செல்கின்றன.
நாம் சென்ற அந்த அதிகாலை நேரத்தில் பசு கொட்டிலில் ஒரு வயதான பெண்மணி பணி செய்துகொண்டிருந்தார். பசுக்களுக்கு தீவனம் வைப்பது, நீர் வைப்பது, குளிப்பாட்டுவது, சாணம் அள்ளுவது என அனைத்தும் இவர் தான். பொதுவாக கோ-சாலையை பராமரிப்பது என்பது அத்தனை சுலபமல்ல. ஆனால், ஒற்றை ஆளாய் இவர் அதை செய்து வருவது கண்டு வியப்படைந்தோம். அதற்கே இவரை பாராட்டவேண்டும்.
“தங்கும் அகில யோனிகட்கும்
மேலாம் பெருமைத் தகைமையன
பொங்கு புனித தீர்த்தங்கள்
எல்லா மென்றும் பொருந்துவன
துங்க அமரர் திருமுனிவர்
கணங்கள் சூழ்ந்து பிரியாத
அங்கம் அனைத்துந் தாமுடைய
அல்ல வோநல் ஆனினங்கள்!”– பசுவின் பெருமையை பற்றி ‘பெரிய புராணம்’
விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் : இந்த கோ-சாலையை பிரதாப்சிங் (74) & மானு தேவி (68) என்கிற இரு மூத்த தம்பதிகள் பராமரித்து வருகின்றனர். பிரதாப் சிங், மாங்காடு கோவிலில் வாட்ச்மேனாக பணியாற்றியவர். நேபாளத்தை சேர்ந்தவர்.
கோ-சாலையை பொறுப்புடன் பார்த்துக்கொள்ள ஒரு நபர் தேவைப்பட்டதால் அவரது பணிமூப்புக்கு பிறகு, அவரை அப்படியே கோ-சாலையை பார்த்துக்கொள்ளச் சொல்லி பணியமர்த்திவிட்டார்கள் கோவில் அறங்காவலர்கள் தரப்பில். கோவிலுக்கு பின்புறம் அவர்களுக்கு தங்க இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
தம்பதிகளுக்கு தமிழ் பேச தெரியாது என்றாலும் நாம் பேசுவதை புரிந்துகொள்கிறார்கள். பல விஷயங்களை கேட்டு தெரிந்துகொண்டோம். இவர்களை ஒரு நாள் நம் தளம் சார்பாக கௌரவிக்கவேண்டும் என அப்போதே மனதில் குறித்துவைத்துக்கொண்டோம். இருப்பினும் தொடர் ஆய்வுக்கு உட்பட்ட பிறகு தான் எதையும் செய்வது நம் வழக்கம்.
அதற்கு பிறகு பலமுறை இந்த கோவிலுக்கும் கோ-சாலைக்கும் சென்றிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் செல்லும்போதும் கோ-சாலையை எட்டிப் பார்த்துவிட்டு, வருவோம். மானு தேவி அவர்களை பார்க்க நேர்ந்தால் நம்மால் இயன்ற தொகையை அவ்வப்போது இவருக்கு அளிப்பதுண்டு.
கோ-சம்ரட்சணத்திற்கு ஒரு புதிய கோ-சாலையை தேர்ந்தெடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்ட பிறகு இங்கு முறைப்படி கோ-சம்ரட்சணத்தை துவக்கி இவர்களுக்கு ஏதேனும் செய்ய விரும்பினோம்.
சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நாள் இது குறித்து முடிவு செய்ய ஆலயத்தின் பட்டாச்சாரியரை சந்தித்து பேச சென்றிருந்தோம். அவர் அறங்காவலரிடம் பேச சொன்னார். கோவிலை பிரதட்சிணம் வந்து கொண்டிருந்த அறங்காவலரை சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு நமது தளத்தை பற்றியும் நமது பணிகள் பற்றியும் எடுத்துக்கூறி இந்த கோவிலில் கோ-சம்ரட்சணம் செய்ய விரும்புவது பற்றிய நமது எண்ணத்தை தெரிவித்தோம். அப்படியே கோ-சாலையை சிறப்பான முறையில் பராமரித்து வரும் பிரதாப் சிங் – மானுதேவி தம்பதியினரையும் கௌரவிக்க விரும்புவதையும் எடுத்துச் சொன்னோம்.
“உங்கள் விருப்பம். அவர்களுக்கு செய்ய விரும்புவதை தாராளமாக செய்யுங்கள். பசுக்களுக்கு தீவனத்திற்கு இங்கு எந்த குறையும் இல்லை. ஆனால், வைக்கோலுக்கு தான் அடிக்கடி தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே பிரதிமாதம் வைக்கோல் வாங்கிக்கொடுங்கள்” என்று சொன்னார்.
எனவே ஏற்பாடுகளில் இறங்கினோம். பிரதாப் சிங் வேஷ்டி எடுத்து தந்தால் கட்டுவாரா என்று தெரியாது. தவிர அவர் சட்டை அளவு வேறு வேண்டும். மேலும் அந்த அம்மாவுக்கு புடவை வைத்து தரலாமா இல்லை அவர்களுக்கு வேறு ஏதேனும் தேவையா என்றெல்லாம் கேட்டு தெரிந்துகொண்டு அவர்கள் விரும்புவதை வாங்கிக்கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
இதன் பொருட்டு ஒரு நாள் அவர்களை சந்திக்க சென்றபோது கோ-சாலையில் பணிபுரிய சௌகரியமாக இருக்கும் என்பதால் சேலைக்கு பதில் நைட்டி வாங்கி தரும்படி மானு கேட்டுக்கொண்டார். பிரதாப்சிங் தனக்கு வேஷ்டி சட்டை போதும் என்றார். அப்போது தான் அவர்கள் கைகளில் இருந்த பேரக்குழந்தையை கவனித்தோம். அது அவர்கள் பேத்தியாம். பெயர் சரஸ்வதி என்று சொன்னார்கள். வயது 2. அந்தக் குழந்தைக்கும் ஒரு சிறிய டிரஸ் எடுத்துக் கொடுப்பது என்றும் தீர்மானித்தோம்.
அவர்களை சந்தித்துவிட்டு வரும்போது கோவிலுக்கு உள்ளே ஒரு பெரியவர், உட்கார்ந்தபடி கூட்டிக் கொண்டிருந்தார். அதையும் பார்த்தபடி சென்றோம்.
அடுத்த முறை கோ-சம்ரட்சண தேதியை முடிவுசெய்துவிட்டு இதர ஏற்பாடுகளை செய்யச் சென்றபோது சென்றபோது, அந்த பெரியவர் ஏதோ தன்னால் இயன்ற பணிகளை செய்துகொண்டிருப்பதை பார்த்தோம். இந்த தள்ளாத வயதில் இவர்கள் என்ன செய்துவிடமுடியும் என்று தோன்றும். ஆனால் உண்மையில் இவர்களை போன்றவர்களை நம்பித்தான் பல கோவில்கள் இருக்கின்றன. விசாரித்ததில் கோவிலில் துப்புரவு பணி செய்பவர் என்று தெரிந்தது. பெயர் வேலு. அவரையும் மறக்காமல் கௌரவிக்கவேண்டும் என்று முடிவு செய்தோம்.
இப்படி பல முறை போய் வந்த பிறகு இறுதியாக சென்ற ஞாயிறு அதாவது 27/03/2016 கோ-சம்ரட்சணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது.
அன்றைய தினத்தில் வைகுண்டவாசப் பெருமாளை தரிசித்து நண்பர்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து, பின்னர் பசுக்களுக்கு தீவனம் அளித்து பிரதாப் சிங் – மானுதேவி தம்பதியினரை கௌரவிப்பது என்று முடிவானது.
நமது வாசகர்கள வெங்கடேஷ் பாபு, ரேவதி தம்பதியினரை கொண்டு இதை செய்ய விரும்பி, அவர்களுக்கு தகவல் தெரிவித்தோம். அவர்களும் வர ஒப்புக்கொண்டார்கள்.
முன்னதாக நாம் தீவனம் இரண்டு மூட்டைகள் ஆர்டர் செய்து, அங்கு இறக்கச் செய்தோம். (வைக்கோல் அடுத்த மாதம் முதல் ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருக்கிறோம்).
வந்திருந்த தம்பதியினரின் பெயர்களிலும் ருண விமோசனத்திற்கு பெயர்களை சமர்பித்திருந்த அனைவரது பெயர்களிலும் வைகுண்டவாசப் பெருமாளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
பின்னர் கோ-சாலை சென்று, மூத்த தம்பதியினரை கௌரவித்தோம். இருவருக்கும் துணிமணிகள், வெற்றிலைபாக்கு பழம், இனிப்பு, சிறிது ரொக்கம் அனைத்து வைத்துக்கொடுத்து அவர்களிடம் ஆசிபெற்றோம்.
குழந்தை சரஸ்வதிக்கு, இனிப்பும் பிஸ்கெட்டும் அவளுக்கு உடுத்த புதிய கவுன் ஒன்றும் தர குழந்தைக்கு அவ்ளோ குஷி.
பிரதாப் சிங், மானு தேவி தம்பதியினரை கௌரவிக்கையில், “இந்த பசுக்களை எந்த குறையுமின்றி நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். நாங்கள் உங்களை கவனித்துக்கொள்கிறோம். நீங்கள் பசுக்களுக்கு செய்து வரும் மகத்தான சேவையை பாராட்டவேண்டியே இதை செய்கிறோம். உங்கள் தொண்டு மிகப் பெரிய ஒன்று. எங்களை ஆசீர்வதிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டோம்.
அவர்களுக்கு நெகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை. நா குழறியது.
குழந்தை சரஸ்வதியை ஆளுக்கு கொஞ்சம் நேரம் தூக்கிவைத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருந்தோம். சட்டையை பிடித்து இழுப்பது, பையை பிடித்து இழுப்பது, பிஸ்கட் பாக்கெட்டை அப்படியே கடிப்பது என்று அவள் செய்த சேட்டை ஒவ்வொன்றும் கவிதை. குழந்தைகள் பங்குபெரும் வழிபாடே நம்மைப் பொறுத்தவரை பரிபூரண வழிபாடு.
இறுதியில் பிரதாப் சிங் – மானு தேவி தம்பதிகளைக் கொண்டு ரேவதி – வெங்கடேஷ் பாபு தம்பதிக்கு நம் தளம் சார்பாக ‘காமதேனு’ படம் பரிசளிக்கப்பட்டது.
சுவாமிக்கு அர்ச்சனை, பசுக்களுக்கு தீவனம், பணியாளர்களுக்கு கௌரவம் என ஒரு வழியாக கோ-சம்ரட்சணம் திட்டமிட்டதைவிட மிகச் சிறப்பாக நடந்தேறியது.
ஒரு பதிவில் இதை படிக்கிறீர்கள். ஆனால் இது நமது பல நாள் உழைப்பு. தகுதியானவர்களுக்கு தகுதியுடையவர்களை கொண்டு ஒரு வட்டத்துக்குள் அனைத்தையும் கொண்டு வந்து…. ஹப்பப்பா… இதற்காக நாம் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அனைத்தும் வைகுண்ட வாசன் அறிவான்.
இதெல்லாம் ஏதோ பணத்தைக் கொண்டு மட்டும் செய்யக்கூடிய விஷயம் இல்லை. அதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கின்றன. களமிறங்கி செய்யும்போது தான் அது புரியும். கோடி ரூபாய் கொடுத்து யானையை வாங்கலாம். ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் அதன் வாலை ஆட்டவைக்க முடியாது. நிச்சயம் திருவருள் வேண்டும்.
அலுவலகத்திற்கு வந்து புகைப்படங்களை கணினியில் தரவிறக்கம் செய்தபோது குழந்தையும் கன்றும் ஒன்றாக இருக்கும் படத்தை பார்த்தவுடன் உடற்சோர்வு, மனச்சோர்வு அனைத்தும் பறந்தே போய்விட்டது.
நல்லதொரு கோவிலில் கோ-சம்ரட்சணம் துவங்கியிருக்கிறது. இது தொடர்ந்து செம்மையாக இடர்களை தாண்டி நடைபெறவேண்டும் என்பதே நம் விருப்பம். பிரார்த்தனை. பார்க்கலாம்!
=========================================================
Help us to run this website…
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
=========================================================
Also check :
வைதரணியில் சிக்கி தவிக்கும்போது துணையாய் வருவது எது ?
மழைநீரில் தவித்த பசுக்களும் அவற்றை அரவணைத்த ஒரு தாயுள்ளமும்!
கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!
அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்?
கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
=========================================================
[END]
டியர் ஜி,
மிகவும் அருமை!
வளர்க உங்கள் தொண்டு.
அன்புடன்,
நாகராஜன் ஏகாம்பரம்
உண்மையில் இது தான் கோ சம்ரட்சணம். நல்ல பயனாளிகளை தேடிக் கண்டுபிடித்து உதவி செய்வதில் நீங்கள் எடுத்துகொள்ளும் சிரத்தை வியக்கவைக்கிறது.
கோவிலும் கோபுரமும் கோசாலையும் அத்தனை அழகு. பார்த்துக்கொண்டே இருக்க தூண்டுகிறது. திரும்ப திரும்ப இந்த பதிவை படித்துக்கொண்டே இருந்தேன்.
சரஸ்வதி குட்டி குழந்தை கன்றுக்குட்டியுடன் இருக்கும் அந்த படம் உண்மையில் சான்சேயில்லை. அவ்வளவு அழகு.
மேலும் மேலும் நமது தளத்தின் பணிகள் விரிவடையவேண்டும். புகழ் பரவவேண்டும்.
ருண விமொசனதிர்க்காக பிரார்த்தனை சமர்பித்த அனைவருக்கும் கோ-சம்ரட்சனத்தின் போது வைகுண்ட வாசப்பெருமாள் கோவிலில் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தமைக்கு நன்றி.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
Nice article.. Thanks Sundar ji…
We pray for the services to continue…
Guru charanam saranam
பிரதாப் சிங் மற்றும் மானு தம்பதியரின் சேவை ஈடு இணையற்றது !! கோடி நமஸ்காரங்கள் !! குட்டி சரஸ்வதி படு சுட்டி !!
அந்த பெரியவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!!
இறைவன் அவர்களுக்கு அனைத்தையும் அளிப்பான் !!!
வாசுதேவன் நெ வீ