இந்த பதிவு ‘ருண விமோசனம்’ தொடர்புடையது என்பதால், பதிவுக்கேற்ற வகையில் பொருளாதாரப் பிரச்சனையால் மிகவும் துன்பப்படும் ஒருவர் சிவகடாக்ஷத்தால் குபேரனும் ஏவல் செய்யக்கூடிய நிலைக்கு உயர்ந்த கதையை அளித்திருக்கிறோம்.
இந்த கதையை படிக்கும், சிரவணம் செய்யும் அனைவருக்கும் தாரித்திர்யம் விலகி, சர்வ கடன் பிரச்சனைகள் தீர்ந்து, சிவகடாக்ஷம் கிட்ட எல்லாம் வல்ல ஈசனை பிரார்த்திக்கிறோம்.
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே! ஆம், என்றும் எந்த சூழ்நிலையிலும் நமக்கு துணை அந்த ஈசனே!!
சிவபூஜைக்கு மலர் கொடுத்த ஏழைக்கு குபேரன் ஏவல் புரிந்த கதை!
முன்பொருமுறை கந்தமாதன மலையில் முனிவர்களும் விரதம் அனுஷ்டிப்பவர்களும் தவமியற்றிக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே சதானந்த முனிவர் என்பவர் வருகை தந்தார். அவரை மற்ற முனிவர்கள் வரவேற்று உபசரித்தனர். அப்போது சிவபுண்ணியம் பற்றிய பேச்சு எழுந்தது.
அப்போது சதானந்த முனிவர் கூறிய ஒரு சம்பவம் பின்வருமாறு: ”காம்பீலதேசத்தில் கருதபுரம் என்னும் நகரமொன்று இருக்கிறது. அங்கே ‘சோபனன்’ என்னும் பிச்சையெடுத்துப் பிழைக்கும் அந்தணன் ஒருவன் இருந்தான். அவன் தான் பிச்சையெடுக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் அந்த ஊரிலுள்ள தண்ணீர் பந்தல் ஒன்றிலேயே தங்கி இருந்து வந்தான். அது ஊருக்கு நடுவழியில் இருப்பதால் முகுந்தேஷ்வரரை வணங்கி பூஜிப்பவர்களுமான அநேக அந்தணர்களும் அந்த வழியாக சென்று வந்தார்கள்.
ஒரு நாள் பெருமழை பொத்துக் கொண்டு வந்தது. அப்போது சில அந்தணர்கள் அந்தத் தண்ணீர்ப் பந்தலுக்குள் வந்து அமர்ந்தார்கள். அவர்களைக் கண்டதும் சோபனன் சட்டென்று எழுந்து, ”பரம தரித்திரனாக பிச்சையெடுத்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு, இந்தப் பெருமழையைப் போல் பெருத்த ஐஸ்வர்யம் என்றாவது சொரியாதா?” என்று ஏக்கத்துடன் கேட்டான். அவ்வார்த்தைகளைக் கேட்டதும் அங்கிருந்த அந்தணர்களில் ஒருவரான ‘சிவத்விஜர்’ என்பவர் அவனை நோக்கி, ”வேதியரே! நான் பார்வதி மணாளரிடம் அளவு கடந்த பக்தி வைத்திருக்கும் சிவபக்தர்களில் ஒருவனாவேன். என்னை இங்குள்ள அனைவரும் சிவதர்மி என்றே அழைப்பார்கள்.
இப்போது நீங்கள் கூறிய வார்த்தைகள் என் காதிலும் விழுந்தன. தங்கள் விருப்பம் விரைவிலேயே நிறைவேறும்! அதற்கு நீங்கள் ஒரு காரியத்தை செய்ய வேண்டும்! நான் சதாசர்வ காலமும் வணங்கி வழிபட்டு வரும் உமா மகேஸ்வரருக்காக இன்றைய தினமே ஒரு நந்தவனத்தை உண்டாக்கி, அதில் பூத்து மலரும் நறுமணம் கமழும் மலர்களை தூய்மையான மனதோடு மலர்களை பறித்து கட்டி, சிவபெருமானின் பூஜைக்காக எடுத்துவரும் பணியினை மேற்கொள்ள வேண்டும். இந்த புண்ணிய செய்கையின் பயனாக, விரைவிலேயே உங்களுக்கு சகல நன்மைகளும் உண்டாகிவிடும்!” என்று கூறினார்.
சோபனனும் அதற்கு சம்மதித்து ஒரு நந்தவனத்தை உண்டுபண்ணி, அதைக் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தான். அதிலுள்ள மலர் செடிகள் அனைத்தும் பல வகையான புஷ்பங்களையும் பூத்து தள்ளியதும், அவன் பெருமகிழ்ச்சியோடு அவற்றை பறிக்கப் போனான். அப்போது தேவர்களின் தலைவனான தேவேந்திரன் அங்கு வந்து அவனுக்கு அழிவில்லாத அமிர்தத்தை கொடுத்துவிட்டு அவனை நோக்கி, ”அந்தணரே!, நீங்கள் இந்த உலகில் நீண்ட காலத்திற்குச் சகல போக பாக்கியங்களையும் அனுபவித்துவிட்டு பிறகு என்னுடைய தேவலோகத்திற்கு வந்து சேர்வீராக!” என்று கூறிவிட்டுச் சென்றான்.
சோபனனும் அளவு கடந்த ஆனந்தப் பெருக்கோடு, மலர்களையெல்லாம் பறித்து எடுத்து வந்து சிவபூஜகரிடம் கொடுத்தான். அவற்றை அவரும் வாங்கிக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்து மகிழ்ந்தார். அந்த புஷ்பங்கள் சிவலிங்கத்தின் மீது விழுந்த மாத்திரத்திலேயே, பரமேஸ்வரர் அங்கு தரிசனமளித்து, சோபனனை நோக்கிக் கூறினார்.
”அந்தணனே! நீ தானாகவே ஒரு நந்தவனத்தை உண்டு பண்ணி, அதில் புஷ்பச் செடிகளையும் நட்டு வளர்த்து, அதில் மலர்ந்த மணம் கமழும் புஷ்பங்களையும் பறித்து வந்து எனக்காகக் கொடுத்தபடியால், அந்த புஷ்பங்கள் அனைத்தையும் பெருமகிழ்ச்சியோடு நான் என்னுடைய தலையினாலேயே ஏற்றுக்கொள்கிறேன்! இந்தப் பெரும் புண்ணிய மகிமையால் நீ இந்த உலகத்தில் சகல சுகங்களையும் அனுபவித்துவிட்டு, முடிவில் தேவேந்திரனாகவே மாறி, சகல தேவர்களாலும் கொண்டாடப்பட்டு, இறுதியில் சிவலோகத்தை அடைந்து, மோக்ஷத்தையும் அடைவாயாக!”
இப்படிக் கூறிவிட்டு சிவபெருமான் தனக்கு அருகில் இருந்த குபேரனை நோக்கி, “குபேரனே! இந்தப் பிராமணனுக்கு ஏராளமான திரவியங்களைக் கொடுத்த வண்ணமே, எப்போதும் இவன் அருகிலேயே தங்கியிருந்து, இவன் சொற்படியெல்லாம் கேட்டு நடந்து வருவாயாக!” என்று கூறிவிட்டு தம் கணங்கள் புடைசூழ அங்கிருந்து மறைந்தார்.
அதன்பிறகு சோபனன், சிவதர்மியிடம் வந்து அவரை பக்திப் பெருக்கோடு வணங்கி, “குருதேவரே! தங்களை தரிசித்ததன் காரணமாகத்தான் இத்தகைய அளவற்ற பேறுகளும் எனக்கு கிட்டியிருக்கின்றன. சுவாமி! தங்கள் கருணையினால் நான் கிருதார்த்தனாகி விட்டேன். இந்த மலர் தோட்டத்தின் மகிமையினாலேயே ஆண்டவன் எனக்கு தரிசனமளித்து அனுக்கிரகம் தந்தருளினார்!” என்று உள்ளமுருகி கூறினார்.
அதன்பிறகு அவன் ஏராளமான போக போக்கியங்களையும் அனுபவித்துவிட்டு, தேவேந்திரனாக மாறி, முடிவில் சிவலோகத்தை அடைந்து, மோக்ஷத்தையும் அடையப் பெற்றான்.
– ஸ்ரீ கந்தபுராணத்தில் உபதேச காண்டத்தில் உள்ள கதை இது
இறைவனின் பூஜைக்கு நறுமணம் மிக்க மலர்கள் தருவதும், இறைவனின் மெய்யடியார்களை தரிசிப்பதும் எந்தளவு பலன் தரும் என்பதை கண்டோம்.
பூஜைக்கு மலர்கள் கொடுப்பதன் அவசியத்தை பற்றி ஏற்கனவே நாம் ஒரு பதிவை சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்திருக்கிறோம். அதையும் பார்க்கவும்… இறையருளை பெற இதோ மலரினும் மெல்லிய ஒரு ஷார்ட் கட்!
==========================================================
நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…
முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
==========================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர் / ஸ்ரீ சாரபரமேஸ்வரர் கோவிலில் குருக்களாக தொண்டாற்றும் திரு.சுந்தரமூர்த்தி குருக்கள்!
சுந்தரமூர்த்தி குருக்கள் மற்றும் அவர் சகோதரர் சுப்ரமணிய குருக்கள் இருவரும் திருச்சேறையில் கடந்த பல ஆண்டுகளாக செந்நெறியப்பருக்கு தொண்டாற்றிவருகிரார்கள்.
நாம் கடந்த ஜனவரி இறுதியில் திருவாரூர் சென்றிருந்தபோது கும்பகோணம் மற்றும் திருவாரூர் பகுதிகளில் சில தலங்களை தரிசித்தோம். அப்போது தரிசித்த தலங்களுள் ஒன்று திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவில்.
அங்கு திரு.சுந்தரமூர்த்தி குருக்கள் அவர்களை சந்தித்து, அந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருந்த வாசகர்கள் மற்றும் நண்பர்கள் சிலரது பெயருக்கு அர்ச்சனை செய்தோம். அப்போது திரு.சுந்தரமூர்த்தி குருக்கள், அவர்களை கௌரவித்து நமது தளம் பற்றியும் நமது பிரார்த்தனை கிளப் பற்றியும் விளக்கி, கடன் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் வாசகர்களின் நலனுக்கு நடைபெறவுள்ள கூட்டுப் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்று நம் வாசகர்களுக்காக பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். நிச்சயம் செய்வதாக மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். அவருக்கு நம் நன்றி.
மிகவும் பரபரப்பான மனிதர் இவர். எப்படியோ நேற்று அவரை அலைபேசியில் தொடர்புகொண்டு அனைத்து விபரங்களையும் மீண்டும் நினைவூட்டி, பெயர்பட்டியலை அனுப்புவதாகவும் அனைவருக்காகவும் பிரார்த்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.
அடுத்த சில வாரங்களில் நாம் கும்பகோணம் செல்லும்போது மறக்காமல் சாரபரமேஸ்வரரை தரிசித்து அப்படியே அபிஷேகமும் செய்யவுள்ளோம்.
பிரார்த்தனைக்கு ஒப்புக்கொண்டு நமக்காக பிரார்த்தனை செய்யவிருக்கும் திரு.சுந்தரமூர்த்தி குருக்கள் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.
Please check : கடனில் சிக்கித் தவிப்போரை மீட்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர்!
==========================================================
ருண விமோசனத்திற்கு பிரார்த்தனை சமர்பித்திருக்கும் அனைவரது கவனத்திற்கு…!
திருச்சேறையில் எழுந்தருளிருக்கும் செந்நெறியப்பர் என்கிற சாரபரமேஸ்வரர் அங்கே ஸ்ரீ ரிண விமோசன லிங்கத்தில் எழுந்தருளியிருக்கிறார். ருணம் என்றால் நோய், கடன் என்று பொருள். இவர் ஏதோ பொருள் சார்ந்த கடன் பிரச்னையை மட்டும் தீர்ப்பவர் என்று நினைத்துவிடவேண்டாம். இவர் பிறவிக்கடனையே தீர்ப்பவர். எனவே தான் ஸ்ரீ ரிண விமோசனர் என்று அழைக்கப்படுகிறார். கடவுளிடம் வரம் கேட்கும்போது பெரிதாக கேட்கவேண்டும் என்பதற்காக ஒருவன் பூசணிக்காய் வேண்டும் என்று கேட்டானாம். அது போல நாம் நடந்துகொள்ளக்கூடாது. பிறவிக்கடனையே தீர்ப்பவன் அவன். அவனிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு, முழு சரணாகதி அடைந்து “என் பிறவிக் கடன், திரவியக் கடன், தேவக் கடன், மாத்ரு கடன், பித்ரு கடன், ரிஷி கடன் என அனைத்து கடன்களையும் தீர்த்தருள்வாய் இறைவா” என்று பிரார்த்திக்க வேண்டும். அப்போது மேற்கூறிய எல்லா கடன்களுமே தீர்க்கப்பட்டுவிடும்.
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்… தெரிந்தோ தெரியாமலோ நாம் கடன் வாங்கி அல்லல்படுகிறோம். இது தீரவேண்டும் என்றால் ‘மந்திரத்தில் மாங்காய் காய்க்கும்’ என்கிற மனோபாவம் கூடாது. கடனை தீர்க்க நாம் உழைக்கவேண்டும். கடனில் சிக்கியிருப்பவர்கள் பெரும்பாலும் அதை தீர்க்க உழைப்பவர்கள் தான். ஆனால் எத்தனை உழைத்தாலும் கடனானது தீராமல் வட்டி, வட்டிக்கு வட்டி என்று குட்டி போட்டுக்கொண்டே சென்று உழைப்பு பலனின்றி விழலுக்கு இறைக்கும் நீராய் போய்விடுகிறது. எனவே நம் உழைப்பு பலனளித்து கடன் தீர இறைவனின் அனுக்கிரகத்தை கேட்கவேண்டும். அப்போது நிச்சயம் இறைவனின் அனுக்கிரகம் கிடைக்கும். அது கிடைத்தபிறகு எது நம்மை என்ன செய்யும்? அதைவிட்டுவிட்டு, நம் கடனை தீர்க்க இறைவன் உழைக்கவேண்டும் என்று எதிர்பார்க்ககூடாது.
ஓட்டைப் பாத்திரத்தில் நீரை எவ்வளவு நிரப்பினாலும் நீர் நிரம்பாது. அதுபோல, ஒரு பக்கம் கடன் தீர்க்க பரிகாரம் / பிரார்த்தனை இதையெல்லாம் செய்துகொண்டு மறுபக்கம் ஆடம்பர செலவுகளை அவசியமற்ற செலவுகளை செய்யவே கூடாது. வசதிகளை பெருக்கிக்கொள்ள மீண்டும் மீண்டும் கடன் வாங்கக் கூடாது. சிக்கனம் மிகவும் முக்கியம். (கவனிக்க சிக்கனம். கருமித்தனம் அல்ல.) அதே நேரம் நம்மால் இயன்ற எளிய அறப்பணிகளை செய்துவரவேண்டும். ஏனெனில் அது பல்கிப் பெருகி வினையற்ற செல்வமாக திரும்ப வரும்.
கீழே கடன் பிரச்னைக்கு நிவாரணம் வேண்டி கோரிக்கை அனுப்பியிருந்த அனைவரது பெயர்கள் விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. (இந்தப் பட்டியல் கோவிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.)
அதைத் தவிர்த்து பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுள் மிகத் தீவிர பிரச்னையில் இருப்பவர்கள் சிலரையும் தனிப் பிரார்த்தனையில் இணைத்துள்ளோம். மற்றவர்கள் தங்கள் பிரார்த்தனையை வெளியிடவேண்டுமா வேண்டாமா என்ற விபரத்தை நமக்கு தெரிவிக்கவில்லை. பிரார்த்தனை விரிவாக இடம்பெற்றுள்ள மூவரும் சந்தித்து வரும் பிரச்சனைகள் கிட்டத்தட்ட மற்ற பிரார்த்தனையாளர்களும் சந்தித்து வருகிறார்கள். எனவே இவர்களுக்கு பிரார்த்தனை செய்யும்போது மற்றவர்களுக்கும் அது தானே சென்று சேர்ந்துவிடும்.
மேலும் இரண்டொரு நாளில் நடக்கவுள்ள கோ-சம்ரட்சணத்தில் கீழ்கண்ட பட்டியலில் உள்ள அனைவரது சார்பாகவும் பசுக்களுக்கு தீவனம் வாங்கி தந்து இவர்கள் அனைவரது பெயர்களுக்கும் அர்ச்சனையும் செய்யப்படும். கோ-சம்ரட்சணத்தின் பலன் இவர்களுக்கும் நிச்சயம் கிடைக்கும்.
நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான்: கடனைத் தீர்க்க நீங்கள் மனப்பூர்வமாக உறுதி மேற்கொள்ள வேண்டும். அதற்கு உழைக்கவேண்டும். கடன் நிவர்த்தி தொடர்பான பதிவில் அளித்துள்ள நாவுக்கரசர் இயற்றிய இப்பதிகத்தை தொடர்ந்து படித்து வரவேண்டும்.
To download the Runa Vimosana Padhigam please click the following link :
http://rightmantra.com/wp-content/uploads/2016/03/rina-vimosana-padhigam.pdf
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பெயர் முதலிய விபரங்களை அனுப்பியிருக்கிறார்கள். அத்தனையும் தொகுத்து அதை டைப் செய்து ஒரே பதிவுக்குள் கொண்டு வருவது சாதாரண விஷயம் அல்ல. எனவே யார் பெயரேனும் விடுபட்டிருந்தால் தவறாக நினைக்காது நமக்கு உடனே தெரிவிக்கவும்.
கடன் பிரச்னைகளில் நிவர்த்தி வேண்டி ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரரிடம் பிரார்த்திக்கும் RIGHTMANTRA வாசகர்களின் பெயர் விபரங்கள்
32) ஜெ.அன்னபூரணி
நல்லது நடக்கும். விரைந்தே நடக்கும். வாழ்க வளமுடன், அறமுடன், நலமுடன்!
==========================================================
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
(1) கடனால் ஏற்பட்டுள்ள மன அழுத்தமும் கவலையும்
சுந்தர் அண்ணா நான் இலங்கை நாட்டை சேர்ந்தவன். உங்களுடைய தளத்தை இரு வருடமாக படித்து வருகின்றேன். கடந்த 2 நாட்களாக வேல்மாறல் மஹா மந்திரமும் படித்து வருகின்றேன். இப்போதும் கூட உங்களுடைய பழைய பதிவுகளை அடிக்கடி பார்ப்பேன். நான் வங்கி மற்றும் தெரிந்தவர்கள் சிலரிடம் கடன் பட்டு இருக்கின்றேன். வங்கிக்கடன் தவணை முறையில் செலுத்த முடியாமல் உங்களுக்கு மெயில் அனுப்பும் இந்த தருணத்தில் கூட மிகுந்த மன அழுத்தத்திலும் கவலையிலும் இருக்கின்றேன். அத்தோடு வேலை இல்லாத பிரச்சனையும் வேறு இருக்கின்றது. இது தவிர குடும்பத்திலும் பிரச்சனைகள் உள்ளது அண்ணா. என்னுடைய கடன் பிரச்னைக்காகவும் இதர பிரச்சனைகளுக்காகவும் இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்புகின்றேன் அண்ணா.
கி. கிரிஷாந்தன்,
இலங்கை
(2) கணவருக்கு தீரா நோயும் கடனும் தீரவேண்டும்! குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் வேண்டும்!
என் கணவர் பட்டாணிராமன் 18 வருடங்களாக Bipolar Disorder வியாதியால் சிரமப்படுகிறார் விடாமல் மாத்திரை சாப்பிட்டும் இன்னும் குணமடையவில்லை.
உங்கள் பிரார்த்தனை கிளப் மூலம் என் கணவருக்காக பிரார்த்தியுங்கள். தவிர, குடும்பத்தில் ஏற்பட்டுள்ள வேறொரு பெரிய பிரச்சனை காரணமாகவும் வீட்டில் அமைதியில்லை. சண்டையும் பூசலும் நிலவுகிறது. விரைவில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து பூசல்கள் ஒழிந்து நாங்கள் சந்தோஷமாக நிம்மதியுடன் வாழ பிரார்த்தியுங்கள் Please.
மீரா
(3) பாடாய்படுத்தும் நோயும் கடனும்!
தங்கள் வலைத்தளம் கண்டேன். தங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன்.
என் பெயர் சங்கர நாராயணன். வயது 47. நான் கடந்த 7 வருடங்களாக மிகவும் துன்பப்படுகிறேன். வியாபாரம் நஷ்டம் 50 லக்ஷம் மேல். இது 2007ku மேல் தாய் தந்தை உடன் பிறந்தவர்களால் காப்பாற்ற பற்று ஏதோ வாழந்து கொண்டு இருக்கிறேன். 2010ல் தந்தையாரரின் திடிர் மறைவு மேலும் வாழ்க்கை மேலும் சிக்கல் ஆகிவிட்டது. அவர் இறந்த 1 மாதத்தில் என்னால் நடக்க முடியாமல் போய்விட்டது. அவருக்கு காரியங்கள் எதுவும் என்னால் பண்ண முடியவில்லை. நான் வீட்டின் மூத்த பிள்ளை. இதன் நடுவில் கடன் தொல்லை வேறு. கோர்ட் கேஸ்கள் மிகுவும் சிக்கலாக போய்கொண்டு இருக்கிறது. எனக்கு 2 மகள்கள் 1 மகன். கடந்த 4 வருடங்களாக வீட்டின் உள்ளேயே நடமாடுகிறேன். தாயும் தம்பிகளும் வீட்டு செலவுக்கு குழந்தைகள் படிப்பு கவனித்து கொள்கிறார்கள்.
மனைவி டியூஷன் எடுத்தும் மாமியார் விட்டில் கொஞ்சம் ஓடுகிறது. எனக்கு Ostero Arthiritis என்று டாக்டர் சொல்லுகிறார்கள். ஆபரேஷன் செய்தாலும் சக்சஸ் கம்மி தான். இது டாக்டரின் முடிவு. எனக்கு செலவு செய்ய பணம் இல்லை. நிறைய சித்தா ஆயுர்வேதம் அக்கு பஞ்சர் செய்தும் தாற்காலிக நிவாரணம் கிடைக்கிறது. எனக்காக தங்கள் பிரார்த்தனை செய்யவும். நோயும் கடனும் தீரவும் கடவுள் வழி தர வேண்டும்.
என்றும் நன்றியுடன்,
சங்கர நாராயணன்,
திரு.வி.க நகர், சென்னை
==========================================================
பொது பிரார்த்தனை
தொடரும் விவசாயிகளின் தற்கொலை!
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளிக்கு இந்த நிலைமையா?
கடன் தொல்லை, வங்கி அதிகாரிகள் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இந்தியா முழுவதும் சுமார் 40% விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து வருவதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 2001ம் ஆண்டு பிறகு இதுவரை சுமார் 87 ஆயிரம் விவசாயிகள் வறுமை, கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் சுமார் 895 விவசாயிகள் தற்கொலை கொண்டுள்ளனர். சமீபத்தில்கூட அரியலூர் அருகே ஓரத்தூரை சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை கொண்டார். தஞ்சையில் விவசாயி பாலன் தனியார் வங்கியில் வாங்கிய கடன் தொகையை கட்ட முடியவில்லை என்ற காரணத்தால் அவரை கடுமையாக போலீசார் தாக்கி, டிராக்டரை பறிமுதல் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தால் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து விவசாயியிடம் டிராக்டர் ஒப்படைக்கப்பட்டது.
விவசாயிகள் தற்கொலை தொடர்பான தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் இதோ… 2014ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 12 ஆயிரத்து 360 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 2,568 பேர், தெலுங்கானாவில் 898 பேர், மத்திய பிரதேசத்தில் 826 பேர் இறந்துள்ளனர். நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்டோர் விவசாயத்தொழிலையே நம்பி உள்ளனர். வங்கிகளில் 10 பேரில் ஒருவர் மட்டுமே பயிர் கடன் பெற்று வருகின்றனர்.
அரசுகள் விவசாயிகள் நலனில் போதிய அக்கறை காட்டுவதில்லை. இதனால் தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விவசாய நிலங்களை பாதுகாப்பதில் அரசு முக்கியத்துவம் கொடுக்காதது தான் வறுமைக்கு காரணம் என மிகத்தெளிவான ஒரு பதிலை இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
தென் மாவட்டங்களில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 663 ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நிலங்களுக்கு போதிய தண்ணீர் வசதி, மின்சாரம் வசதி பெறமுடியாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கை மாற்றம், விளைச்சல் குறைவு, நோய் தாக்குதல், தரமற்ற மருந்துகள், உரங்கள், பாதுகாப்பு வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு நெல், காய்கறி பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டில் உள்ள மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் சார்ந்து வாழும் தொழிலின் வளர்ச்சியை பொறுத்தே அமையும் இந்தியாவை பொருத்தமட்டில் பெரும்பான்மையோர் விவசாயத்தையும், விவசாயம் சாா்ந்த தொழிலையும் செய்து வாழ்கின்றனர்.
தற்போது விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் தொழிற்சாலைகள், கணினி நிறுவனங்கள், கேளிக்கை நிறுவனங்கள் அதிகரித்துள்ளது. ஆனால், விவசாயத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. இதனால் விளைநிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறி, வீட்டடி மனைகளாக மாறிவிட்டன.
அரசு தங்கள் கவனத்தை விவசாயிகள் மீது செலுத்தாமல் நிராகரித்துள்ளது. இதனால் விவசாயம் அழிவுப்பாைதயை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விவசாயிகளிடம் வளமாக வாழ்வதற்கான நம்பிக்கை குறைந்து விட்டது. ஒரு நாட்டில் விவசாயத்திற்க்கு முக்கியத்துவம் அளித்தால்தான் அந்தநாடு வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும்.
இல்லாவிட்டால் இந்தியாவில் விவசாயம் என்ற ஒரு விஷயத்தையே எதிர்கால இளைஞர் கூகுளில் சென்றுதான் தேடிப்பார்க்க வேண்டும். விவசாயம் முற்றிலும் அழிந்து உணவுக்காக வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிடம் ைகயேந்த வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மத்திய, மாநில அரசுகள் இனியாவது இந்த விஷயத்தில் போதிய அக்கறை காட்ட வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பை யாராலும் தடுத்து நிறுத்தவே முடியாது.
நமக்கு சோறிடும் விவசாயின் வாழ்க்கைத் தரம் மேம்படவேண்டும். அவர்கள் கடன் பிரச்சனையிலிருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழவேண்டும்.
இனி ஒரு விவசாயி கடன் பிரச்சனையால் தற்கொலை என்ற செய்தி வரக்கூடாது. இதுவே நம் பொது பிரார்த்தனை.
==========================================================
ருண விமோசனத்திற்காக பிரார்த்தனை சமர்பித்திருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் அவர்கள் மாத்ரு கடன், பித்ருகடன், தேவகடன், ரிஷி கடன், திரவியக் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களும் நீங்கி, அவர்கள் மனநிம்மதியும், ஆரோக்கியமும், சிவகடாக்ஷமும் பெற்றும் வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறோம். அதே போல, கடன் பிரச்சனையால் துன்பப்படும் நமது விவசாயிகளின் கடன் பிரச்னையும் தீர்ந்து அவர்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெறவும் இறைவனை வேண்டுவோம். இனி ஒரு விவசாயி கூட தன் உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது என்பதே நம் பொது பிரார்த்தனை.
மேலும் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.சுந்தரமூர்த்தி குருக்கள் அவர்களின் சிவதொண்டு மேன்மேலும் சிறந்து விளங்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் ஈசனருளால் பெற்று வாழவும் பிரார்த்திப்போம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : மார்ச் 20, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
==========================================================
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
==========================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
==========================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E : editor@rightmantra.com | M : 9840169215 | W:www.rightmantra.com
==========================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131
==========================================================
சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : காக்களூர் ஆஞ்சநேயர் கோவில் முன்பாக பூக்கடை வைத்திருக்கும் திருமதி.கோகிலா அவர்கள்!
சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?
சென்ற பிரார்த்தனை கிளப் பிரார்த்தனைக்கு தலைமையேற்ற காக்களூர் கோகிலா அவர்கள் உண்மையில் கடவுளாக பார்த்து அனுப்பிய ஒருவர். முதல் வாரம் வெற்றிலை மாலையை சீவல் வைத்து கட்டி அதை அனுமனுக்கு சமர்பித்து பிரார்த்தனையாளர்களுக்காக அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தார். அடுத்த வாரம் (பிரார்த்தனை ரிப்பீட் என்பதால்) சுவாமியை தரிசனம் செய்து மூன்று முறை கோவிலை சுற்றி வந்ததாக தெரிவித்தார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி. காக்களூர் செல்பவர்கள திருமதி.கோகிலா அவர்களையும் சந்தித்து நன்றிகூறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
==========================================================
[END]
ப.நாகராஜ் .கடன் தொல்லையால் அவதியுருகிறேன்..என் பெயரை பிரார்த்தனை பட்டியலில் சேர்க்கவும். மிக்க நன்றி. சிவ சிவ சிவ