Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 1, 2024
Please specify the group
Home > Featured > ஸ்ரீராகவேந்திரர் குடிகொண்டுள்ள மந்த்ராலய மண்ணின் மகிமை!

ஸ்ரீராகவேந்திரர் குடிகொண்டுள்ள மந்த்ராலய மண்ணின் மகிமை!

print
நினைத்த மாத்திரத்தில் சில தலங்களுக்கு செல்ல முடியாது. திருவருள் இருந்தால் தான் செல்லமுடியும். ஆனால், சில தலங்களுக்கு செல்ல திருவருள் மட்டுமல்ல குருவருளும் வேண்டும். அதில் மந்த்ராலயமும் ஒன்று. மந்த்ராலயம் சாதாரண பூமி அல்ல. கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கி இன்றும் தம்மை நாடி வருவோருக்கு தனது புண்ணியப் பலன்களை வாரி வாரி வழங்கி வரும் மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ பிருந்தாவனத்தில் உள்ள பூமி. மந்திரங்கள் உறைந்திருக்கும் புனித பூமி.

Ragavendra Swamy

இன்று ஸ்ரீ ராகவேந்திரரின் 421 வது அவதாரத் திருநாள். காஞ்சி மகா ஸ்வாமிகள் மேல் நமக்கு ஈர்ப்பு ஏற்படுவதற்கு பல ஆண்டுகள் முன்னரே அமரர் மானாமதுரை சேதுராமன் அவர்களின் ராகவேந்திர மகாத்மிய சொற்பொழிவை கேட்டு கேட்டு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மேல் நமக்கு ஈடுபாடு ஏற்பட்டிருந்தது என்பதை அனைவரும் அறிவீர்கள். அது பற்றி வேறு பதிவுகளில் விரிவாக கூறியிருக்கிறோம்.

ராகவேந்திர ஸ்வாமிகள் திரு அவதாரம் கலியுகத்தில் நிகழ்வதற்கும் அவர் மந்த்ராலயத்தில் ஜீவ சமாதியானதற்கும் ஆழ்ந்த காரணம் உண்டு. கலியுகத்தில் அறம் பிறழ்ந்து பக்தி மறைந்து அவதியுறும் மக்களை நல்வழிப்படுத்தி காத்து ரட்சிப்பதற்கு என்றே ஏற்பட்ட அவதாரம் அது. புவனகிரியில் பிறந்த ராகவேந்திரர் கும்பகோணத்தில் சன்யாசம் ஏற்றும் ஆந்திர மாநிலம் அதோனி தாலுக்காவில் மந்த்ராலய ஷேத்ரத்தில் தனது பிருந்தாவனப் பிரவேசம் அமைய தேர்ந்தெடுத்தமைக்கு பல காரணங்கள் உண்டு. அவற்றுள் முக்கியமான காரணம், கிருத யுகத்தில் நரசிம்ம அவதாரத்தின் போது பிரஹ்லாதராய் இருந்தபோது அவர் யாகம் செய்த பூமி இது.

அற்ப சுகங்களுக்காகவோ சில்லறை அபிலாசைகளை அடைவதற்காகவோ, பிசாசு, பில்லி, சூன்யம் முதலிய பீடைகளை விலக்கிக்கொள்ள மட்டும் ஏற்பட்டதல்ல மந்த்ராலயம்.

பாமரர்களின் அக்ஞானத்தை போக்கவும், உலக வாழ்க்கையில் சகிக்கவே முடியாத கஷ்டங்களை போக்கவும், ஜன்ம ஜன்மாந்திரங்களாக தொடர்ந்து வரும் ஊழ்வினையின் கடுமையைத் தீர்க்கவும்,

தெரிந்தே செய்த பாவங்களை சொல்லி கண்ணீர் விடுவோருக்கு மன்னிப்பு அளிக்கவும், பரிபூரண சரணாகதி அடைந்தவர்களுக்கு மனதிலும், கனவிலும் தோன்றி எல்லா நன்மைகளையும் அருளும் தெய்வசக்தி இங்கு சாக்ஷாத்காரமாக இருக்கிறது.

ஸ்ரீ நரஹரியின் முன் எந்தப் பீடைதான் – அக்ஞானம் தான் நிற்க முடியும்?

தமது வீணாகானத்தால் ஜீவாத்மாவை ஆனந்தப்படுத்தி, உலக வாழ்க்கையில் அனுபவிக்கக் கூடிய எல்லா சௌகரியங்களையும் கொடுத்து ஞானயோகத்தையும் புகட்டக்கூடிய சௌலப்யமூர்த்தி ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இருக்கிறாரல்லவா?

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் முதலிய நான்கு புருஷார்த்தங்களையும் கொடுக்கும் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி இருக்கிறாரல்லவா? தமது கருணா கடாக்ஷத்தாலேயே பிரம்மா வித்தையை புகட்டக் கூடிய வேதவியாசர் இருக்கிறாரல்லவா?

மற்றும் ஜெகன்மாதா – மாஞ்சாலி அம்மன் ஸ்வரூபத்தில் இருக்கிறாளல்லவா? பீடைகளை விரட்டியடித்து பக்தி வைராக்கியத்தை அளிக்க வல்ல – பக்தர்களுக்கெல்லாம் அரசராகிய ஹனுமான் இருக்கிறார்.

முழுமுதற் கடவுள் என்று ஒரு சித்தாந்திகள் இவரே ஸ்ரீ ஹரி ஸர்வோத்தமனுடைய பக்தர்களில் முதல்வர் என்று மத்வசித்தாந்திகள் போற்றி வணங்கும் மகாதேவன், திரிபுரம் எரித்தவன், காலாக்னி ருத்ரன், பரமேஸ்வரன் இருக்கிறார்.

இவர்கள் அல்லாமல், சாந்த ஸ்வரூபியான ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன், ரௌத்ர மூர்த்தியாகிய ஸ்ரீ நரசிம்ஹர், கருணாமூர்த்தியாகிய ஸ்ரீ ராம சந்திரபிரபு, சௌலப்யமே உருவமான ஸ்ரீ கிருஷ்ணர், தன தான்யங்கள், மக்கட்பேறுகள், பசு, நல்ல மனைவி, நன்மக்கள், சௌகரியமுள்ள சொந்த வீடு எல்லாம் கொடுக்கும் ஸ்ரீ மகாலக்ஷ்மி இவர்களுடைய சக்திகளை கொண்ட சாளக்ராமங்கள் குருராஜருடைய சிரசின் மேல் இருக்கின்றன.

Ragavendra Swamy2

துயர் துடைக்கும் பிருந்தாவனம்

கடந்த முன்னூறு வருஷங்களில் கோடிக்கணக்கான மக்களின் துயர் துடைத்த பிருந்தாவனம்; குடும்ப வாழ்க்கையில் கணக்கற்ற கஷ்டங்களை அனுகவித்து மனமொடிந்த நிலையில் ”இனி ஏன் உயிர் வைத்திருக்க வேண்டும்” என்று சோர்ந்து வந்தவர்களுக்கு மனசாந்தி அளித்து வாழவைத்து வரும் பிருந்தாவனம்;

கண்பார்வை இழந்தவர்களுக்கு கண்பார்வையும், ஊமைகளுக்கு பேசும் சக்தியையும், பேய், பிசாசு, சித்த பிரம்மை முதலிய பீடைகளால் அவதிபடுபவர்களுக்கு நல்வாழ்க்கை கொடுத்து புதிய வாழ்க்கையை நல்கிவரும் பிருந்தாவனம்;

கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்கும், அறிவாளிகளுக்கும் அறிவிலிகளுக்கும்,
பக்தி உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும், ஜாதி மத வேறுபாட்டை பாராமல், விருப்பு வெறுப்பின்றி, இல்லை என்று சொல்லாமல், தம்மிடம் சரணாகதி என்று வந்தவர்களுக்கெல்லாம் கேட்பதைக் கொடுத்து வரும் பிருந்தாவனம்….

எங்கிருந்தோ, எந்த நாட்டிலிருந்தோ, நினைத்துக் கொள்பவர்களின் சஞ்சலங்களை போக்கி வரும் பிருந்தாவனம்….

குருராஜர் பிருந்தாவனத்திற்கு செய்யப்படும் அபிஷேகம், ஆராதனைகள் குருராஜருக்கு மட்டுமல்ல, ஸ்ரீ ஹரி ஸர்வோத்தமனுடைய பல அவதாரங்களுக்கும் சேர்ந்தது.

ராயரின் அற்புதம் ஒன்றை அவரின் அவதாரத் திருநாளான இன்று பார்ப்போம்!

=========================================================

Also check : யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?

=========================================================

குருராஜர் செய்த பேருதவி

து நடந்து ஐம்பது அறுபது வருடங்கள் இருக்கும். ராமநாதபுரத்தை சேர்ந்த ராமநாதன் செட்டியார் அந்தப் பகுதியில் மிகவும் பிரபலம். ஒரு முறை அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

”வயிற்றில் ஆபரேசன் செய்தால்தான் வயிற்று வலி நீங்கும். ஆனால் ஆபரேசன் செய்தால் உயிர் நிலைக்குமோ, நிலைக்காதோ” என்று பிரபல ரணசிகிச்சை டாக்டர்கள் சொன்னார்கள். இதைக் கேட்ட ராமநாதபுரம் ராமநாதன் செட்டியார் பயந்து விட்டார். எப்படித்தான் கடுமையான வாயிற்று வழியை தாங்குவது என்று பரிதவித்தார்.

இந்த நிலையில் குருராஜருடைய பக்தர் ஒருவர் ”செட்டியாரே! பயப்பட வேண்டாம். மந்தராலயம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளை நினைத்து தியானம் செய்து பூஜை செய்து வாருங்கள். அவர் உங்களுக்கு கருணை காட்டுவார்.” என்று சொல்லவே இதை அனுசரித்து செட்டியார் குருராஜர் படத்தை சிரத்தையுடன் பூஜை செய்து, நமஸ்காரங்கள் செய்து வந்தார்.

Sri ragavendra swamy

To download the above image :
http://rightmantra.com/wp-content/uploads/2016/03/Sri-ragavendra-swamy.jpg

ஒருநாள் இரவு குருராஜர் கனவில் தோன்றி ”பயப்பட வேண்டாம்! ஆபரேசன் செய்து கொள்!” என்று அருளினார்.

செட்டியார் தைரியமடைந்து டாக்டர்களிடம் சென்று ஆபரேசனுக்கு ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார். டாக்டர்கள் ஆபரேசன் செய்தார்கள். உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. பதின்மூன்று முறைகள் அடிவயிற்றில் ஆபரேசன் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ”இந்த ஆபத்தான ஆபரேசனை செய்ய நாங்களே பயப்பட்டோம். நீர் தாங்க முடியாது என்று நினைத்தோம். ஆனால் அமானுஷ்யமானதோர் சக்தியே உனக்கு சகாயம் செய்திருக்கிறது” என்று வியந்து கூறினார்களாம். வலி தீர்ந்து செட்டியார் ஆரோக்கியத்தை அடைந்துவிட்ட பின்பு குடும்ப சகிதமாக மந்த்ராலயம் சென்று தனிப்பட்ட பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தார்.

பிறகு அப்போது மடாதிபதிகளாக இருந்த ஸுயமிந்த்த்ர தீர்த்தர் (1933-67) அவர்களை சந்தித்து தனக்கு குருராஜர் செய்த பேருதவியை தெரிவித்தார். இதைக் கேட்ட சுவாமிகள் ”செட்டியார்! குருராஜர் உனக்கு மகத்தான உதவி செய்திருக்கிறார். நீர் வெள்ளி ரதம் செய்து குருராஜருக்கு அளித்து விடுங்கள்” என்று யோசனை கூறினார். அவ்வாறே செய்வதாக செட்டியார் வாக்குறுதி கொடுத்து விட்டு சொந்த ஊர் சேர்ந்தார்.

அதன் பின்னர் தான் கொடுத்த வாக்குறுதியை செட்டியார் நிறைவேற்றவில்லை. இதைப் பற்றி அவர் மனைவி ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தார். செட்டி அலட்சியமாக இருந்து விட்டார். அத்தருணத்தில் ஸிம்லாவிலிருந்து ஒரு தந்தி வந்தது. செட்டியாருடைய பல லக்ஷங்கள் பெறுமான சொத்துக்கள் கப்பலில் வரும்போது சேதாரமாகிவிட்டன என்றும் அவை அவருக்கு கிடைக்காதென்பதும் தந்தியின் வாசகமாகும்.

அந்த சொத்துக்கள் கிடைத்தால் வெள்ளியில் தேர் செய்து குருராஜருக்கு அர்ப்பணிப்பதாக அவர் சொல்லிக் கொண்டார். இதைக் கேட்ட அவருடைய மனைவி,

”கப்பலில் வந்த சொத்துக்கள் பறிபோனதை இந்த விஷயத்துடன் ஏன் சம்பந்தப்படுத்துகிறீர்கள்? ஏற்கனவே அவர் உங்கள் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார் அல்லவா? அதற்காகவே நீங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது கடமையல்லவா?” என்று சொல்லிப் பார்த்தாள். செட்டியார் மௌனமாகவே இருந்தார்.

”ஹிந்து தர்மம் யாரால் காக்கப்படுகிறது? என்னும் கேள்விக்கு ஒரு பெரியவர் ”ஹிந்து பெண்களால்தான் காக்கப்படுகிறது” என்று பதிலளித்தார். அவர் அவ்வாறு கூறியதற்கு ஆதாரம் என்னவென்றால்,

குல தர்மத்தைக் காப்பதில் பெண்கள் வெகு ஜாக்கிரதையாய் இருக்கிறார்கள். ”இதெல்லாம் எதற்கு? இதில் எல்லாம் என்ன இருக்கிறது” என்று ஆண்கள் பேசினாலும், அமாவாசை, கிருத்திகை, லக்ஷ்மி விரதம், அனந்த பத்மநாப விரதம் முதலியவைகளை பெண்கள் உபவாசம் இருந்தே நிறைவேற்றுகிறார்கள். குல தர்மத்தையும், ஹிந்து தர்மத்தையும் பெண்கள் கருத்துடன் கவனிப்பதை நாம் காண்கிறோம்.

”இதனால்தான் குருராஜர் செய்த பேருதவியை மறக்கக் கூடாது. மடாதிபதிகளிடம் கொடுக்கப்பட்ட வாக்குகளை நிறைவேற்றவேண்டும்” என்று செட்டியார் மனைவி சொல்லி வந்திருக்கிறாள்.

போன சொத்துக்கள் வரட்டும் என்று செட்டியார் சொன்னதையும் கவனித்து, நமது குருராஜர் செட்டியாறது கனவில் தோன்றி ”இழந்துபோனதாக கருதும் சொத்துக்கள் அனைத்தும் விரைவில் உமக்கு கிடைக்கும்” என்றருளினார். அவ்வாறே சொத்துக்களும் கிடைத்து விட்டன.

செட்டியார் மகிழ்ச்சியுற்றவராய் குருராஜர்பால் பக்திப் பரவசமாகி ஐம்பதினாயிரம் ரூபாய்கள் செலவு செய்து வெள்ளியில் அழகானதோர் ரதம் செய்து மந்த்த்ராலயத்தில் சமர்பித்தார். ரதத்தை ஒப்புக்கொண்ட ஸுயமீந்த்ர தீர்த்தர் சந்தோஷப்பட்டு பிரஹ்லாத ராஜர் விக்ரகத்தை வெள்ளித் தேரில் வைத்து “குருராஜா, ஸ்ரீ ராகவேந்திரா” என்கிற கோஷத்துடன் பக்தர்கள் இழுத்துச் சென்றதை பார்த்து ஆனந்தப்பட்டார்.

(நன்றி : திரு.கே.வெங்கட்ராவ் எழுதிய ‘குருராஜர் பிருந்தாவன மகிமை’ – 1983)

=========================================================

Want to support Rightmantra in its functioning? Click here!

=========================================================

Also check :

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம் – Rightmantra Prayer Club

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

=========================================================

[END]

One thought on “ஸ்ரீராகவேந்திரர் குடிகொண்டுள்ள மந்த்ராலய மண்ணின் மகிமை!

 1. Guru is a Bridge between human being and God. If god will not fullfill our requirements surrender to guru.

  In our Country Many Gurus are lived and now also Living.

  I am one of the Best Example of Person where the life has changed Because of Gurus Blessings.

  Ragavendra is a powerful Guru. If we think Ragavendra swamy with full of confidence, surely he will get out of from the problem.
  Guru Arul Irundal Thiru Arul Thanaga Vandu Serum.

  Narayanan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *