Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, November 8, 2024
Please specify the group
Home > Featured > சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்!

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்!

print
சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ‘சுந்தரகாண்டம்’ தொடர்பான பதிவுகள் நம் தளத்தில் பரபரப்பாக இருந்த நேரம். ஒரு வாசகர் நம்மை தொடர்புகொண்டு ‘சுந்தரகாண்டம்’ நூலை தனக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். சொன்னபடி அனுப்பி வைத்தோம்.

அடுத்த வாரம் நமக்கு அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். மிக முக்கியமான ஒரு விஷயம் நம்மிடம் பேச விரும்புவதாகவும் எப்போது தொடர்புகொள்ளலாம் என்றும் கேட்டார். தேநீர் இடைவேளையில் கூப்பிடும்படி தகவல் அனுப்பியிருந்தோம்.

சொன்னபடி அழைத்தவர் தான் ரயில்வேயிலிருந்து ஒய்வுபெற்றுவிட்டதாகவும், தனக்கு ஒரு மகன், ஒரு மகள் என்றும்… மகள் மூத்தவள் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், மகன் தற்போது எம்.பி.ஏ. படித்துவிட்டு வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருப்பதாகவும் கூறினார்.

அவருடைய பிரச்சனை என்னவென்றால்… வேலைக்கு போக மகன் விருப்பமில்லாமல் எதேதோ சாக்கு போக்கு சொல்லிக்கொண்டிருக்கிறான் என்பது தான்.

“பையனுக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை சார். எம்.பி.ஏ. நல்ல மார்க் வாங்கித் தான் பாஸ் பண்ணினான். வயசு 26 ஆகப்போகுது. வேலைக்கு போடான்னா போக மாட்டேங்குறான். அவன் வேலைக்கு போய் சம்பாதிச்சு குடும்பத்தை காப்பாத்தனும்கிற அவசியம் இல்லை. இருந்தாலும் ஒரு ஆம்பளைப் பையன் வேலைக்கு போகலேன்னா எப்படி சார்…. உத்தியோகம் தானே புருஷ லட்சணம்… என் படிப்புக்கும் திறமைக்கும் ஏத்த வேலையும் சம்பளமும் எங்கே கிடைக்குதோ அங்கே தான் போவேன்னு பிடிவாதமா இருக்கான்…

கிடைச்ச சம்பளத்துக்கு வேலைக்கு போ… எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணு… மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்றேன் அதையும் காதுல போட்டுக்க மாட்டேங்குறான்…”

Job is not just a job

“உங்க பையனை பொருத்தவரை தகுதிக்கு ஏத்த வேலை கிடைக்கலேங்குறது தான் பிரச்னையோ…?”

“அது கூட பரவாயில்லைங்குறான் சார்… சம்பளம் பெரிசா எதிர்பார்க்குறான் சார்… இவன் கூட படிச்சவங்க எல்லாம் படிச்சி முடிச்சு உடனே ஏதேதோ வேலையில ஜாய்ன் பண்ணி இன்னைக்கு நல்ல சம்பளத்துல இருக்குறாங்க. ஆனா இவனுக்கு EXPERIENCE துளி கூட இல்லையே… எங்கேயாவது போய் சேரலாம்னா இவன் கேட்குற சம்பளத்தை தர யாரும் ரெடியா இல்லே… இண்டர்வ்யூ போற இடத்துல ஏன் இவ்ளோ கேப்புன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்குறாங்க…”

“எனக்கு தெரிஞ்ச இடத்துல கூட வேலை ரெடியாயிருக்கு… இந்த சம்பளத்துக்கெல்லாம் நான் போகமாட்டேன்னு அடம்பிடிக்குறான்….”

“நல்ல நல்ல இடத்துல அலையன்ஸ் வருது. எங்க ஃபிளாட்ல இருக்குற ஒருத்தருக்கு எங்க மேல் ரொம்ப மரியாதை. அவங்க சொந்தகார பொண்ணை தர ஆசைப்படுறார். இவன் இப்படி வேலைக்கு போகாம இருந்தா எப்படி?? அதான் உங்ககிட்டே பேசலாம்னு தோணிச்சு” என்றார்.

“முதலில் நீங்கள் சுந்தரகாண்டம் ரெகுலரா படிச்சிட்டு வாங்க…. அடுத்து நீங்கள் உங்கள் பையனுக்காக கொஞ்சம் செலவு செய்யணும். தயாரா??”

“என்னவேணும்னாலும் செய்யறேன் சொல்லுங்க சார்…”

“உங்களுக்கு தெரிஞ்ச கம்பெனியில பையனுக்கு வேலை ரெடியா இருக்குறதா சொன்னீங்கல்ல… அந்த கம்பெனியோட முதலாளியை உங்களுக்கு பர்சனலா தெரியுமா??”

“தெரியும் சார்.. என் கூட வொர்க் பண்ண என்னோட சீனியர் ஒருத்தரோட பையன் நடத்துற கம்பெனி அது…”

“அப்போ பிரச்னையே இல்லை. நீங்க நேரா அவங்களை போய் தனிப்பட்ட முறையில பார்த்து… உங்க பையன் அங்கே வேலைக்கு சேர்ற பட்சத்துல, அவங்க கொடுக்க தயாரா இருக்கும் சம்பளத்தோட, கூட சில ஆயிரங்கள் சேர்த்து ஒவ்வொரு மாசமும் உங்க பையனுக்கு சம்பளமா அந்தப் பணத்தை கொடுக்கச் சொல்லுங்க… அதுக்கு நீங்கள் POST DATED CHEQUES அங்கே கொடுத்துடுங்க. இது அந்த கம்பெனியோட பாஸை தவிர யாருக்கும் தெரியவேண்டாம். உங்க பையனுக்கும் தெரியவேண்டாம். நீங்கள் கொடுக்கும் பணம் எப்படியும் உங்க பையன்கிட்டே தான் வருது. So, கவலைப்படவேண்டாம். சில மாசங்கள் இது போகட்டும்… அப்புறம் நடக்குறதை சொல்லுங்கள்…” என்றோம்.

அவரும் அப்படியே செய்துவிட நல்லதொரு சம்பளத்துடன் ஆஃபர் லெட்டர் வீடு தேடி வந்துவிட, குஷியான மகன் வேலைக்கு போக ஆரம்பித்தான்.

இவ்வளவு தான் நமக்கு தெரியும். அதற்கு பிறகு நாம் இதை மறந்தே போய்விட்டோம்.

இடையே ஒரு நாள் நினைவுக்கு வர அவரை தொடர்பு கொண்டு எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று விசாரித்தோம்.

பையன் வேலைக்கு போவது அவருக்கு சந்தோஷம் என்றாலும் இப்படி ஒரு சுய ஏற்பாட்டில் சம்பளத்தில் வேலைக்கு போவது அவருக்கு உறுத்திக்கொண்டிருப்பதை குரலில் தென்பட்ட அதிருப்தியிலேயே நாம் யூகித்தோம்.

“எதையும் சட்டை செய்யாதீங்க… இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்…” என்றோம்.

சில மாதங்கள் உருண்டோடின.

ஒரு நாள் ஃபோன் செய்தவர் இந்த முறை உற்சாகம் கொப்பளிக்க பேசினார். தனது மகனுக்கு அந்நிறுவனத்திலேயே வேலை நிரந்தரமாகிவிட்டதாகவும் மகனின் பெர்ஃபாமன்ஸ் நன்றாக இருப்பதால் இனி அவனுக்குரிய சம்பளத்தை அவர்களே கொடுத்துவிடுவதாகவும் தன்னிடம் சொன்னார்கள் என்றும் கூறினார்.

“இதை இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்! கங்கிராட்ஸ்!!”

அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து ஃபோன் செய்து மகனுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாகவும், தாம் பத்திரிக்கையுடன் நேரில் வருவதாகவும் சொன்னார்.

சொன்னபடி நம் அலுவலகம் (சென்ற ஆண்டு) வந்தவர் நேரில் பத்திரிகை வைத்தார்.

“ரொம்ப தேங்க்ஸ் சார்…” என்றார்.

“எல்லாம் சுந்தரகாண்டத்தின் மகிமை” என்றோம்.

“உண்மை சார்… கூடவே உங்களோட சரியான வழிகாட்டுதலும் கூட…”

“உங்களுக்கு ஏதாவது செய்யனுமே சார்…” என்றார் நன்றிப் பெருக்குடன்.

“எந்த ஒரு ஆதாயத்தையும் எதிர்பார்த்து நான் அன்னைக்கு உங்களுக்கு இதைச் சொல்லலே. ஆனா, என்னோட நேரத்தை முழுமையா நம்ம தளத்துக்காக கொடுக்கவேண்டி இந்த ஆபீஸ் ஓப்பன் பண்ணியிருக்கேன். தளத்தை தொடர்ந்து ரன் பண்ணனும்னா எனக்கு சப்போர்ட் அவசியம் தேவை. கோவில் உண்டியல்ல போடுறதா நினைச்சி உங்களால முடிஞ்ச ஒரு தொகையை மனமுவந்து மாசாமாசம் விருப்ப சந்தாவா போடுங்க. அது போதும்!” என்றோம்.

இன்றளவும் அதை செய்து வருகிறார்.

ஒரு தகப்பனுக்கு இதை விட சந்தோஷம் இருக்கமுடியாது. நமக்கும் இதைவிட பெருமை இருக்கமுடியாது.

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி
சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
…. எல்லா நன்மையும் உண்டாகும்!!

(அவருடைய பிரைவசியை காக்கவேண்டி ஊர் பெயரையும் மற்ற விபரங்களையும் நாம் வெளியிடவில்லை. இந்த பதிவை கூட மிகவும் தாமதித்தே வெளியிடுகிறோம். காரணம் உங்களுக்கு தெரியாததில்லை…!)

============================================

இதை எதற்கு பதிவு செய்கிறோம் என்றால் ஆண்கள் வேலைக்கு போகாமல் இருக்கவே கூடாது. “குந்தித் தின்றால் குன்றும் மாளும்” என்று சும்மாவா சொன்னார்கள்? எனவே ஏதாவது ஒரு வேலைக்கு போகவேண்டும் அல்லது கௌரவம் பாராமல் சுயதொழிலை செய்யவேண்டும். சம்பளம் குறைவானாலும் வேலைக்கு போய் அனுபவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். அதன் மூலம் நல்லதொரு வேலையை தேடிக்கொள்வது சுலபம்.

வேலைக்கு போகாமல் இருந்து பழகிவிட்டால் பின்னர் வேலைக்கு போகவே மனம் வராது. உடலும் மனமும் அந்த சுகத்தை கண்டுவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது கடினம். முன்பெல்லாம் சமூகத்தில் வேலைக்கு ஒருவர் போகாமல் நீண்ட நாட்கள் இருக்கமுடியாது. இப்போது அப்படியில்லை. நேரத்தை உறிஞ்ச, புத்தியை மழுங்கடிக்க FACEBOOK, WHATSAPP என்று பல VIRTUAL சமாச்சாரங்கள் உண்டு. இதில் ஒருவர் மூழ்கிவிட்டால் மீளுவது கடினம்.

வாசகரின் மகனைப் பொறுத்தவரை நமது கணக்கு எப்படி ஒர்க்-அவுட் ஆனது என்றால்… முதற்கண் அவரிடம் கெட்டப் பழக்கங்கள் எதுவும் இல்லை. அவர் மகனுக்கிருந்த பிரச்சனை இன்று பல இளைஞர்களுக்கு இருப்பது தான். படிக்கும் காலத்தே தாங்களாகவே ஒரு பொசிஷனை / சம்பளத்தை மனதில் கற்பனை செய்துகொண்டு, யதார்த்த வாழ்க்கையில் அது கைகூடாத பட்சத்தில் வேலைக்கு செல்ல விருப்பமில்லாமல் இருப்பார்கள். மற்றபடி அவர்களிடம் எந்த தவறும், திறமைக்குறைவும் இருக்காது.

தான் விரும்பிய வேலை தான் விரும்பிய சம்பளத்தில் கிடைத்தவுடன் அவரது திறமை வெளிப்பட்டது. மகிழ்ச்சியோடு ஒருவர் செய்யும் எந்த வேலையும் ஒருவருக்கு ஏற்றத்தையே தரும்.

மேலும் தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. முயற்சி செய்யவேண்டியது மனிதனின் கடமை. அதற்கு பலனை தரவேண்டியது இறைவனின் பொறுப்பு.

இவர் மகன் வாழ்விலும் நடந்தது அது தான். நாம் ஒரு கருவி. அவ்வளவே.

எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!

Also check : உங்கள் துயரம் முடிவுக்கு வந்தது!  விதியையே மாற்றும் வல்லமை கொண்ட சுந்தர காண்ட பாராயணம்!!

=========================================

இந்தப் பதிவை இன்று தயார் செய்து நிறைவு செய்யும் நேரம், நண்பர் நாகராஜன் ஏகாம்பரம் கோவிந்த தீட்சிதர் பற்றிய பதிவில் “அருமை ஜி. அதே போல் ‘நாலு இளைஞர்களும் நல்லா இருக்கும் ஊரும்! @ இன்றைய தினமலர்’ இதையும் கவர் செய்து சுய முன்னேற்றம் பகுதியில் வெளியிட வேண்டுகிறேன்” – என்று இன்றைய தினமலரில் வெளியான ஒரு செய்தியை பற்றிய துப்பை அளித்திருந்தார்.

தினமலர் இணையம் சென்று தேடிப்பார்த்தபோது ஒரு அருமையான செய்தி கண்ணில் பட்டது. நமது மேற்படி பதிவுக்கு மிகவும் தொடர்புடைய ஒன்று என்பதால் அப்படியே அளிக்கிறோம்.

=========================================

நாலு இளைஞர்களும் நல்லா இருக்கும் ஊரும்!

– தினமலர் செய்தி

மேலுார்: மேலுார் அருகே புலிப்பட்டியில் பட்டதாரி இளைஞர்கள் குத்தகைக்கு நிலத்தை வாங்கி பசுமை புரட்சி செய்து வருகின்றனர்.

இக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் முத்துக்குமார், பூசை முனியாண்டி ஆகியோர் முதுநிலை பொருளியல் முடித்து விட்டு, தற்போது போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி, ராஜ்குமார் ஆகியோர் மேலுார் அரசு கல்லுாரியில் முறையே முதுநிலை பொருளியல், வரலாறு படிக்கின்றனர்.

agriculture 2

வேலை தேடி காலத்தை வீணாக்காமல் விவசாயத்தில் ஈடுபட முடிவு செய்தனர். நான்கு பேரும் சேர்ந்து ஒன்பதரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தனர். அதில் நெல், வாழை, வெண்டைக்காய், கரும்பு, மல்லிகை, கத்தரி என பயிரிட்டனர். கல்லுாரி நேரம் தவிர, பிற நேரங்களில் வயலில் தங்கி சேர்ந்து படித்தும், வேலைகளை பகிர்ந்தும் வருகின்றனர். இவர்களின் அடுத்த இலக்கு மாட்டுப்பண்ணை அமைப்பது.

முத்துக்குமார் கூறியதாவது:- “நால்வரும் ஒன்றாக சேர்ந்து வரப்பு வெட்டுதல், மருந்து தெளித்தல், உரம் இடுதல் என அனைத்து வேலைகளையும் செய்வதால் ஏக்கருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் மிச்சமாகிறது. அதிக மகசூல் கிடைக்கிறது. அதை குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறோம்,” என்றார்.

படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என காலத்தை வீணடிக்கும் இளைஞர்கள் மத்தியில், பசுமை புரட்சி செய்யும் இவர்களை 85310 03978 என்ற எண்ணில் பாராட்டலாமே.

**************************************************************

Rightmantra needs your support!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Paypal id : ‘rightmantra@gmail.com’

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

**************************************************************

Also check :

உங்கள் துயரம் முடிவுக்கு வந்தது!  விதியையே மாற்றும் வல்லமை கொண்ட சுந்தர காண்ட பாராயணம்!!

தட்டுங்கள்… இந்தக் கதவு நிச்சயம் திறக்கும்!

அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா?

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்!

விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!

உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?

ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)

உயர உயர பறக்க வேண்டுமா?

எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??

யார் மிகப் பெரிய திருடன் ?

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

**************************************************************

[END]

2 thoughts on “சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்!

  1. சரியான நேரத்தில் உங்களிடம் ஆலோசனை கேட்டு தன் மகனை காப்பாற்றியிருக்கிறார் அந்த வாசகர். எதற்குமே ஒரு பாக்கியம் வேண்டும். அந்த பாக்கியம் இருந்ததால் தான் உங்களிடம் பேசி, பிரச்சனைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வை எட்டியிருக்கிறார்.

    ஆண்கள் வேலைக்கு செல்வது குறித்து பதிவில் நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரி. ஒரு குடும்பத்தில் ஆண்களின் வருவாய் தான் பிரதானமாக இருக்கவேண்டும். பெண்களின் வருமானம் குடும்பத் தலைவருக்கு உதவுவதாக அவரது பாரத்தை பங்கு போட்டுகொள்வதாக இருந்தால் போதும். ஒருவர் சம்பாதிக்க, ஒருவர் குடும்பத்தை கவனித்துக்கொள்ளவேண்டும். அப்போது தான் அக்குடும்பம் சிறக்கும்.

    பதிவில் பயன்படுத்தியிருக்கும் கோவில் கோபுரத்தின் புகைப்படம் அருமை. அதில் பயன்படுத்தியிருக்கும் மேற்கோள் அதைவிட அருமை.,

    விவசாயத்தை தொழிலாக வைத்து சாதித்துக்கொண்டிருக்கும் இளைங்கர்களுக்கு வாழ்த்துக்கள். அதில் இடம்பெற்றிருக்கும் படமும், பாடல் வரிகளும் பதிவுக்கு அழகு சேர்ப்பதுடன் மிகவும் பொருத்தமாகவும் உள்ளது.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *