Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, July 21, 2024
Please specify the group
Home > Featured > மகாமகம் 2016 – கும்பகோணம் மகாமக குளத்தில் எப்போது நீராடலாம்?

மகாமகம் 2016 – கும்பகோணம் மகாமக குளத்தில் எப்போது நீராடலாம்?

print
தென்னாட்டு கும்பமேளா என்று அழைக்கப்படும் கும்பகோணம் மகாமகம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒரு திருக்கோவில் உற்சவமாகும். இந்த காலகட்டங்களில் கும்பகோணத்தில் மகாமக தீர்த்தத்தில் நீராடுவது இந்துக்களால் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக எங்கு பார்த்தாலும் மகாமகம் குறித்த பேச்சு தான்.

இதுவரை போகாதவர்களுக்கு போகவேண்டும் என்கிற ஆசையும், ஏற்கனவே போனவர்களுக்கு மீண்டும் போகவேண்டும் என்கிற ஆசையும் எழுவது இயல்பு தானே?

mahamagam 19921992 இல் நாம் +1 படிக்கும்போது, கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமகத்தில் கலந்துகொண்டோம்.

சிறுவயதிலிருந்தே நமக்கு ஒரு பழக்கம் உண்டு. தினசரி செய்தித்தாள் படிக்கும் பழக்கம் தான் அது. அப்போது செய்திதாள்களில் மகாமக புனிதக் குளத்தில் நீராடினால் வரக்கூடிய நன்மைகளை பட்டியலிட்டிருந்ததை பார்த்து அங்கு செல்லும் ஆவல் ஏற்பட்டு நமது விருப்பத்தை தெரிவித்தபோது, பெற்றோர் அதற்கு தடை சொல்லாமல் அனுப்பிவைத்தனர். (அங்கு நடைபெற்ற விபத்து பற்றி கேள்விப்பட்டு பின்னர் மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு அவர்கள் தவித்தது தனிக்கதை!)

அப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் இல்லை. பாரிமுனை சென்று அங்கிருந்து மகாமக சிறப்பு பேருந்தில் ஏறி மகாமகம் சென்றோம். பேருந்தில் நம்முடன் அறிமுகமான நண்பர்கள் மூன்று பேர் மறக்க முடியாதவர்கள். (அனைவரும் வேறு வேறு இடத்தை சேர்ந்தவர்கள். பேருந்தில் நட்பு ஏற்பட்டது.) மகாமக குளம் வரைக்கும் ஒன்றாக சென்றோம். ஆனால் அதற்கு பிறகு கூட்டத்தில் பிரிந்துவிட்டோம்.

நாம் அந்த ஜனசமுத்திரத்தில் இறங்கி ஒவ்வொரு தீர்த்தமாக நீராடி கரையேறினோம். (நின்னாப் போதும் தானா கொண்டு போய் விட்டுடுவாங்க).

ஒரு சத்திரத்தில் நடைபெற்ற அன்னதானத்தில் சாப்பிட்டுவிட்டு அன்று மாலை சிறப்பு ரயிலில் ஏறி மறுநாள் எழும்பூர் வந்து சேர்ந்தோம். அங்கே வாங்கிய செய்தித் தாளை தான் நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள்.

(முழு செய்தித் தாளையும் சில பல காரணங்களால் இப்போதைக்கு வெளியிட விரும்பவில்லை. மகாமகம் முடிந்தவுடன் வெளியிடுகிறோம்.)

இன்று இரவு கும்பகோணம் புறப்படுகிறோம். திருவருளால் நாளையும் நாளை மறுநாளும் கும்பகோணத்தில் நண்பர் வீட்டில் தங்கி புனித நீராடிவிட்டு சனி அல்லது ஞாயிறு காலை சென்னை திரும்புகிறோம்.

உங்கள் சார்பாகவே நாம் செல்வதால் நம் வாசகர்கள் அனைவருக்கும் மகாமகம் சென்று நீராடிய பலன் கிடைக்கும் என்று நம்புவோமாக.

திருவருளும் குருவருளும் என்றும் துணை நிற்க வேண்டுகிறோம்.

நாளை ஒரு விசேஷ பதிவு உண்டு. அவசியம் பார்க்கவும். இங்கே அனைத்தையும் தயார் செய்துவைத்துவிட்டு செல்கிறோம். ஒரே ஒரு புகைப்படம் மட்டும் நாளை சேர்க்க வேண்டியிருக்கிறது. அது சேர்க்கப்பட்டவுடன் அந்த பதிவு அளிக்கப்படும்.

========================================================

மகாமகம் குறித்து தருமபுரம் ஆதீனம் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் அளித்த பத்திரிகை பேட்டி ஒன்றை இங்கே பகிர்கிறோம். செந்தமிழரசு திரு.கி.சிவக்குமார் அவர்களின் ‘ஞானத்திரள்’ ஆண்டு விழாவில் பங்கேற்க சமீபத்தில் திருவாரூர் சென்றபோது, சுவாமிகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

கும்பகோணம் மகாமக குளத்தில் எப்போது நீராடலாம்?

தருமபுரம் ஆதீனம் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் பேட்டி

“12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான் சிம்மராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் மாசி மாத பவுர்ணமியும், மக நட்சத்திரமும் சேர்ந்து வருவது மகாமகம் ஆகும். இது பாவம் தீர்க்கும் புனித திருவிழாவாக கொண்டாடப்படும். கும்பகோணத்தில் உள்ள மகாமக தீர்த்தம் எல்லா வகையான பாவங்களையும் போக்க கூடியதாகும்.”

dharumapuram aadheenam 2“மகாமக நீராடுதலுக்கு என ஸ்நான விதிமுறைகள் உண்டு. இந்த வருடம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 22-ந் தேதி மகம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் செய்கிறார். குரு சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் தான் கங்கை, யமுனை, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய நவ நதிகளும் மகாமக குளத்தில் நீராட வருவதாக ஐதீகம். அன்று மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை புனித நீராட உகந்த நேரம் என கணிக்கப்பட்டுள்ளது. அன்று மகாமக குளத்தில் கும்பகோணம் காசிவிஸ்வநாதர் உள்பட 12 சைவ கோவில்களில் இருந்தும் அஸ்திரதேவர் தீர்த்தவாரியில் பங்கேற்பார்.”

“காவிரி புதுப்பாலம் படித்துறையில் சாரங்கபாணி கோவில் உள்ளிட்ட 5 பெருமாள் கோவில்களில் தீர்த்தவாரி கொடுப்பார். வருடந்தோறும் வருவது மாசிமகம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது மகாமகம். மகாமகத்தின் போது வடநாட்டில் நாசிக், அலகாபாத், அரித்வார் போன்ற நகரங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுவதை போல் கும்பகோணத்தில் கங்கை உள்ளிட்ட நவநதிகளும் இங்கே சங்கமிக்கிற காரணத்தால் மகாமகம் சிறப்புடையதாக விளங்குகிறது.”

mahamagam2

தாவி முதற் காவிரி நல்யமுனை கங்கை
சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தற் சூழ்ந்த
குடந்தைக் கீழ்க்கோட்டத்தெங் கூத்தனாரே

என்று அப்பர் பெருமான் கூறுகிறார்.

கும்பகோணம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்பை உடையதாக விளங்குகிறது.

கேதுவில் காசியில் செய் பெரும் பாவம்
கோதிலாக் கும்பகோணத்தில் தீரும்
கும்பகோணத்தின் கொடிய தீவினைகள்
கும்பகோணமாம் குடந்தையில் தீரும்

என்கிறது கும்பேசர் குறவஞ்சி.

“கங்கை முதலான 9 புண்ணிய நதிகள் சிவபெருமான் வழிகாட்டுதலின் பேரில் தங்கள் பாவங்களை போக்கி கொள்வதற்காக, மகா மக குளத்தில் நீராட வந்தனர். மகாமக நாள் வருவதற்கு முன்னரே கும்பகோணத்திற்கு வந்த அவர்கள் மகாமகம் வரும் வரை காத்திருந்தனர்.”

mahamagam

“நாள்தோறும் அந்த குளத்தில் குளித்தனர். மகாமக நாளின் போது நவகன்னியர் மகாமக தீர்த்தத்தில் நீராடி தம் பாவங்களில் இருந்து நீங்கினார்கள். நவ கன்னியர்கள் மக தீர்த்தத்தில் தங்கள் பெயரில் ஒரு தீர்த்தம் உருவாக்கி கொண்டார்கள். தம் தீர்த்தங்களில் குளிப்பவர்களின் பாவத்தை நீக்கினார்கள். அன்று முதல் மகாமக தீர்த்தம் என்றும் நவகன்னியர்கள் தீர்த்தம் என்றும் அழைக்கப்பட்டது.”

“தை மாதம் அமாவாசையில் தொடங்கி மாசி மாதம் அமாவாசை வரை அவரவர் தங்கள் நட்சத்திர நாளில் மகாமக குளத்தில் நீராடலாம். மகாமகம் தொடர்புடைய அனைத்து கோவில்களிலும் கொடியேறிய பின் பிப்ரவரி மாதம் 13-ந் தேதி முதல் தொடர்ந்து வரும் 10 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் நீராடினாலே மகாமகத்தன்று நீராடிய பலன் கிடைக்கும். கோவில்களில் கொடியேறியதும் அதற்கான பலன் கிடைத்து விடும்.”

“சூரியன் உதயமாவதற்கு முன்பே வெளிச்சம் வருவதைப் போன்று மகாமக பலன் கிடைத்து விடுகிறது. இந்த மகாமக குளத்தில் நவநதிகளும் வந்து சங்கமிப்பதால் நாம் பல பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கி விடுகிறது. கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய கோவில்களில் கொடியேற்றத்தில் தொடங்கிய நாள் முதல் மகாமக குளத்தில் அனைவரும் நீராடி தங்களுடைய புனிதத்தை பெருக்கி கொள்ளலாம்.” — – இவ்வாறு அவர் கூறினார்.

========================================================

Support Rightmantra to sustain!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

Also check :

2015 ஆம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரி கவரேஜ் !

சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம் – மாசிமக தீர்த்தவாரி 2015 @ சென்னை மெரீனா!

2014 ஆம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரி கவரேஜ் !

ஒரே இடத்தில் அனைத்து தெய்வங்களும் எழுந்தருளிய மாசிமக தீர்த்தவாரி – Excl. Coverage!

2013 ஆம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரி கவரேஜ் !

மெரினாவில் 26 உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய மாசி மக தீர்த்தவாரி!

========================================================\

[END]

3 thoughts on “மகாமகம் 2016 – கும்பகோணம் மகாமக குளத்தில் எப்போது நீராடலாம்?

  1. இந்த பதிவை படித்ததே எங்களுக்கு புண்ணியம் கிடைத்தது போல் உள்ளது. தங்கள் பயணம் இனிதே நடைபெற வாழ்த்துக்கள்/

    அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.
    வாழ்க … வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *