இன்றைய நாளில் மறக்காமல் பித்ரு காரியங்களை அனைவரும் செய்யவேண்டும். முன்னோர்கள் இறந்த தேதி தெரியாமல் இருப்பவர்கள் இதுபோன்ற நாட்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நம் தளம் சார்பாக பிரதி மாதம் நாம் செய்யும் கோ-சம்ரட்சணம் தவிர்த்து கூடுதலாக விஷேட நாள், கிழமைகளில் கோ-சம்ரட்சணம் செய்து வருவது நீங்கள் அறிந்ததே.
தை அமாவாசையை முன்னிட்டு, நாளை (08/02/2016) மாலை 7.00 மணியளவில் மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு கோ-சம்ரட்சணம் நடைபெறும். பசுக்களுக்கு சிறப்பு உணவு வழங்கப்படவிருக்கிறது. இதே போல தி.நகர் சுப்பிரமணி தெருவில் உள்ள சத்குரு சபா வேத பாடசாலையில் உள்ள பசுக்களுக்கும் சிறப்பு உணவு வழங்கப்படும்.
தளம் சார்பாக இதுவரை பல முறை விசேஷ கோ-சம்ரட்சணம், அன்னதானம் முதலியவை நடைபெற்றிருந்தாலும் மேற்கூறிய தை அமாவாசை விசேஷ கோ-சம்ரட்சணத்தை ‘விருப்ப சந்தா’ வழங்கிவரும் வாசகர்கள் சார்பாக செய்ய எண்ணியிருக்கிறோம். அவர்கள் அளித்து வரும் நிதி உதவியினால் தான் இந்த தளத்தை நடத்த முடிகிறது. எந்தவொரு பிரதிபலனையும் அவர்கள் இதன்பொருட்டு எதிர்பார்க்கவில்லை என்றாலும் நம்மால் இயன்ற சிறிய நன்றிக்கடன். ஏனெனில், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பிதுர் யக்ஞங்களை சரிவர செய்ய முடியாமல் தவிப்பவர்கள் மற்றும் தை அமாவசையன்று ஏதேனும் செய்ய நினைத்து நேரமின்மை காரணமாக செய்ய இயலாதவர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும்.
ஆயிரக்கணக்கான பசுக்கூட்டங்கள் இருந்தாலும் கன்று தன் தாய்ப் பசுவை எப்படி சரியாக தேடிச் செல்கிறதோ அதே போன்று இதற்கான பலன் நிச்சயம் அவரவருக்கு போய் சேரும் என்பது உறுதி.
இது சற்று விரிவான பதிவு. பொறுமையாக படிக்கவும். நன்றி.
Rightmantra Sundar | M : 9840169215 | E : editor@rightmantra.com
***********************************
மஹா பெரியவா கூறிய ஒரு அருமையான உதாரணத்திலிருந்து பித்ருக்கள் வழிபாட்டிற்கான இந்த சிறப்பு பதிவை துவக்குகிறோம். பல SOURCE களிலிருந்து தகவல்கள் திரட்டி தரப்பட்ட பதிவு. சற்று சுருக்கி தரலாம் என்றால் எதையுமே கட் செய்ய முடியவில்லை. அந்தளவு ஒவ்வொரு வரியும் முக்கியம்.
மறைந்த நம் தாய் தந்தையருக்கு, முன்னோர்க்கு, தர்ப்பணம் ஸ்ரார்தம் எல்லாம் பண்ணுவதால் என்ன பயன்?
மநுஷ்யராகப் பிறந்தவர்கள் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ருக்கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்களுக்கு நம்மாலானதைச் செய்ய வேண்டும்.
”ஆதித்யம்” (ஒர் அதிதிக்காவது உணவு படைப்பது) விருந்தோம்பல் இதுதான். இது மனுஷ யக்ஞம்.
பிரம்ம யக்ஞம் என்று இன்னொன்று. பிரம்மம் என்றால் பல அர்த்தம். இந்த இடத்தில் வேதம் என்று அர்த்தம். வேதம் ஒதுவதும், ஒதுவிப்பதுமே பிரம்ம யக்ஞம். இது ரிஷி களின் திருப்திக்காக ஏற்பட்டது.
எல்லோரும் செய்வதற்காக ஏற்பட்ட இன்னொரு கர்மம் பூத யக்ஞம் அதாவது மனுஷ்ய ஜீவனாக இல்லாத ஜீவராசிகளுக்குக்கூட நம் அன்பைத் தெரிவித்து உணவூட்டுகின்ற காரியம்.
எனவே தான் நாம் பித்ரு யக்ஞம், தேவ யக்ஞம், மநுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் இவற்றை எல்லோரும் ஏதோ ஒரு ரூபத்தில் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றோம். வைதிக தர்மப்படி அவரவரும் தங்களுக்கான தொழிலைச் செய்து ஈசுவரார்ப்பணம் பண்ணுவதே அவரவருக்கும் பிரம்ம யக்ஞம் என்று சொல்லலாம்.
வேத நெறியில் சொல்லப்பட்டதையே தான் ஏறக்குறைய திருவள்ளுவரும் சொல்லியிருக்கார்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
‘தென் புலத்தார்’ என்பது பித்ருக்கள். பித்ருக்களான தாய் தந்தையார்களுக்கும் மூதாதையர்களுக்கும் நமது கடைமைகளை எல்லோரும் அவசியம் செய்தாக வேண்டும். ‘மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ’ என்று வேத மாதாவும், இங்கே நம் எல்லோருக்கும் வேத ஸாரத்தையே லகுவாகப் பிழிந்து கொடுத்த அவ்வை, ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்றும் சொல்லுகிறார்கள். தாய் தந்தையர் ஜீவிய வந்தர்களாக இருக்கையில், அவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்ற சௌக்கியமெல்லாம் செய்து தரவேண்டும். தாய் தந்தையர் நமக்காக ஆதியில் செய்துள்ள தியாகங்களுக்கு நாம் பிரதியே செய்ய முடியாது. அவர்களது மனம் கோணாமல் அவர்களை வைத்துக் காக்க வேண்டும்.
அவர்கள் இந்த உலகத்தை விட்டுப்போன பிற்பாடும், அவர்களுக்காக சாஸ்திரப் பிரகாரம் தர்ப்பணம், சிரார்த்தம் (திதி) இவற்றை அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும்.
பெற்றோர் உயிரோடு இருக்கும் வரையில் அவர்களை வைத்துப் பராமரிக்க வேண்டும் என்பதை ‘சீர்திருத்த’க்காரர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் மரண மடைந்த பின் பித்ரு காரியம் செய்வது அவர்களுக்குப் பரிகாசமாக இருக்கிறது.
‘எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே இருக்கின்றன; அல்லது கண் முன்னாலேயே ஒருத்தன் எடுத்துப் போனான். அல்லது சாப்பிட்டுவிட்டான். பித்ருக்கள் எங்கேயோ மறு ஜன்மா எடுத்து விட்டார்கள் என்று நீரே சொல்கிறீர். அப்படியிருக்க இங்கே உள்ள வாஸ்து அங்கே போய் அவர்களை சேருகிறது என்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா? என்று சீர்த்திருத்தக்காரர் கேட்கிறார். அவர் வாய்விட்டுக் கேட்கிறார்; உங்களில் பலருக்கும் மனசுக்குள் இப்படிச் சந்தேகம் இருக்கலாம்.
உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்:
ஒருவர் பையனைப் பட்டணத்தில் படிக்க வைத்திருந்தார். அவர் பரிட்சைக்குப் பணம் கட்டவேண்டியிருக்கிறது. அதுவும் மறுநாள் கட்ட வேண்டியிருந்தது. உடனே அப்பாவுக்கு, ‘தந்தி மணியாடரில் பணம் அனுப்பு’ என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித்தனியாகத் தெரியும். பிள்ளையோ ‘தந்தி மணியார்டர்’ அனுப்பும்படி எழுதியிருக்கிறான். அப்பா தபாலாபீஸுக்குப் போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத் தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஓட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, “சரி, உம்முடைய பணம் வந்து சேர்ந்துவிடும். அனுப்பியாகிவிட்டது” என்றார். குமாஸ்தா பணத்தை பெட்டியில் போட்டதையும், ஓட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமலிருப்பதையும் பார்த்த அப்பாக்காரர், “என் பணம் இங்கேதானே இருக்கிறது! அதில் ஓட்டை ஒன்றும் போட்டு அனுப்பவில்லையே! அது எப்படிப் போய்ச் சேரும்” என்று கேட்டார். “அது போய்ச் சேர்ந்துவிடும்” என்று மறுபடியும் குமாஸ்தா சொன்னார். “கட்டுக் கடகட” என்று தந்தியும் அடித்தார். ‘ஏதோ லொட்டு லொட்டென்று சப்தம் பண்ணுகிறான். சேர்ந்துவிடும் என்று சொல்கிறான். ரூபாய் இங்கே இருக்கிறது. லோட் லோட்டென்று கட்டையை இங்கே அடித்தால் அங்கே எப்படிப் போய்ச் சேரும்’ என்று அப்பாவுக்குச் சந்தேகம் வந்து விட்டது.
ஆனாலும் பணம் போய்ச் சேர்ந்து விட்டது. தர்ப்பணம் முதலியன பண்ணுவதும் அந்த மாதிரியே ஆகும். நாம் எதைக் கொடுத்தாலும் அதற்கான சட்டப்படி கொடுக்க வேண்டும். சாஸ்திரம் என்கிற சட்டம் விதித்தபடி நாம் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிற பிதுர் தேவதைகள் அது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்து விடுவார்கள். பிதிருக்கள் மாடாகப் பிறந்திருந்தால் வைக்கோலாக்கிப் போட்டுவிடுவார்கள். குதிரையாகப் பிறந்திருந்தால் புல்லாக்கிப் போடுவார்கள். பிதுர் தேவதைகளுக்கு பரமேசுவரன் இப்படி உத்தரவு பண்ணி, இதற்கான சக்தியும் தந்திருக்கிறார். ஆகையால் சிரார்த்தத்தன்று கொடுப்பதைப் பெற்றுக் கொள்ள அப்பா நேரில் வர வேண்டியதில்லை.
தந்தி மணியார்டர் செய்தவனுடைய பணமோ வாங்கிக் கொள்ளுகிறவனிடம் நேராகப் போவதில்லையல்லவா? மணியார்டர் பெறுகிறவன் வேறு தேசத்தில் இருந்தால் அங்கே நம் ரூபாய் நோட்டுச் செல்லவே செல்லாது. இங்கே ரூபாயைக் கட்டினாலும் வெளி தேசத்தில் டாலராகவோ, பவுனாகவோ மாற்றித்தரவும் ஏற்பாடு இருக்கிறது. ஆனால், நம் ஊரில் டாலரையோ பவுனையோ கட்ட முடியாது. இங்கே செல்லுபடியாகிற ரூபாயைத்தான் ஏற்றுக்கொள்ளுவார்கள். அப்படியே சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எள், தண்ணீர், வாழைக்காய் இதுகளை இங்கே தந்தால், பிதிருக்கள் இருக்குமிடத்தில் அவர்களுக்கு ஏற்ற உணவாக மாற்றித் தரப்படும்.
சிரார்த்தம், தர்ப்பணம் முதலிவற்றை செய்வதன் அவசியம் தற்போது புரிந்திருக்குமே?
========================================================
Don’t miss this ….
‘மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!’
========================================================
தற்போது தை அமாவாசை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். அமாவாசை தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. முன்னோர்கள் இறந்த தேதி தெரியாதவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பது உகந்தது.
மூதாதையர்கள் உயிருடன் வாழ்ந்தபோது, அவர்களை சரிவர கவனிக்காததால், அவர்கள் அடையும் துன்பங்கள் யாவும், பாவத்தின் வடிவில் கவனிக்கத் தவறியவர்களை சேர்வதாக கூறப்படுகிறது. பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். நம்மை பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள்.
‘ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.
பித்ரு லோகம் என்பது சூரியனுக்கு அப்பால், பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும், வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர். அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றை போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் மூதாதையர்களின் பசியும், தாகமும் விலகி சந்ததியரை வாழ்த்துவார்கள். அமாவாசையன்று தங்களுக்கு வழங்கப்படும் எள் தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பித்ருக்கள் காத்து நின்று கொண்டிருப்பார்களாம்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தை அமாவாசை சிறந்த நாளாகும். அன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர்களை நினைத்து திதி கொடுக்கலாம். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு போன்ற திருத்தலங்களும், வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்று சூரிய வழிபாடு செய்வது அவசியம். இறந்தவர்களின் நாள், தேதி தெரியாதவர்களும், வருடத்தின் 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம்.
இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். அன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்ய வேண்டும். மறைந்த தாய், தந்தை படங்களுக்கு மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வணங்க வேண்டும். அன்று காகம் வடிவில் மூதாதையர்கள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பதும் முக்கியம்.
வழிபடுவது எப்படி?
அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.
செய்யக்கூடாதவை
அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை மற்றவர் களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.
அமாவாசையின் மகிமை
பிரதிமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது. அன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள். மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி, தோஷம் அடையும். ஆனால் அமாவாசையன்று எந்தக் கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களை தொடங்கினால் அது வெற்றி பெறும். ராகு, கேது மற்றும் பிற கிரகங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண அமாவாசையன்று பரிகாரம் செய்தால் சிறப்பான பலனைத் தரும். மேலும் மூத£தையர்களின் ஆசியும் கிடைக்கும்.
காகத்துக்கு சாதம் படைப்பது ஏன்?
அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே உணவருந்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், எமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது எமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு சாதம் வைத்தால் எம லோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. காகம் சாதத்தை எடுக்காவிட்டால் முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
துயர் போக்கும் துளசி
பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவரை துளசி மாலை சாத்தி வழிபடுவது விசேஷம். அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின் போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகாவிஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.
***********************************
பிப்.8 தை அமாவாசை: இரண்டு முறை தர்ப்பணம்
மயிலாடுதுறை: பிப்.8ல் நிகழும் தை அமாவாசை மிகவும் விசேஷமான நாளாகும். அன்று இரண்டு முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என மயிலாடுதுறை வேதபாடசாலை முதல்வர் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “இந்த ஆண்டு தை அமாவாசை மகோதய புண்ணிய காலமாக வருகிறது. தைமாத அமாவாசை, திருவோண நட்சத்திரம் மற்றும் வியதீபாதயோகம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமையில் கூடினால் அர்த்தோதய புண்ணியகாலம் என்று அழைக்கப்படும். இதுவே திங்கள்கிழமையில் கூடினால் மகோதய புண்ணியகாலம் எனப்படும். இது ஒரு அபூர்வமான சேர்க்கை. பல ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்ற அமைப்பு கூடும். இந்நாளில் கோவில்களில் சிறப்பு தீர்த்தவாரி, சுவாமி புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். முன்னோர்களுக்கு உதய காலத்தில் ஒருமுறையும், பிறகு வழக்கம் போல் அமாவாசைக்காக ஒருமுறையும் தர்ப்பணம் செய்ய வேண்டும். கடல், நதி அல்லது திருக்குளங்களில் நீராடி செய்யும் தர்ப்பணத்திற்கு அதிக புண்ணியம் கிடைக்கும்.அபூர்வமான மகோதய புண்ணிய காலத்தில் தெய்வ வழிபாடும், முன்னோர் தர்ப்பணங்களும் செய்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். நமது முன்னோர் 21 தலைமுறையினர் கடைத்தேறுவார்கள். அவர்கள் ஆசியால் பித்ருதோஷம் நீங்கி வீட்டில் மங்களங்கள் நிகழும். வம்சவிருத்தி உண்டாகும். நோய்கள் நீங்கும். இதுபற்றிய விபரங்கள் நிர்ணயசிந்து என்ற நூலில் உள்ளது,” என்றார்.
- ஆக்கத்தில் உதவி : Dailythanthi.com, Dinamalar.com
- Photographs by – Righmantra.com
========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to SUSTAIN. Donate us liberally.
Our A/c Details: Rightmantra Soul Solutions A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
Rightmantra Soul Solutions, Room No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
========================================================
For similar articles….
அண்ணன்-தம்பி தனித்தனியே சிரார்த்தம் செய்யவேண்டுமா?
நற்பலன்களை வாரி வழங்கும் பித்ருக்களுக்குரிய மஹாளய புண்ணிய காலம் – மஹாளய SPL 1
மகாளய அமாவாசை அன்று என்ன செய்யவேண்டும்? Must Read
‘தை அமாவாசை’ – அதன் சிறப்பு என்ன? அன்று என்ன செய்யவேண்டும்?
பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும் – ஆடி அமாவாசை ஸ்பெஷல்
பித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம் + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்!
‘மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!’
மஹாளய அமாவாசையும் நமது ஏழு தலைமுறையும் – அரிதினும் அரிய உண்மைகள்!
கண்களை குளிரவைத்த வேதபுரீஸ்வரர் & உள்ளத்தை குளிர வைத்த பசுக்கள்! மஹாளய அனுபவம்!!
========================================================
[END]
தை அமாவாசையின் சிறப்பை பற்றிய அருமையான பதிவை அழகாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள். இந்த பதிவு அனைவருக்கும் எக்காலத்திற்கும் பயன்படும் உன்னத பதிவு. மகா பெரியவா கூறிய கதை மனதில் நிற்கிறது. நேற்று நம் தளம் சார்பாக கோ ச்மரோக்க்சனம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி.
வாழ்க.. வளமுடன்
நன்றி
உமா வெங்கட்