Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, May 19, 2024
Please specify the group
Home > Featured > “கண் திறந்திட வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்” – Rightmantra Prayer Club

“கண் திறந்திட வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்” – Rightmantra Prayer Club

print
ந்த கதை அநேகமாக அனைவருக்கும் தெரிந்த கதையாக இருக்கலாம். இருப்பினும் படியுங்கள். தற்போதைய சூழலுக்கு பொருத்தமான ஒன்று.

வன் ஒரு பக்திமான். அவனது பக்திக்கு இரங்கி கடவுள் அவன் முன் தோன்றி “என்ன வரம் வேண்டுமோ கேள் தருகிறேன்” என்றார். (சும்மா கதைக்காக வைத்துக்கொள்வோமே!)

இவனோ இறைவனைவிட நமக்கு பெரிய துணை யாரிருக்கப்போகிறார்கள் என்று கருதி…. “எனக்கு ஒன்றுமே வேண்டாம். என்னோடு ஒருகணமும் பிரியாது இருந்தாயானால் அது போதும். நான் எங்கு சென்றாலும் நீ என்னுடன் இருக்கவேண்டும். உன்னிடம் பேச விரும்பும்போது நீ அவசியம் நேரில் வரவேண்டும்”

“இவ்வளவு தானா? இனி எப்போதும் உன்னுடனே உன் நிழல் போல இருப்பேன். கவலை வேண்டாம்… ஆனால் அடிக்கடி என்னை நேரில் கூப்பிடாதே… ஒரே ஒரு முறை கூப்பிடு… மற்றபடி உன்னுடன் நான் இருப்பேன் கவலைப்படாதே” என்றார்.

footsteps_in_the_sandஒரு நாள் கடற்கரை மணலில் நடந்து செல்கிறான். ஒரு ஜோடி கால் சுவடு அவனைத் தொடர்ந்து மணலில் அவனது கால்சுவடுகளுக்குப் பக்கத்திலேயே பதிந்துகொண்டே வருகின்றது. எங்கே சென்றாலும் அந்த ஜோடி காலடிகள் அவனை பின்தொடர்ந்து வந்தன. அது கடவுளுடையது என்று தெரிந்துகொண்டான். மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

திடீரெனெ அவனுக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தது. மிகவும் துயரமான, கடினமான நாட்கள். ஆனால் அந்த காலகட்டங்களில் அவன் எங்கு சென்றாலும் அவனது காலடிச் சுவடுகள் மட்டுமே இருக்கக் கண்டான். மற்றொரு ஜோடிகள் இல்லை.

பொறுத்து பொறுத்துப் பார்த்து… இறைவன் இப்படி வாக்கு தவறிவிட்டானே.. அவனை நேரில் அழைத்துக் கேட்போம் என்று கருதி, இறைவனை நேரில் வருமாறு அழைத்தான்.

இறைவனும் வர, “இறைவா நீ வாக்களித்தபடி நீ எப்போதுமே என்னோடு இருந்தாயா?”

“அதில் என்ன சந்தேகம்? இதோ பார் உன் வாழ்க்கைப் பாதையை” – அவன் இது வரை கடந்து வந்த பாதையைக் காட்டினபோது, ஆரம்ப முதல் இறுதிவரை இரு ஜோடி கால் தடங்கள் தென்பட்டன.

“அந்த இன்னொரு ஜோடி கால்கள் என்னுடையது என்று தெரியும் தானே…?” என்றான் இறைவன் புன்முறுவல் செய்தபடி.

“தெரியும்… ஆனால் என் கால்சுவடுகளுக்கு பின்னால் சில இடங்களில் உன் கால் சுவடுகள் காணோமே… முக்கியமாக எனது இக்கட்டான தருணங்களில் நீ என்னைவிட்டு போய்விட்டாயே…”

Gita upadesh

“அந்த ஒற்றை ஜோடி காலடி சுவடுகள் என்னுடையது. எங்கெங்கெல்லாம் ஒரே ஜோடி மட்டும் காண்கிறதோ, அதெல்லாம் வாழ்க்கையில் நீ துன்பமுற்ற காலத்தில் உன்னை சுமந்து நான் சென்ற பொழுது பதிந்த என்னுடைய காலடி சுவடு… புரிகிறதா ??” என்று இறைவன் கேட்டதும் “உன் அன்பை புரிந்துகொள்ள தவறிவிட்டேன். என்னை மன்னித்து விடு இறைவா…”அவர் பாதங்களில் சிரம் வைத்து நன்றி கண்ணீருடன் அக்கால்களுக்கு அபிஷேகம் செய்தான்.

நான் உன்னைவிட்டு ஒருபோதும் விலகுவதுமில்லை. கைவிடுவதுமில்லை!” – இது பைபிள் வாசகம் மட்டுமல்ல. திருவிளையாடற் புராணத்தில் ஈசன் சொல்வதும் இதைத் தான். கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்வதும் இதைத் தான்.

=============================================================

சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…

Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

தொடர்புக்கு : Rightmantra Sundar | M: 9840169215 | E : editor@rightmantra.com

=============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் திருப்பாம்புரம் கோவிலின் அர்ச்சகர் திரு.கௌரி சங்கர்

Gouri Sankar 1திரு.கௌரி சங்கர் (32), கும்பகோணம் – காரைக்கால் செல்லும் மார்க்கத்தில் உள்ள திருப்பாம்புரம் என்னும் ராகு-கேது பரிகாரத் தலத்தில் அர்ச்சகாராக தொண்டு புரிந்து வருகிறார். நாம் சில மாதங்களுக்கு முன்பு திருப்பாம்புரம் சென்றிருந்தபோது நமக்கு பரிகாரம் செய்து வைத்தவர் இவர்.

கடந்த எட்டு ஆண்டுகளாக திருப்பாம்புரம் கோவிலில் அர்ச்சகராக தொண்டாற்றி வருகிறார். பரிகாரம் செய்ய வருபவர்களுக்கு பரிகாரம் செய்து வைப்பது இவர் தான்.

இவர் தந்தை விஸ்வநாத குருக்களும் இதே திருபாம்புரத்தில் தான் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.

Gouri Sankar 2திரு. கௌரி சங்கர் அவர்களை பொருத்தவரை பரிகாரம் செய்யும்போது சிரத்தையாக ஏழை பணக்காரர் பேதம் பார்க்காது, அவர்கள் கொடுக்கும் தட்சணை பற்றி கவலைப்படாது செய்வார். கோவிலிலும் அதன் முன்னேற்றத்திலும் சிவ வழிபாட்டிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.

சில சமயம் சிலர் பரிகாரத்துக்காக திருப்பாம்புரம் வந்துவிட்டு திரும்பிச் செல்ல வசதியின்றி தவிப்பார்கள். அத்தகையோருக்கு உணவு ஏற்பாடு செய்து பஸ் கட்டணமும் கொடுத்து அனுப்புவார். அப்படி தவிப்பவர்கள் உண்மையில் கஷ்டப்படுகிறவர்கள் தானா இல்லை இரக்கத்தை வைத்து பணம் பறிக்கும் வழக்கமுள்ளவர்களா என்பதை தனது அனுபவத்தின் மூலம் சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்.

சிவராத்திரி, ராகு-கேது பெயர்ச்சி போன்ற விஷேட நாட்களில் சுவாமிக்கு அலங்காரம் சிறப்பாக செய்வார். திருவீதி உலா மற்றும் இதர உற்சவங்களின் போது இவரது கைவண்ணத்தில் தான் சுவாமி ஜொலிப்பார்.

சுவாமிக்கு நைவேத்தியத்தை இவரே யாரையும் எதிர்பார்க்காது தன் கைப்பட செய்து கொண்டுவந்துவிடுவார். மார்கழி மாதம் முழுக்க இவ்வாறு தயார் செய்து காலை 5.00 மணிக்கெல்லாம் வந்துவிட்டார். அந்தளவு தொண்டில் சிரத்தையாக இருப்பவர்.

நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி, தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுகொண்டபோது, மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

பாம்பாடும் திருபாம்புரத்தில் தொண்டாற்றும் திரு. கௌரிசங்கரன் தலைமை ஏற்பதால் சேஷபுரீஸ்வரர் அருளும் அன்னை பிரம்மராம்பிகை அருளும் அனைவருக்கும் கிடைக்கும் என்று நம்பலாம்.

=============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…

இந்த வார பிரார்த்தனைக்கு முதலில் கோரிக்கை அனுப்பியிருப்பவர் நம் முகநூல் நண்பர். வயதில் மூத்தவர். அவருக்கு இன்று மதியம் போன் செய்து, அவரது பிரார்த்தனை பொருத்தமானதொரு தலைமையில் நடைபெறவிருப்பதை சுட்டிக்காட்டினோம்.

“மேலும் பரிகாரம் அது இது என்று இப்போது எந்த செலவும் செய்ய வேண்டாம். உடனடியாக உங்களுக்கு ‘வேல்மாறல்’ நூலை அனுப்புகிறேன். பணம் கூட வேண்டாம். அதை முதலில் படிக்க ஆரம்பியுங்கள். நிலைமை ஓரளவு சீரடைந்து, முன்னேற்றம் தெரியும். பின்னர் திருப்பாம்புரம் சென்று சேஷபுரீஸ்வரரையும் அன்னை பிரம்மராம்பிகையும் தரிசனம் செய்யுங்கள். திரு.கௌரி சங்கர் குருக்களையும் சந்தித்து நன்றி கூறுங்கள். பரிகாரம் செய்யவேண்டும் என்று கட்டாயமில்லை. உங்கள் சூழ்நிலையை பொறுத்தது அது. ‘திருப்பாம்புரம் மண்ணை மிதித்தாலே திருப்பம் ஏற்படும்’ என்பது ஆன்றோர் வாக்கு. அனுபவப் பூர்வமான உண்மை. உங்கள் பிள்ளைபோல பாவித்து எப்போது வேண்டுமானாலும் என்னை அழையுங்கள். பிரச்சனையில் சிக்கித் தவிப்போருக்கு எப்போதும் நமது அலைபேசி காத்திருக்கும்” என்றோம்.

மிகவும் நெகிழ்ந்துபோய், “உங்கள் வார்த்தைகளே எனக்கு ஆறுதல் தருகிறது சார்” என்றார்.

அடுத்து அனுப்பியிருப்பவர் பாட்டி திருமதி.சீதா நாகாராஜன் அவர்கள். தனது பேரனின் திருமண தாமதம் குறித்து மிகவும் கவலைப்படுகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பே அலைபேசியில் தொடர்பு கொண்டு தனது கோரிக்கையை நம்மிடம் தெரிவித்தார். இவருக்கு மின்னஞ்சல் அனுப்ப தெரியாது என்பதால் இவர் சொல்ல சொல்ல நான் குறிப்பெடுத்துக்கொண்டோம். சொன்னதோடு விடாமல் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை தனது பிரார்த்தனை கோரிக்கை குறித்து நமக்கு அலைபேசியில் நினைவுப்படுத்திக்கொண்டே இருந்தார். சிறிதும் அலுத்துக்கொள்ளவில்லை. இந்த வயதில் இவருக்கு இப்படி ஒரு மனத்திடமா என்று வியந்தோம். என் பாட்டியிடம் பேசுவது போலவே இருந்தது. (என் பாட்டியின் பெயர் சீதாலக்ஷ்மி). இவர் கனவையாவது இறைவன் தாமதிக்காது நிறைவேற்றட்டும். நிறைவேறும்!!

(தங்களுக்கும் தங்களது அன்பிற்குரியவர்களுக்கும் திருமண பிராப்தம் வேண்டி இதுவரை பிரார்த்தனை கோரிக்கை அனுப்பியிருப்பவர்களது கோரிக்கைகள் அனைத்தும் இனி ஒவ்வொன்றாக அளிக்கப்பட்டுவிடும்.)

மூன்றாமவர் ராகேஷ் கிருஷ்ணா. இவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. தளத்தின் தீவிர வாசகர். நமது பணிகளில் எந்த வித எதிர்பார்ப்புமின்றி துணை நிற்பவர். பதிவுகள் அனைத்தையும் விடாமல் படிப்பவர். நம்மை நன்கு புரிந்துகொண்டவர்.

நமக்கு சோதனை வந்தால் கூட நாம் கலங்குவதில்லை. ஆனால் நமது பணிகளுக்கு துணையாய் இருப்பவர்களுக்கு ஒரு சோதனை எனும்போது நாம் கலங்கிவிடுகிறோம். நம்பிக்கை தானே வாழ்க்கை. திருநீற்றுப் பதிகம் படிக்க சொல்லியிருக்கிறோம். ஈசனருளால் விரைவில் அவரது கோரிக்கை நிறைவேறும் என நம்புவோமாக.

நான்காமவர்… என்ன சொல்ல?? ஒரு அ(இ)ப்பாவி! அவருக்கு நீங்கள் ஏதாவது கடன்பட்டிருப்பதாக கருதினால் போனால் போகட்டும் பிரார்த்தனை செய்துவிட்டு போங்கள்.

பொதுப் பிரார்த்தனை நிச்சயம் அனைவரும் அவசியம் படிக்கவேண்டும். ப்ளீஸ். எனக்காக அல்ல. நமக்காகவும் அல்ல. உங்கள் குழந்தைகளுக்காக.

நல்லது  நடக்கும். விரைந்தே நடக்கும். வாழ்க வளமுடன், அறமுடன், நலமுடன்.

=============================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

(1) ராகு-கேது பெயர்ச்சி அச்சுறுத்துகிறது….!

ஐயா,

நான் பல காலம் சர்க்கரை நோயில் அவதிப்பட்டு வருகிறேன். கடந்த 3 மாதகாலமாக நோய் கட்டுப்பாட்டுக்குள் வராமல் உள்ளது. என் பெயர். சந்திரசேகரன். இந்த ராகு-கேது பெயர்ச்சி எனக்கு நன்மை இல்லை எனவும், பரிகாரம் செய்யவேண்டும் எனவும் ஜோதிட கோவில்களில் தெரிவிக்கப்படுகிறது. எனவே கருணை கூர்ந்து மேற்படு நாம நட்சத்திரத்திரத்திற்கு கூட்டுப் பிராத்தனை செய்து, அர்ச்சனை செய்து செய்து முடிந்தால் விபூதி பிரசாதம் அனுப்பி வைத்தால் பேர் உதவியாக இருக்கும்.

மேலும் மேற்படி குன்றத்தூர் நாகேஸ்வரர் கோவிலில் என்ன பரிகாரம் செய்தால் இந்த உபாதை நீங்கும் என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
க.ரா.சந்திரசேகரன்.
முகப்பேர் கிழக்கு

=============================================================

(2) பேரனுக்கு திருமணம் ஆகவேண்டும்!

என் பெயர் சீதா நாகாராஜன் (78). ஹைதராபாத்தில் வசிக்கிறேன். முகநூலில் மகா பெரியவா தொடர்புடைய பதிவுகளை படித்தபோது, இந்த தளத்தை பற்றி அறிந்துகொண்டேன்.

எனது பேரன் பாலாஜி பிரசாத் (வயது 28), பி.ஈ, எம்.பி.ஏ. முடித்து மும்பையில் சாப்ட்வேர் எஞ்சினீயராக பணியாற்றுகிறான். அவனுக்கு நீண்டநாட்களாக வரன் பார்த்து
வருகிறோம். எதுவும் அமையவில்லை.

அவனுக்கு காலாகாலத்தில் திருமணம் செய்வித்து பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

அவனுக்கு நல்ல இடத்தில பெண் அமைந்து திருமணம் ஆகி அவன் மனைவியுடன் குடித்தனம் நடத்துவதை பார்க்கவேண்டும். என் ஒரே ஆசை அது தான்.

அவனுக்காக அனைவரையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

திருமதி.சீதா நாகராஜன்,
ஹைதராபாத்

=============================================================

(3) தங்கை குழந்தை நலம் பெற வேண்டும்!

சுந்தர் அண்ணாவிற்கும் வாசகர்களுக்கும் வணக்கம்.

என் தங்கையின் குழந்தை பார்கவி கடந்த சில நாட்களாக காய்ச்சல் வந்து அவதிபடுகின்றாள். பிறந்து சுமார் 6 மாதங்கள் கடந்த பார்கவியை மருத்துவமனையில் அட்மிட் செய்து பரிசோதித்தபோது, அவளுக்கு நிமோனியா காய்ச்சல் வந்துள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தங்கையும், நானும், தம்பி மனோவும் அப்பா அம்மாவும் மற்றும் இதர குடும்பத்தினரும் மிகவும் கவலையில் உள்ளோம். கடந்த இரண்டு நாட்களாக மனம் எதிலும் லயிக்கவில்லை.

தங்கள் அறிவுறுத்தலில் பாண்டியனின் வெப்பு நோய் தீர்க்க சம்பந்த பாடிய திருநீற்றுப் பதிகம் படித்துவருகிறேன்.

குழந்தை பார்கவி விரைவில் இந்த நிலையில் இருந்து விடுபட்டு,பூரண நலம் பெற வேண்டி, நம் தல பிரார்த்தனை குழுமத்திற்கு கோரிக்கை வைக்கிறேன்.

மிக்க நன்றி,

– ராகேஷ் கிருஷ்ணா,
மறைமலைநகர்

=============================================================

(4) கனவு மெய்ப்படவேண்டும்!

இந்த பிரார்த்தனை கிளப் தொடங்கியதிலிருந்து இந்த மூன்றாண்டுகளாக மற்றவர்களுக்காகவே நாம் இந்த மன்றத்தில் பிரார்த்தனை சமர்பித்து வந்துள்ளோம். கூட்டுப் பிரார்த்தனையின் மகத்துவம் அறிந்திருந்தும் நமக்காக நாம் எதுவும் இந்த மன்றத்தில் கோரிக்கை வைத்ததில்லை. முதல் முறையாக வைக்கிறோம். இதற்கு மேல் வார்த்தைகள் நம்மிடம் இல்லை.

உயிரினும் மேலான பாரதி மிக அழகாக பாடியிருக்கிறான். நன்றி.

bharathiyar‘மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினிலே இனிமை வேண்டும்,
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்படவேண்டும்,
கனவு மெய்ப்படவேண்டும்,
கைவசம்ஆவது விரைவினில் வேண்டும்,
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்,
கண் திறந்திடவேண்டும்,
காரியத்தில் உறுதி வேண்டும்,
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்கவேண்டும்,
மண் பயனுறவேண்டும்,
வானகம் இங்கு தென்படவேண்டும்,
உண்மை நின்றிடவேண்டும்!’
ஓம் ஓம் ஓம் ஓம்.

=============================================================

பொது பிரார்த்தனை

கல்வியின் பெயரால் இனி நிகழக்கூடாது இந்த அவலம்!

அண்மையில் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். அந்த செய்தியை பார்த்தவுடன் நாம் அடைந்த வேதனைக்கு அளவேயில்லை. அவர்கள் பெற்றோர்கள் எத்தனை எத்தனை கனவு கண்டிருப்பார்கள்?

news_26-01-2016_91studentஇந்த மாணவிகள் மூவரின் மரணத்திற்கு உண்மையில் காரணமானவர்களை சட்டம் எப்போது தண்டிக்குமோ தெரியாது. ஆனால், குற்றவாளி கூண்டில் முதலில் நிற்கவேண்டியது உண்மையில் இந்த சமூகம் தான்.

எப்படி?

‘ஒருத்தன் ஆசையை தூண்டிவிட்டா அவனை தப்பு செய்ய வைக்கலாம்’ன்னு சதுரங்க வேட்டைல ஒரு வசனம் வரும். எல்லோருடைய ஆசையும் சகட்டுமேனிக்கு தூண்டி விட்டால்?

இந்த ஆசையால் போலி கல்லூரிகள், போலி மருத்துவர்கள் என்று எத்தனை எத்தனை பிரச்சனைகள்? அந்த கல்லூரி அங்கீகாரம் இல்லாதது அவ்வளவு தான். ஆனால் அவர்களுக்கு எப்படி ஒரு மனஉளைச்சல் இருந்தால் இந்த முடிவுக்கு அவர்கள் வந்திருப்பார்கள்?

அதை தெரிந்து கொள்ள தமிழ் நாட்டில் மருத்துவர் வாய்ப்புகள் எப்படி பட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

குப்புற விழுந்து படிச்சு உடம்பில் இரத்தத்துக்கு பதில் மார்க்குகளை சுமந்தால் மட்டுமே MBBS. அதற்கு அடுத்த நிலையில் சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, பிஸியோதெரபி என்ற மார்க் வரிசையில் தான் சீட் கிடைக்கும் அதே வரிசையில் தான் அரசு வேலையும், மரியாதையும், வருமானமும்.

அரசு அங்கீகரித்த மருத்துவத்துக்கே இந்த நிலைமை, அரசு அங்கீகாரமே இல்லாமல் “நீங்களும் டாக்டராகலாம்” க்ரூப் ஒன்னு இருக்கு. ஏப்ரல் மே மாதத்தில் கல்லூரி விளம்பரங்கள் வரும் போது கவனித்து பாருங்கள்..”வர்மா, ரெய்கி, அக்குபங்க்சர், எலக்ட்ரோ ஹோமியோபதி, சீதாபதி, வாந்திபேதி” என்று புதிது புதிதாக கூவுவார்கள். எதற்கும் அங்கீகாரம் இல்லை. ஆனால் recognised by Autonomous body, Delhi university. Open university, China” என்று தினுஷாக விளம்பரம் வரும்.

சின்ன வயதில் இருந்து மருத்துவராகும் விஷ ஆசையை ஊட்டி ஊட்டி, மருத்துவர் வாய்ப்பு கிடைக்காமல், கடுமையான மன உளைச்சலுக்கு பின் மாற்று மருத்துவத்தை தேர்வு செய்யும் ஒருவருக்கு ஏகப்பட்ட குழப்பம் இருக்கும்…

சரியான கல்வியை தான் தேர்வு செய்கிறோமா? இதில் நுழைந்தால் மரியாதை இருக்குமா?? வருமானம் இருக்குமா ?? ஊசி போடலாமா?? கோட் போடலாம்மா?? ஸ்டெத் உபயோகிக்கலாமா என்று 13 வயது பையனுக்கு செக்ஸ் பற்றிய சந்தேகங்கள் போல என்னென்னவோ இருக்கும்.

அத்தனைக்கும் ஆசை காட்டி, உள்ள வான்னு கூப்பிட்டு அவனோட ஒவ்வொரு ஆசையிலும் மண்ணை அள்ளி போடுவார்கள்.

அவன் எதிர்பார்த்த எதுவுமே இல்லாமல், அங்க இருக்கும் அனைத்து மாணவர்கள் மத்தியிலும் ஒரு நெகடிவ் வேவ் இருக்கும். அப்பா மருத்துவராக இருந்தால் ஓகே. மற்றவன் எல்லாம் பைத்தியம் பிடிக்கும் மன நிலையில் இருப்பான். அவன் வாழ்க்கையே ஒப்படைத்திருக்கிறானே, இருக்காதா பின்னே?? அதிலும் அந்த இளம் வயதில்….அந்த நிலையில், மாற்று முறை மருத்துவத்தை தேர்ந்தெடுத்து அதிலும் சரியான ஒன்றை தேர்ந்தெடுக்காமல், நேச்சுரோபதி என்னும் உப்பு பெறாத படிப்பை எடுத்து அதிலும் அங்கீகாரமே இல்லாத ஒரு கல்லூரியை தேர்ந்தெடுத்து, சேர்ந்து, கடனை வாங்கி / நிலத்தை விற்று பணம் எல்லாம் செலுத்திய பின், எதிர்காலமே இல்லை என்ற வகையில் அவர்கள் மரணம் எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை.

இவ்வளவு அவஸ்தைக்கு 6 மாத அக்குபங்க்சரோ, அல்லது பாரம்பரிய சித்த வைத்தியர் என்றோ தெளிவாக போர்ட் போட்டு அரசையும் ஊரையும் ஏமாற்றலாம். அட்லீஸ்ட் நம்ம உயிருக்கு பதில் அடுத்தவன் உயிராவது போகும்.

பெற்றோர்கள் மருத்துவத்தை பிடித்து தொங்காமல் பிள்ளைகளுக்கு ரியாலிட்டியை புரிந்து கனவை விதைப்பது நல்லது. அதை விட முக்கியம் கனவுகள் கலையலாம், உறக்கம் கலையலாம் ஆனால் விடியல் ஒவ்வொரு நாளும் தொடங்குகிறது என்பதை பிள்ளைகளுக்கு சொல்லி குடுப்பது முக்கியம். Rest in peace my children… We are sorry..

********************************

ஏறக்குறைய அனைத்து சிறார்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை சொல்கிறார்கள். பெற்றோர்கள் தாக்கம் தெரிகிறது.

இந்த கனவு நாளடைவில் வெறியாக மாறி குழந்தைகளின் பொதுத் தேர்வில் தகுதிக்கு மீறி படித்து மிகுந்த சிரமப்படுகிறார்கள். தோல்வியடைந்தால் மன விரக்தியில் ஓன்று தன்னம்பிக்கை இழந்து மன நோயாளியாகவோ அல்லது தற்கொலை எண்ண பிடியிலோ சிக்கிக் கொள்கிறார்கள்.. இது தேவையா?

குழந்தைகளை தெய்வத்திடம் வேண்டும்போது “மருத்துவராக வேண்டும். நெறய பணம் சம்பாதிக்க வேண்டும்” என்று கேட்க சொல்கிறார்கள் பெற்றோர்கள். எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ண விதையை குழந்தைகளின் அடிமனதில் விதைக்குமே தவிர வேறு ஓன்று நன்மை இல்லை. பணத்திற்குதான் மரியாதை என்பது பிஞ்சுக்களின் அடி மனிதில் அழுத்தமாக விதைக்கப்படுகிறது.

போதாகுறைக்கு சிறுவர்கள் வளரும் பிராயத்தில் எப்படியாவது குறுக்கு வழியிலாவது சம்பாதிக்க வேண்டும் என்று சொல்லி கொடுக்க இருக்கவே இருக்கிறது நமது திரை படமும் மனிதாபிமானமற்ற வாழ்க்கை முறையும். விளைவுகளை பற்றி சொல்லவா வேண்டும்? பணமே பிரதானம் என்று வளர்க்கப்படும் பிள்ளைகள் பிற்காலத்தில் தங்கள் பெற்றோர்களை எப்படி நடத்துவார்கள்? முதியோர் இல்லங்கள் பெருக இதுவும் ஒரு காரணம்.

நன்றி : SARAV URS, SRINIVASAN | நமது முகநூல் பதிவு உட்பட நண்பர்கள் சிலரது பதிவுகளை சுருக்கி, திருத்தி இதை தந்திருக்கிறோம்.

மாணவர்கள் பெற்றோர்களின் நிர்பந்தம் மற்றும் சமூக அந்தஸ்த்துக்காக படிக்காமல் அவர்கள் விரும்பும் கல்வியை, மகிழ்ச்சியான சூழலில் படிக்கவேண்டும். அந்த மாற்றம் சமூகத்தில் நிகசவேண்டும். இனியும் கல்வியின் பெயரால் மாணவ, மாணவிகள் பலி கொடுப்பது நிற்கவேண்டும். இதுவே இந்த வாரத்தின் பொது பிரார்த்தனை.

=============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgமுகப்பேரை சேர்ந்த திரு.சந்திரசேகரன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்து, அவரை அச்சுறுத்தும் ராகு-கேது கிரகங்கள் நல்லதே செய்யவும், அவரது துன்பங்கள் யாவும் நீங்கி அவர் நோயற்ற வாழ்வோடு மகிழ்ச்சியோடு இருக்கவும், ஹைதராபாத்தை சேர்ந்த திருமதி.சீதா நாகராஜன் அவர்களின் பேரன் சிரஞ்சீவி.பாலாஜி பிரசாத்துக்கு நல்லதொரு வரன் அமைந்து விரைவில் திருமணம் நிகழவும், வாசகர் ராகேஷ் கிருஷ்ணா அவர்களின் தங்கை குழந்தை பார்கவிக்கு ஏற்பட்டுள்ள நிமோனியா காய்ச்சல் நீங்கி, அக்குழந்தை சுகம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். நான்காவதாக இடம்பெற்றிருக்கும் அ(இ)ப்பாவியின் கோரிக்கையும் நிறைவேறவேண்டும்.

மாணவர்கள் நிர்பந்தத்திற்க்காக படிக்காமல் அவர்கள் விரும்பும் மேற்கல்வியை மகிழ்ச்சியோடு படிக்கவேண்டும். கல்வியின் பெயரால் மாணவ, மாணவிகள் பலி கொடுக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றிருக்கும் திரு.கௌரி சங்கர் குருக்களின் சிவத் தொண்டு சீரும் சிறப்புமாக தொடரவும், அவர் பரிகாரம் செய்து வைக்கும் யாவரும் தங்கள் தோஷங்கள் நீங்கப் பெற்று சுகமோடு வாழவும் பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜனவரி 31, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

வழக்குகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு!

அடுத்த பிரார்த்தனை கிளப் வழக்குகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு அளிக்கப்படவிருக்கிறது. அந்த பிரார்த்தனைக்கு வழக்கறுத்தீஸ்வரர் கோவில் குருக்கள் திரு.நாகராஜ் குருக்கள் தலைமை ஏற்கவுள்ளார். எனவே வழக்குகளால் இன்னல்படுபவர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும் இறுதியில் அவரவர் அலைபேசி எண், பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட்டு நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

பிரார்த்தனை கோரிக்கை மட்டும் அவரவர் பெயர் மற்றும் ஊருடன் தளத்தில் அளிக்கப்படும். பெயர், ராசி, நட்சத்திரம் வழக்கறுத்தீஸ்வரருக்கு அர்ச்சனை செய்ய பயன்படும். ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் வெளியிடப்படாது!

சந்தேகங்களுக்கு நம்மை அலைபேசியில் தொடர்புகொள்ளவும்! பெயரோ ஊரோ வெளியிட விரும்பவில்லை என்றால் அதையும் குறிப்பிட்டு அனுப்பவும். அவர்கள் பெயர்கள் இல்லாமல் பிரார்த்தனை வெளியிடப்படும்.

For more details please check :

ஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து!

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

=============================================================

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோவிலில் மங்கள வாத்தியக் கலைஞராக தொண்டாற்றும் நாதஸ்வர வித்துவான் திரு.டி.கே.சதாசிவம் அவர்கள்

சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?

சென்ற பிரார்த்தனைக்கு தலைமையேற்ற திரு.டி.கே.சதாசிவம் அவர்கள் சொன்னபடி இரண்டு வாரமும் திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில் ஜெகந்நாதரிடம் பிரார்த்தனை செய்தார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

* பிரார்த்தனைக்கு விண்ணப்பித்து இதுவரை அது வெளியாகாமல் இருந்தால் அந்த மின்னஞ்சலையும் நமக்கு மீண்டும் editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

=============================================================

[END]

2 thoughts on ““கண் திறந்திட வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்” – Rightmantra Prayer Club

  1. இந்த பதிவில் போட்டு உள்ள கதை தெரிந்த கதை .மீண்டும் நம் தளம் வாயிலாக படிப்பதில் மிக்க மகிழ்ச்சி . இந்த வார ப்ரார்த்தனைக்கு தலைமை ஏறகும் திரு கௌரிசங்கர் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் . இந்த வார ப்ரார்த்தனை கோரிக்கை களை ஈசன் கண்டிப்பாக நிறைவேற்றுவார். ராகேஷ , மனோவின் சகோதரி குழந்தை வெகு விரைவில் பூரண குணம் ஆக வேண்டும் நம் தள ஆசிரியரரின் கனவு மெய்ப்பட வேண்டும்

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து
    ராம் ராம் ராம்
    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *