மனிதன் இறையருளை பெற பலவித வழிகள் உண்டு. அவரவரர் சக்திக்கும் ஞானத்துக்கும் ஏற்ப பக்தி செய்து இறைவனை அடையவேண்டும்.
அவரவர் பிறக்கும், வாழும், வளரும் சூழ்நிலைக்கேற்ப அவர்களது பக்தியின் தன்மை மாறுபடும். எனவே ஒருவருக்கு வைக்கப்படும் அளவுகோல் மற்றவர்களுக்கு ஏற்புடையதாக இருக்காது.
தேவாரத்தில் முதல் பாடல் பாடி பல திருத்தலங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து இறுதியில் இறைவனுடன் ஐக்கியமான சம்பந்தரும் நாயன்மார்தான். எழுத்தறிவேயில்லாத இல்லாத வேடுவனாக வாழ்ந்து, தான் வேட்டையாடிய புலாலையே குடுமித் தேவருக்கு படைத்து (ஈசனை அப்படித் தான் கண்ணப்பர் அழைப்பாராம்) படைத்து மகிழ்ந்த கண்ணப்பரும் நாயன்மார் தான். அவரவர் வழியில் அவரவர் உயர்ந்தவர். அடியார்களுள் ஏற்றத் தாழ்வே கிடையாது.
ஒருவர் பின்பற்றும் வழியை மற்றவர் பின்பற்றமுடியாது. ஆனால் அனைவரும் பின்பற்றி பலனடையக் கூடிய பக்தி முறை ஒன்று இருக்கிறது. அது தான் ‘பாதசேவகம்’ எனப்படும் அடியார்களுக்கு செய்யும் தொண்டு. அதாவது அடியார்கள் செய்து வரும் பணிகளில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது.
பக்தி இலக்கிய வரலாற்றில், அடியார்களுக்கு தொண்டு செய்து முக்தி பெற்றவர்கள் பலருண்டு.
திருநாவுக்கரசருக்கு தொண்டு புரிந்த அப்பூதி அடிகள், சம்பந்தப் பெருமானுக்கு தொண்டு புரிந்த திருநீல நக்க நாயனார், சுந்தரருக்கு தொண்டு புரிந்த சேரமான் பெருமான், இப்படி பலர் இறைவனின் மெய்யடியார்களுக்கு தொண்டு செய்தே முக்தி பெற்றுவிட்டனர்.
நாள், கிழமை மற்றும் விஷேட நாட்களில் அன்னதானம் நடைபெறுவதுண்டு. அன்னதானம் நமது பக்தி இலக்கியத்தில் பாரம்பரியத்தில் எத்தகைய ஒரு உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை நாம் ஏற்கனவே பல பதிவுகளில் விளக்கியிருக்கிறோம்.
அடியவர்களுக்கு நடைபெறும் அன்னதானங்களில் கலந்துகொண்டு சேவை செய்வது (VOLUNTARY SERVICE) என்பது மிக மிக உயர்ந்த ஒரு தொண்டு. அப்படிப்பட்ட மகத்தான கைங்கரியம் ஒன்றில் கலந்துகொள்ள உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
தைப்பூசம் என்றதும் பழநியும் பாதயாத்திரையும்தான் நினைவுக்கு வரும்.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தையொட்டி ஈரோடு, ,திண்டுக்கல், திருச்சி,மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஒசூர், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகப் பழனி செல்வது வழக்கம். அப்படி செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினரும் அன்னதானம் செய்வார்கள்.
பழனி பாதயாத்திரை அன்னதானம் மிகவும் புகழ் பெற்றது. மகத்துவம் மிக்கது. பலரது வாழ்க்கையையே மாற்றி செம்மைப்படுத்தியிருக்கிறது.
வரும் தைப்பூசத்தையொட்டி பழநி பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கும் விழா, ஒட்டன்சத்திரத்தில் 22ம் தேதி நடக்கிறது. இந்த அறப்பணிக்காக, ‘அன்னதான குடில்’ ஒன்றை ஒட்டன்சத்திரத்தில் ‘குழந்தை வேலன்’ சன்னதி அருகே ‘கே.டி.திருமண மஹாலில்’ சென்னை ‘அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு’ அமைத்துள்ளது.
(அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழுவினர் சிறுவாபுரியில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய வள்ளி மணவாளபெருமான் திருக்கல்யாண உற்சவத்தில் நாம் நமது உழவாரப்பணி குழுவினருடன் கலந்துகொண்டு சேவையாற்றியது நினைவிருக்கலாம்.)
சிறுவாபுரி முருகன் புகழ்பாடும் இக்குழுவினர் ஆற்றிவரும், ஆன்மிக பணிகளில், பழநி தைப்பூச அன்னதானம் பிரதானமானது. ‘பல கைகள் சேர்ந்து, அன்னம்பாலிப்பது அளப்பறிய அறப்பணி’ என்ற தாரக மந்திரத்திடன் நடக்கும் இப்பணியில் பங்கேற்று சேவை செய்ய விரும்புபவர்கள் மற்றும் உதவிட விரும்புகிறவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். 9944309719, 9842198889
21ம் தேதி இரவு பூஜையுடன் விழா துவங்குகிறது. சென்னை மற்றும் மதுரையில் இருந்து வருபவர்கள் மண்டபத்தில் தங்கும் வகையில் மண்டபம் பிடிக்கப்பட்டுள்ளது. 22ம் தேதி காலை உணவு மற்றும் மதியம் சாப்பாடு. காலை 300 முதல் 500 பேர் வரை டிபன். மதியம் 500 பேர் முதல் 750 பேர் வரை வாழை இலையில் சாப்பாடு வழங்க திட்டமிட்பபடுகிறது.
திண்டுக்கல் மற்றும் பழனி பகுதிகளிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் உள்ள நம் ரைட்மந்த்ரா வாசகர்கள் மேற்படி விழாவுக்கு வந்திருந்து தங்கள் மேலான சேவையை நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம். சேவைக்கு வரவிரும்பும் ஆண்கள் பச்சை நிற வேட்டியும் பெண்கள் பச்சை நிறச் சேலையும் அணிந்து வருவது சாலச் சிறந்தது.
[END]
========================================================
Also check :
நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!
சிறுவாபுரிக்கு வாங்க, மணமாலையை சூடுங்க!
இல்லறமும் நல்லறமும் கூடவே சொந்த வீட்டையும் அருளும் சிறுவாபுரி பாலசுப்ரமணியர் !
நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!
========================================================
[END]