ஏற்கனவே நமது தளத்தில் அனுமனை பற்றி பல பதிவுகள் வந்துள்ளன. (சுட்டிகள் இறுதியில் அளிக்கப்பட்டுள்ளன). இந்த அனுமத் ஜெயந்திக்கு ஏதேனும் தொன்மையும் சிறப்பும் மிக்க அனுமன் ஆலயம் பற்றி பதிவளிக்க விரும்பினோம்.
ஆஞ்சநேயர் கோவில்களை பொருத்தவரை பிள்ளையார் கோவில்கள் எப்படியோ அப்படித் தான். முட்டுச் சந்தில், மூளை முடுக்கில், தூணில், சிற்பத்தில் எங்கும் இருப்பவர். அனுமனின் கோவில்கள் பெரும்பாலும் மிக மிக எளிமையாக இருக்கும். நங்கநல்லூர் போன்று ஒரு சில ஷேத்ரங்களில் தான் கோவில்கள் சற்று பிரம்மாண்டமாக இருக்கும். (அதுவும் கடந்த இருபது முப்பது ஆண்டுகளாகத் தான் இந்த மாற்றம்!). மற்றபடி பாமரர்களின் தெய்வம் அவர் என்பதால் மிக மிக எளிமையாக இருப்பார்.
நம் சென்னையை சுற்றிலுமே பல தொன்மையும் சிறப்பும் மிக்க ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. இருந்தாலும் நம் வாசகர்களுக்கு அதிகம் அறியப்படாத அதே நேரம் வரலாற்று சிறப்பு மிக்கதொரு அனுமன் கோவிலை அறிமுகப்படுத்த எண்ணினோம். அஞ்சனை மைந்தனின் அருள் கிட்டியது.
அனுமத் ஜெயந்திக்கு ஆலய தரிசன பதிவை அளித்தாகவேண்டும் என்று முடிவு செய்ததையடுத்து (07/01/2016) திடீர் காக்களூர் பயணம். நாம் வசிப்பது போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் என்பதால் அங்கிருந்து பூவிருந்தவல்லி, திருமழிசை வழியாக திருவள்ளூர் சென்றோம். திருவள்ளூரிலிருந்து ஆவடி செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது காக்களூர்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கோவிலுக்கு சென்றிருக்கிறோம். அதற்கு பிறகு தற்போது தான்.
நாம் சென்றபோது அனுமத் ஜெயந்தியை முன்னிட்டு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
அனுமனை தரிசித்த பிறகு, அர்ச்சகரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு ஆலய தரிசன பதிவுக்காக வந்திருப்பதாக தெரிவித்தோம். அவர் நம்மை ஆலய அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கு டிரஸ்டியிடம் அறிமுகப்படுத்தினார். இங்கு டிரஸ்டியாக இருப்பவர் திருமதி.இந்திரா என்னும் பெண்மணி.
நாம் மறுபடியும் விசேஷ தரிசனம் செய்த பிறகு, சிறப்பு அனுமதியுடன் புகைப்படம் எடுத்தோம். இங்கே சுவாமியை புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. இருப்பினும் நாம் புகைப்படங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதில்லை என்பதால் இது விஷயத்தில் நமக்கு திருவருள் என்றுமே சாதகமாகவே இருந்து வந்துள்ளது என்று கருதுகிறோம்.
சுமார் பதினைந்து நிமிடங்கள் இருவரும் பல விஷயங்கள் குறித்து பேசினோம். பின்னர் நம்மை ஆலயத்திற்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு பகுதியாக சுற்றிக் காண்பித்தார்.
ஆலயத்தை ஒட்டி பிள்ளையார் கோவில் ஒன்று இருக்கிறது. அதை பராமரிப்பதும் இவர்கள் தான்.
அன்னதானக் கூடம் தனியே இருக்கிறது. சுமார் 50 பேருக்கு மதியம் சாப்பாடு அளிக்கப்படுகிறது. நீங்கள் உபயம் செய்யவேண்டும் என்றால் ரூ.1000/- கட்டிவிட்டால் போதும்.
ஆலயத்தின் வாயிலில் உள்ள கடையிலேயே வெற்றிலை மாலை, பூக்கள், அர்ச்சனைக்கு தேங்காய் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும். இங்கு ஒவ்வொரு செவ்வாயும் சுமார் 6 செவ்வாய் கிழமை வந்திருந்து அனுமனுக்கு அர்ச்சனை செய்து சீவலோடு சேர்த்து கட்டிய வெற்றிலை மாலை அணிவித்தால் வேண்டியது நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. ஆறு வாரமும் வரவியலாதவர்கள் முதல் வாரமோ கடைசி வாரமோ நீங்கள் வரலாம்.
இந்த ஆலயம் தொன்மையானது என்று சொன்னோமில்லையா? எப்படி என்று பார்ப்போமா!
ஆரண்ய காண்டத்தில் ஒருசமயம், ஸ்ரீராமனும், சீதாபிராட்டியும் ஏகாந்தமாக இருக்கும்போது, தேவேந்திரனின் மகன் ஜயந்தன், சீதை மேல் மோகங்கொண்டு, காகமாக மாறி அவளை கொத்துகிறான். இதையடுத்து ஸ்ரீராமனின் கோபத்திற்காளாகிறான். ஸ்ரீராமன் ஒரு புல்லில் பிரம்மாஸ்த்திரத்தை ஆவாஹனம் செய்து அவன் மேல் பிரயோகம் செய்ய அது அவனை விடாமல் துரத்துகிறது. ஜயந்தன் மூவுலகெங்கும் அலைந்து திரிந்து எவரிடமும் அபயம் கிடைக்காமல் போக, முடிவில் ஸ்ரீராமனிடமே சரணடைந்து மன்னிக்க வேண்டுகிறான். ராமபாணம் ஒரு போதும் பொய்க்காது என்பதால் ஒரு கண்ணை மட்டும் இழந்து உயிர் தப்புகிறான்.
தனது பாபத்துக்கு விமோசனம் வேண்ட, “உன் அரசாட்சியில் சௌகந்திகா மலர்கள் எங்கு பூத்து குலுங்குகிறதோ அங்கு நான் மேற்கு நோக்கி லட்சுமி நாராயணனாக அருள்புரிவோம். அங்கு சிறிய திருவடி எமக்கு காவல் பணி செய்வர். ‘அந்தம்’ எனப்படும் அந்த இடத்தில் – எங்கும் பலன் கிடைக்காமல் இறுதியில் இங்கு வந்து தஞ்சம் அடைவோருக்கு – அருள் செய்வதற்காக தோன்றியிருக்கும் எம்மை வந்து வணங்கி பாவம் ஒழிவாய்” என தெரிவித்தார்.
கலியுகத்தில் திருமால் தாம் தம் துணையுடன் இருந்து அருள் தரத்தக்க இடங்களை தேர்வு செய்யும் போது அவர் நாராயண ரூபத்தில் திருமகளுடன் இருந்து அருள் புரிய தேர்ந்தெடுத்த இடங்களில் ஒன்று இந்த சௌகந்திகாவனம். சௌகந்திகா மலர் புராணச் சிறப்பு மிக்கது. யுகங்கள் கடந்த புகழ் உடையது.
இங்கு திருமாலுக்கு துணையாக ஆஞ்சநேயர் அருகில் காவல் காத்திருந்தார். அந்த இடம் காகாசுரன் எனும் அசுரனின் நாட்டின் ஒரு பகுதியாக அமைந்து இருந்தது.
ஜயந்தன் விசுவாசுவுக்கு மகனாகப் பிறந்து காகாசுரன் எனும் பெயரோடு வளர்ந்து போகம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தான். ஒரு சமயம் அவனது தவறான செய்கையால் அவ்வழியே வந்த வசிஷ்டர் வெகுண்டு அவனுக்கு தன்னிலை மறந்து திரிய சாபம் தந்தார். அதன் அடிப்படையில் அவன் அலைந்து திரிந்து கண்டதே காட்சி, கொண்டதே கோலம் எனக் கிடந்தான். அவ்வாறு இருக்கையில் ஒருநாள் சௌந்திகா வனம் வந்தான். அங்கு ஆஞ்ச நேயர் காவலை மீறிச் செல்ல, அவர் ஓங்கி அடிக்க அவன் பித்தம் தெளிந்து தன்னிலை அடைந்தான். சூழலை அறிந்து தெளிந்து, ஆஞ்சநேயர் கைக் காட்ட இலக்குமி நாராயணராக அருளும் திருமாலை வணங்கி முன் வினை பாபம் நீங்கினான் காகாசுரன் எனும் ஜயந்தன். காகாசுரன் எனும் மன்னன் ஆண்டதால் இவ்வூர், காகாளூர் என்றாகி, பின் காக்களூர் என்று வழங்கத் தொடங்கியது.
கலியுகத்தில் ஸ்ரீ ராகவேந்திரரின் முந்தைய அவதாரமான ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் தன்னுடைய தேச சஞ்சாரத்தின் போதும் தான் வாழ்ந்த 92 ஆண்டுகளில் ஒரே உருவ அமைப்புடைய 732 ஆஞ்சநேய விக்ரகங்களை அந்தந்த சிறப்புமிக்க வரலாறுடைய ஊர்களில் எல்லாம் நிறுவினார். அவ்வாறு வரும்போது திவ்ய தேசங்களான திருவள்ளூருக்கும் திருநின்றவூருக்கும் இடையில் ஆஞ்சநேயர் அருளால் காகாசுரன் சாப விமோசனம் பெற்ற சௌகந்திகாவனம் என்னும் இடத்தை அடைந்தார். அங்கு ஆஞ்சநேயர் பூஜை செய்த லக்ஷ்மி நாராயணரைக் கண்டு வணங்கினார்.
அவ்விடத்தில் ஒன்பது அடி உயர ஆஞ்சநேயர் விக்ரகம் ஒன்றை பத்ம பீடத்தில் நிறுத்தினார். ஞானத்தின் அடையாளமாக சிரசில் குடுமியினையும் ஓங்கார வடிவில் வாலினையும் வெற்றியை அறிவிக்கும் வகையில் வால் நுனியில் மணியும், தூது செல்பவனுக்கு அடையாளமா இடுப்பில் குறுவாளும், யாமிருக்கையில் எதற்கும் அஞ்சேல் என்று காட்டுவதற்காக விரித்த அபயகரமும், இடது கரத்தில் ஆயிரம் இதழ்கள் உடைய வாசம் மிக்க சௌந்திகா மலருடனும் மார்பில் சந்திர ஹாரம், பூணூல், இடுப்பில் இடைக்கட்டு வேஷ்டியும் உள்ள ஆஞ்சநேயபிரபுவை ஸ்தாபனம் செய்து வழிபட்டார்.
அந்தக் கோவில் தான் காக்களூர் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்.
இத்திருக்கோயிலுக்கு செல்ல சென்னை- திருவள்ளூர் மற்றும் ஆவடியில் இருந்து பல பேருந்துகள் செல்கின்றன. காக்களூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1/2 கி.மீ தொலைவில் திருக்கோயில் அமைந்துள்ளது.
தரிசன் நாட்கள்: ஒவ்வொரு சனி, ஞாயிறு, புதன் மற்றும் வியாழன் தரிசனம் செய்ய உகந்த நாட்களாக இருந்தாலும் மாத அமாவாசை, பௌர்ணமி, திருவோணம், மற்றும் மூல நட்சத்திர நாட்கள் மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.
அனுமத் ஜெயந்தி இங்கு மிகவும் விசேஷம். இந்த கோவிலைப் பொருத்தவரை அனுமத் ஜெயந்தி இங்கு நாளை (10/01/2016) தான் கொண்டாடபடுகிறது. காலை 6.00 மணிக்கு மங்கள வாத்தியமும், தொடர்ந்து ஸ்ரீ ஹரி வாயு ஸ்துதியுடன் மஹா அபிஷேகமும், அதனை தொடர்ந்து 8.30 க்கு தீப ஆராதனையுடன் மங்கள ஹாரத்தியும் அர்ச்சனையும் நடைபெறுகிறது. 9.00 மணிக்கு திருவூர் கோதண்டராம பக்த ஜன சபையின் ஸ்ரீ ராம நாம பஜனை நடைபெறுகிறது. மாலை ரத உத்சவத்தில் சுவாமி எழுந்தருள்வார்.
உத்ய தாதித்ய ஸங்காசம் உதார புஜ விக்ரமம்
க்ந்த்தர்ப கோடி லாவண்யம் ஸர்வ வித்யா விசாரதம்
ஸ்ரீராம ஹ்ருதயா/நந்தம் பக்த கல்ப மஹிருஹம்
அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம்
ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கிருபை உண்டாக இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நாம் ஆஞ்சநேயரை மனம் உருகி வேண்டிக் கொண்டால் நம் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக மறைந்து விடும்.
ராமனின் புகழ் பாடாமல் அனுமனின் வழிபாடு நிறைவு பெறுவதில்லை. எனவே ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் பாடலுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறோம். அனைவருக்கும் அஞ்சனை மைந்தனின் அருள் உரித்தாகுக!
‘நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே
‘ராம’ என்றிரண்டெழுத்தினால்’
- இந்த அனுமனுக்கு முத்தங்கி அணிவித்த அலங்காரத்தின் புகைப்படம் விரைவில் இணைக்கப்படும்.
http://rightmantra.com/wp-content/uploads/2016/01/Kakkalur-Veera-Anjaneyar.jpg
========================================================
ஒரு படைப்பாளியின் உண்மையான வெற்றி எது?
எது ஒன்று சுலபமாக கிடைக்கிறதோ அதன் அருமையை எவரும் உணர்வதில்லை என்று சொல்வார்கள். நம் தளம் வணிக ரீதியாக இயங்குவதல்ல என்பது உங்களுக்கு தெரியும். வாசகர்களுக்கு எந்த நிர்பந்தத்தையும் அளிக்காமல் அவர்கள் மனமுவந்து அளிக்கும் ‘விருப்ப சந்தா’ அல்லது ‘நிதி’யின் அடிப்படையில் தான் – ஒரு தனி அலுவலகம் அமைத்து – இந்த தளம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வீட்டுக்கு ஏற்படும் செலவைப் போல ஒவ்வொரு மாதமும் தளத்திற்கும் பல செலவுகள் இருக்கின்றன. வசதியும் ஓரளவு வருவாயும் உள்ள பலர் இது பற்றி யோசிக்கக் கூட மனமில்லாமல் நமது பதிவுகளை ஆண்டுக் கணக்கில் படித்து வருவது வேதனை அளிக்கிறது.
பதிப்புலகில் நாம் காலூன்றி படைப்புக்களை வருவாயாக மாற்ற சிறிது காலம் பிடிக்கும். நம் வாசகர்களின் எண்ணிக்கை சுமார் 3000 – 5000 வரை தான். இதில் தளத்தை ரெகுலராக பார்ப்பவர்கள் அதாவது விடாமல் பார்ப்பவர்கள் 2000க்கும் கீழே தான். சுமார் 50,000 பேராவது ஒரு நாளைக்கு பார்த்து பலனடைய வேண்டிய ஒரு தளம் அதுவும் இறையருளால் தனித்தன்மையுடன் நடக்கும் ஒரு தளம் குறைந்த வாசகர்களால் படிக்கப்படுவது மிகப் பெரிய சோகம். முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் நம் பதிவுகள் பல திருடப்பட்டு தினசரி வெளியாகிறது. தற்போது நாம் COPY PROTECT செய்திருந்தாலும் முன்பு அளிக்கப்பட்ட பல பதிவுகள் பரவலாக பல FORUM களில் வெளியிடப்பட்டிருந்தன. அவற்றை அப்படியே சிலர் எடுத்து தங்களுடைய படைப்பை போல வெளியிட்டு பாராட்டு பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் நம் தளத்தை மறந்தும் கூட இதுவரை ப்ரோமொட் செய்யாதவர்கள் செய்யவும் மனமில்லாதவர்கள். அவர்களுள் சிலர் பொருளாதார ஆதாயங்களுக்கு கூட பயன்படுத்தி வருகிறார்கள். எந்த விதத்தில் இது நியாயம்? (அட்லீஸ்ட் உங்க ப்ரெண்ட்ஸ் நாலு பேருக்கு இப்படி ஒரு வெப்சைட் இருக்குன்னு சொன்னீங்கன்னா கூட மனசு ஆறிப்போய்டும்யா!) சில நண்பர்கள் அதை நம் பதிவு என்று தெரியாமல் வெளியிடுகிறார்கள். அவர்களிடம் “இது ரைட்மந்த்ரா படைப்பு… என் உழைப்பு!” என்று கூறி நம் தளத்தின் பெயரை வெளியிடுமாறு கேட்டுக்கொள்வது மிகவும் சங்கடமாக உள்ளது. இதைத் தவிர்ப்பது சவாலான விஷயம்.
வாசகர்களை நாம் கேட்டுக்கொள்வதெல்லாம் நீங்கள் நமது தளத்தையும் படைப்புக்களையும் தங்கள் சுற்றத்தினரிடமும் நண்பர்களிடமும் கொண்டு செல்லவும். ஒவ்வொரு வாசகரும் குறைந்தது ஐந்து புதிய வாசகர்களையாவது நம் தளத்திற்கு ஒவ்வொரு மாதமும் அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
ஒரு சிலர் தங்களுக்கு புண்ணியம் சேர்க்க மட்டுமே நம்மிடம் வருகிறார்கள். பிறகு கறிவேப்பில்லையாக நம்மை வீசிவிட்டு போய்விடுகிறார்கள். இந்த தளம் எப்படி நடக்கிறது என்பது தெரிந்தும்.
வருவாய் முக்கியம் தான். ஆனால் அதைவிட முக்கியம் படைப்பின் ரீச். தனது படைப்பு அதிகம் பேர்களை சென்றடைகிறது என்பது தான் ஒரு படைப்பாளிக்கு உண்மையான வெற்றி. அந்த வெற்றி நமக்கு இன்னும் எட்டாக்கனி தான். நம்மால் செய்யக்கூடியது என்றும் எப்போதும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கொடுக்கக் கூடிய உழைப்பு தான். இந்த உழைப்பு நற்பலன்களை பெற்றுத் தந்து நம் அனைவருக்குமே வாழ்க்கையில் ஏற்றமும் மாற்றமும் பெற்றுத் தர இந்த நன்னாளில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்!
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
– மகாகவி பாரதி
========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
========================================================
Also check :
ஆங்கிலேய கலெக்டருக்கு காட்சி தந்த மதுராந்தகம் ஏரி காத்த ராமர் – முழு கவரேஜ் – ஸ்ரீ ராமநவமி SPL!
சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)
அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)
ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)
கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)
========================================================
Similar articles….
ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவதால் ஏற்படும் பலன் – அனுமத் ஜெயந்தி ஸ்பெஷல் 1
ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!
சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்
தீராத வினை தீர்க்கும் அடியார்கள் பாத தூளி – நம் இராமநவமி அனுபவம்!
108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!
புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!
வரங்களை அருள்வதில் திருமலைக்கு நிகரான ‘திருநீர்மலை’ திவ்யதேசம்!
குளத்தில் கண்டெடுக்கப்பட்ட வரப் பிரசாதி போரூர் ஸ்ரீ சிவவீர ஆஞ்சநேயர்
மலை மீது ஒரு எழில் கோலம்! சென்னை புதுப்பாக்கம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்! (ஆலய தரிசனம் 1)
விருந்துண்ண சென்றவனுக்கு மருந்தும் கொடுத்தனுப்பிய என் கோதண்டராமன் – (ஆலய தரிசனம் 2)
நம் ராமநவமி தரிசனமும், பொறுமைக்கு கிடைத்த பரிசும்!
ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!
‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!
பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!
நரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு!
அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!
========================================================
[END]
படிக்க படிக்க ஆனந்தம். பார்க்க பார்க்க பரவசம். அத்தனை அழகான பதிவு + புகைப்படங்கள்.
இன்றைக்கு ஏதாவது ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல நினைத்தும் வீட்டிற்கு உறவினர்கள் வருகையாக செல்ல முடியவில்லை. அந்தக் குறையை போக்கியது இந்த பதிவு.
உண்மையில் என் போன்றவர்களுக்கு இந்த தளம் வரப்பிரசாதம்.
காக்களூருக்கே என்ங்களை அழைத்துச் சென்றுவிட்டன. படங்கள் ஒவ்வொன்றிலும் கல்வெட்டு போன்ற நேர்த்தி தெரிகிறது.
முடிக்கும் பொது ராமரை பற்றி பாடலை வெளியிட்டு முடித்தவிதம் உங்களுக்கே உரித்த டச்.
உங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது. எண்ணிக்கையை விட எண்ணத்தில் பெரிய வாசகர்கள் தேடி வருவார்கள். கவலை வேண்டாம்.
ராம் ராம் ராம்
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
அண்ணா, அனுமன் ஜெயந்தி அன்று உங்கள் படைப்புகள் என் வீடு தேடி வந்துள்ளது, என்ன அண்ணா புரியலையா உங்க பதிப்புகள் (உன் வாழ்கை உன் கையில் , கடவுளை நம்பினோர் கை விட படார் )ஆன்லைனில் ஆடர் கொடுத்து நேற்று வீடு தேடி வந்துள்ளது. அதிசயம் என்ன வென்றால் முதலில் செவ்வாய் கிழமை வரும் என்று கூறினார்கள். பின்பு ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று டெலிவரி செய்தார்கள். இதுவே மாபெரும் பாக்கியம் என்று நினைக்க தோன்றுகிறது.
படித்து முடித்ததும் உங்கள் புத்தகம் தந்த அனுபவம் பற்றி தனி மெயிலில் கண்டிப்பாக தெரிவிப்பேன். உங்கள் பதிப்புகளை பிறருக்கும் எடுத்து கூறுவேன். மேலும் ஒரு முக்கியமான விஷயம்.
நீங்கள் எழுதிய பதிவுகளால் மன தெளிவு பெற்று காஞ்சி பெரியவரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் காரணமாக குருவிடம் காண வர வேண்டும் என்று வேண்டி இருந்தேன். சென்ற வாரம் அதையும் நிறைவேற்றிவிட்டார். தற்செயலாக ஒரு சிறு வேலையாக காஞ்சிபுரம் வரவைத்து குருவை தரிசிக்கும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி தந்தார். எல்லாம் இறைவன் செயல். இந்த புண்ணியத்தில் தங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
நன்றி அண்ணா…
வாழ்த்துக்கள். நன்றி.
உங்களின் காக்களூர் வீர ஆஞ்சநேயரின் பதிவு என் பள்ளி நாட்களின் நினைவு படுத்தியது.
மிக்க நன்றி.
நானும் என் சகோதரனும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையும் திருவள்ளூரில் இருந்து நடத்து காக்களூர் வீர ஆஞ்சநேயரின் தரிசனம் செய்வோம்.
அனுமத் ஜெயந்தியன்று நடக்கும் பந்த சேவையை பார்க்க கண் கோடி வேண்டும்.
இன்று எங்களின் நல்ல நிலைமைக்கு அந்த வீர ஆஞ்சநேயரின் அருளே காரணம்.
நீங்கள் அடுத்தமுறை செல்லும்போது காக்களூர் -திருவள்ளூர் சாலையில் உள்ள பாதாள விநாயகரை கண்டிப்பாக தரிசிக்கவும். இது மிகவும் பழமையான கோயில். மெயின் ரோட்டில்(அனுமன் கோவிலில் இருந்து 1 KM) ஏரிக்கரியில் தரை மட்டத்திற்கு 10அடி கீழே உள்ளது.
அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.
அன்புடன்
நெ வீ வாசுதேவன்