நாளை 21/12/2015 திங்கட்கிழமை வைகுண்ட ஏகாதசி. நாளை அதிகாலை அனைத்து வைணவ ஆலயங்களிலும் பரமபதவாசல் திறப்பு என்னும் சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெறும்.
வைகுண்ட ஏகாதேசி அன்று கண் விழிப்பது குறித்து ஒவ்வொரு ஆண்டும் குழப்பம் ஏற்படுகிறது. அதற்கு காரணம் ஏகாதசி திதி பிறக்கும் நேரத்தில் ஏற்படும் மாற்றத்தால் தான்.
சென்ற வைகுண்ட ஏகாதேசி முந்தைய நாள் டிசம்பர் 31, 2014 காலை 11.53 க்கு துவங்கி, ஜனவரி 1 காலை 10.40 மணியோடு நிறைவு பெற்றது. ஏகாதசி நிறைவு பெற்ற பின்னர் ஏகாதேசி விரதம் இருப்பதில் அர்த்தமில்லை. எனவே டிசம்பர் 31 கண் விழிப்பது அவசியமாயிற்று. ஆனால், இந்த ஆண்டு ஏகாதசி நாளை அதாவது திங்கட்கிழமை 21/12/2015 அதிகாலை 2.30 க்கு பிறந்து அன்று இரவு 11.50 வரை முழுவதும் இருக்கிறபடியால் திங்கட்கிழமை 21/12/2015 இரவு கண்விழிக்கவேண்டும்.)
சிவபெருமான் கூறிய ஏகாதசி விரத முறை!
கயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரதமகிமையை எடுத்துச் சொன்னார்.
“பார்வதி! ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக வைகுண்ட ஏகாதசி விரதம் பலர் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும்விரதம் இருக்கவேண்டும்.
மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர். மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது இருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு முக்கோடி (அளவற்ற) பலன்களைத் தருவதால், முக்கோடி ஏகாதசி (பேச்சு வழக்கில் முக்குட்டி ஏகாதசி, முக்கோட்டை ஏகாதசி) என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடையறாத துன்பங்களை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாள் இது.
வைகுண்ட ஏகாதசி – எப்போது என்ன செய்யவேண்டும்?
ஏகாதசியன்று இரண்டு கடமைகள் முக்கியமானவை. ஒன்று சாப்பிடாமல் உபவாசம் இருப்பது, மற்றொன்று விஷ்ணுவின் பெருமையைக் கூறும் ஹரிகதை கேட்பது.
“உபவாசம்’ என்றால் “சாப்பிடாமல் விரதம் இருப்பது’ என்று மட்டுமல்ல.”இதை உப + வாசம் என பிரித்தால் “ஒருவருடன் வசிப்பது’ என்றும் ஒரு பொருள் வரும். அதாவது, “கடவுளுடன் வசிப்பது’, “மனதாலும், உடலாலும் அவன் அருகில் ஒட்டிக் கொள்வது’ என அர்த்தம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வயிற்றுக்கு ஓய்வு தர வேண்டும் என்ற அடிப்படையில், ஏகாதசி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு ஏகாதசி திதிகள் வரும். இந்தஇரண்டு நாட்களிலுமே பட்டினி விரதமிருந்து ஆரோக்கியத்தை நமது முன்னோர் பேணினர்.
இந்த விரத நாளில், பக்தியுடன் ஹரி கதைகளைக் கேட்கவோ, படிக்கவோ வேண்டும். பிரகலாதன், தன் தாய் கயாதுவின் வயிற்றில் சிசுவாக இருந்த போது, நாரதர் மூலம் விஷ்ணுவின் மகிமையைக் கேட்டே பக்தனாக அவதரித்தான். ஏகாதசியன்று ஹரிகதை கேட்பதும், பஜனை பாடுவதும் அதிகபட்ச புண்ணியபலனைத் தரும்.
வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.
ஏகாதசியன்று என்ன செய்யக்கூடாதது?
ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.
=========================================================
நமது தளத்தின் வைகுண்ட ஏகாதேசி சிறப்பு உழவாரப்பணி, இன்று குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் கோவிலில் மிக மிக சிறப்பாக நடைபெற்றது. கைங்கரியத்திற்கு வந்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி!
=========================================================
Also check from our archives:
வைகுண்ட ஏகாதசி + 2015 புத்தாண்டு ஆலய தரிசன விபரம்
அரங்கனின் அருள்மழை பொழியும் வைகுண்ட ஏகாதசி – A COMPLETE PACKAGE
நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவில் பரமபத வாசல் திறப்பு – ஒரு நேரடி கவரேஜ்!
ஏகாதசி விரதம் & வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு ! கிடைப்பதர்க்கரிய சொர்க்கவாசல் திறப்பு!!
அவனுக்கு தெரியாதா எப்போ, யாருக்கு, என்ன, ஏன் கொடுக்கணும் என்பது?
=========================================================
[END]
வைகுண்ட ஏகாதசி பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்தது கொண்டதில் மிக்க மகிழ்ச்சி
ஏகாதேசியன்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதன் விளக்கம் அருமை .
அனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும்
வாழ்க … வளமுடன்
நன்றி
உமா வெங்கட்