இந்த மழை வெள்ள பாதிப்பை இரண்டு கட்டங்களாக பிரிக்கலாம். நவம்பர் துவக்கத்தில் பெய்த மழை & டிசம்பர் ஒன்றாம் தேதி பெய்த மழை. முதல் கட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் முடிச்சூர், தாம்பரம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, கொரட்டூர், உள்ளிட்ட பகுதிகள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டன. நகரின் மற்ற பகுதிகள் ஓரளவு தப்பித்துவிட்டன. ஆனால், டிசம்பர் 1 ஆம் தேதி பெய்த மழை பாரபட்சம் பார்க்காமல் ஒட்டுமொத்த சென்னையையும் மூழ்கடித்துவிட்டது.
முதல் கட்ட மழை ஏற்படுத்திய பாதிப்பின் வீரியத்தை நாம் உணர்ந்தபோதே, எதற்காகவும் காத்திராமல் நம்மால் இயன்ற எளிய சேவையை (ஏட்டுச் சுரைக்காய் பசிக்கு உதவும்!) செய்தது நினைவிருக்கலாம். மழை அத்தோடு ஓயும் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், கார்த்திகை தீபத்திற்காக மட்டும் ஒரு சில நாட்கள் ஒதுங்கியிருந்த வருண பகவான் டிசம்பர் 1 ஆம் தேதி மீண்டும் தனது வேலையை ஓய்வின்றி காட்ட, ஒட்டுமொத்த சென்னையும் ஒரே இரவில் மூழ்கிப் போனது. பலர் வீடு வாசல் உடமைகள் உள்ளிட்ட அனைத்தும் இழந்தனர்.
முதல் மழையின்போது குறிப்பிட்ட சில பகுதிகளை தவிர மற்ற பகுதிகள் பெரிதாக பாதிக்கப்படவில்லை. ஆனால், இரண்டாம் முறை ஒட்டுமொத்த சென்னையும் முடங்கியதோடு தகவல் தொடர்பு, அலைபேசி, மின்சாரம் என அனைத்தும் நான்கு நாட்கள் செயலிழந்துவிட்டது. எனவே இக்கட்டான் நேரத்தில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து எந்த வித திட்டமிடலுக்கும் வாய்ப்பில்லாமல் போனது. மேலும் பெட்ரோல் தட்டுப்பாடும் சேர்ந்துகொள்ள, வீட்டைவிட்டு நகரக் கூட முடியவில்லை. செய்தித் தாள்கள், தொலைகாட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களும் முடங்கியதால் நகரில் என்ன நடக்கிறது என்றே முதல் இரண்டு, மூன்று நாட்கள் தெரியவில்லை.
நான்காவது / ஐந்தாவது நாள் தான் முழுமையான வெளியுலக தொடர்பு கிடைத்தது. சேவைக்கு களமிறங்கலாம் என்றால் சூழ்நிலையே மாறியிருப்பது புரிந்தது.
நிவாரணப் பணிகளை பொருத்தவரை முதல் மூன்று நாட்களே சேவை செய்பவர்களுக்கு ஏற்ற சூழ்நிலை நிலவியது. மக்கள் உண்மையில் பசியால் வாடிய தருணம் அது தான். அதற்கு பின்பு எல்லாம் உல்டாவாகிவிட, உதவி என்பது பாதிக்கப்பட்ட மக்களை பொருத்தவரை உரிமையாகிப் போனது. அதன் பின்னர் நடந்தவை பற்றி கூறினால், இந்த புனிதமான தளத்தில் அரசியல் சாக்கடையை கிளறியது போலாகிவிடும். நிவாரணப் பணிகளில் அரசியல் குறுக்கீடுகள், தொண்டு நிறுவனங்கள் எடுச்துச் செல்லும் பொருட்களை மறித்து கொள்ளையடிப்பது என்று போகப் போக அனைத்தும் சர்வ சாதாரணமான காட்சிகளானது.
நாம் நான்காவது நாளோ ஐந்தாவது நாளோ காசி தியேட்டர் பகுதிக்கு சென்றபோது, ஒரு தொண்டு நிறுவன வேனை ஒரு கும்பல் மறித்து கபளீகரம் செய்துகொண்டிருந்தது.
இதுவாவது பரவாயில்லை… “அங்கே ரெண்டு பொணம் கிடக்குது… ஆம்புலன்ஸுக்கு சொல்லக் கூட வழியில்லே. உனக்கு பாய், பெட்ஷீட் கொடுக்க வேன் கேட்குதா?” என்று கூறி டிரைவரை கீழே தள்ளிவிட்டு வேனை அபகரித்துச் சென்ற நிகழ்வுகளும் நடந்ததாக நமக்கு தகவல்கள் கிடைத்தன.
எனவே தான் நம்மை தொடர்புகொண்டு “தளம் சார்பாக ஏதேனும் நீங்கள் உதவுவதாக இருந்தால் தோள் கொடுக்கத் தயார்” என்று கூறிய நண்பர்களையும் வாசகர்களையும் சற்று பொறுமையாக இருக்கச் சொன்னோம்.
நெல்லுக்கிறைக்கும் நீர் புல்லுக்கும் சில சமயம் போவது தவிர்க்க இயலாதது. ஆனால், புல்லுக்கு மட்டுமே போகிறது என்பது நிதர்சனமாக தெரிந்த பிறகு நீரை இறைப்பது அறிவீனம் அல்லவா?
பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டியிருக்கும் சூழ்நிலையில் மிக மிகப் பெரிய என்.ஜி.ஓ.க்களும் மத்திய மாநில அரசுகளும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவரும் நிலையில், நாம் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது. ஆனால், வெள்ளத்தால் வீட்டையும் உடமைகளையும் இழந்து நிற்கதியாய் நிற்கும் ஒரு சில குடும்பத்திற்காவது நாம் உதவிட முடியும். சக மனிதர்களை இக்கட்டான தருணத்தில் புறக்கணித்துவிட்டு நாம் செய்யும் எந்த வழிபாடும் அர்த்தமற்றது. பலன் தராது.
எனவே உரிய பயனாளிகளை தேர்வு செய்யும் பணி அமைதியாக நடந்து வருகிறது. இதுவரை மூன்று பேர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். மேலும் சுமார் 10 அல்லது 15 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான பெட்ஷீட், பாய், தலையணை, ஸ்டவ், பாத்திர பண்டங்கள், பிளாஸ்டிக் சேர் உள்ளிட்டவைகளை வாங்கித் தர தீர்மானித்திருக்கிறோம். கூடுமானவரை வெள்ளத்தால் அனைத்தையும் இழந்த – இத்தகு உதவியை பெற தகுதியுடையவர்களுக்கு மட்டுமே – மேற்படி நிவாரணப் பொருட்கள் நேரடியாக வழங்கப்படும். அதற்கு சிறிது கால அவகாசம் பிடிக்கும். எப்படியும் எத்துனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் இந்த பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
ஏற்கனவே மேற்படி தொண்டில் தங்களை இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்த நம் வாசகர்களை, விருப்ப சந்தாதாரர்களை நாமே தொடர்புகொள்வோம். பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவிட விரும்புகிறவர்களுக்கும் இடையே நாம் ஒரு பாலம். அவ்வளவே.
இதற்கிடையே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வெறுத்துப் போன ஆனந்த் வெங்கட் என்பவர் முகநூலில் கொட்டியிருக்கும் குமுறலை படியுங்கள்… நடப்பது என்ன என்று தெரியும். நமது பொறுமைக்கும் காரணம் புரியும்!
======================================================
சேவை இங்கே சுலபமல்ல!
1. இதுவரை உதவியை பெற்றுக்கொண்ட பலர், இந்த நேரத்தில் இவர்களுக்கு நம் உதவி, உடலுழைப்பாகவாவது தேவை என்று எண்ணாமல் சட்டென்று ஒதுங்கினார்கள். சுயநலப்புலிகள். ஆனால் யாரென்றே தெரியாதவர்கள் பார்த்திராதவர்கள் வந்து உழைத்து கொட்டினார்கள். அவர்கள் அனைவரையும் தனித்தனியாக காலில் விழுந்து வணங்கவேண்டும்.
2. விநியோகம் செய்யப்போன இடத்தில் வரிசையில் நிற்காமல் அடிதடி, சண்டை.
3. ஒரே பெண்மணி வெவ்வேறு ஆட்களிடமிருந்து 9 பாக்கெட் பால் வாங்கிவிட்டாள்.
4. போர்வைகளை வீட்டுக்கு ஒன்றுதான் தரமுடியும் என்று பேச்சு. ஆனால் பொய்சொல்லி, எனக்கு ஒன்று, மருமகளுக்கு ஒன்று, மேல்வீட்டுக்காரர்களுக்கு ஒன்று என்று சொல்லி குறைந்த விலைக்கு வெளியே விற்றார்கள்.
5. சேவை செய்ய போனவருடைய மணிபர்ஸ் அபேஸ். இதற்கு எங்களால் சமாதானமே சொல்ல முடியவில்லை. என்னங்க இது, உதவி செய்ய வந்தவங்க பணத்த திருடினா, என்ன மரியாதை அந்த மனதுக்கு என்றார். தலை குனிந்தோம். பிறகு அவர் வரவே இல்லை. இவனுங்களுக்கு உதவியே செய்யாதீங்க. இது போதாது. இன்னும் பெரிசா பேஞ்சு இழுத்துகிட்டு போகணும் கடலுக்குள்ள என்று சாபம் விட்டார். என்ன சொல்வது?
6. உடனடியாக 400 பேருக்கு இரவு உணவு வேண்டும் என்று அரைகுறை சிக்னலில் ஒருவர் கேட்டார். மறுக்க முடியவில்லை. 5 மணிக்கு தொடங்கி செய்துகொண்டு போனால் ஏற்கனவே யாரோ கொடுத்த உணவை சாப்பிட்டுவிட்டார்கள். அதிலும் ஒரு அண்டா உணவு வீண். நாங்கள் செய்ததில் மொத்தமும் வீண். 400 பேருக்கு உணவு!!
10 மணிக்கு மேல் எடுத்துகொண்டு போய் தெருத்தெருவாக எடுத்துக்கொண்டு கூவிக்கூவி விநியோகித்தோம். கார் மூழ்கியது. சப்மரைன் போல ஒட்டிக்கொண்டு சென்றோம். உணவை செய்தவர் எங்களை எரிப்பது போல பார்த்தார்.
7. வயிறு நிறைய உணவு, வீடு நிறைய பொருட்கள் வந்தபின் தேவை ஆசையாகி, ஆசை பேராசையானது. கடைமடைவரை வண்டியை போக விடாமல் தடுத்து, உள்ளே வண்டி வந்தால் வெளியிலேயே மடக்கி, பொருட்களை அடித்து பிடுங்கி, பெண்களுடைய நாப்கின்களை குப்பையில் வீசி, லாக்டோஜென், செரேலாக் போன்ற குழந்தைகள் உணவை அருகிலுள்ள மருந்து கடையில் 50 ரூபாய்க்கு விற்று குடித்தார்கள். என்ன தந்தாலும் வரவில்லை வரவில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஒரு அம்மா இந்த பாய் கலர் பிடிக்கவில்லை, வேற கலர் இருக்கா என்று கேட்டது பற்றிக்கொண்டு வந்தது. சில ஊர்காரர்கள், தயவு செய்து வராதீங்க. போய்டுங்க, எல்லாரும் சாகட்டும். இவுங்களுக்கு நல்லது செய்யாதீங்க என்றார்கள்.
8. மருத்துவ முகாம் ஏற்பாடு செய்தோம். தலைவலி என்றார். இதற்கு மருந்து வேண்டாம். தானாக சரியாகும் என்றோம். அப்போ வயித்து வலி என்றார். இப்போ தலைவலின்னு சொன்னீங்க என்றதும் முட்டி ரொம்ப வலிக்குது எதுனா டானிக் குடுங்க என்கிறார்.
9. பெண்களின் நாப்கின் தந்தால், இதை மட்டும் வைத்துகொண்டு என்ன செய்வது, உள்ளாடை வேண்டாமா என்றார் ஒரு பெண்மணி.
10. சேவைக்கு என்று எங்கு சென்றாலும் சட்டென்று உள்ளே நுழைய கூடாது. உள்ளூர் ஆள் தெரிந்தால் மட்டுமே போகலாம். இல்லையேல் காலி.
11. எல்லோரும் உணவு தர துவங்கியதும் பிரியாணி இல்லையா சாம்பார் சாதம்தானா என்றார்கள்.
12. எதையுமே பாராமல் வேலை செய்துகொண்டிருக்கும்போது ஒருவர் வந்து சொன்னார், “RSS தான் இப்படி வேலை செய்கிறீர்கள். டிவியை பாருங்கள். முஸ்லிம்களும் கிருஸ்தவர்களும்தான் வேலை செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள்” என்றார். விளம்பரம் வேண்டாம்தான். ஆனால் RSS வேலையே செய்யவில்லை என்பது போல சொல்லப்பட்டபோது வலித்தது. இதை நீங்கள் சொல்லாமலேயே இருந்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டோம். எங்கு பார்த்தாலும் நீர். கண்களிலும் அதே. சிரமத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் நல்லது செய்ய வசவை வாங்கிக்கொண்டு வேலை செய்வது மிக கடினம் என்று எண்ணிக்கொண்டே தொடர்ந்தோம். ஆனால், மக்களை பொருத்தவரை என்ன தந்தாலும் போதவில்லை, என்ன அடித்தாலும் புத்தி வரவில்லை, ஒதுங்கவும் முடியவில்லை, ஏற்கவும் மனமில்லை. சொன்னாலும் புரியவில்லை, தனக்காகவும் தெரியவில்லை, நல்லது பிடிக்கவில்லை, ஒன்றுமே இல்லாவிட்டாலும்கூட குடிக்க மட்டும் பணம் கிடைக்கிறது. இத்தனை நாள் தட்டியது கதவுகளையா, சுவற்றையா? நான்தான் முட்டாளா? நான்தான் குருடனா?
– ஆனந்த் வெங்கட், RSS
======================================================
ஒரு விஷயத்தில் உள்ள கஷ்ட நஷ்டங்களையும் சவால்களையும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவை அளிக்கிறோம். மற்றபடி, பிறருக்கு சேவை செய்யும் எண்ணத்தை நீங்கள் விட்டுவிடக்கூடாது.
தர்மத்தின் பாதையில் கல்லும் முள்ளும் இருந்தால், எச்சரிக்கையுடன் பயணத்தை தொடரவேண்டுமே தவிர பயணத்தையே நிறுத்திவிடக்கூடாது!
======================================================
Also check :
திகிலூட்டிய மழை வெள்ளம் – கைகொடுத்த ‘கோளறு பதிகம்’!
‘எல்லாம் இருந்தும் எதுவுமில்லை..!’ MUST READ
நவீன அறிவியலை வென்ற ‘பழைய பஞ்சாங்கம்’!
ஏட்டுச் சுரைக்காய் பசிக்கு உதவும்!
விவேகானந்தர் செய்த சித்திகள் & நவக்கிரகங்களை குளிர்விக்கும் தசாவதார சுலோகம்!
சேவைக்கு சுவாமி விவேகானந்தர் கொடுத்த பரிசு!
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!
‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!
களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!
“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!
பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !
அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?
ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70
வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67
யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!
======================================================
[END]
வணக்கம்
தாங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.
நெல்லுக்கு இறைக்கும் நீர் சிறுது புல்லுக்கு போனால் தவறில்லை. ஆனால் இதை சாக்காக வைத்து நடக்கும் விசயங்களால் பாதிக்க பட்டவர்கள் பலர் பயன் பெற வில்லை என்பதே உண்மை. இதை வைத்து சேவை செய்தவர்கள் எல்லோரையும் குறை சொல்லாமல் பாராட்ட வேண்டும்,
பொது நல தொண்டில் நம்மை இகல்பவர்களையும் கண்டு கொள்ளாமல் தம் சக்திக்கு அப்பாற்பட்டு அடுத்தவர்களையும் தொடர்புகொண்டு படகில் நீந்தி சென்று வெள்ளத்தின் நடுவில் வீட்டின் மாடியில் உள்ளவர்களுக்கும் தண்ணீர், பிரட், கொடுத்தவர்களை எங்கள் நிறுவனத்தின் மாடியில் நின்று பார்த்துள்ளேன்.
தற்போது இருக்கும் சூழலில் நீங்கள் எடுத்துள்ள முடிவு சரியானது.
தாமதமாக போனாலும் உரியவர்களுக்கு போய் சேரட்டும் நம் உதவிகள்.
நன்றி
நிதர்சனமான உண்மை. திரு வெங்கட் சொன்னது போல நாங்களும் இதுபோல சில சிரமங்களை பெற்றோம். இருந்தாலும் இனி எச்சரிக்கையுடன் செய்வோம்.
நன்றி
ப.சங்கரநாராயணன்