அன்னாபிஷேகத்திற்கு அரிசி தருகிறேன் பேர்வழி என்று பாவத்தை மூட்டைக் கட்டிகொள்பவர்கள் மாற வேண்டி இந்தப் பதிவை அளிக்கிறோம். நமது அன்னாபிஷேக தரிசன அனுபவத்துடனேயே இந்த பதிவையும் அளிக்க இருந்தோம். ஆனால் அந்த பதிவு மிகப் பெரியதாக போய்விடும் வாய்ப்பிருக்கிறது. எவ்வளவு தான் ஒரு பதிவில் திணிப்பது? எனவே தனியாக முதல் பாகமாக அளிக்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சிவாலயங்களில் நடைபெறும் அன்னாபிஷேகம் பற்றியும் அதன் மகத்துவம் பற்றியும் நம் தளத்தில் பதிவிட்டு நாமும் அன்று சிவாலயங்கள் சென்று தரிசித்து அன்னாபிஷேக தரிசன அனுபவத்தையும் பதிவளித்து வருவது அனைவரும் அறிந்ததே.
சென்ற ஆண்டு ‘அன்னாபிஷேக தரிசனம்’ மிக மிக அருமையாக திருப்திகரமாக அமைந்ததையடுத்து சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் மற்றும் மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நம் தளம் சார்பாக தலா பத்து கிலோ அரிசி வாங்கிக் கொடுக்க முடிவு செய்தோம்.
அக்டோபர் 27 அன்னாபிஷேகத்தன்று காலை முதலில் நாம் புறப்பட்டது கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில். சென்னையில் இருப்பவர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய தலம் இது. இங்கு நமது உழவாரப்பணி நடைபெற்றிருக்கிறது. மேலும் சென்ற ஆண்டு நம் தளம் சார்பாக அரிசி வாங்கி கொடுத்தது நினைவிருக்கலாம்.
கோயம்பேடு பிரதான சாலையில் சென்ற ஆண்டு நாம் அரிசி வாங்கிய அதே மளிகைக்கடைக்கு சென்றோம். ஆனால் அந்தக் கடை ஏனோ தெரியவில்லை அடைக்கப்பட்டிருந்தது. பின்னர் கோவிலுக்கு பின்பக்கம் தெற்கு மாட வீதியில் இருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பச்சரிசி + வெல்லம் வாங்கிக்கொண்டோம். நண்பர்கள் அனைவருக்கும் சேர்த்து (ஒரு கிலோ அரிசி + 50 கிராம் வெல்லம் என்கிற கணக்கில்) சுமார் 20 கிலோ வாங்கிக்கொண்டோம்.
கடையில் இருந்த பெண் நாம் கேட்டுக்கொண்டபடி தனித்தனி பில்லை அளித்ததுடன், இன்முகத்துடன் அனைத்தையும் செய்து கொடுத்தார். அன்னாபிஷேகம் என்றவுடன் மேலும் கொஞ்சம் விலையை குறைத்துக் கொடுத்தார்.
அனைத்தையும் இரண்டு பெரிய பைகளில் போட்டு எடுத்துக்கொண்டு குறுங்காலீஸ்வரர் ஆலய அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த நம் நண்பர் ஒருவரை நலம் விசாரித்துவிட்டு கோவிலுக்குள் சென்றோம். குருக்களை சந்தித்து அரிசி கொண்டு வந்திருப்பதாக சொன்னபோது, மடப்பள்ளியில் கொடுத்துவிடுமாறு சொன்னார். சுமார் 10 பாக்கெட்டுக்களை மடப்பள்ளியில் ஒப்படைத்தோம்.
தலைவரையும் அன்னையையும் தரிசித்துவிட்டு புறப்பட்டோம். “ஹப்பா….. ஒரு மிகப் பெரிய பணியில் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்டது”…. நிம்மதி பெருமூச்சுவிட்டோம்.
அடுத்து நேரே மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் பாக்கி அரிசியை கொடுக்கவேண்டும்.
வடபழனியை தாண்டி நூறடி ரோட்டில் வரும்போது, என்னவோ தெரியவில்லை…. வேங்கீஸ்வரர் கோவில் கோபுரத்தை பார்க்க நேர்ந்தது. வேங்கீஸ்வரருக்கு அரிசி தரவேண்டும் என்று தோன்றியது. பைக்கை அப்படியே திருப்பினோம்.
சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிலுக்கு சென்றால் நம் காமிராவுக்கு நல்ல தீனி. வேங்கீஸ்வரர் ஏன் இங்கு வரவழைத்தார் என்று அப்போது தான் புரிந்தது.
ஒரு பக்கம் அண்டாக்களில் அரிசி குவிக்கப்பட்டிருக்க மறுபக்கம் அரிசியை உலையில் போட்டு சாதம் வடிக்கக் தயார் செய்துகொண்டிருந்தார்கள். அவற்றை புகைப்படமெடுத்துக்கொண்டே “அன்னாபிஷேகத்திற்கு அரிசி எங்கே கொடுக்கவேண்டும்?” என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்தோம்.
“புழுங்கலரிசியா, பச்சரிசியா?” என்று கேட்டார்கள்.
நமக்கு அதிர்ச்சியாக இருந்தது. அன்னாபிஷேகத்திற்கு பச்சரிசி தான் கொடுக்கவேண்டும். ஆனால் இங்கோ புழுங்கலரசி, பச்சரிசி என்று தனித் தனியே பிரித்துக் கொட்டிக்கொண்டிருந்தார்கள்.
“அன்னாபிஷேகத்திற்கு பச்சரிசி தானே தரவேண்டும். புழுங்கலரிசிக்கு என்று தனியே அண்டா வைத்திருக்கிறீர்களே??” என்று நமது சந்தேகத்தை கேட்டோம்.
“என்ன சார் பண்றது… நிறைய பேர் புழுங்கலரிசி கொண்டு வந்து கொடுக்குறாங்க. வேண்டாம்னு சொன்னா வருத்தப்படுவாங்க. அதனால வாங்கிக்கிறோம். இதுவாவது பரவாயில்லே சிலர் சாப்பிடவே முடியாத நிலையில இருக்குற வண்டு வந்த ரேஷன் அரிசியெல்லாம் கொண்டு வந்து கொடுக்குறாங்க. கேட்டா எங்க கிட்டே இதான் இருக்குன்னு சொல்றாங்க” என்று தன் கவலையை பகிர்ந்துகொண்டார்.
புழுங்கலரிசி என்பது ஏற்கனவே அவித்த ஒன்று என்பதால் அது இறைவனுக்கு உகந்ததல்ல. பச்சரியே வழிபாடு மற்றும் சிவபூஜைக்கு ஏற்றது.
அப்போ இவ்வாறு குவியும் புழுங்கலரிசியை என்ன செய்வார்கள்?
வேறு சில ஆன்மீக அன்பர்களிடம் விசாரித்தபோது பல தகவல்கள் கிடைத்தன.
எந்த ஒரு கோவிலுக்கும் அன்னாபிஷேகத்திற்கு சுமார் பத்து கிலோ அரிசியே அதிகபட்சம் போதுமானது. மிகுதியாக உள்ள அரிசியை ஸ்டாக் வைத்திருந்து பிரசாதம் மற்றும் இதர நைவேத்தியங்கள் செய்ய பயன்படுத்துவார்கள்.
அப்படியானால் அன்னாபிஷேகதிற்கு என்று கொடுப்பவர்கள் அனைவருக்கும் அந்தப் பலன் சென்று சேராதா என்று நீங்கள் கேட்கலாம்.
அன்னாபிஷேகத்திற்கென்று நீங்கள் கொடுக்கும் அரிசியை அண்டாவில் கொட்டும்போது உங்களின் பங்காக இத்தனை அரிசி என்று திசைகளின் அதிபதியாக உள்ள ‘அஷ்டதிக் பாலகர்கள்’ கணக்கெழுதி விடுவார்கள்.
பத்து கிலோ அரிசியே அன்னாபிஷேகத்துக்கு பயன்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். நூறு கிலோ சேர்ந்துவிடுகிறது – அப்போது என்ன ஆகும் என்றால் பத்து கிலோ அரிசியை அன்னாபிஷேகம் செய்த பலன் இந்த நூறு கிலோ அரிசியை தந்தவர்களுக்கு அவரவர்க்கு உரிய கணக்கில் சரியாக பிரிந்துவிடும்.
இதில் ஒவ்வொருவரும் எத்தகைய சூழலில் எவ்வளவு அரிசியை கொடுக்கிறார்கள் என்ற கணக்கு வேறு தனியே உள்ளது. மூட்டை தூக்கி சம்பாதிக்கும் ஒரு தினக்கூலி அரைகிலோ அரிசி வாங்கி கொடுப்பதற்கும், மாதம் லட்ச ரூபாய் சம்பாதிக்கும் ஒரு மாதாந்திர சம்பளதாரர் கொடுக்கும் ஒரு கிலோவுக்கும் வித்தியாசம் உள்ளது. யார், யார் எந்த சூழ்நிலையில் வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பது இறைவனுக்கு தெரியும். சிலர் அதற்கு கூட வழியின்றி இருப்பார்கள் அல்லது கொடுக்க ஆசை வசதி இருந்தும் அதற்குரிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் இன்றி இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு கூட அன்னாபிஷேக செய்யாமலே பலன் கிடைத்துவிடும். அனைத்தும் நம் தலைவன் அறிவான்.
சரி… அன்னபிஷேகத்திற்கு பச்சரிசியை பயன்படுத்துவார்கள். ஓ.கே.! புழுங்கலரிசியை என்ன செய்வார்கள் என்றால், பக்தர்களுக்கு அன்றோ அல்லது அடுத்து வரும் நாட்களிலோ வழங்கக்கூடிய எலுமிச்சை சாதம், புளி சாதம் உள்ளிட்ட கலவை சாதத்திற்கு அவற்றை பயன்படுத்திக்கொள்வார்கள்.
ஆனால், அது புழுங்கலரிசியில் செய்தது என்பதால் பிரசாதமாக இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்படாது. ஆலயத்தில் பசியாற வழங்கப்படும் உணவு என்கிற ஒரு பெருமையுடனே அவை நின்றுவிடும். ஆனால், பச்சரிசி மிகுதியாக இருக்கும் போது அவற்றை ஸ்டாக் வைத்திருந்து பிரசாதம் செய்யவோ அல்லது இதர ஆலய பயன்பாடுகளுக்கோ பயன்படுத்திக்கொள்வார்கள். பக்தர்களுக்கும் அதை பிரசாதமாக தருவார்கள்.
ஆக, எப்படி பார்த்தாலும் பச்சரிசியே அதிக பலன் தரவல்லது. பச்சரிசியை நீங்கள் அன்னாபிஷேகத்திற்கு கொடுக்கும்போது இரண்டு மடங்கு புண்ணியம் கிடைக்கும்.
அதிபுத்திசாலிகள் சிலர் புழுத்துப் போன, வண்டு வந்த ரேஷன் அரிசியை இதுபோன்ற கைங்கரியங்களின் போது கொடுத்துவிடுவதாக நம்மிடம் பல கோவில்களில் சொல்லி வருத்தப்பட்டார்கள். அப்படி கிடைக்கும் ரேஷன் அரிசியை எதற்கும் பயன்படுத்த முடியாது.
அதை என்ன செய்வார்கள் தெரியுமா? ஒன்றுக்குமே உதவாத வகையில் அது இருந்தால் குப்பைத் தொட்டிக்கு சென்றுவிடும். அல்லது சம்பந்தப்பட்ட ஆலயத்தில் கோ-சாலை இருந்தால் ஊறவைத்து பசுக்களுக்கு அந்த ரேஷன் அரிசியை கொடுத்துவிடுவார்கள்.
நம் வீட்டு எலிகள் கூட சாப்பிட முடியாத ஒன்று பசுக்களுக்கு தப்பித் தவறி போய்விட்டது என்றால் அது யாருக்கு பாவம்?
பசுக்களுக்கும் இதர கால்நடைகளுக்கும் ரேஷன் அரிசி கொடுப்பது தவறல்ல. ஆனால், நாம் கூட உண்பதற்கு ஏற்ற, சுத்தம் செய்த அல்லது பாலீஷ் செய்த அரிசியையே கொடுக்கவேண்டும். இல்லையெனில், ஆலய பசுக்களுக்கு அசுத்தமான உணவு கொடுத்த பாவமே வந்து சேரும்.
கால்படி அரிசி கொடுத்தாலும் நல்ல தரமான பச்சரிசியே என்றும் கொடுக்கவேண்டும். உலகிற்கே படியளப்பவன் அவன். அவனுக்கு அன்றைக்கு ஒரு நாளாவது நல்ல அரிசி கொடுப்போமே…!
(இங்கே வேங்கீஸ்வரர் கோவிலைப் பொருத்தவரை புழுங்கலரிசியை கொண்டு கலவை சாதம் செய்து அன்று மாலை அன்னதானத்தில் வினியோகித்துவிட்டார்கள்!)
நமது அன்னாபிஷேக தரிசனம் + வாசகர்கள் பெயரில் நாம் அளித்த அரிசி + அதில் ஈசன் நிகழ்த்திய அற்புதம் ஆகியவற்றை வேறொரு பதிவில் பார்ப்போம்.
* பிரார்த்தனை கிளப் பதிவு நாளை அளிக்கப்படும்.
=============================================================
Also check :
அள்ளித் தரும் அன்னாபிஷேகம் & அன்னாபிஷேக அன்னத்தை புசிப்பதால் கிட்டும் பலன்கள்!!
வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
=========================================================
Also check…
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?
=============================================================
[END]
அன்னாபிஷேக பதிவு அருமையோ அருமை.
குறுங்காலீஸ்வரர் கோயில் கோபுரம் பார்க்கும் பொழுது அங்கு போன வருடம் ஏப்ரல் மாதம் உழவாரப் பணி செய்த ஞாபகம் நெஞ்சில் நிழலாடுகிறது.
வேங்கிஸ்வரர் கோவில் கோபுரம் தினமும் அலுவலகம் செல்லும் பொழுது தரிசிக்கும் ஒன்று. நானும் எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சங்கரநாராயனர் கோவிலுக்கு அரிசியும் வெல்லமும் வாங்கி கொடுத்தேன். தங்களின் அன்னாபிஷேக பதிவுகளை 2 வருடங்களாக படிக்கும் பாக்கியத்தால் நாமும் அன்னாபிஷேகத்திற்கு அரிசி வாங்கி தர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
balance பதிவுகளை எதிர்பார்க்கிறேன்,
வாழ்க …. வளமுடன்…
நன்றி
உமா வெங்கட்
நல்ல அரிய செய்தி சார். இனி எந்த கோவிலுக்கு அரிசி கொடுபதனாலும் பச்சை அரிசி தான் கொடுப்பேன் சார். உதவிக்கு ரொம்ப நன்றி சார்.
வளர்க மக்களின் அற பணி.
தங்களின்
சோ. ரவிச்சந்திரன்