Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, May 19, 2024
Please specify the group
Home > Featured > ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

print
ம்மை சுற்றி எத்தனையோ அநீதிகள் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டிருக்கின்றன. நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள். தீயவர்கள் சுகப்படுகிறார்கள். அதர்மம் அரசாள்கிறது. ஒரு பாவமும் அறியாதவர்களுக்கு ஏன் இந்த கதி என்று நம் மனம் குமுறும் அளவுக்கு நாளிதழ்களை புரட்டினால் விபத்து, கொலை, கற்பழிப்பு போன்ற செய்திகளே பிரதானமாக கண்ணில் படுகிறது.

எதைப் பற்றியும் கவலைப்படாது, ‘எனக்கு நடக்காதவரைக்கும் எதைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை’ என்று குதிரைக்கு கடிவாளம் போட்டபடி செல்பவர்களை விடுங்கள்…. ஆனால் இது போன்ற செய்திகளை படிக்கும்போதே கேள்விப்படும்போதோ பொதுநலவாதிகள் & கடவுளை சற்று தீவிரமாக நம்புபவர்கள் பாடுதான் படு திண்டாட்டம்.

“ஏன் இப்படி……..? இவர்களுக்கு நடப்பது நாளை நமக்கும் நடப்பதற்கு எத்தனை நேரம் பிடிக்கும்……….? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்………? எல்லாம் அவரவர் கர்மா…. அவரவர் செய்த முன்வினைப் படியே எல்லாம் நடக்கிறது. இதில் நாம் என்ன செய்துவிட முடியும்? அனுதாபப்படுவதை தவிர? ஒருவேளை நாம் கடந்த காலங்களில் அல்லது முன்ஜென்மங்களில் செய்த பாபத்திற்கு நமக்கு தண்டனை சற்று கடுமையாக இருக்குமோ? சே.. சே… நாம நிச்சயம் புண்ணியம் பண்ணியிருக்கிறோமோ இல்லையோ…. பாவம் பண்ணியிருக்க மாட்டோம்………..”

மனம் இப்படி சுய பரிசோதனை செய்துகொள்ளும் தருணங்களில், வேறு வழியின்றி ஆண்டவனை அவன் இந்த உலகை இயக்கும் விதத்தை ஒப்புக்கொண்டே தீரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.

அன்பினால் மட்டுமே அறியவேண்டிய ஆண்டவனை நம்மை சுற்றி நடக்கும் அநீதியை கண்டு அக்கிரமங்களை கண்டு அஞ்சி அண்டுகிறோம். அப்படி அண்டினாலாவது கர்ம வினையிலிருந்து தப்ப முடியாதா என்கிற நப்பாசை தான். எப்படியோ ஆண்டவனை அவன் இந்த உலகை இயக்கும் விதத்தில் நமக்கு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ அவனை ஒப்புக்கொண்டுவிடுகிறோம். வேற வழி?

சரி… இந்த கர்ம வினை என்பது அத்துணை பலமிக்கதா? அதிலிருந்து தப்பவே முடியாதா? தப்பவே முடியாது என்றால் இறைவன் எதற்கு? இறை வழிபாடு எதற்கு? பரிகாரங்கள் எதற்கு? இதற்க்கெல்லாம் அவசியமே இல்லையே…. என்ற கேள்விகள் எழலாம்…

1) ஆம்… கர்மவினை பலமிக்கது தான். நீங்கள் நினைப்பதை விட.

2) ஆனால் அதிலிருந்து தப்ப முடியும். நாம் மனது வைத்தால். நாம் மனவுறுதியுடன் செயல்பட்டால்.

3) என்ன தப்பமுடியுமா? எப்படி? எப்படி? அதை சொல்லுங்க முதல்ல!

முதல்ல கர்ம வினை என்பது எத்தனை பலமிக்கது என்று நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

அடுத்து அதிலிருந்து தப்ப முடியுமா? அது பற்றி பெரியோர்கள் ஏதாவது கூறியிருக்கிறார்களா என்பது பற்றி அடுத்து தெரிந்துகொள்வோம்.

அடுத்து அதிலிருந்து தப்பி – தீய பலன்களை நற்பலன்களாக மாற்றிக்கொள்ள – வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

மேற்படி மூன்று விஷயங்களையும் மூன்று பதிவுகளாக அடுத்தடுத்து பார்க்கப்போகிறோம்.

இந்த பதிவு உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய பதிவு. கவனமாக படித்து விஷயத்தை உள்வாங்கி…. உரியவற்றை செயல்படுத்தி பலன் பெறுங்கள்.

இந்த பதிவு உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய பதிவு. கவனமாக படித்து விஷயத்தை உள்வாங்கி…. உரியவற்றை செயல்படுத்தி பலன் பெறுங்கள்.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமால் வேறொன்றறியேன் பராபரமே!

அந்தரத்தில் துள்ளிய தர்ப்பை புல்

அப்பைய தீட்சிதர் (1520 – 1593) தமிழ்நாட்டில் சிறந்த அத்வைத வேதாந்த பண்டிதராக வாழ்ந்து பல சாதனைகள் புரிந்தவர். பாமர மக்களுக்கெல்லாம் சிவ தத்துவத்தையும் அத்வைதத்தையும் புரிய வைப்பதற்காக தொண்டர்களைத் திரட்டி ஒரு இயக்கமே நடத்தியவர். பயணங்கள் பல செய்து வேதாந்தத்திலும் இலக்கியத்திலும் வாத-விவாதங்களில் தன் புலமையை நிலை நாட்டியிருக்கிறார். அவருடைய புகழ் வடநாட்டிலும் காசி வரையில் பரவி யிருக்கிறது. இந்து சமயத்தின் தூண்களான கருமம், பக்தி, ஞானம் இவை மூன்றிற்கும் ஒரு இணையற்ற முன்மாதிரியாகவே இருந்து மறைந்தவர்.

தீட்சிதருடைய கடைக்காலத்தில் அவருக்கு ஒருவித வயிற்று வலி (சூளை நோய்) அவரை மிகவும் வாட்டி வதைத்தது. அவர் சிறந்த யோக சக்திகள் உடையவராதலால், தியானம் செய்யவோ அல்லது யாராவது முக்கியப்பட்டவருடன் பேசவேண்டியிருந்தாலோ,  ஒரு தர்ப்பை புல்லை அருகே போட்டு அந்த புல்லின் மேல் அந்த வலியை தன் தவ சக்தியால் இறக்கி வைத்துவிட்டு, தன் வேலையில் ஈடுபடுவாராம். அந்தப் புல் அது பாட்டுக்கு இப்படி அப்படி என்று துள்ளிக்கொண்டே இருக்குமாம். பிறகு வேலை முடிந்தவுடன் புல்லிடமிருந்து அந்த வலியை திரும்ப தனக்குள் வாங்கிக் கொள்வாராம்.

ஒரு பண்டிதருடன் இவ்வாறு ஒருமுறை வாதத்தில் ஈடுபட நேர்ந்தபோது, வழக்கம் போல, தமது வலியை தற்காலிகமாக தர்ப்பை புல்லின் மேல் இறக்கி வைத்துவிட்டு வாதம் புரியலானார். புல்லும் அதுபாட்டுக்கு துள்ள ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் வாதம் மிகவும் தீவிரமடைய, உட்கார்ந்திருந்த இருவரும் நின்றுகொண்டு வாதம் புரியலாயினர். புள் துள்ளுவது அதிகரித்து சற்று உயரமாகவே துள்ள ஆரம்பித்தது.

இதை ஆச்சரியத்துடன் பார்த்த அந்த பண்டிதர் தீட்சிதரிடம், “இவ்வளவு தவ வலிமை கொண்ட நீங்கள் ஏன் நிரந்தரமாக அந்த வலியை போக்கிகொள்ளக்கூடாது? எதற்கு புல்லின் மீது இறக்கி வைத்துவிட்டு திரும்பவும் ஏற்றுக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“இந்த வயிற்று வலி என் கர்ம வினையால் எனக்கு வந்தது. நமது முந்தைய செயல்களினால் ஏற்படும் கர்ம வினையை எப்படியும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அதிலிருந்து தப்பிக்க எண்ணக் கூடாது. முற்பிறப்பில் நான் செய்த சிறு பாவத்தின் பலன் தான் இந்த சூளை  நோய். இப்போது நான் இதை அனுபவிக்கவில்லை எனில், இதை அனுபவிப்பதற்காக இன்னொரு பிறவி எடுக்க நேரிடும். அதற்காகத் தான் புல்லின் மீது இறக்கி வைத்துவிட்டு திரும்பவும் ஏற்றுக்கொள்கிறேன்!” என்றாராம்.

இதிலிருந்து மிகப் பெரிய தவசீலர்களே கூட கர்மாவிலிருந்து தப்பிக்க நினைக்காமல் அதை அனுபவித்து தீர்க்கவே முனைந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறதல்லவா?

தவசீலர்களை விடுங்கள்…. படைத்தவனே கூட அவன் செய்த வினையிலிருந்து தப்ப முடியாது எனும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்?

தவசீலர்களை விடுங்கள்…. படைத்தவனே கூட அவன் செய்த வினையிலிருந்து தப்ப முடியாது எனும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்?

குருக்ஷேத்திரத்தில் அர்ச்சுனனுக்கு யாதவ குலத் தலைவனான கிருஷ்ணன் போர்க்களத்திலேயே கீதையைப் போதித்தார். பின் 18 நாட்கள் நடந்த பாரதப் போர் பாண்டவர்களின் வெற்றியுடன் முடிவடைந்தது. பின்னர், தருமருக் குப் பட்டாபிஷேகம் செய்துவிட்டு துவாரகை சென்ற கண்ணன் அரசாண்டார்.

மிதமிஞ்சிய கர்வத்தில் திளைத்த யாதவர்கள் துவாரகையில் வரம்பு கடந்த சுகபோகத்தில் ஈடுபட்டனர். ஒரு நாள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணிப் பெண் போல வேடமிட்டு, அங்கு வந்த ஒரு ரிஷியிடம், “என்ன குழந்தை பிறக்கும்?’ எனக் கேட்டனர். உண்மையை உணர்ந்த ரிஷி கடுங்கோபத்துடன், “இரும்பு உலக்கைதான் பிறக்கும்; அதனால் உங்கள் குலமே அழியும்’ என சாபமிட்டார். அதன்படியே மதுவனத்தில் மது உண்ட மயக்கத்தில் யாதவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ள பிரபாசபட்டினக் கடற்கரையில் யாதவர் குலம் முற்றும் அழிந்தே போனது.

(தனது இனம் தன்னைத் தானே அடித்துக்கொண்டு அழிவதை எந்த மன்னன் கண்டு மெளனமாக இருப்பான் ? மதுவினால் அது நடந்துவிடக்கூடாது என்று எண்ணி யாதவர்களின் அரசன் உக்ரசேனன் ஒரு கட்டத்தில் துவாரகையில் மது உற்பத்தியையும் மது அருந்துவதையும் கூட தடை செய்தான். கிருஷ்ணர் அனைத்து யாதவர்களையும் சமுத்திரத்தில் குளிக்கச் செய்து பாவத்தை போக்க முற்பட்டார். ஆனால் விதி வலியதன்றோ? பிரபாசப் பட்டின கடற்கரையில் மதுவருந்தி தங்கள் முடிவை தேடிக்கொண்டார்கள் யாதவர்கள்!)

இது கண்டு கவலையுற்ற பலராமர் யோகத்தில் அமர்ந்து உயிர் துறந்து பலராம அவதாரத்தை முடித்துக் கொண்டார். நடந்த அனைத்தையும் பார்த்த கிருஷ்ணர், தன்னைத் தவிர யாவரும் அழிந்தனர்; தானும் தன் அவதாரத்தை முடிக்கும் காலம் வந்துவிட்டது என எண்ணி, குரா மரத்தடியில் சரிந்து அமர்ந்தார்.

அங்கு வந்த ஜரா எனும் வேடன் எய்த அம்பு குறி தவறி கண்ணனின் காலில் தைத்தது; கண்ணனின் உயிர் பிரிந்தது. அவர் சரீர தியாகம் செய்து கொண்ட இடம்தான் இப்போது தோரஹரசாகர் என அழைக்கப்படுகிறது. இது ஹிரண்ய நதிக்கரையில் உள்ளது. இந்நதிக்கரையில் அர்ச்சுனன் கண்ணன் மகனின் உதவியுடன் சந்தனக் கட்டைகளை அடுக்கி, கண்ணனுக்கு ஈமக்கிரியைகளைச் செய்து முடித்தான்.

அப்போது கண்ணனின் தேகம் ஒரு மரக்கட்டையாகி நீரில் மிதந்து பூரி கடற்கரையருகில் ஒதுங்கியது. அதை எடுத்து ஒரு சிலை செய்து பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தனர்.

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது கடவுள் அவதாரத்துக்கும் பொருந்தும் என்பதை இதனால் நாம் அறிந்து கொள்ளலாம். கிருஷ்ணாவதாரம் துவாபர யுக முடிவில் நிறைவுற்றது. அதன்பின் தோன்றிய யுகம்தான் நாம் வாழும் இந்த கலியுகம். கிருஷ்ணர் இந்த பூமியிலிருந்து சென்றவுடன், கலி புருஷன் அவதரித்துவிட்டான்.

இதிலிருந்து என்ன தெரிகிறது…. நீங்கள் மமதையால் செய்யும் சிறு பாவம் கூட உங்கள் சந்ததியையே வாட்டும் ஆபத்து இருக்கிறது என்பது தானே?

மொத்தத்தில் கர்மவினை என்பது கடவுளுக்கும் பொருந்தும். அதிலிருந்து எவருமே தப்ப முடியாது ! ஆகவே தான் வள்ளுவர் கூட திருக்குறளில் ‘ஊழ்’ என்று ஒரு தனி அதிகாரமே படைத்திருக்கிறார்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். (குறள் 380)

பொருள் : விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.

அறுவை சிகிச்சை செய்யும்போது நோயாளிகள் வலியால் அலறுகிறார்களே, அதற்க்கு தீர்வு கிடைக்காதா என்று ஆராய்ச்சி செய்து ஜேம்ஸ் சிம்சன் என்ற ஆங்கிலேயர் 18 ஆம் நூற்றாண்டு குளோரோபாமை கண்டுபிடித்தார். கண்டுபிடித்தது அவர் தான் என்பதற்காக “இம்மருந்து என் மீது வேலை செய்யாது” என்று அவர் கூற முடியுமா? தன் மீது அந்த மருந்து வேலை செய்யாதபடி அவரால் உருவாக்கியிருக்கத் தான் முடியுமா? அப்படி ஒருவேளை அந்த மருந்து வேலை செய்வதில் அவர் தனக்கு மட்டும் விலக்கு அளித்தால் அந்த மருந்தை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டிருந்திருப்பார்களா? அது உலகம் தழுவிய ஒரு மருந்தாகத் தான் மாறி இருக்குமா?  சற்று யோசித்துப் பாருங்கள்.

மனுஷன் தயாரிக்கிற ஒரு மருந்துக்கே இப்படின்னா…. பிரபஞ்சத்தையே இயக்குகிற ஒரு அடிப்படை விதிக்கு மட்டும் எப்படிங்க EXEMPTIONS இருக்க முடியும்?

இறைவன்…. தான் எடுத்த இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் உள்ளிட்ட பிரதான அவதாரங்களிலேயே தான் பல கஷ்டங்களை அனுபவித்து ஒருவன் தான் செய்த வினையிலிருந்து தப்பவே முடியாது என்பதை மிகத் தெளிவாக உணர்த்திவிடுகிறான். ஆகையால்…. WATCH YOUR PRESENT ACTIONS PLEASE. நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள இருக்குற ஒரே ஒரு விஷயம் அது தான்.

நிலைமை இப்படியிருக்க மிதமிஞ்சிய செருக்கினால் பாவத்தை மூட்டை கட்டுபவர்களை நினைத்து சிரிப்பு தான் வருகிறது…. வேறென்ன நம்மால் செய்ய முடியும்??

சரி…. இந்த ஜென்மாவிலோ அல்லது போன ஜென்மாவிலோ ஏதோ தெரியாம பண்ணிட்டேனுங்க … தப்பு தாங்க. அதை நினைச்சி நினைச்சி இப்போ அழுதுகிட்டுருக்கேனுங்க. இதுல இருந்த தப்ப வழியே இல்லையா? ஒரு சின்ன இடுக்கு கூடவா இல்லை? என்று கேட்கிறவர்களுக்கு மட்டும்…..

பதில் : இருக்கு!

அடுத்த பாகத்தில் காணலாம்….

….to be continued in Part (2)

13 thoughts on “ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

 1. வணக்கம் சுந்தர். ரொம்ப நல்லா சொல்லியிருக்கிங்க. வினை விதைத்தவன் வினையை மட்டுமே அறுத்தாக வேண்டும். நாம வாழற கொஞ்ச நாள்ல, மத்தவங்களுக்கு உபயோகமா ஏதும் பண்ணலேணாலும், குறைஞ்சது உபத்திரவம் கொடுக்காம இருக்கனும். (எங்க அப்பா எப்பவுமே சொல்லற வார்த்தை இது). அதுவே பெரிய புண்ணியம் தானே. அதுக்கு கடவுள் தான் எல்லாருக்கும் நல்ல புத்திய கொடுக்கனும். எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க ரொம்ப குறைஞ்சு போயிருச்சு.

 2. நல்ல அருமையான பதிவு
  அடுத்த பாகம் விரைவில் எதிர்பார்கிறோம்

 3. ரொம்ப அருமை இதற்க்கு மேல் வார்த்தை சொல்ல தெரியவில்லை

 4. சுந்தர்ஜி ,

  அருமையான எழுத்துநடை மீண்டும் மீண்டும் படிக்க துண்டுகிறது .பாகம் 2 இல் என்னசகாப்தம் நிகழ்த்த உள்ளீர் .

  நன்றி .
  மனோகரன்

 5. மிகவும் அற்புதமான பதிவு…மிக்க நன்றி சுந்தர்.

  1. டியர் சுந்தர்ஜி

   மிகவும் அருமையான பதிவு. இரண்டு முறை படித்து இருக்கிறேன். இபபொழுது படித்தாலும் புது பதிவு போல் உள்ளது உங்கள் எழுத்து நடை அருவி பிரவாகமாக கொட்டுகிறது.

   தங்கள் பதிவிற்கு நன்றி
   உமா

 6. என் அருமை ஸ்ரீமான் ஸ்ரீதர் அய்யா, அவர்களுக்கு நமஸ்காரம் ,இந்த பிரபஞ்சத்தின் அருமையான பதிவு, மத்தவளுக்கு உபயோகபடுகிற இந்த உணுடல் இருக்கவேண்டும் , உபத்ரவம் கொடுகறச்ச நமக்கு உடனக்குடன் பலன் & பிரதிபலன் கொடுதிடரா, ஆக அவாலுக்கு கொடுத்த சேவையை, பணிவிடையா பாவித்து மத்தவாளுக்கு
  தொந்தரவு தராம அம்பாள பிரார்த்தித்து என் பதிவை முடித்து, அய்யாவின் மறு பதிவை பார்க்க ஆவலாக உள்ளேன், நன்றி

 7. என் இனிய நண்பருக்கு நன்றி , தான் அறிந்ததை பிறரும் அறியும் வண்ணம் வலையேற்றிய நீங்கள் என் நண்பர்தானே !

  மேலும் மேலும் இதுபோன்ற பதிவுகளை காண ஆவலாய் இருக்கும் உங்கள் நண்பன் பிரகாசம்

 8. ஹரே கிருஷ்ணா. ஸ்ரீ அப்பைய தீட்சிதரின் வாழ் நாளில் நடந்த ஒரு சம்பவத்தை மிகவும் நன்றாக எழுதி இருக்கின்றீர்கள். மிக்க நன்றி. தங்கள் மற்ற பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் வெங்கடேஸ்வரன் பெங்களுரு. ஹரே கிருஷ்ணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *