Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > திருக்குறள் தந்த திருவள்ளுவர் தம்பதி சமேதராக எழுந்தருளியிருக்கும் பழமை வாய்ந்த கோவில்

திருக்குறள் தந்த திருவள்ளுவர் தம்பதி சமேதராக எழுந்தருளியிருக்கும் பழமை வாய்ந்த கோவில்

print
ன்று திருவள்ளுவர் தினம். உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றி தமிழுக்கு பார் முழுதும் பெருமை சேர்த்தவர் திருவள்ளுவர். அவரை கௌரவிக்கும் பொருட்டு அன்னை தமிழுக்கும் அணி சேர்க்கும் விதமாக தமிழக அரசால் பொங்கலுக்கு மறு தினம் திருவள்ளுவர் தினமாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டு காலமாக இது கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக அளவில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு உண்டு. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர். திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.

தனிமனிதனுக்கு தேவையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருள் சார்ந்த வாழ்வு. அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; திருக்குறளின் மையக்கருத்து இது தான்.

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் திருவள்ளுவர் பற்றி குறிப்பிடும்போது வேதங்களை படைத்த பிரம்மனே பாமர மக்களும் அதை புரிந்து கொள்ளு ம்போருட்டு வள்ளுவனாக வந்து 133 அதிகாரம் தந்தான் என்று குறிப்பிடுகிறார்.

உக்கிரப் பொருவழுதியார் “நான்முகன் திருவள்ளுவனாக மாறித் தன் நான்மறையை முப்பொருளாய்ச் சொன்னான்.” என்று சொல்கிறார்.

ஆலங்குடி வங்கனார் என்னும் பெரியவர் “அமுதம் சுவைத்தவர் தேவர் மட்டுமே. திருக்குறளை மக்களும் சுவைக்கின்றனர். எனவை திருக்குறள் அமிழ்தத்தினும் சிறந்தது.” என்று கூறுகிறார்.

பெருஞ்சித்திரனார் “வேதம் தன்னைத் தானே திருக்குறளாகப் பிறப்பித்துக்கொண்டது” என்று கூறுகிறார்.

மாங்குடி மருதனார் என்பவரோ வேதப்பொருளாக விளங்கும் திருக்குறள் ஓதுவதற்கு எளிது, உணர்வதற்கு அரிது, உள்ளுந்தோறும் உள்ளுந்தோறும் உள்ளம் உருக்கும்.

பாரதம் பாடிய பெருந்தேவனார் பாரதமும், இராம கதையும் திருக்குறளுக்கு இணை ஆகா என்று தீர்ப்பே கூறிவிட்டார்.

இப்படி திருக்குறளின் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம் எனும்போது அதை படைத்த திருவள்ளுவரின் பெருமையை எவ்வளவு சொல்லலாம்…?

அதை உணர்ந்து தான் ஐயன் வள்ளுவருக்கு கோவில் ஒன்றை அந்தக் காலத்திலேயே எழுப்பிவிட்டார்களோ….?

என்ன வள்ளுவனுக்கு கோவிலா? எங்கே? எப்போது? என்று தானே கேட்கிறீர்கள்?

மூவுலகையும் திருமால் தனது மூன்றடியால் அளந்தார் என்றால், இரண்டே அடியில் அளந்து நம்மை வியக்க வைத்தவர் திருவள்ளுவர். அவருக்கென்றே உள்ள ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த திருக்கோவில் பற்றி ஒரே பதிவில் எழுதி நம்மால் எழுதிவிட முடியுமா?

இந்த தனிச் சிறப்பு வாய்ந்த கோவில் பற்றியும் அதில் புதைந்து கிடக்கும் அற்புதங்கள் மற்றும் அருள் பற்றியும் இரண்டு மூன்று பதிவுகளாக வெளியிடுவதே பொருத்தம் என்று கருதுகிறேன்.

ஆகம விதிகளின் படி கட்டப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சென்னையில் உள்ள திருவள்ளுவர் திருக்கோவிலுக்கு நம் தள வாசகர்களை அழைத்துச் செல்வதென முடிவு செய்து உடனடியாக களமிறங்கினோம். நண்பர்கள் பலர் தைத் திருநாளை முன்னிட்டு அவரவர் சொந்த ஊருக்கு சென்றுவிட, நண்பர்கள் ராஜா, மாரீஸ், தள  வாசகர் ரெங்கராஜன், ஆகிய மூவருடன் திருவள்ளுவர் திருக்கோவிலுக்கு செல்ல தயாரானோம்.

திருவள்ளுவர் சென்னையில் உள்ள திருமயிலையில் பிறந்தார் என்பது பலருக்கு தெரிந்திருந்தாலும் அதே திருமயிலையில் திருக்கோவில் ஒன்று உள்ளது பலருக்கு தெரியாது.

திருவள்ளுவர் பிறந்த இடம் தற்போது மயிலாப்பூர் என்று வழங்கப்படும் திருமயிலை ஆகும். மயிலையில் அவர் அவதரித்த இடத்திலேயே வள்ளுவருக்கு தனிக் கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுப்பப்பட்டுள்ளது.

கோவில் இருப்பது எங்கே?

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் லஸ் கார்னருக்கு சற்று முன்பாக (சமஸ்கிருத கல்லூரி அருகே) திருவள்ளுவர் சிலையில் இருந்து (ஆஞ்சநேயர் கோவில் பின்புறம்) 200 மீட்டர் தொலைவில் இரண்டு மூன்று தெருக்களுக்கு அப்பால் அமைந்துள்ளது திருவள்ளுவர் திருக்கோவில்.

முகவரி  : திருவள்ளுவர் திருக்கோவில், முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெரு, திருமயிலை, சென்னை – 600004.

குடியிருப்பு பகுதியின் நடுவே அமைந்திருப்பதால் இப்படி ஒரு கோவில் இங்கே இருக்கிறது என்பதே வெளியே அதிகம் பேருக்கு தெரியவில்லை.

கோவிலின் வெளிப்புற ஆர்ச்சை தாண்டி உள்ளே சென்றால் விசாலமான இட வசதி உண்டு. நமது டூ-வீலரையோ காரையோ தாரளமாக பார்க் செய்யலாம்.

உள்ளே சென்றால் தியான மண்டபம் காணப்படுகிறது. அமைதியாக எவர் தொந்தரவும் இன்றி தியானம் செய்ய ஏற்ற ஒரு சூழ்நிலை. நேரிதிரே நுழைவாயிலை பார்த்தவாறு அமைந்துள்ளது கருவறை. கருவறையில் ஐயன் திருவள்ளுவர் மற்ற ஆலயங்களைப் போலவே கருங்கல்லினால் ஆன மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார்.

அதற்கு முன்பாக வள்ளுவர் மற்றும் வாசுகி ஆகியோரின் உலோகத்தினால் ஆனா உற்சவ மூர்த்தங்களும் உண்டு.

அருகில் பக்கவாட்டில் வள்ளுவரின் துணைவி வாசுகி அன்னைக்கும் தனி சன்னதி எழுப்பப்பட்டுள்ளது. கிழக்கு பார்த்தபடி தான் இரண்டு மூர்த்தங்களும் உள்ளன.

பரம்பரை பரம்பரையாக பல நூறாண்டுகளுக்கும் மேல் தனியாரிடம் இருந்தது இந்த கோவில். பல ஆண்டுகாலம் தினசரி பூஜைகள் நடைபெற்றுவந்துள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு தான் இந்து அறநிலையத் துறையின் கீழ் வந்தது.

வள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சியை அறிஞர் அண்ணாதுரையின் அரசு தான் மேற்கொண்டது. ஆனால் அதற்கும் முன்பாகவே இந்த கோவிலும் இதில் உள்ள திருவள்ளுவர் விக்கிரகமும் பல நூற்றாண்டுகாலமாக இருந்து வந்துள்ளது. அரசு இப்படி ஒரு முயற்சி எடுப்பது அந்த காலத்தில் அப்போது தகவல்-தொடர்பு வசதிகள் இருந்த சூழ்நிலையில் எவருக்குமே தெரியவில்லை. இப்படி ஒரு கோவில் இங்கே இருக்கிறது… வள்ளுவர் இப்படித் தான் இருப்பார் என்று எடுத்து கூறுவதற்கு கூட எவரும் இருக்கவில்லை. ஆனாலும் அதிசயமாக அரசு கொடுத்த உருவமும் இந்த கோவிலில் உள்ள சிலையின் உருவமும் அச்சு அசல் ஒரே ஒரே மாதிரி வந்திருப்பது வள்ளுவரின் திருவருளே அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்?

இக்கோயிலின் முதல் திருப்பணி கடந்த 27.4.1973-ல் முதல்வர் கருணாநிதி தலைமையில் தொடங்கியது. திருப்பணிகளுக்கான புரவலராகவும் கருணாநிதியே பொறுப்பேற்றார். அப்போதைய அறநிலையத் துறை அமைச்சர் மு. கண்ணப்பன், கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர் என்பது கோவிலில் காணப்படும் கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.

 

 

பகுத்தறிவு முதல்வர் துவக்கிய திருப்பணி என்பதால் ஆலயம் என்ற சொல்லை தவிர்த்து நினைவாலயம் என்று பொறித்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது. ஆனால் நினைவாலயத்திற்கு எதற்கு குடமுழுக்கும் கும்பாபிஷேகமும்? இதிலிருந்தே தெளிவாகிறது இது ஆகம விதிகளின் படி பிரம்மனின் அவதாரமான திருவள்ளுவருக்கு எழுப்பப்பட்டுள்ள கோவில் என்று.

இக்கோயிலின் மைய மண்டபம் அருகே வள்ளுவர் பிறந்த இடத்தில் இருந்த இலுப்பை மரம் இன்றும் “தல விருட்சமாக’ உள்ளது. இந்த இடத்தை பாதுக்காக்க வேண்டி இந்த மரத்தைச் சுற்றி கடந்த 6.5.1935-ல் மேடை அமைக்கப்பட்டு, செப்புத் தகடு கவசமாகப் பூணப்பட்டது. எம்.கே. கன்னியப்பநாயகர், டி. சுப்பிரமணிய செட்டியார் ஆகியோர் இந்த மேடையை அமைத்ததாக தெரியவந்துள்ளது. காலப்போக்கில் அந்த செப்புத் தகடு விஷமிகளால் களவாடப்படுவது தொடரவே, இறுதியில் அதை சுற்றிலும் கம்பிகளுடன் பாதுகாப்பு சுவர் எழுப்பி பூட்டி வைத்துவிட்டார்கள்.

வள்ளுவர் அவதரித்த இலுப்பை மரத்தடி மேடையில் தனது பெற்றோரான ஆதி-பகவனின் திருக்கரங்களில் மழலையாக உள்ளது போல சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வள்ளுவரும் அவர் துணைவி வாசுகியும் இனிய இல்லறம் நடத்தி உதாரணத் தம்பதிகளாக வாழ்ந்தனர். ஒரு முறை வாசுகி அம்மையார் நீர் இறைக்கும்போது வள்ளுவர் அழைக்க, அப்படியே ராட்டினத்தின் கயிற்றை அவர் விட்டுவிட்டு வர, அவர் மீண்டும் வரும் வரை அந்த கயிறு அப்படியே அந்தரத்தில் நின்றதாம். அந்தளவு கருப்புகரசியாக திகழ்ந்தவர் வாசுகி அம்மையார்.

வாசுகி அவர்கள் நீர் இறைத்ததாக கூறப்படும் புண்ணிய தீர்த்தம் வழங்கிய கிணறு அருகே காணப்படுகிறது. ஆனால் அது நீரின்றி குப்பைக் கூளங்கள் சூழ்ந்து வறண்டு காணப்படுகிறது.

தமிழ் இருக்கும் இடத்தில் சிவ பெருமானுக்கு இடமில்லாமல் இருக்குமா? முத்தமிழ் சங்கத்தின் தலைவன் ஆயிற்றே எங்கள் ஆடலரசன். எனவே இந்த ஆலயத்திற்குள் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியும், காமாட்சியம்மன் சன்னதியும் இருப்பதில் வியப்பில்லை. தவிர நவக் கிரகங்களுக்கும் தனி சன்னதி உண்டு.

திருக்குறள் வாழ்வு வாழ்பவர்களை எந்நாளும் நாங்கள் தொல்லை செய்ய மாட்டோம் என்று அந்த நவக்கிரகங்களும் ஆணையிட்டு சொல்வது போலுள்ளது.

இந்த ஏகாம்பரேஸ்வரர் சன்னதியை உருவமற்ற நவ நாத சித்தர்கள் என்பவர்கள் பிரதிஷ்டை செய்தததாக அறியமுடிகிறது.

ஸ்ரீகாமாட்சி- ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணியும் நடைபெற்றுள்ளது. திருப்பணிக் குழுத் தலைவராக குன்றக்குடி அடிகளார் இருந்துள்ளார். திருப்பணிகள் நிறைவேற்றப்பட்ட பின், கடந்த 23.01.2001-ல் திருவள்ளுவர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் அப்போதைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.தமிழ்க்குடிமகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றதாக கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இந்த கோவில் தற்போது மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ளது.

கோயிலின் வெளிப்புறத்தில் 2 தோரண வாயில்கள் வள்ளுவர்-வாசுகியின் சிற்பங்களுடன் அமைக்கப்பட்டிருந்தும், சுண்ணாம்புப் பூச்சு கண்டு ஆண்டுக் கணக்கில் ஆனது போல பொலிவிழந்துள்ளது. தற்போது கோவிலுக்கு வர்ணம் அடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

கோவிலின் அர்ச்சகர் திரு.ஆறுமுகம் குருக்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். நம்மை கீழே அமரவைத்து கோவிலின் வரலாற்றை, அதன் சிறப்புக்களை விரிவாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவர் கூறிய விஷயங்கள் ஒவ்வொன்றும் சிலிர்ப்பை தரக்கூடியவை.

ஒவ்வொரு பாகமாக நமக்கு அழைத்து சென்று சுற்றிக் காண்பித்தார்.

திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ள நமது தளத்தின் காலண்டரை அவருக்கு பரிசளித்தோம். கோவிலின் கருவறையில் அது மாட்டப்பட்டுள்ளது. இதை விட நமக்கு பெருமை வேறு என்ன வேண்டும்?

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். குறள் 225

விளக்கம் : பசியை பொறுத்துக்கொள்ளும் நோன்பை கடைப்பிடிப்பதவிட பிறரின் பசியை போக்குவது தலை சிறந்தது.

இன்றைக்கு திருவள்ளுவர் தினம் என்பதால் கோவிலுக்கு வருபவர்களுக்கு நமது சார்பில் மதியம் இன்று அன்னதானம் நடைபெறுகிறது. இது பற்றிய எண்ணம் நமக்கு உதித்தவுடன், நம்முடன் வந்திருந்த நண்பர்கள் அதற்க்கு ஆகும் செலவை நால்வரும் சமமாக பங்கிட்டுக்கொள்ளலாம் என்று கூறிவிட்டனர். இதுவும் ஐயனின் திருவுள்ளம் தான்.

தொடரும்….

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அடுத்த பாகத்தில் :

* திருவள்ளுவர் ஆலயத்தில் மூன்று மரங்கள் ஒரே மரமாக சேர்ந்து வளர்ந்திருக்கும் அதிசய விருட்சம் (சங்கர நாராயண விருட்சம்)

* கிணற்றில் கிடைத்த அதிசய வெண்மை நிற விநாயகர்

* திருவள்ளுவரின் சடையில் உள்ள சிவலிங்கம்

* அன்னை வாசுகியின் நெற்றியில் அமைந்துள்ள சிவலிங்கம்

* வாசுகி அன்னையை வணங்க இங்கு அருவ வடிவில் வருகை தரும் சித்தர்கள்

* நவ நாத சித்தர்கள் பிரதிஷ்டை செய்த ஏகாம்பரேஸ்வரர்

* திருமணத் தடை நீக்கும் வள்ளுவர் வாசுகி திருக்கல்யாண உற்சவம்

* திருமணக் கோலத்தில் வள்ளுவரும் வாசுகியும் எழுந்தருளியிருக்கும் அற்புத காட்சி

* வள்ளுவர் வாழ்வில் நடைபெற்ற சுவையான சம்பவங்கள்

மற்றும் இதர பலப் பல….. சுவையான அதிசய செய்திகள் புகைப்படங்களுடன்….

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

4 thoughts on “திருக்குறள் தந்த திருவள்ளுவர் தம்பதி சமேதராக எழுந்தருளியிருக்கும் பழமை வாய்ந்த கோவில்

  1. day by day, you’re doing such a great work. I’m more happy to see your new life going good.
    ***
    And I’m really impressed to see this kind of temple. Though I haven’t followed or got interested to know all kural in Thirukkural, henceforth would try to grab whatever opportunities come across.

    Thanks so much.:)
    ***
    Chitti.
    Thoughts becomes Things.

  2. இப்படி ஒரு கோவில் நம் சென்னையில் இருப்பது பல பேருக்கு தெரியாது.. நானும் இன்று நம் தளத்தை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்..

    தகவலுக்கு மிக்க நன்றி….

    நேரம் கிடைக்கும்போது நிச்சயம் இந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும்..

    கோவிலின் அர்ச்சகர் கூறிய விஷயங்களை கேட்க ஆர்வமாக உள்ளது..சீக்கிரம் அடுத்த பதிவை வெளியிட வேண்டும்..

    PVIJAYSJEC

  3. இந்த கோவில் உள்ளே சென்ற பொழுது உடம்பிற்கும் மனதிற்கும் கிடைத்த உற்சாகம் சொல்ல முடியாது அனுபவித்தால் தான் தெரியும் ,நம் சென்னை மாநகருக்குள் இவ்வளவு பாரம்பரிய மிக்க கோவில்களா என்று ஆச்சர்ய பட வைக்கும் அளவிற்கு கடந்த சில மாதங்களாக கோவில்களை கண்டு வருகிறேன் ரைட் மந்த்ரா சார்பாக ,அந்த வாய்ப்பு கொடுத்த இறைவுக்க்ம் ,சுந்தருக்கும் நன்றி

  4. என்னைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக வாழ்நாளில் ஒரு முறையேனும் காண வேண்டிய இடம் இது என்று சொல்லலாம்..இடம் என்று சொல்லுவதை விட கோவில் என்று சொல்லுவதே மிகப் பொருத்தமானது…..கிட்டத்தட்ட திருவள்ளுவரை நாம் மறந்து கொண்டிருக்கும் இன்றைய உலகில், இது மாதிரியான முயற்சிகள் இளம் தலைமுறையினருக்கு ஒரு நினைவூட்டலாய் அமையும் என்பதில் ஐயமில்லை…!

    நான் உங்களுடன் வரமுடியாதது வருத்தமே…இருந்தாலும் கூடிய விரைவில் எனது நண்பர்களுடன் செல்ல முடிவு செய்திருக்கிறேன்…! இது போன்ற விபரங்களை தேடித் தேடி தரும் உங்கள் முயற்சி ஆர்வமிருந்தும், வழி தெரியாமல் நின்று கொண்டிருக்கும் என்னைப் போன்ற பலருக்கு பெரிய வழிகாட்டி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை…!

    “கடமையைச் செய்;பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *