Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, May 19, 2024
Please specify the group
Home > Featured > பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!

பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!

print
பூவிருந்தவல்லி வரதராஜப் பெருமாள் கோவிலிலிருந்து திருமலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட ஸ்ரீராமுலு குழுவினரை கௌரவிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அந்நேரம் புகைப்படமெடுத்தவர் செய்த தவறால் நாம் ஸ்ரீராமுலு அவர்களை கௌரவிப்பது போன்ற புகைப்படங்கள் மட்டும் கேமிராவில் பதிவாகவில்லை என்று கூறியிருந்தோம் நினைவிருக்கிறதா?

அதை தொடர்ந்து சுருட்டப்பள்ளியில் ஸ்ரீராமுலு அவர்களை மறுநாள் சந்திப்பது என்று முடிவானது. முன்னதாக மத்தூர் சென்று மகிஷாஷூர மர்த்தனியை தரிசித்துவிட்டு பின்பு அங்கிருந்து நேரே நகரி வழியாக நல்லாட்டூர், பிச்சாட்டூர் தொடர்ந்து நாகலாபுரம் சென்றோம்.

முந்தைய பதிவில் கூறியது போல மத்தூர் ஆலயத்தின் தவில் வித்துவான் திரு.ஏ.ஜி.லோகநாதன் அவர்கள் நம்மிடம் நாகலாபுரம் வழியாக செல்லும்போது அவசியம் அங்குள்ள தொன்மை வாய்ந்த ஆலயமான வேதநாராயணப் பெருமாள் ஆலயத்திற்கு அவசியம் செல்லுமாறும், தனது சகோதரரே அங்கு தவில் வித்துவானாக இருக்கிறார் என்றும் விரைவு தரிசனத்திற்கு அவர் ஏற்பாடு செய்வார் என்றும் கூறினார்.

Suruttappalli Trip 1

இதையடுத்து அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு நகரி வழியாக நாகலாபுரம் பயணமானோம்.

நாகலாபுரம் சிறிய ஊர் தான். மெயின்ரோட்டிலிருந்து ஊருக்கு தனி சாலை செல்கிறது. அதற்குள் சென்று ஆலயத்தை தரிசித்துவிட்டு மறுபடியும் மெயின்ரோட்டில் இணைந்துகொள்ளலாம்.

நமது “ஸநாதன தர்மத்துக்கு’ ஆதாரமானவை வேதங்களே! நான் மறைகள் இல்லையேல் நமது மதமே இல்லை. காக்கும் கடவுளான திருமால், தர்மத்தை நிலை நாட்டப் பல அவதாரங்கள் எடுத்திருப்பினும், அவற்றுள் வேதங்களைக் காத்த பெருமையினால் பெரிதும் போற்றப்படுவது மத்ஸ்ய ரூபத்தில் (மீன் உருவம்) எடுத்த அவதாரமே! ‘தசாவதாரங்களில்’ இதுவே முதன்மையானது.

Suruttappalli Trip 3

முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் ஆலயத்தை, இந்த நாகலாபுரத்தில் காணலாம். இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று. பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும். மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே என்கின்றனர்.

Suruttappalli Trip 2

16ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால், அவர் தம் தாயின் நினைவாக இக்கோயில் கட்டப்பட்டது. மூலவர் வேதநாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் காட்சி தருகிறார். திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது. இந்த அற்புதக் காட்சியை இன்றைக்கெல்லாம் கண் குளிர சேவிக்கலாம்.

இவ்வாலயத்தில் வேதவல்லித் தாயார், லட்சுமி நரசிம்மர், வீரஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர், ராமபிரான் ஆகிய தெய்வங்களுக்கு தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. திருச்சுற்று மதிலுடனும், ராஜகோபுரங்களுடனும் ஒரு பெரிய ஆலயமாகவே இது திகழ்கிறது.

திரு.லோகநாதன் அவர்கள் கார்டை காட்டியதும் ம்மை விசேஷ தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். சுவாமியை தரிசித்துவிட்டு பல்லாண்டு பாடல் ஒன்று பாடிவிட்டு வெளியே வந்தோம். சூடான சர்க்கரை பொங்கல் பிரசாதமாக கிடைத்தது. தாயாரையும் தரிசித்துவிட்டு சுருட்டப்பள்ளி புறப்பட்டோம்.

Suruttappalli Trip 4

ஸ்ரீ வேத நாராயண சுவாமி ஆலயம், திருமலை – திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் சிறப்புற நிர்வகிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சூரிய பூஜையுடன் கூடிய தெப்பத் திருவிழாவும், பிரம்மோத்ஸவமும் முக்கியமானவை. அபூர்வமான இத்திருத்தலம், “சுருட்டப்பள்ளி’ சிவன் ஆலயத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அடியார்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம்.

வேதநாராயண சுவாமி தரிசனம் முடிந்ததும் மீண்டும் சுருட்டப்பள்ளி நோக்கி புறப்பட்டோம்.

அனைத்தும் திட்டமிட்ட படி நடந்துகொண்டிருந்தாலும் நமக்கு உள்ளுக்குள் ஒரு சின்ன உதறல். சுருட்டப்பள்ளியில் கோவில் திறந்திருக்கவேண்டுமே. ஏனெனில் நாங்கள் நாகலாபுரத்திலிருந்து கிளம்பும்போதே மணி மதியம் 12.45 pm. சுருட்டப்பள்ளியில் ஒரு மணிவரை ஆலயம் திறந்திருக்கும் என்று ஸ்ரீராமுலு சொன்னார்.

சுருட்டப்பள்ளி சென்றபோது நமக்காக திரு.ஸ்ரீராமுலு காத்திருந்தார். கோவிலில் எங்கு பார்த்தாலும் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தான். பலர் க்ரூப் க்ரூப்பாக வந்திருந்தார்கள்.

Suruttappalli Trip 5

நம்மை வரவேற்றவர், “முதல்ல சுவாமியை பார்த்துட்டு வந்துடுங்க. நடையை சாத்தப்போற நேரம். சுவாமியை தரிசனம் பண்ணிட்டு பின்னால பார்க் இருக்கு அங்கே வந்துடுங்க. அங்கே சாப்பிடலாம்!” என்றார்.

“சரிங்க சார்… தரிசனம் பண்ணிட்டு நேரே அங்கே வந்துடுறோம்” என்று கூறிவிட்டு, அங்கே கோவிலுக்கு முன்புறம் இருந்த ஒரு பூ கடைக்கு சென்றோம். அர்ச்சனை செட் ஒன்று வாங்கிக்கொண்டு இரண்டு மாலைகள் வாங்கிக்கொண்டோம்.

சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம்.

அடுத்த சில வினாடிகளில் தரிசனம் கிடைத்துவிட்டது.

Suruttappalli Trip 6

Suruttappalli Trip 7முதலில் அன்னை மரகதாம்பிகை தரிசனம்.அடுத்து வால்மீகிஸ்வரர். வழக்கம் போல நமது நண்பர்கள் மற்றும் வாசகர்கள் சிலர் பெயர்களுக்கு அர்ச்சனை செய்தோம்.

வாங்கிச் சென்ற இரண்டு மாலைகளையும் அர்ச்சகரிடம் கொடுத்து பதிலுக்கு சுவாமிக்கு அணிவித்த மாலைகள் இரண்டு வேண்டும் என்றோம். நமது பண்டமாற்று முறை புரியாமல் சற்று ஏற இறங்க பார்த்தார் நம்மை.

Suruttappalli Trip 8

பாதயாத்திரை செல்லும் அடியார்கள் இருவரை கௌரவிக்க மாலைகள் வாங்கியதாகவும், சுவாமிக்கு அணிவித்த மாலையை அவர்களுக்கு அணிவித்தால் விசேஷம் என்பதால் நாம வாங்கிய இரண்டு மாலைகளை சுவாமிக்கு சூட்டி, ஏற்கனவே சுவாமி அணிந்திருக்கும் மாலைகள் இரண்டை நமக்கு தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

உடனே நாம் வாங்கிய மாலையை சுவாமிக்கு சூட்டிவிட்டு சுவாமியின் மாலைகள் இரண்டை நம்மிடம் கொடுத்தார். விபூதி பிரசாதம் பெற்றுக்கொண்டு தட்சணை கொடுத்துவிட்டு வெளியே வந்தோம்.

அடுத்து, பள்ளிகொண்ட ஈஸ்வரன் சன்னதி. வரிசையில் நிற்கும்போது சுவற்றில் வரைந்த மஹா பெரியவரின் திருவுருவப் படம் கண்களில் பட்டது. ‘ஜெய ஜெய சங்கர… ஹர ஹர சங்கர’ மனம் குதூகலமடைந்தது.

அடுத்த சில வினாடிகளில் பள்ளி கொண்ட ஈஸ்வரன் தரிசனம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் போல சுவாமி இங்கு சயனத் திருக்கோலம். வேறு எந்த ஆலயத்திலும் பார்க்க முடியாத ஒரு அதியற்புதம். நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். என்னவோ தெரியவில்லை உணர்ச்சி மிகுதியால் கண்களில் நீர் துளிர்த்தது.

Surutappalli Pallikonda Eswaran

“இப்படி ஒரு தரிசனத்தை இந்த எளியோனுக்கு கொடுக்கவேண்டியே நீ இப்படி திருவிளையாடல் நிகழ்த்தினையோ… நீ தண்டிப்பதற்கு கூட இந்த சிறியோனுக்கு தகுதி இல்லையே இறைவா… குற்றம் குறைகளை பொறுத்தருள்வாய் பள்ளிகொண்ட ஈஸ்வரா” என்று மனமுருக பிரார்த்தித்துக்கொண்டோம்.

"

பிரசாதம் பெற்றுக்கொண்டு பிரகாரத்தை மூன்று பிரதட்சிணம் வந்துவிட்டு வெளியே வந்தோம்.

மாலைகளை சென்று நண்பர் செந்திலின் காரில் வைத்துவிட்டு, பூங்கா நோக்கி நடந்தோம்.

சுருட்டப்பள்ளி கோவிலில் காணப்படும் மகா பெரியவா ஓவியம்...
சுருட்டப்பள்ளி கோவிலில் காணப்படும் மகா பெரியவா ஓவியம்…

கோவிலில் கோ-சாலை உண்டு. அதன் வழியே பின்னே சென்று பாதயாத்திரை குழுவினர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பூங்கா சென்றோம்.

குழுவினர் சுமார் 120 பேர், மதிய உணவருந்திக் கொண்டிருந்தனர். நம்மை திரு.ஸ்ரீராமுலுவும் அவரது குரு திரு.பாபுவும் வரவேற்றனர்.

“முதல் ரெண்டு பேரும் சாப்பிடுங்க சுந்தர் சார். அப்புறம் பேசலாம்”

எங்கிருந்தோ இரண்டு பிளேட்டுகள் வந்தன.

சாதம், மோர்குழம்பு, வத்தல் குழம்பு, ரசம், பொரியல், அப்பளம் என பிரமாதமான சமையல். நாம் பொதுவாக லிமிட்டாக சாப்பிடுவது தான் வழக்கம். ஆனால்… இந்த முறை விட்டு வெளுத்து வாங்கிவிட்டோம்.

சாப்பிட்டு முடிந்ததும், சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

“சார்… நான் சுருட்டப்பள்ளி தரிசனம் பண்ணப்போறேன் என்பதை நேற்று வரை நினைத்து பார்க்கவில்லை. நீங்கள் சுருட்டப்பள்ளியில் இன்று மதியம் ஹால்ட் என்று கேள்விட்டப்பட்டபோது தான் உங்களை இங்கு சந்தித்து கௌரவிக்கவேண்டும் என்று தோன்றியது. அப்படியே சுவாமியையும் தரிசனம் பண்ணினது போல ஆச்சு.”

“நீங்க இவ்ளோ தூரம் எங்களுக்காக வந்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார்.”

“அடடா… நன்றிங்குற வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க. இது எங்க பாக்கியம். எத்தனை பேருக்கு இது கிடைக்கும்?”

அடுத்து நாம் வந்த பிரதான காரணத்தை சொன்னோம். “உங்களை கௌரவிக்கணும். நேத்து எடுத்த ஃபோட்டோ சரியா பதிவாகலை. ரொம்ப ஏமாற்றமா போய்டுச்சு.”

“அதனால தான் இன்னைக்கு மத்தூர், நாகலாபுரம், சுருட்டப்பள்ளின்னு மூணு கோவில்களை தரிசிக்கிற பாக்கியம் உங்களுக்கு கிடைச்சிருக்கு….” நெகிழ்ந்தபடி சொன்னார் ஸ்ரீராமுலு.

“எல்லாரும் ஒரு நிமிஷம் கோவில் வாசலுக்கு வரமுடியுமா?”

“இல்லே சார்… குழுவினர் எல்லாரும் சாப்பிட்டுவிட்டு உண்ட களைப்பில் இருக்கிறார்கள்… இங்கேயே பண்ணிடுங்களேன்” என்றார்.

நமக்கு அதில் விருப்பமில்லை. கோவில் வாசலில் பின்பக்கத்தில் ராஜகோபுரமோ சன்னதியோ தெரிவது போல படம் எடுத்தால் உங்களுக்கு சுருட்டப்பள்ளி கோபுரத்தை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்குமே!

“ஒன்னும் ப்ராப்ளம் இல்லே… நீங்க ரெண்டு பேர் மட்டும் வந்தீங்கன்னா போதும்” என்றோம்.

குருஜியை பார்த்தார். அவர் “சரி… போகலாம்” என்பது போல கண்ணசைத்தார்.

“ரொம்ப சந்தோஷம். ரெண்டு பேரையும் சிரமப்படுத்துறதுக்கு மன்னிக்கணும். ஏதோ என்னோட ஒரு சின்ன ஆசை” என்றோம்.

“சார்… சார்… எங்களுக்காக எவ்ளோ தூரம் வந்திருக்கீங்க. எவ்ளோ பெரிய விஷயம். வாங்க போகலாம்”

அனைவரும் கோவிலை நோக்கி நடந்தோம்.

சன்னதி கிட்டத்தட்ட சாத்திவிட்டார்கள். பிரதான வாயில் மட்டும் திறந்திருந்தது.

உள்ளே சென்று பள்ளி கொண்ட ஈஸ்வரன் சன்னதி முன்பாக இருவரையும் நிற்க வைத்து, பொன்னாடையை போர்த்தி, மாலைகளையும் சூட்டினோம்.

“வருடம்தோறும் இரண்டு முறை திருமலை பாதயாத்திரை மேற்கொள்ளும் உங்களுக்கு என் சார்பாகவும் என் வாசகர்கள் சார்பாகவும் இந்த மரியாதையை செய்கிறோம்!”

என்று கூறி, பல்லாண்டு பாடினோம்.

Suruttappalli Trip 10
இந்த இந்த ஒரு படம் தான் எல்லாவற்றுக்கும் காரணம்…!

பல்லாண்டு பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு!
பலகோடி நூறாயிரம்!!
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்வி திருக்காப்பு!!

அடியோமோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!
வடிவாய் நின் வல மார்பினில்       
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு!

வடிவார் சோதி வலத்து உறையும்      
சுடர் ஆழியும் பல்லாண்டு!
படை போர் புக்கு முழுங்கும் – அப்
பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!!

“உங்களை இங்கே வெச்சு மரியாதை பண்ணனும். அதுவும் அவரோட மாலையை போட்டு மரியாதை பண்ணணும்கிறது தலைவரோட விருப்பம் போல. அதான் இத்தனை நடந்திருக்கு!” என்றோம்.

"

Suruttappalli Trip 11

அடுத்து செந்தில் அவர்கள் மரியாதை செய்யும்போது,

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே !

என்ற பாடலை பாடினோம்.

Suruttappalli Trip 9
நண்பர் செந்தில் அவர்கள் கௌரவித்தபோது…

கோவிலில் இறைவனைத் தவிர யார் காலிலும் விழக்கூடாது என்பதால், வெளியே அவர்களை அழைத்து வந்து அவர்கள் கால்களில் விழுந்து நமஸ்கரித்தோம்.

ஆலய தரிசனம் ஆண்டவன் தரிசனம் செய்யும்போது தொலையும் பாபங்களைவிட அவன் அடியாரின் பாத தூளிகள் நம் மீது படும்போது நசிக்கும் பாபங்கள் அதிகம். எனவே அடியாரின் பாதம் பணிவதை பெரும் பேறாக கருதவேண்டும்.

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

அந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருந்தவர்க்ளின் விபரத்தை அவருக்கு அவர்களுக்காக பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டோம். பக்கத்து இலைக்கு பாயாசம் வேண்டாமா? “ஒரு ஓரமாக எனக்கும் நண்பர் செந்திலுக்கும் சேர்த்து பிரார்த்தித்துக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் கேட்டால் எழுமலையானால் தட்டமுடியாது” என்றோம்.

“நிச்சயம் சுந்தர் சார்… நீங்கே சொல்லவேண்டிய அவசியமே இல்லை. உங்களுக்காக என் பிரார்த்தனை நிச்சயம் உண்டு!” என்றார்.

சொன்னவர், எதிர்பாராதவிதமாக திடீரெனெ தனது தோள் பையிலிருந்து ஒரு புதிய ஏழுமலையான் அங்கவஸ்திரத்தை அணிவித்து நம்மை கௌரவித்தார்.

அடடா… அடியார்களை மரியாதை செய்தால் அவர்கள் பதில் மரியாதை செய்துவிட்டார்கள்.

“நன்றி…நன்றி… நன்றி!” வேறு எதுவும் வார்த்தைகள் நம்மிடமிருந்து வரவில்லை.

Suruttappalli Trip 12

Suruttappalli Trip 14

தொடர்ந்து சில நிமிடங்கள் அவரிடம் பல்வேறு விஷயங்கள் பேசிவிட்டு விடைபெற்றோம். அங்கிருந்து ஊத்துக்கோட்டை வந்து பின்னர் திருவள்ளூர் வழியாக ஐயப்பன்தாங்கல் வந்து சேர்ந்தோம். நம்மை வீட்டிலேயே டிராப் செய்துவிட்டு செந்தில் கிளம்பினார்.

செந்தில் அவர்கள் இல்லையேல் இந்த பயணம் இத்தனை சிறப்பாக நடைபெற்றிருக்காது. அவருக்கு நம் மனமார்ந்த நன்றி.

மொத்தத்தில் மறக்க முடியாத அனுபவமாக இது அமைந்தது. ஒரு சிறிய ஏமாற்றம், மிகப் பெரிய வாய்ப்புக்களாக மாறிய அனுபவமல்லவா!!

எல்லாம் நன்மைக்கே!

================================================================

Also check :

அடியார்கள் வழியனுப்பு விழாவும், ஏமாற்றத்தில் வெளிப்பட்ட அருளும்! ஆடி ஸ்பெஷல் (3)

திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)

ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)

மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !

எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ? ஆடி ஸ்பெஷல் !

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)

விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

================================================================

[END]

11 thoughts on “பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!

 1. நடப்பவை எல்லாம் நன்மைக்கே. ஆனால் நடக்கும் போது நமக்குப் புரிவதில்லை. வழக்கம் போல் அருமையான பதிவு. உங்கள் எழுத்து நடையில் படிக்கையில் மிகவும் சுவாரசியம்.

  அதெல்லாம் சரிங்க அண்ணா, இந்த சந்தேககங்களை மட்டும் தீர்த்துடுங்க.

  //சூடான சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாகக் கிடைத்தது .//

  அதெப்படிங்க உங்களுக்கு எல்லா கோவில்லையும் சர்க்கரை பொங்கல் கெடைக்குது,

  ———————–

  //நாம் பொதுவாக லிமிட்டாக சாப்பிடுவது வழக்கம்.//

  நம்பிட்டோம் !
  ————————

  // ஆனால் இந்த முறை வெளுத்து வாங்கி விட்டோம் //

  இது வழக்கமா நடக்கறது தானே !

  “கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”

  விஜய் ஆனந்த்

  1. //அதெப்படிங்க உங்களுக்கு எல்லா கோவில்லையும் சர்க்கரை பொங்கல் கெடைக்குது//

   நாங்க உள்ளே போகும்போது புளியோதரையும் தயிர்சாதமும் தான் கொடுத்துகிட்டு இருந்தாங்க. பெருமூச்சு விட்டுகிட்டு தான் தரிசனத்துக்கு போனோம். (வர்ற வரைக்கும் இருக்கணுமே! விஜய் ஆனந்த் மாதிரி நிறைய பேர் வந்திருந்தாங்க!!). தரிசனம் முடிச்சிட்டு வந்து பார்த்தா, அது முடிஞ்சி சர்க்கரைப் பொங்கல் கொடுத்துகிட்டு இருந்தாங்க.

   1. //நாங்க உள்ள போகும் போது புளியோதரையும் தயிர்சாதமும் தன் கொடுத்துகிட்டு இருந்தாங்க //

    சாமி கும்பிடப் போவதற்கு முன்னாடியே, என்ன பிரசாதம் தராங்கன்னு பாக்கப் போய்ட்டீங்க போல.

    1. ஹலோ தம்பி… உள்ளே சன்னதிக்கு போற வழியில உட்கார்ந்து கொடுத்துக்கிட்டுருந்தாங்க. (அங்கே என்ன தீயுது?)

     1. உங்கள் இருவரின் உரையாடலும் கேள்வி பதிலும் சூப்பர்.
      நீகள் இப்படியே சொன்னதை நாங்கள் அனைவரும் சத்தியமாக நம்பிவிட்டோம்

 2. டியர் சுந்தர்,

  என்னாலும் மறக்க முடியாத ஒரு ஆன்மிக பயணம். கடவுள் என்னையும் ஒரு கருவியாக பயன்படுத்தியது என் பாக்கியம். உங்க புண்ணியத்தில் எனக்கும் அடியவர் தரிசனம் கிடைத்தது நன்றி.

 3. இந்த பதிவு முழுதும் என் கணவரின் நினையுடன் படித்தேன்.
  சனி மற்றும் Sunday வரும் எல்லா பிரதொசமும் பைக் மூலம் நீங்கள் தரிசித்த எல்லா கோவில்களும் சென்று வருவர். உன்னையும் ஒருநாள் கூட்டிப்போகிறேன் என்று சொல்வர்.
  முதன்முதலாக உங்கள் எழுத்தில் அவர் வர்ணனையை உணர்ந்தேன்.

 4. வணக்கம் சுந்தர். எல்லாமே அழகாக இருக்கிறது ,எழுத்து ,புகைப்படம் .மரியாதையை செய்தது அனைத்தும் நன்றாக உள்ளது .நன்றி வேத நாராயண சுவாமி கோவில் முகப்பு அழகு.ஒரு முறை கண்டிப்பாக செல்லவேண்டும் .பெருமாள் அருளட்டும் .சிலவற்றிக்கு காரணம் புரிகிறது ,சிலவற்றிக்கு காரணம் எப்போதும் புரிவதில்லை.நன்றி.

 5. மிகவும் உயிரோட்டமுள்ள அழகிய பதிவு. எங்களை மத்தூர் , நாகலாபுரம் , சுருட்டப் பள்ளி. ஆகிய 3 கோவிலுக்கும் அழைத்துச் சென்று இறைவனை மானசீகமாக கண் முன்னே காணும்படி செய்து விட்டீர்கள்

  தாங்கள் இறை அடியாரை கௌரவிததில் இறைவனே மனம் அடியவர் மூலம் உங்களை கவனித்து விட்டார்

  தாங்கள் எங்கு சென்றாலும் பிரசாதம் தங்களுக்காக காத்து கொண்டிருக்கிறது

  தங்கள் பயணத்திற்கு உறுதுணை ஆகா இருந்த திரு செந்திலுக்கும் வணக்கங்கள்

  வாழ்க வளமுடன்

  நன்றி
  உமா வெங்கட்

 6. சுருட்டப்பள்ளியில் எங்குமே காண கிடைக்காத கோலத்தில் சிவனின் பள்ளி கொண்ட நிலை.சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இப்படி ஒரு தரிசனம் நம் தலத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்கவில்லை. இந்த பதிவை நாம் பார்த்திட தான் – இறைவன் விளையாடிய விளையாட்டு என்னே !

  ஸ்ரீ ராமுலு அய்யாவின் பொற்பாதம் பணிகின்றோம். இந்த நிகழ்விற்கு உறுதுணையாய் நின்ற திரு.செந்தில் அண்ணாவிற்கு நன்றிகளும்,வாழ்த்துக்களும். மரியாதை நிமித்தம் பாடிய பாசுரமும்,பாடலும் அருமை.

  காரணமின்றி காரியமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *