பொதுமக்களும் வியாபாரிகளும் தாங்களாகவே முன்வந்து தமிழகத்தின் தவப்புதல்வனுக்கு தங்கள் அஞ்சலியை பல்வேறு விதங்களில் மனமுவந்து செலுத்தி வருகிறார்கள். இந்த ஒற்றை மனிதனுக்காக நாடே துக்கம் அனுஷ்டிக்கிறது. இது தான் உண்மையான அப்பழுக்கற்ற பொது வாழ்க்கை!
பாவங்கள் மட்டுமே தினந்தோறும் கழிக்கப்படும் ராமேஸ்வரத்தில் தற்போது முதன் முதலாக புண்ணியம் விதைக்கபடுகிறது.
இந்த நேரத்தில் நேற்று நாம் நமது முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் ஒரு நிலைத்தகவலை பகிர்ந்திருந்தோம்.
எது உண்மையான அஞ்சலி?
மறைந்த திரு.கலாம் அவர்களுக்காக, போஸ்டர்கள், படங்கள், டிஜிட்டல் பேனர்கள், முகநூல் பதிவுகள் இன்னும் பல முறைகளில் அஞ்சலி செலுத்துபவர்கள், குறைந்த பட்சம் ஒரே ஒரு மரக்கன்றை, அவரவர் பொறுப்பில் நட்டு பராமரித்து வளர்த்து, அடுத்த ஆண்டு இதே நாளில், அந்த மரத்தின் படத்துடன் போஸ்டர்கள், படங்கள், டிஜிட்டல் பேனர்கள், முகநூல் பதிவுகள் போட்டால், அது திரு.கலாம் அவர்களுக்கு உண்மையிலேயே எவ்வளவு பெரிய அஞ்சலி? இது தானே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை, இது தானே அவருக்கு உண்மையான வெற்றி ?…………… மரக்கன்றுகள் வைக்கலாம், பராமரிக்கலாம், வளர்க்கலாம்… அடுத்த வருடம் பதிவுகளைப் பார்க்கலாம்!
என்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.
சொன்ன நாம் அதை முதலில் செய்யவேண்டும் அல்லவா?
மரங்கள் நட்டு பராமரிக்கவேண்டும் என்கிற ஆசை நமக்கு எப்போதும் இருந்தாலும் நாம் இருப்பது வாடகை வீடு என்பதால் அதை செயல்படுத்த பல்வேறு சிரமங்கள் இருந்தன. இருப்பினும் வீட்டுக்காரரிடம் உரிய அனுமதி பெற்று, “உங்க கட்டிடத்துக்கெல்லாம் எந்த பங்கமும் வராது” என்று உறுதிமொழிகளை கொடுத்து அனுமதி பெற்றோம்.
இன்னும் ஒரு வார காலத்திற்குள் நண்பர் முல்லைவனம் அவர்கள் உதவியுடன் ஓரிரு மரமாவது நடவேண்டும் என்று விருப்பம்.
அதே போல குன்றத்தூரில் ஞாயிறு (02/08/2015) நம் தளம் சார்பாக நடைபெறவுள்ள தேவார முற்றோதலில் பங்குபெறும் குழந்தைகளுக்கு முல்லைவனம் அவர்களிடம் பேசி மரக்கன்றுகள் வாங்கி பரிசளிக்கவேண்டும், மேலும் நிகழ்ச்சி துவங்கும் முன் அக்குழந்தைகளை கொண்டே கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, கலாம் அவர்களின் புகழ் பெற்ற 10 உறுதிமொழிகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஒரு எண்ணம் மனதில் தோன்றியிருந்தது.
எதற்கும் முல்லைவனம் அவர்களிடம் பேசி, நேரத்தை பிக்ஸ் செய்துகொள்வோம், ரொம்ப பிஸியான மனுஷன் அவர் என்று கருதி முல்லைவனம் அவர்களை தொடர்புகொண்டோம். முதலில் அவர் இன்று சென்னையில் இருப்பாரா என்று சந்தேகம் இருந்தது. ஒருவேளை கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த ராமேஸ்வரம் சென்றிருக்கக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. ஏனெனில் கலாம் அவர்களிடமே தனது சேவைக்காக பாராட்டு பெற்றவர். ‘பசுமைக் கலாம்’ திட்டத்திற்கு பல லட்சம் மரக்கன்றுகளை நட்டவர்.
ஆனால் நாம் தொடர்புகொண்டபோது சென்னையில் தான் இருப்பதாக தெரிவித்தார். ராமேஸ்வரம் போகலியா என்று கேட்டபோது, நண்பர்களுடன் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கே சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்ததாக கூறினார்.
நாம் நமது ரைட்மந்த்ரா அலுவலகத்தில் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்ற விபரத்தை கூறியபோது மிகவும் நெகிழ்ந்துபோனார்.
நமது வீட்டில் இரண்டு மரக்கன்று நடவேண்டிய விஷயத்தை தெரிவித்தோம். அடுத்த வாரத்தில் ஒரு நாள் வருவதாக சொன்னார்.
“இன்னைக்கு உங்க ஆபீஸ் இருக்கா? லீவா ?” என்றார் அடுத்து…
“இருக்கு சார்.. இதோ கிளம்பிக்கிட்டுருக்கேன். எங்க பாஸ் (?!!!) ரொம்ப ஸ்ட்ரிக்ட் சார். ‘லீவெல்லாம் விடமுடியாது, கலாம் சாரோட விருப்பமே அவர் மறைவுக்கு விடுமுறை விடக்கூடாதுங்குறது தான். அதானால வந்து கட்டாயம் ஒர்க் பண்ணுங்க’ன்னு சொல்லிட்டாரு சார்” என்றோம்.
பொருளுணர்ந்து சிரித்தார். “கரெக்ட் சார்… இன்னைக்கு தான் அதிகம் வேலை செய்யணும்”
சொன்னதோடு………….. “இன்னைக்கு காலைல 10.00 மணிக்கு நெசப்பாக்கம் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல, ஸ்டூடன்ட்ஸை கொண்டு நம்ம TREE BANK சார்பா மரக்கன்று நடப்போறோம். ஆபீஸ் போற வழியிலே இங்கே வந்து நீங்களும் ஒரு மரம் நடுங்களேன்!” என்றார்.
ஆஹா.. பரிகாரம் பார்க்கப் போன ஜோஸியர் எதிர்லயே இல்லே வர்றேங்குறாரு… விட்டுடுவோமா…
மேலும் கலாம் புதைக்கப்படும் தினத்தன்று அவரது கனவுகளில் ஒன்றான மரங்களை விதைப்பது எத்தனை பெரிய விஷயம்…!
“சரிங்க சார்… நான் நேரடியா நெசப்பாக்கம் வந்துடுறேன்”
அடுத்த முக்கால் மணிநேரத்தில் நேசப்பக்கத்தில் இருந்தோம். நெசப்பாக்கம் அரசு மேனிலைப் பள்ளியில் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. குழிகள் வெட்டப்பட்டுக்கொண்டிருந்தன.
நம்மை வாசல் வந்து வரவேற்றவர் அங்கிருந்த ஆசிரியைகளிடம் நம்மை அறிமுகம் செய்துவைத்தார். நமது தளத்தை பற்றி நாம் சில வார்த்தைகள் சொன்னோம்.
நம்மிடம் மரக்கன்றை அவர்களுக்கு நமது கைகளால் கொடுக்கச் சொன்னார். முதல் மரக்கன்றை நாம் கொடுக்க பள்ளியின் ஆசிரியை ஒருவர் பெற்றுகொண்டார். அடுத்து மாணவி ஒருவருக்கும் கன்றை கொடுத்தோம்.
பிறகு ஆசிரியைகளிடம், “கலாம் அவர்கள் ஒவ்வொருமுறையும் மாணவர்களிடையே பேசும்போது அவர்களை எடுக்கச் சொல்லும் உறுதிமொழியை இங்கே மாணவர்களிடம் படித்துக்காட்டி எடுக்கச் செய்வோமா?” என்று கேட்டோம்.
“உங்ககிட்டே அது இருக்கா?” என்றார்கள் வியப்புடன்.
நாம் நமது அலைபேசியில் ஸ்டோர் செய்துவைத்திருந்த அந்த உறுதிமொழியை காண்பித்தோம்.
“வாவ்… நிச்சயம் எல்லாரும் எடுத்துக்கலாம்” என்றார்கள்.
தொடர்ந்து அலைபேசியில் நாம் வைத்திருந்த 10 உறுதிமொழிகளை வாசித்து அனைவரையும் நம்முடனே உறுதிமொழி எடுக்கச் செய்தோம்.
அந்த உறுதிமொழி என்ன ?
ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:
மகாத்மா காந்தியின் ஒன்பதாவது வயதில், அவர் தாய் கூறிய அறிவுரை நினைவுக்கு வருகிறது. ‘மகனே! உன் வாழ்வில், துன்பத்தில் துவளும் யாராவது ஒருவரை அதில் இருந்து மீட்டால், கடவுள் எப்போதும் உனக்கு அருள் செய்வார்’ என்றார். இந்த அறிவுரையை எல்லா மனிதரும் கடைபிடிக்க வேண்டும். இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதற்கு மாணவர்கள் 10 உறுதிமொழிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
1) நான் எனது வாழ்வில் நல்லதொரு லட்சியத்தை மேற்கொள்வேன்.
2) நன்றாக உழைத்து படித்து, வாழ்வில் இலட்சியத்தை அடைய முயற்சிப்பேன்.
3) எனது விடுமுறையில் எழுதப் படிக்கத் தெரியாத ஐந்து பேருக்கு எழுதப் படிக்க சொல்லித் தருவேன்.
4) என் வீட்டிலோ, பள்ளியிலோ குறைந்தது ஐந்து செடிகளை நட்டு, பாதுகாத்து, வளர்த்து மரமாக்குவேன்.
5) மது, சூதாடுதல் மற்றும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகி துயருருவோர் ஐந்து பேரை மீட்டு, நல்வழிப்படுத்த முயற்சிப்பேன்.
6) துயருறும் ஐந்துபேரையாவது சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து அவர்களது துயரைத் துடைப்பேன்.
7) ஜாதி, மதம், மொழியின் பெயரால் எவ்வித பாகுபாடும் பாராட்டாமல் அனைவரையும் சமமாக நடத்துவேன்.
8) நான் என் வாழ்வில் நேர்மையாக நடந்து மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க முயல்வேன்.
9) என் தாய், தாய் நாடு இரண்டையும் நேசித்து பெண் குலத்துக்கு உரிய மரியாதை, கண்ணியம் காப்பேன்.
10) நாட்டில் அறிவு தீபம் ஏற்றி அணையாத தீபமாக சுடர்விடச் செய்வேன்.
இவ்வாறு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் சொல்லச் சொல்ல மாணவர்கள் உறுதிமொழி எடுத்தது மறக்க முடியாத நெஞ்சை நெகிழவைக்கும் அனுபவம்.
தொடர்ந்து மரக்கன்று நடும் வைபவம்.
குழியில் உரம் போட்டு கன்றை எடுத்து உள்ளே வைத்து பின் மண்ணை கொஞ்சம் போட்டு மூடி, அதன் பின்னர் CATTLE GUARD வைத்து மரக்கன்று நடப்பட்டது.
மாணவர்களை கொண்டு தண்ணீர் ஊற்றப்பட்டது.
அடுத்து நம் முறை. நாம் நட்ட மரம் பூவரசம் மரமாம். முல்லைவனம் சொன்னார்.
மரத்தை நட்டபின்னர், “யாராவது இதை கொஞ்சம் டெய்லி தண்ணி ஊத்தி பார்த்துக்கோங்கப்பா… நான் மாசம் ஒருமுறை வந்து பார்க்குறேன்” என்றோம்.
அங்கிருந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் விஜய் என்பவன் முன்வந்து, “அங்கிள் நான் பார்த்துக்குறேன் அங்கிள்… எனக்கு மரத்தை எப்படி வளர்க்கனும்னு தெரியும். எங்கவீட்ல ரெண்டு மரம் நான் வளர்க்கிறேன்” என்றான்
அவனை அப்படியே வாரி அணைத்துக்கொண்டோம்.
“வெரி குட்… வெரி குட்…”
மற்ற அரசுப் பள்ளிகள் போல அல்ல இது. ஓரளவு சமூக அக்கறையும் நல்ல பழக்கவழக்கங்களும் உள்ள மாணவர்கள், அவர்களை நல்ல முறையில் கல்வி கற்பித்து உற்சாகப்படுத்தும் ஆசிரியைகள்.
விடுமுறை நாளை தியாகம் செய்துவிட்டு ஆசிரியைகளும் அவர்கள் விருப்பதிற்கிணங்க மாணவர்களும் வந்திருப்பதிலிருந்தே தெரியவில்லையா… இது ஒரு முன்மாதிரி பள்ளி என்று.
ஆசிரியைகளிடம் பேசிக்கொண்டிருந்தோம். நமது தளத்தை பற்றியும் இதர பணிகள் பற்றியும் தெரிந்துகொண்டவர்கள் குறிப்பாக கீதா அவர்கள் மிகப் பெரிய பொறுப்பு ஒன்றை நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார். மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்க விரும்பும் நமது லட்சியத்திற்கு அது ஒரு பெரிய மைல் கல். விபரங்களை பின்னர் சொல்கிறோம்.
புறப்படும் முன், ஒரு மாணவன் நம்மை அழைத்து “அங்கிள் அங்கே கலாம் சார்… படம் வெச்சிருக்கோம். நீங்க வந்து ப்ரே பண்றீங்களா?” என்றான் ஆவலாக.
“எங்கேப்பா?”
நம்மை ஏதோ புதையலைப் பார்க்கப்போவது போல கையைபிடித்து அழைத்துச் சென்றான்.
“இதோ அங்கிள். நீங்க ப்ரே பண்ணுங்க. நான் உங்களை ஃபோட்டோ எடுக்குறேன்” என்றான்.
“நீ நில்லுப்பா நான் எடுக்குறேன்”
“இல்லேயில்லே… நீங்க நில்லுங்க நான் எடுக்குறேன். காமிராவை கொடுங்களேன்”
அவனுக்கு புகைப்படமேடுக்கவேண்டும் என்கிற ஆவலைவிட நமது காமிராவை ஆப்பரேட் செய்யவேண்டும் என்கிற ஆவல் இருப்பது புரிந்தது.
புகைப்படம் எடுத்தது அவனுக்கு எத்தனை சந்தோஷம் தெரியுமா?
மேலும் சற்று நேரம் மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றோம். நாம் புறப்படும் வரை நம்மைவிட்டு பிரிய மனமில்லாமல் சுற்றி சுற்றி வந்தனர் மாணவர்கள்…. “அங்கிள்… அங்கிள்… அடுத்து எப்போ வருவீங்க?” ஏக்கத்தோடு கேட்டனர்.
“இனிமே நாம அடிக்கடி சந்திக்கலாம். அடிக்கடி வருவேன். நல்லா படிங்க. நல்லா விளையாடுங்க. மொபைல், டி.வி. ரெண்டையும் அவாய்ட் பண்ணுங்க. டீச்சர்ஸ் சொல்றதை கேளுங்க… வாழ்த்துக்கள்.” என்றோம்.
அனைத்தும் முடிந்து முல்லைவனம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு ஆசிரியைகளிடம் விடைபெற்றுக்கொண்டு, கலாம் அவர்களின் மிக மிக முக்கியமான கட்டளைகளில் ஒன்றான மரம் நடுவதை அவரது புனித உடல் புதைக்கப்பட்ட தினத்தன்று செய்ததை எண்ணி பெருமிதத்தோடு புறப்பட்டோம்.
இங்கே நமது அலுவலகத்தில் நாம் வைத்திருந்த படம் எங்கள் காம்ப்ளெக்ஸ்ஸின் வாயிலில் ஒரு டேபிள் போட்டு வைக்கப்பட்டுள்ளது.
==================================================================
நமது தளம் சார்பாக ‘அகத்தியர் தேவார திரட்டு’ முற்றோதல்
‘அகத்தியர் தேவார திரட்டு’ முற்றோதல் நமது தளம் சார்பாக வரும் ஆகஸ்ட் 2, ஞாயிறு காலை 9.00 – 1.00 வரை குன்றத்தூரில், எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சைவப் பணியில் சிறந்து விளங்கும் பெரியோர் ஒருவர் கலந்துகொண்டு தலைமையேற்று நடத்தவுள்ளார். குன்றத்தூரில் திரு.சங்கர் அவர்களிடம் திருமுறை கற்றும் வரும் மாணவர்கள் சுமார் 60 பேர் இந்த முற்றோதலில் கலந்துகொள்ளவுள்ளார்கள். அது சமயம், அம்மாணவர்களுக்கு நம் தளம் சார்பாக நோட்டு புத்தகங்கள், ஜியாமெட்ரி பாக்ஸ்கள், ஸ்கெட்ச் பேனாக்கள் இன்னும் பிற ஸ்டேஷனரி பொருட்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது.
முற்றோதலில் கலந்துகொள்ளும் திருவலிதாய சகோதரிகள் மற்றும் இதர சைவத் தொண்டர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். (இவர்கள் பாடி நீங்கள் கேட்டதில்லையே… கண்களை மூடிக்கொண்டு கேட்டால், மூவர் காலத்திற்கே உங்களை அழைத்துச் சென்றுவிடுவார்கள். மிகையல்ல… உண்மை!!! கேட்டுவிட்டு சொல்லுங்கள். எந்த வாத்தியமும், பின்னணி இசையும் இல்லாமலேயே மிக மிக சிறப்பாக பாடும் வல்லமை இவர்களுக்கு இருக்கிறது. இது சாதாரண விஷயம் அல்ல.)
Check : அகத்தியர் தேவாரத் திரட்டு!
மேற்படி முற்றோதலில் நம் வாசகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். அனைவருக்கும் காலை சிற்றுண்டியும் மதியம் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் உள்ள இடமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. .
ஸ்டேஷனரி பொருட்கள், உணவு ஏற்பாடு, அகத்திய தேவார திரட்டு – (100 நூல்கள்) என பல செலவுகள் உள்ளன. இந்த எளிய இறைபணியில் உதவிக்கரம் நீட்ட விரும்பும் வாசகர்கள் நம்மை தொடர்புகொள்ளவும். (ஏற்கனவே இரண்டு வாசகர்கள் இது தொடர்பாக உதவிக்கரம் நீட்டியுள்ளனர். அந்த தொகை இதனுடன் சேர்க்கப்படும்.)
நாள் : ஆகஸ்ட் 2, 2015 ஞாயிறு
நேரம் : காலை 8.45 முதல் மதியம் 1.00 வரை.
முகவரி : திருமுறை தேவார பாடசாலை, எண் : 29, துரைசாமி தெரு, வட திருநாகேஸ்வரம், குன்றத்தூர் – சென்னை 600 069. (Landmark : குன்றத்தூர் பேருந்து நிலையம் – தேரடி அருகே)
அனைவரும் வருக!
வரவிரும்பும் வாசகர்கள் நமக்கு தகவல் தெரிவிக்கவும்
(குறிப்பு : முற்றோதலில் கலந்துகொள்ளும் வாசகர்களுக்கு மேற்படி ‘அகத்தியர் தேவார திரட்டு’ நூல் நமது தளம் சார்பாக அன்பளிப்பாக வழங்கப்படும்.)
==================================================================
Also check from our archives:
மரங்களின் தந்தை முல்லைவனம் – நம்மை வெட்கப்படவைக்கும் ஒரு நிஜ ஹீரோ!
ராக்கெட் உருவாக்கிய உங்களால் தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவரை தர முடியுமா? – விகடன் மேடையில் கலாம்!
கலாம் நினைத்தார்… கடவுள் முடித்தார்! வியக்க வைக்கும் உண்மை சம்பவம்!!
“திருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்!”
==================================================================
[END]
இன்று மரம் நட உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு கண்டு மகிழ்கிறேன். இன்று நானும் விடுமுறை எடுக்காமல் அலுவலகம் வந்து கலாம் அவர்களுக்கு அவருக்கு பிடித்தமான முறையில் என் அஞ்சலியை செலுத்திக் கொண்டிருக்கிறேன்.
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”
—
விஜய் ஆனந்த்
பதிவை படிக்க படிக்க மனம் குளிர்ச்சி அடைகிறது. சொன்னதை செய்து விட்டீர்கள் . கலாமின் ஆசி கண்டிப்பாக தங்களுக்கு உண்டு
தாங்கள் மரம் நட வேண்டும் என நினைத்தீர்கள் . இறைவன் அந்த வாய்ப்பை வழங்கி விட்டான். குழந்தைகளைப் பார்க்க பார்க்க பரவசமாக உள்ளது.
இந்த பதிவை படித்த பிறகு அனைவரும் வீட்டில் ஒரு மரமாவது நட வேண்டும்
அனைத்து படங்களும் அருமை
வாழ்க … வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
வணக்கம் சுந்தர். அசத்திடிங்க சுந்தர். திரு கலாம் அவர்கள் மேலிருந்து பார்த்து கொண்டுஇருந்தால் ,உங்கள் மற்றும் திரு முல்லைவனம் அஞ்சலி பார்த்து மகிழுந்து இருப்பார்.மாணவர்கள் அசிரியைகள்கும்,வாழ்த்துகள் . மிக அருமையான ,அழகான, உண்மையான பதிவு .நன்றி .
மரத்தை போல தான் நல்ல சிந்தனைகளும்
விருட்சதிருக்கு விதைக்கப்படும் நிலமும் மிக முக்கியமானது
நல்லெண்ணங்களை வருங்கால இளைய தலைமுறை என்ற நிலத்தில் தன்னம்பிக்கை என்ற நீரை ஊற்றி வளர்தொமேயானால் வெற்றிக்கனி என்னும் லட்சியத்தை விரைவில் அடையலாம்
கலாம் அவர்களின் கனவு நனவாக
நாட்டிலுள்ள ஒவ்வொருவரும்
மாதம் ஒரு மரம் என்னும் மந்திரத்தை சிரமேற்கொண்டு
அந்த புண்ணிய ஆத்மா மண்ணை விட்டு விண்ணை சென்றடைந்த 27 ஆம் தேதி பிரதி மாதமும் ஒரு புது மரத்தை வளர்க்(கலாம்) அல்லது வளர சிரமப்படும் மரத்தினை பேணி பாதுகாக்(கலாம்)
சுந்தர்ஜி உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
உறுதி பூணுவோம்
செயல்படுவோம்
ஜெய் ஹிந்த் !!!
Real tribute to the great leader. U r really gifted. Congrats.
நீங்கள் நடத்தும் ஒரு ஒரு நிகழ்ச்சிக்கும் முன்பாக ஒரு மரக்கன்றை ஒரு இடத்தில நட்டு தொடங்கலாமே (இடம் சாத்ஹியபட்டால்)